Sunday, November 29, 2015

கூவி விற்பது

இரண்டு நாட்களுக்கு முன்னால் வேலை கேட்டு ஒரு கால்சண்டுக்க போயிருந்தேன். வரவேற்பறையில் ஒரு பெரிய டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்க காத்திருக்கும் பலர் வரிசையான இருக்கைகளில் சாய்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு எலைட்டான கல்லூரி வளாகம் போலவே இருந்தது. நிறைய பேரைப் பார்க்க வேலை செய்ய வந்ததாய் அல்ல வண்ண ஆடைகளுடன் ஹாயாய் ஷாப்பிங் பையுடன் திரிவது போன்றே பட்டது.

Friday, November 27, 2015

சில உறவுகள் மாறுவதில்லைமாணவர்களுக்கு ஆசிரியர் மீதுள்ள பிரியம் தனித்துவமானது. மத்திய வர்க்க இளைஞர்கள் தம் பெற்றோருக்கு இணையாகவே ஆசிரியரைப் பார்க்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன்பு பயிற்று வித்த மாணவர்களை இன்றும் அடிக்கடி பல இடங்களில் சந்திக்கிறேன். நான் குருநானக்கில் வேலை செய்யும் போது அஷ்வின் மற்றும் ஆண்டனி என இரு மாணவர்கள் இலக்கிய நாட்டம் கொண்டவர்களாய் இருந்தார்கள். ஆனால் இருவரும் இலக்கிய துறை மாணவர்கள் அல்ல. நான் ஒரு நாள் வகுப்பில் நீட்சே பற்றி குறிப்பிட்டேன். வகுப்பு முடிந்ததும் அஷ்வின் என்னைத் தேடி வந்து நீட்சே நிறைய கேட்டான். இலக்கியம், தத்துவம் பற்றி பேசினான். அவன் தால்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்து வருவது பற்றி சொன்னான். தல்ஸ்யாயின் வாசகன் என்றதுமே அவனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பிறகு தினமும் நாங்கள் கல்லூரி வளாகங்களில் மணிக்கணக்காய் பேசியபடி இருப்போம்.

மொழியால் உருவாகும் மனநிலை
-   பேஸ்புக்கில் ஒரு நண்பர் என்னிடம் ஆங்கிலத்தில் வாசிப்பது பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அவரால் தமிழில் நாவல்களை சரளமாய் வாசிக்க இயல்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் வாசிக்கையில் விரைவில் ஆர்வம் இழக்கிறார். தங்குதடங்கலின்றி வாசிக்க இயலவில்லை. ஆங்கிலத்திலும் சரளமாய் வாசிப்பது எப்படி? அவர் கூடுதலாய் இரு தகவல்கள் தந்திருந்தார். அவர் கால்நடைமருத்துவத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர். பள்ளியில் ஆங்கிலம் வழி கல்வி பயின்றவர். ஆக அவருக்கு ஆங்கிலப் பழக்கம் உண்டு. மொழியை தாண்டி வேறு ஒரு சிக்கல் இருக்க வேண்டும்.

சூரிய வணக்கமும் புரூஸ் லீயும்
இன்று ஒளிபரப்பான சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் நான் பேசினது நன்றாய் இருந்தது பல நண்பர்கள் கூறினார்கள். எனக்குத் தான் பேசி முடித்த பின் அவ்வளவாய் திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால் படப்பிடிப்புக்கு முன் அது புருஸ் லீ பற்றின இரண்டு நிமிட பைட்டாக தான் இருக்கும் என நினைத்து போயிருந்தேன். என்னுடைய “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலைக் கூட முழுக்க புரட்டிப் பார்த்து விட்டு செல்லவில்லை. அங்கு போன பிறகு தான் அது சூரிய வணக்கத்துக்கான முழுபேட்டி என உணர்ந்தேன். சரி நினைவில் இருப்பதை வைத்து பேசலாம் என எப்படியோ ஒப்பேற்றி விட்டேன். ஆனால் சில நேரம் அரைகுறை தயாரிப்புடன் பேசுவது நன்றாய் அமைந்து விடுகிறது.

Tuesday, November 24, 2015

“வாங்க இங்கிலிஷ் பேசலாம்” - 11தினமணியில் வெளியாகும் “வாங்க இங்கிிஷ் பேசலாம்” தொடரின் இவ்வார கட்டுரையில் சிவப்பு தோல் நிறத்தின் அரசியல் பற்றி பேசியிருக்கிறேன்.

