Sunday, January 24, 2016

வாழ்த்துக்கள் ஜெயமோகன்

பத்மஸ்ரீ விருதை ஜெயமோகன் மறுத்துள்ளது தர்க்கரீதியான முடிவாக தெரியவில்லை. எதையும் தெளிவாக வலுவாக முன்வைக்கும் அவர் இம்முறை கூறியுள்ள காரணங்கள் பனிமூட்டம் போல் உள்ளன. தன் எதிர்தரப்பின் கண்டனங்களை கண்டு அவர் என்று ஒதுங்கி போயிருக்கிறார்? எதிர்தரப்பை சீண்டுவதும், அதனோடு மோதுவதும் தான் அவரது எழுத்து உத்வேகத்தின் சுனை. அப்படியான ஜெயமோகன் தான் இப்போது தன் பெயர் அல்லது படைப்பின் அங்கீகாரம் களங்கப்படக் கூடாது என்பதற்காக மறுத்துள்ளார். இது அவரது அடிப்படை சுபாவத்துக்கே எதிரானது.

Saturday, January 23, 2016

ஒரு சின்ன பூவை பூக்க வைப்போம்


இன்றைய தினம்
ஒரு சின்ன பூவை
யாருக்கும் தெரியாமல்
மலர செய்வோம்

ஒரு சின்ன பூ பூப்பது
பூமியை பூட்டும்
கடவுளின் முறுகிய திருகலாக இருக்கலாம்

Thursday, January 21, 2016

பேய்கள் அரசாண்டால்….

12487095_10156329841080315_1319418043815133185_o

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் மெல்ல மெல்ல சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வது எப்படி இருக்கும் என நமக்கு புரிய வந்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும் அதன் பின்னணியும் இந்த சர்வாதிகார வெறியாட்டத்தின் உச்சம் எனலாம். இதற்கு முந்தைய எந்த அரசும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள், போராளிகள் அனைவரின் கழுத்தையும் சதா சுருக்குக் கயிற்றில் கட்டி வைத்திருக்க முனைந்ததில்லை. இந்த அரசும் அதன் கட்சித் தலைவர்களும் முற்றிய மனநோயாளிகளைப் போல் பாதுகாப்பின்மையின் விளிம்பில் தவிக்கிறார்கள். தமக்கெதிராய் ஒரு சொல், ஒரு அசைவு, ஒரு கருத்து தோன்றினால் போதும் கத்தியை தூக்க, சாட்டையை சொடுக்க, தூக்குக்கயிறை முறுக்க துவங்கி விடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் அரசை விமர்சித்து பேசினார். ஒரு சில நாட்களுக்குள் அப்பேச்சை குறிப்பிட்டு விளக்கம் வேண்டி மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து நிர்வாகத்திற்கு கடிதம் வந்து விட்டது. சமீபமாய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசும் போது மோடியை குஜராத் இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி என்று சொன்னேன். உடனே அங்கிருந்த பா.ஜ.க ஆள் என்னை கிரிமினல் என நேரலையிலே திட்ட தொடங்கி விட்டார். போன வாரம் மீண்டும் அந்த டிவிக்கு போயிருந்த போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார். நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க தரப்பில் இருந்து என்னைப் பற்றி நிறைய புகார்கள் வந்து கொண்டே இருந்தனவாம். ஒரு சின்ன வாக்கியத்துக்கே இவ்வளவு புகார்கள் என்றால் நேரடியாய் பல்கலைக்கழகத்துக்குள் இந்துத்துவாவுக்கு எதிராய் கூட்டங்கள் நடத்தி, எ.பி.வி.பி போன்ற இந்துத்துவா அமைப்புகளை நேரடியாய் எதிர்த்த ரோஹித் வெமுலாவுக்கு எந்தளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கும் யோசியுங்கள்.

Wednesday, January 20, 2016

கனவில் வந்த சு.ரா

முந்தா நாள் என் கனவில், வழக்கமாய் நான் அதிகம் திட்டியுள்ள, ஒரு மூத்த எழுத்தாளர் வந்தார். நான் அவரிடம் உருக்கமாய் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கனிவாய் பதிலளித்தார். நேற்று என் கனவில் சுந்தர ராமசாமி இறந்து போன சேதி கேட்டு மனம் உடைந்து துக்கம் கொண்டேன். யாரோ ஒருவரிடம் தாள முடியாத இழப்புணர்வை பகிர்ந்து கொண்டபடி ஒரு பேருந்தில் ஏறி பயணித்தேன். அதன் இருக்கை உருளை வடிவில் சாய்வாய் இருந்தது. அதில் இருந்து விழுந்த விடாதபடி சிரமப்பட்டு தொற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. மீண்டும் மீண்டும் கண்ணீரில் தோய்ந்த நினைவுகளை எனக்குள் தொகுத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் விடிந்து விட்டது. அடச்சே சு.ரா இறந்து தான் பல வருடங்களாயிற்றே என தோன்றியது. இன்றிரவு அடுத்து யார் வரப் போகிறார்களோ என நினைத்து பயமாக இருக்கிறது.

