
"சீனி கம்" எனும் இந்தித் திரைப்படத்தில் சைவ உணவை ஆதரிக்கும் அமிதாப் ஒரு கடற்கரை உணவகத்தில் தபுவுடன் உணவருந்திக் கொண்டிருப்பார். தபுவுக்கு பொரித்த மீன் துண்டுகள். அமிதாப்புக்கு சாலட் எனப்படும் பச்சை காய்கறிகள். அமிதாப் தபுவை இவ்வாறு சீண்டுவார்: "இதோ இந்த கடலின் மட்டம் உயர்ந்து வருவதை கவனிக்கிறாயா, ஏன் தெரியுமா? அங்குள்ள மீன்கள் உன் தட்டில் உள்ளவற்றின் சொந்தபந்தங்கள். நீ தின்னப்போகும் மீன்களுக்காக துக்கப்பட்டு அவை விடும் கண்ணீரினால் தான் கடல் கொந்தளிக்கிறது".
சைவர்கள் அசைவர்களை ஒருமாதிரி கொலைகாரர்களாய், கோணல் புத்திக்காரர்களாய் பார்ப்பது ஒரு நடைமுறை அபத்தம். ஏனெனில் சுயபிரக்ஞை இல்லாத எந்த உயிரையும், அது அழிவின் விளிம்பில் இல்லாத வரை, நாம் பொருட்படுத்துவதில்லை; அதற்கு சட்டபாதுகாப்பு தருவதில்லை. வளர்ப்பு பிராணிகளில் இருந்து நம் அனுமதி இன்றி வளரும் புழு, பூச்சி, எலி, பூனை எல்லாமே இந்த பட்டியலில் அடங்கும். இரண்டு மாதங்களுக்கு முன் வடஇந்தியாவில் ஒரு மூதாட்டியின் வளர்ப்பு நாய் தொடர்பாய் ஒரு வழக்கு அவரது அயல்வீட்டுக்காரரால் தொடரப்பட்டது. அந்த நாயால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து என்றும், அதனால் அதைக் கொல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கைத் தொடுத்தவர் கோரியிருந்தார். மூதாட்டியின் வாதம் இப்படி: அனாதையான அவருக்கு ஒரே துணையும் பாதுகாப்பும் அந்த நாய் மட்டுமே; அதைக் கொன்று அவரது சொத்துக்களை அபகரிக்க அயல்வீட்டுக்காரர் சதித்திட்டம் தீட்டியுள்ளார். நீதிமன்றம் மூதாட்டிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இங்கே சில சந்தேகங்கள்: ஒருவேளை இந்த நாயை பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொன்று விட்டால், அதை கொலைக்குற்றமாக கருதி நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா? சுயபிரக்ஞை இல்லாத நாய்க்கு சட்டரீதியான உயிர்பாதுகாப்பு எப்படித்தர முடியும்? சரி சுயபிரக்ஞையை எப்படி விளக்க: நாய்க்கு தன் சுயம் பற்றின அறிதல் இல்லை என மனிதர்கள் நம்புகிறார்கள். நாய்க்கு நிச்சயமாய் " நான் யார்? " என்றெல்லாம் தாடியை நீவியபடி கேட்கத் தெரியாது. சுயபிரக்ஞை இல்லாத காரணத்தால் மனிதனை விட படிநிலையில் கீழே உள்ள எந்த உயிருக்கும் வாழ்வுரிமை பாதுகாப்பு தரப்படுவதில்லை. இப்படியான கோடானு கோடி கீழ்நிலை ஜீவன்களை பாதுகாக்கும் அல்லது விட்டு வைக்கும் அவகாசம் மனிதனுக்கு இல்லை.
அறரீதியிலான நியாயத்தை பொறுத்தமட்டில் உயிர்த்தன்மை அல்ல சுயபிரக்ஞை தான் அடிப்படை அளவுகோல் என்பதை இங்கு புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில், உத்தேசமாக 2050இல், சுயபிரக்ஞை கொண்ட எந்திரன்கள் உருவாக்கப்படலாம். அப்போது இந்த எந்திரனுக்கு சட்டபாதுகாப்பு வழங்குவது பற்றி அறவியல் சிந்தனையாளர்கள் இப்போதே விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். எந்திரனுக்கு இயல்பான உயிர்த்தன்மை இல்லை; செயற்கை உயிர்தான். எந்திரனின் செயற்கை பிரக்ஞையை இவ்வாறு விளக்கலாம்: சுயமாய் யோசிக்கும், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும், கற்பனை செய்யும், எழுதபட்ட புரோக்கிராமுக்கு தகுந்தவாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை. இத்தன்மையால் படிநிலையில் எந்திரன் மனிதனை ஏறத்தாழ எட்டி விடுவான். இந்த 'மனிதத்தன்மை' காரணமாய் கோழி, மீனுக்கு இல்லாத சட்டபாதுகாப்பு எந்திரனுக்கு வழங்கப்படும். அறச்சிந்தனையாளர்கள் இவ்வாறு 'மனிதத்தன்மை' எனும் அளவுகோல் கொண்டு வாழ்வுரிமை நியாயத்தை அளக்கிறார்கள்.
