Saturday, November 29, 2014

எழுத்தாளனும் உழைப்பாளியும்


என் நண்பர் ஒருவர் தொழில்முறை சினிமாக்காரர்களுடன் இணைந்து ஒரு குறும்படம் எடுத்தார். அவர்களின் தொழில்நேர்த்தி, கடப்பாடு பற்றி வியந்தார். தொடர்ந்து பத்து மணிநேரம் லைட் பாய்கள் நின்று வேலை பார்ப்பது, அனைவரும் நேரத்துக்கு வேலைக்கு வருவது போன்றவற்றை கூறி நம் எழுத்தாளர்கள், இலக்கிய ஆட்களுக்கு இந்த மாதிரியான மனநிலை இல்லை. நாம் அடிப்படையில் சோம்பேறிகள் என்றார். இது உண்மை தான். நான் முன்னர் "இன்மைக்காக" ஒரு நண்பரிடம் ஒரு அஞ்சலிக்கட்டுரை எழுதித் தரக் கேட்டேன். அவர் நான்கு வரிகள் எழுதி அனுப்பினார். நான் இன்னும் சில வரிகள் எழுதுங்கள் என்றேன். அவர் கூட ஒரு வரி எழுதி அனுப்பினார். ஆனால் ஒரு பத்தியை எப்படி ஒரு கட்டுரை என்று போடுவது? கடைசியில் இறந்து போனவரின் கவிதை ஒன்றையும் சேர்த்து கொஞ்சம் நீளமாக்கி பிரசுரித்தோம்.

Thursday, November 27, 2014

இலக்கிய கூட்டங்களில் ஏன் பிரியாணி போடக் கூடாது?


ஒரு நினைவஞ்சலி கூட்டம் பற்றின் அழைப்பிதழ் பார்த்தேன். சுமார் முப்பது பேர்கள் பேசுவதாய் போட்டிருந்தார்கள். அதை பார்த்த போதே எனக்கு தலை சுற்றியது. நாம் ஏனிப்படி பேசி பேசி மாய்கிறோம்? எல்லாருக்கும் பேச ஆசை தான். ஆனால் அது எல்லோருக்கும் புணர ஆசை தான், சாப்பிட ஆசை தான், அடிக்க ஆசை தான் என்பது போல. ஒரு வெளிப்பாட்டுக்காக பேசுவது வேறு, உரையாற்றுவது வேறு. நம்மூரில் ஒரு சின்ன கூட்டம் கூடினாலே யாருக்காவது உரையாற்றும் ஆசை வந்து விடும். அவர் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்பார். யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் பேசியதை புரிந்து கொண்டு எதாவது கேட்பதென்றால் மெனக்கெட்ட காரியம். ஆனால் யாராவது மேடைக்கு வந்து கருத்தை சொல்லலாம் என்றால் ஆளாளுக்கு வந்து ஒரு மணிநேரம் பேசுவார்கள். இது ஒரு மேடை வியாதி. மற்றப்படி பேச மாட்டார்கள். ஆனால் மேடையை பார்த்தால் பொத்துக் கொண்டு பேச்சு வரும்.

Tuesday, November 25, 2014

கதவை அடைக்காதே

நான் வழக்கமாய்
திறக்கும் கதவை
அடைக்காதே
அவ்விடத்தில்
பத்து புதிய கதவுகளை
திறப்பேன்
என்னை உதாசீனிக்காதே
தொடர்ந்து நினைவு படுத்தியபடியே இருப்பேன்.
என்னை பார்க்க தவிர்த்தால்
உன் பார்வை படும்
இடமெல்லாம் இருப்பேன்
ஒரு மலையுச்சியின் விளிம்பில் இருந்து
தள்ளி விடப் பார்த்தால்
உன் காலை இறுக
பற்றிக் கொள்வேன்

Friday, November 21, 2014

இசையின் டினோசர் கவிதைகள்இசை இவ்வருட சுந்தர ராமசாமி விருது பெறுகிறார். இத்தருணத்தில் அவரது கவிதைளை சற்று அலசி புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