வாசக சாலை கூட்டத்தில் கோபி கிருஷ்ணன் பற்றின கலந்துரையாடல்போன ஞாயிறு பனுவலில் வாசக சாலை நடத்திய கோபி கிருஷ்ணன் படைப்புலகம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நான் எதிர்பாராத வகையில் பேச வேண்டியதாயிற்று. நான் பொதுவாக எந்த நிகழ்ச்சியில் பார்வையாளனாய் கலந்து கொள்வதென்றாலும் அதில் பேசப் படக் கூடிய எழுத்தாளனின் படைப்புகளை முந்தின நாள் ஒருமுறை வாசித்து விடுவேன்; ஏற்கனவே படித்திருந்தால் ஒரு மீள்வாசிப்பு செய்வேன். ஆகவே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீர்மானித்ததும் கோபி கிருஷ்ணன் படைப்புகளை முந்தின நாளில் இருந்தே புரட்டிக் கொண்டிருந்தேன். மனதில் பட்டதை குறிப்பெடுத்தேன். ஒரு கட்டுரையாக எழுதலாம் என எண்ணிக் கொண்டிருந்த போது மூன்றரை மணி அளவில் நண்பர் அருண் அழைத்து அன்றைய கூட்டத்தில் பேச வேண்டிய ஒருவர் வர முடியாத நிலையில் அவருக்கு பதில் நான் பேச முடியுமா என்றார். கூட்டம் ஐந்தரைக்கு. ஏற்கனவே தயாராக இருந்ததால் சரி என்றேன். 

Sunday, November 22, 2015

கோபி கிருஷ்ணன் படைப்புலகம்
கோபி கிருஷ்ணன் தமிழ்ப் புனைவுலகில் மிகவும் வித்தியாசமானவர். பிற எழுத்தாளர்களைப் போல விரிவான பிரச்சனைகள், பரந்துபட்ட கதாபாத்திரங்களை தன் எழுத்துக்குள் கொண்டு வர அவர் கவலைப்பட்டதில்லை. அவருடைய உளவியல் பிறழ்வு கொண்ட மனிதர்கள் மிகச் சின்ன உலகம். இப்புள்ளியில் நிலை கொண்டு நேர்த்தியான சில கதைகளையும், மிகவும் சுவாரஸ்யமான ஒரு நாவலையும் (உள்ளிருந்து சில குரல்கள்) எழுதியிருக்கிறார். அவரை எதார்த்த / இயல்புவாத எழுத்தாளர் என்றும் வகைப்படுத்த முடியாது. புனைவும் அபுனைவும் கலக்கிற ஒரு மெட்டாபிக்‌ஷன் பாணி எழுத்தை முயன்றிருக்கிறார். ”மகான்கள்”, “கடவுளின் கடந்தகாலம்” போன்ற சிறுகதைகளிலும், “உள்ளிருந்து சில குரல்களிலும்” இதை அநாயசமாக செய்திருக்கிறார். கதைமொழியைப் பொறுத்தமட்டில் கோபி கிருஷ்ணன் சாரு நிவேதிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும் பிறழ்வு கொண்ட உதிரி மனிதர்களில் அக்கறை கொண்டவர்கள். உரைநடையும் புனைவுகளும் ஊடுபாவும் நடையை கொண்டவர்கள். மனதின் கசடுகளை காட்டுவது தான் இருவரும் நோக்கம். ஒரே வித்தியாசம் சாருவிடம் உள்ள இகோடிசம் (தான் தான் எனும் அறைகூவல்) மற்றும் எலைட்டிசம் கோபி கிருஷ்ணனிடம் இல்லை.

Friday, November 20, 2015

என்னுடைய மூன்றாவது நாவல்


”நடிப்பு” பத்திரிகைநண்பர் (தம்பி) சோழனின் “நடிப்பு” பத்திரிகையின் முதல் இதழ் செறிவாகவும் தீவிரமாகவும் வந்திருக்கிறது. நடிப்பு எனும் ஒற்றைப்புள்ளியை மையமிட்டு நடிப்புக் கலை, முக்கியமான நடிகர்கள், நடிப்பு பற்றின நூல்களில் இருந்து அத்தியாயங்கள், பேட்டிகள், நடிகர்கள் பற்றின நூல் விமர்சனம் என பல விசயங்களை பிசிறின்றி தந்திருக்கிறார். மீள்பிரசுரங்களில் மகேந்திரனின் “நடிப்பு என்பது” எனும் நூலில் இருந்து ”விழிமொழியும்”, சோழனின் ”நீங்களும் நடிக்கலாம்” நூலில் இருந்து “நம்ப வைப்பது தான் நடிப்பும்” முக்கியமாய் படிக்க வேண்டியவை. 