யூரோப்பியன் ரொபோட்டிக்ஸ் ரீசர்ச் நெட்வொர்க்கின் தலைவர் ஹென்ரிக் கிறிஸ்டென்சன் 2011இல் மனிதன் எந்திரனோடு புணர்வான் என்று கணித்துள்ளார். இந்த எந்திர பாலியல் தொழிலாளி மனிதத்தொழிலாளியை விட சிறப்பாய் செயல்பட முடியும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே ஜப்பானில் புணர்ச்சிக்கு பெண்பொம்மைகளை வாடகைக்கு விடும் தொழில் அமோகமாக நடக்கிறது. ஒரு பொறியாளர் ஒரு மில்லியன் யூரோ செலவில் இத்தகைய பல பொம்மைகளை வாங்கி அடுக்கி வைத்துள்ளார். இரவில் இந்த பொம்மைகளை குளிப்பாட்டி, பவுடரிட்டு, ஆடை அணிவித்து இவற்றோடுதான் தூங்குகிறார். அமெரிக்காவில் வைப்ரேட்டர், டில்டோ போன்று சுயபுணர்ச்சிக்கு உதவும் கருவிகள் வெளிப்படையாக மருந்துக்கடைகளில் விற்பனையாகின்றன. சரி, உங்களில் எத்தனை பேர் ஒரு குறுகுறுப்பில் பார்பி பொம்மையின் ஆடையை கழற்றி பார்த்திருக்கிறீர்கள்? இந்த பார்பி பொம்மை ஒரு ஜெர்மானிய செக்ஸ் பொம்மையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது தான். செக்ஸ்பாட் எனப்படும் எந்திர பாலியல் தொழிலாளி இவற்றின் அடுத்த கட்டமே. எந்திரனோடு புணரும் மனிதன் மீது விபச்சார குற்றம் சுமத்தலாமா என்று சட்ட வல்லுனர்கள் சிந்தித்து வருகிறார்கள். எந்திரனை வெறும் எந்திரமாக, கீழ்படிநிலை உயிராக கருதினால் இது குற்றமாகாது. அந்த கோணத்தில் இது ஒருவித எந்திரத் துணையுடன் கூடிய சுயபுணர்ச்சி மட்டுமே. ஆனால் செயற்கை பிரக்ஞை பெறும் எந்திரன் மனிதனுக்கு ஏறத்தாழ சமமாகும் பட்சத்தில் நீதிதேவதை குறுக்கிட வேண்டி வரும். நம்மைப் போன்றே எந்திரனின் மனமும் சிக்கலாய் அமைக்கப்பட்டால் அல்லது சந்தர்ப்பவசத்தால் அவ்வாறு மாறினால் தண்டனைகள், நியாயம், அறம் போன்ற கருத்தாக்கங்கள் மேலும் குழப்பமாகி விடும்.
மானிட அறமும் நியாயமும் அடிப்படையிலேயே தெளிவற்றவை. இதற்கு காரணம் பலவித அளவுகோல்களின் அடிப்படையிலேயே மனிதன் நியாயத்தை முடிவு செய்கிறான் என்பதே.
என் தோழி கயல்விழி வீட்டு முற்றத்தில் அன்று ஈன்ற பூனைக்குட்டிகள் சிலவற்றை அடுத்த தெரு புத்திசாலிகள் பையில் தூக்கி வந்து விட்டுச் சென்றிருந்தனர். மூன்றில் காயமுற்றிருந்த இரண்டு குருதி கசிய இரவெல்லாம் கதறி இருக்கின்றன. காலையில் வாசலில் உறைந்தும், அங்கங்கே சிதறியுமிருந்த ரத்தம் பார்த்துதான் இரவெல்லாம் தொடர்ச்சியாய் கேட்ட கீச்சு அழைப்புகளின் காரணம் அவருக்குப் புரிந்தது. உயிர்பிழைத்த இறுதிப் பூனைக்குட்டி ஏறத்தாழ பசியிலும் குளிரிலும் உறைந்து போயிருந்தது.