Thursday, November 20, 2014

ஒரு நாடகம் முடிவுக்கு வருகிறது


ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை ஹெராயின் கடத்தல் போன்ற குற்றத்துக்கு வழக்கத்துக்கு மாறாக தூக்குத்தண்டனை விதித்தபோதே இது ஒரு நாடகம் எனும் சந்தேகம் தோன்றியது. இந்தியாவை சற்று மட்டம் தட்டவும், இலங்கையில் வாக்காளர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், மோடி அரசுடன் பேரம் பேசவும் இந்த தண்டனையும் இப்போதைய விடுதலையும் ராஜபக்சேவுக்கு உதவியது. ஒரே கையெழுத்தில் ஐவரையும் விடுவிக்க அதிகாரம் கொண்ட ராஜபக்சே ஏன் அதற்கு தன் பிறந்த நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும்?

Friday, November 14, 2014

கொச்சை, வாக்கிய அமைப்பு முதல் ஐ லவ் யூ வரை: மொழியாக்கத்தின் பல்வேறு சவால்கள் -


மொழிபெயர்ப்பு ஒரு புறம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பெயர்ப்பது. தட்டையான வறட்டுத்தனமான தன்மை கொண்டது. இன்னொரு புறம் உணர்வெழுச்சியும் அகத்தூண்டலும் மொழியாக்கத்துக்கு ஒரு தனி ஒளியை, ஆழத்தை, சரளத்தன்மையை அளிக்கும். ஆனால் நல்ல மொழிபெயர்ப்பு இவை இரண்டுக்கும் இடையே இருக்கிறது. நம் கற்பனையை ரொம்ப பறக்க விடாமல் அதேவேளை ரொம்பவும் ஈடுபாடின்றி எந்திரத்தனமாய் பதிலி வார்த்தைகளை அடுக்கி செய்யாமலும் ஒரு இடைப்பட்ட வகை ”மிதவாதமான மொழியாக்கமே நல்லது. இது கவிதைக்கு மிக அதிகமாகவும் புனைவுக்கு ஓரளவும் பொருந்தும்.

Thursday, November 13, 2014

ரோஹித்தின் 264: ஒரு அற்புத சதம்


இலங்கைக்கு எதிரான ரோஹித் ஷர்மாவின் 264 வெடிமருந்து கிடங்கு வெடித்தது போன்ற ஒரு இன்னிங்ஸ். பந்தை இப்படி இவ்வளவு சரளமாக கூர்மையாக சரியான இடங்களில் தொடர்ந்து யாரும் அடித்து பார்த்ததில்லை. அதுவும் அவர் சதம் அடித்த பின்னரும் தொடர்ந்து கவனமாய் ஆனால் மூர்க்கமாய் ஆடியது கவர்ந்தது. 50 ஓவர்கள் நின்றாடுவது சாதாரண விசயம் அல்ல. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். அதன் பிறகு ரோஹித் களத்தடுப்பு செய்ய வேறு வருகிறார். பாய்ந்து பந்துகளைத் தடுக்கிறார். தன்னை மிக வலுவாக நிரூபித்திருக்கிறார் ரோஹித்.

எம்.எஸ்.எஸ் பாண்டியனின் Brahmin Non-Brahmin நூலின் சில பக்கங்கள் என் மொழிபெயர்ப்பில்


முன்னுரை: புது அறிமுகங்களின் அரசியல்

1916இல் டிஎம். நாயர் மற்றும் பிட்டி தியாராய செட்டியின் தலைமையில் சில முன்னணி மெட்ராஸ் மாநிலத்தின் சில தேசியவாதிகள் இந்திய தேசிய காங்கிரசின் படிநிலை வரம்புகளை உடைத்து ”பிராமணர் அல்லாதோருக்கான கொள்கை அறிக்கை” எனும் ஒரு சர்ச்சைக்குரிய ஆவணத்தை வெளியிட்டனர். அந்த அறிக்கைப்படி இந்தியர்கள் சுய ஆட்சிக்கான முதிர்ச்சியை இன்னும் அடையவில்லை; மேலும் ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்கு சுய ஆட்சி அதிகாரம் அளித்தால் அது பிராமணர்கள் பிற சமூகங்கள் மீது சர்வாதிகாரம் செலுத்துவதில் தான் சென்று முடியும். பிராமணர்கள் மக்கள் தொகையில் 3% தான். ஆனால் காலனிய அதிகார அமைப்பில், நவீன தொழில்களான சட்டம் போன்றவற்றிலும்ம் இந்திய தேசிய காங்கிரஸின் தலைமை பொறுப்புகளிலும் அவர்களின் ஆதிக்கம் மிகுதியாகவும் வெளிப்படையாகவும் உள்ளது.

