Friday, April 29, 2016

கால பைரவன் கதைகள் குறித்து உரையாடல்...

இன்று மாலை ஆறு மணிக்கு வாசக சாலையின் புத்தக விமர்சனக் கூட்டத்தில் கால பைரவனின் கதைகள் குறித்து பேசுகிறேன். நண்பர்களே சந்திப்போம்!

Sunday, April 24, 2016

எம்.அஷ்வின்

முருகன் அஷ்வின் எழுத்தாளர் இரா.முருகனின் மகன். இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் பூனே அணிக்காக அவர் பந்து வீச்சு என்னை கவர்ந்தது. எம்.அஷ்வின் ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் கொண்ட லெக் ஸ்பின்னர். அவர் கொஞ்சம் ஹர்பஜன் போல் இரு கைகளையும் தூக்கி லோட் செய்து பந்து வீச தயாராகிறார். அப்போது அவர் வலது கை ஷார்ட் லெக் நோக்கி இருக்கிறது. பந்து வீசி முடித்த பின்னரும் கையில் பொசிஷன் இப்படித் தான் முடிகிறது.

இவரது பந்து வீச்சில் நிறைய வித்தியாசமான அம்சங்கள் உண்டு.

1) பெரும்பாலான லெக் ஸ்பின்னர்களுக்கு உயர்வான ரிலீஸ் பொஸிஷன் இருக்கும். வேகமாய் வீசும் கும்பிளே, அப்ரிடிக்கு கூட. இது பவுன்ஸ் பெற உதவும் ஆனால் எம்.அஷ்வின் கொஞ்சம் round armish. பந்தை தோள் உயரத்துக்கு மேல்  தூக்குவதில்லை. இருந்தும் அவர் பந்தை எகிற வைக்கிறார்.

2) வேகமாய் வீசினாலும் பந்தை நன்றாய் திருப்புகிறார். சொல்லப் போனால் மெல்ல வீசும் போது இவர் பந்து திரும்புவதில்லை.

3) எம்.அஷ்வின் போன்று மாறுபட்ட ஆக்‌ஷன் கொண்ட மற்றொரு லெக் ஸ்பின்னரை நான் கண்டதில்லை. இதனாலே இவரை கணித்தாடுவது சிரமம். முதலில் பார்க்க ஒரு off spinner வேகமாய் தூஸ்ரா வீசுவது போல் இருக்கிறது. இவரது கூக்ளி அபாரமாய் திரும்புகிறது. பவுன்சும் ஆகிறது. இதை இவரது வேகமான ஆக்‌ஷன் மூலம் பார்த்து ஊகிப்பது எளிதல்ல. இன்று நன்றாய் ஆடி வந்த சூர்ய குமார் யாதவை கூக்ளி கொண்டது முறியடித்தது ஒரு அற்புதமான காட்சி

எம்.அஷ்வினுக்கு நிச்சயம் சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் முதலில் தமிழ்நாடு அணியில் இடம் பெற வேண்டும். நிறைய பந்து வீச வேண்டும். நீண்ட ஸ்பெல்கள் வீச வேண்டும். இவரது முக்கிய சிறப்புகள் வித்தியாசமான ஆக்‌ஷன், வேகம் மற்றும் பந்தை அபாரமாய் திருப்புவது. இந்திய லெக்ஸ்பின்னர்களில் இப்போதைக்கு மிஷ்ராவுக்கு அடுத்த படியாய் பந்தை அரை அடிக்கு திருப்புவது எம்.அஷ்வின் தான். ஆனால் பந்து ஸ்பின் ஆகும் அளவை கட்டுப்படுத்த முடிந்தால் இவர் இன்னும் அதிக விக்கெட்டுகள் எடுப்பார். இல்லாவிட்டால் மிக அதிகமாய் சுழலும் பந்து மட்டையை கடந்து போகும், எட்ஜ் வாங்காது.

