Friday, April 30, 2010

மலையாள மரபும் அஜீத் மாம்பள்ளியின் தொப்பியும்அஜீத் மாம்பள்ளியின் ” லாட்ஜ்” மறைந்த மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான பி.பத்மராஜனின் ”கோர்ட் விதிக்கு சேஷம்” (நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு) என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது. இது ஒரு மலையாளப் குறும்படம். இப்படத்தின் கதை ஒரு குறும்படத்துக்கு சிக்கலானது. ஆனால் அஜீத் மாம்பள்ளி மிக சாமர்த்தியமாகவும், திறமையாகவும் கதைசொல்லலை கையாண்டுள்ளார். உதாரணமாக இக்கதை ஆரம்பத்தில் ஒரு ஆசாரியான காதலனை நமக்கு அறிமுகப்படுத்தி அவனை சுற்றியே மையம் கொள்கிறது. எளிய மனம் கொண்ட பத்தாம்பசலி அவன். ஒரு கொலைக் குற்றத்தில் வீணாக மாட்டி சிறைக்கு செல்கிறான். இந்த அநீதியை தான் கதை பேசப் போகிறது என்று நீங்கள் நினைத்தால் கதாநாயகி அறிமுகமாகி கதை ஓட்டத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவள் பாலியல் ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாதவள். “உலகின் மாபெரும் உணர்ச்சி பசி எனப்படுகிறது. அது உண்மையல்ல. உலகில் இரு உணர்வுகள் உள்ளன. ஒன்று சுகம். மற்றொன்று துக்கம்.” என்கிறாள். ஏறத்தாழ பத்மராஜனின் பெண் பாத்திரங்கள் இப்படி பாலியல் ஒழுக்கங்களை மீறி எழ எத்தனிப்பவர்களே. அவர்கள் ஆண்மையின் அதிகார தழலுக்குள் விழுந்து விடாமல் இருப்பதில் மிக கவனமானவர்கள். இப்பெண்ணும் அப்படியே. அவள் சுகத்தையும் துக்கத்தையும் தன் போக்கில் வரித்துக் கொள்ள விரும்புகிறாள். தன் முதல் காதலனோடு புணர்ந்து கிடக்கும் வேளையில் இருவருக்கும் முரண்பாடு எழுகிறது. அவள் அவனை துறந்து விட்டு அடுத்த ஆணை நாடி அவனையும் அடைகிறாள் இந்த இரண்டாம் புணர்வுக்கு பின்னர் தான் அவள் கொலை செய்யப்படுகிறாள். பழி தவறாக இரண்டாம் காதலன் மீது விழுகிறது. நிஜக்கொலைகாரன் யார் என்ற கேள்வியில் இருந்து மூன்றாவது முக்கிய பாத்திரமும் அறிமுகப்படுத்தப் பட்டு சாவகாசமாய் விளக்கப்படுகிறார். இப்படி கதையின் போக்கு கிட்டிப்புள்ளாக தெறிக்கும் போது குறும்பட பார்வையாளர்களின் கவனம் எளிதில் கலைந்து விடும். ஆனால் இயக்குனர் இறுதிவரை சுவாரஸ்யத்தை தக்கவைக்கிறார். பார்வையாளனின் ஆர்வத்தை தக்க வைப்பது இந்த திகில் கதையின் முடிவல்ல, அதன் மனவியல் நுட்பங்களும், நாடகீயமுமேகதையின் மூன்றாவது கட்டத்தில் அறிமுகமாகும் முதல் காதலன் தான் கொலைகாரன் என்பது பாதியிலேயே தெரிந்து விடுகிறது. மேம்போக்காக இது திரைக்கதையின் பலவீனம் என்று தோன்றினாலும் துப்பறிவது அல்ல படத்தின் நோக்கம் என்று சீக்கிரமே விளங்கி விடுகிறது. கொலை செய்யப்படும் பெண் தன் மதிப்பீட்டு பகிஷ்காரத்தால் சமூகத்தின் விளிம்பில் நிற்கிறாள் என்றால், அவளது முதல் காதலன் வாழ்வின் சூழ்நிலைகளால் அவ்வாறு ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்வை வாழ நிர்பந்திக்கப்பட்டவன். அவன் ஒரு அனாதை. கல்லூரியில் ஒரு பெண் அவனை ஏமாற்றி சென்று விடுகிறாள். இப்படியாக உறவுகளின் ஆதரவின்றி தொடர்ந்து தனிமைப்படும் அவனுக்கு மேற்சொன்ன பெண்ணுடன் அமையும் காதல் அட்சய பாத்திரத்தில் காணக்கிடைத்த ஒற்றை பருக்கை போலாகிறது. அவன் அவ்வுறவை வாழ்வின் ஆதாரமாக பற்றிக் கொள்கிறான். அளப்பரிய விருப்பத்துடன் நேசிக்கிறான். அவள் அவனை ஏமாற்றும் போது ஒதெல்லோ பாணியில் அதே அளவு வன்மத்துடன் அவளை கொல்ல முடிவு செய்கிறான். படத்தின் மிக முக்கியமான கட்டம் அவன் ஏன் கொல்கிறான் என்பதல்ல கொல்வதற்கான பிரயத்தனமும் அதில் அவன் காட்டும் மிதமிஞ்சிய ஈடுபாடுமே.அவர்கள் முன்னர் ரகசியமாய் சந்தித்து புணர்ந்த லாட்ஜ் அறையிலே அவள் இரண்டாம் காதலனுடன் புணர இம்முறையும் வருவாள் என்று அவன் மிகச்சரியாக ஊகிக்கிறான். ஒரு வேட்டை மிருகம் போல் அவளுக்காக காத்திருக்கிறான். காதலனுடன் அவள் புணர்ந்து முடிக்கும் வரை பக்கத்து அறையிலேயே காத்திருக்கிறான். முடித்து விட்டு இரண்டாம் காதலன் போன பின் நுழைந்து அவளை தாக்குகிறான். பிறகு உளியால் அவளது வயிற்றில் ஆவேசமாக குத்தியபடி சொல்கிறான். “மூன்றாவது ஒரு உணர்ச்சியும் உள்ளது; அது மரணம் என்பதை இப்போது தெரிந்து கொள்”. இங்கு நாம் இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்.

சமூகத்தின் ஒழுக்க மதிப்பீடுகளின் படி இவ்விருவரும் குற்றவாளின் தாம் என்றாலும் அஜீத்தின் படம் மேலும் விரிவான ஒரு தளத்தில் இவர்களை அணுகுகிறது. இருவரும் தங்களது ஆழ்மனதில் உறைந்துள்ள ஆதி உணர்வுகளை ஒட்டி நடப்பவர்கள். குற்றம் பற்றின முக்கியமானதொரு அவதானிப்பு இருவரின் இந்த செயல்பாடுகளிலும் உள்ளது. மதிப்பீடுகள் பிறழ்வதாலோ இயல்பான குற்றமனப்பான்மையை ஒருவர் கொண்டிருப்பதாலோ குற்றங்கள் நடப்பதில்லை. நமது ஒவ்வொருவர் காலடியின் வெகுஅருகிலேயே அந்த வனவிலங்கின் சுவடும் தொடர்ந்து பதிகிறது. குற்றதருணங்கள் நம்மை ஒன்றில் தன்னிச்சையாக நழுவிச் சென்று விடுகின்றன அல்லது தழுவிக் கொள்கின்றன.

அடுத்து காதலின் உச்சமான புணர்ச்சியும், வன்மத்தின் உச்சமான கொலையும் ஒரே அறையில் அதே பாத்திரங்களால் நடத்தப்படுவது முக்கியமானது. பூமத்திய ரேகையைப் போன்று ஒரு கற்பனைக் கோடு தான் இரண்டையும் பிரிக்கிறது. ஆண்மனதுக்கு இரண்டும் வேட்டையே.

”லாட்ஜ்” படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படக்கோர்வை நேர்த்தியாக உள்ளது. வண்ணங்களை இயக்குனர் பயன்படுத்தி உள்ள விதமும் பாராட்டத்தக்கது. நடிகர்களின் நடிப்பு, உடல் மொழி ஆகியவற்றில் தெரியும் பிரக்ஞை மற்றும் பிரயத்தனம் அஜீத் கவனிக்க வேண்டிய குறை. இன்ஸ்பெக்டர் விசாரணையும் போது லட்டி சுழற்றுவது, கொலைக்கு முன் வில்லன் பாத்திரம் தண்ணி அடித்து தன்னை உருவேற்றுவது, கத்தியின் கூர்மையை ஸ்லோமோஷனில் சோதிப்பது, சிகரெட்டை மிதித்து அணைப்பது போன்ற தேய்ந்த சினிமா பிரயோகங்களை அவர் தவிர்க்க வேண்டும். வசனங்களை மேலும் இயல்பானதாய், எளிதானதாய், சுருக்கமாய் எழுதவும் அவர் பழக வேண்டும். காதல் காட்சிகளில் பின்னணி இசை மிக நெகிழ்வானதாக தனக்கானதொரு மொழியுடன் உள்ளது. செறிவான இசை ஆளுமைக்காகவே இப்படத்தை தனியாக பார்க்கலாம்.

சமகால தமிழ் இயக்குனர்களின் பாணியில் இருந்து அஜீத் மாம்பள்ளி விலகி நிற்பது எளிதாகவே புலப்படும் ஒன்று. இதற்கு காரணம் மலையாள சினிமாவின் பொற்கால இயக்குனர்களின் மரபை இவர் பின்தொடர்ந்து வருவதே. பொற்கால மலையாள சினிமா அத்தனை காட்சிபூர்வமானது அல்ல. எளிமையான பாணியில் ஒரு சிக்கலான கதையை நாடகீயம் குன்றாமல் பேசுவதே அம்மரபு. அஜீத் மாம்பள்ளி அதனையே இப்படத்திலும் பின்பற்றி இருக்கிறார். இன்றைய சமகால மலையாள இயக்குனர்களின் படங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்திப்பது இந்த மரபை ஒரே அடியாக துண்டித்து விட்டு மரக்கிளைகளில் இருந்தபடி தொப்பிகளை கீழே வீசினதனாலே. அஜீத்தின் தொப்பி அவர் தலையில் பத்திரமாகவே உள்ளது. சமகால மலையாள சினிமா சூழலை நினைவில் கொள்கையில் இது மிக ஆறுதலான சேதி.


பிற விபரங்கள்

இசை: ஜோ பேபி

ஒளிக்கோவை: பிரஜீஷ்

ஒளிப்பதிவு: நெயில் ஒ குன்ஹா

கலை: சந்தீப் மன்னாடியார்

எழுத்து மற்றும் இயக்கம்: அஜீத் மாம்பள்ளி

தயாரிப்பு: ஆண்டுரூஸ் ஆண்டனி மற்றும் ஜேகப்.சி

Wednesday, April 28, 2010

கற்பழிப்பு சட்டத்தில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்கடந்த வருடம் நான் எழுதிய மனம் பிறழ்ந்தவரின் சட்டங்கள் கட்டுரையில் ஒரு முக்கியமான சட்டப்பிழையை குறிப்பிட்டிருந்தேன். ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டதாய் வழக்கு போட்டால் அதை சாட்சிகள் மூலமாக நீரூபிக்க வேண்டும் என்றொரு சட்ட கட்டாயம் இருந்தது. கற்பழிப்பாளர்கள் பொதுவெளியில் குற்றத்தை பொதுவாக நிகழ்த்துவது இல்லை என்பதே இந்த முறைமையை அபத்தமானது ஆக்குகிறது. தற்போது இந்த அசட்டு சட்ட நிபந்தனையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர் நீதிபதிகளான பி.சதாசிவம் மற்றும் ஆர்.எம் லோதா. கற்பழிக்கப்பட்ட பெண் கல்வியறிவு அற்றவர் என்ற பட்சத்தில் அவரது குற்றசாட்டை வெளிசாட்சியம் ஏதும் இன்றி நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் சமீபத்திய தீர்ப்பு. அவர்கள் இதற்கு கூறியுள்ள காரணம்: ”குற்றம் சாட்டும் எந்த பெண்ணும் பொய் சொல்லி தன் சுய-அபிமானத்துக்கு பங்கம் விளைவிக்க மாட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு பிறகு நீண்ட காலம் தயங்கிய பின்னரே அவர்கள் நீதி நாடி வருகிறார்கள். அவரிடம் ஆதாரம் கேட்பது மேலும் அவமானிப்பது போன்றதாகும்”.

இந்த தீர்ப்பு கரநாடகாவில் இரு கல்வியறிவற்ற சகோதரிகள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தரப்பட்டுள்ளது. இவ்விருவரும் சம்ப்வம் நடந்து 42 நாட்களுக்கு பிறகே வழக்கு தாக்கல செய்தனர் என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் இப்பெண்களின் குடும்பத்தில் ஆண்கள் யாரும் ஆதரவளிக்க இல்லை என்பதை மனிதாபிமானத்துடன் கருதி நீதிபதிகள் இம்மேல்முறையீடை நிராகரித்துள்ளனர்.

இந்த சட்டதிருத்தம் அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் படி செய்யலாமா என்பது நம்முன் உள்ள மற்றொரு கேள்வி. வரதட்சணை சட்டம் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே ஒரு ஆட்சேபணை உள்ளது. ஆனாலும் நம் சமூகத்தில் பெண்கள் தொடர்ச்சியாக சந்திக்கும் பலவித நெருக்கடிகள் மற்றும் பாதுகாப்பின்மைகளை கருத்தில் கொள்ளும் போது இச்சட்டத்தை அனைவருக்கும் ஆனதாக மாற்றலாம் என்பதே என் தரப்பு.

Tuesday, April 27, 2010

மத்தியான காகம்நியோன் விளக்குகளின் மேலே
கவியும் நீலவானப் புகை
புகை கக்கி அசையும் பேருந்துகள்

பேருந்து வந்து விட்டதாய்
கூட்டத்தில் இல்லாமலாகும் காதலி

வேறெதுவும் கேட்பதற்கில்லை
மத்தியான காகம்
இப்போதும் கரைவதைத் தவிர

உறவுஆற்றோர நிழலுக்கும்
நிலா வெளிச்சத்துக்கும்
என்ன உறவு

நிலவு புரளும்போது
நிழல் துடிக்கிறது

விடிகாலைக் குளியல்அதிகாலைக் குளியலின் இமைக்காத நிமிஷங்கள்

சிலுவையில் இருந்து மிகச்சற்றே நழுவிய
கிறிஸ்துவின் வெப்ப அலைகள் கலந்த வாசம்

உறங்கும் காதலியின் மார்பு நுனியில்
அரும்பி நிற்கும் நிறமற்ற பால்துளி

மனதிற்குள் ஒலிக்கும் ஒலிநாடாவெல்லாம் அறுந்து போன பின்னும்
நில்லாத பேரிசை

குளியல் முடிந்து பற்றும் போது
கல்லாய் குளிர்ந்த
கிறிஸ்துவின் பாதங்கள்

நீயில்லாத அவ்விரவுநீயில்லாத அவ்விரவு
பனிப்பொழிவால் நிரம்பி இருந்தது

அடிக்கடி ஜன்னலில் புலப்படும் வானம்
தண்ணீரில் விந்து கரைவது போல்
கோடுகளுடன் மெல்லமெல்ல விரியும் வானம்
குப்பைத்தொட்டி நாய்க்குட்டியின் ஊதிப்போன செந்நிற வயிறு போல்

ஜன்னல் கண்ணாடி எங்கும் கோடுகள் நீட்டி இணையும்
ரத்தம்
ஜன்னல் கண்ணாடி குருடாகிறது

கனிந்த மாம்பழம் ஒன்று மஞ்சளாய்
ஜன்னல் மேல் வழிந்து உருண்டு மறைந்த போது
எட்டிப்பார்த்த என்னைச் சுற்றி எங்கும்
கொழுத்துத் துணுக்குகள் பிசிபிசுப்பாய் படர்ந்த
சிவப்புத் தோல்

கை நீட்டும் குழந்தை

நாலு வருடங்களுக்கு முன் உயிர்மையில் வெளியான என் முதல் படைப்புஒளி சிந்தும் மரங்கள்
மின்னும் சாலையில் வழுக்கிப் போகும் கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள்
சாலை ஓரமாய்
கைக்குழந்தையுடன் நிற்கும்
பிச்சைக்காரியின் உள்ளங்கைக்குள் மின்னும்
ஒரு ரூபாய் நாணயம்
கை நீட்டும் குழந்தையின் கையில்
வழுக்கிப் போகும் கார்கள், பைக்குள், ஆட்டோக்கள்
பிச்சைக்காரி சாலையை கடந்த பின்னும்
தலை திருப்பி கைநீட்டும்
குழந்தை

சிறந்த பதிவருக்கான முதல் சுஜாதா விருது லேகாவுக்கு

இணையபதிவருக்கான சுஜாதா விருதுக்கு லேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது இணையதளம் yalisai.blogspot.com. தேர்ந்தெடுத்துள்ளவர் எஸ்.ராமகிருஷ்ணன். லேகா இந்த விருதுக்கு தகுதியானவரா? இயல்பாகவே எந்தவொரு விருதின் போதும் எழுப்பப்படும் இந்த கேள்வி எப்போதும் போலவே இங்கும் அனாவசியமானதே. தீர்ப்பை விமர்சிப்பதை விட நாம் லேகாவின் தளத்தை ஆய்ந்து விமர்சிக்கலாம்.எஸ்.ராவுக்கு தமிழ்ப்பதிவர்களின் எழுத்து உத்தேசம் குறித்து என்றுமே ஒரு எதிர்மறை விமர்சனம் உண்டு என்று ஊகிக்கிறேன். அவருக்கு இப்போட்டியில் பங்குபெறுவதற்காக அனுப்பப்பட்ட வலைப்பக்கங்கள் பெரும்பாலானவை வழக்கமான ஜனரஞ்சக பத்திரிகைகளை ஈ அடித்த கேளிக்கை எழுத்துக்களாகவே இருந்திருக்கும். இதுவும் ஊகமே. (நான் பங்குபெற இல்லை. விருதை விட பெரிய அங்கீகாரம் உயிர்மையில் எழுதுவது தான்). இந்த போட்டியாளர்களில் மாற்று சினிமா மற்றும் தீவிர இலக்கியம் பற்றி நிறையவே எழுதி உள்ள லேகாவை தேர்ந்தெடுத்ததன் மூலம் எஸ்.ரா பதிவர் உலகத்துக்கு ஒரு சேதி விடுக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

லேகாவின் யாழிசை தளம் எனக்கு முன்பாகவே பரிச்சயம் உண்டு. எஸ்.ரா சொலவது போல் லேகாவின் வாசிப்பு விரிவு வியப்பளிப்பது. இணைய வாசகர்களுக்கு லேகாவின் எழுத்துக்கள் தீவிர இலக்கிய நூல்களுக்கான சிறந்த சுட்டிகள்.