Thursday, November 19, 2015

புரிதல் நோக்கிய பயணம் (”கால்கள்” விமர்சனம்) – எம்.ராஜா
 ஒரு வெள்ளைத் தாளில் சின்னக் கருப்புப் புள்ளியை வைத்து, இந்தத் தாளில் என்ன தெரிகிறது என்று கேட்டால், பெரும்பாலானோர், “ஒரு கருப்புப் புள்ளி தெரிகிறது” என்று தான் சொல்வர்.  ஏன். ஒரு கருப்பு புள்ளி, நம் கவனத்தை சுற்றியிருக்கும் வெள்ளைத் தாளில் இருந்து குவிக்கிறது. இந்தக் குவியல் நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சாரப்படுத்த தேவையான மன நிலை.  ஆனால், முழுமையற்றது.  உள்ளதை உள்ளபடி பார்க்கும் வழக்கமுள்ள ஒரு சிலரால் மட்டுமே, “ஒரு வெள்ளைத் தாளில், சின்னக் கருப்புப் புள்ளி இருக்கிறது”, என்று சொல்ல இயலும். இந்த இரண்டு பார்வைகளுக்கும் உள்ள வித்தியாசம் பெரிது.

இதை மனதில் வைத்துக் கொண்டு ஒன்றை யோசித்துப் பாருங்கள். உடல்சிதைவுற்றவர்களை, பெரும்பாலானோர் அவர்களது உடல்குறையைக் கொண்டு மாத்திரமே அடையாளப்படுத்துவது இந்த மன நிலையின் வெளிப்பாடு.  அறியாமையில் இருந்து விளையும் ஒரு வன்முறை.  இந்த வன்முறை கேலியாக, பரிவாக, அருவருப்பாக, ஒதுங்கிப் போகும் மனோபாவமாக, பன்முகம் கொண்ட பிணியாக நம் சமூகத்தில் உறைந்துள்ளது.  மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கிடைக்கக் கூடிய  எளிய அங்கீகாரங்களைக் கூட, உடல் சிதைவுற்றவர்கள் பெற தினமும் போராட வேண்டி உள்ளது.  உடல் சிதைவுற்றவர்களின் பார்வையில், அவர்களது தினசரி போராட்டங்களை மிகையுணர்ச்சி இன்றி, சித்தரிக்கும் முதல் தமிழ் நாவல், கால்கள்.

இந்த நாவலின் மையப்பாத்திரமான மதுக்க்ஷரா மற்ற 19 வயதான கல்லூரிப் பெண்களைப் போன்றவள் அல்ல.  இலக்கியம் படிக்கிற அறிவுஜீவி.  தன் வாழ்க்கையை தர்க்கப் பூர்வமாக புரிந்து கொள்ள முயல்பவள்.  சின்ன வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, இடது கால் முற்றிலும் வலுவிழந்து போய் விட்டது.  நடக்க கனமான கேலிப்பர் கருவிகளை அணிய வேண்டும்.  அணிந்தாலும் நடப்பது சிரமமே.   மதுக்ஷராவின் இந்த உடற்குறையே அவள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நிர்ணயிக்கிறது.  இந்த உடற்குறை நிர்ணயித்த உறவுகள், வாழ்க்கைச் சங்கடங்கள், சங்கடங்களைப் தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள ஒரு பதின்பருவப் பெண்ணாய் அவள் கொள்ளும் முயற்சிகள் என்ற மூன்று மைய இழைகளைக் கொண்டு இந்தப் புனைவை நெய்துள்ளார், ஆசிரியர் அபிலாஷ். 

