Saturday, February 27, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 13


நகரமேயற்ற நிலையமொன்றில் ரயில் நின்றது. சற்று நேரம் கழித்து மகோண்டா என்று வாயில் கதவில் பெயர் பொறிக்கப்பட்ட, அவ்வழியே உள்ள ஒரே வாழைப்பழத் தோட்டத்தை அது கடந்து போனது. தாத்தாவுடன் சென்ற முதற்பயணங்களின் போதே இப்பெயர் என் கவனத்தை ஈர்த்திருந்தது.

Monday, February 22, 2010

தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்ஆந்திரா, கேரளா, மும்பை என்று சமீபத்தில் வந்துள்ள செய்திகள் நேரடி வன்முறை, அவதூறுகள், சர்ச்சைகள் என நமது சகிப்பு மனப்பான்மையின் மற்றோரு பக்கத்தை காட்டுகின்றன. இவ்வளவு ரிங்காரத்தையும் ஒரு அரசியல் மற்றும் ஊடக சுருதி மீட்டலாகவும் காணலாம். கிரிக்கெட்டிலும் இதன் எதிரொளி காணப்படுகிறது. குறிப்பாக கிருஷ் ஸ்ரீகாந்துக்கு எதிராக அன்ஷுமன் கெய்க்வர்டு, வெங்க்சார்க்கர் உள்ளிட்ட பல முன்னாள் உபநட்சத்திரங்கள் அணி திரண்டுள்ளார்கள். ஸ்ரீகாந்தின் தேர்வுகளான கார்த்திக், பத்ரி, ஸ்ரீசாந்த் ஆகியோர் இவர்களின் தாக்குதல் இலக்குகள். இதற்கு காரணம் மிக அதிகமாக ஓட்டங்கள் எடுத்துள்ள ஜாபர், பார்த்திவ் போன்ற மும்பைக்கர்கள் மற்றும் குஜராத்திகள் புறக்கணிக்கப்பட்டு ஒரு மாறுதலாக தென்னிந்தியர்கள் முக்கியத்துவம் பெறுவதே. இதன் ஒரு விபரீத உச்சமாக சீக்காவின் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பெற்றுள்ள டெஸ்ட் வெற்றியின் முக்கியத்துவத்தை முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன்
கெயிக்வெர்ட் ஒரேயடியாக மறுத்துள்ளதை சொல்லலாம்.

இரு பாரம்பரியங்கள்

கடந்து சில ஆண்டுகளாக இந்திய உள்ளூர் வட்டத்தில்
வலுவான அணிகள் மும்பை, தில்லி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா. மும்பையும் கர்நாடகாவும் வரலாற்று ரீதியாகவே வலுவான பந்துவீச்சை கொண்டவை. தமிழ்நாடு மற்றும் தில்லி வலுவான மட்டையாட்ட அணிகள். மேலும் குறிப்பாக தென்னாட்டு மட்டையாளர்கள் மரபார்ந்த பாணியினர், பொறுமைசாலிகள். கடந்து பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய டெஸ்டு அணியில் நிலைத்தாடி வலு சேர்த்தவர்கள் டிராவிட், லக்‌ஷ்மண், கும்பிளே உள்ளிட்டவர்களே. இவர்கள் சம்பிரதாய ஆட்டமுறை கொண்டவர்கள், கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை ஆதாரமாக நம்பி செயல்பட்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். இந்திய அணியின் எண்ணற்ற வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் இவர்களே. நேர்மாறாக சச்சின், கங்குலி, சேவாக், யுவ்ராஜ் போன்ற வட, மேற்கு, மற்றும் கிழக்கு மண்டல அணி வீரர்கள் தங்கள் துலக்கமான பார்வை மற்றும் அதிவேகக் கரங்களின் ஒருங்கிணைவு மற்றும் உடல் சமநிலையை நம்பி ஆடும் நவீன மட்டையாளர்கள். இந்த இருதரப்பட்ட ஆட்டப்போக்குகளின் ஒருங்கிணைவு இந்தியாவை ஒரு அபாரமான மட்டையாட்ட அணியாக உலகளவில் இன்று வரை நிறுவி உள்ளது. திராவிட் மற்றும் லக்‌ஷ்மண் விலகினவுடன் நமது மட்டையாட்ட ஏணி நடுங்குகிறது. பெரும் தோல்வியை நம் அணி சந்திக்கிறது. இந்த தொடர்ச்சியை நிறுவ மற்றொரு உதாரணம் தரலாம்.
முதல் தெ.ஆ-இந்தியா டெஸ்டில் விஜய் மணிக்கட்டு சுழற்றி ஆடுவது பார்த்து "அட இது லக்‌ஷ்மணே அல்லவா" என்றார் வர்ணனையாளர் கலினன். லக்‌ஷ்மண் வந்த புதிதில் அவரது ஹைதராபாத் முன்னோடியான அசருதீனை தொடர்ந்து நினைவூட்டியபடி இருந்தார். தெண்டுல்கர் அல்லது சேவாக் அணியில் இருந்து விலகின ஆட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்ட மட்டையாளர்கள் அவர்களின் அதே பாணியை சேர்ந்த அதே மண்ணின் மைந்தர்கள்: ரோஹித் சர்மா மற்றும் விராத் கோலி. இருவரும் தங்கள் முன்னோடிகளை ஒரு நுண்ணிய அளவில் நினைவூட்டி இந்திவாலாக்களை மயிர்க்கூச்செறிய வைக்கிறார்கள்.
உள்ளூர் அணிகளை பொறுத்த மட்டிலும் தில்லி, மும்பை, பஞ்சாப், வங்காள அணிகளின் மட்டையாளர்கள் ஆவேசமாக ஆட விரும்புபவர்களாகவே இருந்து வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, ஹைத்ராபாத், கர்நாடகா அணியின் மட்டையாளர்களில் மிக சமீபத்தில் தான் சற்று ஆக்ரோசமாக ரன் குவிப்பவர்கள் தோன்றியுள்ளார்கள்.: அபினவ் முகுந்த, கார்த்திக், கவுதம் ஆகியோர். ஆவேசமாய் ஆடினாலும் இவர்கள் கூட விட தங்கள் முன்னோடிகளின் லட்சுமணக்கோட்டை தாண்டி ஒரு அடி கூட வைத்தவர்கள்; சற்று துடுக்கான சம்பிரதாய வீரர்கள். தென்னக அணிகளில் கலகத்தன்மை ஒரே மட்டையாளன் கர்நாடகாவின் மனீஷ் பாண்டே. சுவாரஸ்யமாக, அவர் உத்தராஞ்சலை சேர்ந்த ஒரு வட-இந்தியர்.

ஸ்ரீகாந்தின் மீதான குற்றச்சாட்டுஇந்த பின்புலத்தில் இருந்து மீள்நோக்கும் போது கடந்த பதினைந்து வருடங்களில் தென்னக வீரர்கள் உள்ளூர் ஆட்டங்களில் நிலைத்து ஓட்டங்கள் குவித்தும் மிகக் குறைவான சர்வதேச வாய்ப்பைப் பெற்றுள்ளதை பார்க்கலாம். குறிப்பாக தமிழக வீரர்களில் 1981-இல் ஸ்ரீகாந்த் டெஸ்ட் நிரந்தர இடம் பெற்ற பின்னர் மற்றொரு தமிழரான விஜய்க்கு ஒருமித்த அங்கீகாரம் கிடைக்க 29 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. இதற்கு இடையில் ஷரத், ரோபின், பதானி, ஸ்ரீராம், ரமேஷ் உள்ளிட்ட பல திறமைசாலிகளின் ஆட்டவாழ்வு இருட்டடிக்கப்பட்டது. குறிப்பாக டெண்டுல்கர் தலைமையின் கீழ் நடுத்தர ஆட்டக்காரர்கள் பலரும் முயன்று பார்க்கப்பட்ட போது தமிழகம் அறவே புறக்கணிப்பட்டது. பின்னர் கங்குலி காலகட்டத்தில் தென்னிந்தியர்கள் அணியின் முதுகெலும்பாக இருந்த போதிலும் அவர் தெற்கை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக இருந்தார். நன்றாக ஆடி வந்த குமரனுக்கு வங்கதேசத்தில் பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டம் ஒன்றில் இறுதி ஓவர் வீசக் கொடுத்து திட்டமிட்டு வெளிப்படையாகவே அவரது எதிர்காலத்தை சிதைத்தார். பின்னர் முரளி கார்த்திக், ஜோஷி, கும்பிளே என்று கங்குலியின் தெற்கத்திய விரோதம் நீண்டது. இந்த புறக்கணிப்புக்கு எதிராக தன்னை நிரூபித்துக் காட்டவே கும்பிளே மேற்கிந்திய தீவுகள் தொடரின் போது முறிந்த மோவாயில் கட்டுடன் பந்து வீசிய வதையும் நிகழந்தது. அதே நேரத்தில் கண் தெரியாத கரீம், மட்டையாட வராத சமீர் திகே, கால்வாசி திறமையாளர்கள் சஞ்சய் பங்கர், ஆகாஷ் சோப்ரா போன்றவர்களுக்கு கூட வாய்ப்புகள் ஏராளம் வழங்கப்பட்டன. ஸ்ரீகாந்த தேர்வுக்குழு தலைவரானதும் அவசரமாக பல தென்னக வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். விளைவாக இந்தி ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் அவரது தென்மண்டல சாய்வு மீது தொடர்ச்சியாக பல கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள்.

யார் கோமாளி?கடந்த பத்து வருடங்களில் தனது சமநிலையற்ற பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் பெரும் கோமாளித்தனங்களைம் செய்துள்ளவர் யாரென்றால் அது ஹர்பஜன் தான். ஆண்டுரூ சைமண்ட்ஸை இனரீதீயாக தாக்கியது தொடங்கி ஸ்ரீகாந்தை அறைந்தது வரை ஹர்பஜன் தனது அணி மற்றும் நாட்டுக்கு ஏற்படுத்திய மானக்கேடுகள் பல. இவரையும் மற்றொரு வட-இந்திய ஆவேச வீரரான காம்பிரையும் எதிரணியினர் மனவியல் ரீதியாக சீண்டி எளிதில் வம்புகளில் மாட்டி விட்டுள்ளனர். சொல்லப்போனால் கடந்த பத்து வருடங்களில் இவர்களைப் போன்று நேரடியான வன்முறை நடவடிக்கைகளுக்காக வேறெந்த நாட்டு வீரர்களும் சர்ச்சைகளில் மாட்டியதில்லை. ஆனால் நமது இந்தி ஊடகங்கள் இந்த உணர்ச்சி கொழுந்துகளை பெரும் பாசத்துடனே சித்தரித்து வந்துள்ளன. குறிப்பாக ஹர்பஜன் சைமண்ட்ஸை குரங்கு என்ற போதோ காம்பிர் ஜான்சனின் தோளை வேண்டுமென்றே மோதிய போதோ இந்தி ஊடகங்கள் எவற்றுக்கும் நெற்றிக்கண் திறக்கவில்லை.
ஆனால் எதிர் நிலைப்பாத்திரம் மற்றும் நிரந்தர கோமாளிக்கான கிரீடம் என்றும் கேரள வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கே தரப்படுகிறது. ஹர்பஜனின் ஆவேச துள்ளல்களை ரசிக்கும் ஊடகங்களுக்கு ஸ்ரீசாந்த் இதில் கால்வாசி நாடகீயம் வெளிப்படுத்தினால் மிகையாக படுகிறது. மேலும் Rediff, Cricinfo போன்ற இணையதளங்களில் இந்திக்காரர்கள் இடும் பின்னூட்டங்களில் ஸ்ரீசாந்த் மீது பெரும் வெறுப்பு அலை உருவாகி உள்ளதை காண முடிகிறது. இதே மொழி மற்றும் பிராந்திய காழ்ப்பு தினேஷ் கார்த்திக் மீதும் உமிழப்படுகிறது.
தினேஷ் vs பார்த்திவ்வங்கதேசம் மற்றும் தெ.ஆ தொடர்களில் பார்த்திவ் படேலுக்கு பதில் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட சமீபத்திய சர்ச்சைகளில் கொதிநிலை உயர்ந்தது. மேற்கத்தியர்களை இத்தேர்வு மிக கடுப்பேற்றி உள்ளது. வங்கதேச தொடரில் முதல் டெஸ்டில் கார்த்திக் மோசமாக கீப்பிங் செய்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து கார்த்திக் குறித்த ஒரு எதிர்மறையான சித்திரம் உருவாக்கப்பட்டது. பார்த்திவ் மேலான மட்டையாளர் என்று நிபுணர்கள் வாதித்தனர். ஆனால் இருவரது சாதனைப்பட்டியலை ஒப்பிடுவதை அவர்கள் தந்திரமாக தவிர்த்தனர். உள்ளூர் மற்றும் சர்வதேச ஆட்டங்களில் இருவரது மட்டையாட்ட சராசரி ஏறத்தாழ ஒன்றுதான். ஆனால் தினேஷ் அதிக அளவில் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி உள்ளார். குறிப்பாக இங்கிலாந்து பயணத்தின் போது கார்த்திக் துவக்க ஆட்டக்காரராக ஒரு மிக முக்கியமான பங்காற்றினார். ஒரு நாள் ஆட்டங்களை பொறுத்த மட்டில் தினேஷின் சராசரி 27; பார்த்திவுக்கோ 14. இதுவரை பார்த்திவ் சர்வதேச அளவில் ஒரு நூறு கூட அடித்ததில்லை. கடந்த இலங்கை பயணத்தின் போது பார்த்திவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சொற்ப ஓட்டங்களே சேர்த்தார். இதையும் ஊடக நிபுணர்கள் எளிதாக மறந்து விட்டனர்.
தமிழக கிரிக்கெட்டின் மீது விழுந்துள்ளது அணைவதற்கு முன்பான விளக்கின் வெளிச்சம் தான். ஸ்ரீகாந்தின் கெடு முடிந்ததும் இருண்ட யுகம் திரும்பி விடும்.

உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?மணிமேகலையில் வரும் காயசண்டிகையின் யானைப்பசியை எளிய சாபம் அல்லது குறியீடு என்றில்லாமல் அதற்கு அறிவியல் காரணங்கள் யோசித்துப் பார்த்தால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். மூளைத்திசுக்களில் ஏற்பட்ட காயம் காரணமாக யானைப்பசி ஏற்பட்டிருக்கலாம். அல்லது மரபியல் ரீதியாக மிகு-உணவு உபாதையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் அவர் தோன்றியிருக்கலாம். இப்படி அடங்காத பசிப்பிணி கொண்ட காயசண்டிகையின் தோற்றம் எப்படி இருந்திருக்கும். அவர் உண்ட உணவை உடனே வாந்தி எடுத்திருப்பாரா? அல்லது உடல் பருத்து அதனால் மனச்சோர்வு உற்றிருப்பாரா? இப்படியான ஒரு உபாதை அன்றைய சமூகத்தில் இருந்திருக்கக் கூடும் என்ற ஊகமே சுவாரஸ்யமானது. இன்று நிச்சயம் இது வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று புலிமியா எனப்படும் இந்த மிகு-உணவு உபாதை. புலிமியா உபாதை கொண்டவர்கள் அளவற்று உண்டபின் அட்சயபாத்திரம் நாடாமல் விரலை தொண்டைக்குள் விட்டு வாந்தியெடுத்தோ அல்லது மருந்துகள் விழ்ங்கி உணவை செரிக்குமுன் வெளியேற்ற முயற்சிப்பர். வேறு சிலர் கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள்; உண்ணாநோன்பு இருப்பர். தொடர்ந்து இவர்களிடம் உடல் பருமன் குறித்த குற்ற உணர்வு மற்றும் மெல்லிய உடலமைப்புக்கான அதீக அக்கறையும் இருக்கும். மேலதிகமாக உண்ணவும் ஒல்லியாக இருக்கவும் முரணாக விழைவதே புலிமியா.

அவ்வப்போது கட்டுப்பாடு இன்றி உண்டு சேகரமாகும் சிறிது கவலையை செரிக்க முயல்வது ஒரு நோய்க்கூறு அல்ல. தொடர்ச்சியாக இந்த முரண் பண்பு வெளிப்பட்டாலே நாம் கவலை கொள்ள வேண்டும். உடல்பருமன் மட்டுமல்ல புலிமியா கூட ஒரு குடும்ப உபாதையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தற்போது கூறுகின்றனர். பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு இந்த கோளாறு இருந்தால் உங்களுக்கும் தொற்றலாம். இதனால் பொலிமியாக்காரர்கள் மருத்துவரீதியாக இதைக் கட்டுப்படுத்துவது அவசியம். அல்லது ஒரு சங்கிலித்தொடர் போல் பரம்பரையே உணவு குறித்த குற்றவுணர்வில் அல்லாடும்.

எனக்கு கல்லூரியில் புஷ்டியாய் ஒரு நண்பன் இருந்தான். அவனது விருப்பங்கள் எனக்கு வினோதமாக பட்டன. பொதுவாக ஒரு குறை கொண்டவர்கள் மாறானவர்களை ஆதர்சமாக கொண்டிருப்பர். குள்ளமான ஆண்கள் உயரமான பெண்களை, கறுப்பானவர்கள், தமிழர் எனும் பட்சத்தில், சிகப்பானவர்களை விரும்புவர். ஆனால் என் நண்பன் குண்டானவர்கள் மீது பிரியம் வைத்திருந்தான். மோகன்லால், டெண்டுல்கர், குஷ்பு போன்றவர்கள் அவர் விருப்பப்பட்டியலில் இருந்ததற்கு திறமையோ அழகோ தவிர்த்த காரணமே இருந்தது. சமீபத்தில் இதைவிட விபரீதமான ஒரு சம்பவம் படித்தேன். எரிக் என்ற அமெரிக்கர் தன் மனைவியின் உடற்கேடு காரணமாய் பருமனான கதை இது.எரிக்கின் மனைவிக்கு புலிமியா கோளாறு இருந்தது. உணவு மேஜையை நிறைத்தபடி அமரும் மனைவி சகட்டுமேனிக்கு உணவை வெட்டியபடி எரிக்கையும் அதிகமாய் உண்ண தூண்டுவார். தயங்கினால் கடுமையாக வற்புறுத்துவார். அதிகப்படியான உணவுக்கு பின்னும் தான் சிக்கென்று இருப்பதை காட்டி எரிக்கை ஊக்குவிக்க வேறு செய்வார். ஆனால் எரிக்குக்கு ஒன்று தெரியாது. வயிறு பெருக்க தின்ற பின் மனைவி கழிப்பறைக்கு சென்று அத்தனையையும் வாந்தி எடுத்து விடுவார். விளைவு: உணவாசை மிகுந்த மனைவி மெலிய, வயிறு சிறுத்த எரிக் பெருத்தார். மனைவிக்காக உண்டு உண்டு ஒரு கட்டத்தில் 20 கிலோவுக்கு மேலாக வீங்கினார். இந்த பிரச்சனை மேலும் மேலும் தீவிரமாக எரிக் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இது குறித்து விளக்கும் மருத்துவர் செர்பே எரிக்கின் மனைவிக்கு அவரை பழி வாங்கும் நோக்கம் ஏது இருந்திருக்காது என்கிறார். அவர் எரிக்கை தன் மறுபிம்பமாக கண்டிருந்தார். உண்டதை செரிக்காமல் வாந்தியெடுக்க வேண்டிய தன் நிலையை மனவியல் ரீதியாக ஈடு செய்யவே அவர் தன் கணவனை அதிகப்படியாக உண்ணும்படி ஊக்குவித்தார். அடுத்து செர்பே கூறும் விளக்கம் என் நண்பனுக்கும் பொருந்தும். எரிக்கின் மனைவி குண்டாகிடும் தன் கணவனுடன் தன்னை ஒப்பிட்டு திருப்தி கண்டார். அவர் தனக்கு நேர விரும்பாத உடல் பருமனை தன் கணவனுக்கு கடத்தி தற்காலிக நிம்மதி பெற்றார்.

Thursday, February 18, 2010

ஊடகங்களால் ஆடப்படும் கிரிக்கெட்

கேளிக்கையும் தற்செயலும் கிரிக்கெட்டின் இருமுகங்கள். கிரிக்கெட் யோசித்து, பேசி, எழுதப்படுவதற்கானது அல்ல. இந்த உபரி நடவடிக்கைகள் வேறொரு துறையை சேர்ந்தவை. வேறு நோக்கங்கள் கொண்டவை. நடந்து முடிந்த இந்திய-தெ.ஆ முதல் டெஸ்டு ஆட்டம் நிறைய சர்ச்சையை தோற்றுவித்தது. ஊடக மைக்குகளில் நம் கவனம் இருந்தது. ஆனால் ஆட்டம் நாலு நாட்களில் முடிய, ஐந்தாவது நாளில் தோற்ற அணியின் நாயகன் தோனி தனது பிரகாசம் குறைந்த நட்சத்திரங்களுடன் சாவகாசமாக பயிற்சியில் ஈடுபட்டார். கிரிக்கெட்டின் உள்நபர்களுக்கு ஊடக சலசலப்பை பொருட்படுத்தும் அவசியம் இருப்பதில்லை. ஜெடேஜா சொன்னது போல் கிரிக்கெட், ஆடுபவர்களுக்காக அல்ல, பார்வையாளர்களுக்காகவே விவாதிக்கப்படுகிறது.

பொதுவாக தொழில்முறை ஆட்டக்காரர்கள் குறைவாகவே ஆட்டத்தை டி.வியில் பார்க்கிறார்கள். அவர்கள் கிடைக்கிற நேரத்தை பயிற்சி, ஆட்டம், ஓய்வு என்று செலவிடவே விரும்புவர். கல்லூரி அணிக்காக ஆடிய சில கிரிக்கெட் வீரர்கள் விடுதியில் என்னுடன் இருந்தார்கள். 2003 உலகக் கோப்பை பருவத்தில் முன்னறையில் டீ.வியை சுற்றி மொய்த்தபடி ரிங்கரிப்போம். பலவிதமான அலசல்கள் ஊகங்கள் புகைத்து எழும். பிரவீன் என்றொரு நண்பன் அப்போது கல்லூரி அணியின் முன்னணி மட்டையாளனாக இருந்தான். அவன் இந்த கூட்டத்தில் சில நிமிடங்களே இருப்பான். ஆட்டத்தின் போக்கை சுத்தமாக உள்வாங்காதது போல் அமைதியாக இருப்பான். நாங்கள் கொந்தளித்து கத்தும் போது புன்னகைப்பான். ஆனால் அவனது ஊகங்களே பெரும்பாலும் சரியாக இருக்கும். நெஹ்ரா சற்றும் எதிர்பாராமல் வென்று தந்த அந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை அவன் மிகச்சரியாக கணித்தான். ஆனாலும் ஆட்ட முடிவுகள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல என்று கூறுவான். தனது ஆட்டத்தை குறித்து கூட மிகக் குறைவாகவே பேசுவான். அணியில் இடம் கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட வாசிமலை என்ற மற்றொரு மதுரைக்கார வேகவீச்சாளர் அப்போது எங்கள் விடுதியில் இருந்தார். அவர் ஒரு சலம்பும் குடம். முந்தின கல்லூரியில் ஆடின போது தன் பெயர் மற்றும் ஆட்ட செய்தி பிரசுரமான செய்தித்தாள் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி சதா சுயசரிதம் பேசுவார். இன்றும் ஓய்வு பெற்று தனிமையில் உள்ளவர்களே ஓசியில் டீ.வியில் தோன்றி கனைப்பவர்கள்.சரியாக ஆடாதவர்களை நாம் கழற்றி விடச்சொல்லி விமர்சிக்கிறோம். சொதப்புவது ஒரு பெருங்குற்றமா? பார்ம் என்பது மனம், உடல் மற்றும் அதிர்ஷ்டம் மூன்றும் ஒரே புள்ளியில் சந்திக்கும் ஒரு அபூர்வம். பார்மில் உள்ளவர்கள் தொட்டாலே ஓட்டங்கள் / விக்கெட்டுகள் குவியும். இல்லாதவர்கள் செய்வதெல்லாம் தவறாக முடியும். பிரவீன் ஒரு கட்டத்தில் பார்மில் இல்லாமல் இருந்தான். பத்து ஆட்டங்களில் ஒரு அரை சதம் கூட தேறவில்லை. சற்று சோகமாக தென்பட்டான். ஆனாலும் விடாமல் தினமும் மைதானத்துக்கு சென்று பயிற்சி செய்வான். எங்கள் கல்லூரியில் மிக அரிதாகவே வலைப்பயிற்சி நடக்கும். பெரும்பாலும் அவன் பிறருடன் கால்பந்தாட்டம் ஆடுவான். அல்லது வெறுமனே அமர்ந்திருப்பான். எப்படியாயினும் தினமும் மாலை இரண்டு மணி நேரங்கள் ஒரு காதலியைப் போல் மைதானத்தை தேடி வருவான். பார்மில் இல்லாமல் இருப்பது கசப்பானது என்றாலும் அது ஒரு இனிய அனுபவம் தான் என்றான் பிரவீன். பார்மில் இருக்கும் இல்லாதிருக்கும் உற்சாக மற்றும் சோக நிலைகள் ஒன்று போலவே கிளர்ச்சி தருபவை. கிரிக்கெட் இல்லாத வெளியுலகை விட பல மடங்கு சுவாரஸ்யமானவை. அந்த மைதானம் அவனது உள்உலகின் படிமம். எழுத்தாளனின் மேஜை போல். அவன் அங்கு வந்ததும் மனஅமைதி அடைகிறான்.

பிரவீனுக்கு அப்போது 24 வயது தாண்டி இருந்தது. இதனால் மாநில அணியில் நுழைவது கூட சிரமம் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் முழுமூச்சாக சாப்பிடுவது, கிரிக்கெட் ஆடுவது மற்றும் தூங்குவது என்றே கழித்தான். அவனைப் போல் ஆயிரக்கணக்கில் திறமையான இளைஞர்கள் மாநில அல்லது தேசிய அணியில் இடம் குறித்த கனவுகள் இல்லாமலே இந்தியாவில் ஆடி வருகிறார்கள். ஐ.பி.எல்லால் கூட இவர்களுக்கு எல்லாம் தீனி போட முடியாது. கிரிக்கெட் தான் இவர்களுக்கு ஆதியும் அந்தமும். இவர்களைப் புரிந்து கொள்ள வெற்றி - தோல்வி எனும் சொல் அமைப்புகளை ஊடகங்கள் முன்வைக்கும் பொருளில் இருந்து வெளியேற்றி பார்க்க வேண்டும்.

ஊடகங்கள் கிரிக்கெட்டை வெற்றி தோல்விகளின் முரணியக்கமாகவே முன்னிறுத்தி வருகின்றன. ஊடக கண்கள் முன் அணிகள் வீழ்கின்றன அல்லது எழுகின்றன. ஒரு ஏழாம் வகுப்பு மாணவனின் வரலாற்று தேர்வுத்தாளின் கற்பனையை ஊடக பண்டிதர்களின் வர்ணனை மீறுவதில்லை. இதனால் ஏகப்பட்ட அபத்த முடிவுகள் அறைகூவப்படுகின்றன. பின்னர் மறக்கப்படுகின்றன. ஆஷஸ் மற்றும் இந்தியாவுடனான இழப்புகளுடன் ஆஸ்திரேலியா வீழ்ந்து விட்டதாக சொன்ன சில மாதங்களில் அது உதறி எழுகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி எழுந்த தெ.ஆ அணி சுவடுக்கு ஒரு முறை சறுக்குகிறது. தெ.ஆ மற்றும் மே.இ தீவுகளை வீழ்த்திய இலங்கை உச்சத்தை எட்டியதாக சொல்லப்பட்ட விரைவிலேயே பள்ளத்தில் துவள்கிறது. 20-20 கோப்பை வென்று கொண்டாடப்பட்ட பாக் அணிக்கும் இதே நிலைதான். இதனால் ஊடகங்களுக்கு மகா குழப்பம். யாரை வெற்றியாளன் என்று துதி பாட? அப்போது சர்வதேச அணி வரிசை வந்தது. இது அலசல்வாதிகளுக்கு துலக்கமான ஒரு அளவுகோலை இன்று வரை தந்து காப்பாற்றுகிறது. வெற்றி தோல்வி புள்ளிக் கணக்குகள் அடிப்படையில் அணிகள் நழுவி உயர, அவர்களால் கணிப்புகள் நிகழ்த்தி ஒரு சிறு பரபரப்பை உருவாக்க முடிகிறது. ஆனால் இத்தனையும் போலித் தோற்றம். ஒவ்வொரு படம் உருவாகும் போதும் தீபிகா படுகோன் தன் கூட நடிக்கும் நாயகனை காதலிப்பதாக வரும் கிசுகிசு செய்திகளை விட சில மில்லிமீட்டர் அதிக அளவு உண்மை இருக்கலாம்.நடந்து முடிந்த முதல் தெ.ஆ டெஸ்டில் இந்தியா தோற்றதற்கு ஊடகங்கள் கற்பித்த காரணங்கள் தமாஷானவை. முதலில் தேர்வுக் குளறுபடி. சீக்காவும் கூட்டாளிகளும் ஒரு தெனாவட்டில் ஒரு மட்டையாளர் குறைவாக தேர்ந்தார்கள். இரண்டுக்கு மேல் வேக வீச்சாளர்கள் ஆட வாய்ப்பில்லாத போதும் ரஞ்சித்தொடரில் ஜொலித்த மிதுன் நான்காவது வீச்சாளராக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே பாதி உடல் நலத்துடன் இருந்த லக்‌ஷ்மண் ஆட்ட நாள் காலையில் தேறாமல் போக அவசர மாற்றாக வந்த ரோஹித் ஷர்மா கால் சுளுக்கிக் கொள்ள பெருங்குழப்பம். தோனிக்கு அடிக்கடி முதுகுவலி வருவதால் அவருக்கு மாற்றாக வந்த கீப்பர் சாஹா ஒப்புக்கு சப்பாக ஆட அழைக்கப்பட்டார். ஆனால் ஆட்டம் முழுவதும் இந்தியாவின் தோல்விக்கு சாஹா காரணமாக இருக்க போகிறார் என்று கவலை கிளம்பியது. ஊடகங்களில் மொத்த விவாதமும் இதனை நோக்கியே இருந்தது. எதிர்பார்த்தபடி இந்தியா தோற்க சாஹா மற்றும் அவரை தேர்ந்த சீக்காவின் வாலில் பந்தம் கொளுத்தப்பட்டது. ஆறு மட்டையாளர்கள் வீழ்ந்த பின் ஒரு இளைய மட்டையாளர் அவர் ரோஹித்தாக இருக்கும் பட்சத்திலும் இந்தியாவை தனித்து காப்பாற்றி இருக்க முடியாது. இதை விட முக்கியமாக, இந்த போட்டியில் இந்தியா சற்றே தான் மோசமாக ஆடியது. எதிரணி மேலும் சற்று சிறப்பாக ஆடியது. பெரும்பாலும் தற்செயல்கள் தாம் முடிவை தீர்மானித்தன. இதற்கு நமது மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் ஏகப்பட்ட உதாரணங்கள் காட்டலாம். குறிப்பாக, மூன்றாவது நாள் டீ இடைவேளையின் பின் இந்தியா மட்டையாடிய போது மாற்றப்பட்ட பந்து சட்டென்று ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியது. அந்த அரைமணி நேர சரிவில் இருந்து இந்தியாவால் எளிதில் மீள முடியவில்லை. 1976-இல் இந்தியா-இங்கிலாந்து டெஸ்டில் இது போல் பந்து மாற்றப்பட இங்கிலாந்தின் ஜான் லிவர் இதே பாணியில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா தோற்றது. பின்னர் 80-இல் போத்தம், 84-இல் மார்ஷல், 85-இல் போஸ்டர் மற்றும் 88-இல் ஹேட்லி என நம் கிரிக்கெட் வரலாற்றில் பலமுறை வெளிநாட்டு வேக வீச்சாளர்கள் உயிரற்ற ஆடுதளங்களில் இந்திய மட்டை வரிசையை பெயர்த்து எடுத்துள்ளார்கள். அப்போது ஆடிய மட்டையாளர்களில் பலர் இன்று சிலுவைக்கு ஆணி தேடும் வர்ணனையாளர்கள். ஒருவர் தேர்வுக்குழு தலைவர்.