நீளம்

கணினியில் நீளமான வாக்கியங்களை வாசிப்பது சிரமம் என்பதாலே நாம் இன்று சிறு வாக்கியங்களாய் எழுதி பழகி விட்டோம். நீளவாக்கியங்கள் இன்று அச்சிதழ்களில் கூட வழக்கொழிந்து விட்டன.
இதை நான் துல்லியமாய் உணர்ந்தது சமீபத்தில் ஆண்டிராய்ட் போனில் உள்ள நோட்ஸ் செயலியில் எழுத ஆரம்பித்த போது தான். சமீபத்தில் இரண்டு பத்து பக்க கட்டுரைகளின் பாதியை நான் செல்பேசியில் எழுதினேன். அப்போது என் வாக்கியங்கள் மேலும் சின்னதாய் அமைவதை கவனித்தேன். குறிப்பாய் மிச்ச கட்டுரையை கணினியில் எழுதி முடித்த பின் கட்டுரையின் முதல் பாதி அதன் வடிவத்தை பொறுத்து தனித்து இருப்பதை கவனித்தேன். மே மாத உயிர்மைக்கு “கடவுள் இருக்கிறாரா?” என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதன் ஆரம்ப பத்திகளில் சொற்றொடர்கள் நறுக்கி தூவினது போல் இருக்கும். ஆனால் கணினியில் எழுதின பிற்பகுதியின் வாக்கியங்கள் நீளமாக இருக்கும்.

Thursday, April 21, 2016

தமிழக அரசியலில் தலைமை வெற்றிடம்


தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத விசித்திர சூழல் உருவாகி உள்ளது. ஜெயயலிதாவின் உடல்நலக் கேடு, கருணாநிதியின் முதுமை, அதிமுகவுக்குள் மாற்று சக்திகளின் எழுச்சி, தி.மு.கவில் ஸ்டாலின் தன் அப்பாவையே எரிச்சல்பட வைக்கும் அளவு வளர்ந்துள்ளது அடிப்படையில் இங்குள்ள் அரசியல் தலைமையை பலவீனமாக்கி உள்ளது. எம்.ஜி.ஆர் உடல் நலமற்று, கட்சியில் தன் பிடிப்பை இழந்த கட்டத்திலும் இங்கு மாற்றுத் தலைவராக திமுகவில் கருணாநிதி இருந்தார். இன்று ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றாக விஜயகாந்தும் ஸ்டாலினும் மட்டுமே உள்ளார்கள்.

Tuesday, April 19, 2016

அன்புக்கான நேரமும் இடமும்


அன்புக்கான நேரத்தைக் கூட தனியாய் அளந்து வைத்திருக்கிறாய் என மனைவி அடிக்கடி குற்றம் சாட்டுவாள். அப்போதெல்லாம் நான் அதை ஏற்றதில்லை.

குழந்தை பிறந்து வள்ர்ந்து வருகிற இப்போது நான் என் நாயுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்து வருவதை குறிப்பாய் உணர்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் முன்பு நான் என் நாயுடன் தினமும் ஒரு மணிநேரமாவது பேசுவேன். அது சுத்தமாய் கவனிக்காது. ஆனாலும் நான் லொடலொடவென அதனுடன் பேசுவதில் தனி மகிழ்ச்சி அடைவேன். அது மட்டுமல்ல, நான் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன வேலை பண்ணினாலும் நாய் என் காலடியிலேயே இருக்கும்.
குளிக்கும் போது வாசலில் காவல் இருக்கும். நான் சாப்பிட்டால் அதுவும் சாப்பிடும். போன் அடித்து நான் எடுக்காவிட்டால் குலைத்து ரகளை பண்ணும். ரொம்ப போரடித்தால் அதன் முகத்தில் பொய்யாய் குத்தி விளையாடுவேன். முகத்தில் என் முஷ்டி படும் முன் அது சரியாய் கவ்வி விட வேண்டும் என்பதே விதிமுறை.

இப்போது வீட்டில் பெரும்பாலான நேரம் குழந்தையுடனே இருக்கிறேன். எழுதும் போதும் சாப்பிடும் போதும் குழந்தை என் தோளில் இருக்கிறது. என் கவனம் முழுக்க குழந்தை பற்றின வேலைகளிலும் பிரச்சனைகளிலுமே. அது சாப்பிட விரும்புகிறதா, தூங்க வேண்டுமா, எப்படி அழுகையை நிறுத்துவது, எப்படி சிரிக்க வைப்பது, எப்படி தூங்க வைப்பது இப்படி என் வீட்டிலுள்ள நேரம் மையம் கொண்டு விட்டது.

