Monday, October 26, 2015

தென்னாப்பிரிக்க தொடர் இழப்புக்கு தோனி சொல்லும் காரணங்கள்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் 438 ஓட்டங்களை தென்னாப்பிரிக்கா எடுத்து பெரும் வெற்றியை பெற்றது. இந்தியா தொடரை இழந்தது. தோனி இதற்கு இரு காரணங்களை முன்வைக்கிறார். 1) இந்தியாவில் விக்கெட் வீழ்த்துகிற சிறந்த சுழலர்களோ வேகவீச்சாளர்களோ இல்லை. வேகமாய் வீசுபவர்கள் (உமேஷ் யாதவ் போல) வெறுமனே ரன்களை மட்டுமே கொடுக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க தெரியவில்லை. 2) அக்ஸர் பட்டேல், ஜடேஜா மற்றும் பின்னியை தவிர நம்மிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை.

Sunday, October 25, 2015

காதல்

என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல்.

சகிப்பின்மை பற்றி மற்றொரு பார்வைGermaine Greer talking at the Hay Festival Cartagena in January 2011
இன்றைய ஹிந்துவில் ஹசன் சரூர் சகிப்பின்மை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார் (Strident Sensitivity Gags Free Speech). சகிப்பின்மை என்றாலே நாம் அதை வலதுசாரிகளுடன் அடையாளப்படுத்துகிறோம். ஆனால் பிரிட்டனில் இன்று இடதுசாரிகள் எப்படி சகிப்பின்மை அற்றவர்களாய் மாறி வருகிறார்கள் என ஹசன் சரூன் பேசுகிறார். ஜெர்மெய்ன் கிரெய்ன் (Female Eunuch எழுதியவர்) எனும் பெண்ணியவாதி “பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆண் ஆணாகவே இருக்கிறான். அவன் பெண் அல்ல” என்று ஒரு கருத்து சொல்கிறார். உடனே அவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவர் ஒரு “திருநங்கை வெறுப்பாளர்” என சித்தரிக்கப்படுகிறார். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு அளிக்கவிருந்த கௌரவப் பட்டம் ஒன்றை ரத்து செய்கிறது. கார்டிப் பல்க்லைக்கழகத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரையை நூற்றுக்கணக்கான முற்போக்காளர்கள் போராடி தடை செய்கிறார்கள். தன் மீதான துவேசமும் தாக்குதல் சாத்தியங்களும் அதிகமாகி வருவதால் இனி பாதுகாப்பு உறுதி செய்யப்படாத பட்சத்தில் தான் எங்குமே சென்று பேசப் போவதில்லை என கிரெய்ன் தெரிவித்துள்ளார். இதற்கும் புதிய தலைமுறையில் பா.ஜ.க விடுத்த மிரட்டலுக்கு பின் ஞாநி கூறியதற்கும் அதிக வேறுபாடில்லை.

Wednesday, October 21, 2015

வெங்கட் சாமிநாதன்திரு.வெங்கட் சாமிநாதன் மறைந்தார். அவருக்கு என் துயரார்ந்த அஞ்சலி. வெங்கட் சாமிநாதனுக்கு இரு முகங்கள். ஒன்று உக்கிரமானது. கண்ணை மூடி வாளை சுழற்றும் போர் வீரனுக்கு உரியது. இன்னொன்று மென்மையானது. கனிவானது.

Monday, October 19, 2015

எ.கெ ராமானுஜனும் மனுஷ்ய புத்திரனும்
உறைந்த வாழ்வு – எ.கெ. ராமானுஜன்

மதிய உணவு முடிந்து
அவள் சென்ற பிறகு, சற்று நேரம்
வாசித்தேன்.
ஆனால் திடீரென மீண்டும்
பார்க்க தோன்றியது
கண்டேன்
பாதி தின்று வைத்த
சேண்டுவிச் ரொட்டி,
லெட்யூஸ் மற்றும் சலாமி,
எல்லாம் அவள் கடியின்
அமைப்பை சுமந்தபடி

Saturday, October 17, 2015

ஸ்டாலினும் இந்துமதமும்

DMK treasurer M.K. Stalin with temple priests in Thanjavur on Thursday
ஸ்டாலின் தனது “நமக்கு நாமே” சுற்றுப்பயணத்தின் போது தஞ்சாவூரில் புரோகிதர்களை சந்தித்து அவர்களின் வேண்டிகோள்களுக்கு செவி கொடுத்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இப்படம் இப்போது சமூகவலைதளங்களில் உலவி வருகிறது. செய்தியிலும் இடம்பிடிக்கிறது. இயல்பாகவே ஒரு சாரார், இதை வைத்து தி.மு.க கொள்கையில் இருந்து தடம் புரண்டு விட்டது என்றும், இரட்டை வேடம் போடுகிறது என்றும் கடுமையாய் விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது திமுகவினர் கலந்து கொண்டதும், ஸ்டாலின் அதை ஆதரித்ததும் கூட சலசலப்புக்கு உள்ளானது. இதை நாம் எப்படி பார்க்க வேண்டும்?

