Wednesday, March 31, 2010

செல்லப் பிராணி வளர்த்தல்: ஒரு மேக்ரோ குடும்ப பயிற்சிசின்ன வயதில் எல்லாருக்கும் ஏதாவது பிராணிகள், பறவைகள் அல்லது ஒரு பூஞ்செடி ஏனும் வளர்த்த அனுபவம் இருக்கும். வளர்ந்து வரும் ஒரு குழந்தைக்கு தனக்கென ஒரு குடும்பத்தை (ஒரு மேக்ரோ சமூகத்தை) கட்டியெடுப்பும் உந்துதல் இயல்பாகவே ஏற்படுகிறது. சிறுவயதில் இதற்காக நாம் ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்று இப்படி செல்ல உயிர்களை வளர்த்து உருவாக்குவது; குழந்தைப் பருவத்தில் நமக்கு பிராணிகளை வளர்க்கும் மனமுதிர்ச்சி போதாது என்னும். இது வெறுமனவே அன்புக்கான ஒரு வடிகால் மட்டும் அல்ல. செல்ல உயிர்களை வளர்ப்பவர்கள் அனைவரும் பிறழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்ற ஜெயமோகன் போன்றவர்களின் கருத்து சரியானது அல்ல. தன்னந்தனியானவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் செல்லப்பிராணிகள் குடும்ப உறுப்பினருக்கு பதிலியாக இருப்பதும் உண்மைதான் என்றாலும் இதனை பொதுமைப்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல.

உதாரணமாக் என் நண்பன் ஒரு நாய்ப் பிரியன். சதா அவன் நாயோடு விளையாடி நாயோடி உறவாடிக் கொண்டிருப்பது கண்டால் உடனே அம்மா சொல்வாராம்: ”ஒரு கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை குட்டி பெற்றுக் கொள் என்றால் கேட்டால் தானே. எப்போ பார்த்தாலும் இந்த சனியனோடு கொஞ்சிக் கொண்டு ...” அப்படி என்றால் நாளை என் நண்பன் ஒரு பாம்போ தேளோ வளர்க்கத் தொடங்கினாள் அவன் அம்மா என்ன பண்ணிக் கொள்ள சொல்வார்?

எனக்கு மிருகங்கள், பூச்சிகள், பறவைகள் போன்ற உயிர்களை விலகி நின்று கண்காணிக்க பிடிக்கும். என் வீட்டுப் பக்கத்தில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் இதற்காகவே ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு புகுந்து கவனிப்பேன். மீன், பூனை, நாய் என்று இதுவரை நான் வளர்த்து வந்ததற்கு இதுவே காரணம். மிருகங்களை படிப்பது ஒருவிதத்தில் பழங்குடி சமூகங்களை ஆய்வு செய்வது போல. மனிதர்கள் தாம் என்றாலும் மார்வின் ஹாரிஸ் தம் பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் நூலில் காட்டுவது போல் பழங்குடிகளின் வாழ்க்கை அதன் வித்தியாசமான தன்மையால் ஒரு மாற்றுப்பரிமாணத்தை நமக்கு அளிக்கிறது. ஒரு புது ஊருக்கு சென்றவுடன் நம் கண்கள் மேலும் கூர்மையாகின்றனவே அது போல. மனிதர்களை புரிந்து கொள்ள மிருகங்களை கவனிப்பது மிகவும் உதவும். உதாரணமாக் குலைத்து துரத்தும் நாய்க்கும் கோபப்படும் மனிதர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை.