தீவிர இலக்கிய வாசிப்பும், அத்தகைய நூல்களை எழுத்துவழி அறிமுகப்படுத்தும் தொடர்ச்சியான அக்கறையும் கொண்ட ஒருவர் இவ்விருதை பெறப்போவதில் பளிச்சென்ற மகிழ்ச்சியே. தொடர்ந்தும் தீவிரர்களே இவ்விருதை பெறட்டும்!

ஐ.பி.எல் திறந்து வைக்கும் ஜன்னல்களும் திறவாத கதவுகளும்சஞ்சய் மஞ்சிரேக்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படி கூறுகிறார்: “முப்பத்திரண்டு வயதில் நான் ஏன் ஓய்வு பெற்றேன் என்று பலரும் கேட்டார்கள். ரஞ்சிப் போட்டிகளில் காலியான மைதானத்தில் கடுமையாக உழைத்து சதம் அடிக்க அதற்கு மேலும் நான் விரும்ப வில்லை என்பதே காரணம்”. அவர் மேலும் கூறுகிறார்: “என் காலத்தில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் நட்சத்திர அந்தஸ்து பெற நாலு பருவங்களில் ஏனும் ஆயிரம் ஓட்டங்கள் தொடர்ந்து குவிக்க வேண்டும். அப்போது தான் அவரது பெயரே மீடியாவில், ஆர்வலர்கள் மற்றும் தேர்வாளர்கள் இடையே லேசாக அடிபடத் தொடங்கும். பின்னர் அதிர்ஷடமிருந்தால் தேசிய அணிக்காக சில ஓட்டங்கள் ஆடினால் ஒரு குட்டி நட்சத்திரமாக சில காலம் இருக்கலாம்”. ஐ.பி.எல்லின் மகத்துவத்தை சஞ்சய் மற்றொரு உதாரணம் கொண்டு இப்படி விளக்குகிறார். ஐ.பி.எல்லை ஆரம்ப தொண்ணூறுகளின் டி.வி ஒளிபரப்போடு ஒப்பிடுகிறார்: “பாகிஸ்தானில் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் குவித்தேன். அந்த டெஸ்டு தொடரை நேரடியாக ஒளிபரப்ப யாரும் முன்வர இல்லை. இதனால் எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அடுத்த டெஸ்டு தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. நேரடியாக டி.வியில் ஒளிபரப்பினார்கள். நம்ப மாட்டீர்கள். அந்த தொடரில் படுமோசமாக ஆடி சொற்ப ஓட்டங்களே எடுத்தேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய போது நான் நட்சத்திரம் ஆகி விட்டேன். பார்த்த இடத்தில் எல்லாம் மக்கள் என்னை கண்டுகொண்டார்கள்; அங்கீகரித்தார்கள். கிரிக்கெட் அல்ல டீ.வி என்னை நட்சத்திரமாக்கியது”.

Monday, April 26, 2010

தமிழில் படித்து கேட்க ஒரு மென்பொருள்

ஒரு பிரதியை படித்து வாசிக்கும் மென்பொருளை text-to-read மென்பொருள் என்று அழைப்போம். ஆங்கிலத்தில் ஏகப்பட்டவை உள்ளன. இப்போது பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படியான ஒரு மென்பொருளை உருவாக்கி வருகிறார். வெள்ளோட்டம் இந்த தொடுப்பில் உள்ளது: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

இதை சொடுக்கின பின் திறக்கும் பக்கத்தில் ஒரு பெட்டி தோன்றும். அதில் நீங்கள் unicode-இல் தமிழ் எழுதலாம். அல்லது ஏற்கனவே உங்களிடம் இணையம், pdf, word-இல் உள்ள பிரதிகளை copy-paste கூட செய்யலாம். இந்த மென்பொருள் அதை ஒரு ஒலிக் கோப்பாக மாற்றி தருகிறது.

இந்த மென்பொருளின் பயன்கள் என்ன?

தமிழ் கேட்டு புரிய முடிகிற ஆனால் வாசிக்க தெரியாத இளந்தலைமுறையினரில் ஒரு பகுதியினருக்கு வாசிப்பை எளிதாக்கும்.

எழுத்தாளர்களுக்கு தங்களின் நீளமான பிரதிகளை edit செய்வது எளிதாகும்.

வாசிக்க களைப்பான பொழுதுகளில், பயணங்களில், நீண்ட வரிசைகளில் காத்திருக்கையில், யாராவது மொக்கை போட வரும் போது இதனை கேட்பது நலம் பயக்கும்.

அனுகூலம்?

பொதுவாக ஆங்கில text-to-read மென்பொருட்களில் கணினி குரல் தான் பதியப்பட்டிருக்கும். கேட்க சற்றும் பயங்கரமான எந்திர உச்சரிப்பு. மனிதக் குரல் உள்ள மென்ப்பொருட்கள் இலவசமாக கிடைக்காது. வாங்க வேண்டும். (கைவசம் உள்ளவர்கள் எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சி). ஆனால் ராமகிருஷ்ணனின் இந்த மென்பொருளில் மனிதக் குரலை தந்துள்ளார். கணீரென்ற குரல் இனிமையான உச்சரிப்பு. சில பிசிறல்களையும் குறிப்பிட வேண்டும். சில இடங்களில் எதிரொலி கேட்கிறது. வேறு சில இடங்களில் வார்த்தைகள் துள்ளி மறைகின்றன.

குறைகள்?
இரண்டுதான்: கிட்டத்தட்ட ஒரு பத்திக்கு மேல் படிக்க முடியாது.
ஒலிக் கோப்பை சேமித்து வைப்பது எளிதாக இல்லை.
பேராசிரியர் ராமகிருஷ்ணனுக்கு நன்றிகள்.

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 17எங்கள் நோக்கம் நேரே வீட்டுக்கு போவதே. ஆனால் நாங்கள் ஒரு வட்டாரப் பிரிவு அளவே தொலைவுள்ள நிலையில், அம்மா சொல்லாமல் கொள்ளாமல் நின்ற பின், ஒரு முனையில் திரும்பி சென்றாள். “இந்த வழியே போனால் தான் நல்லது”, அவள் சொன்னாள். நான் ஏனென்று அறிய விரும்பியதற்கு அவள் பதில் சொன்னாள், “ஏனென்றால் எனக்கு பயமாக இருக்கு”

மூன்று பேர் புலியை பார்க்க போகிறார்கள்மூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள்
மூன்று பேருமே நிஜப் புலி பார்த்திராதவர்கள்
மூன்று பேருமே புலியின் கோடுகள் குறித்த விசித்திர கற்பனைகளும் தகவல் அறிவும் கொண்டவர்கள்
மூன்று பேருமே ... (ஒன்றும் இல்லை)
மூன்று பேரில் ஒருவன் கோட்டோவியங்களில் பழகியே புலியுடன் சினேகமாவன்
இரண்டாமவன் கார்டூன்களிலும் ஊர்வலப் பதாகைகளிலும் புலியுடன் பரிச்சயமானவன்
மூன்றாமவன் குறைந்து வரும் புலி எண்ணிக்கை குறித்த தீவிர அக்கறை கொண்டவன்
முதலாமவன் புலியைப் போன்றே நடக்க, ஓட, பாய, பதுங்கத் தெரிந்தவன்.
இரண்டாமவன் புலியைப் போன்றே கர்ஜிக்கவும், புலியைப் போலல்லாது பேசவும் தெரிந்தவன்
மூன்றாமவன் புலிகளின் அங்கீகாரமற்ற தகவல்களஞ்சியம், கூட்டியும் குறைத்தும் பலவாறாக புலி எண்ணிக்கையே வெளியிடுவதே புலி இனத்தை காப்பாற்ற நல்ல வழி என்று நம்புபவன்
முதலாதவன் ...
இரண்டாதவன் ...
மூன்றாதவன் ...
குறித்து மேலும் எந்த தகவலும் இல்லை
அவர்கள் அசல் புலியை பார்க்க போனார்கள் என்பதைத் தவிர
மிருகக் காட்சி சாலையிலிருந்து திரும்பின
முதல் மற்றும் இரண்டாமவனுக்கு பின்னால் குதத்தில் புலி வால் ஆடியது
புலியை மிக நெருங்கி பேசியதால் அது பரிசளித்தது என்று பேசிக் கொண்டார்கள்
மூன்றாமவன் திரும்பவே இல்லை
அவனை யாரும் பிறகு பார்க்க இல்லை
கண்காணா இடத்தில் இருந்து
இதை அவன் எழுதிக் கொண்டிருப்பதாக
கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கிறது
கூண்டுக்குள் இருந்தது
நிஜப்புலியே அல்ல
புலி எண்ணிக்கையில் இதனால் ஒன்று குறைந்து விட்டது
என்பதை அவன் கவிதையின் சேதியாகவும் உத்தேசிக்கிறான்
வால் முளைத்தவர்களை எந்த எண்ணிக்கையில் சேர்ப்பது என்ற குழப்பம் காரணமாய் அவன் தன் கவிதையை முடிக்காமலே வைத்திருக்கிறான்
ஆனாலும் ஒன்று குறைந்தால் ஒன்று கூடும் என்ற தன் சூத்திரம் நிரூபணமானதில் அவனுக்கு மகிழ்ச்சியே

Friday, April 23, 2010

ரூத் ஸ்டோன்: சிறுகுறிப்புரூத் ஸ்டோன் 1915-இல் வெர்ஜீனியாவில் பிறந்தார். பிங்ஹேம்டன் பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியர். அவரது சமீபத்திய கவிதை நூல்கள் Second Hand Coat (Yellow Moon Press), Who Is the Widow’s Muse (Yellow Moon Press) மற்றும் Simplicity (Paris Press). ரூத் 2002-இல் Wallace Stevens விருதை பெற்றார். Bess Hokin Award, Shelley Memorial Award, Vermont Cerf Award, National Book Critics Circle Award, மற்றும் the National Book Award ஆகியன இவர் மேலும் வென்றுள்ளவை.

ஒரு கணம் - ரூத் ஸ்டோன்நெடுஞ்சாலைக்கு குறுக்கே வெள்ளம் சூழ்ந்த வயலில் ஒரு நாரை நிற்கிறது. அது சிந்தனையில்
ஆழ்ந்தது போல், ஒற்றைக் காலில், அசட்டையாக
ஏதோ அவ்வயலே நாரைகளுக்கு சொந்தம் என்பது போல் நிற்கிறது.
காற்று தெளிவாய் நிசப்தமாய்.
இந்த இரண்டாம் வறண்ட நாளில் பனி உருகுகிறது.
அம்மாவும் மகளும்,
நாம் வாகன நிறுத்துமிடத்தில்
டோனட்ஸ் மற்றும் காபியுடன் அமர்ந்துள்ளோம்.
நாம் மௌனமாக உள்ளோம்.
ஒரு கணத்திற்கு நம்மிடையே உள்ள சுவர்
பிரபஞ்சத்திற்கு திறக்கிறது;
பிறகு மூடுகிறது.
மேலும் நீ தொடர்ந்து சொல்கிறாய்
உனக்கு என் வாழ்வை திரும்ப வாழ வேண்டாம்.

நன்றி: The Best American Poetry 1999

ரூத் ஸ்டோன்: சிறுகுறிப்பு

Wednesday, April 21, 2010

இன்று கற்றவைஎன் சிறிய வாழ்வில் நான் மிகவும் வெறுக்கும் தினங்களில் ஒன்றாக இன்றைய நாளும் இருக்கும். ஜெயமோகனின் அவதூறுக்கு எழுதிய பதில் கட்டுரையை சாருவின் இணையதளம் மற்றும் உயிரோசை வழியாக ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டிருப்பார்கள்; படித்திருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் பரிகாச பின்னூட்டங்கள் வழியாக என்னை சீண்டினார்கள். கடந்த ஒருவாரமாக கடுமையான அலுவலக பணி. காலை எட்டு மணிக்கு சென்று பத்து மணிக்கு தான் வீடு திரும்பினேன். அங்கு துறைத்தலைவரும், உபதலைவரும் தந்த அவமானங்களும், காயங்களும் ஏராளம். என்ன செய்தாலும் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தேன். பிறகு ஜெயமோகன் நான் சற்றும் எதிர்பாராமல் தனிப்ட்ட என் குறையை சுட்டிக் காட்டி தாக்கினார். அவர் என்னை கண்டிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எழுத்தில் கீழ்மைப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் பதின்பருவத்தில் இருந்தே அவர் அளவுக்கு நான் நேசித்த, மரியாதை செலுத்தின, ஆராதித்த ஒரு ஆளுமை வேறில்லை.
ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதை ஆரம்பத்தில் தவிர்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பற்றின பல தனிப்பட்ட தகவல்களை திரித்து எழுதினதால் பதில் எழுதுவது தவிர்க்க முடியாமல் போனது. அன்றாட வாழ்வில் நம்மைப் பற்றி சிறுதகவல் மாற்றி கூறப்பட்டாலும் உடனே திருத்தவே முயல்வோம். நீங்கள் பத்து மணிக்கு தாமதமாக அலுவலகம் சென்றிருக்கலாம். ஆனால் மேலாளரோ பிறரோ பதினொரு மணி என்றால் பொறுப்பீர்களா? உடனே திருத்த மாட்டீர்கள்? என்னதான் தாமதம் என்றாலும் அந்த அரைமணி நேரத்தை விட்டுத்தர நாம் சம்மதிப்பதில்லை. அது போலத் தான், என்ன தான் நான் நொண்டி என்றாலும் ஜெயமோகன் எனக்கு ரெண்டு காலும் விளங்காது என்றால் நான் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா. முழு நொண்டிக்கு அரை நொண்டி பரவாயில்லையே! என் அம்மாவை வேறு தவறாக பேசுகிறார். அவர் வாசித்தால் மனம் எப்படி புண்பட்டிருக்கும். காரணம் ஜெ.மோ மீது அவருக்கும் அபார மரியாதை உண்டு. நான் அவருக்கு அறிமுகப்படுத்திய ஒரே தமிழ் எழுத்தாளர் அவர் தான். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இங்கு பின்னூட்டம் இட்ட சிலர் நான் ஜெ.மோ சாருவுக்கு இடையே புகுந்து மகுடி வாசிப்பதாக சித்தரித்தனர். கொத்துபடாமல் விலகிப் போ என்றனர். அல்லது சில்லறை புகழுக்கு ஆசைப்பட்டு ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றியதாக் சிலர் சொன்னார்கள். ஜெயமோகனின் கருத்தில் உள்ள மனித உரிமை மீறலை அவர்கள் கவனியாதது ஏன்? எனக்கு புரியவில்லை.
என் உற்ற நண்பர்கள் நடத்தும் அமைப்பு சார்ந்தும் ஒரு சிறு கருத்து வேறுபாடு நேற்று ஏற்பட்டது. எனது மன நெருக்கடி காரணமாக அது என் நண்பர்களின் கருத்துக்கள் பெரும் அவமானமாக பட்டன. அவர்களிடமும் கோபித்துக் கொண்டேன். சிறுக சிறுக பதற்றத்தில் மூழ்கி நான் முழுக்கவே நிதானத்தை இழந்தேன். எந்த வேலையும் செய்யாமல் எனக்கு பின்னோட்டம் இடுபவர்களுக்கு பைத்தியம் சுவரில் கிறுக்குவது போல் பதிலிட்டு அக்கப்போர் செய்து கொண்டிருந்தேன். இப்போது இரவில் காலம் அசைவுகள் அடங்கி ஓயும் வேளையில் முடிந்து போன நாளின் அத்தனை அபத்தங்களும் விளங்குகின்றன.நண்பர்களே! நீங்கள் என்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு தனிநபர் உரிமைதான். என் மீது குரூரத்தை காட்டுவதோ புறக்கணிப்பதோ கேலிசெய்வதோ கூடத் தான். ஏராளமானோர் மேற்சொன்ன கட்டுரையை படித்து விட்டு மௌனமாக சென்றதும் கூட அவர்கள் உரிமைதான். உங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்து ஏமாந்ததனாலே நான் நிதானம் இழந்தேன், எரிச்சலடைந்தேன், கீழ்த்தரமான மொழியில் பதிலளித்தேன். நான் பலவீனமாக இருந்தேன். ஜெயமோகனால் இரண்டாவது காலும் ஊனமாக்கப்பட்ட ஒரு மனிதனின் ஒரு நாள் பலவீனத்தை, அதன் விளைவான அசட்டுத்தனங்களை மன்னித்து விடுங்கள். குறிப்பாக கிரி மற்றும் மதிக்கு!