இந்தியாவின் பந்து வீச்சை கண்டிக்கும் விமர்சகர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தான் தெ.ஆ பந்து வீச்சு மிக பலவீனமாக இருந்ததை மறந்து விடுகிறார்கள். தெ.ஆ இங்கிலாந்துக்கு எதிரான தனது தாயக தொடரை கைப்பற்ற முடியாமல் போராடி டிரா செய்தது. இத்தனைக்கும் இங்கிலாந்து பலவீனமான ஒரு அணி. அப்போது தெ.ஆ அணியின் பந்து வீச்சு தரம் குறித்து அவர்களின் பயிற்சியாளர் மிக்கி மற்றும் முன்னாள் பந்து வீச்சாளர் டொனால்டு ஆகியோர் கவலை தெரிவித்திருந்தனர். இந்தியாவுக்கு வந்த உடனே ஒரு அணியின் பந்து வீச்சுத் தரம் உயர்ந்து விடாது. ஆட்டத்திறன் பலவிதமாய் வெளிப்படலாம். ஆனால் ஸ்டெயின், மார்க்கல் மற்றும் ஹாரிஸ் போன்ற தெ.ஆ பந்து வீச்சாளர்கள் தங்கள் வெற்றிக்கு காரணமான திட்டமிடல், முயற்சி, எதிர்பார்ப்பு குறித்து பேட்டியில் விளம்ப, மைக் ஆசாமிகள் கூடவே சாம்பிராணி பாய் மாதிரி புகை காட்டுகிறார்கள்.

ஒரு ஆட்டத்தின் நுட்பங்களை அதன் சுவாரஸ்யத்துக்காக கவனிக்கலாம். ஆனால் இன்று நிகழ்வன முடிவான விளக்கங்களை, உருவ பொம்மைகளை தேடும் அசட்டு முயற்சிகள் மற்றும் சோர்வான அலசல்கள்.
இந்த மூட்டத்தில் ஊடகங்கள் குளிர்காய்வது தவறாமல் நடக்கிறது. முத்தாய்ப்பாக, தன் தேர்வுத் தவறுகள் குறித்து ஸ்ரீகாந்த்:

“ நான் தவறு செய்தேன் என்றால் என்னை நீக்கி விடுங்கள். ஆனால் இந்தியா தோற்றது என் தவறால் அல்ல. ஆனாலும் இந்த தோல்விக்கு பொறுப்பேற்க நான் தயார். என்னை நீங்கள் குறை கூறலாம். ஆனாலும் ஆட்ட நாள் காலை நாணயம் சுண்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ரோஹித் ஷர்மா காயமடைவார் என்று யாருக்கு தெரியும். ஆனாலும் உங்கள் விமர்சனங்களை ஏற்கும் பாத்தியதை எனக்கு உண்டு. ஆனாலும் ...”
தான் ஊடகங்களின் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்ரீகாந்த நிறுவுகிறார்.

மின்னஞ்சல் கட்டுரைகளின் பின்னுள்ள மனவியல்பென்சில்வேனிய ஆய்வாளர்கள் ஒரு சுவாரஸ்யமான ஆய்வை மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இணைய வாசகர் குறித்த பார்வையை மாற்றி அமைப்பதாக உள்ளன. ஆய்வாளர்கள் 2008 ஆகஸ்டு முதல் 2009 பெப்ரவரி முதல் நியுயார்க் டைம்ஸ் இணையதளத்தில் இருந்து மின்னஞ்சல் செய்யப்படும் கட்டுரைகளை அலசினர். மொத்தம் 7500 கட்டுரைகள். குறிப்பாக எந்த தலைப்பு மற்றும் வகைமையிலான கட்டுரைகள் எத்தனை மின்னஞ்சல் செய்யப்படுகிறது என்பதை அறிவதே நோக்கம். ஆய்வாளர்கள் செக்ஸ் மற்றும் உணவு குறித்த பத்திகளே அதிகம் விரும்பி மின்னஞ்சல் ஆகும் என்ற முன்முடிவு கொண்டிருந்தனர். நம்மூர் என்றால் சினிமா மற்றும் சர்ச்சை. ஆனால் ஆய்வுமுள் சுட்டியது அறிவியல் மற்றும் தொடர்பான அறிவார்ந்த கட்டுரைகளை. மேலும் ஆய்ந்தால் வாசகர்கள் நேர்மறை நோக்குள்ள கட்டுரைகளை விரும்பியுள்ளார்கள். குறிப்பாக வியப்புணர்வை ஏற்படுத்தும் எழுத்து. அதுவும் வானவியல், paleontology போன்ற அதிக வெளிச்சமற்ற துறை சார்ந்த எழுத்துக்களை மின்னஞ்சல் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மான்களின் பார்வைப்புலன் குறித்த கட்டுரைகளின் பரிமாற்றம் எகிறியுள்ளது. இதை விட ஆச்சரியம் நீளமான கட்டுரைகளுக்கு கிடைத்துள்ள மவுசு. பொதுவாக குறுங்கட்டுரைகளே இணையத்துக்கு ஏற்றது என்ற நம்பிக்கை உள்ளது. பீதி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் கட்டுரைகளும் மின்னஞ்சல் வரிசையில் முன்னணி பெறுகின்றன. ஆய்வாளர்களே வழக்கம் போது இதற்கான காரணங்களையும் யூகித்துள்ளனர். அவை இரண்டு.

1. வாசகர்கள் அறிவார்ந்த கட்டுரைகளை மின்னஞ்சல் செய்வது மூலம் தங்கள் புத்திஜீவித்தனத்தை விளம்பும் முயற்சியாக இருக்கலாம்.

2. தங்களுக்கு மனக்கிளர்ச்சி அடைய வைப்பவற்றை பகிர்வது ஒரு மனிதப்பண்பு.

ஆனால் இவை போக, வாசகர்களின் பொதுவான அறிவு விழைவு கவனிக்கத்தக்கது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த ஆய்வு ஒரு இணையதளத்தின் கட்டுரைகளை மட்டுமே கருத்திற்கொண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் அறிவியலை என்றும் போற்றி வந்துள்ள மேற்கத்திய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. நம்மூர் வாசகர்கள் எப்படி?

இணையத்தில் இலக்கியத்துக்கு உலகத்தமிழரிடம் கிடைத்த அபார ஆதரவால் ஒரு போலியான தோற்றம் உருவானது. தீவிர இலக்கியத்துக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்று கருதி குமுதம் தீராநதியை ஆரம்பித்து ஏமாந்ததாக தளவாய் சுந்தரம் ஒருமுறை குறிப்பிட்டார். “கால்களை விரித்து வைத்து” போன்ற கடவுச்சொற்களுடன் கூகுளில் இருந்து தன் இணையதளத்துக்கு மேலதிக வாசகர்கள் வருவதாய் சமீபத்தில் ஒரு சுயஆய்வு செய்து கண்டுபிடித்தார் ஜெயமோகன். (இத்தோடு உயிரோசைக்குள்ளும் இந்த சொற்றொடருடன் தேடும் வாசகர்கள் திமிறுவார்கள்) தமிழ்மகன் உயிரோசையில் எழுதிய சினிமா பத்திகள் வலைப்பதிவர்களிடம் பெரும் கவனம் பெற்றதை கவனித்திருக்கிறேன். அதற்கு அடுத்து ஜெ.மோ-மனுஷ் சர்ச்சை பற்றிய பத்திகள் பரபரப்பாக படிக்கப்பட்டுள்ளன. தமிழ் இணைய வாசக தளம் மீது இத்தகைய ஒரு ஆய்வு அவசியம் தேவை.

3d-இன் இரண்டு பக்கங்கள்: அவதாரும் கண்வலியும்3d எனப்படும் முப்பரிமாணப் படங்களுக்கு ஹாலிவுட்டில் தனித்த வரலாறு உண்டென்றாலும் நம் கற்பனையை பாதித்தவை மை டியர் குட்டிச்சாத்தானும் அவதாரும். மேற்கில் 3d டி.வி தொடர்கள் பல ஒளிபரப்பப்பட்டுள்ளன. அத்தகைய தொடர்களின் போது டி.வி திரையின் ஓரமாய் குறிப்பு அளிக்கப்படும். உடனே பிரத்தியேக கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இப்போது 24 மணிநேர முப்பரிமாண டி.வி சேனலை ஸ்கை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கண்ணாடி தேவைப்படாத 3d தொழில் நுட்பமும் அண்மையில் உள்ளது. பொதுவாக முப்பரிமாண படைப்புகளுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு பானசோனிக், சோனி, பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 3d தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்த பெரும் உற்சாகம் அளித்துள்ளது. இவ்வருடம் வெளிவரப் போகும் முப்பரிமாண தொலைக்காட்சி இந்தியர்களுக்கு வெறும் செய்தி சுவாரஸ்யமாக மட்டுமே இருக்கும். அதிக விலை, 3d புளூரே டிஸ்குகள் இந்திய சந்தையை எளிதில் அடையாமை, 3d தொழில்நுட்பத்தை இந்திய காட்சி ஊடகங்கள் வரிப்பதற்கான சாவகாசம் மற்றும் வணிக சாத்தியம் ஆகியன காரணங்கள். தோற்ற அளவிலேனும் முப்பரிமாண கணினி மற்றும் கைப்பேசிகள் நம் எதிர்கால தொடர்புலகை அணுக்கமாக்க போகின்றன் என்பதில் சந்தேகமில்லை. எளிதில் நமது அன்றாட உலகில் 2d மெல்ல மெல்ல மறைந்து 3d ஆக்கிரமிக்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு அறிவியலை முப்பரிமாண திரைகளில் கற்பித்தால் அபாரமான ஈடுபாட்டை உருவாக்கலாம். அதே போன்று 3g கைப்பேசி காட்சி அரட்டையில் விடப்படும் 3d முத்தங்களோ அறைகளோ நம் பிரக்ஞையில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுத்தும்? நம் மொழிப்படிமங்கள் எப்படி மாறும்? இப்படி கற்பனை செய்து கொண்டே போவதற்கு ஒரு வேகத்தடை தேவையுள்ளது. இப்போதைக்கு முப்பரிமாண காட்சிகளின் பக்கவிளைவுகள்.

உலகம் முழுக்க அவதார் திரைப்படம் மனதை பிரமிக்க வைத்த அளவு உடலையும் பாதித்துள்ளது. இப்படத்தை முப்பரிமாணத்தில் பார்த்தவர்களில் பலருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி உனர்வு, பார்வை மங்கல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டுள்ளன. ஏன்?

3d என்பது ஒரு செயற்கையான காட்சி அனுபவம். விளக்குகிறேன். இயல்பு வாழ்வில் மேலிருந்து கீழாக அல்லது தூரத்திலிருந்து பக்கத்திற்கு வரும் பொருளை தெளிவாக காண நம் கண்ணின் லென்ஸ் தன்னை தகவமைக்கும். மேலும் விளங்க உங்கள் சுட்டு விரலை தலைக்கு மேலிருந்து மூக்கு நோக்கி இறக்குங்கள். கண்கள் சுழல்கின்றன. இப்படி சுழன்று உள்நகரும் போது நம் லென்ஸ் உருமாறுகிறது. ஆனால் முப்பரிமாணக் காட்சியின் போது ஒரு பக்கம் லென்ஸ் தகவமைந்தாலும் மற்றொரு பக்கம் நிலையான திரையிலும் கண்ணை நிலைக்க வைக்க வேண்டியுள்ளது. அன்றாட வாழ்க்கையிலும் இருவேறு திசையிலுள்ள பொருட்களில் பார்வையை நிலைக்க வைப்பது கண்ணுக்கு களைப்பானது என்பதை கவனியுங்கள். 3dயின் போது இவ்வாறு செயற்கையான விழியசைவுகள் தேவைப்படுவதால் கண்கள் களைப்பாகி வெவ்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

எதிர்கால 3d யுகத்தில் அறிவியலுக்கு இது ஒரு சவால் தான். ஒவ்வொரு சவாலை வெல்லவும் ஒரு மார்க்கம் நிச்சயம் உண்டு. பார்மசுயூட்டிக்கல் நிறுவனங்களின் தவறை தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க பொறுமை காக்க வேண்டும். கத்திரிக்காவில் இருந்து முப்பரிமாணம் வரை புதிய தொழில்நுட்பங்கள் மக்களிடம் செல்லும் முன் அரசாங்கம் கவனமாக மற்றும் கராறாக பரிசீலிக்க வேண்டும்.