Wednesday, November 12, 2014

எழுத்தாளனுக்கு புகழினால் என்ன பயன்?
தலைப்புக் கேள்விக்கு போகும் முன் இன்னொரு கேள்வி. எழுத்தாளன் எதற்கு எழுத வேண்டும்? முதலில் இதைப் பேசுவோம். எனக்கு இரு காரணங்கள் தோன்றுகின்றன. 

Monday, November 10, 2014

மெட்ராஸ்: இரு பக்கமும் துண்டிக்கப்பட்ட வரலாறுஅட்டகத்தியில்எனக்கு ரெண்டு விசயங்கள் பிடித்திருந்தன. ஒன்று, இன்றைய தலைமுறையால் தீவிரமான ஆதாரமான உணர்ச்சிகளை ஏற்க முடியவில்லை என அப்படம் பேசியது. அப்பட நாயகனின் பிரச்சனை பெரிய காதல் தோல்விகள் வரும் போதும் அவனுக்கு துக்கம் வரவில்லை, அவன் துக்கத்திற்கு வெளியே நிற்கிறான் என்பது. காதல் தோல்வியில் இருப்பவன் போண்டா சாப்பிடலாமா எனும் காட்சி தொண்ணூறுகளில் வந்த அத்தனை காதல் தோல்வி கண்ணீர் படங்களையும் கேலி பண்ணியது. இது இன்றைய இளைஞனின் மனநிலை. ஆழமான உணர்ச்சிகளை அவனால் அனுபவிக்க முடியவில்லை. ஏனென்றால் ஆழமான மனநிலைகளில் அவனுக்கு நம்பிக்கை போய் விட்டது. ஏனென்றால் லட்சியங்களும் விழுமியங்களும் அவனுக்கு ஒரு பழைய மொபைல் போன் போல் தோன்றுகின்றன. வெறும் காதலில் அல்ல, கலாச்சார, அரசியல் தளங்களிலும் இந்த பின்நவீனத்துவ மிதவை நிலை இன்று உள்ளது. தமிழில் ஒரு இயக்குநர் இப்படியான ஒரு கண்டுபிடிப்பை செய்துள்ளார் என்பதே வியப்புக்குரியது. அடுத்து அரசியல் நம்பிக்கைகள் கொண்ட ஒரே விதிவிலக்கு இயக்குநர் பா.ரஞ்சித். அவருக்கு என்று சொல்வதற்கு விசயங்கள் உள்ளன என்று ஒரு டி.வி நிகழ்ச்சியில் அவரை சந்திக்கையில் தோன்றியது. கையில் ஒரு சிறுபத்திரிகை வைத்திருந்தார். தனக்கு பிடித்த பத்திரிகைகள் என சிறுபத்திரிகைகளை குறிப்பிட்டார். இப்படியானவர்களுக்கு புது தளங்களில் தொடர்ந்து படம் எடுப்பது பிரச்சனையில்லை. அவர்களிடம் சொல்ல ஏராளமான கதைகள் இருக்கும். நான் எதிர்பார்த்தது போல அவரது இரண்டாவது படமான “மெட்ராஸ்” முற்றிலும் புதிதான ஒரு களத்தை எடுத்திருக்கிறது. வட சென்னை மக்களின் விளையாட்டு, பாட்டு, அரசியல், தண்ணீர் பிரச்சனை என தனித்துவமான வாழ்வியல் கூறுகளை காட்டி இருக்கிறார். ஒரே பிரச்சனை இப்படம் நிறைய சமரசங்களை செய்வது. இந்த பிரச்சனைகளை பார்ப்போம்.