Monday, April 19, 2010

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: “உள்ளூர கடுமையான உயிர்பயம் இல்லாவிட்டால் நான் குஸ்திவளையத்துக்குள் இத்தனை தீவிரமாக மோதியிருக்க மாட்டேன்”

அடுத்து என் மாஜி குருநாதரின் நினைவுத்திறன் நாளுக்கு நாள் மங்கி வருவது எண்ணி சற்று துக்கித்தேன். என் தொடர்பான அத்தனை நினைவுகளையும் ஏறத்தாழ இழந்த நிலையில் அவர் முழுக்க தனது கற்பனையின் வீச்சை நம்பியே உள்ளார். மிக சமீபமாக நிகழ்ந்த சம்பவங்களில் கூட அவரது நினைவு உயர்குதிகாலில் தடுமாறுகிறது. அப்பதிவை படிக்கையில் எனக்கு ஏற்பட்ட மனநிலை வருத்தமோ ஆத்திரமோ அல்ல. வியப்பும் நகைப்புமே. அதற்கு இரண்டு காரணங்கள். ஜெயமோகன் நான் எதிர்பார்த்தபடி எனது கட்டுரையின் எந்த விமர்சனக் கருத்தையும் நேரடியாக தர்க்க ரீதியாக எதிர்கொள்ளவில்லை. அந்த தகுதி இருந்தும் அதற்கான வலுவான மனநிலையில் அவர் இப்போது இல்லை. இத்தனை வருடங்களாக அவரை நெருக்கமாக கவனித்த வந்தவன் என்ற முறையில் எனக்கு இது எளிதாக கணிக்க முடிந்தது. இதுவே எனக்கு ஏற்பட்ட வியப்பின் முதல் காரணம். அடுத்து அவரது எழுத்தில் வரிக்கு வரி நினைவுப் பிழைகளும் உள்முரண்களும் சிரிப்பு மூட்டும்படியாக இருந்தன. ஒரு கட்டத்தில் உரக்க சிரிக்க ஆரம்பித்து எனது அன்றைய மனஇறுக்கத்திலிருந்து விடுபட்டு லேசானேன். ஜெயமோகனின் பதிவு சற்று மேதாவித்தனத்துடன் விரிக்கப்பட்ட நகைச்சுவை துணுக்குதான் என்றாலும் அதிலுள்ள தகவல் பிழைகளை திருத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ஏனென்றால் அது என்னைக் குறித்த மிக தவறான சித்திரத்தை முன்வைக்கிறது. மேலும் அவரது நினைவுப் பிழைகள் கடுமையான மன-அழுத்தத்தின் அல்லது அல்சமெயர்ஸ் போன்ற கோளாறின் அறிகுறியாக இருக்குமோ என்று துணுக்குறுகிறேன். நான் விளக்கப்போகும் நினைவுப்பிழைகள் அவரது மருத்துவருக்கும் ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கக் கூடும். இதை மிகுந்த கரிசனத்துடனும் ஆழ்ந்த வருத்தத்துடனும் எழுதுகிறேன். நான் தரப்போகும் சான்றுகள் நிரூபிக்கும் அவரது உளப்பிரச்சனையை அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜெயமோகனை நான் முதலில் சந்தித்தது தக்கலையில் உள்ள நண்பர் ஹமீம் முஸ்தபாவின் களஞ்சியம் எனும் புத்தகக்கடையில். ஜெயமோகன். அப்போது ஜெயன் வைணவம் குறித்து வெகு சிலாகிப்பாக ஒரு மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் எழுத்தாளர் என்றே எனக்குத் தெரியாது. என் அப்பாவிடம் இருந்து தொற்றி இருந்த தி.க. பாதிப்பால் எனக்கு மதவாதிகளை பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். இதனால் ஜெ.மோவுடனான எனக்கு முதல் சொற்றோடரே முரண்பாட்டில் தான் ஆரம்பித்தது. அவர் தனது இரு பதிவுகளில் நினைவுகூருவது போல் சு.ராவின் ”புளியமரத்தின் கதை” குறித்து நான் உரையாடியது அப்போது அல்ல, பின்னர் என் கல்லூரியின் விழாவில் அது குறித்து அவர் பேசி முடித்த பிறகு. இதைப் பற்றி “எழுத்தாளர்களை அணுகுதல்” கட்டுரையில் குறிப்பிடும் என் குருநாதர் நான் அவரை பூர்ஷுவா என்று கருதி அவ்விழாவை புறக்கணித்ததாக குறிப்பிடுகிறார். உண்மையில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அந்த விழாவுக்கு தலைமை தாங்க அழைத்திருந்தேன். விழாவிலும் அவருடன் உரையாடினேன். அடுத்து எனது இரு கால்களுமே போலியோ பாதிக்கப்பட்டிருப்பதாய் ஜெ.மோ சொல்லுவதும் தவறு. எனக்கு இடது கால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. நான் ஜெயமோகனை சந்திக்க ஆரம்பித்த நாட்களில் பிறர் ஆதரவின்றி நடக்கும் ஆற்றல் கொண்டிருந்தேன். அப்போது நான் பைக் வேறு ஓட்டிக் கொண்டிருந்தேன். காதலியை கூட்டிக் கொண்டு கடற்கரை பூங்கா மற்றும் சொல்லக் கூடாத பல இடங்களுக்கும் திரிந்து கொண்டிருந்தேன். அவளை பார்க்காத நாட்களில் குருநாதரை விஜயம் செய்வதே என் வழக்கமாக இருந்தது. ஆனால் ஜெ.மோவோ தன் பதிவில் திருதிராஷ்டிர கண்கள் வழி என்னென்னமோ கண்டதாக சொல்கிறார். உதாரணமாக அவரது வீட்டுக்கு என் அம்மா என்னை தோளில் சுமந்து கொண்டு வந்ததாக குறிப்பிடுகிறார். அப்போது அவர் என் அம்மாவை கண்டித்ததாகவும், உடனே என்னை அங்கே தனியே விட்டு விடுமாறு வற்புறுத்தியதாகவும் சொல்கிறார். பிறகு ஜெ.மோவின் அறிவுறுத்தலால் மனம் திருந்திய நான் தானாக முயற்சி செய்து கிறித்துவ போதக மேடைகளில் நிகழ்வது போல் நடக்க ஆரம்பித்து விட்டேனாம். இவை வெறும் கற்பிதங்கள் மட்டுமே. ஜெ.மோவின் அப்போதைய வீட்டு வாசல்படிகளில் நான் அவருடன் நானாகவே ஏறி நுழைந்தபோது அவர் சொன்ன வாசகம் இன்னும் நினைவில் உள்ளது: “இந்த படிகளை பார்த்தால் போதும் கோணங்கி உடனே அவற்றை உருவகமாக்கி விடுவார்”.
கட்டுரையின் மற்றொரு இடத்தில் நான் அவரிடம் சொன்னதாக் இப்படி குறிப்பிடுகிறார்: ”உடற்குறை உள்ளவர் என்ற ‘இரக்க’மே இல்லாமல் நான் அவரை நடத்துவது அபாரமான தன்னம்பிக்கையை அளித்தது என்றார்.” நிஜத்தில் 1998-இல் இருந்து 2001 வரையிலான தினசரி சந்திப்புகளில் ஒருமுறை கூட நானாக ஊனம் குறித்து அவரிடம் விவாதித்தது இல்லை. ஒரு முறை தற்செயலாக என்னை தொலைபேசியில் அழைத்து “ஆணுக்கு அழகு உடல் அல்ல, அறிவு தான்” என்றார். நான் ஏற்கனவே ஒரு பெண்ணை அடைந்து விட்டிருந்ததால் அந்த தாமதமான அறிவுரை எனக்கு சற்று சலிப்பையே அளித்தது. இரண்டாவது முறை என்னைப் பற்றிய அவரது அவதானிப்பை ஒரு ஆர்வத்தில் கேட்ட போது குரு இப்படி சொன்னார்: “உன்னிடம் ஊனம் குறித்த பிரக்ஞையே நான் காணவில்லை. ஊனத்திற்கான அனுகூலங்களையும் நீ இதுவரை என்னிடம் எதிர்பார்க்க இல்லை”. மேற்சொன்ன கட்டுரையில் ஜெ.மோ நேர்முரணான சித்திரத்தை அளிக்கிறார். தனிப்பட்ட வகையிலான பொய்யும் உண்மையும் ஒருவகை கருத்து சுதந்திரமே என்று நம்புகிறவன் நான். குருநாதர் நாளை அவரது நான் கடவுளில் வரும் குள்ளப்பாத்திரம் நிஜத்தில் அபிலாஷ் தான் என்று கூட எழுதலாம். அவற்றை ஒரு வேடிக்கையாக கடந்து சென்று விடலாம் என்றாலும் இத்தகைய மனப்பிராந்திகள் அவரது மன நலம் குறித்த ஆழ்ந்த கவலையை எனக்குள் ஏற்படுத்துகிறது.

”ஜவகர்லால்நேரு பல்கலைக்காக முயன்றார். இடம் கிடைக்கவில்லை. ‘அப்படியானால் சென்னைக்கு போங்கள். தனியாக நின்று போராடுங்கள்’ என்றேன். சென்னை கிறித்தவக் கல்லூரியில் சேர தனியாகக் கிளம்பிச் சென்றார். அது அவரது வாழ்க்கையின் முதல் தனிப்பயணம்.”
சென்னைக்கு நான் படிக்க தனியாக பயணித்தேன் என்று மேலும் ஜெ.மோவின் கதை வளர்கிறது. நான் குடும்ப உறவினர் புடை சூழவே சென்னை வந்தேன். ஏற்கனவே முடிவு செய்து விட்டு அவரிடம் சொல்ல சென்றேனே தவிர அவரிடம் அறிவுரைக்காக நாடவில்லை. பிறகு எனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து குருநாதரிடம் அழுதது பற்றி “இன்றிரவு நிலவின் கீழ்” முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த விஷயத்தையும் பதிவில் குறிப்பிடும் போது பாதிக்கு மேல் அவரது கற்பனையே விரிகிறது. நான் மனம் வருந்தக் காரணம் ஒரு பெண் விவகாரம் என்று நினைவின் வெற்றிடங்களை நிரப்புகிறார். ”பெண்கள் அறிவதிகாரத்தின் முன் மண்டி இடுவார்கள். நீ உன் அறிவைக் கொண்டு தான் பெண்ணை அடைய முயல வேண்டும்” என்று குருநாதர் அன்று என்னை அறிவுறுத்தியது உண்மைதான். ஆனால் அது சற்று விவகாரமான அறிவுரை என்று ஜெ.மோ அப்போதும் சரி இப்போதும் சரி உணர இல்லை. என் மனதை அன்று காயப்படுத்தி கண்ணீர் மல்க வைத்த பெண்ணை என் அறிவதிகாரத்தால் நான் வென்று எடுக்க முடியாது. ஏன் எனில் அவர் வயது மூத்த ஒரு பெண்மணி. என் மாமியார்.

அடுத்து அவர் சொல்லும் குற்றசாட்டில் குருநாதரின் விரல் நடுக்கங்களை நமக்கு காண முடிகிறது. ”ஜெயமோகனின் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரையில் நான் கீழ்கண்ட குற்றசாட்டுகளை தர்க்கரீதியாக பேசியிருந்தேன். சுருக்கமாக ஜெயமோகனிடம் நான் மாறுபடும் கருத்துக்கள் இவை:

• மனுஷ்யபுத்திரன் பக்தி இலக்கியத்தின் நீட்சி. நம்மாழ்வாரின் பேரன். குணங்குடி மஸ்தானின் மறுபிறவி.

• இறைவனை அடைதலே அவரது கவிதையின் ஆதார தேவை.

• அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது.

• மனுஷ்யபுத்திரன் ஒரு எழுச்சிக்கவிஞர். அவரது கவிதைகளில் ”உணர்ச்சி கொப்புளிக்கிறது.”

ஆனால் குருநாதர் தனது எதிர்வினையில் இந்த ஆதாரமான எதிர்கருத்துக்களை நீளம் தாண்டி விட்டு இப்படி ஒற்றை வரியில் சுருக்குகிறார்:
”கால்கள் இல்லாத ஒருவரை ஊனமுற்றவர் என்று அல்லாமல் வேறு எப்படியும் பார்க்க முடியாத மனக்கோளாறை நான் அக்கட்டுரையில் வெளிப்படுத்துவதாகச் சொல்லியிருந்தார். மனுஷ்யபுத்திரன் கவிஞர் அல்ல ஊனமுற்றவர் என்று நான் சொல்வதாக சொல்லியிருந்தார்.”
ஜெ.மோ குறிப்பிடுவது என் விமர்சனத்தின் ஒரு சிறு இழை மட்டுமே, மையக்கருத்து அல்ல. ஆதாரக்கருத்துக்களை எதிர்கொள்ளாமல் கொசுவலைக்குள் பதுங்குவது அவரது பதற்றத்தையே காட்டுகிறது. அல்லது விமர்சன ரீதியாக எதிர்கொள்ள முடியாத இயலாமையாக கூட இருக்கலாம். ஒரு அரை-விசுவாச சீடனாக நான் முதல் காரணத்தையே இன்றும் நம்ப விரும்புகிறேன். அடுத்து, அவர் தனக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமாப பூசல் காரணமாக ம.பு தனக்கு எதிரான ஆயுதமாக என்னை பயன்படுத்துவதாக அபாண்டமான குற்றசாட்டை வைக்கிறார். அதற்கு பிரதிபலனாக எனக்கு உயிர்மை ஆசிரியக் குழுவில் இடமளித்ததாகவும் சொல்கிறார். இந்த குற்றசாட்டும் குரு நாதரின் கவனமின்மையையே காட்டுகிறது. மேற்குறிப்பிட்ட “ஜெயமோகனின் ... ஊனம்” கட்டுரை பிரசுரமாவதற்கு முன்னரே பல பதிவுகளில் நான் ஜெ.மோவை பகடி செய்திருக்கிறேன். சாரு ஆன்லைனில் ஜெயமோகனை கருட புராணத்தின் படி எப்படி தண்டிக்கலாம் என்றொரு கட்டுரை வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாக பரபரப்பாக படிக்கப்பட்டு வந்தது. அக்கட்டுரையை படித்த ஜெ.மோவின் லட்சக்கணக்கான வாசகர்களும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளும் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்கும் எழுதவில்லை. குருநாதர் இன்று துரோகி என்று கமண்டலம் உலுக்கி நீர் தெளித்து விட்டுள்ள நான் தான் முதல் முதலில் அன்று அக்கட்டுரையை கண்டித்து உயிரோசையில் எழுதினேன். இத்தனைக்கும் சாரு என் மிக பிரியமான எழுத்தாளரும் நண்பருமாக அப்போது ஆக இருந்தார். ஆனால் ஜெ.மோவிடமோ பல வருடங்களாக எந்த தொடர்பும் இன்றி இருந்தேன். அக்கட்டுரையை எழுதியதற்காக நான் என்ன அனுகூலத்தை பெற்றேன் என்பதை ஜெ.மோ தெளிவுபடுத்த வேண்டும். இவ்விரு முரண் ஆதரவு கட்டுரைகளையும் எழுத மனுஷ்யபுத்திரன் எனக்கு எந்த தூண்டுதலையும் அளிக்க இல்லை. உண்மையில் அவர் என்னிடம் ஜெ.மோ-சாரு மோதலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்றே தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளார். 2008 டிசம்பரில் ஜெயமோகனின் இலக்கிய அரசியலை பகடி செய்து ”மிருகம்-மனிதன் – எழுத்தாளன்: ஒரு படிநிலைச் சறுக்கல்” என்று கட்டுரையை எழுதினேன். இக்கட்டுரையை மனுஷ்யபுத்திரன் மனதளவில் ஏற்றுக் கொண்டாலும் பிரசுரிக்க மறுத்தார். இளம் எழுத்தாளனாக சிலசமயங்களில் உண்மையை அறைகூவி பேசுவது எனது வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்று அவர் கருதினதே காரணம். பிற்பாடு சாரு இக்கட்டுரையை தனது இணையதளத்தில் பிரசுரிக்க மிகவும் விரும்பி என்னை வற்புறுத்தி கேட்ட போது குறுக்கிட்டு தடுத்தவரும் மனுஷ்யபுத்திரன் தான். அவர் ஒருவரை தூண்டி விட்டு எழுதவைக்கும் அளவுக்கு கீழ்த்தரமானவரல்ல. நானெழுதியதை விட ஆற்றல் மிக்கதாக ஒரு எதிர்வினையை அவரே தந்திருக்கலாம். இன்று வந்தடைந்திருக்கும் அதிகார புள்ளியில் இருந்து ஜெ.மோவுக்கு நேரடியாகவே தீங்கு விளைவிக்க நினைத்தாலும் செய்யலாம். அவருக்கு எழுத்தாள அடியாட்கள் அவசியம் இல்லை. மேற்சொன்ன ஊனக்கட்டுரையை பிரசுரிப்பதற்கு காரணம் அன்றிருந்த சூழலின் ஒரு விவாதப்பகுதியாக அவ்விசயம் மாறி விட்டிருந்ததே.

ஜெ.மோவின் கோபமான பதிவின் நகைச்சுவை பகுதி இனிமேல் தான் வருகிறது. சர்ச்சைக்குரிய ”கடவுளற்றவின் பக்திக் கவிதைகள்” கட்டுரைகளை நான் மிக எதேச்சையாக சற்று தாமதமாகவே படித்தேன் அக்கட்டுரையின் பின்னுள்ள அரசியலும், பலவீனமான தர்க்கமும், அதை கட்டியெழுப்பவதற்கான அசட்டுத்தனமான அபிப்பிராயங்களும் என்னை அன்றிரவு முழுக்க தொந்தரவு செய்தன. அன்றிரவே எனது எண்ணங்களை சிறுகுறிப்புகளாக எழுத ஆரம்பித்து அது ஒரு கட்டுரையாக வளர்ந்து விட்டது. அதை எழுதும் போது அச்சர்ச்சையின் நிழல் கூட என்னை அண்டியிருக்க இல்லை. காரணம் ஜெ.மோவின் பக்கங்களை சாரு கிழித்து விமர்சித்த போது நான் எலும்பு முறிவு காரணமாக மருத்துவ ஓய்வில் இருந்தேன். “கடவுளற்றவனின் ...” கட்டுரை இலக்கிய வெளியில் ஏற்படுத்தி இருந்த மன-அலைகளை அறியாமல் மிக அப்பாவித்தனமாக நான் மனுஷ்யபுத்திரனுக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். சாராம்சமாக:

”அன்புள்ள மனுஷ்யபுத்திரனுக்கு
...ஒரு அடைப்பு குறியின் வெற்றிடத்தில் நீங்கள் மூடப்பட்டு பெயர்ப்பட்டி ஒட்டப்பட்டது குறித்து சற்று வருத்தம் எனக்கு”.

இதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரன் என்னிடம் பேசினார் என்றாலும் கட்டுரை எழுதியுள்ளதை நான் அவரிடம் குறிப்பிடவே இல்லை. காரணம் ஏற்கனவே நான் ஜெயமோகனை விமர்சித்து எழுதியதை பிரசுரிக்க அவர் மறுத்துள்ளதே. வார இறுதியில் கட்டுரை அனுப்பும் முன் மட்டும் அவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டேன். அவர் என்னை ஊக்குவிக்கவோ தடுக்கவோ இல்லை. ஏனென்றால் அன்று அக்கட்டுரை பொதுவிவாதத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டிய கட்டாயம். அந்த குறிப்பிட்ட மாதம் முழுக்க நான் உயிர்மை கூட்டங்களுக்கோ அலுவலகத்துக்கோ செல்லவில்லை. ஆனால் ஜெ.மோ என்ன எழுதுகிறார் பாருங்கள்.

”அக்கட்டுரை எப்படி எழுதப்பட்டது, எப்படி உயிர்மை அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டு ‘மெருகேற்ற’ப்பட்டது என்றெல்லாம் நான் கேள்விப்பட்டேன்.”
நிஜத்தில் ஜெயமோகன் பற்றின எழுத்து விவாதம் எனக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் ஒரு முறையே அவரது அலுவலகத்தில் நடந்தது, அதுவும் நேர்மறையாக. கடந்த மாதம் அவரது ”புல்வெளி தேசம்” நூல் பிடித்து போய் அதனை குறித்து உயிர்மையில் பிரசுரிக்க கட்டுரை எழுதி வைத்திருந்தேன். சில குறைகளை சுட்டிக் காட்டினாலும் நூலுக்கு மிக ஆதரவான விமர்சனம் அது. மனுஷ்யபுத்திரன் தன்னை வசை பாடி, உறவை துண்டித்துக் கொண்ட ஒரு எழுத்தாளரின் நூலைப் பற்றின ஒரு விமர்சனத்தை உயிர்மையில் பிரசுரம் செய்வதற்கு தயாராக இருந்ததோடு, அவரது மற்றொரு நூலான விமர்சன நூலை தமிழவனுக்கு அனுப்பி அதற்கொரு மதிப்புரை எழுத வேறு கேட்டுக் கொண்டார். உயிர்மை உள்வட்டத்தில் தீவட்டி வெளிச்சத்தில் பாதுகாவலர் சூழ தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஜெயமோகன் கற்பித்து உளறிக் கொட்டும் போது நிஜத்தில் நடப்பது இத்தகைய நேர்மையான செயல்பாடுகளே. காலச்சுவடில் இது நடக்குமா சொல்லுங்கள்?