Monday, February 15, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 12என் குழந்தைப் பருவத்திலும் கூட சிறு நகரங்களை ஒன்றை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது எளிதாக இருந்ததில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு சௌந்தரிய அமைதி ததும்பும் பெயர்களை --- துகாரின்கா, குவாமச்சிட்டேசு, நிர்லாண்டியா, குவாகாமயால் -- ஏந்திய பலகைகள் ரயில்நிலைய வராந்தாக்களில் வீழ்ந்து கிடக்க, அவை நினைவிலுள்ளதைக் காட்டிலும் அதிகமாய் தனிமைப்பட்டு விட, இது, மேலும் சிரமமாகி விட்டது.

Thursday, February 11, 2010

உள்ளுறை துக்கம்: தமிழ்நதியின் தன்னிலைக் கட்டுரைகள்

தாமரை இதழில் வலைப்பூக்கள் குறித்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். இது இரண்டாவது கட்டுரை. தமிழ்நதியின் வலைப்பூ இளவேனில் விவாதிக்கப்படுகிறது.

”சூரியன் தனித்தலையும் பகல்” தொகுப்பு மூலம் புலம்பெயர் கவிஞராக பெரிதும் அறியப்பட்டாலும் தமிழ்நதியின் உரைதான் விசேசமானது. அவரது சிறந்த கட்டுரைகள் தன்னிலை ஆனவை. இவரது வலைப்பூ இளவேனில். முகவரி: http://tamilnathy.blogspot.com/

தமிழும் தன்னிலைக் கட்டுரைகளும்

இன்று தமிழில் கட்டுரையாளர்களை அல்லது கட்டுரைகளை இப்படி வகைப்படுத்தலாம். அதிக அளவில் எழுதப்படும் பண்பாட்டு அரசியல் கட்டுரைகள் ஒரு கருத்து நிலை சார்ந்து எழுதப்படுபவை. இதில் குறைந்த பட்ச அவதானிப்புகள் மற்றும் அழகியல் இருக்கும். உச்சபட்சமாக தர்மாவேசமே ஒரே உணர்ச்சி. மாயா, முத்துக்கிருஷ்ணன், யமுனா ராஜெந்திரன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியவர்களை இந்த வரிசையில் நிற்க வைக்கலாம். குறிப்பாக, இவர்களுக்கு கட்டுரை ஒரு வெளிப்பாட்டு கருவி மட்டுமே. அப்புறம் நாகார்சுணன், ஜமாலன் போன்று தூய சித்தாந்த எழுத்தாளர்கள். எந்தவித தீர்மானமான கருத்துக்களும் இன்றி முழுக்க தரவுகளை தொகுத்து எழுதும் வகையறாவும் இன்று பிரபலம். மேற்கில் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே தன்னிலையான கட்டுரைகளுக்கு ஒரு தனித்த இடம் இருந்து வந்துள்ளது. சார்லஸ் லாம்பில் இருந்து இன்றைய லீ மார்டின் மற்றும் டேவிட் செடாரிஸ் வரை அவர்களுக்கு ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு. தொண்ணூறுகள் வரை இறுக்கமான, செறிவு மிக்க கட்டுரைகளே தீவிர உலகில் பிரபலம். சமீப காலத்தில் தான் லகுவான தன்னிலை கட்டுரைகள் எழுதப்பட்டு பரவலான கவனத்தை பெற்றன.

இவ்வடிவத்தை மிக வெற்றிகரமாக பயன்படுத்தியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரது கட்டுரைகளில் எஸ்.ரா எனும் தனிமனிதனில் ஆரம்பித்து ஒரு எழுத்தாளனின் பிரக்ஞையுடன் முடியும். எழுத்தாள எஸ்.ரா இல்லாத கட்டுரைகளே ஏறத்தாழ இல்லை எனலாம். சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் எழுத்தாள பிம்பத்தில் ஆரம்பித்து, சூழலில் மாட்டி அவஸ்தைப்படும் தனிநபர் நோக்கி சென்று, பின் அந்த எழுத்தாளனுக்கே மீளும். இவர்களுக்கு பின்னர் இணைய உலகில் உருவாகி வந்தவர்களில் கணிசமானோர் தங்கள் எழுத்தே அடையாளமான தன்னிலை கட்டுரையாளர்கள். இந்த வலைப்பதிவர்களில் பலருக்கு சொல்வதற்கு எந்த அவதானிப்புகளோ கண்டுபிடிப்புகளோ இருப்பதில்லை. இவர்கள் இவ்வடிவுக்குள் புனைவின் சாத்தியங்களை பயன்படுத்தும் பயிற்சியும் இல்லாதவர்கள். தமிழ்ப் பதிவர்களுள் நடை சுவாரஸ்யமும் ஆளுமையும் கொண்ட லக்கிலுக், அதிஷா, கென் போன்றவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். இவர்களால் சுய-அனுபவ வெளிச்சத்தில் தாராளமாக பகடி செய்ய முடிகிறது. வலுவாக தங்கள் தரப்பை பதிவு செய்ய முடிகிறது. கடைசியாக சொன்னது முக்கியம். இணையத்துக்கே உரித்தான அந்தரங்க குரல் இவ்வடிவத்துக்கு ஏற்றது.

தன்னிலையின் தன்மைகள்

தன்னிலை வகை எழுத்து புனைவுக்கும் நிஜத்துக்கும் இடைப்பட்டது. இயல்பாகவே கற்பனை படைப்புகளின் அத்தனை தந்திரங்களும், அழகியல் அம்சங்கள், எழுத்தாள சுதந்திரம், அவதானிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களும் பொதுவய எழுத்துக்கு தேவைப்படும் ஆதாரபூர்வ தகவல்களும் இணையும் ஒரு அலாதியான புள்ளி இதில் சாத்தியமாகிறது. புனைவின் சாத்தியங்களை அதிகமாக நம்பி எழுதப்பட்ட தன்னிலை கட்டுரைகளுக்கு முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் மற்றும் ஜெயமோகனின் வாழ்விலே ஒரு நாள் ஆகியவை உதாரணங்கள். இந்த இரண்டுக்கும் நடுவில் இருப்பவை தமிழ்நதியின் கட்டுரைகள். இணையத்தில் காணக்கிடைக்கும் ஆகச்சிறந்த தன்னிலை கட்டுரையாளர்களில் தமிழ்நதியும் ஒருவர்.தீவிர அக்கறை கொண்ட எழுத்து தமிழ் நதியுடையது. அவர் அரைத்தேன் தாளித்தேன் என்று எழுதுவதே இல்லை. நினைவேக்கம் தோய்ந்த குரல். நேரடியாக தீர்மானமாக சொல்லும் முறை. தமிழில் கவிதையில் இருந்து உரைநடைக்கு வந்தவர்களுக்கு உள்ள வடிவக்குழப்பம் அவருக்கு இல்லை. கவிதையில் இருந்து சில சாதகமான அம்சங்களே இவரது உரையில் சேகரமாகியுள்ளது: சொற்சிக்கனம், ஆழ்மன அதிர்வேற்படுத்தும் வார்த்தை பிரயோகம், செறிவான சித்திரத்தை வாக்கிய அமைப்பின் போக்கில் உருவாக்கும் சாமர்த்தியம். லா.சாராவில் நாம் காணும் ஒரு நெகிழ்ச்சியான கவித்துவத்தை இங்கு தமிழ்நதியிடம் பாருங்கள்:
”இனிதென்று அந்நாளில் நாமுணராத பால்யமே நம்மை உள்நின்று இயக்குகிறது ... மனதின் வெளிகளில் பறவைகளின் சிறகடிப்பை நாளாந்தம் மானசீகமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.(‘நாடொடிகளும் நகரவாழ்வும்’)”.

இதே கட்டுரையில் வரும் ஒரு நேரடியான புறவய சொற்றொடரை பாருங்கள்:

”நகரங்கள் அழகில்லையென்பதும்கூட பொதுப்புத்தி சார்ந்ததே. வயல்வெளிகளும் பூக்களும் பறவைகளும் எத்தனைக்கெத்தனை அழகோ அத்தனைக்கத்தனை அழகானது நகரம்.”

தமிழ்நதியின் கரிப்பான அல்லது கண்ணீர் தோய்ந்த வரியில் கூட நகைச்சுவையோ பகடியோ எட்டிப் பார்க்கும். இந்த புன்னகையின் வழி மாபெரும் இழப்பின் தாக்கத்தை சமநிலையுடன் ஏற்று நகர்வதே தமிழ் நதியின் உரைநடை பண்புகளில் முக்கியமானது. ஒற்றைபட்டையான குற்றசாட்டல்கள், செயற்கையான தன்னிரக்கம் அல்லது கண்டனங்களின் மறுப்புவாதத்தை இவரிடம் காண முடியாது. ஆனால் உக்கிரமான நாடகீய தருணங்களையும் போகிறபோக்கில் உருவாக்க முடிகிறது.

தமிழ்நதியின் கவிதைகள் மற்றும் புனைவு ஆக்கங்கள் பலவீனமானவை. கட்டுரைகளில் தான் அவரது ஆழ்மனதின் நதி பெருக்கெடுக்கிறது. அவரது சிறந்த கட்டுரைகள் மன-சமநிலையுடன் எழுதப்பட்டவை. படிக்க ஆரம்பித்தவுடன் இது தெரிந்து விடுகிறது. ஒரு தீவிரமான மன அனுபவத்தை புறநிலை விவரிப்புகள் மூலம் ஆரம்பிக்கிறார் என்றால் அந்த படைப்பு ஆற்றல் மிக்கதாய் இருக்கும் என்று உறுதிப்படலாம். உதாரணமாக, போர்ச்சூழலில் அவர் இலங்கை புறப்ப்ட எத்தனிக்கிறார். அந்த தயாரிப்பை கூறும் வரிகள் இவை. எங்குமே மன உணர்வுகளை சொல்லாமல் புறவய சித்தரிப்பு மூலம் ஒரு உணர்ச்சிவேகத்தை திருகியேற்றுவதை கவனியுங்கள்:

இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன்.

தமிழ்நதியின் எழுத்துக்குரல் மிக சன்னமானது. ஒரு கட்டுரையில் தகவல்களை அடுக்கியபடி வருகையில் சட்டென்று மனக்கிளர்ச்சி உற்று சில பத்திகள் நாடகியமாகி, கவித்துவ அவதானிப்புகளை உருவாக்கி சமநிலைக்கு மீள்கிறார். இக்கட்டுரைகள் மிகுந்த வாசிப்பு உவகையை தருவதன் காரணம் இதுவே. அடுத்து இந்த சன்னக் குரல் தான் தமிழ்நதியின் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவைக்கும் ஆதாரம்.

துக்கத்தின் கையணைப்பில் நகைச்சுவை

ஆ.முத்துலிங்கம் அல்லது சாரு போல் எழுத்தாளர்-மைய பகடி அல்ல இவரது. எப்போதும் துயரார்ந்த ஆளுமையாக முன் வரும் தமிழ்நதி சோகத்தில் இருந்து சற்று விலகி நின்று பிறிதொருவரை பகடி செய்வார். நுட்பமான சித்தரிப்பால் அப்பாத்திரத்தின் மிகையின் அசட்டுத்தனம் அல்லது அபத்தத்தை காட்டுவதே இலக்காக இருக்கும். ஓருவரை ஓட்டும் போது எந்த ஒழுக்க மதிப்பீடுகளையும் தமிழ்நதி முன்வைப்பதில்லை. ”ஒரு குடிமகனின் கதையில்” வரும் மணியம் மாமா நல்ல உதாரணம். அந்த நகைச்சுவை கட்டுரையும் ’நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில்’ என்று சோகத்தில் தான் ஆரம்பிக்கிறது. குடிகாரர் குறித்த கீழ்வரும் அறிமுகம் பாருங்கள்:

மணியம் மாமா எங்களுர் விதானையார் இல்லை. தபாற்காரர் இல்லை. விரல்களில் மினுங்கும் மோதிரங்களைக் காட்டவென்றே கைகளை வீசிக் கதையளக்கிற பணக்காரரும் இல்லை. என்றாலும் குழந்தைகளுக்குக்கூட அவரைத் தெரிந்திருந்தது.

மிக தோதான அறிமுகம் இது. ஏனெனில் இந்த மணியம் மாமாவே ஒரு குழந்தைதான். பகலெல்லாம் தோட்டத்தில் மண் கிளறுவார். அவ்வட்டாரத்தில் சமையலில் அவரை அடிக்க முடியாது. ஆனால் மாலை வேளைகளில் குடிக்க கிளம்பினால் மதுவின் அளவுக்கு ஏற்றாற் போல் மனைவியை நடத்துவார். அரை வயிற்றுத் தண்ணிக்கு மனைவியை பார்த்து ‘ நீ என்ரை தெய்வம்’ என்று கொஞ்சுவார். மட்டம் உயர்ந்தால் வசைகளை பொழிவார். வீட்டில் உள்ள ஒவ்வொரு சாமானாய் தூக்கிப் மனைவியை அடிக்க போக அவரது குழந்தைகள் அதனை பிடிங்கி வீட்டில் அதனதன் இடத்தில் வைப்பர். தொடர்ந்து அனைத்து சாமான்களும் இப்படி இடத்துக்கு மீண்டபடி இருக்கும். ஏனெனில் மாமா கர்ணன் மாதிரி. விடுத்த ஒரு அஸ்திரத்தை திரும்ப எடுக்க மாட்டார். திரும்ப திரும்ப இன்னிக்கு என்ன நாள் என்று கேட்பார். உண்மையில் அடுத்த நாள் அலாரம் வைத்து செய்வதற்கு அவருக்கு எந்த வேலையும் இருக்காது. ஆனால் கேட்டபடி இருப்பார். இதோடு அடிக்கடி தன் தாய் மற்றும் சகோதரிகளை நினைத்து ஒப்பாரி வைக்கும் காட்சியையும் சேர்த்து படிக்க வேண்டும். போதைக் கிறக்கத்த்லும் தன் சட்டைப்பாக்கட்டில் ’அறுப்பாத்தாறு ரூபா முப்பத்தஞ்சு சதம் இருக்கு’ என்று துல்லியமாக சொல்கிறார் மணியம் மாமா. வாழ்வின் ஸ்திரமின்மையின் இருவேறு வெளிப்பாடுகள் தாம் இவை: இழப்பு குறித்த நினைவேந்தலும், சட்டைப்பை ரூபாய் குறித்த நிதானமும்.

