Friday, January 31, 2014

கலைஞரை மட்டும் ஏன் திட்டுகிறார்கள்?நாம் கலைஞரை விமர்சிப்பது போல் ஏன் ஜெயாவை செய்வதில்லை?
1.கலைஞரின் குடும்ப அரசியல் தான் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்கிற பேரில் அவர் எல்லாரையும் குழப்பி தன்னை மட்டும் தக்க வைக்கிற அரசியல் எரிச்சலூட்டுகிறது. ஜெயலலிதாவிடம் குடும்ப அரசியல் இல்லை. உதிரியாக ஒன்றிரண்டு காட்டலாமே ஒழிய அவருடையது குடும்ப அரசியல் அல்ல, தனிமனித அதிகார அரசியல். ரெண்டையும் குழப்ப முடியாது.

மெய்ப்பாடும் மிளகாயும்
சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையும் பிரசிடென்ஸி கல்லூரியில் தமிழ்த்துறையும் இணைந்து கவிதையில் பற்றி நேற்று ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தொல்காப்பிய மெய்ப்பாடு கோட்பாட்டை பச்சை மிளகாய் உதாரணம் கொண்டு மிக எளிதாய் விளக்கினார்.

"மாடிப்படிகள்" சிறுகதைக்கு ஒரு அழகான விமர்சனம்

ஒரு கதை நுணுக்கமாய் கற்பனையுடன் வாசிக்கையில் அது மேலும் வளர்கிறது. நண்பர் ராஜாவின் விமர்சனம் அத்தகையது. படியுங்கள்...


”மாடிப்படிகள்” மிக அழகான கதை.  நேரடியான கதை போலத் தோன்றினாலும், பல அடுக்குகள் கொண்ட கதையாகப் பட்டது.  இளவயதில் பெண்கள் இவரிடம் கூச்சமின்றி தம் அந்தரங்கங்களைச் சொல்ல என்ன காரணம்?  அவர்களும், ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில், இன்னொரு வகையில் உதாசீனப்படுத்தப் படுபவர்கள் தாமே.  அந்தப் புரிதலில் விளைந்த தோழமையா, அல்லது, பிற சம வயது ஆண்களிடம் பழகும் போது கொள்ளும் பதற்றம் இன்றிப் பழகும் வாய்ப்பு இருப்பதாலா?
அதே போல், இரண்டாம் முறையாக லதாவைப் பார்க்கும் போது, மிகக் கவனமாக, "இன்னும் குள்ளமாகத் தெரிந்தாள்", எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.  முதல் முறை கல்லூரிக்கு செல்லும் போது பார்க்கும் போது, லதாவை மனத் தடுமாற்றத்துடன், கீழிருந்து மேல் நோக்கிப் பார்க்கிறான்.  வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்து, அனுபவம் நிறைந்த போது லதாவைப் பார்க்கும் போது, அவன் லதாவை தனக்கு சரிசமமான அளவில் பார்க்கிறான்.  அப்போது லதா, அவன் மனதளவில் இருந்த லதாவைக் காட்டிலும் கொஞ்சம் குள்ளமாகத் தெரிகிறாள், எனப் பட்டது. 

எப்படியிருந்தாலும், நல்ல கதை. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைப் படிக்க ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன்,
ராஜா

Wednesday, January 29, 2014

நண்பேண்டா: ரெண்டாயிரத்தின் சினிமா காலகட்டமும் புரொமான்ஸும்

தொண்ணூறுகளில் தமிழ் சினிமா ஒரு மேற்தட்டு பெண் மீதான் தீராத ஏக்கத்தை சித்தரித்து, சமநிலையற்ற காதல் உறவை பேசுவதில் மிகுந்த சிரத்தை காட்டியது. பொருளாதார, சாதிய காரணங்களால் உருவாகும் சமநிலை காதலிலும் இருப்பதால் தமிழ் சினிமாவில் என்றும் சுமூக முடிவுள்ள காதல் படங்கள் பெரிதாய் கொண்டாடப்பட்டதில்லை. சராசரி தமிழ்க் காதலனுக்கு காதல் என்றுமே எட்டாக்கனி தான்

