Tuesday, December 29, 2015

கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - அபிலாஷ் (தினேஷ் குமார் விமர்சனம்)

எழுத்தாளன் எதைப் பற்றியெல்லாம் எழுதலாம்?


என் நண்பர்களில் கிரிக்கெட் பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என் காதருகே வந்து “ஏன் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட் பத்தியே எழுதி தொலைக்கிறே?” என கேட்பார்கள். இத்தனைக்கும் நான் எப்போதாவது தான் கிரிக்கெட் பற்றி எழுதுகிறேன். மிச்ச நேரங்களில் இலக்கியம், உளவியல், சமூகம் போன்ற சீரியசான சமாச்சாரங்கள் பற்றியே பேனாவை தேய்க்கிறேன். ஆனால் எப்போதாவது கிரிக்கெட் பற்றி எழுதும் போது அதை சரியாக வந்து கேட்ச் பிடித்து விட்டு ஏன் நான் அவுட்டாகி விட்டதாய் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்கள்? அப்போது தான் எனக்கு இந்த கேள்வி எழுந்தது. எனக்கு ஏன் கிரிக்கெட் பித்து ஏற்பட்டது? ஏன் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். ஒரு எழுத்தாளனாக நான் என் நேரத்தை வீணடிக்கிறேனா?

மாதொரு பாகனை பதிப்பித்தவர் யார்?நேற்றிரவு சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் ஒரு வேடிக்கையான விசயம் நடந்தது. இந்து முன்னணியின் ராஜேஷ் என்பவர் தொடர்ந்து “மாதொரு பாகன்” நாவல் பெண்களை மிகவும் ஆபாசமாய் சித்தரித்த நாவல் என கதறிக் கதறி திட்டிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் “மாதொரு பாகன் நாவலின் பதிப்பாளர் யார்?”. அவர் சற்றும் கூச்சமில்லாமல் “எனக்குத் தெரியாது” என்றார். “நீங்கள் படிக்காத நாவல் பெண்களை கொச்சைப்படுத்துகிறது என எப்படி அபாண்டமாய் பழி சுமத்தலாம்?” எனக் கேட்டேன். அவர் உடனே மிகுந்த தன்னம்பிக்கையுடன் “அதெல்லாம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது பெண்களை இழிவு படுத்தும் மிக கேவலமான நாவல்” என உச்சஸ்தாயில் கத்த துவங்கினார்.

Sunday, December 27, 2015

செக்ஸ் என்பது செக்ஸ் அல்லImage result for indian girls holding hands
நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார்.

Friday, December 25, 2015

கவர்ச்சியற்ற நாயகிகளும் செக்ஸியான நாயகர்களும்


Bangalore Daysஇல் சக்கரநாற்காலியில் வரும் ஊனமுற்ற பெண்ணாக பார்வதி மேனன்

பெண்களை செக்ஸியாக காட்டுவதற்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமா வெகுவாக மெனக்கெட்டிருக்கிறது. ஐம்பதுகளின் கறுப்பு வெள்ளை படங்கள் கூட விதிவிலக்கு அல்ல. தொண்ணூறுகள் வரை தமிழகம் ஆடையை பொறுத்தமட்டில் கட்டுப்பெட்டியாகவே இருந்தது. எண்பதுகளில் ஈரத்தில் ஒட்டின ஆடையுடன் மழைநடனம் இன்றைய டாஸ்மாக் பாடல் போல அத்தியாவசிய அங்கமாய் இருந்தது. தொண்ணூறுகளில் பெண் தொப்புள் மீது அசட்டு காதல் ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்தது. பெரிய திரையில் நாயகியின் தொப்புள் சில நொடிகள் குளோசப்பாய் வருகையில் எப்படி இருக்கும் என நினைத்தால் இன்று குமட்டல் எடுக்கிறது. இன்று தொப்புள் அவ்வளவு சாதாரணமாகி விட்டது. இன்று நாயகியை கவர்ச்சியாய் காட்டுவது இயக்குநர்களுக்கு ஆகப்பெரிய சாகசம் தான். அதை விட நாயகனை செக்ஸியாய் காட்டலாம் என அவர்களுக்கு படுகிறது. குறைவான ஆடையில் வரும் நாயகிகள் இன்று செக்ஸியாய் இல்லை. நம் நாயகிகளை விட அதிக வெளிப்படையாய் ஆடையணிந்த பெண்களை சென்னையின் மேற்தட்டினர் கூடும் இடங்களில் சாதாரணமாய் பார்க்க முடிகிறது. தொண்ணூறுகளில் குலுக்கு நடனமாட தேவையிருந்த பெண்கள் இன்று அருவருப்பான நடன அசைவுகளை அவ்வப்போது செய்கிற நடன கலைஞர்களாய் அருகி இருக்கிறார்கள்.
பெண்கள் மீது கடுமையான ஆடை ஒழுக்க கட்டுப்பாடு இருந்த காலத்தில் பெண் உடல் மிகவும் செக்ஸியானதாய் தமிழர்களுக்கு தோன்றியது. ஆடைக் கட்டுப்பாடு தளர்ந்து வருகிற இந்த காலத்தில் பெண் உடல் மீதான இயக்குநர்கள் மற்றும் பார்வையாளர்களின் மோகம் வெகுவாய் குறைந்து வருகிறது. “புலியில்” ஸ்ருதிஹாசன் போல் இன்று நாயகிகள் செக்ஸியாக தோன்ற மிகவும் அருவருப்பான ஆடைகள் மற்றும் அசைவுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