இலக்கியக் கூட்ட கட்டுரைகள்: எழுத்தின் அரசியல்

இலக்கிய கூட்டங்கள் குறித்த தமிழ்நதியின் பதிவுகள் சுவாரஸ்யமானவை. கூட்டங்களின் போக்கோடு ஒன்றி விடாத மனநிலை தான் இவற்றை முக்கியமாக்குகின்றன. நுட்பமும், சிக்கனமும் கூடிய விவரிப்புகள், இடைவிடாத பகடி, விமர்சனம், தன்னுணர்வு வெளிப்படும் தருணங்கள் ஆகியவை சிக்கலாய் பின்னப்பட்ட உயிர்ப்பான சித்திரங்கள் இவை. பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிக்கை கட்டுரை எழுதுபவர்களிடம் மாவாட்டுபவர்களுக்கான நேர்மையே இருக்கும். நண்பர்கள் மற்றும் பிரியமானவர்களை நோகடிக்கடிக்கக் கூடாது என்கிற கவனம் தெரியும். தமிழ்நதி தயக்கமின்றி தன் கருத்தை சொல்கிறார். உதாரணமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதன் நிகழ்ந்த ”கூடல் சங்கமத்தை” பற்றிய கட்டுரை. தமிழ்நதியின் இத்தகைய நிகழ்ச்சிக் கட்டுரைகள் ஈழ அரசியல் குறித்து இணையத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி எழுத்தாளர்களை தங்கள் தரப்புகளை விளக்க தூண்டியது.

கூடல் சங்கமத்தின் இறுதி நாள் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்கும் நிழந்த மோதல் சாரு-ஜெயமோகன் வகையறா அல்ல. தமிழ் நட்சத்திர எழுத்தாளர்கள் சிலர் ஈழப்போர் குறித்து ஒரு பனிப்போர் மௌனம் சாதித்தார்கள். இதன் மற்றொரு துருவம் இந்திய கம்யூனிஸ்டுகள் மற்றும் தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் நிலைப்பாடு. முதலில் கூட்டத்தை நோக்கி தமிழ்நதியின் கேள்வி:

”இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா?

இதற்கு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கோணங்கி “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்னும் தொனியில் பதிலளிக்கிறார்கள். ஆதவன் தீட்சண்யா பதிலாக சில கேள்விகளை முன்வைக்கிறார்: “மலையகத்தமிழ்ர்களை கீழ்மைப்படுத்திய, முஸ்லீம்களை விரட்டியடித்த, தமிழக தலித்துகளுக்காக குரல் கொடுக்காத உங்களுக்காக நாங்கள் ஏன் பேச வேண்டும்”. ஆதவன் தீட்சண்யா அடுத்து கீற்று இணையதளத்தில் தமிழ்நதியை விமர்சித்து கடிதம் எழுதினார். அவருக்கு துணையாக ஷோபா சக்தியும் தமிழ்நதியின் புலி அரசியலை தாக்கினார். இலக்கிய பக்கமிருந்து மனுஷ்யபுத்திரன் அவரது வலைப்பூவில் ஒரு முக்கியமான கட்டுரை எழுதினார். தான் தனிப்பட்ட முறையிலும் தமிழின் பிற முன்னணி படைப்பாளிகளும் இப்பிரச்சனையில் குறிப்பிடத்தகுந்த வகையில் பங்காற்றி உள்ளமை குறித்து விளக்கினார். ஈழப்போர் குறித்து மட்டுமல்ல எந்த அரசியல் பிரச்சனையையும் புறக்கணிக்கும் போக்கு தமிழ் தீவிர எழுத்தாளர்களிடம் இருப்பதற்கு பண்பாட்டு ரீதியாக காரணம் சொன்னார். தொடர்ந்து கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு குறித்து பதிவர்களிடம் இருந்து கேள்விகள் வந்தன. தமிழ்ப்பரப்பில் ஒரு மும்முனை விவாதத்தை புகைய வைத்த புண்ணியத்திற்காக தமிழ்நதியின் கேள்வி மற்றும் இணையப்பதிவு முக்கியமானதாகிறது.

அதே ஜூன் மாதம் நடந்த வால்பாறை இலக்கிய கூட்டத்தை பற்றிய தமிழ்நதித்தனமான கட்டுரையும் தமிழ் விமர்சனத்தின் நேர்மையை கேள்வி கேட்கிறது. இசையின் கவிதைத் தொகுப்பு குறித்து பேசும் கரிகாலன் அவரை மகாகவி என்கிறார். விளைவாக நண்பர் வட்டத்தில் இசையின் பெயர் மகாகவி என்றாகிறது. லேனா மணிமேகலையின் தொகுப்பு மீதான விமர்சனத்தை கொண்டாட்டம் மட்டுமே என்று முஜிபூர் ரகுமான் கண்டிக்க, ஆ.மார்க்ஸ் வழிமொழிகிறார். தமிழ்நதி இசையை விடுவதாக இல்லை. தமிழ்நதியினுடனான உரையாடலில் இசையின் சொல்லாடல் பொதுவான தமிழ் விமர்சனம் மீதான ஒரு நுண்ணிய கேலிச்சித்தரிப்பாக உள்ளது: ‘உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. என்னுடைய கவிதைகளும். என்னுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன… உங்களுடையதும்’. இக்கட்டுரையின் ஊடே ஒரு நினைவேக்கத்தை வேறு புனைந்திருக்கிறார் தமிழ்நதி. இறுதிவரி இந்த உபபிரதியை ஒன்றிணைக்கிறது: ”வாழ்வில் எப்போதாவது பசுமைகளில் நாம் வந்து தங்கிச்செல்லலாம்; ஆனால், தரிக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் அது பொருந்தத்தான் செய்கிறது.”

தமிழ்நதியின் இளவேனில் வலைப்பூவில் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் புனைகள் சேர்த்து 200க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. பெரும்பாலானவை படிக்கத்தக்கவை தாம். படித்தவுடன் ஒட்டிக் கொள்ளும் அவரது நடையை அனைத்துப் பதிவுகளிலும் காண முடியும். மிகக்காத்திரமான துயரம் தனக்கு அடையாளமாக நகைச்சுவையையும் அமைதியையும் பக்கத்தில் கொண்டிருக்கும். இதனாலே இணையத்தின் கேளிக்கை எழுத்துக்கள் மற்றும் மலினக் கண்ணீர் குட வரிசைகள் மத்தியில் இவரது எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.

தொடர்ச்சியாக எழுதப்படும் வலைப்பூக்கள் சிறுகசிறுக பக்கம் சேர்க்கப்படும் மொத்தத் தொகுப்பைப் போன்றவை. ஒரு எழுத்தாளரின் ஆன்மாவை இதை விட அணுக்கமாக நாம் தெரிந்து கொள்ள முடியாது.

இருட்டின் நட்சத்திரங்கள்

சினிமா பார்வையாளனுக்காக எடுக்கப்படுகிறது. இலக்கியம் வாசகனுக்காக எழுதப்படுகிறது. கிரிக்கெட் மட்டும் ஆட்டக்காரர்களுக்காகவே ஆடப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்காகவே (தங்களுக்கு உள்ளாகவே) பேசிக் கொள்கிறார்கள். ஆட்டத்தொடர் இழப்புகள் தற்போதெல்லாம் தேர்தல் முடிவு அறிக்கைகளை நினைவு படுத்துகின்றன. இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை இழந்த ஆஸி அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் பெரும்பாலும் நாங்கள் தான் சிறப்பாக ஆடினோம் என்று பிடிவாதம் பிடித்தார். சமீபமாக இந்தியாவில் பந்து வீச்சு காரணமாக இரு தொடர்களில் தோற்ற இலங்கை அணி தலைவர் சங்கக்காரா நன்றாகவே பந்து வீசினோம் என்று வாதித்தார். இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ஆட்டம் நடந்து வரும் போது துலிப் கோப்பை எனும் உள்ளூர் மண்டல ஆட்டத்தின் கடைசி நாள் நடந்தது. இரண்டும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகின. இந்தியாவின் சர்வதேச பந்து வீச்சுக்கும் உள்ளூர் வீச்சு மற்றும் பீல்டிங்குக்கும் மிகச்சிறு வித்தியாசமே. தெற்கு மண்டல அணி நிர்ணயித்த 536 ஓட்டங்களை அடைந்து மேற்கு மண்டல அணி உலக சாதனை படைத்தது. யூசுப் பதான் கடுமையான கால் வலியைப் பொறுத்துக் கொண்டு அசுர ஆட்டம் ஆடினார். 190 பந்துகளில் 210 ஓட்டங்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 290 சொச்சம் எடுத்தது. ஒப்பிடுகையில் சர்வதேச ஆட்டம் மிக மந்தமாக இருந்தது. பந்து வீச்சு எதிர்மறையாகவும் சோர்வுடனும் இயங்கியது. ஹர்பஜன் சிங் கற்பனைக் குச்சிகளுக்கு குறி வைத்து வீசினார். காஷ்மீர் குடிமக்களை விட சற்று குறைவாகவே பாதுகாப்பின்மையை உணரும் அமித் மிஷ்ரா பத்து ஓவர்களுக்குள் விக்கெட் விழாத ஆத்திரத்தில் தாறுமாறாக வீசினார். ஏற்கனவே மூன்று மட்டையாளர்களை காயத்தினால் இழந்த வெறுப்பில் இருந்த தோனி தெ.ஆ 100 தாண்டியதும் எப்படியாவது டி.ரா செய்வது என்று வினோதமாக சிந்திக்க தொடங்கினார். இதை தெற்கு மண்டல அணித்தலைவர் தினேஷ் கார்த்திக்கின் அணுகுமுறையுடன் ஒப்பிடுவோம்.

கார்த்திக்கின் அணி ஆட்டத்தின் முதல் நான்கு நாட்களும் வலுவாக இருந்தது. 149 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் மேலும் ஒரு நாள் ஆடி டிரா செய்திருந்தால் ஓட்ட முன்னிலை காரணமாக கோப்பையை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் டிக்ளேர் செய்து இலக்கை தந்து மேற்கை ஆட அழைத்த கார்த்திக்கின் முடிவு மிக ஆரோக்கியமான நேர்மறையான ஒன்று. அதை விட முக்கியமாக சட்டென்று சோர்விலிருந்து மீண்ட மேற்கு அணி இறுதி ஒன்றரை நாட்களும் மிக ஆவேசமாக ஆடி எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆட்டத்தை வென்றது. முதல் நாள் ஆட்ட முடிவில் தோனி சொன்னது இதை எல்லாம் விட கொடுமையானது.

எந்த வித ஈடுபாடோ தன்னம்பிக்கையோ இன்றி தெ.ஆவை கிட்டத்தட்ட முன்னூறு ஓட்டங்கள் எடுக்க விட்ட தன் அணியின் “பந்து வீச்சு நன்றாகவே இருந்தது” என்றார் தோனி. உள்ளூர் ஆட்டக்காரர்களை விட பலமடங்கு அதிகமாக கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியாவின் சர்வதேச அணியினர் கிரிக்கெட் ஒரு கேளிக்கை ஆட்டம் என்பதை மறந்து பல வருடமாகிறது. தங்கள் இடம் மற்றும் அந்தஸ்தை தக்க வைக்க 22 பேர் மூக்கு நோண்டுவதை பொது அரங்கில் ஏன் நடத்த வேண்டும்; நேரடி ஓளிபரப்பு செய்ய வேண்டும்? டெஸ்டு ஆட்டத்தின் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க இவர்கள் தொடர்ந்து மறுத்து வருவதன் காரணம் இந்த நீரோ மனநிலைதான். யூசுப் பதான் பத்து ஆறுகள் மற்றும் 19 நாலுகள் விளாசி ஆட்டத்தை மிக விறுவிறுப்பாக கொண்டு செல்ல தெ.ஆ-வின் சர்வதேச மட்டையாட்டம் பொக்கை வாயர்கள் வெற்றிலை மடித்து மெல்லுவதற்கு சமமாக இருந்தது. மிகப் பொருத்தமாக இவர்களின் இந்த மெத்தன ஆட்டம் போன தலைமுறை கிரிக்கெட் எச்சமான கவாஸ்கருக்கு ரொம்ப பிடித்திருந்தது.

வங்கதேசத்துக்கு எதிரான இந்திய தொடர் நிகழ்ந்து கொண்டிருந்த போது இங்கே கர்நாடக மற்றும் மும்பை அணிகள் மோதிய ரஞ்சி இறுதி ஆட்டம் நடந்தது. அது சர்வதேச ஆட்டத்தை விட தரமானதாக இருந்தது மட்டுமில்லை, மைதானம் ரொம்பி வழிந்தது. நம்ப மாட்டீர்கள்! அரங்கத்தில் இடம் கிடைக்காமல் மரங்கள் மற்றும் பக்கத்து கட்டிடங்கள் மீதெல்லாம் நின்று கர்நாடக அணி ஆதரவாளர்கள் பார்த்தார்கள். ஒருவர் தெருவிளக்கு கம்பத்தில் தொங்கினபடி கர்நாடக கொடியை அசைத்தபடி இருந்தார். சர்வதேச ஆட்டங்கள் பார்த்தால் கொட்டாவி விட்டு வாய் ஒரே அடியாக கோணி விடும். ஆனால் இந்த உள்ளூர் ஆட்டத்திற்கான மொத்த கூட்டமும் திருவிழா மனநிலையில் இருந்தது. இறுதி சில மணிநேரங்களில் ஒவ்வொரு பந்துக்கும் ஆரவாரம் மற்றும் பெருமூச்சு. தவறான முடிவு தந்த நடுவருக்கு எதிராக “டவுன் டவுன் அம்ப்யர்” கோஷம். ஐந்து நாட்களும் மனக்கிளர்ச்சி, ஏமாற்றம் என்று ராட்சத ராட்டினத்தில் போல் அவர்களின் உணர்வுகள் உச்ச-இறக்கங்களை கண்டன. சமீபத்தில் இந்தியாவில் நடந்த எந்த சர்வதேச டெஸ்டுகளுக்கும் இத்தனை கூட்டம் வந்ததில்லை.வங்க அணித்தொடர் மிகத் தமாசாக இருந்தது. இந்தியா நாம் ஜெயிக்க வேண்டாம் அவர்களே தோற்று விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தது. வங்கதேசம் கௌரவமாக தோற்க விரும்பியது. அதனாலே வங்கதேசத்தால் 20 விக்கெட்டுகளை விழ்த்த முடியாது என்று சேவாக் போட்டு உடைத்ததும் குஷ்பு சர்ச்சை போல் ஒன்று அங்கு கிளம்பியது. வங்கதேச சுயதோல்விகள் முடிந்ததும் மீண்டும் வங்கதேசத்திற்கு சர்வதேச அங்கீகாரம் தந்தது தவறு என்று மற்றொரு சர்ச்சை ஆரம்பித்தது. தெருக்கோடியில் சிறுவர்கள் ஆடுவதைப் போன்ற டெஸ்டுகளை பார்த்த ஒரு வெறுப்பில் உருவானதே இந்த சர்ச்சை. சரி தரம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்ற கேள்வி எழலாம்.