Thursday, November 6, 2014

கலாய்ப்பதன் அதிகாரம்: லிங்குசாமியும் பரட்டைகளும்-    (அக்டோபர் மாத “உயிரெழுத்தில்” வெளியான கட்டுரை)
பிரபலங்கள் மீது கல்லெறிய பொதுஜனத்துக்கு மிகவும் பிடிக்கும் என சுஜாதா ஒரு முறை சொன்னார். இது கொஞ்சம் முரணானது. ஏனென்றால் பொதுஜனத்துக்கு பிடிக்கும் என்பதால் தானே ஒருவர் பிரபலம் ஆகிறார். அதே பொதுமக்களுக்கு ஏன் அவர்களை அசிங்கப்படுத்த பிடிக்க வேண்டும்? வயிற்றெரிச்சலா? தாழ்வுணர்வா? இரண்டும் இருந்தால் இந்த பிரபலங்களை மக்கள் பிரபலங்களாக நீடிக்க விட மாட்டார்களே?
மனைவியை போட்டு அடித்து விட்டு பிறகு மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்து கொஞ்சுவது போன்ற மனநிலை இது. இன்று இணையத்தில் சமூகத்தின் ஒரு சின்ன சதவீதம் இயங்க ஆரம்பித்து, அவர்களின் செயல்பாடு மீடியா கவனத்தையும் அதிகம் பெறும் நிலையில் மனைவியை மிதிப்பது வெறுமனே மனைவியை மிதிப்பதாக இன்று இல்லை. அரசியல் தலைமைகள் தொடர்ந்து இணைய விமர்சகர்களை உற்று கவனித்து வருகிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை தாக்கினால் கைது செய்வதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. இன்னொரு புறம் தேர்தலின் போது இணைய அரசியல் விவாதங்கள், சர்ச்சைகள், பிரச்சாரங்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதையும் பிரதான கட்சிகள் உன்னிப்பாய் கவனித்து வருகின்றன.

Wednesday, November 5, 2014

இரு கட்டுரைகள்: மெட்ராஸும் இணைய வர்த்தகமும்


சமீபத்தில் படித்ததில் இரு கட்டுரைகள் கவர்ந்தன. ஒன்று காட்சிப்பிழையில் “மெட்ராஸ்” பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை. ஆழமான பார்வை கொண்ட கட்டுரை.
இன்னொன்று செல்லமுத்து குப்புசாமி இம்மாத “உயிர்மையில்” எழுதியுள்ள இணைய வர்த்தகம் பற்றினது.

இன்மை இதழ் 10“இன்மை” இதழ் 10 வெளியாகியுள்ளது. இவ்விதழில் கவிதை குறித்த ஏழு கட்டுரைகள் இடம் பெறுகின்றன: போகன் சங்கர் பற்றின கலாப்ரியாவின் கட்டுரை, இசையின் கவிதைகள், அரவிந்தனின் கவிதைத் தொகுப்பு மற்றும் மனுஷ்யபுத்திரனின் “நீராலானது” பற்றி ஆர்.அபிலாஷ் கட்டுரைகள், என்.டி.ராஜ்குமார் கவிதைகள் பற்றின நாகபிரகாஷின் மதிப்புரை, ஆத்மார்த்தியின் “ஓயாப் பெருநடனம்” தொடர், மற்றும் முனைவர் அன்பு சிவாவின் சங்க இலக்கியத்தில் உழவு வாழ்க்கை பற்றின கட்டுரை ஆகியன. ஷேக்ஸ்பியரின் ஓரினக் காதல் கவிதைகள், புக்காவஸ்கி, எமிலி வெப், டேவிட் ஷெபிரோ ஆகிய மொழியாக்க கவிதைகளும் நவீன அமெரிக்க ஹைக்கூ மொழியாக்கமும் இடம் பெறுகின்றன. இத்துடன் பா.சரவணன், பா.வேல்முருகன், நாகபிரகாஷ், குமரகுரு, எ.கிருஷ்ணகுமார், ப.திலீபன், விஷால் ராஜா, கிரிஜா ஹரிஹரன், சுப்ரா, மணிபாரதி, கோசின்ரா ஆகியோரின் கவிதைகளும் இவ்விதழை நிறைவாக்குகின்றன. இவ்விதழில் பங்கேற்ற படைப்பாளிகளுக்கும் வாசிக்கப் போகும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியும் அன்பும்.