Friday, October 16, 2015

மதவாத அரசை எதிர்க்க ஒரு இடதுசாரி அமைப்பை தாக்கலாமா?இதுவரை தமிழில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், ரகுநாதன், சு.சமுத்திரம், பொன்னீலன், அப்துல் ரகுமான், தி.க.சி, சிற்பி, மேலாண்மை பொன்னுசாமி, புவியரசு, சு.வெங்கடேசன், டி.செல்வராஜ் என கணிசமானோர் இடதுசாரிகள் அல்லது இடதுசாரி சாய்வு கொண்டவர்கள். இவர்கள் போக எந்த நேரடி அரசியல் சார்பும் அற்ற அசோகமித்திரன், .க.நா.சு போன்ற இலக்கியவாதிகள்/ கலாச்சார நவீனத்துவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கல்கி, ந.பா போன்ற பிரபலங்களும், பின்னர் பாரதிதாசன் போன்ற திராவிட ”போர்வாளும்”, அதன் பிறகு மு.மேத்தா போன்ற சினிமாக்காரர்களும் விருதை பெற்றாலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் அகாடெமியில் இடதுசாரிகளின் பிடி வலுத்துள்ளது.

புழுவை சாப்பிடும் சிங்கம்

மனிதர்கள் பற்றின நம் புரிதல் நாம் பார்க்கிறவர்களிடம் இருந்து உருவாகிறது. என்னுடன் இருப்பவர்கள் பளிச்சென்று புது சட்டை போட்டால் நான் சாயம் வெளுத்த சட்டை போடுவது பற்றி அவமானமாய் உணர்வேன். இப்படித் தான் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒரு தரத்தை நமக்காய் நிர்ணயிக்கிறோம். அதன்படி நம்மை நாமே மதிப்பிடுகிறோம்.

கறுப்பு பூனை லாஜிக்
முழுக்க வெள்ளை நிறம் அடிக்கப்பட்ட ஒரு அறை. அங்கே சுவரை ஒட்டி ஒரு கரும்பூனை அமர்ந்திருக்கிறது. அந்த அறையில் இரண்டு கரைவேட்டிகள் வருகிறார்கள். ஒருவர் தி.மு.க. இன்னொருவர் அ.தி.மு.க. பூனையின் நிறம் என்னவென்று அறிந்து வரும் படி தத்தம் கட்சி தலைமை அவர்களை அங்கு அனுப்பி உள்ளது. இரண்டு பேரும் பார்த்து விட்டு பூனையின் நிறம் கறுப்பு என்று ஒரே போல் போய் சொல்கிறார்கள். திமுககாரரை பார்த்து கலைஞர் சொல்கிறார் “அதெப்படி அதிமுக ஆள் மாதிரியே பேசுகிறாய்? நீ கட்சி தாவி விட்டாயா?”. ஜெயலலிதாவோ இன்னொரு படி சென்று கரைவேட்டியை கட்சியில் இருந்தே தூக்கி விடுகிறார். இது தான் கறுப்பு பூனை லாஜிக்.