எழுத்தாளனும் பிச்சைக்காரர்களும்”இந்த புத்தாண்டில் தினத்தில் உன் புத்தகம் வராதா?” என மனைவி சற்று துயரம் தோய்ந்த குரலில் கேட்டாள். நான் வராது என்றதும். “ச்சே ஒவ்வொரு வருடமும் அப்படி கொண்டாட்டமாக ஆரம்பித்து பழகி விட்டது” என்றாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை ரகசியமாய் ஒரு புரளியை கிளப்பி விட்டு அது பெரிய கதையாக ஊரெல்லாம் பரவும் போது ஒரு உள்ளார்ந்த உற்சாகம் தோன்றுமே, புத்தகம் வெளியாகிற நாட்களில் எழுத்தாளனுக்கு அப்படியான பரபரப்பு தான் இருக்கும். தமிழர்கள் எந்த புத்தகத்தினாலும் சலனப்பட மாட்டார்கள் என்றாலும் நமக்கென உள்ள ஒரு சிறு வட்டத்தில் சில அலைகள் கிளம்பும். அதை கவனிக்கவும் பின் தொடரவும் ஆர்வமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவல் வெளியான போது அதன் முழுமகிழ்ச்சியையும் புத்தகத்தின் பிரதியை ஏந்தியபடி தனியாக வீடு திரும்பும் இரவு வேளையில் தான் உணர்ந்தேன்.

தேவதச்சன் விருதும் பேட்டியும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி அவரை “ஜன்னல்” இதழுக்காய் ஒரு சிறுபேட்டி எடுத்துத் தர முடியுமா எனக் கேட்டார்கள். ஜென், தமிழ் கவிதை மரபு, அவரது கவிதைகளின் மைய குறியீடான படிக்கட்டு பற்றி நான்கு கேள்விகள் கேட்டேன். மிக அழகாய் பதில்கள் அளித்தார். என் கேள்விகள் அவருக்கு பிடித்திருந்தன. ”நேரில வாங்க, இன்னும் ஜாலியா நிறைய பேசலாம்” என்றார். ”நிச்சயம் கோவில்பட்டிக்கு வரேன்” என்றேன்.
இன்றைய தினம் தேவதச்சனை படிப்பதிலும் அவரைப் பற்றி யோசிப்பதிலும் அவருடன் உரையாடுவதிலும் உற்சாகமாய் போனது. பேட்டிக்கு நான் அளித்த தலைப்பு “தேவதச்சன் – படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதர்”.

Tuesday, December 22, 2015

வாங்க இங்கிலிஷ் பேசலாம் 15தினமணியில் நான் எழுதி வரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரில் இதுவரை புது சொற்களையும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் விளக்கி வந்தேன். கடந்த இரு வாரங்களாய் இலக்கணத்தை அறிமுகப்படுத்த துவங்கி உள்ளேன். இந்த கட்டுரையில் perfect tenseஐ எந்த சந்தர்பங்களில் பயன்படுத்த வேண்டும், பொதுவாய் மொழியில் காலம் குறித்த சிக்கல்கள் என்பது பற்றி முடிந்தவரை எளிதாய் பேசியிருக்கிறேன்.
http://epaper.dinamani.com/668379/Ilaignarmani/22122015#page/3/2