 இந்த எதிர்மறைத்தன்மையை ஈடுகட்ட இக்காலகட்ட சினிமாவில் காதல் மிகைப்படுத்தப்பட்டு லட்சிய வடிவில் பேசப் பட்டது. ரெண்டாயிரத்தின் தமிழ் சினிமாவை காதல் மீதான அவநம்பிக்கையின் வேறு வடிவில் பேசியது. தாராளவாதம் பொருளாதாரக் கொள்கையளவில் மட்டுமல்லாமல் நம் பண்பாட்டையும் பாதித்தது

Saturday, January 25, 2014

மாடிப்படிகள்
ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினேன். எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தார்கள். மறுத்து விட்டேன். எப்பவுமே அப்படித்தான். சட்டென்ற உணர்ச்சிகரமான முடிவு. அதற்குப் பின் யாராலும் தளர்த்த முடியாத பிடிவாதம். என்னென்னமோ சலுகை தருவதாய் சொன்னார்கள்: லேகியம் மருந்து கொஞ்ச நாள் சாப்பிட வேண்டாம். சூம்பின காலை சரி செய்யும் சிகிச்சைகளாக கழுத்து வரை மண்ணில் புதைத்து வைக்கவோ, எண்ணெயிட்டு பிழிந்து, கிழிக்கும் முனைகள் கொண்ட தென்னம்மட்டைகளால் கால்களை கட்டி வைக்க மாட்டோம் என சொன்னார்கள். அண்ணன் எனக்கு நிறைய புது காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர் இதழ்கள் வாங்கித் தருவதாக, பாட்டி உண்ணியப்பம், நெய்யப்பம், அச்சுமுறுக்கு பண்ணித் தருவதாக வாக்களித்தார்கள். அம்மா இருந்திருந்தால் அவள் ஒன்றுமே வாக்குறுதி தர வேண்டியதில்லை. அவள் சும்மா சொன்னாலே நான் ஒப்புக் கொண்டிருப்பேன். அம்மா இருந்திருந்தால் என்னன்னமோ நடக்காமல் இருந்திருக்கும்.

Friday, January 24, 2014

ராயல்டி பிரச்சனை குறித்து கரிகாலனின் பின்னூட்டத்துக்கான என் எதிர்வினை


”ராயல்டி விவகாரம்” கட்டுரைக்கு நண்பர் கரிகாலன் இரு பின்னூட்டங்கள் எழுதியிருந்தார். இது குறித்த என் எதிர்வினைகள் இவை:


அன்புள்ள கரிகாலன்,
 இந்த விசயங்களை ஓரளவு உள்ளே இருந்து பார்த்தவன் என்கிற முறையில் இதை சொல்கிறேன்:
//ராயல்ட்டி என்பது அடிப்படையில் பதிப்பகத்திற்கும், எழுத்தாளருக்கும் இடையிலான, சட்டப்பூர்வமான ஒப்பந்தம். எழுத்தாளர் எழுதிய ஒரே ஒரு புத்தகம் விற்றாலும் கூட, அதற்கான ராயல்ட்டியை தருவது தான் நியாயமான செயல் மட்டுமல்ல, சட்டப்பூர்வமானதும் கூட. // 