சகிப்பின்மையும் கருத்துரிமை தடையும் மிகைப்படுத்தப்படுகிறதா?பா.ஜ.க அடிப்படையில் வன்முறையை ஊக்குவிக்கும் கட்சி. அவர்களின் முதல் போராளியே கோட்சே தான். அவர்கள் காந்தியின் படுகொலைக்கு பின் தில்லியை ஒட்டின கிராமங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அன்பு, கருணை, சகிப்புத்தன்மை ஆகியவை இந்துக்களை பேடியாக்கும் என்பது அவர்கள் கருத்தியல். எல்லா கட்சிகளின் தேர்தல் அரசியலிலும் வன்முறை உண்டு என்றாலும் பா.ஜ.க வன்முறையை ஒரு கருத்தியலாக முன்வைக்கும். “நாட்டை விட்டு போகாவிட்டால் உன்னை அடிப்போம்” என நேரடியாகவே அதன் தலைவர்கள் சிறுபான்மையினர் நோக்கி கூவுவார்கள். ஆக பா.ஜ.கவின் அரசியல் வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது தான். இயல்பாகவே பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் போது வன்முறை கருத்தாக்கம் முன்னிலைப்படுகிறது. குறிப்பாக உ.பி, பிகார் போன்ற மாநிலங்களில் அவர்கள் மக்களை இந்து-இஸ்லாம் என பிரித்து மதவாத உணர்வுகளை கிளர்த்தி தேர்தலில் ஓட்டுக்களாக வெறுப்பை அறுவடை பண்ண நினைக்கிறார்கள். அதனால் தான் பா.ஜ.க வலுப்பெற்றுள்ள வட மாநிலங்களிலும் கர்நாடகா போன்ற இந்துத்துவா தீவிரமாய் பரவியுள்ள மாநிலத்திலும் சிறுபான்மையினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மூன்று முற்போக்காளர்கள் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை நடந்தது.

Thursday, October 15, 2015

வாங்க இங்கிலிஷ் பேசலாம் 5தினமணியில் நான் எழுதி வரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரின் ஐந்தாவது பகுதி இது. Toddler, toddle, stagger, shuffle போன்ற விதவிதமான நடக்கும் பாணிகள் பற்றி பேசியிருக்கிறேன். ஈபேப்பர் லிங்கை இங்கே தந்திருக்கிறேன். அதில் முழு பத்தியையும் படிக்கலாம்.சஹீர்கான் ஓய்வுசஹீர்கான் ஓய்வு பெறுகிறார். உலகின் தலைசிறந்த இடதுகை வீச்சாளர்களில் ஒருவர். வஸீம் அக்ரமைப் போல் இவரும் ஒரு கலைஞர். நான் அவரை அக்ரமும் வெகுஅருகில் வைப்பேன். வேகமும் தந்திரமும் அறிவும் பந்தை பலவிதமாய் பயன்படுத்தும் திறனும் கொண்டவர். ஸ்ரீநாத் இவரைப் போன்று முக்கியமான வேகவீச்சாளர் என்றாலும் சஹீரின் ஆவேசமும் மூர்க்கமும் அவரிடம் இல்லை. நம்முடைய வேகவீச்சாளர்கள் பொதுவாய் சாதுவாக தோன்றின காலத்தில் அவர் நிறைய ஆவேசத்தையும் தந்திரத்தையும் அறிமுகம் செய்தார். சஹீரின் வழித்தோன்றலாய் முகமது ஷாமியை தான் பார்க்கிறேன். சஹீர் நமது இளந்தலைமுறை வேகவீச்சாளர்களின் பயிற்சியாளராய் பங்காற்றினால் சிறப்பாய் இருக்கும்.

Wednesday, October 14, 2015

நயன்தாரா சாஹல் போல் நாமும் விருதை திரும்ப அளிக்கலாமா?


நரேந்திர தலோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் வலதுசாரிகள் சிலரால் கொல்லப்பட்டதையும், தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாய் சொல்லி ஒருவரை கொன்றதையும் கண்டிக்கும் விதமாய் எழுத்தாளர் நயன்தாரா சாஹல் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய் அகாதெமி விருதை திரும்ப அளிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் பிரதமர் மற்றும் மத்திய அரசின் மீதான தன் கண்டனங்களை தெரிவிக்க விரும்புகிறார். ஏற்கனவே இது போல் எழுத்தாளர்கள் விருதை திருப்பி அளிப்பது நடந்துள்ளது. சார்த்தர் தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை மறுத்தார். நோபல் பரிசு என்பது அரசியல் ரீதியாய் முடிவு செய்யப்படுகிற ஒன்று. அமெரிக்காவின் சரவ்தேச உறவுநிலைகள் தான் ஒவ்வொரு வருடமும் யாருக்கு அது வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் சாகித்ய அகாதெமி விருது அப்படி அல்ல. இதுவரை எனக்குத் தெரிந்து அரசு நேரடியாய் அவ்விருதின் தேர்வில் தலையிடுவது இல்லை. தமிழை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி இப்போதும் சரி இடதுசாரிகளின் செல்வாக்கு தான் சாகித்ய அகாதெமியில் வலுவாக உள்ளது. அதற்காக இடதுசாரி படைப்பாளிகள் தான் தேர்வாகிறார்கள் என்றில்லை. நாஞ்சில் நாடன் நல்ல உதாரணம். அதனால் சாகித்ய் அகாதெமி விருதை ஒருவர் அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கும் வண்ணம் திரும்பி அளிப்பது அபத்தமான பொருத்தமற்ற செயல்.