நாய் வளர்க்க விரும்பினாலும் சில காரணங்களால் சாத்தியப்பட இல்லை. எப்போதும் மூன்றாவது நான்காவது மாடிகளில் தான் குடியிருக்க வீடு கிடைக்கிறது. எனக்கே கீழே இறங்குவது ஒரு சாகசம் என்பதால் நாயை வேறு சங்கிலியில் பிணைத்து இறக்கி நடை பழக்க முடியாது. இதனால் பூனையை தேர்ந்தெடுத்தேன். முதலில் ஒரு நாட்டுப் பூனை. பெண். பெயர் எனக்கு பிடித்த ஜப்பானிய ஆண் ஹைக்கூ கவிஞரது: ஷிக்கி. இப்போது அதற்கு ரெண்டு வயது. கூச்ச சுபாவமும், எளிதில் புண்படும் மனமும் கொண்டது. அருமையாக தனது மீயாவ்களின் தொனி வேறுபாடுகளால் பேசக்கூடியது. அது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
நான் இயல்பிலேயே நல்ல செல்லப்பிராணி கவனிப்பாளன் இல்லை. பல சமயங்களில் என் வேலைகளில் ஆழ்ந்து விடும் போது சாப்பாடு கொடுக்க, கழிவை அகற்ற மறந்து விடுவேன். அதனால் இரண்டாவது பூனை வாங்க ரொம்ப தயங்கினேன். பிறகு மேற்சொன்ன செல்லப்பிராணிகள் கடையில் பெர்ஷியன் எனப்படும் ஜடைப்பூனைக் குட்டிகள் வைத்திருந்தது பார்த்து சொக்கி விட்டேன். ரொம்ப நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். கடை உரிமையாளர் யானை விலை சொன்னார். பிறகு என் மனைவி வந்தாள். அவளிடம் “உனக்காக வேண்டும் என்றால் வாங்குகிறேன் ...” என்று பாவ்லா காட்டி கடைசியில் சாம்பல் நிற பூனைக் குட்டி ஒன்றை வாங்கினேன். அதுவும் பெண். கொள்ளை அழகு. மிஷ்டி என்று பெயர் வைத்தோம். பெங்காலியில் இனிப்பு என்று பொருள். இப்பெயர் என் நாக்கில் உருள்வதால் வசதியாக அழைப்பது ஜடாயு என்று.

நாட்டுப்பூனைக்கும் ஜடைப்பூனைக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். ஜடாயு மீயாவ் சொல்லுவதே இல்லை. பிரசங்கத்துக்கு முன்பான சாமியார் மௌனம். ரொம்ப பசித்தால், ஆவேசம் வந்தால், அல்லது வலித்தால் மட்டும் கீச்சிடும். அதுவும் வினோத குரலில். நடப்பது சற்று திரிஷாவைப் போல். நிச்சயம் பூனை நடை கிடையாது. ஆறு மாதத்தில் நாட்டுப்பூனையை விட வளர்ந்து விட்டது. சதா கண்ணில் நீர். அதற்கு பிரத்யேக மருந்து விட வேண்டும். வீட்டில் ஒரு நடமாடும் கலைப் பொருள். களைக்காமல் அரை மணி கூட பிளாஸ்டிக் பந்தை கால் பந்தாடும். சின்ன காரை தலை கீழாக ஓட்டும். MP3 பிளேயரை கழுத்தில் சுற்றிக் கொண்டு இழுபட திரியும். தூங்குவதில் இருந்து சாப்பிடுவது வரை பெரிய பூனையோடு போட்டி தான். கீழே மிஷ்டியின் சில புகைப்படங்கள். 2 மாதங்களுக்கு முன் எடுத்தவை.

