Friday, January 26, 2018

காதல் செய்யுள் XI – பாப்லோ நெருடா

Image result for puma prowl painting
உன் உதடுகளுக்காய், உன் குரலுக்காய், உன் கூந்தலுக்காய் இச்சையில் தவிக்கிறேன்.
மௌனமாய், பட்டினியில் காய்ந்து, வீதிகளில் பதுங்கித் திரிகிறேன்.
ரொட்டி என்னைத் தணிப்பதில்லை, விடியல் என்னை தடுப்பதில்லை, நாள் முழுக்க
உன் நீரலை காலடிகளின் சப்தத்தை வேட்டையாடுகிறேன்.

நீ என்னை மறப்பாய் எனில் - பாப்லோ நெருடா

 Image result for neruda
நீ அறிந்திருக்க வேண்டும்
ஒன்றை.

உனக்குத் தான் தெரியுமே:
படிக நிலவை நான் பார்த்தேன் எனில்,
என் ஜன்னல் வழி, சன்னமாய் நகரும் இலையுதிர் காலத்தின்
சிவப்புக் கிளையை நான் பார்த்தேன் எனில்
தீயின் அருகாமையில் தொடவே முடியாத
அந்த சாம்பலை தீண்டினேன் எனில்
அல்லது மரக்கட்டையின் நெளிசருமத்தை தொட்டேன் எனில்,
எல்லாமே என்னை அள்ளிச் சென்று சேர்க்கும் உன்னிடம்,
ஏதோ இங்குள்ள ஒவ்வொன்றுமே,
வாசனைகள், ஒளி, உலோகங்கள்,
எனக்காய் காத்திருக்கும் உனது சிறிய தீவுகளுக்கு
செல்லும் சின்னஞ்சிறு படகுகள் என்பது போல்.

Thursday, January 25, 2018

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன்: நீ இல்லவே இல்லை என்பது போல,
அதோடு வெகு தொலைவில் இருந்து நீ என்னை கேட்கிறாய்
அப்போது உன்னைத் தொடுவதில்லை என் குரல்.
ஏதோ உன் கண்கள் பறந்து போனது போல்
ஒரு முத்தம் உன் உதடுகளை உறைய வைத்தது போல்.

விவாதமும் படுக்கையறையும்

Image result for argument cartoon
நான் சின்ன வயதில் இருந்தே சர்ச்சிப்பதில், மாற்றுக்கருத்தை முன்வைப்பதில், வாயாடுவதில் ஆர்வமுள்ளவன். சொல்லப் போனால் வெறுமனே ஒரு வாதத்துக்காகவே நான் வாய் வளர்ப்பதுண்டு. அதில் உணர்வுரீதியாய் ஈடுபட மாட்டேன். அதில் ஒரு திகைப்பு, பரபரப்பு, கிளர்ச்சி எல்லாம் உள்ளது.
ஆனால் சமீபமாய் நானிப்படி வாதிடுவதை குறைத்து வருகிறேன். என் நேசத்தை உரையாடல் வழி பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். அது என்னை விரிவு கொள்ள வைக்கிறது. அதிக மகிழ்ச்சி தருகிறது என நினைக்கிறேன். இந்நிலையில் நான் சிலரிடம் மட்டும் “அதப்படி இல்லீங்க…” என ஆரம்பித்து கற்ற வித்தைகளை எல்லாம் இறக்குவதுண்டு.
தற்போது பணிபுரியும் இடத்தில் என்னுடன் அப்படி சமர் புரிய சில அற்புதமான நண்பர்கள் உண்டு. அதில் ஒருவர் ராஜீவ் எனும் சமூகவியல் பேராசிரியர். எனது பிரியத்துக்குரிய நண்பர். வாழ்க்கைப் பார்வையில், நம்பிக்கைகளில், அணுகுமுறையில் எங்களுக்குள் கைகுலுக்கும் புள்ளிகளே இல்லை. எல்லா விசயங்களிலும் எதிர் எதிர். சில நேரம் ஒரு சின்ன வரியை எடுத்துக் கொண்டு மணிக்கணக்காய் நாங்கள் கத்தி வீசுவதுண்டு. முடிவில் வீட்டுக்கு கிளம்பும் போது ராஜீவ் என் கையைப் பற்றிக் கொண்டு சொல்வார், “நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. ஆனாலும் நான் இப்படித் தான் எப்போதும் இருக்கிறேன். என்ன செய்வது…”. அல்லது நான் அவரிடம் சென்று குரல் தழுதழுக்க “ச்சே நான் எவ்வளவு அபத்தமாய் பேசினேன் இல்லையா? நான் சொன்னதையெல்லாம் மறந்து விடுங்களேன் ப்ளீஸ்” என்பேன்.