மோகன்லால்: உளவியலும் உடல்மொழியும்கமலின் நடிப்பு பற்றி ஒரு ஓரு பேட்டியில் மணிரத்னத்திடம் கேட்கிறார்கள். அவர் ”நாயகன்” படத்தில் ஒரு காட்சியை படமாக்கிய அனுபவம் பற்றி சொல்கிறார். அது ரொம்ப முக்கியமான காட்சி. அதனால் அதை டாப் ஆங்கிளில் படமாக்க நினைக்கிறார் மணிரத்னம். அது போல் பின்னணி சூழல் அமைப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆனால் கமல் நடிக்க துவங்கியதும் மொத்த காட்சியையும் அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். அதாவது ஒளிப்பதிவாளர், பின்னணி இசை அமைப்பாளர், கள அமைப்பாளர், கூட நடிப்பபவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் கமல் தன்னந்தனியாக காட்சியை தன் முதுகில் தூக்கி செல்கிறார். மணிரத்னம் இதை ஒரு சிறப்பாக வியந்தாலும் கூட இது ஒரு குறை அல்லவா எனவும் நமக்கு தோன்றுகிறது.

Saturday, December 19, 2015

முதல் குடிமகன்கள்டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் நடந்த போது காவல்துறை குடிகாரர்கள் நிம்மதியாய் குடிப்பதற்காய் பாதுகாப்பு கொடுத்ததைப் பார்த்தோம். அதை வெட்கக்கேடு என விமர்சித்தோம். இது போன்ற சந்தர்பங்களில் போலீசாரின் நிலை உண்மையில் ரொம்பவே பரிதாபம்.
என் வீட்டுப் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் உண்டு. அங்கு வரும் கூட்டத்திற்கு வாகனங்கள் நிறுத்த இடமில்லை. சிலர் சற்று தொலையில் காலி இடங்களில் நிறுத்துவார்கள். பலர் டாஸ்மாக்குக்கு எதிரிலும் பாதி சாலையிலும் ஏதோ அடிப்பம்புக்கு முன் குடங்களை அடுக்கி வைத்தது போல் நிறுத்தி விட்டு போய் விடுவார்கள். அது ஏற்கனவே குறுகலான சாலை. இதனாலே எப்போதும் டாஸ்மாக் பிஸியாக உள்ள மாலை வேளைகளில் போக்குவரத்துக்கு மலச்சிக்கல் வந்து நின்று விடும். இன்று ஒன்பது மணிக்கு நிறைய பேருந்துகள் அவ்வழி போகும் நேரம். எதிரெதிரே வந்த இரு பேருந்துகள் மேலும் நகர முடியாதபடி சாலை வரை பைக்குகள் நின்றிருந்தன. பேருந்து ஓட்டுநர் பைக்கை எடுத்து நீக்கி வைக்குமாறு கத்துகிறார். யாரும் கேட்கவில்லை. அவர் கடுப்பாகி சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்று விட்டார். முதலில் எல்லோரும் பைக்குகள் அங்குள்ள ஓட்டலில் சாப்பிடுகிறவர்களுடையது என நினைத்திருந்தார்கள். ஓட்டல்காரர்கள் உண்மையை தெளிவுபடுத்தியதும் ஓட்டுநர் பைக்குகளின் உரிமையாளர்களே வந்து நகர்த்தட்டும், அதுவரை பஸ் நகராது என்று விட்டார். ஒரே களேபரம். கடைசியில் ரொம்ப பிஸியாக பரோட்டா அடித்துக் கொண்டிருந்த மாஸ்டர் கையை கழுவி விட்டு வந்து பைக்குகளை தூக்கி தள்ளி வைத்தார்.

ஹீரோவும் ஜீரோவும்நிர்பயாவை கொன்றவர்களில் ஒருவரான பதினெட்டு வயதுக்கு கீழான குற்றவாளி விடுதலை செய்யப்படுவதை ஒட்டி தில்லியின் ஜந்தாமந்தரில் கண்டக்கூட்டம் நடக்கிறது. டி.வியில் இது ஒளிபரப்பாகிறது. ஷபானா ஆஸ்மி ஆவேசமாய் பேசி முடித்த பின் அவரது கணவர் ஜாவித் அக்தர் வந்து நிர்பயாவுக்கு நடந்த அநீதி பற்றியும் பெண்களின் நிலை பற்றியும் ஒரு கவிதை வாசிக்கிறார். பேட்டி எடுக்கும் சர்தீப் நெகிழ்ந்து போய் பாராட்டுகிறார். அடுத்து அவர் ஒரு கேள்வி கேட்கிறார் “நீங்கள் ஒரு ராஜ்யசபா எம்.பி. இளங்குற்றவாளிகளுக்கான சட்டத்தை மாற்றுவதற்கான மசோதாவை ராஜ்யசபாவில் உங்களைப் போன்றவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள். அது நிலுவையில் வந்திருந்தால் இது போன்ற குற்றவாளிகள் இப்போது சுளுவில் வெளிவே வர முடியாதில்லை தானே?”.