”இன்றிரவு நிலவின் கீழ்” முன்னுரையில் ஜெ.மோவுடனான என் உறவை விரிவாகவே பேசி இருந்தேன். ஆனால் ஜெ.மோவின் கற்பனையில் நான் அவருக்கு துரோகம் இழைத்து விட்டேன். ’அவரை தாக்கி எழுதுவதன் மூலம் ஒரு இலக்கிய ஸ்தானம் பெற்று விடலாம் என்பதே என் உத்தேசம்; முன்னுரையில் பாராட்டிய நபரை இப்போது தாக்கி விட்டோமே என்று நான் ஒரு தர்மசங்கடத்தில் இருப்பதாக’ எல்லாம் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இங்கு இரண்டு விசயங்களை தெளிவுபடுத்த வேண்டும். “ஜெயமோகன் கிளி ... ஊனம்” கட்டுரை ஒரு தனிநபர் தாக்குதல் அல்ல. ஒரு தர்க்கபூர்வமான, புறவய நோக்கில் எழுதப்பட்ட விமர்சனம் அது. அக்கட்டுரையை படித்த எவருக்கு அது புரியும். ஒரு விமர்சகன் துரோகியவாகவோ ஆதரவாளனாகவோ இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே அசட்டுத்தனம். அடுத்து எனக்கு ”ஆன்மா, விசுவாசம், நேர்மை, உண்மை” போன்ற பண்புகள் இல்லை என்கிறார் ஜெயன். இந்த நிலப்பிரபுத்துவ கூறுகள் என் ஆளுமையில் இல்லை என்பது எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். ஜெயமோகன் சமகால வாழ்வை இன்னும் உள்வாஙக்வில்லை என்பதையே இந்த குற்றச்சாட்டு சுட்டுகிறது. அவரது புதினங்களில் நாயகர்களின் வீழ்ச்சி லட்சியங்கள் தகர்வதனால் தான் நிகழும். நிஜத்தில் இத்தகைய மனிதர்கள் காந்தியுடன் மடிந்து விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் “ஆன்மாவை கூவி விற்பது” Dr. Faustus நாடகம் எழுதப்பட்ட பதினாறாம் நூற்றாண்டுடனே அரதப்பழசாக தொடங்கி விட்டது. சமகால வாழ்வின், அழகியலின் நுண்ணுணர்வு சாருவின் எழுத்தில் தான் உள்ளது. இன்றைய தலைமுறையினர் சாரு பின்னால் செல்வதற்கான முக்கிய காரணம் இதுவே. ஜெயமோகன் என் குருநாதராக இருந்ததை ஏற்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஒரு வாசகனான அவரிடம் இருந்து விலகின பின்னரே விமர்சகனான அவரை தாண்டி வர நேர்ந்தது. ஒரு காலத்தில் நிறைய ஷக்கீலா படம் பார்த்திருக்கிறேன் என்பதை போன்று இதை சொல்வதிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அடுத்து மாஜி குருவின் மேலும் ஒரு சறுக்கல். இப்படி சொல்கிறார்.
”இந்த நண்பரிடம் இக்கட்டுரைக்கு இரண்டுநாட்கள் முன்பு உரையாடியபோதுகூட எந்த உரசலையும் நான் உணரவில்லை.”

உரையாட எல்லாம் இல்லை. மிக சமீபமாக நடந்த நிகழ்வுகள் கூட குருநாதரின் நினைவில் எப்படி வழுக்கி மறைகின்றன பாருங்கள். கட்டுரை பிரசுரமாவதற்கு முன்னர் நான் அதை எழுதியுள்ளது மற்றும் அதற்கான புறவயமான உத்தேசம் பற்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பாருங்கள்:

abilash chandran
to jeyamohan_ B

date Mon, Jan 4, 2010 at 8:41 PM
subject ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை குறித்து
mailed-bygmail.comஅன்புள்ள ஜெயனுக்கு
மேற்சொன்ன கட்டுரை நன்றாக உள்ளது. அப்புறம் மனுஷ்யபுத்திரன் குறித்த உங்கள் கட்டுரைக்கு உயிரோசையில் ஒரு எதிர்வினை எழுதுகிறேன். தனிப்பட்ட காழ்ப்போ வெளித்தூண்டுதலோ இல்லாமல் எழுதியிருக்கிறேன். எனக்கு இழப்புணர்வோ குற்றவுணர்வோ பதற்றமோ இல்லை. ஆனாலும் நான் இதை ஏன் எழுதுகிறேன் என்று உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ஆர்.அபிலாஷ்”

அதற்கு அவர்

“ jeyamohan_ B
toabilash chandran

dateMon, Jan 4, 2010 at 10:46 PM
subjectRe: ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை குறித்து
mailed-bygmail.com
signed-bygmail.comi am not interested on it anymore
j”

நான் கமுக்கமாக, அவர் சற்றும் எதிர்பாராவிதமாக அக்கட்டுரையை எழுதவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவருக்கு மீண்டும் நினைவு பிசகி விட்டது. அவ்வளவுதான். வள்ளுவர் நட்பை காப்பாற்ற நண்பன் தரும் விடத்தையே குடிக்கலாம் என்கிறார். ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் சதிகாரர்களுடன் இணைந்து சீசரை புரூட்டஸ் குத்துகிறான். ஒரு நண்பனை எப்படி புரூட்டஸ் குத்தலாம்? அதற்கு புரூட்டஸின் பிரபல விளக்கம் இங்கும் பொருந்தும்

Not that I loved Caesar less, but that I loved Rome more.
As Caesar loved me I weep for him
As he was ambitious I slew him.

எழுத்தின் நேர்மை மீது நட்பை பலியிட தயாராகவே நான் அக்கட்டுரையை எழுதினேன்.
பிறகு என்னை காயப்படுத்தும் நோக்கோடு இதை சொல்லுகிறார். ”ஆர்.அபிலாஷ் உயிரோசையில் நிறையவே எழுதிவருகிறார். ஓர் எழுத்தாளனாக பொருட்படுத்தத்தக்க எதையும் அவர் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்”
ஆனால் இதே மனிதர் சமீபத்தில் கோவையில் நடந்த வாசகர் சந்திப்பில் என் நண்பர் வா.மணிகண்டனை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசும் போது “அபிலாஷ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஓரளவு வாசிக்க கூடியவர். அவர் கட்டுரையை மட்டும் தான் நான் பொருட்படுத்தி படித்தேன்.” என்று வாய்தவறி உண்மையை சொல்லி உள்ளார். இப்போது இப்பதிவில் முரண்பட்டு நான் ஒரு பொருட்படுத்தத்தகாத எழுத்தாளன் என்று முத்திரை வைத்து கோப்பை மூடப் பார்க்கிறார். மன்னியுங்கள் குரு, அடி மிஸ்ஸாயிருச்சு.

ஆனால் ஜெயமோகனை நான் மீண்டும் தொடர்பு கொள்ள நேர்ந்தது. ஜெயமோகனை தனிப்பட்ட முறையில் நான் இதுவரை தாக்கியதில்லை. அடிப்படை அற்ற வசைகளையும் அவதூறுகளையும் சொன்னதில்லை. ஆதாரபூர்வமான விமர்சனமே நான் முன்வைத்தது. இதே முறையில் நான் சாருவையும் தான் விமர்சித்திருக்கிறேன். ஆனால் அவர் மிகவும் நட்பார்ந்த முறையிலே இன்றும் பழகி வருகிறார். இந்த மனமுதிர்ச்சியை நான் ஜெயமோகனிடமும் எதிர்பார்த்தேன். பங்களூரில் வசிக்கும் வினயசைதன்ய யதி எங்கள் இருவருக்கும் பொது நண்பர். அவரது தொடர்பு எண்ணை தொலைத்திருந்தேன். எண்ணை பெற ஜெ.மோவை அழைத்தேன். என் குரலைக் கேட்டதுமே மறுமுனையில் திகைப்பு. குரலில் நடுக்கம் மற்றும் குழறல். அவர் அப்படி பதற்றத்துடன் என்னிடம் என்றுமே பேசியதில்லை. எண்ணை கேட்டேன். தொடர்பை துண்டித்தார். அடுத்து நான் பத்தாம்பசலியாக அவரை தொடர்ந்து முயன்றேன். அதற்கு உன்னிடம் எனக்கு ஆர்வமில்லை. இனி அழைக்காதே என்று குறுஞ்செய்தி அனுப்பினார். இரண்டு விசயங்கள் எனக்கு வருத்தம் அளித்தன. ஒரு வளர்ந்த மனிதரை இப்படி பேச்சு வராதபடி பதறடித்து விட்டோமே என்ற குற்றவுணர்வு. அடுத்து, போட்டு வாங்குகிறோமே என்று. ஆனால் குருநாதரின் மூளை நரம்பணு இணைவுகளில் மீண்டும் லூஸ் கனெக்சன். மேற்சொன்ன பதிவில் தொலைபேசி உரையாடல் பற்றின குறிப்பு வலையுரையாடலாகி விட்டது:

”அதன்பின் என்னை சமாதானம் செய்யும்பொருட்டு என்நுடன் வலையுரையாடலுக்கு அபிலாஷ் வந்தார். மேற்கொண்டு என்னை தொடர்பு கொள்ள வேண்டாம், அவர் மீது என் ஆர்வம் முற்றாகவே இல்லாமலாகிவிட்டிருக்கிறது என்று பதில் அளித்தேன். ”

ஒரு எண்ணை தருவதற்கு தனிப்பட்ட ஈடுபாடு எதற்கு என்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

Saturday, April 17, 2010

ஜெயமோகனுக்கு என் வாசகரின் பதில்

ஜெயமோகன் எனது கட்டுரையான “ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனத்துக்கு” எதிர்வினையாக அவரது பாணியில் ஒரு கீழ்த்தரமான தனிநபர் தாக்குதலை தொடுத்துள்ளார். அதற்கு எனது வாசகர் ஒருவர் தனது இணையதளத்தில் வலுவான ஒரு பதிலை ஆங்கிலத்தில் அளித்துள்ளார்.

http://baliniscosmos.blogspot.com/2010/04/shame-on-you-mr-jeyamohan.html

அதை கீழே படிக்கலாம்.

Shame on you, Mr. Jeyamohan!

I read with much surprise and equal angst the recent post in acclaimed Tamil writer Mr. Jeyamohan’s blog attacking Abilash (a talented new writer and blogger in Tamil) and Poet Manushyaputran . While I am not qualified enough to comment on the literary achievements of Jeyamohan, I can very confidently say that by writing that post, he has projected himself as a man of extreme insensitivity.

Jeyamohan has literally character assassinated Abilash and has made a mockery of Abilash’s physical disabilities and his talent as a writer. His tall idea is that a man with physical difficulties (in this case Abilash, who suffers from polio) ought to completely negate that aspect and only take pride in this mental (meaning the power of human brain) strength. On first reading, this idea appears like a perfect quote from a self-help manual written by motivational experts like Shiv Khera or Stephen Covey. But on deeper thought, Jeyamohan’s words are regressive and completely out of tune with reality.

Jeyamohan painstakingly describes how Abilash found it difficult to commute to his house without support. He also says Abilash felt that people around him treated him like a worm. To push his point, Jeyamohan says Abilash himself has written about his physical challenges in his first book. My question here is this: How is that Mr. Jeyamohan is not able to treat this aspect of self-doubt in Abilash as a normal one? In his youth (or even now), hasn’t Jeyamohan ever felt down, depressed? Hasn’t his self-confidence ever taken a beating? If he is going to answer “No” for all the above questions, then it is really difficult to consider him human. He should surely be deported to Mars, immediately!

People with physical difficulties encounter insurmountable odds every minute of their life. To a normal person, it is not easy to understand their plight unless they spend every minute with people with physical challenges. Let me give a simple illustration to prove my point. I am a person who does a desk job to earn a living. If I work more than the stipulated eight hours, I get a back pain. Sometimes even those eight hours seem physically tiring. So this physical tiredness takes its toll when I go out to indulge in my hobby – photography. I really cannot apply myself well when I am tired and that surely reflects on the shots I click. Unlike me, for a physically challenged person, every minute in their job is a sheer strain. Their response time to tasks which can be done blindly normal people is itself quite long. A person with a polio leg cannot jump at a given instance and answer a calling bell. He or she cannot climb stairs easily and are bogged down by travel.

Abilash is exactly in this situation. He has a genuine physical disability to manage life long. Whatever Jeyamohan has described in great detail in his article is just Abilash’s response to his real physical problem. I can challenge Jeyamohan that he will definitely not be able to be normal after a hectic day at work. He will definitely postpone writing for that day. At that time will you go and advice him saying, “Come on, Mr. Jeyamohan! You are mentally strong. You should not be bogged down by such trivial physical things. Get up!”? How absurd would that be! One more catch is that if Abilash would have been wallowing in self-pity all these while (as Mr. Jeyamohan says), he would not have been able to write a single page worth of notice. That Abilash has a strong readership and has written articles of worth is proof enough that he cares a damn about his physical difficulty. The same holds good for Manushyaputran.

Jeyamohan’s argument that physically challenged people are capable only of self-pity and nothing else holds good only for people who make a great deal of fuss about their handicap. I have seen physically challenged people run teas shops, paan shops and PCO booths with a signboard saying “Run by handicapped person. Please support”. Such people want to milk the sympathy of normal people like us and earn a living. I have nothing against those people or the signboards they put. But I am really annoyed at the way normal people respond to such people. Let me illustrate it. A friend of mine got employed in a small-time IT company. He got into a scuffle with his reporting head. That reporting head brought this to the GM’s notice. The GM did not care to listen to his side of the argument and had bluntly said, “I was large-hearted enough to give you a job even though I knew you were handicapped. And now you have the guts to behave like this!” This is clearly how Jeyamohan has reacted to Abilash. I do not know if he has read the works of Abilash, because he has another blanket remark about it, “Abilash has not written anything of worth”. Common sense would tell us that we speak in general terms to do two things: either we do not know anything about the matter under contention or we are simply lying. Jeyamohan alone knows which of these he is doing. He has projected himself as a messiah who came to save Abilash from his “self-pity” and when he has done so much for him, Abilash writes articles against him and stabs his back. Can anything get more cinematic than this?

If Jeyamohan really wanted to get back at Abilash for supposedly “damaging” him, he should give us a properly analyzed view of Abilash’s points. Not this kind of cheap yellow journalistic articles where he distorts facts to idiotic heights. A man of values and a decent level of empathy will not do so. But Jeyamohan has proved that neither he has values nor does he empathize with his fellow beings.

Postscript:

1. I recorded my anger at Jeyamohan’s article by posting the following comment in his blog. It has not seen the light till now. But it nevertheless needs to be documented and I do so here:

A writer of your stature stooping to such low levels of character assassination is both a surprise and a condemnable act. Your intolerance towards any of your “fanboy” readers turning to writers (or even aspiring to be a writer) is a well-known fact. The truth is that any new writer of talent does not need your “certification of authenticity”. Time and worthy readership will decide that. From all your writings it is very clear that you are a “strong” man. What surprises me is that a strong man like you lacks basic sensitivity and empathy for fellow beings. Like you said, one’s mental strength alone determines one’s approach to life. If you really had that, you will not generate reams of yellow journalistic articles like this. I think at least your readers have that mental strength. That should help them discriminate between true character portrayals and the vicious one like you have written.

2. Please click here to read Abilash's post on Jeyamohan.

3. Please check the following links for Jeyamohan's articles on Manushyaputran:

http://www.jeyamohan.in/?p=5761
http://www.jeyamohan.in/?p=5764
http://www.jeyamohan.in/?p=5770
http://www.jeyamohan.in/?p=5779

Wednesday, April 14, 2010

புட்டு + குமரி மாவட்ட மசாலா கறி + டைமண்ட் கட்

இன்றிரவு சமைத்த புட்டு, மசாலா கறி மற்றும் இனிப்பான டைமண்ட் கட் ஆகியவற்றுக்கான சுருக்கமான செய்குறிப்புகளை இங்கே தருகிறேன்.

அதற்கு முன் சில பகிர்தல்கள். எனக்கு அம்மா சமையல் கற்றுத் தந்ததில்லை. சென்னையில் உள்ள பெரும்பாலான ஆண்களைப் போன்று நாவின் சுவைக் குறிப்புகள் மற்றும் இளமை நினைவுகளின் வழிகாட்டலுடனே சமைக்க ஆரம்பித்தேன். இவை மிக எளிதானவை. இம்மூன்றையும் முடிக்க எனக்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது. பரிச்சயமுள்ளவர்கள் மேலும் சீக்கிரமாகவே இவற்றை தயாரித்து விடலாம். சமையலில் வேகத்தையும், சுவையின் தரத்தையும் தக்க வைப்பதே நிஜமான சாமர்த்தியம்.


முதலில் புட்டு.சிலர் குக்கரிலே புட்டு செய்வதாக அறிகிறேன். நான் பூட்டுக் குழலில் தான் இதுவரை முயன்று வந்துள்ளது. கடையில் கிடைக்கும் உடனடி புட்டு மாவைத்தான் பயன்படுத்துகிறேன். இதில் நிறுவனத்தை பொறுத்து சுவை, குறிப்பாய் பதார்த்தத்தின் மென்மை, மாறுபடுகிறது. சம்பா மற்றும் வெள்ளை மாவுகள் கிடைக்கின்றன. தேர்வு உங்களது.

தேவையுள்ள் பொருட்கள்

புட்டு மாவு
தேங்காய் துருவல்
உப்பு
லேசான வெந்நீர்

ஒரு பாக்கெட் மாவு மூன்று பேருக்கு போதுமானதாக இருக்கும். தேவையான அளவில் எடுத்துக் கொள்ளவும்

ஒருவருக்கு கால் ஸ்பூன் உப்பு என்பதே என் கணக்கு. உங்கள் தேவைப்படி உப்பு எடுத்து மாவில் சேர்க்கவும்

வெந்நீர் விட்டு மாவை பிசையவும். புட்டில் ஈர அளவு நிர்ணயம் மிகவும் முக்கியம். பிசைந்து வரும் போது சிறுசிறு உருளைகளாய் உருவாகும். அப்போது பிடித்து உருட்டினால் உருக்கொண்டு ஆனால் எளிதில் உடைந்து விடும் பதம் வந்து விட்டதென்றால் ஈரம் சரியாக உள்ளதென்று பொருள்

புட்டுக் குழலை எடுத்து அரிப்பு போன்ற அதன் சில்லை அதற்குள் வைக்கவும். கூழாய் உள்ளே கீழே போய் அதன் மூடி நிற்க வேண்டும்

எடுத்து மாவை ரொப்பவும். ஒரு பிடி மாவு இட்டதும் தேங்காய் துருவல் சிறிது தூவவும். இப்படியே நிரம்பியதும் மேலே சிறிது துருவலை வைக்கலாம்

அடுத்து புட்டுப் பாத்திரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். மேலே மாவு நிரப்பின புட்டுக் குழலை பொருத்திம் மூடவும்

ஆவி வந்த பத்து நிமிடங்களில் அடிக்கடி திறந்து வெந்துள்ளதா என்று சோதித்து பார்ப்பது என் பழக்கம். வெந்த விட்டதாய் பட்டால் இறக்கி விடுவேன்

இறக்கின புட்டுக்குழலின் மூடியை திறந்து குழலை ஒரு தட்டின் மீதான சாய்த்து நிறுத்தி ஒரு கம்பி அல்லது நீண்ட கரண்டியின் அடிப்பாகம் கொண்டு சில்லை உந்தவும். புட்டு சீராக அழகிய வடிவத்தில் ஆவி பறக்க விழுவது ரம்மியமான காட்சி. சாப்பிடுவதை ஒத்த சுவையான அனுபவம் இது

திரும்ப மாவை தேங்காய் துருவலுடன் நிரப்பி முன் சொன்னது போல் அடிப்பாத்திரத்தில் பொருத்தி அடுப்பில் வைக்கவும். இப்போது கவனிக்க வேண்டிய இரு விசயங்கள்:
சில் பொருந்தியுள்ளதா?
அடிப்பாத்திரத்தில் தேவையான அளவு நீர் உள்ளதா?