Wednesday, January 24, 2018

இந்த அந்தியைக் கூட இழந்து விட்டோம் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

இந்த அந்தியைக் கூட இழந்து விட்டோம்
நீல வெளிச்சம் உலகின் மீது கவியும்
இம்மாலையில் யாரும் காணவில்லை கையோடு கைகோர்த்து நம்மை

என் ஜன்னலில் இருந்து கண்டேன்
தொலைதூர மலைமுகடுகளில் அஸ்தமனத்தின் விழா கோலாகலத்தை

சிலநேரம் என் கைகளுக்கு இடையே சூரியனின் ஒரு துண்டு
ஒரு நாணயத்தைப் போல கனன்றது

உன் உடலெனும் வரைபட நூலில் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

உன் உடலெனும் வரைபட நூலில் அடையாளமிடுகிறேன்
நெருப்பாலான பெருக்கல் குறிகளால்.
என் உதடுகள் அதன் குறுக்கே செல்லும்: பதுங்க முயலும் ஒரு சிலந்தியாய்.
உன்னில், உனக்குப் பின்னால், தயக்கமாய், தாகத்தில் தவித்து,

மாலையின் கரைப் பகுதியில் உனக்கு சொல்ல வேண்டிய கதைகள்,
என் சோகமான மிருதுவான பொம்மையே, உன் வலியை இதமாக்கும் கதைகள்.
ஒரு அன்னம், ஒரு மரம், தொலைவில் மகிழ்ச்சியாய் ஏதோ ஒன்று.
திராட்சைகள் கனிந்த பருவம், கனிவான விளைச்சல் மிக்க பருவம்.

Monday, January 22, 2018

டென்னிஸ்

இன்னும் வெளியிடாத என் சிறுகதை ஒன்றை தில்லியில் பேராசிரியையாக உள்ள ஒரு தோழியிடம் அனுப்பி கருத்துக் கேட்டேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். வேறெதற்குமல்ல, அழகாக விமர்சித்திருக்கிறார் - கொஞ்சம் பாராட்டி, கொஞ்சம் திட்டி... (கதையின் தலைப்பு: டென்னிஸ்)

Wednesday, January 17, 2018

ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)

 Related image
ஆதவனும் சாரு நிவேதிதாவும்: நெருங்கி விலகும் புள்ளிகள்
சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்கள் ஆதவனுக்கு வெகு நெருக்கமாய் அவரை கொண்டு செல்கின்றன. பெண்ணுடலை மனமழிந்த நிலையில் அணுக முடியாமல், பல்வேறு சிக்கல்களில் மாட்டி பரிதவிக்கும் ஆண்களுக்கு அவர் பரிந்துரைக்கும் தீர்வும் மேற்சொன்ன கொண்டாட்டமும் கட்டற்ற நிலையுமே. எதையும் மிகையாக, உக்கிரமாக, தீவிர எதிர்நிலையில் இருந்து எதிர்கொள் என்கிறார் சாரு. சாருவின் பாத்திரங்களுக்கு ராமசேஷனைப் போல் தத்துவச் சரடுகளுக்கு இடையில் கால் தடுக்கும் பிரச்சனைகள் இல்லை. தர்க்க ரீதியாய் முடிவெடுக்கத் தத்தளிக்கும் நெருக்கடியை நவீன உளவியல் cognitive dissonance என்கிறது. சாருவிடம் இது இல்லை. அவரது பாத்திரங்கள் பகுத்தறிவு ஜென்மங்கள் அல்ல. அவர்கள் சிந்தனா தளத்தில் இருந்து விலகி ஆற்றொழுக்கு போன்ற உணர்வுத்தளத்தில் இயங்குகிறார்கள். இதுவே ஆதவனுக்கும் சாருவுக்குமான ஒரு முக்கிய வித்தியாசம்.

Monday, January 15, 2018

அஞ்சலி அஞ்சலி

 Image result for obituary cartoon
ஞாநியின் மறைவை ஒட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் குறிப்புகள் நம் பேஸ்புக் டைம்லைனில் தோன்றி கண்ணீர் சிந்தின, மெல்ல அழுதன, கையைப் பற்றி அழுத்தின. நான் ஒரு நண்பரிடம் ஞாநி ஏற்படுத்தியுள்ள சமூகத் தாக்கத்தை, அபாரமான நட்பு வலையை, அவர் சம்பாதித்த நற்பெயரைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்நண்பர் சில நொடிகள் அமைதியாகி விட்டு சட்டெனக் கேட்டார்: “இவ்வளவு நாளும் இந்த அஞ்சலிக் குறிப்பாளர்கள் எங்கிருந்தார்கள்? அவர் உயிருடன் இருந்த போது அவரைப் பற்றி மிகக் குறைவான பாராட்டுரைகளே எழுதப்பட்டன. அதிகமும் அவரை விமர்சித்தும் கண்டித்தும் எதிர்த்துமே எழுதினோம். அவர் இல்லாமல் ஆன பின் எவ்வளவு ஆயிரமாயிரம் சொற்களை மாலை மாலையாய் அவர் பிம்பத்தின் மேல் சூட்டுகிறோம். ஏன் இந்த பாசாங்கு? ஏன் மரணத்தில் மட்டுமே ஒரு மனிதன் மதிப்பு பெறுகிறானா?”
 எனக்கு சட்டென விக்கித்து விட்டது. நானும் இப்பட்டியலில் சேர்வேன். ஒரு மனிதர் மறைந்த பின்னர் எல்லா கசப்புகளையும் அல்லது தயக்கங்களையும் கடந்து அவரை பாராட்டி அன்பைப் பொழிவது எளிதாகிறது. தமிழில் வாழ்ந்து மறைந்த அத்தனை ஆளுமைகளுக்கும் இது பொருந்தும். ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றி சொற்களை உருவாக்க நம் விரல்கள் கீபோர்டில் நர்த்தனமிட தொடங்குகின்றன. இது ஏன்?