Monday, March 29, 2010

நோய்மை: விழிப்புணர்வின் பாரம்சர்க்கரை உபாதைக்கு கணையம் பாதிப்பு ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த தகவல் யுகத்தில் மிதமிஞ்சிய விழிப்புணர்வு கணைய சிதைவை விட அபாயகரமானது. நீரிழிவின் பாதக விளைவுகள் குறித்து ஏராளமான தகவல்கள் இன்று கிடைக்கின்றன. நீரிழிவு கால் பாதத்தில் இருந்து மூளை வரை பல்வேறு உறுப்புகளை பாதிக்கக் கூடியது குறி விறைப்பை கூட அது விட்டு வைப்பது இல்லையாம் ... சர்க்கரை உபாதையை கட்டுப்படுத்த அது குறித்த அறிவை விருத்திப்படுத்துவது நல்லதா? ஏனென்றால் எய்ட்ஸுக்கு அடுத்து வேறெந்த உடல் கோளாறையும்\ நோயையும் விட அதிக விழிப்புணர்வு பிரச்சாரம் நீரிழிவுக்கு தான் செய்யப்படுகிறது. நமது தலைமுறையினரில் உழைப்பாற்றல் மிக்க இளைஞர்களில் பலரை இக்கோளாறு மிக வேகமாக தாக்கி அழித்து வருவது இதற்கு ஒரு முக்கிய காரணம். அடுத்த காரணம், நீரிழிவாளர்கள் சாமியார்களை விட அதிக சுயகட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டியிருப்பது. நீரிழிவு பற்றி நாம் கேள்விப்படும் செய்திகளில் மிக சுவாரஸ்யமானது இது தான்.தனது ரத்த சர்க்கரையின் அளவை நீரிழிவாளர் அடிக்கடி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதப்படுகிறது. இதனை சுயமாக தெரிந்து கொள்ள Acucheck போன்ற கையளவு கிளைக்கோமீட்டர் (சர்க்கரைமானி) எந்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. லான்செட் எனப்படும் கருவியால் உங்கள் விரல் நுனியில் நுண்ணிய துளையிட்டு ரத்தம் பிதுக்கி சர்க்கரைமானியின் நுனியில் தேய்த்து சில நொடிகளில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ளலாம். சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் முடிந்தால் தினமும் மூன்று வேளைகள் கூட இப்படி சோதித்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது போன்று நீரிழிவாளர்கள் விளையாட்டுக்கு ஒரு ஐஸ்கிரீம் தின்றாலோ, ஜுரம் போன்ற நோய்த் தாக்குதல்கள் ஏற்பட்டாலோ, ரொம்ப கவலை மற்றும் பதற்றமாக இருந்தாலோ கூட சுயசோதனை பண்ண வேண்டும். ஆனால் இத்தனை சாகசங்களுக்கும் ஒரு எதிர்விளைவு உண்டு என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இவ்வாய்வில் சர்க்கரைமானி எந்திரங்களால் சர்க்கரை சோதிப்பவர்கள் மேலும் மன-அழுத்தத்துக்கு உள்ளாவதாகவும், இதனால் இவர்களின் ரத்த சர்க்கரை முன்னிருந்ததை விட அதிகம் எகிறி விடுவதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதாவது டாக்டரின் கணக்குப்படி உங்களுக்கு ரத்தசர்க்கரை 140-க்குள் இருக்க வேண்டும். ரொம்ப சமர்த்தாக உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றி, காலை மாலையில் நடைபயிற்சி செய்தும் கூட எப்படியோ உங்கள் சர்க்கரைமானி ரத்தசர்க்கரை அளவு 300 என்று காட்டுகிறது. அதிர்ச்சி, குழப்பம், குற்றவுணர்வு ஏற்படுகின்றன ... பிறகு அச்சம், கவலை, பதற்றம், மன-அழுத்தம் என்று வளர்கிறது. சாயந்தரம் வரை சோர்ந்து இதைக் குறித்தே பலவாறாக சிந்தித்துவிட்டு மீண்டும் சோதிக்கிறீர்கள். இப்போது சர்க்கரைமானி 350 என்கிறது. ஆஹா ... இரவெல்லாம் விட்டுவிட்டு தூக்கம். காலையில் நெற்றி சுருங்க மீண்டும் பார்த்தால் 400. ஏறத்தாழ பலருக்கு மேற்சொன்ன ஆய்வில் இந்த பட்டாம்பூச்சி விளைவுதான் ஏற்பட்டிருக்கிறது.
துரித ஸ்கலிதத்தின் ஆதாரப் புள்ளியும் இதுதான். தன்னால் விந்தை போதுமான நேரத்துக்கு கட்டுப்படுத்த முடியாது என்று புணர்ச்சியின் போது துணுக்குறுபவர்கள் மேலும் சீக்கிரமாகவே வெளியேற்றி விடுவார்கள். இன்னொரு பக்கம், இவர்கள் சுய-உதவி நூல்களில் சொல்லியுள்ளது போல் நம்மால் முடியும் என்று காற்றில் குத்திக் கொண்டு கிளம்பினால் குறி எழும்பவதுமே சில சமயம் சிரமமாகி விடும். இதன் நீதி என்னவென்றால் ரத்தசர்க்கரை மற்றும் ஸ்கலிதம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு அறை மூளையில் இல்லை. சிந்தனை தான் இவற்றிற்கு முதல் எதிரி.