இப்படியே மாவு காலியாகும் வரை புட்டு தயாரிக்கலாம்

அடுத்து குமரி மாவட்ட மசாலா கறிஇந்த வகை கறியில் மசாலா வாசம் மற்றும் தேங்காய் சுவை தூக்கலாக இருக்கும்.

தேவையுள்ள பொருட்கள்
வெங்காயம் (2-3)
தக்காளி (2)
எண்ணெய் (மூன்று ஸ்பூன்)
பச்சை மிளகாய்
கடுகு
மஞ்சள் பொடி
மசாலா பொடி
கொத்தமல்லி பொடி
காரப் பொடி
தேங்காய் பால் (முக்கால் கப்)
கருவேப்பிலை
வேகவைத்த உருளைக் கிழங்கு [2] (அல்லது) முட்டை [2](அல்லது) கொண்டைக் கடலை [அரை கப்]

முதலில் சட்டியில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்

அடுத்து நறுக்கின வெங்காயத்தை வதக்கவும்

வெங்காயம் பழுப்பு நிறம் வந்தது பச்சை மிளகாயை நடுவில் கீறி இடவும்.

மிளகாய் வதங்கியதும் நறுக்கின அல்லது அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்

நன்றாக வெந்து இவை ஒன்று சேர சுமார் பதினைந்து நிமிடம் ஆகலாம். அடுத்து மஞ்சல் மிகச் சிறிதளவு சேர்க்கவும். மஞ்சள் மணத்திற்காக வெறும் மட்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

அடுத்து மசாலா பொடி இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள் சேர்க்கவும். நான் தேக்கரண்டியே பயன்படுத்துவது

சில நொடிகள் வதக்கின பின்னர் கால் ஸ்பூன் காரப் பொடி சேர்க்கவும். மீண்டும் வதக்கவும்

மேலும் சில நொடிகள் பொறுத்து கொத்தமல்லிப் பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும்

ரெண்டு நிமிடமாவது இது வதங்கி வர வேண்டும். அடியில் பிடிக்கிறாற் போல் தெரிந்தால் ஒரு ஸ்பூன் எண்ணேய் அல்லது சிறிது தண்ணீர் சேர்க்கலாம்

வேகவைத்த உருளைக் கிழங்கு அல்லது முட்டை அல்லது கொண்டைக் கடலை சேர்க்கவும். சில் நொடிகள் வதக்கவும்

அடுத்து தேங்காய் பாலை சிறிது சிறிதாக சேர்க்கவும். போதுமென்று பட்டால் அரை கப் தேங்காய்ப் பாலுடன் நிறுத்திக் கொள்ளலாம். தேங்காய்ப் பால் மற்றும் மசாலாவின் சமநிலை சரியாக அமைவதே இந்த கறியின் சுவை ரகசியம்

உங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் விடவும்

கொதிக்கும் வரை பொறுக்கவும்

விருப்பமிருந்தால் இறக்குமுன் கறிவேப்பிலைகள் தூவவும்

இதை புட்டுடன் சேர்த்து உண்பது எங்கள் ஊர் வழமை

இறுதியாக டைமண்ட் கட்

உணவுக்கு பின் இனிப்பு தின்பது சின்ன வயது பழக்கம். டைமண்ட் கட் மிக எளிதான ஒரு இனிப்பு.

சுமார் நான்கு சப்பாத்திகள் இடவும்

அவற்றை விரும்பின சிறு வடிவங்களில் கத்தியால் வெட்டி வைத்துக் கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் சூடு செய்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

சர்க்கரை பாகு தயாரிக்கவும். தண்ணீரோடு சர்க்கரையை தேவையுள்ள விகிதத்தில் கலந்து கொதிக்க வைத்து தயாரிக்கலாம்
நலவிரும்பிகள் அல்லது சர்க்கரை உபாதை உள்ளவர்கள் sugarfree போன்ற செயற்கை இனிப்பூட்டிகளை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். Desire நிறுவனம் சர்க்கரை உபாதை உள்ளவர்களுக்காக சிறப்பு இனிப்புகள் வெளியிடுகிறது. இவற்றில் குலாப் ஜாமூனுடன் தேவைக்கு அதிகமாக செயற்கை இனிப்பு ஜீரா கிடைக்கிறது. இதில் மூதம் வரும் ஜீராவை இங்கு பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் நிஜமான பாகைப் போன்ற சுவையுடனுன் உள்ளது.

பொரித்த துண்டுகளை பாகில் புரட்டி சிறிது நேரம் வைத்து சாப்பிடவும்

ஆர்வமுள்ளவர்கள் இவற்றை முயன்று பார்த்து எனக்கு தெரிவிக்கவும். உங்களது குறிப்புகளையும் என்னோடு பகிரலாம்.

ஸ்ரீசாந்தும் மகாபாரத வீமனும்வீமன் ஒரு அடர்ந்த கானகம் வழி சென்று கொண்டிருக்கும் போது பாதையில் ஒரு வேர் மறிக்கிறது. பிறகு அது சற்று சலனிக்கிறது. அது ஒரு குரங்கின் வால் என்பதை கவனிக்கிறான். பாண்டவ இளவரசனும் மகாபலசாலியுமான வீமனுக்கு கேவலம் ஒரு வாலை தாண்டி குதிப்பதில் உடன்பாடில்லை. ”ஏ குரங்கே வாலைத் தள்ளிப் போடு” என்று ஆணையிடுகிறான். கண்விழித்துப் பார்க்கும் குரங்கு அவனை பொருட்படுத்த மறுக்கிறது. சினங்கொண்ட வீமன் தன் கதையால் வாலை நிமிண்டி போட பார்க்கிறான். நகர மாட்டேன் என்கிறது. வால் வளர்ந்து கொண்டே போகிறது. உசுப்பேற்றப்பட்ட வீமன் தன் புஜபலத்தை பிரயோகித்து முக்கி முனகி தூக்குகிறான். ஆனால் வால் ஒரு வீழ்ந்த மாபெரும் அடிமரம் போல் அசையாது கிடக்கிறது. அதன் பிரம்மாண்டம் முன் வீமன் திகைக்கிறான். சோர்ந்து தோள் துவண்டு அகந்தை அழிய மண்டியிடுகிறான். அந்த குரங்கு நான் தான் அனுமான் என்று வெளிப்படுத்தி விட்டு ” ரொம்ப வாலாட்டாதே” என்று தம்பியை கண்டித்து அணைக்கிறது. இந்த சுவாரஸ்யமான கதையின் சினிமாத்தனத்தை தவிர்த்து பார்த்தால் அது ஸ்ரீசாந்தின் நிலைமைக்கு நன்கு பொருந்துவதை காணலாம்.

உடற்பயிற்சி மித்துகள், கலாச்சாரம் மற்றும் தீட்டுஉயிரோசை இதழில் வெளியான கட்டுரை

உடற்பயிற்சி இன்று மருந்து உட்கொள்ளுவது போல் அத்தியாவசியமான செயலாக பரிந்துரைக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களை சராசரியாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம். உடல் தசைகளை பெருக்கவும், மெலிதாக்கவும் விழையும் பதின்பருவ இளைஞ, இளைஞிகள். தொப்பையை குறைக்க டிரட் மில் ஓடும் மத்திய வயதினர். இவர்களில் பெண்கள் அதிகம். முப்பதில் திருமணம் செய்ய முனையும் சமகால தலைமுறையின் வேலைக்கு செல்லும் பெண்கள். இவர்கள் உடல் பருமனை குறைக்க அதிநவீன உடற்பயிற்சி நிறுவனங்களை பரவலாக நாடுகின்றனர். மூன்றாவதாக, நாற்பது வயதுக்கு மேல் ரத்தகொழுப்பு, சர்க்கரை, மாரடைப்பு போன்ற உபாதைகளை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் இருந்து மிரட்சி கலையாமல் நேரடியாக உடற்பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுபவர்கள். இவர்களுக்காக பெரும்பாலான மேல்தட்டு உடற்பயிற்சி நிறுவனங்களில் பொது நலம், எடை குறைப்பு மற்றும் உடல் கோளாறு கட்டுப்படுத்தல் என்று பயிற்சி திட்ட வகைமைகள் வைத்திருக்கிறார்கள். இம்மூன்றுக்கும் அதனதன் வரிசைப்படி கட்டணம் அதிகம். சராசரியாக இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட ஜிம்கள் ஐயாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை மாதம் வசூலிக்கின்றன. இன்று பருமனான 12 வயது குழந்தைகளும் உடற்பயிற்சி நிறுவனங்களில் வெயிட் அடிக்கும் காட்சிகள் உடலுழைப்பே அறியாது 80 வயது தாண்டி வாழ்ந்த நமது தாத்தா-பாட்டிகளை பற்றி சற்று துணுக்குற வைக்கிறது.

50-இல் இருந்து ஐநூறு வரை கட்டணம் வசூலிக்கும் கீழ்\கீழ்மத்திய\மத்திய வர்க்க உடற்பயிற்சி நிறுவனங்கள் உண்டு. இந்த வகை ஜிம்களில் மாதிரி உடலமைப்பு கொண்ட உடலழகர்கள் வினோதமான பின்னணி கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட தக்கலையில் மணற்பரப்பு மேல் ஓலை வேய்ந்த உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று இருந்தது. அங்கு பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரே சட்டையயை தான் அணிவர். அது வியர்வையில் தொப்பலாகின பின் அங்காங்கு சொருகி வைத்து அடுத்த நாள் உலர்ந்து வீச்சமடிக்க மீண்டும் பயன்படுவர்.இப்படியே ஒரு வருடம் வரை துவைக்காமல் இந்த ஆடைகள் விடாப்பிடியாய் பயன்படுத்தப்படும். அது ஒரு திறந்த பயிற்சி நிலையம். ஜிம் உரிமையாளரும் பயிற்சியாளரும் வருடத்தில் சில முறை வருகையளிப்பது இரவில் ஒரு சடங்கு நடத்தவே. இச்சடங்கில் இத்தகைய துணிகளை தேடி குவித்து கட்டாயமாக எரித்து விடுவார்கள். அடுத்த வருடத்திற்கான அழுக்கு உடைகள் பிறகு மெல்ல மெல்ல சேகரமாக ஆரம்பிக்கும் அந்த ஜிம்மின் ஆணழகர் ஒரு கல்லுடைப்பவர். நாற்பது வயதிருக்கும். ஆப்பரிக்க எருமையை நினைவுபடுத்தும் தோற்றம். ஒரு நாள் விலைமகளிடம் சென்றது பற்றி, சிவப்பான அவளிடம் அதிகம் பேர் சென்றதால் அவள் புழை அகலமாக இருந்தது பற்றி பேசி பேசி விசனிப்பார். அடுத்த நாளே தன் குழந்தை கருவிலே இறந்து விட்டதை மென்மையாக குறிப்பிட்டு சோகவடிவாய் தெரிவார். இரண்டிலும் சகஜம் இருக்கும். அவர் பேச்சை கேட்க இளைஞர்கள் சதா குழுமி இருப்பார்கள். அவருடன் பயில பலரும் விரும்பினர். மேற்கில் காபி பார்களும், மதுக்கடைகளும் இலக்கியம் உள்ளிட்ட கலைவடிவங்களுடன் கலாச்சார தொடர்பு கொண்டிருந்தது. அது போல் ஜிம்கள் வயதுக்கு வராதவர்களுக்கான வாழ்வியல் பட்டறையாகவும் திகழ்ந்து வந்தன. நகரத்து மேல்தட்டு/மேல்-மத்திய தட்டு ஜிம்களில் பயில்பவர்களிடம் அந்த வர்க்கத்தின் வழமையான இறுக்கம் காணப்படுகிறது. துள்ளல் இசையுடன் கற்பனையான ஒத்திசைவுடன் பயிற்சி செய்து, ஓய்வு நிமிடங்களில் மூச்சிரைத்தபடி டீ.வியில் ஐ.பி.எல் பார்த்து, தன்னை ரகசியமாய் கவனிக்கிறவர்களை நோக்கி முறைத்து அல்லது சங்கடமாய் புன்னகைத்து ... இப்படி எந்த சமூக ஒருங்கிணைவும் இன்றி கழிகின்றன ஹைடெக் உடற்பயிற்சி பொழுதுகள். தமது பயிற்சி எந்திரத்தின் தலைமாட்டில் முன்பு இயங்கினவரின் வேர்வை இருந்தால் மட்டும் பெரும் தீட்டாகி விடுகிறது இவர்களுக்கு. எந்த விதத்திலும் அன்னிய மனிதத் தடங்களை இவர்கள் விரும்புவதில்லை.
ராயப்பேட்டை ரத்னா கபே அருகில் உள்ள விமல் ஜிம்மில் குள்ளமாக ஆனால் வலுவான தசைகள் கொண்ட ஒரு இளைஞர் இருந்தார். நாற்பது கிலோ எடையெல்லாம் தோளில் சுமந்து ஸ்பிரிங் போல் துள்ளி எழுவார். அவர் ரத்னா கபேவில் பாத்திரம் அலம்பும் பணி செய்தார். ரெண்டு ஆள் நெஞ்சகலமும் தும்பிக்கை கரங்களும் கொண்ட ஆணழகர் மற்றொருவர். பர்மா பஜாரில் பிளாட்பார்ம் கடை போட்டிருந்தார் ரொம்ப தயங்கிய பின்னரே தன் பணி விபரத்தை பிறரிடம் தெரிவிப்பார். இவர்களின் லட்சியம் என்பது தற்போது அருகி விட்ட இனமான தீவிர இலக்கியர்களுடையது போன்றே புதிரானது. எளிய உடலமைப்பு கிளர்ச்சியோ, உடல் பருமன் குறைப்பதோ, ஆயுள் நீட்டிப்போ அல்ல. மிக அந்தரங்கமான திருப்தியாக இருக்கலாம். உடற்பயிற்சி நிறுவனத்துள் உருவாகும் நட்பு வலை மற்றும் ஆரம்ப கட்ட இளைஞர்களின் ஆதர்ச வழிபாடு இவர்களை சட்டென்று ”புலிக்கலைஞர்கள்” ஆக்கி விடுவதும் காரணம் ஆகலாம்.

மாறாக குளிரூட்டப்பட்ட மேல்தட்டு ஜிம்களில் நீண்ட வருடங்களாக பயின்ற கட்டுமஸ்தான உடலை மேலும் உறுதியாக்க வாழ்வெல்லாம் உழைப்பவர்களை விட குறுகின நோக்கத்துடன் வருபவர்களையே அதிகம் காண முடிகிறது. உதாரணமாக ஆறு மாதங்களில் இருபது கிலோ குறைக்க வருபவர்கள் அதற்கு மேல் தங்குவது இல்லை. பலர் ரெண்டு மூன்று மாதங்களில் உடல் எடையில் வித்தியாசம் இல்லாதது உணர்ந்து கழன்று விடுவார்கள். சிலர் ஐந்து ஆறு கிலோக்கள் இழந்ததும் நின்று கொள்வார்கள். பயிற்சியை நிறுத்தியதும் உடல் இயல்பாகவே அசுரவேகத்தில் எடையை பத்து கிலோ மேலும் அதிகரிக்கும்.. பிறகு இவர்கள் அடுத்த ”சிகிச்சை” முறைக்கு செல்வார்கள். நவீன ஜிம்கள் நல்ல வியாபார மார்க்கம் ஆகி விட்டனவால் உடல் எடை குறைப்பது பற்றிய போலியான பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் சற்றும் தயங்குவது இல்லை. உதாரணமாக, உடல் எடை கட்டுப்பாடு என்பது வெறுமனே எந்திரங்களில் பயின்று கொழுப்பை கரைப்பது மட்டும் அல்ல. ஒருவரது வாழ்க்கைச் சூழல், மரபணு, உணவுக் கலாச்சாரம், மூளை அமைப்பு, வீட்டு சமையல், வேலை, மன அமைப்பு, மன அழுத்தம், நெருக்கடி என்று பல்வேறு காரணிகள் உடல் எடையை நிர்ணயிக்கின்றன. ஆனால் உடற்பயிற்சி நிறுவனங்கள் பொறியியல் கல்லூரிகள் போல் மூன்று மாதங்களில் பத்து கிலோ என்று கூவியே ஆள் பிடிக்கின்றன. ஆரம்பத்திலே உறுப்பினர்களிடம் பெரும் கனவுகளை வளர்த்து விடுகின்றன. உணவுத் திட்ட பட்டியல், எடைகுறைப்பு பட்டியல், தானியங்கி எந்திரத்தில் கொழுப்பளவு நிர்ணயம் என்று மேலோட்ட அறிவியல் ஜம்பங்களும் உறுப்பினர்களுக்கு மிகையான நம்பிக்கைகளை அளிக்கின்றன. தனிப்பட்ட மன உறுதியுடன் தொடர முடிகிறவர்கள் அன்றி பிறர் விரைவில் ஏமாற்றமடைந்து காசையும் வீணடிக்கிறார்கள்.