ஞாநியின் மறைவு: வீரியமும் நெகிழ்வின்மையும்


 
நமது தோள் பற்றி நின்று அனைத்தைப் பற்றியும் அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் நம் தோளை அணைக்கையில் அவருக்குப் பின் இன்னும் ஆயிரம் கைகள் இதே போல் அரவணைத்து நிற்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சட்டென அந்நண்பரின் கை விலகும் போது நாம் எடையற்று, இலக்கற்று, இடமற்று போய் விட்ட அச்சமும் பதற்றமும் ஏற்படுகிறது. ஞாநியின் இழப்பு அப்படியான ஒன்று.

Monday, January 1, 2018

”பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?” – கயல்விழி கார்த்திகேயன்

Image result for பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா
ஒரு புத்தகத்தை முழுமூச்சாக படித்து முடித்து மாதங்கள் ஆகின்றன. 2018ம் அபிலாஷும் அதற்கு ஒரு முடிவு கொணர்ந்திருக்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம்: வாம்மா மின்னல்

 Image result for rajinikanth politics
ரஜினி தான் சொன்னது போல் அதிகார பூர்வ அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். ஏற்கனவே நான் இது குறித்து எழுதிய போது ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் சரியாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே கட்சிப் பணியை துவக்குவார்கள் என சொல்லி இருந்தேன். ரஜினி இப்போது வெளிப்படையாக அதை ஒத்துக் கொண்டிருக்கிறார். என் சிற்றறிவுப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் கட்சியை கட்டமைத்து, பல அடுக்கு நிர்வாகிகள், தலைவர்களை நிறுவி, கட்சியின் கொள்கையை விளக்கி, ஆளுங்கட்சிக்கு எதிராய் அறிக்கைகள் விடுத்து போராட்டங்கள் செய்து தம்மை நிறுவிக் கொண்டு ஆற அமர தேர்தலுக்கு தயாராகவே ஒரு வருடமாவது ஆகும். விஜயகாந்த் தன் கட்சியை வளர்க்க ஒரு வருடத்துக்கு மேலாகவே எடுத்துக் கொண்டார். ஆனால் ரஜினி இப்போதைக்கு தன் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கிற பணியை மட்டுமே எடுத்துக் கொள்ளப் போகிறார். எந்திரன் 0.2, காலா ஆகிய சினிமாப் பணிகளை முடித்து விட்டு பொறுமையாய் அரசியலில் அவர் இறங்குகிற விதத்தை பார்த்தாலே அவருக்கு வெற்றி பெற்று ஒரு சின்ன எதிர்க்கட்சித் தலைவராகும் இலக்கு கூட இல்லை எனத் தெரிகிறது.

இயக்குநர் ஸ்ரீகணேஷின் ஆளுமை

 Image result for director sri ganesh

இயக்குநர் ஸ்ரீகணேஷுடன் சில நாட்கள் பழக சமீபத்தில் ஒரு வாய்ப்பு அமைந்தது. அவர் எங்களது கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையின் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரது ஆரவாரமற்ற சுபாவம், எளிமை, பிரியமான அணுகுமுறை மாணவர்களை பெரிதும் கவர்ந்தது. மாதம் லட்சக்கணக்கில் பணத்தை கொண்டாட்டத்துக்காக இறைக்கும் மாணவர்கள் ஒரு முக்கியமான இயக்குநர் ஸ்லிப்பர் செருப்பணிந்து மேடையேறி தன்னடக்கத்துடன் பேசியதைக் கண்டு நெகிழந்து விட்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் மாணவர்கள் தொடர்ந்து வந்து ஸ்ரீகணேஷின் இந்த பணிவை பாராட்டிக் கொண்டே இருந்தனர். இந்தியர்களின் ஆழ்மனத்தில் எப்படி எளிமையானவர்கள்  மீது ஒரு தனி மதிப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, பெரும் செல்வந்தர்கள் கூட பணத்தை, புகழை, செல்வாக்கை கைவிடுகிறவர்களைக் கண்டால் எப்படி நெகிழ்ந்து காலில் பணிகிறார்கள் எனும் விஷயம் எனக்கு என்றுமே ஆச்சரியமளிக்கும் ஒன்று. இதை நான் அன்று நேரடியாகவே காணுற்றேன்.

”பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?” - இயக்குநர் ஸ்ரீகணேஷ் அறிமுக உரை