alt="" />

ஞாயிறு பத்திரிகையில் உடல்நலப் பக்கத்தில் நீரிழிவு குறித்து அச்சுறுத்தும், உற்சாகப்படுத்தும் கட்டுரைகள் அருகருகில் எழுதப்பட்டிருக்கும். இரண்டுமே உங்களை பதற்றப்படுத்தும். உதாரணத்திற்கு நீரிழிவுக்கான உணவுக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். நீரிழிவுக்காக டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படும் அட்டவணைப்படி நம்மூரில் யாரும் வழக்கமாக சமைப்பதில்லை. நீரிழிவாளர் தன் உணவுப்பழக்கத்தை தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் போக்குக்கு நேர்மாறாக மாற்றிக் கொள்ள வேண்டியதாகிறது. கோயில் வழிபாடு உட்பட்ட அனைத்து வித சமூக சந்திப்புகளிலும் உணவை பகிர்தல் இணக்கத்திற்கு அவசியமாகிறது. இதுபோல் ஆண்கள் உலகில் புகையும், மதுவும் ஒரு முக்கிய கலாச்சார அம்சம் ஆகின்றன. நீரிழிவாளர்கள் இக்கட்டுப்பாட்டின் படி வாழ்ந்தால் சமூகத்திலிருந்து மிக எளிதாக துண்டிக்கப்படுவார்கள். உதாரணமாக, நீரிழிவு அட்டவணைப்படி சிற்றுண்டிக்குப் பிறகு இரண்டு மணி நேரத்தில் ஒருவர் சர்க்கரை இல்லாத டீயும், இனிப்பில்லாத 2 பிஸ்கட்டுகளும் கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். இவை எந்த அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன? இந்தியாவின் 33 மில்லியன் நீரிழிவாளர்களில் ஒரு குறிப்பிடும்படியான பகுதியாக இளைஞர்கள் மாறி வரும் சூழலில் இது கவனிக்க வேண்டிய அம்சமாகிறது. பி.பி.ஓக்களில் காப்பிமெஷின் அரட்டைகளில் இவர்கள் கலந்து கொள்ள முடியாது. கூட்டங்களில் இனிப்பு காரம் வழங்கப்படும் போது எச்சில் வடிய விலகி நிற்க வேண்டும். திருமணம் போன்ற சமூக விருந்து சந்தர்பங்களை தவிர்க்க வேண்டும். நீரிழிவு மேலாண்மை வெறும் நாக்கை கட்டுப்படுத்துவது போன்ற எளிய செயல் அல்ல. அது சமூக பெருவெளியில் இது தனிமனிதனை தனிமைப்படுத்துவது.
வாழ்நாள் முழுக்க பின்பற்றிய ஒரு உணவுமுறையை ஏறத்தாழ முழுக்க மாற்றியமைப்பது சிக்கலான ஒன்று. புது முறைக்கு பழக வருடங்கள் பிடிக்கலாம்.
நீரிழிவாளர்களுக்கு கலோரி பிரக்ஞை அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது மனித இயல்புக்கே முரணானது. கலோரி என்பது மீட்டர், கிராம் போல ஒரு உணவு அளவுக்கான அலகு. உதாரணமாக, ஒரு தோசை 80-100 கலோரி இருக்கும். ஒரு வடை தின்ன ஆசைப்பட்டால் உங்கள் வழக்கமான கோட்டாவில் இருந்து ஒரு தோசையை ரத்து செய்ய வேண்டும். இதை உணவுப்பரிமாற்றம் என்கிறார்கள். ரெண்டு பெக் அடித்தால் அன்றைய மதிய அல்லது இரவு உணவில் எதனை எவ்வளவு குறைக்க வேண்டும் என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதே உங்களுக்குள் சர்க்கரை அளவு மீட்டர் சரசரவென்று ஏறிக் கொண்டிருக்கும். வரலாற்றில் இதுவரை நம் உணவை தீர்மானித்து வந்துள்ளது புலன்கள் அல்லவா; பணி-மேஜையிலிருந்து அறிவு உணவு-மேஜைக்கு நகர்ந்துள்ளது நமது நூற்றாண்டின் பெரும் துரதிர்ஷ்டங்களுள் ஒன்று.