பொதுவாக கனவில் வருகிற எதற்கும் நேரடி பொருளில்லை. ஒருவருக்காய் அழுகிறீர்கள் என்றால் அவர் வேறெதற்கோ குறியீடு மட்டும் தான். அவரே அல்ல. நான் எதன் இழப்புக்காய் துக்கித்தேன்? யாருக்காய் விம்மி அழுதேன்? என்ன தான் நடக்கிறது எனக்குள்?

Friday, January 15, 2016

காந்தியும் மாஸ் ஹிஸ்டிரியாவும்

Image result for tasmac protests

நான் சிறுவயதில் லூயிஸ் பிஷர் எழுதிய காந்தியின் வாழ்க்கை கதையை (Life of Mahatma Gandhi) படிக்கையில் நிறைய இடங்களில் நெகிழ்ந்திருக்கிறேன். சில இடங்களில் அழுதிருக்கிறேன். அதில் என்னை வியப்படைய செய்த இடம் 1947இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் நடந்த கலவரங்கள் பற்றின அத்தியாயம். கல்கத்தாவிலும் பீஹாரிலும் தில்லியிலும் கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் பிரிவது என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தனி நாட்டை பெற்று செல்வதாய் எளிதாய் இருக்கவில்லை. பஞ்சாப் மற்றும் வங்கத்தின் வளமான பகுதிகள் உடைக்கப்பட்டன. அப்போது இந்திய பகுதியை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தார்கள். நிலம் என்பது மக்களின் உணர்ச்சிகளோடு மிகவும் அந்தரங்கமாய் பிணைக்கப்பட்டது. நீங்கள் என்னிடம் இருந்து ஐந்து லட்சத்தை திருடினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால் ஐந்து லட்சம் மதிப்புள்ள என் பூர்வீக நிலத்தை பிடுங்கினால் எனக்கு கொலைவெறி தோன்றும். இந்த உளவியல் இன்றும் வேலை செய்கிறது. இன்றும் சாதிய/மத கலவரங்கள் நிலம் சார்ந்ததாய் இருப்பதை காண்கிறோம்.

Thursday, January 14, 2016

சென்னையை மீட்பது நான் புதிதாய் யாரை சந்தித்தாலும் ரெண்டு கேள்விகளைத் தான் முதலில் கேட்கிறார்கள். எங்கு வேலை செய்கிறீர்கள்? சொந்த வீட்டில் வசிக்கிறீர்களா? இந்த இரண்டின் விகிதாச்சாரம் தான் சென்னை வாழ்வின் தரத்தை தீர்மானிக்கிறது.

Saturday, January 9, 2016

தேவதச்சன் – படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதன் (“ஜன்னல்” இதழில் வெளியான பேட்டி)Image result for தேவதச்சன்

கவிஞர் தேவதச்சன் 2015ஆம் வருடத்தின் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருதைப் பெறுகிறார். தேவசதச்சனின் இயற்பெயர் ஆறுமுகம். தூத்துக்குடி மாவட்டத்தின் கோயில்பட்டியை சேர்ந்தவர். எழுபதுகளில் இருந்து கவிதை எழுத துவங்கிய தேவதச்சன் இன்றும் ஒரு படைப்பாளியாக உறையில் இருந்து உருவப்பட்ட பளபளப்பான வாளைப் போல ஜொலிக்கிறார். இதற்கு காரணம் எழுபதுகளில் துவங்கி இன்று வரை அவர் யாரைப் போன்றும் எழுத முயலவில்லை; அவரை போல் யாராலும் எழுத முடிந்ததில்லை.
தேவதச்சன் இந்த கவிதை வெகுபிரசித்தம்.
”துணி துவைத்து
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்”

தடையற்ற காதல்

காலையில் (சுமார் பத்து, பத்தரை இருக்கும்) ஒரு இனிய கனவுக்குள் புதைந்து புதைந்து தூங்கிக் கொண்டிருந்த போது ரெயின் போ எப்.எம்மில் அழைத்து திருக்குறள் தினம் பற்றி இரண்டு நிமிடம் பேச முடியுமா எனக் கேட்டார்கள்.
தயாராவதற்கு அரைமணி அவகாசம் கேட்டு விட்டு பேச உட்கார்ந்தேன். இதனிடையே எனக்கு பிடித்த சில குறள்களை அசைபோட்டவாறிருந்தேன். ஒரு எளிய குறளின் முதல் வரி - நான் திரும்ப திரும்ப யோசிப்பது - “அன்பிற்கும் உண்டோ அழைக்கும் தாழ்”.