உடற்பயிற்சி குறித்து மற்றொரு நீண்ட கால நம்பிக்கை இப்போது வெறும் புரட்டு என்று நிரூபணம் ஆகியுள்ளது. அதாவது ஒருவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் குறைந்த எடைகளை கொண்டு அதிக முறைகள் பயிற்சி செய்ய வேண்டும். பயில்வான் உடலமைப்பை விரும்புகிறவர்கள் அல்லது உடல் எடை கூட்ட வேண்டுகிறவர்கள் அதிக எடைகளை தூக்கி குறைந்த எண்ணிக்கையில் பயில வேண்டும். நிஜத்தில் இது நேர் முரணானது என்று நிரூபித்துள்ளது அசிரோனா பல்கலையை சேர்ந்த கோயிங், கஸ்லர், லோமேன் உள்ளிட்டோரின் ஆய்வு. ஜார்ஜியா சதர்ன் பல்கலையை சேர்ந்த தோர்ண்டன் மற்றும் பொட்டெய்கர் ஆகியோரின் ஆய்வும் இதே முடிவை எட்டியுள்ளது. உடல் எடையை குறைக்க விழைபவர்கள் ஐந்து கிலோ டம்பெல்களை தவிர்த்து பத்தில் இருந்து பதினைந்து கிலோ எடைகளுக்கு செல்லலாம். பெஞ்ச் பிரஸ்ஸுக்கு நாற்பது கிலோ போடலாம். குறைந்த எடையில் இருபது தடவை செய்பவர்கள் அதிக எடை எடுத்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து தடவைகளாக பயிற்சியை குறைத்துக் கொள்ளலாம். ஜிம்முக்கு புதிகாக சேரும் ஒல்லிப்பீச்சான்களிடம் பயிற்சியாளர் குறைந்த எடை போட்டு பயிற்சி செய்ய சொன்னால் அவர்கள் ஷுவாஸ்னேக்கரை நெஞ்சில் வேண்டிக் கொண்டு பத்து, இருபது கிலோக்கள் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். தொடர்ந்து இவர்கள் இதனால் மூச்சு வாங்கி திணறுவது ஒரு சம்பிரதாய வேடிக்கை. இது மேற்சொன்ன தவறான நம்பிக்கை காரணமாக நடக்கிறது.

பொ.கருணாகரமூர்த்தியின் தமிழ்க்குடில்: கலாச்சார கத்தியும் காலாவதியான ரதமும்தாமரை இதழில் நான் இணையதளங்கள் குறித்து எழுதி வரும் தொடரில் இம்முறை பொ.கருணாகரமூர்த்தியின் தமிழ்க்குடில்.

பொ.கருணகரமூர்த்தி இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஜெர்மனியில் வாழ்கிறார். நவீன தமிழ் இலக்கியத்துக்கு புலம்பெயர் எழுத்தாளர்கள் தரும் கொடை வெவ்வேறு கலாச்சார சூழல்களில் வாழ்ந்து பெற்ற ஒரு புது பரிமாணமே ஆகும். இவர்களில் மு.கருணாகரமூர்த்தி முக்கியமானவர். அ.முத்துலிங்கத்தை போன்று பழந்தமிழ் ஆர்வமும், எள்ளல் நடையும் கொண்டவர். இவரது குறுநாவல்கள் தொகுப்பான “ஒரு அகதி உருவாகும் நேரம்” பரவலான கவனிப்பை பெற்றது. ”கிழக்கு நோக்கி சில மேகங்கள்”, ”அவளுக்கென்று ஒரு குடில்”, ”கூடு கலைதல்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுடன், ”பெர்லின் இரவுகள்” என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார். கருணாவின் இணையப்பக்கம்: தமிழ்க்குடில்
வலைப்பூ முகவரி: http://karunah.blogspot.com
கருணாகரமூர்த்தியின் இந்த வலைப்பூவில் கட்டுரைகள், கவிதை மற்றும் புனைவுகள் சேர்த்து 23 படைப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கில் பக்கங்கள் தொடர்ச்சியாக எழுதப்படும் வலைப்பூக்களின் உலகில் இது குறைவுதான். ஆனால் கருணாவின் எழுத்து செறிவும் தீவிரமும் கொண்டது என்றதால் இந்த வலைப்பக்கத்துக்கு இணையத்தில் ஒரு தனியிடம் உள்ளது.

உரையும் புனைவும்

இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் கருணாகரமூர்த்தியின் “என் இனமே என் சனமே” மல்லிகை ஆண்டுமலரில் வெளியான கட்டுரை. விடுப்பின் போது ஜெர்மனியில் இருந்து இலங்கைக்கு செல்லும் கருணாகரமூர்த்தி தனது சனம் சாதிப் பிடிமானத்தை இன்னும் கைவிட்டு விட இல்லை என்பதை கசப்புடன் உணர்கிறார். பல வருடங்களுக்கு முன் கல்லூரிப் பருவத்தில் சரவணன் என்ற வெள்ளாள நண்பன் க.மூ வீட்டுக்கு வருகிறான். அங்கு தரப்படும் ’தாழ்த்தப்பட்ட’ டீயை தொட மறுக்கிறான். பின்னர் இம்முறை அவனை சந்திக்கும் போது அவன் உயர்ந்த அரசாங்க பதவியில் இருப்பது தெரிய வருகிறது. க.மூ வீட்டுக்கு இரண்டாம் முறையாக வந்து அன்னியோன்யமாக கதைப்பவன் இப்போதும் தேநீரை சுவைக்காமலே செல்கிறான். தமிழ் ஈழ சமூகத்தில் உள்ள சாதிப்படி நிலையை விமர்சனம் தான் இதன் முக்கிய நோக்கம்; ஆனால் வெளி நாட்டில் வளர்ந்த குழந்தைகள் அம்மிக்கு ஏன் வயர் இல்லை என்று கேட்பதில் இருந்து ஆசிரியர் சிறுவயதில் கடலாடி களைப்பில் கொத்துபொரோட்டா உண்டது வரை தகவல்கள் பொருத்தமின்றி அங்கதன் வால் போல் ஒன்றுக்கு மேல் ஒன்றாய் அமர்ந்துள்ளன. தகவல்களை புனைவு ஜாடிகளில் ரசவாதம் செய்வது ஒரு சாமர்த்தியம் என்றால், அவற்றை தர்க்கத்தால் பின்னுவது மற்றொரு திறமை. இரண்டாவது வகையான கட்டுரை எழுத்துக்கு தேவையான மன ஒருங்கமைவு
பொ.கருணாகரமூர்த்தியிடம் இல்லை.

கருணாவின் கலவை மொழி

பொ.கருணாகரமூர்த்தியின் நடை இருபக்கமும் ஒலிபெருக்கி கட்டிக் கொண்டது; சித்தரிப்பு அல்லது தகவலுடன் எள்ளலும் விமர்சனமும் பின்னணியில் ஒலித்தபடி இருக்கும். உதாரணமாய் ”அக்கரையில் ஒரு கிராமம்” ஒரு பேருந்துக் காட்சி. கூட்டம் பிதுங்கும் பேருந்தில் அரசியல்வாதி ஒருவர் அமர்ந்திருப்பவரை எழுப்பி அமர்கிறார்:
“நம்மவூரில் பிக்குமார் செய்வதைப்போல வண்டியின் முன்வாசலால் ஏறிய ஆளுங்கட்சியின் ஏதோவொரு வட்டச்செயலர் ஒருவர் முன்சீட்டில் உட்கார்ந்திருந்தவரை சுட்டுவிரலை மடித்துக்காட்டி எழுப்பிவிட்டுத்தான் அமர்ந்து கொண்டார்”.
அது போல் “பால்வீதி” கதியில் இருந்து இந்த வரியை பாருங்கள்:
“குறுக்குமறுக்காக போர்விமானங்கள் கோடிழுத்துச்சென்றது போல் அடிவானத்தில் பல கோலங்கள் உண்டாயின.” இவ்வரி ஒரு போர் சூழலுக்கானது அல்ல; வானத்தை பற்றி விவரித்து போகையில் ஒரு அரசியல் எதார்த்தத்தை நினைவுபடுத்துகிறார். ஒரு எளிய வர்ணனையோடு சமூக-அரசியல் விமர்சனப் புள்ளி வைத்தே முடிக்கிறார். சற்றே புதுமைப்பித்தனை நினைவுபடுத்தும் நடை. பு.பியின் காலகட்டத்து செவ்வியல் பிரயோகங்களும் (ஒரு மானைப்போலத் திமிறி விடுவித்துக்கொண்டு தள்ளிப்போய் நின்றாள்; அனைவரும் அலர் அகவைப்பருவத்து மாணவிகள்), அறிவியல்-தமிழும் (ஓட்டமின்னியல்; தெறிவினை), இலங்கை வழக்கும் கலந்த வினோத நடை கருணாகரமூர்த்தி உடையது. முதலில் அவரை படிக்கும் போது இவரை தமிழ் உரை வரலாற்றில் எந்த புள்ளியில் நட்டு வைக்க என்ற குழப்பம் ஏற்படும். இந்த மொழியின் தனித்துவ அம்சத்தையும், அபார பாய்ச்சலையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
”அக்கரையில் ...” கட்டுரையில் ஒரு கிராமத்து சித்திரம் சற்றே கற்பனாவாத சாயலுடன் வருகிறது. ஆண்டான்-அடிமை வாழ்வுமுறையும், பெண்ணடிமையும் இயல்பான பண்பாட்டுக் கூறுகளாக உள்ள ஒரு கிராமம். அங்கு வரும் மேற்கத்திய சிந்தனை மற்றும் கலாச்சார மரபில் தோய்ந்த மனிதன் ஒருவன் அடையும் சன்னமான அதிர்ச்சிகளும், சங்கடங்களுமே கட்டுரையின் மையம். இந்த சற்றே பழைய சமாச்சாரங்கள் இடையே மிகவும் கூருணர்வுடன் க.மூ உருவாக்கி உள்ள பெண்களின் சித்திரங்கள் சிறப்பானவை.


புலம்பெயர் நெருக்கடியும் கலாச்சார முரண்களும்

கருணாகரமூர்த்தியின் சிறுகதைகளின் எரிபொருள் நாடகீயம் தான். அவரது சிறந்த கதைகள் மாறுபட்ட கலாச்சார மனங்கள் மோதுவதில் பிறப்பவை. நாடகத்தில் போலவே, சம்பவங்களும் வசனங்களும் க.மூவின் கதைகூறலில் ஆதாரமானவை. தமிழ்க்குடில் தளத்தில் உள்ள ”வண்ணத்துப்பூச்சியுடன் வாழமுற்படல்” சிறுகதை இத்தகைய ஒரு முரணியக்கத்தை வளர்த்தெடுக்கும் கதை. சித்தார்த்தன் எனும் ஒரு ஈழத்தமிழ் இளைஞன் தாய்லாந்து சிவப்புவிளக்குப் பகுதியில் ஒரு விலைமாதை சந்திக்கிறான். அவளிடம் திருப்தி அடையாமல் சராபுரி என்ற கிராமப்பகுதிக்கு செல்கிறான். அங்கு இளம்பெண்களை அப்பாக்களே பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி சம்பாதிக்கிறார்கள். தாய்லாந்துக்காரர்களுக்கு பாலியல் தொழில் பாலான குற்ற உணர்வு நீங்கி அதை உய்வுக்கான வழியாக தேர்ந்திடும் வண்ணம் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. சராபுரியில் அவன் கனீத்தா என்ற பெண்ணை துய்க்கிறான். கனீத்தாவின் லட்சியம் விபச்சாரம் மூலம் சம்பாதித்து சூப்பர் மார்க்கெட் ஒன்று வாங்குவது. அவளிடம் காதல் ஏற்பட்டு சித்தார்த்தன் அவளை ஜெர்மனிக்கு அழைத்து வந்து கூட வாழ்கிறான். மெல்ல மெல்ல இருவருக்குமான வேறுபாடுகள் உறுத்தத் தொடங்குகின்றன. கனீத்தா அவனை விட்டு பிரிந்து சென்று பழைய தொழிலை தொடர்கிறாள். சித்தார்த்தன் அவளை மீண்டும் தாய்லாந்தில், கதை ஆரம்பத்தில் வந்த, அதே சிவப்பு விளக்கு பகுதியில் சந்திக்கிறான். அவள் அதே சூப்பர் மார்க்கெட் கனவுடன் இருக்கிறாள். இதே கதையில் ஜெர்மனியில் வாழும் கடுமையான ஒழுக்கவாத மனநிலை உள்ள ஈழத்தமிழ் சமூகம் குறித்தும் குறிப்புகள் உள்ளன. ஜெர்மனியில் உள்ள தாய்லாந்துக்காரர்கள் மற்றும் ஈழத்தமிழர் இருசாராருமே புலம்பெயர்ந்த அன்னியர், வெவ்வேறு நெருக்கடிகள் கொண்டவர்கள் என்பதை நாமிங்கு கவனிக்க வேண்டும். இருவருமே ஒருவகையில் வண்ணத்துப் பூச்சிகள் தாம். இதை இருசாராரும் புரிந்து கொள்ளாத தனிமையும் அவலமுமே இக்கதையின் உபபிரதி.
கருணாவின் சிறந்த கதைகளில் ஒன்று “பகையே ஆயினும்” குமாரசெல்வாவின் “சுருட்டுவாளை” நினைவுபடுத்துவது. ”வண்ணத்துப் பூச்சியுடன் ... ” கதையில் போல இக்கதையிலும் இருகலாச்சாரங்களை சேர்ந்த மனிதர்கள் மோதிக் கொள்கிறார்கள். முடிவு தான் வேறு. கதைசொல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்கிறான். அவனது பக்கத்து வீட்டுக்கு ஹசன் எனும் ஒரு துருக்கிக்காரன் வந்து சேர்கிறான். சதா தொல்லை கொடுக்கிறான். டிரில்லரால் ஓட்டை போட்டு தொடர்ச்சியாக நாராசமான சத்தம் எழுப்புகிறான். உயிருள்ள ஆட்டை வீட்டுக்குள் கொண்டு வந்து அறுத்து தலை, கால், நகங்களை குப்பைத் தொட்டியில் வெளியே வைக்கிறான். தன் வீட்டில் வேண்டாத அலமாரியை அடுத்த வீட்டு வாசலில் கொண்டு வைக்கிறான். இதனால துருக்கிக்காரனுக்கும் கதைசொல்லிக்கும் பகை ஏற்படுகிறது. துருக்கி கறி வெட்டும் கத்தியை தூக்கி வந்து மிரட்டுகிறான். தமிழன் சூலம் தூக்குகிறான். பிறகு வரும் நாட்களில் இருவரும் பேசிக் கொள்வதோ முகமன் கூறுவதோ கூட இல்லை. சதா முறைப்பு. ஆனால் ஹசனின் ஜெர்மனி விசா நீட்டிப்பு மனு நிராகரிக்கப்பட ஒரு நாள் அவன் கிளம்ப வேண்டியதாகிறது. நெகிழ்ந்த மனதுடன் தமிழனிடம் விடைபெற வருகிறான். இருவரும் கட்டிக் கொள்கிறார்கள். பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். துருக்கி தந்த பரிசுகளில் விசேசமான ஒரு பொருளும் உள்ளது: இறைச்சிக் கத்தி. இது ஒரு சமாதனாகக் குறிப்பு மட்டும் அல்ல; இருவரும் ஒரு பொதுகலாச்சார நீரோட்டத்தில் சந்தித்துக் கொண்ட கிளை ஓடைகள் மட்டுமே என்பதையும் இந்த கத்தி குறியீடு சொல்கிறது. ஹசனின் சண்டித்தனங்கள் அவன் இயல்பு அல்ல. அகதியாக அவன் சந்தித்த மன நெருக்கடியின் வெளிப்பாடு. அந்த கத்தி இருவரும் சதா கையில் ஏந்திக் கொண்டிருப்பது அல்லது ஏந்த அவசியம் உள்ள ஒன்று.

கருணாவின் அறிவியல்புனைவு: ஜெ.மோவின் வழியில்

சுஜாதா, ஜெயமோகன் வரிசையில் கருணாகரமூர்த்தியும் அறிவியல்புனைகதை முயன்றிருக்கிறார். சுஜாதா அறிவியல் பிரக்ஞை கொண்டவர் ஆயினும் அவர் லூசு பேராசிரியர், விளையாட்டுத்தனமான காதலன், அழகான விடலை பெண், வினோத வஸ்துக்கள் என்று ஆழம்மும் தீவிரமும் அற்ற ஜனரஞ்சக கதைகளையே அறிவியல் புனைவுகள் என்ற பெயரில் முன்வைத்தார். ஜெயமோகனின் அறிவியல் புனைவுகளில் இரண்டு கோளாறுகள் இருந்தன. முதலில் அவற்றில் அறிவியல் இல்லை. காரணம் அவருக்கு (அவரே சொல்லி உள்ளது போல்) அறிவியல் பிரக்ஞை இல்லை. அதனால் என்ன? அரசியல் ஈடுபாடு இல்லை என்று விட்டு அவர் கம்யூனிஸ எதிர்ப்பு நாவல் எழுத முயலவில்லையா! அதுபோல் தனது வழக்கமான ஆன்மீக சரக்குகளை ரசவாதம், யோகா, சூழலியல் சீர்கேடு என்ற பெயர்களில் அவிழ்த்து விட்டு ’இந்திய’ அறிவியல் புனைவுகதைகள் என்று பெயரிட்டார். ராமகோபாலனும் அவரது தொண்டர்களையும் தவிர பிறர் அக்கதைகளை நிராகரித்து விட்டனர். அடுத்த கோளாறு ஜெ.மோவின் கதைசொல்லல் முறை அரதப்பழசானது. முதல் தலைமுறை ஆங்கில அறிவியல் புனைகதையாளர்களால் எழுதப்பட்ட படைப்புகளில் போன்று ஜெ.மோ தனது கதையின் பேசுபொருளை இரு புத்திஜீவிகளுக்கு இடையிலான கேள்வி-பதில் வடிவில் வளர்த்தெடுக்கிறார். இது கோனார் நோட்ஸ்களை தாறுமாறாய் கிழித்து ஒட்ட வைத்தது போல் இருக்கும். ஆனால் இன்றைய நவீன அறிவியல் புனைகதை மிக சிக்கலான கருத்தியல்களை கூட காட்சிபூர்வமாய் முன்வைத்து படிமமாக்கி விடுகிறது. வசனங்களை அது பதவுரை வழங்க பயன்படுத்துவது இல்லை. இத்தனை விளக்கமாய ஜெ.மோ குறித்து பேசக் காரணம் கருணாகரமூர்த்தி அதே தவறுகளை தனது அ.பு கதைகளில் செய்கிறார் என்பதே.
தமிழ்க்குடில் இணையபக்கத்தில் உள்ள “பால்வீதி” கதை ஒரு நல்ல உதாரணம். பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் நடப்பதான ஒரு எதிர்கால கதை. வெற்று கிரகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நடந்து கொண்டே உரையாடுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்?

• காதல் காமமா அல்லது உணர்வு மட்டுமா?
• இதைப் பற்றி பெண்ணியவாதிகள் என்ன சொல்கிறார்கள்.

• ஞானத்தின் பிறப்பிடம் மனமா ஆத்மாவா?
• மனமென்றால் உடல் மாயை. ஆத்மா என்றால் நம் வாழ்வில் ஏன் அழுக்கு படிந்து பாவிகள் ஆகிறோம்.