இன்று பல நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளுக்கு அனாவசிய சிகிச்சை மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக ஒரு புகார் உள்ளது. அச்சு, இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் பல்வெறு உபாதைகள் குறித்த அரைகுறை தகவல்களை பிரசுரித்து விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற பெயரில் மத்திய, மேல்வர்க்க மக்களை கலவரப்படுத்தி வருகின்றன. உடல்பருமனை போக்க ஏகப்பட்ட செயற்கை இனிப்பு மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள், கருவிகள் மற்றும் உடற்பயிற்சி நிறுவனங்கள் இன்று பெருகி வருகின்றன; ஆவேசமாக சந்தைப்படுத்தப் படுகின்றன. இவை உடல்பருமன் பிரச்சனையை எளிமைப்படுத்தி (சிம்ரன் இடை போன்ற sugarfree வடிவம்) நிஜாரை உருவுகின்றன. குழந்தைகள் சற்று உற்சாக மிகுதியாகவோ அல்லது மந்தமாகவோ இருந்தால் உடனே மனவியல் மருத்துவர்களிடம் அனுப்பப்டுகிறார்கள். இக்குழந்தைள் மீது கவனக்குறைபாடு (attention deficit disorder) என்று உடனே முத்திரை குத்தப்படுகிறது. மன-அழுத்தத்திற்கானவை போன்ற நரம்பணு ஊக்கியை கட்டுப்படுத்தும் மருந்துகள் இக்குழந்தைகளுக்கு தரப்படுகின்றன. இவை தொடர்ந்து உட்கொள்ளப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் இத்தகைய மருந்துகளுக்கு அடிமையாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார் அமெரிக்க உளவியல் மருத்துவர் ஆண்டனி ராவ் (The Doubting Disease; Jerome Groopman; p.58; The Best American Science and Nature Writing). சமீபமாக உலகில் மனவியல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடும்படியாக அதிகமாகி உள்ளதை Journal of the American Medical Association சுட்டிக் காட்டி உள்ளது. குழந்தைகளுக்கு இப்படியாக உளவியல் மருந்துகள் அதிகப்படியாக வழங்கப்படுவதை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது. என் அலுவலகத் தோழி ஒருவரின் குழந்தை எந்த வண்டி சத்தம் கேட்டாலும் “அப்பா” என்று கூவியபடி வாசலுக்கு ஓடுவான். பிறகு கதவு, சுவர்களில் முட்டி விழுவான். அவனுக்கு கவனம் எதிலும் நிலைப்பதில்லை. கவலையான அம்மா குழந்தையை ஒரு மனவியலாளரிடம் அழைத்து சென்றார். மனவியலாளர், ஒரு மாற்றத்துக்கு, மருந்தேதும் எழுதாமல் பக்குவமாக ஒரு அறிவுரை சொல்லி அனுப்பி உள்ளார்: “உங்களுடன் அதிக நேரம் இருக்க முடியாத பதற்றம் தான் இப்படி வெளிப்படுகிறது. உங்கள் பையனோடு அதிக நேரம் செலவிடுங்கள்.” மற்றொரு நண்பரின் மாமா மொடக்குடியர். உள்ளுறுப்புகள் பல சேதமாகி விட்டன. டாக்டர் அவருக்கு இரு தேர்வுகளை அளித்தார். ஒன்று தொடர்ந்து குடிக்கலாம். அப்படியானால், 3 மாதங்களில் சாவு. இல்லது நிறுத்தலாம். 8 மாதங்களில் சாவு. மாமா துணிச்சலாக மூன்று மாதங்களை தேர்வு செய்தாராம். இதை நண்பர் மிகுந்த புளகாங்கிதத்துடன் ஒரு சாகசமாக குறிப்பிட்டார். நீரிழிவாளர்களிடம் இப்படியான அறிவார்ந்த அக்கறையும் அசட்டுத் துணிச்சலும் பொதுவாக காணப்படும் முரணான அணுகுமுறைகள். இரண்டுமே அசட்டுத்தனமானவை.