Friday, January 8, 2016

விகடன் விருதுகள்விகடன் விருது பெறும் ஷோபா சக்தி, யூமா வாசுகி, கார்த்திகைப்பாண்டியன், சபரிநாதன், கண்டராதித்தன், பாலு சத்யா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். நண்பன் லஷ்மி சரவண குமாருக்கு கூடுதல் அன்பும் முத்தங்களும். எப்போதும் விகடன் விருது பெறும் புத்தகங்களுக்கு புத்தகக் கண்காட்சியில் மவுசு கூடும். அதை மனதில் வைத்து மார்ச்சில் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது மார்ச்சில் விகடன் வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டலாம். இம்முறை விருது பெறுகிறவர்கள் முக்கியமானவர்கள். தொடர்ந்து பங்காற்றி வருகிறார்கள். யூமா வாசுகியின் உழைப்பு திகைப்பூட்டுகிறது. எவ்வளவு முக்கியமான நூல்களை மலையாளத்தில் இருந்து மொழியாக்கி இருக்கிறார்! ஷோபா சக்தி நம் காலத்தின் ராக் ஸ்டார். அவருக்கான ஒவ்வொரு அங்கீகாரமும் நாம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

பாரதிய பாஷா பரிஷத் விருது

கொல்கொத்தாவில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு வழங்கும் பாரதிய பாஷா பரிஷத் விருதுக்காய் தமிழில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இன்று இது சம்மந்தமாய் இந்தியில் ஒரு கடிதம் வந்தது. என்னவென்றே புரியாமல் ஸ்கேன் செய்து என் மனைவிக்கும் அக்காவுக்கும் வாட்ஸ் ஆப் பண்ணினேன். அவர்கள் எனக்கு விருது விபரத்தை தெரிவித்தார்கள். ஏன் எதற்கு கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. இந்த விருதை ஏற்கனவே ஜெயகாந்தன், பிரபஞ்சன், சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி, பா.ராகவன் ஆகியோர் தமிழில் வாங்கி உள்ளதாய் சற்று முன் கூகிள் தேடி சொன்னது. போன வருடம் இரண்டே மணிநேரம் கொல்கொத்தா சுற்றிப் பார்க்க அவகாசம் கிடைத்தது. அந்த அழகிய நகரத்தை பார்த்தும் அங்கு சந்தித்தவர்களிடம் பேசியும் அற்புதமான மீன் குழம்பு சுவைத்தும் சொக்கிப் போனேன். ஒரு வாரமாவது அங்கு போய் எதிர்காலத்தில் தங்க வேண்டும் என அடிக்கடி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். இதோ வாய்ப்பு வந்து விட்டது.
இந்த விருது பற்றி கூடுதலாய் தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள்.

Thursday, January 7, 2016

வாடாமல்லி
இம்மாத தீராநதியில் கண்மணி குணசேகரனின் சிறுகதை “வாடாமல்லி” வாசித்தேன். கொஞ்சம் பிசகினால் “முதல் மரியாதை” போல் நாடகீயமாகி விடக் கூடிய கதை. ஆனால் தடுமாறாமல் நூல் பிடித்தாற்போல் கதையை கொண்டு போகிறார். மல்லிகா பன்னீர் எனும் கிராமத்து ரோமியோவை காதலிக்கிறாள். இருவரும் சேர்ந்து ஓடிப் போகும் போது ஊர்க்காரர்கள் பிடித்து பிரித்து வைத்து விடுகிறார்கள். இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணம். வெறுப்பில் சக்கரை குடிகாரனும் பொறுக்கியும் ஆகிறான். மல்லிகா தன் கசப்பையும் ஏக்கத்தையும் வைராக்கியமாய் மாற்றிக் கொள்கிறாள். எதுவுமே பாதிக்காதத்து போல் குடும்ப வாழ்க்கையை சிறப்பாய் நடத்துகிறாள். குழந்தை, கணவன் என நிறைவான வாழ்க்கை. அப்போது பன்னீர் இறந்து போன சேதி வருகிறது. அதுவரை அவன் தன் வாழ்க்கையில் இல்லாதது போல் நடந்து கொண்டவள் இப்போது சட்டென கலங்கி நிற்கிறாள். ஊர் என்ன சொல்லுமோ என அஞ்சாமல் அவனை இறுதியாய் பார்க்க கிளம்புகிறாள். ஆளுயர மாலையை வாங்கிப் போய் அவன் உடம்பில் போடுகிறாள். அவளைப் பார்த்து ஊர் அதிர்ந்து நிற்கிறது. கடும் அழுத்தத்துடன் காதலை மறைத்து வாழ்பவர்கள் ஒருநாள் அதே அழுத்தத்துடன் துணிச்சலுடன் அதை வெளிக்காட்டவும் செய்வார்கள். இந்த உளவியல் தான் கதைக்கு அழகு.