ரஞ்சி இறுதி ஆட்டத்தில் மோதின கர்நாடக மற்றும் மும்பை அணிகளுக்கு வங்க தேசத்தை விட ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. இந்தியாவில் கிரிக்கெட் 18-ஆவது நூற்றாண்டில் இருந்தே ஆடப்படுகிறது. நமது உள்ளூர் மட்டையாளர்களின் தொழில் நுட்பம், பொறுமை மற்றும் மன-ஒழுக்கம் 35 வருட பாரம்பரியம் கொண்ட வங்கதேச வீரர்களை விட சிறப்பாக உள்ளது. முக்கியமாக வங்கதேச அணிக்கு உயர்தரமான, நெருக்கடி ஆட்டங்களை வென்ற பழக்கம் இல்லை. வெற்றி பெறும் கலை அவர்களுக்கு தெரியாது. சிம்பாப்வே, கென்யா போன்ற சர்வதேச குட்டி நாட்டு அணிகளுக்கும் இதுவே நிலைமை. இவற்றை விட இந்திய, தென்னாப்பிரிக்க, ஆஸி உள்ளூர் அணிகள் பிரமாதமாக ஆடும். ஆனால் தனி நாடு அந்தஸ்து உள்ளதனாலே தங்களின் மட்டமான அணிகளுக்கு சர்வதேச அரங்கில் அந்தஸ்து பெற்றுத்தர இத்தேசங்களால் முடிகிறது. உள்ளூர் அரசியலில் என்ன குழப்படிகள் நடந்தாலும் தமிழ் ஈழத்தில் போல் அங்கு ஆளாளுக்கு நேரடியாக தலையிட முடிவதில்லை. இங்கு ஆ.முத்துலிங்கம் தமிழ் அழியும் என்பதற்கு சொன்ன காரணத்தை நினைவுறுத்த விரும்புகிறேன்.

மீண்டும் அந்த ரஞ்சி இறுதிப் போட்டிக்கு. தற்போது உள்ளூர் ஆட்ட ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகளுக்கு தேர்வு அணியினர் மதிப்பளிப்பதில்லை. குறிப்பாக 28 வயது தாண்டியவர்கள் மற்றும் எதிர்மறை பிம்பம் பெற்றவர்கள் என்னதான் கரணம் அடித்தாலும் சர்வதேச வாய்ப்பு கிடைக்காது. மும்பை அணி முழுக்க இத்தகைய நிராகரிக்கப்பட்ட பிளாட்பார்ம் வாசிகளால் ஆனது: அகார்க்கர், பொவார், ஜாபர், சால்வி ... கர்நாடக அணியில் மிதுன் மற்றும் மனிஷ் பாண்டே மட்டுமே ஓரளவு தேர்வாளர் கவனத்தில் உள்ளவர்கள். பிறர் புதுமுகங்கள். இரு அணிகளுக்கும் போட்டி முடிவினால் அணித்தேர்வு போன்ற அனுகூலங்கள் பெரிதாக இல்லை. இருந்தும், அவர்கள் நம் சர்வதேச நட்சத்திரங்களை விட தீவிரமான அணுகுமுறை மற்றும் அதிக ஊக்கத்துடன் ஆடினர். இந்திய-ஆஸி ஆட்டத்தில் நிகழும் சச்சரவுகள் சில இங்கும் காணக் கிடைத்தன.அகார்க்கருக்கு ஒரு பழக்கம்: ஒவ்வொரு ஷாட் அடித்த பின்னரும் கிரீசிலிருந்து சில இஞ்சுகள் வெளியேறி நிழற்பயிற்சி செய்வார். இதை கவனித்த எதிரணி கீப்பர் கவுதம் ஒருமுறை அகார்க்கர் இப்படி வெளியேறிய போது பந்தை வீசி ரன் அவுட் செய்தார். தனது சர்வதேச ஆட்டங்களின் போது டக்கடித்தாலும் பொருட்படுத்தி இராத அகார்க்கர் இம்முறை கொதித்து போனார். அவுட் அளித்த நடுவருடன் நீண்ட வாதம் நடத்தினார். கர்நாடகாவின் ஸ்பின்னரும் சர்வதேச ஆட்டங்களில் அகார்க்கருடன் ஆடியுள்ளவருமான சுனில் ஜோஷி குறிக்கிட்டு அகார்க்கரை மேலும் வெறுப்பேற்றினார். இதனால் அகார்க்கருக்கும் எதிரணியினருக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பகைமை ஆரம்பித்தது. அகார்க்கர், தவல் குல்கர்னி மற்றும் உத்தப்பாவின் ஆட்ட சம்பளத்தில் 50 சதம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த இன்னிங்சில் அகார்க்கரை காட்ச் பிடித்து வெளியேற்றி கர்நாடக தலைவர் உத்தப்பா பந்தை தரையில் ஆவேசமாய் வீசியபடி கொண்டாடினார். அகார்க்கர் நடுவரிடம் முறையிட்டு வெளியேற சற்று நேரம் மறுத்தார்.

மும்பையின் அணி உணர்வு அபாரமானது. சச்சின் கூட மும்பைக்காக ஆடும் போது அதிக ஒன்றுதலுடன் கூடுதல் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார். முதல் நான்கு நாட்களிலும் மும்பை தனது 38 முறைகள் கோப்பை வென்ற பாரம்பரியம், அபிமானத்தை காப்பாற்றும் வெறி மற்றும் ஒருங்கிணைவு காரணமாய் சிறு முன்னணி பெற்றிருந்தது. அதற்கு நெருக்கடி நிலைமையில் மட்டையாடிய அபிஷேக் மற்றும் குல்கர்னியின் போராட்ட குணம் மற்றும் மன-ஒருமை காரணமாக இருந்தது. அபி‌ஷேக் தனது கவனத்தை மேம்படுத்த மூன்றரை மணி நேரமும் ஒவ்வொரு பந்துக்கும் இடையே ஏதோ மந்திரத்தை விடாமல் ஜெபித்தது வினோதமான காட்சி. சர்வதேச அணியில் நுழைந்தால் நம்மவர்களுக்கு இந்த அர்ப்பணிப்பு மறந்து விடும்.337 இலக்கை மும்பை கர்நாடகாவுக்கு நிர்ணயித்தது. கர்நாடகா மட்டையாட வந்த போது அகார்க்கர் தனது கோபத்தை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வெளிப்படுத்தினார். அகார்க்கரை தவிர்க்க நான்காவதாக் இறங்கி ஆடின துவக்க ஆட்டக்காரர் உத்தப்பாவை வெளியேற்றிய போது அகார்க்கர் அவரை உசுப்பேற்ற சற்று கூடுதலாகவே கொண்டாடினார். 46க்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தோல்வியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கர்நாடக அணி. முந்தின நாள் காற்றில் பறந்து ஒரு கேட்ச் பிடித்த மனிஷ் பாண்டே அதிரடியாக 144 அடிக்க ஆட்டத்திசை மாறியது (http://www.youtube.com/watch?v=kL1E4nGqOQA&feature=youtube_gdata). ஆனாலும் மும்பையினர் விட்டுக் கொடுக்க இல்லை. விழுந்து புரண்டு மிகச்சிறப்பாக பீல்டிங் செய்து பல நாலுகளை தடுத்தனர். இந்த அணி விசுவாசம் கடைசியில் அவர்களை காப்பாற்றியது ஆறே ஓட்ட வித்தியாசத்தில் வென்றனர். நமது வரலாற்றிலேயே எந்த இந்திய அணியும் இத்தனை அணியுணர்வு மற்றும் ஆவேசத்துடன் போராடியதில்லை. ஆனால் இவ்வளவும் நடந்து கொண்டிருந்த போது நம்மவர்கள் வங்க தேசத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். சேவாக்கும் யுவ்ராஜும் எளிய கேட்சுகளை கோட்டை விட்டு முழித்தனர். வங்கதேசம் இவ்விசயத்தில் மட்டும் இந்தியாவுடன் போட்டி இட்டது.இரண்டு உள்ளூர் இறுதி ஆட்டங்களிலும் தோற்ற அணித்தலைவர்கள் நாங்கள் தான் ஜெயித்தோம் என்று முரண்டு பிடிக்கவில்லை. எதிரணியை பாராட்டினார்கள்.

இன்று பொதுத் தளங்களில் ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் தாம் போலிகளை நட்சத்திரங்களாக்கி முன்வைக்கின்றன. இவர்களின் அசட்டுத்தனங்கள் செய்தியாக பெருக்கப்பட எதை பொருட்படுத்த என்ற பெருங்குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. திருதிராஷ்டிரனின் ஒவ்வொரு தடுமாற்றத்துக்கும் அபாரமான அசைவுகள் ஆஹா என்று கை தட்டுகிறோம். அசலான நட்சத்திரங்களைக் காண கொண்டாட்ட மேடைகளின் பின்னே செல்ல வேண்டி உள்ளது. இருட்டில் ஒளி விடுவது நட்சத்திரங்களின் விதி போலும்.

Thursday, February 4, 2010

கல்லூரி, சர்க்கஸ் சிங்கம் மற்றும் மிசோரம்

மனிதர்கள் தொடர்ந்து நம்மைச் சுற்றி பலரும் ஏகப்பட்ட விநோதமான அசட்டுத்தங்களை சில்லறைத்தனங்களை வெளிப்படுத்தியவாறு உள்ளனர். கவனிக்க போதுமான வாய்ப்புகள் நமக்கு வாய்ப்பதில்லை அல்லது மனதை நாம் இவற்றுக்காக திறந்து வைப்பதில்லை. அல்லது ... மிக எளிதாக ... நீங்கள் ஒரு கல்லூரிக்குள் இல்லை.

ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு கலாச்சார சூழல் இருக்கும். அதையும் மீறி பொதுவாக கல்லூரி ஆசிரியர்களிடம் நிறைய அசட்டுத்தனங்கள் அபரிதமான போக்கிரித்தனம் வெளிப்படும். நண்பர்களே, நீங்கள் நடைமுறையில் வேறெங்கும் காண முடியாத மனித போக்குகள் இவை.

இங்கு நான் சொல்லப் போகும் கதைகள் என் அனுபவம் மற்றும் நண்பர்களின் தகவல்களில் இருந்து உருவானவை. வாரமலர் கிசுகிசு போல் இவற்றின் மூலத்தை தேடாமல் மனிதர்களை மற்றும் கவனிக்க வேண்டுகிறேன். இல்லாவிட்டால் என்னை ராடடித்து, விட்டால், சாகடித்தே விடுவார்கள்.என் நண்பனின் கல்லூரியில் நிரந்தர×தற்காலிக ஆசிரியர்கள் இடையில் உள்ள வர்க்க போதம் காரணமான ஒடுக்குமுறைகள் குறித்து முன்னொரு தடவை எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை படிக்கலாம்.

என் நண்பன் கல்லூரி காண்டீனில் தனியாக அமர்ந்து உலர்ந்து போன இட்லிகளை பிய்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது அவன் துறையின் மூத்த பேராசிரியர் வருகிறார். நண்பன் காந்தியைப் போல் மனிதர்களின் நற்பண்புகளில் நம்பிக்கை உள்ளவன். அவமதித்தவர்களுக்கு கூட அடுத்த முறை தூக்கலாக மரியாதை தரும் போன தலைமுறை எச்சம். பேராசிரியருக்காக பரபரப்பாக பக்கத்து நாற்காலியை தயார் செய்து சிறுவெட்கத்துடன் நமஸ்கரிக்கிறான். அவர் டீக்கடை வாசலில் கறக்கப்படும் எருமையை தள்ளி நின்று கவனிக்கிறவரின் பாவனையுடன் தாண்டிச் சென்று பக்கத்து மேஜையில் உட்காருகிறார். நண்பன் அந்த காலி நாற்காலியை ஏமாற்றத்துடன் பார்க்கிறான். மூளைக்குள் பல்ப் எரிகிறது. அப்போது அடுத்த சோதனை வருகிறது. இது எளிதுதான் என்று முதலில் படுகிறது. ஒரு இளைய தற்காலிக ஆசிரியர். நண்பர் ஆசுவாசமாகிறார். நம் வர்க்கம் தானே. கால்வாசிப் புன்னகையுடன் அவரை நோக்கி வரும் வர்க்கத்தோழரை பார்க்கிறார். சின்னத் தலையாட்டலுடன் வணக்கம் சொல்கிறார். ஆனால் அந்த தற்காலிக ஆசிரியர் நிரந்தர பேராசிரியருடன் வர்க்கம் போதம் கடந்த சமூக ரீதியான நெருக்கம் கொண்டவர். அதிகார வர்க்கத்துடன் உராசும் அடிமை வர்க்கமும் அப்பண்புகளை பெற்று விடுமே! அவரும் நண்பரின் வணக்கத்தை கவனிக்காமல் கடந்து பேராசிரியர் பக்கத்தில் அமர்கிறார். பல்ப் உடைந்து விடுகிறது.இதை மற்றொரு துறையில் அமர்ந்து நண்பர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டேன்: “அட அசடே இது உலக இயல்பாயிற்றே. அதிகாரத் தீண்டாமை எந்த இடத்தில் இல்லை சொல். நான் வேலை பார்த்துள்ள அதிநவீன தனியார் நிறுவனங்களில் மேலாளரை பேர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் உண்டு. ஆனால் அங்கும் கூட மேலாளர்கள் வர்க்க வித்தியாசத்தை கீழ்நிலை ஊழியருக்கு சூட்சுமமாக உணர்த்தியபடிதான் இருப்பார்கள். கல்லூரிகள் நவீனப்பட்டு சமகாலத்துக்கு இன்னும் வரவில்லை. அதனால் ஜமீந்தார் பாணியில் ஆண்டான் – அடிமை முறை வெளிப்படையாக அநாகரிகமாக உள்ளது. கஞ்சித்தண்ணிக்கும் வெஜிடபிள் சுப்புக்கும் உள்ள வேறுபாடு தான் இது. விடப்பா”. அப்போது நண்பன் சுடுசோற்றை முழுங்க முடியாமல் தவிப்பது போல் ஒரு பாவனை செய்தான். என்னடா என்று துணுக்குற்ற வேளையில் பா.ராகவன் ஸ்டைலில் ’அது நடந்தது’.

அதே நிரந்தர பேராசிரியர் நுழைந்து எதிர் நாற்காலியில் அமர்ந்தார். தனது துறை துப்புரவு அப்போது செய்யப்படுவதாகவும் அதனால் இங்கு வந்துள்ளதாகவும் முகம் சுளித்தபடி சொன்னார். நாங்கள் இறுக்கமாக கல்யாணப் பெண் போல் அமர்ந்திருந்தோம். சற்று நேரம் எங்களை விசித்திரமாக நோக்கினார். பிறகு என் நண்பனை பார்த்து அதிகார பாவனை தொற்ற கை நீட்டி சொன்னார்: “அறை சுத்தமாகி விட்டதா என்று போய் பார்த்து விட்டு வருவாயா”. என்ன விந்தை என்றால் அவர் சொன்ன துறை அறை எட்டிப் பார்க்கும் தூரத்தில் பக்கத்திலே உள்ளது. நண்பரை திரும்ப வந்து ”சார் ரூம் ரெடி” என்றுவுடன் நன்றி கூட கூறாமல் தான் அது வரை படித்துக் கொண்டிருந்த புனித நூலை சிரத்தையாக மூடி விட்டு எழுந்து கிளம்பினார்.