உலகசந்தை நம் படுக்கை அறை வரை வந்து விட்டது. உலகை நம்மிடமும், நம்மை உலகிடமும் அது அணுவணுவாக பிரித்து விற்கப் பார்க்கிறது. இந்த மிகைகளின் காலத்தில் இரு துருவங்களுக்கு மத்தியில் நமக்கு ஒரு இடம் வேண்டும்.

ஐ.பி.எல் தவிர்த்து ...சினிமாவை மூச்சு விடும் தமிழகத்தில் 1% தவிர்த்து யாருக்கும் சினிமா தெரியாது. ஐ.பி.எல்லும் இப்படியாக ஒரு ஒழுகும் குடம் தான். காவியக் கிளர்ச்சியும் சோகமும் பின்னிப் பிணைந்த தருணங்கள் அதற்கில்லை. ஐ.பி.எல்லை விவாதிப்பதே தமாஷ்தான். இங்கு அறிவார்ந்த நிலைப்பாடுகள் எப்போதும் வழுக்கி விடும்.

Sunday, March 28, 2010

நிலவை வாங்கிய MRF நிறுவனம்தீபாவளி வாணவேடிக்கையின் போது வெடி கொளுத்த மத்தாப்பு பயன்படுவது போல் ஆகி விட்டது ஐ.பி.எல்லில் கிரிக்கெட்டின் அந்தஸ்து. மூன்று பந்துகளிடையே விளம்பரம், ராட்சத திரையில் விளம்பரம் ... பந்தை பிடித்தால், விட்டால், அடித்தால், வெளியேறினால், விழுந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒரு விளம்பரதாரரின் பெயரிட்டு சூடம் காட்டுவது ... இப்படி இந்த சந்தைப்படுத்தல் ஜூரம் இப்போது நூறு டிகிரி தாண்டி நடுங்குகிற நிலை வந்து விட்டது. பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் கிங் பிஷர் விளம்பரத்துக்கான ராட்சத பலூன் அரங்குக்கு மேலே வாலில்லாத கங்காரு போல் தொங்க வர்ணனையாளர்கள் கிரிக்கெட்டை விட்டு அதனை நிமிடத்துக்கு ஒருமுறை குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். இன்றைய சென்னை - ராஜஸ்தான் ஆட்டத்தில் எம்.ஆர்.எப் ராட்சத பலூன் மிதக்க MRF நாமவளி. “எம்.ஆர்.எப் இந்தியாவிலேயே அதிகப்படியான பைக் டயர்களை உற்பத்தி செய்கிறார்கள்” என்று திரும்பத் திரும்ப சொன்னவர்கள் சங்கடம் தோன்றியதாலோ என்னமோ “டென்னிஸ் லில்லி எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேசனில் 20 வருடங்களுக்கு மேலாக பணி செய்கிறார்” என்று சேர்த்துக் கொண்டனர். டேனி மோரிசன் “டென்னிஸ் லில்லி ஒருவேளை இந்த பலூனில் இருப்பாரோ” என்று அடக்கமாய் நக்கல் செய்தார்.அவர் பேசி முடித்து மைக் அடுத்த வர்ணனையாளருக்கு போனது. உடனே மீண்டும் எம்.ஆர்.எப் ராட்சத பலூன் மிதக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வந்தன. எம்.ஆர்.எப் குறித்து உடனே புகழ வேண்டிய கட்டாயம் இவருக்கும். “இதோ எம்.ஆர்.எப் பலூன்” என்றார். அவர் தொடருமுன் முன் எதிர்பாராமல் ஒளிப்பதிவாளர் கோணத்தை மாற்றி நிலவைக் காட்டினார். உடனே வர்ணனையாளர் கடமை வழுவாது தொடர்ந்தார்: “இதோ எம்.ஆர்.எப் நிலா;விரைவில் நிலவிலும் எம்.ஆர்.எப் சென்று விடும் ...”