இன்று ஒரு சேதி
எனக்கு பன்னிரெண்டு பதிமூன்று வயதிருக்கையில் வீட்டிலிருந்த ஒரு பழைய வானொலியை துடைத்து பேட்டரி போட்டு என் அறையில் வைத்து பயன்படுத்த ஆரம்பித்தேன். அலைவரிசையை டியூன் செய்யும் பகுதியில் உள்ள கண்ணாடியை சுத்தம் செய்கிறேன் என என் அப்பா ஒருமுறை பெட்ரோலால் துடைக்க அது நிரந்தரமாய் பூவிழுந்த கண்ணைப் போல் ஆகி விட்டது. அதனால் இன்ன அலைவரிசை என எண் குறித்து தேட முடியாது. நானாக தேடி ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு வந்ததும் பென்சிலால் அந்த இடத்தில் கண்ணாடி மேல் கோடு கிழிப்பேன். இப்படி நான் அறையில் தனியாக இருக்கும் வேளையெல்லாம் சில குறிப்பிட்ட சேனல்களை கேட்பதும் அது சம்மந்தமாய் யோசிப்பதுமாய் எனக்கான அந்தரங்க உலகை உருவாக்கி வைத்திருந்தேன்.

Monday, November 16, 2015

ஒன்றும் இல்லையென்றால் ஏன் தேடிச் செல்ல வேண்டும்?


Image result for kierkegaard
கீர்க்கெகாட்


 நண்பர் லஷ்மி கணபதி கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றின் நோக்கம் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்வி மற்றும் என் பதிலை கீழே பார்க்கலாம்.

வணக்கம் அபிலாஷ்! எனக்கு ஒரு கேள்வி!!! மக்கள் கொண்டாட்டங்களில், கேளிக்கைகளில், இசையின் சிலாகிப்பில், விளையாட்டின் வெற்றிக் களிப்பில் ஈடுபடும் போதோ அல்லது பேசி புளகாங்கிதம் அடையும்போதோ எனக்கு நாம் அனைவரும் பிளாட்டோ வின் குகை மனிதர்களில் ஒருவர் தானோ என்று சந்தேகம் வருகிறது.

தால்மியாவின் மரணமும் அரசியல் மாற்றங்களும்


(இக்கட்டுரை அக்டோபர் மாத கல்கியில் வெளியானது. ஷஷாங்க் மனோகர் தலைவரானதும் ஸ்ரீனிவாசன் ஐ.சி.சி தலைவர் பதவியில் இருந்து விலகினதும் இக்கட்டுரை எழுதப்பட்ட பின் நிகழ்ந்தன)
 
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் தால்மியாவின் மரணம் ஒரு பெரிய அரசியல் தலைவரின் மரணத்தை போல் குழப்பங்களுக்கும் புது மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது. தலைவராக அவர் பதவி ஏற்ற காலத்தில் கூட அவர் உடல்நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. ஒருவேளை அவர் பதவியில் இருக்கையில் மரணிக்க கூடும் என வாரிய நிர்வாகிகள் அச்சம் தெரிவித்தனர். ஆனால் எல்லா அரசியல் தலைவர்களையும் போல அவரும் தன் வயது மற்றும் ஆரோக்கியத்தின் நிமித்தம் பதவியை விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. தால்மியாவின் மரணம் கங்குலி மற்றும் மேற்குவங்க வீரர்களுக்கு ஒரு பின்னடைவாகவும் ஸ்ரீனிவாசனுக்கு தனது இழந்த அதிகாரத்தை மீட்கவுமான வாசல்களை திறந்து விட்டன.

Sunday, November 15, 2015

லாட்டரி சீட்டில் இருந்து டாஸ்மாக் வரை

சந்திரபாபுவின் படமொன்றில் (கண்ணே பாப்பா) அரசாங்கம் நடத்தும் லாட்டரி சீட்டு பற்றின காட்சி வருகிறது. அரசாங்கத்தின் பொறுப்பின்மையை, அறமட்ட நடவடிக்கையை ஒரு அரசியல்வாதி பாத்திரம் விமர்சிக்கிறான். லாட்டரி தவறு தான் என்றாலும் மக்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சிறு கனவை அது வழங்குகிறது என ஒரு பாத்திரம் நியாயப்படுத்துகிறான். இன்னொரு காட்சியில் விமர்சித்தவர்களே வரிசையில் முண்டியடித்து லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள். எனக்கு சமீபத்தில் நடந்த டாஸ்மாக் கண்டனப் போராட்டங்களை இது நினைவுபடுத்தியது. குடிப்பழக்கம் கொண்டவர்களே குடியை எதிர்த்து போராடினார்கள். பிறகு அப்போராட்டம் தடயமே இல்லாமல் மறைந்து போனது.