song of nothingness


நண்பர் சர்வோத்தமன் இயக்கியுள்ள குறும்படம் இது: “இன்மையின் பாடல்”. ராவ் எனும் ஒரு முக்கியமான விஞ்ஞானி பொய் வழக்கில் மாட்டி வேலையையும் கௌரவத்தையும் இழக்கிறார். அவர் மகன் விபத்தில் இறக்கிறான். குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு தனியாய் வாழ்ந்து வருகிறார். அவரிடம் கடன் வசூலிக்க ஒரு நண்பர் ஹரி என்பவரை அனுப்புகிறார். அதேவேளை ஹரிஹரன் எனும் ஒரு துணை ஆசிரியர் ராவை பேட்டி எடுக்க வருகிறார். ராவ் அவரிடம் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம், அநீதியை கடந்து வந்து விட்டதாய், வாழ்க்கையின் ஏற்றுத்தாழ்வுகளை ஒன்றாக பாவிக்க கற்றுக் கொண்டதாய் உணர்த்துகிறார். இவ்வேடத்தில் சி.எஸ் ராமன் நன்றாக நடித்துள்ளார். ராவ் இந்த துணையாசிரியரை கடன் வாங்க வந்த ஆள் என குழப்பிக் கொள்கிறார். ராவ் ஒரு தையல் கடையில் வேலை செய்கிறார். அங்குள்ளவர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். அவர் அவர்களுக்கு தன் தொப்பியை மெல்ல சரித்து மரியாதையை ஏற்கிறார். இவ்விடம் அழகாக உள்ளது. வீழ்ந்து விட்ட ஒரு ஆளாக அவரது பொருத்தமின்மை, அதன் அபத்தம் படத்தில் நன்றாக வந்துள்ளது. படத்தின் இறுதியில் அவருக்கு “ஹரியும் ஹரனும் ஒன்றே” எனும் பழைய பாடல் ஒன்று நினைவு வருகிறது. குடும்ப வாழ்விலும் வேலையிலும் ஏற்பட்ட வீழ்ச்சி அவரை ஆன்மீக ரீதியாய் மலர வைத்திருக்கிறது. இன்னொரு கதையும் பக்கவாட்டில் செல்கிறது. ஒரு சுவாரஸ்யமான, நம்மை சிந்திக்க தூண்டும் படைப்பு இது. கவனித்து பார்க்க வேண்டிய படமும் கூட. படத்தை நகுலனுக்கு சமர்ப்பித்திருக்கிறார். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

Sunday, November 2, 2014

அலி முர்த்தாஸா: கவனிக்க வேண்டிய சுழலர்


நேற்று செண்டிரல் மற்றும் சவுத் ஸோன் அணிகள் இடையிலான துலீப் கோப்பை போட்டியின் இறுதி நாள். சவுத் ஸோனுக்கான வெற்றி இலக்கு 301. அவர்கள் 203க்கு ஒரு விக்கெட் இழந்திருந்தனர். ஆனால் பின்னர் விக்கெட்களை வேகமாய் இழந்து சொற்ப எண்களில் ஆட்டம் இழந்தனர். மிக பரபரப்பான ஆட்டமாக இருந்தது. நேற்றைய இந்திய-இலங்கை ஒருநாள் ஆட்டத்தை விட சுவாரஸ்யமான ஆட்டம். அலி முர்த்தாஸா எனும் இடது கை சுழலரை ஐ.பி.எல்லில் பார்த்திருப்பீர்கள். ரொம்ப தட்டையாக ஆனால் கூர்மையாக வீசுவார். எனக்கு அவரை இதனாலே பிடிக்காது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் மிக அழகாக வீசினார். ஒவ்வொரு பந்தையும் பிளைட் செய்தார். காற்றில் மிதக்க செய்தார். கையில் இருந்து நேர் கீழாக பந்தை விழ வைக்காமல் சில இஞ்சுகள் கைக்கு மேலே எழ விட்டு சுழன்று மட்டையாளனை நோக்கி வரச் செய்தார். இது மட்டையாளனை குழப்பியது. ரொம்பவெல்லாம் இல்லை. கொஞ்சமாக தான் பிளைட் செய்தார். ஆனால் அது போதுமாக இருந்தது. மட்டையாளர்கள் பந்தின் நீளத்தை கணிக்க முடியாமல் திணறினர். 