பனிமுலை: புது இணையதளம்

நண்பர்களே
பனிமுலை என்ற சென்னையை சார்ந்த கலை இலக்கிய அமைப்பின் இணையதளம் panimulai.blogspot.com செயல்படத் துவங்கி உள்ளது. இலக்கியம், அரசியல், கலாச்சாரம், அறிவியல், கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி விவாதிக்க, எழுத, பகிர்ந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு இது. அமைப்பின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. நான் கலந்து கொண்டேன். ஜி. நாகராஜனின் குறத்திமுடுக்கு பல்வேறு கோணங்களில் நுட்பமாக விவாதிக்கப்பட்டது. நீங்களும் கலந்து கொள்ளலாம். உங்கள் படைப்புகளை வாசிக்கலாம். வரும் கூட்டத்தில் படைப்பாளுமைகளை அழைக்க திட்டமிட்டுள்ளார்கள். பெரும்பாலும் பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெறும் என்று நினைக்கிறேன். பனிமுலை இணையதளத்தை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். editorpanimulai@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் படைப்புகள் அனுப்பலாம். என் நண்பர்கள் ஆரம்பித்துள்ள இந்த அருமையான முயற்சிக்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
பார்க்க: http://panimulai.blogspot.com/

Tuesday, March 23, 2010

கனவு எனும் உறங்காத கண்தால்ஸ்தாயும் அவரது பன்னாட்டு சிஷ்யகோடிகளும் விடிகாலையில் எழுந்து நடைபழகி ஒழுக்கசீலர்களாக எழுத்து வேலையை ஆரம்பித்தவர்கள் ... ப்பவர்கள். ராவெல்லாம் விழித்து இருந்து சிகரெட் புகைப்படலத்தால் மூடப்பட்டு மூளை சூடேறி ஆவேசமாய் எழுதித் தள்ளின மற்றொரு மேதை இருந்தார். தஸ்தாவஸ்கி; ராத்திரி எழுதுவது நல்ல தெளிவான எழுத்தாக இருக்காது என்று தல்ஸ்தாய் கருதினார்; புறங்கையால் அத்தகைய இருட்டு எழுத்துக்களை ஒதுக்கினார். தஸ்தாவஸ்கி தன் ஆவேச எழுத்தை விளக்கினார்: ”என் குருதியில் பேனா தோய்த்து எழுதுகிறேன்”. அவரது ”குற்றமும் தண்டனையும்” குறித்து தால்ஸ்தாய் இப்படி குசும்புடன் சொன்னார்: “முதல் சில அத்தியாயங்களை படித்ததும் நாவல் எங்கே சென்று முடியும் என்று தெரிந்து விடுகிறதே”. அவருக்கு தஸ்தாவஸ்கி மீது பிரியமும் இருந்தது. தஸ்தாவஸ்கி இறந்த சேதி அறிந்ததும் அவர் மேலும் எழுந்து வராதபடி ஒரே இரவில் புத்தகம் ஒன்றும் எழுதவில்லை என்றாலும் தால்ஸ்தாய் கண்ணீர் விட்டு அழுதார். தல்ஸ்தாயின் விமர்சனத்துக்கு திரும்புவோம்: இரவில் எழுதும் போது களைப்புற்ற மூளையால் உச்சபட்ச படைப்பூக்கத்துடன் இயங்க முடியுமா? பகலில் ஆழமாக தூங்காத பட்சத்தில் முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் ஓய்வு மட்டும் அல்ல. தூக்கத்தின் போது மனம் அன்றைய தினத்தின் வெவ்வேறு நிகழ்வுகளை குலுக்கிப் போட்டு யோசிக்கிறது. தொடர்பற்ற