கடந்த மாதம் சென்னை லஸ் பகுதியில் பிச்சையெடுக்கும், பாலியல் தொழில் புரியும் ஒரு எளிய பெண்ணின் குழந்தை கொல்லப்பட்ட சேதி படித்தேன். குழந்தைக்கு 5 வயது. சம்பவத்தன்று இந்த பிச்சையெடுக்கும் பெண் வழக்கமான வாடிக்கையாளரான ஆட்டோக்காரர் ஒருவரை தன்னை புணர அனுமதித்துக் கொண்டிருந்தார். குழந்தை அபோது வீறிட்டு அழுதது. அதை அமைதிப்படுத்த இருவராலும் முடியவில்லை. எரிச்சலாகிய ஆட்டோக்காரர் வேறெங்காவது கொண்டு விட்டு வருகிறேன் என்று குழந்தையை வலுக்கட்டாயமாய் ஆட்டோவில் தூக்கி இட்டுப் புறப்பட்டார். பாதி வழியில் குழந்தை பயந்து கத்த, மீண்டும் கடுப்பாகிய ஆட்டோக்காரர் அதன் அழுகையை நிறுத்த ஒரு உபாயம் செய்தார். ஆட்டோவிலிருந்து இறக்கினார். கைவசம் இருந்த பெட்ரோலை அதன் மேல் ஊற்றி, கொளுத்தினார். ஓட விட்டார். தீயோடு ஓடும் குழந்தையை பாதி வழியில் சிலர் பார்த்து மருத்துவமனையில் சேர்த்த போது, வெந்து செத்திருந்தது. இந்த ஆட்டோக்காரரை சைக்கோ என்று நீங்கள் எளிதாக ஒதுக்க முடியாது. ஏனென்றால் ஆவேசத்தில் எப்போதும் குழந்தைகளை கொளுத்திப் பார்க்கும் வழக்கம் இவருக்கு இல்லை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் நலமாக உள்ளனர்.
குழந்தைகளிடம் நாம் மிகவும் பரிவும், பொறுமையும் கொண்டவர்கள். ஆனாலும் போரில் ஆல்லது போரைப் போன்று திட்டமிட்டு நடத்தப்படும் மதக்கலவரங்கள் (குஜராத்), தீவிரவாதத் தாக்குதல்களில் (மும்பை) முதிராத சிசுக்கள் தாயின் வயிற்றைப் பிளந்து அழிக்கப்படுகிறார்கள், தலையில் குறிபார்த்து சுடப்படுகிறார்கள். பிறிது என்று வரையறை குறிக்கப்பட்ட பின்னரே போரில் உயிர்க்கொலை அமுல்படுத்தப்படுகிறது. ஒரு பஜ்ரங்கதள் தீவிரவாதிக்கு முஸ்லீம் சிசுவும், சிங்கள கொலையாளிக்கு ஈழத்தமிழ் சிசுவும் வாழும் உரிமை அற்றவை. இப்படியான வரையறைக்குப் பின்னர் கொல்லுவது அறப்பிரச்சனையாகாத, குற்றவுணர்வு ஏற்படுத்தாத எளிய கர்மமாகிறது. மிருகங்கள் குழந்தைகளிடம் அதிகப்படியான கருணையுடன் உள்ளன. ஜிம் கார்பட் "எனது இந்தியா" நூலில் ஒரு பச்சிளம் குழந்தை வேட்டை மிருகங்கள் மத்தியில் காட்டில் பத்திரமாய் சில நாட்கள் இருந்த சம்பவமொன்றை குறிப்பிடுகிறார். மற்றொரு நடைமுறை உதாரணம். உங்கள் முரட்டு நாயின் வாலை உங்கள் இளம் குழந்தை தைரியமாய் பிடித்து இழுக்கும்; காதை விடாப்பிடியாய் திருகும். நாய் எல்லாவற்றையும் வினோதமாய் பொறுக்கும். பாவம் குழந்தைதானே என நாய்க்கு எப்படித் தெரிகிறது? காரணம் மிருகங்களின் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படும் எளிய, சிக்கலற்ற முறை. குழந்தை உடல் வெளிப்படுத்தும் பினமோன்களெனும் ரசாயனத்தை கிரகிக்கும் நாய் அதன் சீண்டல், சேட்டைகளை மன்னித்து பொறுமை காக்கிறது. டால்மேசன் போன்ற வகையைத் தவிர்த்து பெரும்பாலான நாய்கள் குழந்தைகள் விசயத்தில் மகா பொறுமைசாலிகள். இதே பொறுமையோ, கரிசனமோ மனிதனுக்கு ஏன் நடைபாதைவாழ் குழந்தையிடமோ, பிஞ்சுப் பூனைக்குட்டிகளிடமோ தோன்றுவதில்லை?