Friday, December 18, 2015

கல்தோசைக்காரரும் டாஸ்மாக் எதிர்ப்பாளரும்நேற்றிரவு ஒரு சின்ன கடையில் கல்தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடை முதலாளி தன் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக பார்க்கும் அந்த பாணி எனக்கு போகன் சங்கரை நினைவூட்டியது. அவர் சும்மா வானத்தை பார்வையிடும் பாணியில் லேசாய் முகவாயை தூக்கி பார்த்து தான் “கல் தோசை ரெண்டா போட்டிருட்டுமா?” என்று கேட்கையில் பல சிறுபத்திரிகை எழுத்தாளர்களை நினைவுபடுத்தினார். அது எப்படியோ போகட்டும். அவருக்கு ஒரு பழக்கம். தெரிந்தவர்கள் யாராவது கடைக்கு வந்தால் வராத ஒருத்தரைப் பற்றிக் கேட்பார். ஒரு பத்து வயது சோனிப் பெண் நைட்டி அணிந்து துள்ளலாய் குதித்தபடி பார்சல் வாங்க வந்தாள். அவளிடம் “ஏன் உன் அக்கா வரல? என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அவளோ “இது போல நூற்றுக்கணக்காண ஆண்களை பார்த்தாச்சு” என்கிற கணக்கில் ஒரு பாவனை காட்டி விட்டு பழையபடி நின்ற வாக்கி ஆடிக் கொண்டிருந்தாள்.

Thursday, December 17, 2015

அ.மாதவனுக்கு சாகித்ய அகாதெமி விருது2015ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் அ.மாதவனுக்கு வாழ்த்துக்கள். அவரது ”கிருஷ்ணப்பருந்து” ஒரு பிராயிடிய புதினம். பிராயிடின் sublimation கோட்பாட்டை நாவல் வடிவில் பரிசீலித்திருப்பார். சொல்லப்போனால் அந்நாவல் வயதான ஒருவரின் “மோகமுள்”. இளம் வயது பாபுவுக்கு பதில் ஒரு முதிர்ந்த ஒரு மனிதர். பாபு வயதில் மூத்த பெண் மீது இச்சை கொள்கிறான். இவர் தன்னை விட வயதில் குறைந்த இளம்பெண்ணை விரும்புகிறார். இரண்டு பேரும் தம் வயதுமீறின காமத்தை அடக்கிக் கொள்கிறார்கள். பாபுவுக்கு அது இசை மீதான பெருங்காதலாகவும் இவருக்கு அது அன்பும், கருணையுமாய் சமூகம் ஏற்கத்தக்க வடிவெடுக்கிறது (sublimation). கச்சிதமான வடிவில், மென்மையான அங்கதத்துடன் கூடிய எண்பதுகளுக்கே உரித்தான பாணியில் சில நல்ல சிறுகதைகளையும் அவர் எழுதி இருக்கிறார்.

Friday, December 11, 2015

பொறுப்பின்மையும் பெண்களும்
பெண்கள் வேலையில் பொறுப்பானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்றொரு நம்பிக்கை உள்ளது. நானும் என் அனுபவத்தில் அவர்களின் பணி அக்கறையையும் அர்ப்பணிப்பையும் கண்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு தேய்வழக்கும் தான். இந்த பொது பிம்பத்தை மறுத்து ஹிந்துவில் வைஷ்னா ராய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆண்களுக்கு இணையாக பொறுப்பின்மையும் சோம்பேறித்தனமும் மிக்கவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள் என்கிறார். கூடுதலாய் எடுத்ததற்கெல்லாம் கண்ணீர் சிந்தி பிரச்சனையை பெரிதாக்கி தம் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் தப்பிக்க நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறார். முக்கியமான கட்டுரை.