சாருவும் வெள்ளமும்இந்த வெள்ளத்தின் போது சகமனிதர்களிடம் அபாரமான சமூக அர்ப்பணிப்புணர்வை, சேவை மனப்பான்மையை பார்த்தோம். ஒவ்வொருவரும் கண்கூட கண்டோம். சாருவை தவிர. இம்மாத உயிர்மையில் இவ்வாறு எழுதுகிறார்: “வெள்ளத்தில் சென்னை மூழ்கிய போது வெள்ளத்தோடு கூடவே மனிதாபிமானமும் பெருகி ஓடியதாக பத்திரிகைகள் கூவிக் கொண்டிருந்தன. விரல் நகத்தின் அழுக்கு அளவுக்கு தான் அந்த அபிமானம் நிலவியதாக தெரிந்தது எனக்கு. பேனை பெருமாளாக்கியது போல் அந்த அழுக்கை தான் ஒரேயடியாக பேசுகிறார்கள் எல்லாரும் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் மரணம் ஒன்று போல் தாக்கிய போது மனிதன் பயந்தான். அதனால் ஒருவனுக்கொருவன் உதவிக் கொண்டான். அவ்வளவு தான் விசயம். இதே நகரத்தில் வெள்ளத்துக்கு பதிலாக ஒரு மதக்கலவரம் சூழ்ந்திருந்தால் இதே மனிதாபிமானிகள் கையில் ஆயுதத்தை தூக்கியிருப்பார்கள்”.

Tuesday, January 5, 2016

மனதின் சிரிப்புஇன்று காலை தூங்கி ஆரம்பித்த போது வந்த போனில் ஒருவர் திட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு ஏகப்பட்ட பிரச்சனை. கடும் வேலை. மாலை ஏழரை வரை யாராவது அழைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு தோழி போனில் அழைத்தார். அவரிடம் கேலி பண்ணி பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாய் அவரிடம் அப்படி மனம் விட்டு வேடிக்கையாய் பேசினதில்லை. அவர் கேட்டார் “நீ எப்பவுமே உம்மணாமூஞ்சியாச்சே. இன்னிக்கு என்ன சிரிக்க சிரிக்க பேசுறே?”. எனக்கே அப்போது தான் அது உறைத்தது. சட்டென எந்த காரணமுமில்லாமல் நல்ல மனநிலையில் சந்தோசமாய் இருந்தேன். அடி வாங்க வாங்க மனம் சிரிக்கிறது!

Sunday, January 3, 2016

பதன்கோட் தீவிரவாத தாக்குதல் – சில ஐயங்கள்Image result for pathankot attack

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு ராணுவத்தினர் பலியாகி விட்டனர். இன்னும் தாக்குதல் ஓயவில்லை. தொடர்கிறது. இத்தாக்குதல் நடக்கக் கூடும் என ஜனவரி 1 அன்றைக்கே தகவல் வந்து விட்டது. அனைத்து படையினரும் தயார் நிலையில் முடுக்கி விடப்பட்டனர். ஆனால் நேரடியாய் களமிறங்கி தீவிரவாதிகளைத் தாக்குவதற்கோ தளத்தை பாதுகாப்பதற்கோ ராணுவத்தினருக்கு ஆணை வழங்கப்படவில்லை. சொல்லப்போனால் தீவிரவாதிகள் தளத்துக்குள் நுழைந்து தாக்கும்வரை அவகாசம் வழங்கப்பட்டது. இது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.