இயல்பாகவே நாய் குழந்தையை தன் போட்டியாக நினைக்கிறது. இருவரையும் பக்கத்தில் வைக்க முடியாது. இதனால் நாய் இப்போது என் பக்கத்தில் இருப்பதில்லை. சற்று தொலைவில் அமர்ந்து என்னையே கவனிக்கிறது. அது பிறந்த பின் இவ்வளவு நாட்கள் அதன் அருகே நான் இல்லாமல் இருப்பது இப்போது தான் முதன்முறை.

நாய் எனக்காய் ஏங்கிப் போயுள்ளது அதன் உடலில் தெரிகிறது. முன்பெல்லாம் நான் மணிக்கணக்காய் கொஞ்சினாலும் மதிக்காது. இப்போது நான் சில நிமிடங்கள் சீராட்டினாலும் அப்படி உற்சாகம் கொள்கிறது. வீட்டுக்குள் வரும் போது ஒரு சின்ன பிஸ்கெட் துண்டு கொண்டு கொடுத்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
அதற்காய் கூடுல் நேரம் ஒதுக்கி செலவழிக்க நினைக்கிறேன். அப்போது தான் புரிகிறது என்னிடம் கூடுதலாய் நேரம் அப்படி இல்லை என.

ஒருவேளை நான் காலையில் சிக்கிரம் எழுந்தால் கூட செய்வதற்கு வேறு வேலைகள் தோன்றி விடும். வெளியே அழைத்துப் போனால் கூட நான் இதுவரை அதனுடன் செலவழித்த காலத்துக்கு ஒப்பாகாது. என் நாய்க்கு என்று என் வாழ்வில் இருந்த நேரத்தை மற்றொருவர் பறித்து விட்டார். அதை இனி மீட்க முடியாது.

அன்புக்கு அளவில்லை தான். ஆனால் அன்பு நாம் இருக்கும் இடம், நமக்கு தரப்பட்ட நேரத்தால் வடிவம் தரப்படுகிறது. இடத்துக்கும் நேரத்துக்கும் உள்ள கட்டுப்பாடு அன்புக்கும் வந்து விடுகிறது. இடத்தையும் காலத்தையும் அளப்பது போல் அன்பையும் தேக்கதண்டியால் அளக்க நேர்கிறது.

இதனால் தான் முற்றிலும் வேறொரு இடத்திற்கு கால அட்டவணைக்கு மாறும் போது நாம் அன்பால் நுரை தப்புகிறோம். அன்பை மிதமிஞ்சி பொழிகிறோம். டாஸ்மாக் ஒரு உதாரணம்.

Friday, April 15, 2016

பகடியை வெறுக்கும் மனநிலை

சமீபத்தில் புத்தக புரொமோஷனின் சங்கடங்களையும் அதில் எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சனைகளையும் பகடியான தொனியில் எழுதியிருந்தேன். அதில் இணையத்தில் எழுதுகிறவர்கள் புரொமோஷன் செய்யும் முறையும் இணையத்தில் ஜனரஞ்சகமாய் எழுதுபவர்களுக்கு புரொமோஷன் எப்படி சுலபமாய் அமைகிறது என்பதையும் சொல்லி இருந்தேன். அதை ஒரு பதிவர் நான் அவரை கேலி பண்ணினதாய் கருதிக் கொண்டு ராப்பகலாய் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.
 பொதுவாய் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் hyper sensitive ஆக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைத்தாலே கேலி செய்கிறோமோ என வெகுண்டெழுவார்கள். அந்த பதிவர் என் மொத்த பதிவுமே தன்னைப் பற்றியது எனும் சித்திரத்தை உருவாக்கி தன் மீதே சேற்றை வாரி இறைத்துக் கொண்டார்.