இருவர் (ஒரு பேஸ்புக் நாடகம்)
காலம்: ஒரு இரவு மற்றும் பகல்
இடம்: வெளியிடம் மற்றும் விர்ச்சுவல் இடம்
பாத்திரங்கள்: கலை மற்றும் ராம்

மேடையில் சின்ன இடைவெளி விட்டு நீல வண்ண நாற்காலிகள் ஒழுங்காக இடப்பட்டிருக்கின்றன. நாற்காலி கையுடன் லைக் மற்றும் ஷேர் அட்டைகள் கட்டப்பட்டுள்ளன. மேடையில் இரண்டு காலி நாற்காலிகளில் மட்டும் ஸ்பாட் லைட் விழுகிறது. மிச்ச இடம் முழுக்க அரை இருளில். இருட்டான நாற்காலியில் கலை இருக்கிறான். அவன் ஒரு மிஷ்கின் ஸ்டைல் கண்ணாடி அணிந்திருக்கிறான். நிறைய மேக் அப் போட்டு லிப் ஸ்டிக் போட்டிருக்கிறான். பென்சில் மீசை. முன் தலை முடியில் ஒன்றை சுருட்டி நெற்றியில் விட்டிருக்கிறான். கறுப்பு சட்டை மற்றும் பேண்ட். தோளில் பளீர் நிறத்தில் ஒரு ஸ்டோல். அது மஞ்சளோ நீலமோ சிவப்போவாக இருக்கலாம். உட்கார்ந்தபடி பத்து நொடிகள் தூங்குகிறான். கையில் பார்க்கிற வாகில் போன் வைத்திருக்கிறான். தூக்கத்தில் பேசிக் கொள்கிறான். சிரிக்கிறான். ஒரு கொசு அவன் முகத்தை மொய்க்கிறது. “ச்சீ” என்கிறான். பிறகு தன் கன்னத்தில் உட்கார்ந்த கொசுவை அடிக்கிறான். கண்ணைத் திறக்காமலே அதை நசுக்கி முகர்ந்து பார்க்கிறான். “உன்கிட்ட என்ன இப்பிடி கவுச்சி வாசனை வருது. ஓ அப்பிடித் தானா? (கொஞ்சலாய்) ஆங் ஆங்…” மீண்டும் தூங்கிப் போகிறான்.
மேடை விளிம்பில் ராம் இருக்கிறான். தலையில் வெள்ளைத் தொப்பி. நிறைய மேக் அப் போட்டு வெள்ளைப் பெயிண்ட் அடித்தது போல் இருக்கிறான். உதட்டில் லிப்ஸ்டிக். கலையைப் போன்றே கறுப்புக் கண்ணாடி. வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் வெள்ளை செருப்பு. கழுத்தில் வெள்ளை ஸ்டோல். சட்டைப் பாக்கெட்டில் ஒரு சிவப்பு ரோஜா. அவனும் அரைத்தூக்கத்தில் இருக்கிறான். அடிக்கடி கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்து விட்டு மீண்டும் தூங்குகிறான். கடிகாரத்தை கழற்றி வைத்து விட்டு தூங்குகிறான். பிறகு மீண்டும் எடுத்து நேரம் பார்த்து விட்டு தூங்குகிறான். பிறகு அதை எடுத்து தன் பின்புறத்துக்கு கீழ் வைத்து உட்கார்ந்து கொள்கிறான். உட்கார்ந்த வாகில் லேசாய் சாய்ந்து கடிகாரத்தை பாதி தூக்கி உடலை வளைத்து கழுத்தை நீட்டி பார்க்கிறான்.
ராம் (பார்வையாளர்களை நோக்கி): “போனை, டிவியை ஸ்டிட்ச் ஆப் பண்ற மாதிரி இந்த வாட்சை ஸ்விட் ஆப் பண்ண புடியாதா? தூங்க விட மாட்டேங்குது”. அவன் தனக்கு முன் உள்ள கற்பனைத் திரையை திரும்பப் படித்து திருப்தி ஆகி கிளிக் செய்கிறான். “க்ளிக்” என்கிறான்.
ராம்: “என்ன எவனுமே ஆன்லைனில இல்லியா?” (கற்பனைத் திரையின் வலதுபக்கம் பார்க்கிறான்) “இவ்வளவு பேரு இருக்கிறானுங்களே? ஒருத்தனும் லைக் போடக் காணோம்?”

Tuesday, December 8, 2015

எதிர்பாராத பிறந்தநாள்

சென்னை வெள்ளம் எங்கள் பகுதியில் எந்தவொரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் இல்லாமல் இருளிலும் தனிமையிலும் ஆழ்ந்ததைத் தவிர. பிற பகுதிகளின் நிலவரங்களை தெரிந்து கொள்ளவும் வழியில்லை. இரண்டு நாட்கள் வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், காய்கறியை வைத்து சமாளித்து விட்டேன். பிறகு பேச்சுத்துணை இன்றி எனக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை வந்தது. மழை ஓரளவு நின்ற பின் நங்கநல்லூரில் என் மாமியார் வீட்டுக்கு சென்று விட்டேன். அங்கே என் மனைவி, பிள்ளை இருந்தார்கள்.