எழுத்தாளன் கொல்லப்பட்டால் மட்டும் தான் போராடுவோம்

டைம்ஸ் நவ் டிவி விவாதத்தில் ஒரு ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. கடந்த பத்து வருடங்களில் நடைபெற்ற குஜராத், அசாம், உ.பி என பல்வேறு மாநிலங்களில் நடந்த ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கு ஏன் எழுத்தாளர்கள் இது போல் தீவிரமாய் எதிர்வினையாற்ற வில்லை? இதற்கு தாருவாலா மற்றும் ஷோபா டே இருவரும் ஒருமித்த குரலில் பதிலளிக்கிறார்கள் “ஏனென்றால் அப்போது எழுத்தாளர்கள் சாகவில்லை”. அப்படி என்றால் மற்றவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? 

என் உண்மை நிறம்
சாஹலை எதிர்த்ததும் நான் பா.ஜ.க ஆதரவாளன், என் உண்மையான நிறம் வெளியாகி விட்டது என சிலர் கூறுகிறார்கள். நான் இந்துத்துவாவை விமர்சித்து எழுதியுள்ள பதிவுகள் இவை. இனி நீங்கள் இதுவரை இந்துத்துவாவுக்கு எதிராய் என்னவெல்லாம் எழுதியுள்ளீர்கள் என பதிவு போடுங்கள்.

Tuesday, October 13, 2015

மாட்டுக்கறி விருந்து போராட்டங்களின் பிரச்சனை என்ன?

என்னுடைய சமீபத்திய பகடியில் மாட்டுக்கறி உண்பதை எதிர்ப்பு வடிவமாய் சிக்கலை குறிப்பிட்டிருந்தேன். மாட்டுக்கறி உண்பவர்களை நான் கொச்சைப்படுத்துகிறேனா என சிலர் கேட்டார்கள். அவர்களுக்கானது இந்த விளக்கம்.

ஏன் நயன்தாரா சாஹலின் செயற்பாட்டை எதிர்க்கிறேன்?நயன்தாரா சாஹல் தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப அளிக்க முன்வந்ததை தொடர்ந்து இப்போது உ.பி., தில்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வேறு சில விருதாளர்களும் அதே போல் விருதை திரும்ப அளிப்பதாய் கூறி உள்ளார்கள். சாஹல் இன்று அகாதெமிக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலையை அளித்து தனது பரித்தொகையையும் திரும்ப அளித்தார். தமிழக எழுத்தாளர்களில் சிலரும் கூட இவ்விதம் விருதை திரும்பத் தர விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இதை ஒட்டி மீடியாவில் ஒரு அலை கிளம்பி உள்ளது. இந்த எழுத்தாளர்கள் தியாகிகள் என்றும், துணிச்சலாய் அரசை எதிர்ப்பவர்கள் என்றும் ஒரு சித்திரம் மக்களிடம் தோன்றி உள்ளது. பொதுப்படையாய் இது ஒரு நேர்மறையான, வரவேற்கத்தக்க அரசியல் மாற்றமாய் தோன்றலாம். ஆனால் அது உண்மை அல்ல. நாம் இந்த சந்தர்பத்தில் செண்டிமெண்டலாய் யோசிக்கலாமல் நிதானமாய் இச்செயல்களின் பலன் என்னவாக இருக்கும் என அலச வேண்டும்.

Monday, October 12, 2015

என்ன தான் சாப்பிடுவது?
 கல்கி ஆசிரியர் வெங்கடேஷை போன முறை சந்தித்த போது மனிதர் பென்சில் போல் இளைத்திருந்தார். நாற்பது வயதுக்கு மேல் இளைப்பவர்களின் கண்களில் ஒரு குறும்புத்தனம் மிளிரும். இளமையின் பளபளப்புடன் இருந்தார். என்ன பண்ணினீர்கள் எனக் கேட்டதற்கு “டயபடீஸ் ரிவர்சல் டயட்டில்” இருக்கிறேன் என்றார். நான் இந்த டயட் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். அது என்ன?
அவர் முழுக்க அரிசி, கோதுமை உணவை நிறுத்தி விட்டார். தேங்காய், காய்கனி, சிறுதானியங்கள் மட்டும் புசிக்கிறார். அவருடைய ரத்த சர்க்கரையும் இதனால் வெகுவாய் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாய் சொன்னார். அவர் பார்க்க ஆரோக்கியமாய் இருந்தார். நான் சில நாட்களாய் இது போன்ற புது வகை உணவு பரிந்துரைகள் பற்றி படித்தும் யுடியூப்பில் காணொளிகள் பார்த்தும் வருகிறேன்.