Thursday, April 14, 2016

தலைமுறைகள்

இப்போதெல்லாம் மைலாப்பூர் பக்கமாய் அடிக்கடி இலக்கியவாதிகளை சந்திக்கிறேன். அதுவும் சற்றும் எதிர்பாராமல். போன வாரம் ஒருநாள் காலை ஆறுமணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். மைலாப்பூர் ஆர்.கெ சாலைக்கு பக்கத்து தெருவில் இந்திரா பார்த்தசாரதி நடைபழகுவதை பார்த்தேன். கைத்தடியால் மெல்ல மெல்ல ஊன்றி ஒரு குழந்தை நடக்க கற்பது போல் தனியாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். முதலில் இ.பாவா அல்லது அவரைப் போன்று வேறொருவரா என குழப்பம். வண்டியை திருப்பி அவர் அருகே போனேன். என்னைப் பார்த்ததும் அவர் குழப்பமாகி நின்று விட்டார். அவரிடம் சென்று வணங்கினேன். “இ.பா தானே?” என்றேன். அவர் கண்களில் ஆர்வம் ஒளிர தலையசைத்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இ.பா போல் உதட்டை மென்மையாய் குவித்து பல்லைக்காட்டாமல், கன்னத்தசைகளை விரிக்காமல் புன்னகைக்க வெகுசிலருக்கே வரும். பார்க்க அவ்வளவு அழகு.

தூற்றுவதன் உளவியல்

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் மனுஷ்யபுத்திரனை பகடி செய்து எழுதியிருப்பதை படித்தேன். வா.மணிகண்டன் ஒரு தனி ஸ்டேட்டஸே போட்டிருந்தார். “இனிமேல் கூவுவதை குறையுங்க. அரசியல் அதற்கும் மேலே…” என எழுதியிருந்தார். இம்முறை மனுஷுக்கு இடம் கிடைக்காது என்பது தெரிந்தது தான். அதனால் எனக்கு இந்த பட்டியல் எல்லாம் வியப்பாக இல்லை. ஆனால் இந்த சந்தர்பத்துக்கு என்றே காத்திருந்தது போல் அவர் மேல் ஏன் விழுந்து குதற வேண்டும் எனத் தான் புரியவில்லை.

Wednesday, April 13, 2016

ரோலக்ஸ் வாட்ச்

சரவணன் சந்திரன் எழுத்தில் எனக்கு பிடித்த விசயம் அவரிடம் முற்றிலும் புதிய சுவை மணம் குணம் எல்லாம் உண்டு என்பது. அவரது “ரோலக்ஸ் வாட்ச்” நாவலும் வாசகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாத ஒரு தளத்தை தொடுகிறது: கீழ்மட்டத்தில் இருந்து போராடி மேலே வருகிற ஒருவன் இறுதி வரை தன்னை நிரூபிக்க முடியாமல் போவது. அவன் அரசியல் தரகு செய்கிறான் என்பது சாக்குபோக்கு மட்டும் தான்.

புத்தகத்தை பரபரப்பாக்குவது எப்படி? ஒரு கையேடு


புத்தக புரமோஷன் ஒரு தனிவேலை. அதற்கு என நேரம் ஒதுக்கி ஒரு மாதமாவது உழைக்க வேண்டும். முதலில் ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அடுத்து ஒவ்வொருவராய் பார்த்து புத்தகத்தை கொடுக்க வேண்டும். அதில் உள்ள பெர்சனல் டச் உதவும். கூடுதலாய் அவருடன் புத்தகத்துடன் சேர்ந்து போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடலாம். இதற்கு சமயோஜிதம் முக்கியம். (நானெல்லாம் ஆளைப் பார்த்த குஷியில் போட்டோவை மறந்து விடுவேன்.)

அப்படியே புத்தகத்தை கையெழுத்திட்டு கொடுப்பது போல் போட்டோ எடுக்க முடிந்தால் சால சிறந்தது.

நேரில் பார்க்க முடியாவிட்டால் குரியரில் அனுப்பலாம். நூறு புத்தகங்களை அனுப்பும் செலவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அவ்வளவு நூல்களை பதிப்பகம் கொடுக்காவிட்டால் நீங்களே இணையத்தில் ஆர்டர் பண்ணிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் நூல் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்பதாய் ஒரு பிம்பத்தை உருவாக்கலாம்.

இவ்வளவு புத்தகங்களை அனுப்பினால் போதாது. புத்தகங்கள் போய் சேர்ந்துள்ளனவா என போன் செய்து உறுதிப் படுத்த வேண்டும். அது மட்டுமல்ல பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். படிச்சிட்டீங்களா, அதைப் பற்றி ரெண்டு வரியாவது எழுதுங்களேன் என நச்சரிக்க வேண்டும். அதற்கும் ஒரு அளவு உண்டு. ஓவராய் நச்சரித்தால் அந்த வெறுப்பில் புத்தகத்தை குதறி விடுவார்கள்.