மனிதனின் பிரக்ஞைபூர்வ மனம் பலதரப்பட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டே அவனை செயல்பட வைக்கிறது. இந்த நியாயம் வழங்கும் அளவீடுகள் மிகவும் நெகிழ்வானவை. மானிட அறத்தின் தீர்மானக் காரணிகள் சுயபாதுகாப்பு மற்றும் குழந்தை வழியான சுயநீட்டிப்பு ஆகிய உந்துதல்களே. இவை பொருளாதாரம், சமூக அந்தஸ்து, உயிர்வாழ்தல் முனைப்பு, அடையாளம் போன்ற பல பரிமாணங்களாய் வெளிப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றுக்காக அநீதி இழைத்து அதை நீதி என்று நியாயப்படுத்த மனிதன் முயல்கிறான். உதாரணம்: சாதி அடையாளத்துக்கான தனிக்கொலைகள் குறிப்பிட்ட குழுவுக்குள் நியாயப்படுத்தப்படுகையில், தேசிய அடையாளத்தை காப்பாற்றுவதற்கான ராணுவ கொலைகள் தேசிய அளவில் கொண்டாடப்படுபவை. அப்கானிஸ்தான், ஈராக்கில் குண்டுவீசி அப்பாவி ஏழைகளை சிதறடித்து விட்டு ஆப்பிரிக்காவில் சமூக சேவை செய்ய அமெரிக்கனால் முடியும். ஆட்டோக்காரருக்கு சமூக அந்தஸ்து குழந்தை உயிரின் மதிப்புக்கான அளவுகோல். தேவடியாளின் குழந்தை இருந்தால் என்ன செத்தால் என்ன! அமெரிக்கனுக்கு போர் வன்முறைகளை நியாயப்படுத்த தேசியம் ஒரு அளவுகோல். கிரீம்ஸ் சாலையில் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரியும் போது ரவி என்றொரு கிறித்துவ நண்பன் இருந்தான். அவன் மூன்றாம் உலக மக்களை "காட்டுவாசி" என்று உவப்பாக விளிப்பான். ஒரு நாள் நான் சட்டை பொத்தானை மாற்றிப்போட்டால், சவரம் செய்ய மறந்தால், மூக்கைச் சுரண்டினால் நான் கூட "காட்டுவாசிதான்". சதாம் ஹுசேனை அமெரிக்கா தூக்கிலிட்ட தருணத்தில் இவன் கொண்டாடியது பார்த்து வியந்து போனேன். ஹுசேன் ஆதரவாளரான அவன் அம்மாவை உடனே கைப்பேசியில் அழைத்து தன் உற்சாகத்தை தெரிவித்து எரிச்சலூட்டினான். எனக்கு சமோசாவெல்லாம் வாங்கித் தந்தான். தூக்குத்தண்டனை, விஷ ஊசி, மின்சார நாற்காலி போன்ற சமூகக் கொலைகள் சமூக பாதுகாப்பு எனும் நெறியின் அடிப்படையில் உறுத்தலின்றி நடைபெறுகின்றன.
மானிட சுயபாதுகாப்பு, நீட்டிப்பு முனைப்புகள் மிகச்சிக்கலாய் வெளிப்படுவதனால், இவற்றுக்கான நியாயமும் விகாரமாய் சுயநல அளவுகோலின் படி உருவாகிறது. நமது அன்றாட அநீதிகளை நியாயப்படுத்த அல்லது புரிந்திட தர்க்கத்தை நீட்டி வளைக்க வேண்டியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக தனிமனித உரிமைகளை உதாசீனப்படுத்தலாம் என பிரதமர் ம.மோ.சிங் சமீபமாய் கூறியுள்ளதை, ஆந்திராவில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலிசாரை பாராட்டி பொதுமக்கள் பூமாலை சூட்டியதை இவ்வாறு தான் புரிந்து கொள்ள முடியும். நாம் அறம் பிழைத்தோம் என்பதல்ல; நம் அறம் மிகச்சிக்கலானது, ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் படி தகவமைக்கப்படுகிறது என்பதே சரி. மற்றபடியான லட்சியவாத அறம் காந்தியடிகளுக்கு முதுமையில் ஏற்பட்ட குறிவிரைப்பு போல் ஒரு நினைவூட்டல் மட்டுமே.