Sunday, October 11, 2015

தோனி, கோலி × கலைஞர், ஸ்டாலின்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்று விட்டது. அதுவும் சுலபமாய் ஜெயிக்க வேண்டிய நிலையில் இருந்து சொதப்பலாக ஆடி வெற்றியை தென்னாப்பிரிக்காவுக்கு பரிசளித்தது. ரோஹித் தன்னந்தனியாய் 150 அடித்து முயன்றாலும் இன்னொரு பக்கம் கோலியில் இருந்து தோனி வரை யாராலும் ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை. கோலி பொதுவாய் மூன்றாவது எண்ணில் ஆடி பழக்கப்பட்டவர் என்பதால் 4வது எண்ணில் தாமதமாய் அவர் ஆட வந்ததும் தன்னுடைய புது பாத்திரத்தில் அவரால் சுலபமாய் பொருந்த இயலவில்லை. முன்பு கோலி 20 பந்துகளில் 15 அடித்து விட்டு பொறுமையாய் அவ்வப்போது பவுண்டரி அடித்து அரை சதத்துக்கு சென்று அங்கிருந்து இன்னிங்ஸை கட்டமைப்பார். ஆனால் 4 அல்லது 5 என்பது வேறு விதமான ஆட்டத்தை கோருகிறது. நீங்கள் வந்ததுமே 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆட வேண்டும். தேவையென்றால் சற்று நேரத்தில் 150 அல்லது 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடிய வேண்டும். இந்த இடம் தோனி அல்லது ரெய்னாவுக்கு கச்சிதமானது. ஆனால் தோனியின் ஆட்டநிலை மிக மோசமாய் உள்ளதாலும், ரஹானே 4இல் ஆடுவதில் தோனிக்கு நம்பிக்கை இல்லை என்பதாலும் ஆட்ட வரிசையில் நிறைய குழப்படிகள் ஏற்பட்டுள்ளது.

Friday, October 9, 2015

டி.வி ஷோவில் இஸ்லாமியர்களை எதிரிகளாய் கட்டமைக்கும் பா.ஜ.க செயல்திட்டம்நேற்று புதிய தலைமுறையில் எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளிப்பது பற்றின நேர்பட பேசு பார்த்தேன். அருமையான விவாதம். குணசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிற விதம் பாராட்டத்தக்கது. பா.ஜ.க சார்பில் வந்திருந்த ராமசுப்பிரமணியனுக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமான சண்டை தான் அல்டிமேட். அதை மிகவும் ரசித்தேன். மனுஷ்யபுத்திரன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஒருவரிடம் மோதி பார்த்ததில்லை. பா.ஜ.க சார்பாளருக்கும் ஒருவிதத்தில் இது தேவைப்படுகிறது. அவர்கள் தாம் ஒரு இஸ்லாமியருடன் மோதுகிறோம் எனும் செய்தியை கட்சிக்காரர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறார்கள். அதன் மூலம் இந்து – இஸ்லாம் எதிரிடையை இங்குள்ள கருத்துச்சூழலில் நிறுவ விரும்புகிறார்கள்.