இலக்கிய எழுத்தாளர்களுக்கு இதில் ஒரு சிக்கல். எழுத்தாளர்கள் பரஸ்பரம் பாராட்டியதாக வரலாறே இல்லை. பிடித்திருந்தால் தமக்குள் வைத்துக் கொள்வார்கள். அல்லது போனில் ஓரிரு வார்த்தைகள் சொல்வார்கள். ஒரு தீர்வு நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இலக்கிய எழுத்தாளர்களுக்கு அனுப்புவது.

இதில் சில இரக்க சுபாவம் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் கூரியர் வந்ததும் அதைப் பிரித்து போட்டோ எடுத்து "இன்று தபாலில் வந்தது" என முகநூலில் போட்டு விடுவார்கள். இளங்கோ கிருஷ்ணன் உதாரணம். அவரை நிச்சயம் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

முகநூலிலும் டிவிட்டரிலும் மட்டும் எழுதுபவர்களிட்டது இந்த கோளாறு கிடையாது. போட்டிப்பொறாமை பெரிதாய் இருக்காது. உலகத்- தொழிலாளர்களே-ஒன்றுபடுங்கள் மனநிலையில் இருப்பார்கள். நம் கூட சுற்றியவன் புத்தகம் போட்டு விட்டானே என கொண்டாடுவர்கள். அதுவும் கூடப்படித்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது போன்றே கும்பலாக குதூகலமாய் வந்து மொய் எழுதுவார்கள். இவர்களுக்கும் புத்தகம் அனுப்பலாம். ஏமாற்ற மாட்டார்கள்.

முன்பு இலக்கிய எழுத்தாளர்கள் பிளாகர்களைத் தேடிப் பிடித்து புத்தகம் கொடுப்பார்கள். அவர்கள் மூலம் தீ போல் உங்கள் புத்தகம் இணையம் மூலம் பரவி விடும். இப்போது அவர்கள் இடத்தில் முகநூல் பதிவர்கள். அவர்கள் ஈகோ, கல்மிஷம் இல்லாதர்கள். திராட்சை புளிக்குது என்று சொல்லவே மாட்டார்கள். அதுவும் நமக்குப் போய் புத்தகம் அனுப்பிட்டாங்களே எனும் புல்லரிப்பில் மறக்காமல் எழுதுவார்கள்.

இலக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்களின் அறை முழுக்க புத்தகங்களாய் இறைந்து கிடக்கும். புதிதாய் உங்கள் நூல் தபாலை வேறு பார்த்ததும் அவர்களுக்கு நீண்ட கால மனைவியை நிர்வாணமாய் பார்ப்பது போல் இருக்கும்.

ஆனால் இலக்கியவாதிகளுக்கு அனுப்பவதில் ஒரு சின்ன பயன் உண்டு. படிக்கிறார்களோ பிடிக்கிறதோ உங்கள் நூலை நினைவு வைத்திருப்பார்கள். பிற்பாடு என்றாவது உங்கள் நூலை ஒரு பரிந்துரைப் பட்டியலில் சேர்ப்பார்கள். யாராவது கேட்டால் இளந்தலைமுறை எழுத்தாளர் என உங்களை குறிப்பிடுவார்கள். புத்தக அட்டைக்கு அப்படியான மகத்துவம் உண்டு.

கூடுதலாக் பணமும் நேரமும் இருந்தால் புத்தக அறிமுக கூட்டம் நடத்தலாம். இதனால் புத்தகம் எல்லாம் விற்காது. ஆனால் வாசகர்களை ஒரே இடத்தில் சேர்க்கவும் அவர்களுக்கு உங்களை நினைவு படுத்தவும் உதவும்

இதை கேலிக்காக சொல்லவில்லை. ஒரு புத்தகம் பற்றின சலசலப்பு கட்டமைக்கப் படுகிற ஒன்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவே உண்மை. வாசக வட்டம் உள்ள எழுத்தாளர்களுக்கு இந்த தொல்லைகள் இல்லை. அசைன்மெண்டாய் வட்டத்தினருக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால் அதற்காய் பாசமிகு  தம்பிகளை வருடம் முழுக்க தயாரிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் இந்த புரமோஷன் வேலையை பார்க்க தனியாக ஒரு எடிட்டர் இருப்பார். அவர் நான் மேற்குறிப்பிட்ட அத்தனையும் செய்வார்.