போய் சில நொடிகள் மௌனித்து விட்டு நண்பன் கனைத்தான்: “ நன்றி கூறுவது நாசூக்காக நடந்து கொள்வது எல்லாம் மேல்தட்டு பாவனைகள். இவரைப் போன்ற வெளிப்படையான அதிகார வர்கத்தினர் ஆபத்து குறைவானவர்கள்”. சரிதான், சர்க்கஸுக்கு உள்ளேயும் வெளியிலும் சிங்கம் ஒன்றுதான். தமாஷ் மட்டும் தான் வித்தியாசம்.

இதெல்லாம் ஜீரணம் ஆவதற்கு என்றே ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒரு கதை சொன்னார். அவர் ஒரு ஆய்வரங்குக்கு சென்றிருக்கிறார். மதியம் அரங்கம் முடிந்ததும் அசல் உத்தேசமான பங்கேற்பு சான்றிதழுக்காக கூட்டத்தோடு கூட்டமாக காத்திருக்கிறார். நெடுநேரமாகியும் பேச்சு மூச்சில்லை. மாலை வரை பங்கேற்பாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று உதவியாளர் ஒருவர் வந்து சொல்கிறார். என்ன காரணம்? சான்றிதழில் கையொப்பம் இட வேண்டிய பல்கலைக் கழக துணைவேந்தர் (கலைஞரின் பல வலதுகரங்களில் ஒருவர்) மதியம் மூன்று மணிநேரம் தூங்கும் வழக்கமாம். அவர் எழுந்து களைப்பு நீங்கிய பின்னரே ஒப்பமிட்டு சான்றிதழ் வழங்குவார். நான் பரபரப்பாகி கேட்டேன் “அப்புறம் என்னாச்சு. எதிர்ப்பு காட்டினீர்களா? ஆவேசத்தில் முற்றுகை, உண்ணாநிலைப் போராட்டம், கோஷம், கைகலப்பு ஏதாவது ... ?”

“ச்சே... நாங்கள் இரவு வரை கூட காத்திருக்க தயாராக இருந்தோம். கல்லூரி ஆசிரியர்னா சும்மாவா!” கல்லூரிச்சூழல் பரிச்சயம் பலவித கீழ்மைகளை தாங்குவதற்கான ஒரு தடுப்பூசி.வாஸந்தி அம்ருதா இதழில் மிசோரம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஒரு காட்சி. வாஸந்தியின் வீட்டிற்கு ஒரு உள்ளூர் மிசோரம்காரர் வந்து சோபாவில் சாவகாசமாக கனவான் பாவனையில் அமர்ந்திருக்கிறார். வாஸந்தி தன் உதவியாளரிடம் வந்தவர் யாரென்று விசாரிக்கிறார். “கழிப்பறை சுத்தம் செய்ய வந்துள்ளார். நீங்கள் உள்ளே இருந்ததால் காத்திருக்கிறார்”. வாஸந்திக்கு அதிர்ச்சி. உதவியாளர் விளக்குகிறார்: “மிசோரம் மக்களுக்கு படிநிலை போதம் கிடையாது. முதலமைச்சர் முன்னிலையிலும் சமமாக உட்காருவார்கள்”. இந்த கட்டுரைதான் என்னை இதை எழுதத் தூண்டியது.

Tuesday, February 2, 2010

மனுஷ்யபுத்திரன் மீதான அசட்டுப்புகார்களும் ஒரு அபாரக் கவிதையும்

இன்று காலையில் என் கல்லூரி நண்பர்களுடன் ஒரு உஷ்ணமான இலக்கிய விவாதம். மனுஷ்யபுத்திரன் தன்னிரக்க கவிதைகளையே எழுதி வருவதாக ஒரு நண்பர் சொல்லி, பிறகு நான் மறுக்க, அவர் தன் கருத்தை மலைப்பாம்பு போல் விழுங்கி துப்பவும் முடியாமல் பிறகு ஜகா வாங்கினார். நான் ம.புவின் சக்கர நாற்காலியின் அனுகூலங்கள் குறித்த கவிதை அன்றாட வாழ்வின் அபத்தங்கள் குறித்தது என விளக்க, நண்பர் தான் ஒட்டுமொத்த நவீன கவிதை இயக்கமுமே தனிமனித தன்னிரக்கத்தை பேசுவது; அத்தகைய நவீன கவிஞர்களுள் ஒருவர் ம.பு என பொருள்பட சொன்னதாய் ஒரு ஊடுபாதைக்குள் நுழைந்தார்.ம.பு ஒரே மாதிரியான கவிதைகளை மீண்டும் மீண்டும் எழுதுவதாய் அவதானிப்பது அரைகுறை வாசிப்பின் விளைவுதான். ம.புவின் வாசகனாக மட்டும் அல்ல, பொதுவாக தமிழ் கவிதை வாசிப்பில் உள்ள சிரத்தை இன்மையை குறிப்பிடவே இதை எழுதுகிறேன். நாம் ஒரு எழுத்தாளன் குறித்து ஒற்றை வாக்கியத்தை உருவாக்கி வைத்து தத்தைகளின் கூண்டு வரிசை போல் ஒப்பிக்கிறோம். இன்னும் சில வருடங்களில் முகுந்த் நாகராஜன் என்ன குழந்தைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப எழுதுகிறார் என்று புகார் செய்வோம்.

ம.பு தனது கவிதை மொழிக்குள் கூறுமுறை மற்றும் கரு சார்ந்து பற்பல சாத்தியங்களை முயன்றுள்ளார். தேவதேவன் அளவுக்கு மீளமீள வரும் ஒரு உருவகத்தை கூட நீங்கள் காட்ட முடியாது. அவருடைய ”நீ” கூட ஒருவர் அல்ல. கீழ் வரும் மனுஷ்யபுத்திரன் கவிதையை பாருங்கள்.


கன்னிமையின் முலைப் பால்கன்னிமை நீங்கா
உன் முலைகளில்
கசிந்துவரும்
பாலின் மணத்தில்
திடுக்கிட்டு எழுகிறது
இந்த இரவு

காமத்தின் அனல்பறக்கும்
என்முகத்தில் பட்டுத் தெறிக்கிறது
அதன் ஒரு அமிலத் துளி

வெளியே
தொடங்குகிறது
இதற்குமுன் பெய்திராத பெரு மழை
பாலின் வாசனையை
எங்கெங்கும் கொண்டுவரும் ஒரு மழையை
யாரும் அதற்கு முன் பார்த்ததே இல்லை

இன்னும் பிறக்காத
ஆயிரம் ஆயிரம் சிசுக்கள்
இன்னும் திறவாத
கண்களில் நீர் தளும்ப
அம்மையின் முலைதேடி
தவியாய் தவிக்கின்றன

உன் கன்னிமை முலைகளில்
பெருகும் பாலின் விசித்திர சுவையை
ஒரு கணம் தன் நாவால் தொட்டு அறிகிறாய்

பின்
ந்கரவே நகராத
காலத்தின் சுவர்களில்
அதைப் பீய்ச்சுகிறாய்

(31.1.2010
8.32 pm)மானுட குலம் என்றுமே உணர்ந்து வெளிப்படுத்த முடியாத ஒரு திகைப்பை இந்த கவிதை பேசுகிறது. அதுவும் எத்தனை உக்கிரமாக. பாலமணம் கொண்டு வரும் பெருமழை மிக sensous-ஆன ஒரு படிமம்.

துவங்கி உறைந்து நிற்கும் ஒரு முழுமையை கவனியுங்கள். கன்னிமை, மழைக்கு முன்னான அக்கன்னியின் முலைப்பால் மணம், ஒரே ஒரு துளி இவை துவங்காமலே தேங்கி நின்று விகசிக்கும் தன்மை கொண்டவை.

மழை கூட வாசனையை தான் கொண்டு வருகிறதே ஒழிய பாலை அல்ல. இந்த வராமை, வெளிப்படாமையை கவிதையின் ரகசியமாக, பிரபஞ்ச புதிரின் விடையாக நீங்கள் பல விதங்களில் விளங்கிக் கொள்ளலாம.

”நகரவே நகராக காலத்தின் சுவர்கள்” முக்கியமான வரி. கவிதையின் ஒரே திட்பமான உருவகம் இது. அந்த பெண் அப்படி பீய்ச்சி அடிப்பதில் ஒரு அவலம், குமுறல் அல்லது அவளது வெற்றி உள்ளது. ”சிற்பியின் நகரம்” நினைவு வருகிறது.

இன்னும் எத்தனையோ விதங்களில் படிப்பதற்கான சாத்தியங்களை உள்ளடக்கின கவிதை.

Monday, February 1, 2010

பர்தாவை தடை செய்யலாமா?

முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கே வழிவகுக்கும். மேலும் அத்தகைய தடை அடிப்படைவாதத்துக்கு வழிகோலும் வாய்ப்பும் உண்டு. அடுத்து ஜனாதிபதி சர்கோஸி பர்தாவை பெண்ணடிமைத்தனமாக அடையாளம் காண்கிறார். பர்தா ஒரு நகரும் சிறை என்கிறது பிரான்ஸ் பாராளுமன்ற அறிக்கை. ஆனால் முரணாக, இத்தடை நிலுவையில் வந்தால் இஸ்லாமிய பெண்களால் பொதுஇடங்கள் மற்றும் அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற அன்றாட தேவைக்கான இடங்களுக்கும் செல்ல முடியாது. இது முஸ்லீம் பெண்களை வீட்டுச்சிறைக்குள் மேலும் அடிமைப்படுத்தும் பின்னோக்கிய விளைவாகவே முடியும். நிஜக்காரணங்கள் இரண்டு.பிரான்ஸில் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆறு மில்லியன் பேர் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இத்தனை இஸ்லாமியரையும் உள்ளிட்ட புலம்பெயர் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு வேலை, வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் உருவாக்க பிரான்ஸ் அரசால் முடியவில்லை. இந்த வலுவான குற்றச்சாட்டை மறைக்கும் ஒரு முயற்சியாக அரசியல் நிபுணர்களால் இந்த தடைச்சட்டம் நோக்கப்படுகிறது. அடுத்து, பிரஞ்சுக்காரர்களிடம் உள்ளதாக பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டும் islamophobia எனும் இஸ்லாமிய பீதி.இந்த மதவெறுப்பு இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் எனும் பொதுப்புத்தியில் இருந்து கிளைப்பது. குறிப்பாக மேற்கத்திய சமூகங்களிடம் இது ஒரு ஆழ்பிம்பமாகவே உறைந்து போய் உள்ளது. இத்தாலியில் ஏற்கனவே இத்தகைய தடைச்சட்டம் உள்ளது. ஆஸ்திரிய, பெல்ஜிய, டச்சு மற்றும் 3.7 சதவீதம் இஸ்லாமியரைக் கொண்டுள்ள ஜெர்மனி அரசும் தற்போது இதேவித தடையை கொண்டு வர உத்தேசிக்கின்றன. 2.4 மில்லியன் இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் இஸ்லாமிய மாணவர்கள் மீது கண்காணிப்பை தீவிரமாக்கவும் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை தடை செய்யவும் அரசு மீது நெருக்கடி இறுகி வருகிறது. டோனி பிளேர் பர்தாவை பெண்கள் இங்கிலாந்தில் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்க மண்ணில் நுழையும் ஒவ்வொரு இஸ்லாமியனையும் ஒரு ஏவுகணையாகத்தான ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சென்னையில் உள்ள அமெரிக்கன் கவுன்ஸில் நூலகத்தில் ஒரு அலமாரி முழுக்க இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த நூல்களே. குறிப்பாக, ஒரு முஸ்லீம் ஏன் மெனக்கட்டு தீவிரவாதி ஆகிறான் என்பதே இப்புத்தகங்களின் ஆசிரியர்கள் விளக்க முயன்றுள்ள கேள்வி. இது இன்று மொத்த அமெரிக்க சமூகத்தின் முன்னுள்ள புதிர்தான். Terrorists, Victims and Society என்ற நூலில் ஆண்டிரூ சில்கே என்பவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் பைத்தியக்காரர்கள் என்ற கருத்துருவை நிறுவ மனவியல் ஆய்வாளர்கள் பல தில்லுமுல்லுகளை கையாண்டுள்ளதை விளக்குகிறார். பாலஸ்தீன தீவிரவாதிகள் மனநலம் கொண்ட சகஜர்களே என்கிறார் சில்கே. பெரும்பான்மையினரின் மனக்கிலேசத்தை அகற்ற சிறுபான்மை சமூகத்தின் மத-அடையாளங்களை தடை செய்வது என்ற பிரான்ஸின் முடிவு விசித்திரமானது.

பர்தா ஒரு ஆணாதிக்கவாத உடை என்ற விவாதத்துக்கு சமகால முக்கியத்துவம் இல்லை. நாம் இதை ஒரு அரசியல் பிரச்சனையாகவே அணுக வேண்டும். துரதிஷ்டவசமாக, விவாதத்தில் பங்கு கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமிய பொதுப்புத்தியும் சரி, எதிரான வலதுசாரிகளும் இதை ஒரு மதச்சட்டம மற்றும் ஒழுக்கவாதம் சார்ந்த சிக்கலாகவே அணுகுகின்றனர். உலகம் முழுக்க ஒடுக்கப்படும் இஸ்லாமியருக்கு தமது மத, பண்பாட்டு அடையாளங்கள் அழிந்து போவதான அச்சம் உண்டு. மேலும், இதற்கு காரணம் தங்களது மதஈடுபாடின்மையே என்ற குற்றமனப்பான்மையும் ஏற்படுகிறது. விளைவாக, சமகாலத்தலைமுறையினர் தங்கள் அடையாளங்கள வலுவாக நிலைப்படுத்தும் முயற்சியில் வஹாபிசம் போன்ற அடிப்படைவாத சித்தாந்தங்கள் பக்கமும் சாய்கின்றனர். தீவிர மத-ஈடுபாடு மற்றும் அடிப்படைவாத சாய்வு சகமனித வெறுப்போ சமூக வன்மத்தின் வெளிப்பாடோ அல்ல. இது ஒரு சமூக பண்பாட்டு மற்றும் இருப்பு தொடர்பான பிரச்சினை.