மாட்டுக்கறியும் பிரமிளின் நண்பரும்
இன்று ஆசிய பண்பாட்டு ஆய்வு கழகத்தில் நுகர்வு பண்பாடு பற்றி நடந்த கருத்திரங்கில் கலந்து கொண்டு பேசினேன். நிறைய சுவாரஸ்யமான பேச்சுகளை கேட்க முடிந்தது. சென்னை பல்கலையின் மானுடவியல் துறைத்தலைவர் சுமதி தான் 2000இல் யுனிசெப் புரோஜெக்டுக்காக செய்த ஒரு ஆய்வு பற்றி பேசினார். திண்டுக்கல் பகுதியில் உள்ள தலித் சமூகத்தினரின் உணவு பழக்கம் பற்றியது ஆய்வு. இச்சமூகத்துக்கு பெண்களில் கர்பிணிகளின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் இரும்பு சத்தும், ஹியுமோகுளோபின் அளவும் மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு இரும்பு சத்துள்ள மாத்திரைகளை கொடுப்பதும் முருங்கைக்கீரை போன்ற உணவுகளை பரிந்துரைப்பதும் புரோஜெக்டின் நோக்கம். இப்பெண்களின் உணவில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் குறைவு. அவர்கள் தினமும் மாட்டுக்கறி அல்லது மீன் குழம்பு வைக்கிறார்கள். இதில் புளி கட்டாயம் சேர்க்கிறார்கள். இதற்கு காரணம் புளியில் சமைக்கும் உணவு எளிதில் கெடாது என்பது. குளிர்பதனப்பெட்டி இல்லாத நிலையில் அடுத்த நாள் பழைய சோற்றில் இந்த குழம்பைத் தான் ஊற்றி பிசைந்து பிள்ளைகளை உணவாக அளிப்பார்கள். காய்கறி குழம்பு வைத்தால் அடுத்த நாள் கெட்டுப்போவதுடன் சுவையும் இல்லாதாகிறது. ஆனால் மாட்டுக்கறியோ மீனோ அடுத்த நாளானதும் சுவை இரட்டிப்பாகிறது என இப்பெண்கள் கூறுகிறார்கள்.

Thursday, October 8, 2015

தமிழ் எழுத்தாளன் விருதை திரும்ப அளிக்க வேண்டுமா?
இதுவரை மூன்று எழுத்தாளர்கள் மோடி அரசை கண்டித்து தம் சாகித்ய அகாதெமி விருதை திரும்ப கொடுத்திருக்கிறார்கள். விருதை திரும்ப அளிக்கும் மனநிலை ஒரு தொற்றுநோய் போல், தற்கொலை விருப்பம் போல் பரவுகிறது. தமிழில் எழுத்தாளர்களும் திரும்ப கொடுப்பார்களா என கேட்கிறார்கள். எனக்கு இது ஒரு கவன ஈர்ப்பு, குறியீட்டு நடவடிக்கையை நாம் தவறாய் புரிந்து கொள்வதன் விளைவு என தோன்றுகிறது.
நான் ஏற்கனவே சாஹல் பற்றி ஒரு விசயம் எழுதியிருந்தேன். கூட்டங்கூட்டமாய் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட இரு வருடங்கள் கழித்து காங்கிரஸ் அரசாட்சியின் போது அவர் எந்த தயக்கமும் இன்றி சாகித்ய அகாதெமி விருதை பெற்றார். இத்தனைக் காலமும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகளின் ஆட்சிகளில் பல தவறுகள், குற்றங்கள், பாதகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சாஹல் அப்போதெல்லாம் பொறுத்தார். இப்போது அவர் அவநம்பிக்கையின் உச்சிக்கு சென்று விட்டார். இந்த அரசுடன் விவாதிக்கவே முடியாது எனும் கசப்புணர்வில் அவர் விருதை திருப்பி அளிக்க போவதாய் சொல்கிறார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் விருதை திரும்ப அளிக்கிறார்கள்.

Wednesday, October 7, 2015

இசையின் டினோசர் கவிதைகள்
 இசையின் கவிதைகளை படிக்கையில் அவர் சமகாலத்து கவிதை தடத்தில் இருந்து விலகி இருப்பதை காணலாம். இன்றுள்ள அவநம்பிக்கையும், அக்கறையின்மையும் கலந்த பண்பாடு அவரிடம் இல்லை. எதையும் தயக்கமின்றி பகடி மூலம் மேலோட்டமாய் கடந்து போகும் காலத்தில் வாழ்கிறோம். நமக்கு மிக முக்கியமானவை கூட மிக முக்கியமாக சாதாரணமானவை. ஒரு முக்கியமான விசயத்தை கவனத்தோடு பார்த்து அறிந்து உதறி விடுகிறோம். இது இன்றைய மொழியில் ஒரு கொந்தளிப்பை, சிதறலை, அலைவை ஏற்படுத்தி இருக்கிறது.