எழுத்தாளன் தனியாக இதை செய்வது ஒரு கொடுமை தான். அதிக வேலைப் பளு கொண்டவர்களுக்கு முழி பிதுங்கிப் போகும். மேலும் இதற்கு ஒரு தனி புத்திசாலித்தனம் வேண்டும். நாக்கு சாமர்த்தியம் வேண்டும்.

நல்ல புத்தகம் தானே விற்காதா? நிச்சயம். வெளியாகி முதல் மாதத்திலே பரபரப்பாய் விற்பனை ஆனால் அது பதிப்பாளருக்கு நல்லது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த புத்தகத்தை யாரும் சீந்த மாட்டார்கள். இப்படித் தான் சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு டிவீட்களின் தொகுப்பு ஆரம்ப பரபரப்புக்கு பிறகு ஒரு பிரதி கூட கூடுதலாய் விற்கவில்லை.
நல்ல புத்தகங்களை பத்து வருடங்கள் கழித்து கூட வாங்கி வாசித்து பேசுவார்கள். என்னைப் பொறுத்த மட்டில் துரித ஸ்கலிதம் எந்த படைப்புக்கும் நல்லதல்ல.

புரொமோஷன் என்பது செயற்கையாய் உருவாக்கப்படுகிற கவனம். அதை விட இயற்கையாய் வாசகர்களின் பரிந்துரை மூலமாய் கிடைக்கிற கவனம் புத்தகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

புரொமோஷன் பதிப்பாளருக்கு மிக நல்லது. எழுத்தாளனுக்கு ஓரளவு நல்லது. பதிப்பாளர் பெண்ணுக்கு அப்பா. எழுத்தாளன் பெண்ணுக்கு கணவன்.

Sunday, April 10, 2016

ஆவியெழுப்புதல்: பகுத்தறிவும் அதற்கு அப்பாலும்

Image result for dgs dhinakaran meetings

சமீபத்தில் டிவியில் ஒரு ஆவியெழுப்பும் கூட்டத்தை பார்த்தேன். வழுக்கைத் தலை கொண்ட ஒரு ரெவரெண்ட் ஆவேசமாய் பேசினார். ஒரு பக்கம் பார்வையாளர்களில் கணிசமாய் இருந்த பெண்கள் தலையாட்டியபடி ஜெபித்துக் கொண்டிருந்தனர். ரெவரெண்ட் ரொம்ப சாதாரணமான வசனங்களை தான் வாசித்தார். சாலமன் யாருடைய பிள்ளை என்பது போன்ற எளிமையான கேள்விகளை கேட்டார். அதற்கு சிலர் பதிலளித்தார்கள். ”ஏசு அழைக்கிறார்” பேச்சாளர்கள் போல் அவரிடம் உக்கிரமும் சரளமும் குரல் வளமும் போதவில்லை. கொஞ்சம் சொதப்பலான கூட்டம் தான். இதன் பிறகு மேடையில் இரண்டு பெண்கள் வந்தார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வறுமையில் உள்ள பெண்கள் என்பது அவர்களின் உடையை பார்த்தாலே தெரிந்தது. பயிற்சியில்லாத நடிகர்கள். ஒருவரிடம் ரெவரெண்ட் “உனக்கு என்னம்மா உடம்புக்கு?” என்றார். அப்பெண் பார்க்க ஆரோக்கியமாக வலுவாக தான் தோன்றினார். ஆனாலும் தனக்கு வயிற்று வலி என்றார். ரெவரெண்ட் உடனே அவளைப் பிடித்துள்ள ஆவியிடம் பேச ஆரம்பித்தார். அப்பெண் தளர்ந்து பின்னே சாய்ந்தார். மீனைப் போல் துடித்தார். தயாராக பின்னால் நின்றிருந்த இரண்டு பெண்கள் அவரை தளர்வாக பற்றிக் கொள்ள அவர் தரையில் கால்களை உதறியபடி சாய்ந்து கொண்டு கத்தினார். பத்து நொடிகளுக்குள் அந்த உடம்பை விட்டு போய் விடுவதாய் ஒப்புக் கொண்டார். அடுத்து உடனே நார்மலாகி எழுந்து கடந்து போய் விட்டார். அடுத்து வந்த பெண்ணும் உடம்பு வலி என்றார். அதே கேள்விகள், அதே அமெச்சூர் நடிப்பு. பார்வையாளர்கள் இதற்கெல்லாம் பழகி இருக்க வேண்டும். அவர்கள் இதெல்லாம் தெரிஞ்சது தானே எனும் பாவனையுடன் பாலா படத்து கிளைமேக்ஸ் பார்ப்பவர்களை போல் தோன்றினர்.