• பிறகு, அத்வைதம் தான் இந்த உலகம் மிக ஆச்சரியமான தத்துவம். ஏன்? பிரம்மத்தில் இருந்து வேறுபட்ட பொருட்கள் தோன்றியுள்ளதை சொல்லுகிறது. அது மட்டுமல்ல நூண்காட்டி இல்லாமலே மூலகங்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையை அத்வைதம் கண்டுபிடித்து விட்டதாம்.
இப்படியெல்லாம் கலாச்சார தாழ்வுமனப்பான்மையில் தத்துவ விசாரம் செய்ய இன்றே நமக்கு நேரமில்லை. காலம் அப்படி பறக்கிறது. ஆனால் க.மூ கதையில் எதிர்காலத்தில் இருவர் இப்படி உளறிக் கொட்டுவதோடு புளிசாதம் வேறு பொட்டலம் பிரித்து உண்ணுகிறார்கள். அறிவியல் புனைகதையில் முதலில் சமகாலத்தன்மை வேண்டும். அடுத்து அறிவியல் அவதானிப்புகள் கொண்டு உருவான அலாதியான கற்பனை வேண்டும். கருணா செய்வது எல்லாம் ஜெ.மோ வழியில் பிற்போக்கு ரதம் விடுவது தான்.

கடைசியாக இலவச-விரும்பிகளுக்கு ஒரு சேதி: கருணாகரமூர்த்தியின் “பெர்லின் இரவுகள்” என்ற பேசப்பட்ட நூல் இலவசமாக இணையத்தில் இங்கே கிடைக்கிறது: http://www.noolaham.org/. இலக்கிய நலம்-விரும்பிகள் உயிர்மை பதிப்பகத்தில் இருந்தும் வாங்கலாம்.

Monday, April 12, 2010

அங்காடித்தெரு: அன்றாட நெருக்கடிகளுடனான முதல் காதல்

கூடு இணையதளத்தில் வெளியாகி உள்ள எனது கட்டுரைதகவல்-சார் படைப்பு என்ற வகைமை நாவல்களிலும் திரைப்படங்களிலும் உண்டு. நாவல்களில் ஆர்தர் ஹெய்லி உடனே நினைவுக்கு வருபவர். பாலிவுட் படங்களில் மதுர் பண்டார்க்கர் தகவல்-சுவாரஸ்ய படங்களுக்கு பேர் போனவர். உதாரணமாக ”சாந்தினி பார்” மதுக்கூட நடனப்பெண்ணின் வாழ்க்கையை சொன்னது. ”பேஜ் 3” மேல்தட்டு மக்களின் உள்ளீடற்ற பாசாங்கு வாழ்க்கை. ”கார்ப்பரேட்” தனியார் நிறுவனங்களின் இரக்கமற்ற அரசியல். ”டிராபிக் சிக்னல்” பிச்சைக்காரர்களின் சில்லரைகள் நாட்டின் அதிகார வர்க்கத்தையே இயக்குவது குறித்தது. ”பேஷன்” மாடல் பெண்களின் நிரந்தரமற்ற பணி நிலை ஏமாற்றங்கள் மற்றும் சறுக்கல்கள். இத்தகைய தகவல்சார் படங்களின் முக்கிய பண்பு தகவல் செறிவே அவற்றின் சுவாரஸ்யமாக இருப்பது. இந்த பாணி படங்களில் இரண்டு வகை. ஒன்று தகவல்களின் வலிமையால் நிற்கும் படம். இது பலவீனமான திரைக்கதை கொண்டிருக்கும். எந்த உள்ளார்ந்த தேடலும் இருக்காது. மதுர் பண்டார்க்கரின் ”டிராபிக் சிக்னல்” தவிர்த்த பிற படங்கள் அத்தனையும் இந்த வகையறா. இயக்குனரின் அவதானிப்புகளும் தரிசனமும் ஒரு தகவல்-சார் படத்தை மேம்பட்ட தளத்துக்கு கொண்டு செல்லலாம். உலகப்படங்களிலும் ஹாலிவுட்டிலும் பல உதாரணங்கள் சொல்லலாம். எனக்கு பிரியமானது Perfume. பாலிவுட்டில் ”டிராபிக் சிக்னல்” மற்றும் Black Friday ஆகியவற்றை சொல்லலாம். நிழலுலக தாதா வகை படங்களை இவற்றுடன் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. என்னதான கள-ஆய்வுகளால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு உணர்வு அல்லது சமூகரீதியான பிரச்சனை அல்லது மோதலை தனது மையமாக கொண்ட படங்கள் இவை. உதாரணமாக ”சத்யா”, ”புதுப்பேட்டை”, ”அஞ்சாதே”. தமிழில் அசலான தகவல்-சார் படத்திற்கான முதல் முயற்சி வசந்தபாலனது: ”அங்காடித் தெரு”. இதை யாரும் கவனிக்காதது, அல்லது பொருட்படுத்த முடியாதபடி படம் உருவானது அதன் தோல்விக்கு முக்கிய காரணம்.மதுர் பண்டார்க்கர் ஒரு வறிய பின்னணியில் வளர்ந்து வந்தவர். சிறுவயதில் காஸெட்டுகள் விற்று படித்திருக்கிறார். அப்போது அவரது வாடிக்கையாளர்களில் பார் நடனப்பெண்களும் அடக்கம். பண்டுரேக்கரின் பிரபலமான படம் ”சாந்தினி பார்” அவர்களின் வாழ்க்கையை ஈடுபாட்டுடன் பேச முடிந்ததற்கு இந்த சிறுவயது அனுபவம் காரணமாக இருக்கலாம். அதைப் போன்றே அவர் போக்குவரத்து சிக்னலில் நின்று பபுள் கம் விற்றிருக்கிறார். அந்த வாழ்வின் படிநிலை மற்றும் பொருளாதார சிடுக்குகளை மேலும் ஆய்வு செய்து ”டிராபிக் சிகனல்” படமாக உருவாக்கி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை 2007-இல் வென்றார். இதன் பொருள் சிறைச்சாலை பற்றி படம் எடுக்க சிறைக்கு போக வேண்டும் என்பதல்ல. பட கள-ஆய்வுக்கான பொருள் நமக்குள் ஒரு பொறியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அக\புற அனுபவ ரீதியான ஈடுபாடு ஆய்வுப்பொருளோடு வேண்டும். வசந்தபாலனுக்கு ரங்கநாதன் தெருவுடன் இந்த உறைதல் இல்லை என்பது படத்தில் வெளிப்படையாகிறது. படத்தில் கிராமிய வாழ்க்கை கொண்டுள்ள இயல்போட்டம் சென்னைக் காட்சிகளில் இல்லை. இந்த சின்ன தடுமாற்றத்தில் இருந்து தான் படத்தின் ஆகப்பெரும் குழப்பமும் இலக்கின்மையும் விளைகின்றன.தமிழில் பரிட்சார்த்த முயற்சிகள் செய்து தோற்றவர்களை எண்ணி அங்கலாய்க்கிறோம். ஊனமுற்றவர் செய்த ஊதுபத்தி கணக்காக ”அங்காடித் தெரு” இணையத்தில் பரிந்துரைக்கப்படுவது இந்த நோக்கில் தான். ஆனால் தமிழ் பார்வையாளனுக்கு நல்ல ”முயற்சிகள்” குறித்தெல்லாம் கவலை இல்லை. பரீட்சார்த்த படம் ஓடாதபோது தமிழ்ப்பார்வையாளனை சாடுவதும் நியாயமாக இல்லை. எதார்த்த படங்களில் இருந்து தர்க்கமற்ற வணிகப்படங்கள் வரை அங்கீகரிக்க தயாராக உள்ள அவனது முதல் எதிர்பார்ப்பு தெளிவான, எளிதான கதை கூறல் தான். ”அங்காடித் தெரு” படம் எதைக் குறித்தது? இதுதான் தமிழ்ப்பார்வையாளனின் முதல் கேள்வி. படத்தின் ஆரம்பத்தில் காதலர்கள் மழையில் குதித்து ஆடுகிறார்கள். இது காதல் படமா? இல்லை. பிறகு காதலர்கள் மீது லாரி ஏறி அவர்களின் சிதைந்த உடல்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. காதல் இழப்பை பேசப் போகிறதா? இல்லை. பிறகு கிராமத்துக் காட்சிகள். கதாநாயகன் ஜோதிலிங்கம் கிரிக்கெட் ஆடுவது, அவனது நண்பன் மாரிமுத்துவின் கோணங்கித்தனங்கள், அவன் முதல் மதிப்பெண் பெறுவது, அப்பா விபத்தில் இறப்பது. கிராமத்து பசுமையை, மாமன் மகள்களை, குடும்ப வறுமையை பேசப் போகிறதா? இல்லை இல்லை என்று இப்படியே நீங்கள் மறுத்து அரை மணி போன பிறகு நிஜமான அங்காடித் தெருவை, அதன் குரூர எதார்த்தங்களை, பொருளாதார மற்றும் இருப்புசார் நெருக்கடிகளை பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். பிறகு இருபது நிமிடங்களில் ஒரு எளிய காதல் கதையாக ”அங்காடித்தெரு” கிளை பரப்பி வளர்கிறது. இடையிடையே நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெருக் காட்சிகள், பிச்சைக்காரர், அனாதைக் குழந்தைகள் மற்றும் அன்னை தெரெசாவின் நிழற்படங்களுடன் ஆவணப்பட பாணியில் காண்பிக்கப்படுகின்றன. நடுநடுவே நரம்பு பழுத்து சாகும் பிச்சைக்காரன், பிளாட்பார்மில் வியாபாரம் செய்யும் குருட்டுத் தாத்தா, குள்ளன், அவன் மனைவியான விபச்சாரி என்று ஒரு ஏழாம் உலகம் வேறு ஒரு பக்கமாய் இயங்குகிறது. படத்தின் பிற்பகுதி தான் பார்வையாளனுக்கு பரிச்சயமுள்ள பிராந்தியம். நாயகன் வில்லனை எதிர்த்து எப்படி நாயகியை மணக்கிறான் என்பதை பேசும் இப்பகுதியில் படத்தில் முதல் முறை வேகம் கூடுகிறது. இதைவிட குழப்பங்கள் குறைவான ”ஹேராமும்”, ”கற்றது தமிழுமே” தோல்வி அடைந்த போது ”அங்காடித் தெரு” பெறப் போகும் வரவேற்பு கேள்விக்குரியதே. படம் வெளியான முதல் வாரத்தில் நான் சென்றிருந்த போது அரங்கு முக்கால்வாசி காலியாகவே இருந்தது.
இப்படத்தின் மேலும் சில குறைகள் அபத்தமான பின்னணி இசையும், மிகையான காட்சிப்படுத்தலும். விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி பிரகாஷுக்கு படத்தை குறித்த எந்தவித புரிதலோ ஈடுபாடோ உருவாக்க முடியாதது பாதி இயக்குனரின் தவறும் தான். காட்சிப்படுத்தலின் மிகைக்கு ஆரம்ப பகுதியில் நாயகனின் அப்பா இறந்ததும் வானில் கலைந்து சிதறும் பறவைகள் உதாரணம். தொலைதூர காட்சியாக அப்படியே விட்டிருந்தால் அது நாயகனின் அப்போதைய மனநிலைக்கு அருமையான ஒரு உருவகமாக இருந்திருக்கும். இயக்குனர் மேலும் பல நொடிகள் அக்காட்சியிலேயே தங்கி பறவைகளை நூறாக, ஆயிரமாக பெருக்கி ஹிட்ச்காக்கின் Birds போல திகில் காட்சியாக்கி விடுகிறார்..
ஒரு தகவல்சார் படமாக அங்காடித் தெரு மிக பலவீனமானது. ரங்கநாதன் தெரு மற்றும் அங்குள்ள பிரம்மாண்ட ஜவுளிக்கடைகள் குறித்த நுணுக்கமான விபரங்கள் படத்தில் குறைவே. தரப்படும் தகவல்கள் ஏற்கனவே தெரிந்தவை அல்லது மிகைப்படுத்தப்பட்டவை. உதாரணத்திற்கு படத்தில் மோசமான உணவு, உறைவிடம், கெடுபிடி விதிமுறைகள், மேலாளர்கள் தரும் உளவியல் மற்றும் பாலியல் நெருக்கடிகள் ஆகியன படித்த இளைஞர்களே பி.பி.ஓக்களில் அன்றாடம் சந்திப்பவை தானே. ஐந்து நிமிடம் தாமதித்து ஸ்வைப் செய்வதற்கு ஜோதி லிங்கம் மற்றும் மாரிமுத்துவின் சம்பளத்தில் இருந்து ஐந்து ரூபாய் குறைக்கப்படுவதாக ஒரு காட்சியில் வருகிறது. பி.பி.ஓக்களில் அரை நாள் சம்பளமே பிடித்து விடுவார்களே? சென்னையில் ஆறாயிரம் சம்பளத்திற்கு தினமும் பதினாறு மணி நேரம் முதுகொடிய வேலை பார்க்கும் சோடாபுட்டி முதுகலை பட்டதாரிகளை நேரடியாக பார்த்திருக்கிறேன். செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்கு கால் வலி என்றால் நான் பார்த்த எத்தனையோ பி.பி.ஓ பணியாளர்களுக்கு டிஸ்க் புரோலாப்ஸ் எனப்படும் நிரந்தர முதுகு வலி சர்வசாதாரணமாக ஏற்படுகிறது. அடுத்து சென்னையே ரங்கநாதன் தெரு தான் என்பது போல் குறுக்கி காட்டப்படுகிறது மிகையானது. அங்கு வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருப்புக்காக அடி வாங்க, கற்பை இழக்க, சூப்பர்வைசரின் காலில் விழுந்து கெஞ்ச தயாராக இருக்கிறார்கள். வேலையை இழப்பவர்கள் பிச்சை தான் எடுக்க வேண்டுமாம். வேலையில் இருந்து முரண்பட்டு விலகுபவர்களுக்கு அனுபவ சான்றிதழ் தராமல் பிற அங்காடித் தெரு கடைகாரர்களுக்கு அவர்களை சேர்க்கக் கூடாது என்று வற்புறுத்துவார்களாம் முதலாளிகள். இது ஒரு அரை உண்மை மட்டுமே. குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாராக உள்ளவர்களுக்கு எப்போதும் திறந்தே கிடக்கிறது நகரம். இப்படி எளிய பிரச்சனைகளை பூதாரகரப்படுத்தி நம்மை வியப்படைய வைக்கும் வசந்தபாலனின் முயற்சி பொய்த்தே போகிறது. அங்காடித்தெருவை குறித்து அறிய விரும்பி வரும் கூர்மையான பார்வையாளர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளிக்கும்.

இதுவரை நாம் பார்த்தது எளிய குறைகளின் தொகுப்பு மட்டுமே. இவற்றையும் மீறி நாம் பார்த்து விவாதிக்கும் படியான ஒரு அசலான தேடல் இப்படத்தில் வெளிப்படுகிறது. தமிழில் மன-உடல் கிளர்ச்சி, சிக்கல்கள், கலாச்சார, வர்க்க முரண்கள் என பல்வேறு தளங்களில் வைத்து காதல் படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு விதமான படமும் காதலை அதன் நடைமுறை நெருக்கடிகளில் இருந்து விலக்கி ஒரு குறிப்பிட்ட மனரீதியான சாத்தியத்துக்குள் சுருக்கி விடுகிறது. இந்த ஒற்றைபட்டையான போக்கில் இருந்து வசந்தபாலன் காட்டும் காதல் மாறுபடுகிறது. அவரது காதலர்கள் கற்பனாவாதிகள் அல்ல. அதற்கான அவகாசம் அவர்களுக்கு இல்லை. சதா சாப்பாடில் இருந்து தங்குமிடம் குறித்து வரை கவலைப்பட்டபடி இருக்கிறார்கள். காதலிப்பதா வேண்டாமா, காதலை ஏன் பிறர் எதிர்க்கிறார்கள், ஏன் காதலிக்க வேண்டும் போன்ற கேள்விகளே தமிழ் சினிமாவின் இதுவரையிலான காதலர்கள் கேட்டு வந்துள்ளவை. “விண்ணைத் தாண்டிய வருவாயா” படத்தில் இந்த காலகட்டத்தில் வெளிவந்துள்ளது பொருத்தமான ஒரு நிகழ்வு.ஒப்பிட்டு பாருங்கள். அந்த படத்தில் சிம்பு, திரிஷா மற்றும் துணை, இணை துக்கடா பாத்திரங்கள் வரை திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி: ”உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்க ஏன் ஜெஸ்ஸியை காதலிக்கிறாய்\காதலித்தேன்?”. அங்காடித்தெரு ஜோதிலிங்கத்துக்கு ஒரே கேள்வி மட்டுமே: கனியை எப்போது காதலிப்பது என்பது தான் அது. நடைமுறை பிரச்சனைகள் காதலுக்கான வெளியை அவனுக்கு தொடர்ந்து மறுக்கின்றன. நகைமுரணாக, அவன் கனியிடம் கோபித்து பிரிவதும், பின்னர் அவளை மணப்பதாக தீர்மானிப்பதும் ஒரே காரணத்துக்காகவே: அன்றாட வாழ்வின் நெருக்கடிகளை தவிர்க்க மற்றும் சமாளிக்க. சமகால மெட்ரோபொலிடன் காதல்களை பொருளாதாரம் தான் தீர்மானிக்கிறது. பலர் காதலை தவிர்ப்பதற்கும், அல்லது காதலித்து மணம் புரிவதற்கும் தினசரி நெருக்கடிகளே ஆதாரமாக உள்ளன. ஒரு உதாரணம் சொல்கிறேன். என் நண்பன் ஒருவன் யாருக்கும் சொல்லாமல் திடுதிப்பென்று மணம் புரிந்து விட்டான். அதற்கு அவன் சொன்ன காரணம் இது. அவனது காதலியை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். அவளை பெண்கள் விடுதியில் தங்க வைத்தான். அங்கு தொடர்ந்து இருக்க முடியாதபடி பண பற்றாக்குறை மற்றும் உளவியல் வதை. அப்பெண்ணின் அம்மா வேறு நண்பனை அழைத்து “என் பெண்ணை நீ கடத்தி வைத்திருப்பதாய் புகார் கொடுக்க போகிறேன்” என்று மிரட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரின் காதலில் மிக அவஸ்தையான கட்டம் இது. அவளுக்கு ஒரு வசதியான தங்குமிடம் ஏற்படுத்தி தருவது அவனுக்கு அவசியமாக இருந்தது. தாலி கட்டாமல் இருவரும் சேர்ந்து வாழ வாடகை வீடு தரமாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு மேலாக திருமணம் செய்வதை ஆர்வமின்றி தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனே முடிவு செய்து மணமுடித்தார்கள். கௌதம் மேனனின் படங்களில் நாம் காணும் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மட்டுமே மணமுடிக்கிற காதலர்கள் அரிதான பாக்கியவான்கள்; காதலின் தோல்வியும் வெற்றியும் உண்மையில் காதலுக்குள் இல்லை. இதை தமிழில் சொன்ன முதல் இயக்குனர் என்ற வகையில் வசந்தபாலனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

Tuesday, April 6, 2010

சானியா மிர்சா திருமணமும், இந்திய-பாகிஸ்தான் நல்லுறவும்இன்று ஆங்கிலோ-இந்தி ஊடகங்களில் மிகை ஒப்பனை மற்றும் செயற்கை உச்சரிப்புடன் சிள்வண்டு போல் சலம்பும் ஒரு தலைமுறை பத்திரிகையாளர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு சரளமாக ஆங்கிலம் பேசவரும், ஆனால் சாமர்த்தியமாக எழுதவோ நுட்பமாக யோசிக்கவோ வராது. எளிய வாழ்வியல் அனுபவங்கள் கூட இவர்களுக்கு இல்லையா என்ற எண்ண வைக்கும் படி இவர்களின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சு இருக்கும். உதாரணமாக மும்பை தீவிரவாத தாக்குதலின் போது சபீனா சேகல் என்ற டைம் ஆப் இந்தியா பத்திரிகையாளர் காணாமல் போனார். இதிலிருந்து அவர் இறந்து போனதாக செய்தி உறுதியாகும் வரை NDTV தொலைக்காட்சியில் சபீனாவின் கணவரை நேரலையாக பேட்டி கண்டார்கள். மனைவி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற கடும் பதற்றத்தில் இருந்த அம்மனிதரிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன? ” நீங்கள் இப்போது சரியாக என்ன நினைக்கிறீர்கள். உங்கள் மனைவி பற்றி என்னென்ன எண்ணங்கள் ஏற்படுகின்றன?”. அவர் சொன்னது “என் குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று யோசிக்கிறேன்”.இப்போது சானியா மிர்சா பாகிஸ்தானி கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை மணம் முடிக்க போவதாய் அறிவித்துள்ளார். CNN IBN-க்காக சானியாவை பேட்டி கண்ட மற்றொரு மனமுதிர்ச்சியற்ற பெண் ஆர்வமாக கேட்ட கேள்வி இது: “ உங்கள் திருமணம் இந்திய-பாக்கிஸ்தான் ஒருமைப்பாட்டை எப்படி மேம்படுத்தப் போகிறது?”. “எங்கள் திருமணத்துக்கும் இரு தேசங்களுக்கான நல்லுறவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கே மணம் புரிகிறோம். உபரியாக இந்தியா-பாக் உறவு மேம்பட்டால் மகிழ்ச்சி தான், என்றார் சானியா. இதன் பிறகும் சானியாவின் துள்ளும் முலைகளின் வீடியோ துணுக்கு ஒன்றை காட்ட அத்தொலைக்காட்சி மறக்க இல்லை. தனிமனித வாழ்வு பற்றி மீடியாவுக்கு கவலையே இல்லை. புனரமைப்பு என்ற பெயரில் கோயில் சிறபங்களில் சுண்ணாம்பு அடித்து மறைக்கும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு தொழில்நுட்ப நீட்டிப்பாக தான் இன்றைய ஊடக பதிவுகளை பார்க்க முடிகிறது.