நயன்தாரா சீஹல்லின் விருது அதிர்ச்சி மதிப்பு போராட்டம்தாத்ரியில் இந்துத்துவா அரசியல்வாதிகள் நடத்திய படுகொலையை கண்டித்து நயன்தாரா சாஹல் தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப அளிப்பதாய் கூறியுள்ளார். அவர் 1987இல் விருது பெற்றார். அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு தான் சீக்கியர்களை காங்கிரஸ் அரசு கொடுமையான முறையில் வேட்டையாடி கொன்றது. அந்த படுகொலைகளைக் கண்டித்து ஏன் சாஹல் அப்போதே விருதை வாங்க மறுக்கவில்லை. அதன் பின்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், மதக்கலவரங்கள் நடத்தப்பட்ட போதும் அவர் ஏன் விருதை திரும்ப அளிக்கவில்லை ஆகிய கேள்விகளை ராஜ்திப் சர்தேசாய் இக்கட்டுரையில் எழுப்புகிறார்.

ஒரு கிளியும் டிவி சீரியல் சண்டைகளும்
மனுஷ்யபுத்திரன் வீட்டில் ஒரு கிளி உண்டு. நன்றாக பழகும். என் கையில் இருந்து கூட உணவு வாங்கி தின்றதுண்டு. ஆனால் தன்னை யாராவது சீண்டினால் எரிச்சலாகி விடும். ஒருமுறை ஒரு நண்பர் அதனிடம் ஓவராக பேசப் போய் அது கோபித்துக் கொண்டு கூண்டுக்கு திரும்பி விட்டது. மனுஷ்யபுத்திரனுக்கு ஒரே குஷி. குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே “பாருங்க ஒரு கிளிக்கு கூண்டுங்கிறது ஒரு சிறை. ஆனா உங்க கிட்ட பேசுறதுக்கு கூண்டே மேல்னு நினைச்சு உள்ளே போயிடுச்சு” என்றார்.

Sunday, October 4, 2015

விருது என்பது…
சமீபத்தில் சாகித்ய அகாதெமி கருத்தரங்குக்காய் மதுரை சென்றிருந்த போது அதில் கலந்து கொள்ள வந்த நண்பர் லஷ்மி சரவணகுமாருடன் முழுநாளும் நேரம் செலவழிக்க முடிந்தது. கூடவே ஸ்டாலின் ராஜாங்கமும், வீரபாண்டியனும் (பருக்கை நாவல்) இருந்தார்கள். மதியம் என் அறையில் சந்தித்துக் கொண்டோம். மிக சுவாரஸ்யமாய் அரட்டையும் விவாதமும் நடந்தது. லேடி டோக் கல்லூரியின் மாணவிகளின் உபசரிப்பை பாராட்டியாக வேண்டும். டீ கொண்டு வருவார்கள். டீ கப்பை வாங்க வருவார்கள். நொறுக்குத் தீனி கொண்டு வருவார்கள். தட்டை வாங்க வருவார்கள். கொஞ்சு குரலில் அவர்கள் “அண்ணா” என அழைப்பது கேட்க எனக்கு இனிமையாக இருந்தது. மற்ற மூவரும் எப்படி உணர்ந்தார்கள் எனத் தெரியவில்லை.

Saturday, October 3, 2015

"வாங்க இங்கிலீஷ் பேசலாம்" பத்தி 3தினமணியில் நான் எழுதி வரும் “வாங்க இங்கிலீஷ் பேசலாம்” தொடரின் மூன்றாவது கட்டுரை இது. இதில் வேலையில்லாதவர் என்று ஒரு பாத்திரம் வருகிறார். வேலை சம்மந்தமான சொற்றொடர்கள், புது சொற்கள், அவற்றின் பொருள் பற்றி அவர் விளக்குகிறார். வேலையில்லாமல் இருப்பது தான் ரொம்ப கஷ்டமான வேலை என்கிறார். க்ளிக் செய்து படித்து பாருங்கள் நண்பர்களே!

மாட்டுக்கறி தடையும் பிராமணியமும்இன்று சன் நியூஸ் விவாத மேடையில் மாட்டுக்கறி தடை பற்றி விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நான் இது அடிப்படையில் ஒரு சாதிய பிரச்சனை என்றேன். பா.ஜ.கவில் உள்ள பலருமே அசைவம் உண்பவர்கள். கணிசமான இந்துக்களும் அசைவர்கள் தாம். கேரளா போன்ற மாநிலங்களில் மிக அதிகமாய் மாட்டுக்கறி உண்பவர்கள் இருக்கிறார்கள். ஹைதராபாதில் இஸ்லாமியர் நோன்பை முறிக்க உண்ணும் ஹலீம் எனும் மாட்டுக்கறி கலந்த உணவை இஸ்லாமியரை விட பிராமணர்களும் இந்துக்களும் உண்பதாய் காஞ்சன்யா ஒரு பேட்டியில் சொல்கிறார். மாட்டுக்கறி பிராமணர்களுக்கு மட்டுமே ஒவ்வாமல் இருக்கிறது. ஜெயின்கள் இன்னொரு பக்கம் அனைத்து வகை அசைவ உணவுகளையும் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த இரு மிகச்சிறுபான்மை சமூக மக்களின் தேவைக்காக பா.ஜ.க ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பண்பாட்டையும் அவமதிக்கிறது. அது மட்டுமல்ல இஸ்லாமியர் மட்டுமே மாட்டுக்கறி உண்பதாய் ஒரு போலி பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறது என்றேன்.