Saturday, November 14, 2015

பா.ஜ.கவும் சாதியும்


பசு புனிதமானது என்று தான் மாட்டிறைச்சி தடைக்கான காரணமாய் இதுவரை ஆர்.எஸ்.எஸ் கூறி வந்தது. இப்போது புதிதாய் மாட்டுச்சாணத்தினால் அணு குண்டு/உலை கதிரியக்கத்தையே தடுக்க முடியும் என கூறியிருக்கிறது. இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி நாம் ஏன் நிறைய மாட்டுச்சாணியை ஜப்பானின் புக்குஷிமோவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது? மோடியின் Make in India திட்டத்திற்கு சிறந்த துவக்கமாகவும் அமையுமே!

Friday, November 13, 2015

மீனா டிரைவர்

இன்றிரவு நியூஸ் செவனில் ஒரு நிகழ்ச்சியில் பேச சென்றிருந்தேன். எனக்கு முன் ஒரு தாடி வைத்து கோட்டு அணிந்த வழக்கறிஞர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். என் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒரே காரில் பயணப்பட்டோம். அவர் என்னிடம் என் நிகழ்ச்சி எதைப் பற்றி எனக் கேட்டார். அரசியல் என்றேன். “அப்படீண்ணா நீங்க அரசியல்வாதியா?” என்று கேட்டார். “இல்லீங்க. நான் ஒரு எழுத்தாளன்”
உடனே அவர் கேட்டார் “பார்ட் டைம் எழுத்தாளனா?”. ஏன் அப்படி ஒரு கேள்வி அவருக்குள் உதித்தது எனப் புரியவில்லை. நான் ஒரு தத்துவக் குழப்பத்தில் ஆழ்ந்தேன். நான் பகுதி நேர எழுத்தாளனா முழுநேர எழுத்தாளனா? முழுநேர எழுத்தாளன் என்றால் அதிலிருந்து எவ்வளவு வருமானம் வரும் என இவர் கேட்க நான் அதற்கு பதில் சொல்லி அவமானப்பட நேருமே என ஒரு பயம். “ஒரு சாதாரண எழுத்தாளனுங்க” என்று சொல்லி வைத்தேன். 

Tuesday, November 10, 2015

”வாங்க இங்கிலிஷ் பேசலாம்” பத்தியின் 9வது கட்டுரை.

நான் தினமணியில் எழுதி வரும் ”வாங்க இங்கிலிஷ் கற்கலாம்” பத்தியின் 9வது கட்டுரை.


http://epaper.dinamani.com/632596/Ilaignarmani/10112015#page/2/2

பெண்களின் ஆடையும் ஒழுக்கமும்இந்து மற்றும் இஸ்லாமிய ஒழுக்க காவலர்கள் பெண்களின் ஆடையை ஒழுங்குபடுத்துவதன் மூலமாய் பாலியல் ஒழுக்கத்தை கொண்டு வரலாம் என நம்புகிறார்கள். இந்திய இஸ்லாம் வஹாபிச வரவால் அரபுமயமாக்கப்பட்ட போது தான் பர்தா இங்கு பரவலானது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பை ஒட்டி ஒரு இஸ்லாமிய அடையாள மறுகட்டமைப்பு நடந்தது. இஸ்லாமியர் தம் அடையாளத்தை வெளிப்படையாய் முன்னெடுக்க எண்ணினார்கள். வராபிசமும் இந்துத்துவா எழுச்சியும் ஒன்றிணைந்த தருணத்தில் பர்தா இங்கு முக்கியத்துவம் பெற்றது. இந்துக்களை பொறுத்தமட்டிலும் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டுக்கும் வலதுசாரி எழுச்சிக்கும் ஒரு தொடர்பு நிச்சயம் உண்டு. ஆனால் உலகமயமாக்கல், தாராளமயமாக்கலின் தாக்கம் காரணமாய் ஆடை கட்டுப்பாடு அரசியலை இந்துக்கள் பரவலாய் ஏற்கவில்லை. நம்முடைய பாரம்பரியத்திலும் கூட முழுக்க உடலை மூடுகிற வழக்கம் இல்லை தான். ஆங்கிலேய காலனியாக்கம் இந்தியாவை நவீனமாக்கும் முன் வரை நம் பெண்கள் மேலாடை இன்றி தான் இருந்தார்கள். இன்று ஜம்பர் எனப்படும் மேலாடை கூட ஒரு காலத்தில் பெண்கள் வெளியே போகையில் ஒரு மோஸ்தருக்காய் அந்தஸ்துக்காய் அணிந்தது தான். பின்னர் அது ஒரு பொது ஆடையானது. சேலையும் அது போல் சமீபத்தைய வரவு தான். குமரி மாவட்டத்தில் உள்ள பல மூதாட்டிகள் மேலாடையாக உள்ளாடை மேல் ஒரு துண்டு போட்டிருப்பதை நான் சிறுவனாக இருக்கையில் கண்டிருக்கிறேன். அந்த துண்டும் பெயருக்கு தான்.