ஒரு விளையாட்டு வீரர் தன் நாட்டுக்கு சர்வதேச அளவில் அந்தஸ்து பெற்றுத் தருகிறார் என்பதால் அவரை நம் கலாச்சார, அரசியல் பிரதிநிதியாக காணலாமா? ஒரு சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் அதன் பல்வேறுபட்ட அரசியல், கலாச்சார, பொருளாதார கூறுகளை பிரநுத்துவப்படுத்தி அதற்காக தன்னை முன்னிறுத்துபவராக் இருக்க வேண்டும். உதாரணமாக இன்று தலித்துகளுக்கு திருமாவும், ஒரு காலத்தில் வன்னியர்களுக்கு ராமதாசும் எழுச்சி அடையாளங்களாக கூறலாம். ஆனால் ரஜினிகாந்த் அல்லது ஜெயலலிதா தமிழ் சமூகத்தின் முகங்கள் அல்ல. இன்று கேளிக்கை கலாச்சாரம் அதன் உச்சத்தை நோக்கி நகர்ந்து விட்ட, அதை ஊடகங்கள் லாபகரமாக்க விரும்பும் ஒரு கட்டத்தில் எளிய கலைஞர்கள் ஒரு சமூகத்தின் முகங்களாக முன்னிறுத்தப்படும் அவலம் நடக்கிறது. உதாரணமாக கடந்த ஜனவரியில் ஷாருக்க்கான் விசயத்தில் இந்த விதமான அசட்டுத்தனம் நடந்தது. நிலவில் ஆம்ஸ்டுராங் கால்பதித்த இடத்திற்கு சற்று தள்ளிய ஒரு பள்ளத்தாக்குக்கு ஷாருக்கானின் பெயரை The International Lunar Geographic Society சூட்டியது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம் இந்தியர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நட்சத்திரம் அவர் என்பதே. இப்படி விண்வெளியில் ஷாருக்குடன் வேறு யாரெல்லாம் பெயரை பகிரிந்துள்ளார்கள் என்பதை கவனித்தால் நமக்கு இதன் அபத்தம் புரியும்: நோபல் பரிசை வென்ற சி.வி ராமன், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் பிதாமகர்களாக கருதப்படுகிற விக்ரம் சரபாய், ஹோமி பாபா மற்றும் மேக்னா சாஹா போன்றவர்கள். வணிக சினிமாவின் ஒரு மேலோட்டமான நடிகருக்கு இப்படி ஒரு அந்தஸ்தா என்று சர்ச்சை கிளம்பிட ஷாருக்கானுக்கு எதிர்பாராத பக்கத்தில் இருந்து ஆதரவு வந்தது. முன்னாள் ISRO சேர்மேனும் விண்வெளி விஞ்ஞானியுமான கஸ்தூரி ரங்ஜன் ஷாருக்கான் இந்திய இளைய தலைமுறையை பிரதிநுதப்படுத்துபவர்; அவர் பெயரை நிலவில் பொறித்தது தகும் என்று வாதிட்டார். ஒரு விஞ்ஞானியே இப்படி அபத்தமாய் பேச CNN IBN-இன் கான்வெண்ட் கிளி வேறு என்ன பிதற்றும் சொல்லுங்கள்?ராகுல்காந்தி ஒரு பாகிஸ்தானி பெண்ணை மணமுடித்தால் CNN IBN இப்படியான கேள்விகளை கேட்பதற்கு நியாயம் இருக்கும். காங்கிரஸ் ஆட்சியின் போது அப்படியான திருமணம் வரலாற்றுக் குளத்தில் பாஷோவின் தவளையாக குதித்து அதிர்வுகளை கிளப்பலாம். மேலும் சானியா விசயத்தில் இந்தியா-பாக் இணங்குவதை விட புதுமணத்தம்பதிகளுக்கு விசா உள்ளிட்ட தூதரக சிக்கல்கள் அதிகமாவதே முதலில் நடக்கும். இதை முன்கூட்டியே பரிசீலித்து பார்த்த சானியா பாக்கிஸ்தானில் குடிபுகுவது இல்லை என்று முடிவு செய்திருக்கிறார். தம்பதிகள் துபாயில் வாழப் போகிறார்கள். “துபாய் இங்கிருந்து மூன்று மணி நேரம் தான். ஏதோ சணிடிகர்ஹ் போய் வருவது போலத்தான். இந்தியாவில் இருந்து வெளியே வாழும் உணர்வே ஏற்படாது. ஷோயப்புக்கு பல ஆட்டங்கள் துபாயில் தான் நடை பெற உள்ளன. துபாயில் இருந்து நினைத்த நேரத்தில் ஹைதராபாத் வந்து விடலாமே” என்கிறார் சானியா. இது கூட சப்பைகட்டு தான். முதலில், இப்போதைய சூழலில் பாகிஸ்தான் அணி துபாயில் என்றில்லை எங்குமே அதிகமாக ஆடுவதில்லை. எதிர்காலத்திலும் நிலைமை சீரடைய அதிகம் வாய்ப்பில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அதல பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. வோடாபோன் பக் நாய்க்குட்டி போல் துண்டு, சோப் என்று கவ்வி கொண்டு சானியா பின்னலையவே ஷோயப்புக்கு எதிர்காலத்தில் ஏகத்துக்கு நேரம் இருக்கும். மூன்று மணி நேர தொலைவுதான் என்றாலும் சானியா பாக் மருமகள் ஆகி விட்ட நிலைமையில் ஹைதராபாத்தில் தீவிரவாத தாக்குதல் போன்று அசம்பாவிதங்கள் நடந்தால் அவரது குடும்பத்தினர் உள்ளூர் சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பார்களா? சானியாவால் அப்படியான ஒரு உஷ்ண சூழலில் மனம் போல் தாய் வீடு திரும்ப முடியுமா? இப்போதே இந்திய தேசியவாதிகள் சானியாவின் புகைப்படங்களை கொளுத்தி அவருக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பித்துள்ளனர். பால் தாக்ரே யாகத்தீக்குள் தலைவிட்டு “தேசப்பற்று இருந்திருந்தால் ஷோயப்புக்காக சானியாவின் இதயம் துடித்திருக்காது. அவர் இந்தியாவுக்காக ஆடும் தகுதியை இழந்து விட்டார்” என்று கொட்டி இருக்கிறார். பாக்கிஸ்தான் தரப்பில் சானியா தங்கள் நாட்டுக்காக ஆட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளின் உறவை இத்திருமணம் மேம்படுத்துமா என்பதல்ல திருப்பிக் கேட்பதே அர்த்தமுள்ள்தாக இருக்கும்.

குறும்பட விமர்சனம்: அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில்அதிர்ஷ்டம் 5 km-இல் மிக நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு இயக்குனரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: ஸ்ரீராம் பத்மநாபன் (D.F.Tech). ஸ்ரீராமுக்கு ஒரு கதையை தொய்வில்லாமல் சொல்லத் தெரிகிறது. நடிக்க வைக்க முடிகிறது. காட்சிபூர்வ நுண்ணுணர்வு உள்ளது. முக்கியமாய் அவருக்கு ஒரு இயக்குனருக்கான அசலான தேடல் உள்ளது. எந்த பாசாங்கும் இல்லாமல் வாழ்க்கை குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.


படத்தின் தலைப்பு ஒரு திகில் படத்தை எதிர்பார்க்கச் செய்யலாம். மிக இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இழை படம் முழுக்க ஓடினாலும் இது திகில் படம் அல்ல. வைதீஸ்வரன் எனும் ஒரு சராசரி மனிதன் சைக்கிள் ஓட்டியபடியே தன் வாழ்வை அசை போடுகிறான். வாழ்க்கையை மீள்நோக்க பயணம் எப்போதும் ஒரு சிறந்த படிமமாக பயன்படுவது. அவன் ஒரு கடிதத்தை தபாலில் சேர்க்க சென்று கொண்டிருக்கிறான். அந்த கடிதத்தின் நோக்கம் பிற்பாடு வருகிறது. முதலில் அவனைக் குறித்த அறிமுகம். தொடர்ந்து அதிர்ஷ்டத்தால் அலைகழிப்படுபவன். பெண்கள் விசயத்தில் ராசியே இல்லை. பள்ளியில் பக்கத்து இருக்கை பெண்ணில் இருந்து ஆசிரியை வரை துன்புறுத்துகிறார்கள். இப்போது மனைவியும். படிப்பிலும் ஒரு தற்குறியே. மளிகைக்கடையில் மூவாயிரத்துக்கு பொட்டலம் மடிக்கிற வேலை. சற்று உற்று கவனித்தால் இப்படியான தோல்வியுற்றவன்\உதவாக்கரையின் பாத்திரம் தமிழின் சமீப எதார்த்த சினிமாக்களில் பிரதானமாக கையாளப்பட்டிருப்பதை காணலாம். இந்த பாத்திரத்துக்கு புத்திஜீவித்தனம் பூசினால் கலைப்படம். மதிப்பீடுகளை கழற்றி விட்டால் பின்நவீனத்துவ பாத்திரம். இப்படி தட்டி ஈயம் பூசப்படாமல் ஸ்ரீராமின் வைதீஸ்வரன் நம் வரம்புக்குள்ளே நிற்கிறான்.


வைத்தீஸ்வரன் பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு கறிக்குழம்பு கொடுத்து 9 வரை தேறுகிறான். ஆனால் பத்தாவது வகுப்புக்கு என்று பார்த்த ஐயர் வாத்தியார் வருகிறார். தோல்வி. பிறகு சிரமப்பட்டு படித்து கல்லூரிக்கு சென்றால் வரலாறு பாடம் தான் கிடைக்கிறது. வைதீஸ்வரனின் மனைவி நடத்தை தவறுகிறாள். அவனை அவள் சுத்தமாக மதிப்பது வேறு இல்லை. இப்படி வாழ்க்கை முழுக்க பல விசயங்கள் அமைந்தும் அமையாமல் தவறுகிறது. வைதீஸ்வரனுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் சில நொடிகள் முந்திப் போய் விடுகிறது. இதைக் குறிப்பிட அவன் சைக்கிளை இழுத்து இழுத்து மிதிக்க ஒரு பேருந்து முன்னேறிப் போய் விடுகிறது. இங்கு பேருந்து ஒரு உருவகம். சற்று பலவீனமாக இங்கு குறியீட்டுத்தன்மை உருவாக்கப்பட்டிருந்தாலும் பேருந்து முந்தி செல்வது முக்கியமானது. பலவீனமான ஒரு மத்தியவர்க்க மனதுக்கு மதிப்பீடுகள் தாம் அஸ்திவாரம். இதனாலே அவனுக்கு மனைவியின் துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மனைவி பக்கத்து வீட்டுக்காரனுடன் பார்வையில் சல்லாபிக்கும் இடம் உக்கிரமாக உருவாக வேண்டியது. அவர்கள் இருவரையும் வைதீஸ்வரன் மீசை நறுக்கியபடி கண்ணாடியில் கவனிக்கிறான். நேரடியாக அல்ல. இக்காட்சியை வசனம் தவிர்த்து மிக கவித்துவமாக தயாரித்திருக்க முடியும். கண்ணாடி என்பது சினிமா மொழியில் மனதின் குறியீடு தானே. ஆனால் இந்த சாத்தியப்பாட்டை ஸ்ரீராம் இந்த தருணத்தில் உத்தேசித்திருப்பதே அபாரமானது.


அவளை கொல்ல முடிவு செய்கிறான். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தன் கொலை உத்தேசம் குறித்து கடிதம் எழுதுகிறான். அப்படி எழுதுவார்களா என்ற கேள்வி கூடாது. இது கலை சுதந்திரம் (poetic license). அடுத்து கொலை முயற்சி காட்சி மேலும் நுட்பமாக அமைந்துள்ளது. அவள் வழக்கம் போல் கணவனின் கையாகாத்தனத்தை வைது விட்டு தெனாவட்டாக குளியலறைக்கு நடக்கிறாள். பின்னால் கணவன் பதுங்கியபடி கையில் கத்தியுடன். குளியறை நுழையும் மனைவி சட்டென்று திரும்பி “போய் துண்டு எடுத்து வா” என்று ஆணையிடுகிறாள். உயிரை எடுப்பவனுக்கு ஒரு தனி அதிகாரம் வாய்த்து விடுகிறது. அவன் தன்னை சற்று மேலாகவே நினைத்துக் கொள்கிறான். ஆனால் நம்மாள் தொடர்ந்து அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து பழகியவர் ஆயிற்றே! அதிர்ச்சியில் “சரி” என்று கூனிக்குறுகி துண்டு எடுக்க திரும்புகிறான். கத்தி அப்போதும் அவன் கையில் மறைந்து உள்ளது. திரும்ப துண்டு மற்றும் கத்தியுடன் வரும்போது மனைவி மின்சாரம் தாக்கி இறந்து போகிறாள். இப்போது ஒரு பிரச்சனை. கொலை வாக்குமூலக்கடிதம் தபாலில் உள்ளது. இயற்கையான மரணம் ஒரு கொலைப்பழியாக அவன் மீது விழ உள்ளது. அவன் விரைய வேண்டும். 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெட்டி. அந்த கடிதத்தை கைப்பற்ற வேண்டும். மேற்கொண்டு வரும் காட்சி நம் கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் அல்ல, தன் வாழ்க்கையை துரத்தும் ஒருவனது அவலமே இங்கு கவனிக்க வேண்டியது. அதுவும் கையெட்டும் தூரத்தில் 5 k.m தொலைவில் வாழ்வின் ஜீவநாடி இருக்கிறது. நம் கற்பனையை அலாதியாக தூண்டக்கூடிய இடம் இது. ஒரு வலிமிக்க இருத்தலியல் தருணத்தை இது மீட்டி விடுகிறது.


கெ.ஜி வெங்கடேஷுக்கு தலைகலைந்த அசட்டு முகம் கொண்ட நாயகப்பாத்திரம் மிகத் தோதாக உள்ளது. கடைசியில் மிகையாக அதிர்ச்சி அடைவது தவிர நன்றாகவே நடித்துள்ளார். மனைவியின் பாத்திரத்தில் வரும் ஷர்மிளாவுக்கு டி.வி மெகாத்தொடரில் நல்ல எதிர்காலம் உள்ளது. வில்லத்தனத்துக்காக ஷர்மிளா பாத்திரத்தின் அமைப்பு சற்று மிகையாக காட்டப்பட்டுள்ளது. அவர் பக்கமும் ஒரு நியாயம் இருக்கவே செய்யும். இருவரையும் படக்கருவியின் பிரக்ஞையின்றி நடிக்க வைக்க இயக்குனர் மேலும் முயன்றிருக்க வேண்டும். இருவரது உடல்மொழிகளின் முரண் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.


ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. அதுவும் வாக்குமூலக் கடிதத்தை தபால் செய்து விட்டு கணவன் சிந்தனைவயப்பட்டு திரியும் போது மாலை வானம் ஒரு பின்னணி ஆகிறது. இந்த அந்தி இங்கு ரம்மியமான சூழல் அல்ல. வாழ்வின் இருள் துவங்கப்போவதை சொல்லும் படிமம் இது. ஸ்ரீராம் படைப்பூக்கம் உள்ள ஒரு நபர் என்பதை எளிதாக நிறுவி விடுகிறது இந்த காட்சிபூர்வ அவதானிப்பு. வசனத்தில் உள்ள கூர்மையான கசப்பான நகைச்சுவையையும் குறிப்பிட வேண்டும். இந்த நகைமுரணான வரியை பாருங்கள். எட்டாம் வகுப்பில் பலமுறை தோற்று கூட கற்பு வேறு பிழைத்த மனைவி குறித்து வைத்தீஸ்வரன்: “படிப்பில அவள் படி தாண்டா பத்தினிங்க”. பெண்ணியவாதிகள் விரும்பாவிட்டாலும் வைத்தீஸ்வரனின் பார்வையில் இருந்து வெளிப்படும்போது இவ்வசனம் அதற்கான ஆற்றலைப் பெறுகிறது.


படத்தயாரிப்பு: கிங்ஸ்லி ஜோஸ் மற்றும் மேரி கிறிஸ்டினா. கெ ஜொஸ்

ஒளிப்பதிவு: அ.வசந்தகுமார் D.F Tech

இசை: முரளி

தொகுப்பு: ஜி. முரளி D.F Tech

சினிமா ஆர்வலர்கள் கட்டாயமாக தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வாங்கி பார்த்து விடுங்கள். ஸ்ரீராம் பத்மநாபனின் எண்: 9444810878.