தமிழில் இந்த ஒப்பந்த முறை முழுக்க வணிக ரீதியிலாய் இயங்குகிற கிழக்கு போன்ற பதிப்பகங்களால் தான் கொண்டு வரப்பட்டது. காலச்சுவடு கண்ணனும் பின்பற்றினார். ஆனால் கணிசமான பதிப்பகங்களில் ஒப்பந்த நடைமுறை இல்லை. இலக்கிய புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகிற அரைநூற்றாண்டாகவே இது தான் நிலைமை. வரதட்சணை வாங்குவது குற்றம், ஆனால் நடைமுறையில் இது வழமை. அது போலத் தான் ஒப்பந்தம் இங்கு. அதனால் தான் நிலைமை மெல்ல மெல்லவே மாற முடியும் என நம்புகிறேன். எந்த தொழிலும் முழுக்க வியாபாரமயமாகும் போது தான் விதிமுறைகளை கணக்கில் எடுக்கும். ராயல்டி விவகாரம் சூடாவதே இங்கு புத்தக விற்பனை காலூன்ற ஆரம்பித்த பின்னர் தான். இது ஒரு கட்டத்தில் சரியாகும் என நம்புகிறேன். ஒரு தார்மீக அடிப்படையில் இதை வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.

புத்தக பரிந்துரை பட்டியல்களின் மூன்று பிரச்சனைகள்வாசகனுக்கு பட்டியல் நீட்டி வழிநடத்தும் பண்பாட்டுக்கு எதரானவன் நான். இதற்கு மூன்று காரணங்கள்.
11)  வாசிப்பு என்பது இலக்கியமோ அல்லது ஒரு துறை பற்றி அறிய அல்ல. சுய அறிதல் தான் வாசிப்பின் உண்மை நோக்கம். வாசகனாக அந்தஸ்தை பெற படிப்பவர்கள் போலி படிப்பாளிகள். விரிவாக கூறுகிறேன். சிறுவயதில் இருந்தே வாழ்வு குறித்த நம்பிக்கைகளும் அபிப்ராயங்களும் ரசனையும் நமக்குள் உருவாகிறது. ஆனால் இவற்றை நம்மால் நேரடியாக அறிய முடியாது. வாசிப்பு நம் ரசனைக்கு ஒரு முகம் அளிக்கிறது. அரைகுறையாய் தோன்றிய எண்ணங்களுக்கு தர்க்கமும் கூர்மையும் அளிக்கிறது. சரியான வாசிப்பை கண்டடைவது என்பது நம்மை கண்டடைவது தான். அதனால் தான் வாசகர்கள் தம் தேர்வு பற்றி என்றுமே பிடிவாதமாக இருப்பார்கள்.

Tuesday, January 21, 2014

ராயல்டி விவகாரம்
நூல்கள் சரியாக விற்காத போது ராயல்டி தரலாமா? இது தான் கேள்வி. ஒரு படம் பயங்கரமாய் தோல்வி அடைகிறது. அதில் நடித்துள்ளோர் மற்றும் இயக்குநருக்கு சம்பளம் கொடுக்கலாமா? எனக்குத் தெரிந்து கொடுக்கிறார்கள். ஆரம்பித்து நின்று போன படங்களில் பாட்டு எழுதியவருக்கு கூட பத்தாயிரம் சுலபமாய் வருகிறது. ஒரு பதிப்பாளர் எப்படியும் ரிஸ்க் எடுக்கிறார். புத்தகம் குறைவாய் விற்பது தவிர்க்க இயலாத பிரச்சனை.குறைவாய் ராயல்டி கொடுங்கள் என்பது என் வேண்டுகோள். முன்னூறோ ஐநூறோ அனுப்பி வையுங்கள். நேற்று கூட ஒரு கவிஞர் தனக்கு அறுநூறு ரூபாய் ஒரு தொகுப்புக்கு ராயல்டி வந்ததாய் சொன்னார். சின்ன தொகை என்றாலும் எழுத்தாளன் திருப்தியாய் உணர்வான். நண்பர் சிவராமன் கூறுவதை நான் ஏற்கவில்லை.

Friday, January 17, 2014

எதற்காக எழுதுகிறோம்? தமிழில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி கேட்கும் போது எனக்கு அண்ணாமலை ரஜினிகாந்த நினைவுவருவார். அதை விடுங்கள்! உண்மையான வெற்றி எது? அதிக வாசகர்களா? பணமா? பிரபலமா? அல்லது சாஸ்வத படைப்புகளை உருவாக்குவதா?