Monday, November 9, 2015

பீகார் தேர்தல் முடிவு சொல்வதென்ன?

பீகார் தேர்தலில் பா.ஜ.க பெற்றுள்ள பெரும் தோல்வி பற்றி சில செய்திக் கட்டுரைகள் படித்தேன். பா.ஜ.க மதவாத, பிரிவினைவாத பிரச்சாரம் செய்ததால் தோற்றது எனத் தான் பொதுவாக பல கட்டுரையாளர்களும் சொல்கிறார்கள். இத்தோல்வி ஒரு பலத்தமான அடி எனும் மீடியா கணிப்பு சரி தான். அடுத்து வரப் போகும் தமிழக, மேற்கு வங்காள தேர்தல்களில் எப்படியும் பா.ஜ.கவுக்கு எலும்புத் துண்டுகளே கிடைக்கும். அஸாம் தேர்தலில் பா.ஜ.க நிமிர வாய்ப்புண்டு என்கிறார்கள். எப்படியும் மீண்டும் ஒரு வலுவான தேர்தல் வெற்றி கிடைக்க பா.ஜ.க அடுத்து இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

Wednesday, November 4, 2015

உன் இன்னொரு காலை உடைப்பேண்டா


எனக்கு முன்பு ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு தீவிர இடதுசாரி. சிறுபத்திரிகைகளை தொடர்ந்து வாசிப்பவர். அரசியல் கட்டுரைகள் எழுதுபவர். அவர் நான் வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்தார். அப்பெண்ணுக்கு பல மனக்குழப்பங்கள். தான் பார்க்க அழகாயில்லை என தாழ்வுணர்வு. அதனால் நான் அவளை காதலிக்க முயல்வதாய் என் நண்பரிடம் கதை கட்டி விட்டாள். இதனால் நண்பர் அடையும் கோபமும் பொறாமையும் அவளுக்கு கிளுகிளுப்பாய் இருந்திருக்க வேண்டும். எப்படியோ அவரது நடவடிக்கைகளில் சில மாற்றங்களை கவனிக்க தொடங்கினேன். என்னிடம் கடுமையான வெறுப்பை காட்ட தொடங்கினார். ஒருநாள் எதிர்பாராமல் எனக்கு அவரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மேலே உள்ள தலைப்பில் உள்ளது போல் எழுதி இருந்தார். நான் அவரை போனில் அழைத்து என்னை அவர் எப்படி அவ்வாறு ஊனத்தை சுட்டிக் காட்டி அவமதிக்க முடியும், அதற்கான உரிமையை தந்தது யார் எனக் கேட்டேன். பதில் சொல்லாது அவர் வார்த்தைகளை முழுங்கினார்.

தனிமையின் மாதம்உயிர்மை எனக்கு சொந்த வீடு போல. உயிர்மையில் எழுதின கட்டுரைகள் வழியாக அதன் பல முகங்களில் ஒன்றாகவே நான் அறியப்பட்டு வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு மாதம் கூட தவறாமல் உயிர்மையில் எழுதி வந்திருக்கிறேன். இம்மாதம் முதன்முறையாய் இடநெருக்கடி காரணமாய் என் கட்டுரை இடம்பெறவில்லை. இனியும் தொடர்ந்து எழுதத் தான் போகிறேன் என்றாலும் ஒரு பெரிய உறவு முடிந்து போகிற கலக்கமும் பதற்றமும் என்னை சட்டென தாக்கின. நீண்ட நேரமாய் இதழை கையில் வைத்து பார்த்தபடியே இருந்தேன்.