முர்த்தாஸாவின் பந்து வீச்சு பாணி பாகிஸ்தானிய சுழலர்களை நினைவு படுத்துகிறது. அவரது உடல் மொழியின் வன்மமும் என்னை கவர்ந்தது. இந்த ஆட்டத்தில் அவர் மொத்தமாய் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முர்த்தாஸா உத்தர் பிரதேச அணியை சேர்ந்தவர். ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ், பூனே வாரியர்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆடியுள்ளார். ஆனால் ஐ.பி.எல்லில் நாம் காணுகிற முர்த்தாஸா அல்ல உள்ளூர் நான்கு நாள் ஆட்டங்களில் காண்பவர். அவர் அம்பி. இவர் அந்நியன்.

Saturday, November 1, 2014

உயிரெழுத்து பேட்டி - பகுதி 4


யுவ புரஸ்கார் விருதை ஒட்டி உயிர் எழுத்து போனதற்கு முந்தின இதழை எனக்கு சிறப்பிதழாக கொண்டு வந்தார்கள். அதில் என் நீண்ட பேட்டி வெளியானது. அப்பேட்டியின் இறுதிப் பகுதி இது:

கேள்வி: 'கால்கள்' நாவல் மனிதர்களின் இருமை பற்றி பேசுகின்றதா அல்லது இயலாமைப் பற்றி பேசுகின்றதா?

ஆர்.அபிலாஷ்: இயலாமை பற்றி பேசவில்லை. ஆனால் வலிகளாலும் உடலின் வாதைகளாலும் உருவாகும் ஒரு மாற்று உலகை பற்றி பேசுகிறது. பிரதான பாத்திரமான மது தன் சூம்பின போலியோ காலுடன் உரையாடும் ஒரு இடம் வருகிறது. அவள் அந்த காலை இன்னொரு ஆளாக பார்க்கிறாள். தன்னுடே சதா கூட வரும், தனக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஒரு மௌன சாட்சியாக அவளுக்கு தன் கால் தோன்றுகிறது. அவளைப் போல் வேறு பலர் வருகிறார்கள். திடீரென பக்கவாதம் வந்து தளர்ந்து போகும் ஒரு விளையாட்டு வீரன், மனவளர்ச்சி இல்லாத ஒரு பெண், தான் சமைக்கிற எதையும் சாப்பிட விரும்பாமல் அதை வீணடித்து சதா தூங்கும் ஒரு மிக பருமனான பெண் வருகிறாள். இவர்களின் சார்பாய் மது இயல்பான உடல் கொண்டவர்களுடன் உரையாடுகிறாள். இதன் வழி தன் பாதை எது என அறிந்து கொள்கிறாள். முக்கியமாய், தன் ஊனம் சம்பந்தமான தன் பெற்றோர்களின் குற்றவுணர்வை எதிர்கொள்கிறாள். அந்த குற்றவுணர்வு அபத்தமானது என தத்துவ, அறிவியல் ரீதியாய் புரிந்து கொள்கிறாள். இது அவளை விடுவிக்கிறது. ஊனம் பற்றின இருமைகளை இந்நாவல் எதிர்கொள்கிறது எனலாம். உதாரணமாய், ஊனம் × ஊனமற்றவர் என உலகை வரையறுக்கிறோம். இந்த இருமையின் அபத்தத்தை கேள்வி கேட்கிறது.