Thursday, January 9, 2014

சமணர்கள் தூக்கிலப்படவில்லை என நிரூபிக்கும் அவசரங்கள்நவம்பர் மாதமே காலச்சுவடில் பி.கிருஷ்ணனின் சமணர்கள் பற்றிய கட்டுரையை படித்ததும் எதிர்வினை எழுதி விட்டேன். தாமரைக்கு கொடுத்தேன். அப்போது பார்த்து ரெஜிஸ்திரேசனில் ஏதோ பிரச்சனை என இதழ் ஒரு மாதம் வரவில்லை. பிறகு ஒரு நண்பர் இன்னொரு இதழுக்கு வேண்டும் என வாங்கி மீண்டும் இழுத்தடித்தார். பின்னர் நானும் பதிவேற்றாமல் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டேன்.. கிருஷ்ணனின் கட்டுரையை இந்த இணைப்பில் பாருங்கள்
http://www.kalachuvadu.com/issue-167/page09.asp

இனி என் எதிர்வினைசில மாதங்களுக்கு முன் காலச்சுவடில் பி.ஏ.கிருஷ்ணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்கிற கட்டுரையை நிறைய சுவாரஸ்யமான தகவல்களுடன் எழுதி இருக்கிறார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதாய் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். அதாவது கல்வெட்டுகள், பட்டயக்குறிப்புகள் என ஒன்றும் இல்லை. பழந்தமிழ் இலக்கிய குறிப்புகளைத் தவிர.

இலக்கிய விழாக்களில் காணாமல் போகும் சமத்துவம்

ஜனவரி மாத உயிர்மையில் முருகேச பாண்டியன் சிறுபத்திரிகை பண்பாட்டு பற்றி சொல்லும் போது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான சமத்துவம் பற்றி குறிப்பிடுகிறார். ஒரு காலத்தில் எழுத்தாளனை பெயரால் தான் அழைத்தார்கள். சின்னப் பையன் என்றாலும் மூத்த எழுத்தாளனை பெயரால் தான் அழைத்து பேசினான். அவர்களும் சமமாக நடத்தினார்கள். இலக்கியமும், எழுத்து, சமூக அக்கறை சார்ந்த விழுமியங்களும் இப்பரப்புக்குள் வருபவர்களை சமமாக்கியது. நீங்கள் ஒரு வரி கூட எழுதாமல் இருக்கலாம். ஆனால் இலக்கியம் வாசிக்கும் ஒரே தகுதி உங்களை சு.ராவுக்கும் ஜெயமோகனுக்கும் இணையாக்குகிறது.

Wednesday, January 8, 2014

ராஜீவ் காந்தி சாலை

விநாயக முருகனின் ”ராஜீவ் காந்தி சாலைக்கு” ஒரு நல்ல நாவலுக்கான சில குணங்கள் உள்ளன. ஒன்று பிரம்மாண்டம். தமிழில் பிரம்மாண்டத்தை கதைத்தளத்தில் உருவாக்க ஆயிரம் வருட குடும்ப / ஜாதி வரலாற்றை புனைவில் கொண்டு வருகிறார்கள். இது சற்று மூச்சு வாங்க வைக்கக் கூடியது. நல்ல நாவல்கள் மாற்றுப் பார்வைகள் அல்லது விவாதங்கள் வழி பிரம்மாண்டத்தை தொனிக்க வைக்கும். உ.தா “விஷ்ணுபுரம்”. வாழ்வின் அர்த்தத்தை காமம், இலக்கியம், ஞானத்தேடல் எனும் மூன்று வழிகளில் தேடுபவர்களின் பாதை ஒரேயளவு தீவிரமானது என விரிவாக பேசும் நாவல் அது. ”ராஜீவ் காந்தி சாலை” விஷ்ணுபுரம் வகையை சேர்ந்தது அல்ல என்றாலும் மாறுபட்ட பார்வையில் ஒரே விஷயத்தை பேசுவதன் வழி ஆசிரியர் ஒரு விரிவை சித்தரிக்கிறார்.