“பயணம்”: நிறுவனம் எனும் பொறிராமநாதன் சிறுவயதில் இருந்தே நன்கு யோகா பயின்ற துடிப்பான இளைஞன். அவனுக்கு குடும்ப வாழ்வின் தளைகளில் இருந்து விடுபட வேண்டும். சமூக சேவை செய்ய வேண்டும். ஆன்மீக தேடலும் வேண்டும். இந்த விருப்பங்கள் அவனை சிவானந்தர் எனும் சாமியாரின் ஆசிரமத்தில் கொண்டு சேர்க்கின்றன. அங்கு ஸ்வாமிகளின் கீழ் அவன் யோகாவில் மேலும் நிபுணத்துவம் பெறுகிறான். நுணுக்கங்களை அறிகிறான். பரபரப்பாக செயலாற்றுகிறான். யோகா கற்பித்தல், முதியவர்கள், பழங்குடியினருக்கு கல்வி கற்பித்தல், பெண்களை யோகா வகுப்பில் சேர்த்துக் கொள்வது, ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பது, மக்கள் மத்தியில் சுமூகமாக புழங்குவது என அவனது செயல்கள் ஆசிரமத்தின் மூத்தி சன்னியாசிகளை எரிச்சலூட்டுகின்றன. அவர்கள் அவனைக் கண்டு பொறாமையும் படுகிறார்கள்.

Friday, October 2, 2015

பிறசாதி ஈர்ப்பும் கலப்பு மண குழந்தைகளும்சமீபத்தில் சாதிக் கலவரங்கள் பற்றின ஒரு டி.வி விவாதத்தின் போது ஒரு பா.ம.க பிரமுகர் ஒரு கேள்வி கேட்டார்: “ஆளாளுக்கு சொந்த சாதிக்குள்ளேயே பார்த்து காதலிச்சா என்ன? யாருக்கும் பிரச்சனை இல்லை.” இது ஒரு முக்கியமான கேள்வியாக எனக்குப் பட்டது. சாதி மீறி காதலிப்பவர்களில் பெரும்பாலானோர் கருத்தளவில் சாதிக்கு எதிரானவர்கள் அல்ல. நாளை சாதி கடந்து திருமணம் செய்தாலும் தகப்பனின் சாதியை பிள்ளைக்கு அளிப்பார்கள். அச்சாதியின் அனைத்து சடங்குகள், நம்பிக்கைகளையும் பின்பற்றி வளர்ப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் நாளை சாதி மீறி காதலித்தால் அதை கடுமையாக எதிர்ப்பார்கள். இந்தளவுக்கு சாதிக்குள் ஊறியவர்கள் எவ்வாறு சாதியை மீறி ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் மனநிலையை பெறுகிறார்கள்? இது வெறும் தற்காலிக ‘சறுக்கலா’? உணர்ச்சி மேலிடலால் நிகழ்கிற ஒன்றா? அல்லது ராமதாஸ் போன்றவர்கள் நம்ப விரும்புவது போல் பணம் பறிப்பதற்காய் இளைஞர்கள் திட்டமிட்டு நடத்தும் நாடகத்தில் பெண்கள் பலியாவதா? தமிழகத்தில் கணிசமான பெற்றோர் தம் மகளோ மகனோ தம் சாதிக்குள் மணப்பதையே விரும்புவார்கள். அவர்கள் மனதிற்கு நிச்சயம் இக்கேள்வி இருக்கும்: மிச்ச எல்லா விசயங்களில் சாதிய ரீதியாய் ’சரியாய்’ இருக்கும் தம் பிள்ளைகள் ஏன் காதலில் மட்டும் சறுக்கி ‘தவறான’ முடிவு எடுக்கிறார்கள்?