Saturday, April 9, 2016

பெண்கள் கோயிலில் நுழைவதற்கான தடை

சில கோயில்களில் பெண்கள் நுழைவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் என கோரும் வேளைகளில் வலதுசாரிகள் முன்வைத்த முக்கிய வாதம் அதை பெரும்பாலான பெண்களே விரும்புவதில்லை என்பது.

ஆனால் இப்போது ஷனி ஷிங்னாபூரில் உள்ள கோயிலில் பெண்கள் நுழைவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. உடனே அங்கே வழிபட ஆயிரக்கணக்கான பக்தைகள் குவிந்துள்ளார்கள். இவர்கள் எல்லாம் "இந்துப் பெண்கள்" இல்லையா? சபரி மலையில் உள்ள தடை நீக்கப்படும் போதும் இதுவே நிகழும். மக்களுக்கு இன்று மரபார்ந்த வழமைகள், விதிமுறைகள் முக்கியமே அல்ல. இந்த மாதிரி மரபுகளே ஒரு சில ஆண்களின் அதிகார தந்திரம் மட்டுமே, பொதுமக்கள் இவற்றை ஏற்கவில்லை என நிரூபணமாகி விட்டது.

Friday, April 8, 2016

பெரியாரிஸ்டுகளின் சிக்கல்கள்


பெரியாரிஸ்டுகளுக்கு இரண்டு இயல்புகள் உண்டு. பேச்சின் போது மைய சாதிகளை மயிலிறகால் வருடி விடுவார்கள். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் “பார்ப்பனிய சதி” என்பார்கள். இன்னொன்று இந்து மதத்தை பழிப்பதற்காக புராணங்கள் கதை என்றும், கடவுள்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் கூறுவார்கள். நேற்றைய உயிர்மை அரங்கில் வெ.மதிமாறனின் பேச்சு அப்படித் தான் இருந்தது. அவை அவருடைய கருத்துக்கள், நம்பிக்கைகள், தாராளமாய் அவர் அவற்றை எடுத்தியம்பலாம். ஆனால் எனக்கு விசித்திரமாய் பட்டது என்னவென்றால் தொண்ணூறுகள் துவங்கி அதிகாரம், ஒழுக்கம், மொழியியல், பின் அமைப்பியல் சார்ந்து தமிழில் பேசப்பட்ட எந்த புது கருத்தியலையும் அவர் சீண்டியே பார்க்கவில்லை என்பது.

Thursday, April 7, 2016

இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் வெளியாகும் பிற நூல்கள் பற்றி சில சொற்கள்...

வைரமுத்துவுக்கும் ஜெயமோகனுக்கும் பிறகு மதமதவென்ற பருவப்பெண் போன்ற மொழியை கொண்டவர் போகன் சங்கர். அவரது ரசிகன் நான். இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் வெளியாகும் பத்து நூல்களில் அவரது இரு நூல்களும் அடக்கம். அதே போல் சமகாலத்தின் மிக முக்கிய சிறுகதையாளரான எஸ்.செந்தில்குமாரின் மருக்கை நாவலும், சுப்பிரபாரதி மணியன், புலியூர் முருகேசன், அன்பு நண்பர் ஆத்மார்த்தியின் நூல்களும் வெளியாகின்றன. இவ்வருடம் நாம் வாசிக்க நிறைய நல்ல நூல்கள் காத்திருக்கின்றன...

"கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" நாவலை இணையம் வழி வாங்குவதற்கு....

http://www.wecanshopping.com/products/கதை-முடிவுக்கு-வந்துவிட்டீர்கள்.html

இன்று மாலை என் நாவல் வெளியீடு


இன்று மாலை ஐந்து மணிக்கு கவிக்கோ மன்றத்தில் (ஆழ்வார்பேட்டை) உயிர்மை வெளியிடும் பத்து நூல்களில் ஒன்றாக என் நாவலான "கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" வெளியாகிறது. அனைவரும் வருக!

",கதை முடிவுக்கு வந்து விட்டது" வாங்குவதற்கு

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....
Now WhatsApp No +91 8489401887..get any Tamil books..

கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்

ஆர்.அபிலாஷ்
ரூ.100

Wednesday, April 6, 2016

"கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" பின்னட்டை வாசகம்

என்னுடைய இம்மாத அம்ருதா கட்டுரை பற்றி அ.ராமசாமி

இலக்கியம் பற்றிய பேச்சு,  ஆசிரியனையும் பிரதிகளையும் தாண்டி நகரும் போது விரியும் வாசிப்பு தர்க்கம் சார்ந்தது. அதேநேரத்தில் இந்தத் தர்க்கம் இலக்கியவியல் சார்ந்த நெகிழ்வுகள் கொண்ட தர்க்கம் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இலக்கிய விசாரம் செய்யும் நபர் அதைப்புரிந்து கொண்டு வாசிப்பவருக்குக் கடத்தவேண்டும்.
"கருணை"யெனும் இலக்கியப் பொருண்மை உலக இலக்கியங்களின் எழுதித் தீராத ஒன்று.  அதன் அனைத்துப் பரிமாணங்களோடும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் அபிலாஷ். இந்த மாத அம்ருதாவில் ஓர் இலக்கியப் பொருண்மையை வரலாறு, பொருளியல், தத்துவம், சமயவியல், இறையியல் என விரித்துப்பேசும் அந்தக் கட்டுரை வாசிக்க வேண்டிய ஒன்று.

நன்றி: அ.ராமசாமியின் முகநூல் பக்கம்

Tuesday, April 5, 2016

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்


எழுத்தின் உண்மையான வெகுமதி


வாசகர்கள் பொதுவாய் இரண்டு வகையாய் எதிர்வினையாற்றுவார்கள். (1) அறிவார்த்தமாய், படைப்பை பகுப்பாய்ந்து. (2) உணர்ச்சிகரமாய், அந்த படைப்பே தமது தான் எனும் உரிமை கோரலுடன்.
 முதல் எதிர்வினை ஆர்வமூட்டும். படைப்பு பற்றி ஒரு தூலமான புரிதலை உருவாக்கவும் உதவும். இரண்டாவது எதிர்வினை ஆழமான திருப்தி தரும்.

Friday, April 1, 2016

தோனி ஏன் ஓய்வு பெற வேண்டும்?


நான் தோனி வெறுப்பாளன் அல்ல. இதை முதலில் சொல்லி விடுகிறேன். அதேநேரம் நான் தோனியின் அணித்தலைமையின் பெரிய ரசிகனும் அல்ல. இந்திய அணித்தலைவர்களை ரெண்டாய் பிரிக்கலாம். கவாஸ்கர் வகையறா, கபில் வகையறா. அசருதீன், அவருக்கு பின் தோனி ஆகியோர் கவாஸ்கர் வகையறா. இவர்கள் சம்பிரதாயமானவர்கள். தற்காப்பை முக்கியமாய் நினைப்பவர்கள். வேகவீச்சாளர்களை விட ஸ்பின்னர்களை அதிகம் விரும்புகிறவர்கள். ஒரு ஆட்டத்தை ஆவேசமாய் ஆக்ரோசமாய் வழிநடத்தாமல் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பவர்கள். முக்கியமாய் பவுலிங்கை விட பேட்டிங்கே முக்கியம் என நினைப்பவர்கள்.
 நான் அடிப்படையில் கபில் வகை அணித்தலைமையின் விசிறி. இவ்வகையறாவை சேர்ந்த அஜய் ஜடேஜா, கங்குலி, திராவிட், விராத் கோலி போன்றோர் தான் என்னைப் பொறுத்தவரையில் சரியான அணித்தலைவர்கள்.