இதை சமகால இந்தியாவின் இஸ்லாமியச் சமூக வரலாற்றை நோக்கியே நாம் புரிந்து கொள்ளலாம். குமரிமாவட்டத்தில் என் சொந்த ஊரான தக்கலையில் அரசு உயர்மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு அருகிலே இஸ்லாமியர் பெருமளவில் வசிக்கும் பகுதி இருந்தது. ஏராளமான இஸ்லாமியர் அப்பள்ளியில் படித்தார்கள். 98 வரை ஒரு பர்தா கூட தென்படவில்லை. விடுங்கள், தலையில் முக்காடு கூட அந்த இஸ்லாமிய மாணவிகள் அணிந்ததில்லை. ஆனால் அப்பகுதியில் எப்போதுமே காவிப்படையினருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலான பூசல் மெலிதாக புகைந்து வந்திருந்தது. 99-க்கு பிறகு நான் படித்த ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் ஹமீதா மற்றும் கதீஜா எனும் இரண்டு இஸ்லாமிய பெண்கள் படித்தார்கள். அவர்கள் தாம் அணிந்த பர்தா காரணமாக தனித்து தெரிந்தார்கள். அடிக்கடி பர்தாவுக்கான காரணத்தை நண்பர்களிடம் விளக்கி ஓய்ந்து போனார்கள். ஹமீதா ஒரு தீவிர பெண்ணியவாதி. மத ஈடுபாடும் குறைவே. 98க்கு பிறகே அவர் பர்தா அணிய ஆரம்பித்தார். என்ன காரணம்? பர்தா மூலம் தம்மைச் சூழ்ந்த பிற சமூகத்தினருக்கு ஒரு சேதி விடுக்க விரும்பினார்.பாபர் மசூதி இடிப்பின் பிறகு பா.ஜ.க ஆட்சி அதிகாரம் பெற்று இஸ்லாமியருக்கு எதிரான அடக்குமுறை வெளிப்படையான ஆதரவு பெற்ற கட்டம் அது. 99-இல் மட்டும் தினமும் ஏழு பேர் மதக்கலவரத்தால் பாதிக்கபட்டனர் என்றார் பிரிந்தா காரத். மகராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களில் 600-க்கு மேற்பட்ட கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக கார்கில் போர் மற்றும் பா.ஜ.காவின் ரதயாத்திரையின் போது இது உச்சம் அடைந்தது. இந்தியா முழுக்க இஸ்லாமியர் கடுமையான சமூக பண்பாட்டு நெருக்கடியை, தனிமைப்படுத்தலை நேரிட்டனர். இந்த நெருக்கடியை இந்த இருப்பெண்களும் குறியீட்டு ரீதியாக சந்தித்ததன் விளைவே கிறித்துவ கல்லூரியில் தெரிந்த பர்தா. பெண்ணியவாத, மத ஈடுபாடற்ற தனிநபரைக் கூட பா.ஜ.க போன்ற அடிப்படைவாத இயக்கத்தின் வன்முறை தங்கள் அடையாளங்களை தேடி எடுத்து முன்னிறுத்த தூண்டியது. இஸ்லாமியருக்கு எதிரான சர்வதேச வணிக மற்றும் பண்பாட்டு போர் நிகழும் இன்றைய சூழலில் பர்தா சர்வ சாதாரணமாகி விட்டது..

பர்தா திணிக்கப்படுகிறதா? சிந்திக்கும், பெண்ணிய இஸ்லாமிய பெண்கள் கூட தங்கள் மதஅபிமானத்துக்காக விருப்பப்பட்டே அணிகின்றனர். இஸ்லாமிய சமூகம் இன்னும் நவீனப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நம் கல்வி அமைப்பிலும் அவர்கள் அதிகம் ஈடுபடுவதில்லை. பண்பாட்டு அரசியல் நேருக்கடிக்கு உள்ளாகும் போது அவர்கள் ஆண்களை ஒட்டியே செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது தான். இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் அவர்கள் இரு கட்டங்கள் வழி பயணிப்பார்கள். முதல் கட்டத்தில் இன்றைய இளந்தலைமுறை பிராமண பெண்களைப் போல் குறைந்த பட்ச சுதந்திரத்துடன் இயங்குவார்கள். வீட்டுக்குள் மடிசார் வெளியே ஜீன்ஸ். நவீனத்தின் அனைத்து வசதிகள் மற்றும் கலாச்சார அம்சஙக்ளை பேணியபடியே அசட்டு சம்பிரதாய நம்பிக்கைகளுடன் ரெட்டை வாழ்க்கை. ஒருவேளை ரெண்டாவது கட்டத்தில் பட்டுப்புழு இறகுகளை அடையலாம். அப்போது மட்டுமே நாம் பர்தாவை ஒரு பெண்ணிய கோணத்தில் அணுக முடியும்.

******************************************************************

பர்தாவின் இந்திய கோணத்தை மேலும் விளங்கிக் கொள்ள
புதிய காற்று இதழின் ஆசிரியரும் தாமரை இதழின் இணை ஆசிரியருமான ஹமீம் முஸ்தபாவிடம் சிறு பேட்டி ஒன்று கண்டேன்.1. பர்தா மீதான் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஆதி இஸ்லாத்தில் பர்தா அனைவருக்குமானதகாக இருக்கவில்லை. நபிகளின் ரத்த உறவுகள் மட்டுமே அணிந்து வந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. பிறகு பலவிதங்களில் திரிபுற்று இன்று அரசியல் காரணங்களுக்காக அது முன்வைக்கப்படுகிறது.
இந்திய முஸ்லீம்களிடையே பரவி வரும் அரபிய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இங்கு பர்தாவை பார்க்கலாம். பர்தாவில் இன்றொரு மேட்டிமைத் தனம் வந்து விட்டது. பெண்கள் தங்கள் அழகியலை காட்டும்படி மெருகேறிய விலை உயர்ந்த பர்தாக்களை தேடி அணிகிறார்கள். அதாவது அதன் அடிப்படை நோக்கம் மெல்ல தோற்கடிப்படும் முரணை குறிப்பிட்டேன்.

2. பொதுஅரங்குகள் மற்றும் கல்லூரிகளில் சேலை அணிவது கட்டாயமாக உள்ளது. திரைக்கலைஞர்கள் நடத்திய விழாவில் ஸ்ரேயா கலைஞர் முன்னிலையில் குறைவான் ஆடைகளுடன் தோன்றி கண்டிக்கப்பட்டு பின் அடுத்த நிகழ்ச்சியில் சேலை அணிந்து வர நிர்பந்திக்கப்பட்டார். இப்படியான நிர்பந்தத்தை பர்தா கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா? சேலை நம்மூர் பர்தாவா?

முடியும். சேலை காமக்கிளர்ச்சி ஊட்டும் படி வடிவமைக்கப்பட்டது. பர்தா உடலை மறைக்கும் நோக்கம் கொண்டது. இருப்பினும் இரண்டுமே பெண்ணை நுகர்வுப் பொருளாக கொள்ளும் நோக்கம் கொண்டவையே. இது தொடர்பாக ஒரு முல்லாக் கதை உண்டு.

முதலிரவில் முல்லாவிடம் தன் முகத்திரையை விலக்கும் மனைவி அவரிடம் கேட்கிறார்: “ நான் இனி பிற ஆண்களிடத்து முகத்திரை விலக்கலாமா?”
முல்லா சொல்கிறார்: “எத்தனை ஆண்களிடம் வேண்டுமானாலும் உன் முகத்தை நீ இனி காமி. ஆனாலும் என்னிடம் மட்டும் தயவு கூர்ந்து காட்டாதே!”

3. பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? நுட்பமாக கலாச்சார ரீதியில் ஏனும்?

பெண்களுக்கு பர்தா இன்று கலாச்சார அந்தஸ்தாகி விட்டது. பொருளாதார மற்றும் லௌகீக வசதிகளும் இதற்கு உண்டு. உதாரணமாக இரண்டு பர்தாவை வைத்துக் கொண்டு ஒரு ஏழைப்பெண் வசதி படைத்தவருக்கு நிகராக தன்னை காட்டிக் கொள்ள முடியும். ஒரு நைட்டியை உள்ளே இட்டு பர்தா மேலே அணிந்து செல்லும் சுதந்திரமும் முக்கியமானதாக உள்ளது. இப்படியாக இன்று 80 சதவீத பெண்கள் சுயவிருப்பமாகவே பர்தா அணிகிறார்கள்.

4. பர்தா பரவலாகி இருப்பதில் பா.ஜ.கவின் பங்கு என்ன?

நிறைவே. ஆனால் முன்னிருந்த இந்திய பண்பாட்டை களைந்து அரபிய கலாச்சாரத்தை அணைக்க விரும்பும் இந்திய முஸ்லீமின் போக்கையும் குறிப்பிட வேண்டும். இது உலகளாவிய அளவில் இஸ்லாமியர் சந்திக்கும் நெருக்கடியின் எதிர்விளைவுதான்.

5. இதை சற்று பரிவோடு நோக்கலாமா?

பார்க்கலாம். ஆனால் பர்தாவின் பேரிலான ஒழுக்க அறவியலை நாம் மறுக்க வேண்டும்.

ஏன்?

பெண் பாதுகாப்பு என்ற பர்தா ஆதரவு காரணம் போலியானது. சவுதி அரேபியாவுக்கு சென்று வந்த என் நண்பர் மீரான் மைதீன் சொன்னார்: ‘அங்கு ஒரு அரபிய பெண்ணுக்கு வாடகை கார் வேண்டும் என்றால் இந்திய ஓட்டுநனை நம்புவாள், அரபியனை நம்ப மாட்டாள்’. அரபு தேசங்களை விட இந்திய முஸ்லீம் பெண்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர்.

6. இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் பர்தா நிலைக்குமா?

பர்தா பேணாத பேணுகின்ற இரு போக்குகள் அருகருகே இருக்கும். பாக்கிஸ்தானிய சுடிதார் வகை ஆடை ஒருவேளை பர்தாவின் இடத்தை அப்போது பிடிக்கலாம்.அடுத்து, இஸ்லாம் தொடர்பான சில சங்கடமான கேள்விகளை எழுப்பியமைக்காக ஊர்விலக்கு செய்யப்பட்ட கவிஞர் ஹெச்.ஜி ரசூலிடம் மேலும் சில ஆபத்தான கேள்விகள்.

1. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரை ஆதரிக்கிறது இந்திய கம்யூனிஸ்டு கட்சி. ஆனால் பிரான்ஸில் இஸ்லாமியருக்கு எதிரான தடைச்சட்டத்தை ஆதரிப்பவர் ஆண்டுரே கெரின் எனும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. இந்த முரணை எப்படி புரிந்து கொள்ள?

பிரான்ஸில் முகம் மூடும் பர்தாவை மட்டும் தான் எதிர்க்கிறார்கள். இந்திய இடதுசாரிகளே ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்கள்தாம். இஸ்லாமுக்குள்ளே மாற்றுக்கருத்தை ஒடுக்கும் போக்குகள் உள்ளன. ஓட்டுவங்கிக்காக அஞ்சி இந்த கருத்தியல் ஒடுக்குமுறையை ஆதரிக்கிறார்கள் நம்மூர் இடதுசாரிகள்.

முகத்திரை தடை என்றாலும் கூட அது தனிநபர் உரிமையை பறிப்பது ஆகாதா? அநியாயம் தானே?

இது மனித உரிமை மீறல்தான். மறுக்க முடியாது. அங்கு தடை வஹாபிசத்தை மேலும் வலுவாக்கும். சட்டம் அல்ல, இது குறித்த ஒரு வெளிப்படையான பண்பாட்டு விவாதமே உதவும்.

2. இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமியருக்கு ஏற்படுத்தி உள்ள நெருக்கடியின் எதிர்விளைவாக பர்தாவை காணலாமா?

இல்லை. இது இந்திய இடதுசாரிகள் முன்வைக்கும் ஒரு பொய் மட்டுமே. இந்திய முஸ்லீம் இளம்தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு அரசியல் பிரக்ஞை குறைவு. மதத்தலைமை கூறுவதை அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் பரிந்துரைப்பதை மட்டுமே படிப்பார்கள் பார்ப்பார்கள்.

3. பர்தா அணிவதை ஒரு எதிர்ப்புணர்வாக காண முடியாதா?

இல்லை. பர்தா அணிபவர்களே ஒழுக்கசீலர்கள் மற்றவர்கள் மதஎதிரிகள் என்பதான ஒரு கலாச்சார அழுத்தம் இச்சமூகத்தில் உள்ளது. உதாரணமாக, என் மகள் பள்ளிப் பருவம் வரை தலையில் முக்காடு கூட போட்டது கிடையாது. ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனக்கே தெரியாமல் முக்காடு போடத் தொடங்கினாள். விசாரித்த போது பர்தா அணியும் தோழிகளை போல் அவள் இருக்க விரும்பவதாக தெரிந்தது.

மேலும் பர்தா கலாச்சாரத்தின் பின்னால் பிற்போக்கு சமயத்தலைவர்கள் உள்ளனர். எங்கும் இப்படி முழுக்க மூடும் வழக்கம் இல்லையே. உதாரணமாக கேரளா. அவர்கள் முக்காடு மட்டும் அணிவதே வழக்கம்.

கமலாதாஸ் அணிந்தாரே?

இஸ்லாத்தை வெற்றுமதத்தவர் தழுவும் போது தீவிர போக்காளர்களாகி விடுவார்கள்.

4. பர்தாவை வற்புறுத்துபவர்கள் அது பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு தரும், ஒழுக்கவழியில் அவர்களை செலுத்தும் என்கிறார்கள். உண்மையா?

இது தவறு. பர்தாவினால் ஒழுக்க வாழ்வுக்கு சில பாதகங்கள் ஏற்படலாம். அரபு நாடுகளுக்கு சென்று வந்த என் நண்பர்கள் கூறியதுபடி அங்கு பர்தாவின் மறைவில் பின்–திருமண பாலுறவுகள் தாம் நிகிழ்கின்றன. மேலும், பர்தா எனும் உடல் மறைப்பு ஆண்களுக்கு உளவியல் ரீதியான தூண்டுதலை அளிக்கலாம்.

5. ஒரு பெண்ணியவாதியாக பர்தாவை எப்பிடி காண்கிறீர்கள்?

பர்தாவின் சமூகக் காரணத்தை பார்ப்போம். அரேபியர்கள் பாலைப் புழுதியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலை மொத்தமாய் மூடும் அங்கியை அணிந்தனர். பெண்களுக்கான அத்தகைய ஆடை பர்தா. பெண்களை பர்தா அணிய வற்புறுத்தும் இந்திய இஸ்லாமிய ஆண்கள் தாம் மட்டும் அரபிய ஆண்களின் முழு அங்கியை அணிய மறுப்பது ஏன். இந்த முரணே ஆணாதிக்க மனப்பான்மையை காட்டிக் கொடுக்கிறது.

****************************************************************

பல்வேறு பண்பாட்டு அரசியல் காரணங்களால் இஸ்லாம் பற்றிய இத்தகைய விவாதங்களை பொதுத்தளங்களில் முன்னெடுக்க முடியாது. ஏற்கனவே ஒடுக்கப்பட்டுள்ள அச்சமூகம் காயப்படாமல் இருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். பெண்ணுரிமை, மத-அடையாளம் மற்றும் உலகளாவிய அரசியல் நெருக்கடி என பன்முகம் கொண்ட இப்பிரச்சனையை அறிவியக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.