சம்பவங்கள், உணர்வுகள் மற்றும் சேதிகளின் எதிரெதிர் முனைகளுக்கு முடிச்சு போடுகிறது. அவதானிப்புகள் நடத்துகிறது. இதுதான் கனவு என்று விளக்குகின்றனர் சாரா மெட்னிக் மற்றும் ஜான் போர்ன். ஜான் போர்ன் சில எலிகளை சீராக ஒரே தடத்தில் ஓட விட்டார். பிறகு அவை கனவு காணும் போது மூளையை சோதித்தவர் அவை தமது கனவுப் பிரக்ஞையில் முன்பு ஒடிக் கொண்டிருந்த அதே ஓட்டத்தடத்தில் அப்போதும் இருப்பதாக கண்டு பிடித்தார். ஜெயமோகன் தான் விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கண்ட கனவு ஒன்றில் நாவலில் எழுதியிருந்த தெரு ஒன்று கனகச்சிதமாக தெரிந்ததாக சொல்லி உள்ளார். பகலில் பல முறை புணர்ந்து விட்டு தூங்குபவரின் கனவில்?சாரா தன் சோதனைகள் மூலம் ஆழ்ந்த தூக்கம் பெறாதவர்கள், கனவு காணாதவர்களுக்கு அறிவுக் கூர்மையும் அவதானிப்பு திறனும் சற்று மங்கலாக இருப்பதாக கண்டறிந்து உள்ளார். இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு படைப்பியக்கத்தில் மதிப்பு உண்டா? இரவு படைப்பாக்கத்துக்கு சிறந்த பொழுது. பகலில் எழுதுபவர்கள் நம் சூழலில் சிலரே இருக்க முடியும். இருந்தும் எழுத்தை உள்ளிட்ட படைப்பாக்க தூண்டுதல்களுக்கு உடலின் விதிமுறைகள் பொருந்தாது. கடுமையான களைப்பு மற்றும் மன அவஸ்தையில் இருந்தும் கூட சிறந்த படைப்புகள் வெளிவரலாம். காலை நடைபயிற்சி, அருகம்புல் ஜூஸ், தியானம், யோகாவுக்கு பிறகு எழுதப்படுவது மொண்ணையாகவும் அமையலாம். ஆழ்மன உற்சாகம் தான் ஆதாரம்.
ஆனால் அன்றாட வாழ்வில் செயலூக்கத்துடன் இயங்க கனவு நிலை ஒரு முக்கிய பங்காற்றுகிறது. தூக்கத்தின் உள்ளீடு மட்டும் அல்ல, கனவு வந்ததா இல்லையா, ஏன் தூக்கம் தொந்தரவுக்கு உள்ளானது போன்றவை பெரும் புதிர்த்தன்மையுடனே இப்போதும் உள்ளன. மனதை அரிக்கும் புலனாகாத கவலைகளை தூக்கமிழப்பு சுட்டிக் காட்டும். கனவு அவற்றின் விசித்திர பரிமாணங்களை ஒரு கலைஞனைப் போல் தேடிக் கொண்டே நம் முன் படைத்துக் காட்டும். அன்றாட வாழ்வில் நாம் புறக்கணிக்கக் கூடிய ஒரு மன நெருக்கடியை எதிர்பாராத தருணத்தில் கனவு புனைந்து காட்டுவது அலாதியான அனுபவமே. உதாரணமாக, எனது நண்பர் ஒருவர் தன் அண்ணனின் சிறுவயது மகன் இறந்து போவதற்கு ரெண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் அம்மரணத்தை கண்டார். இது போன்ற பல அனுபவங்கள் உங்களுக்கு நேர்ந்திருக்கலாம் அல்லது அவற்றை கேள்விப்பட்டிருக்கலாம். கனவை வாசித்தல் குறித்த விவாதங்களுக்கு இது நம்மை தூண்டலாம் என்றாலும் நமது மனம் இத்தகைய நிகழும் மற்றும் நிகழப் போகும் நிகழ்வுகளை எப்படி நுணுக்கமாக அவதானிக்கிறது, எந்த நினைவு முடிச்சுகளை இணைத்து எதிர்காலத்தை அது காண்கிறது என்பது பிரமிப்பூட்டும் விவாதம். நமக்குள் மற்றொருவன் நம்மை விட மிகுந்த விழிப்புடன் கவனித்தபடி வேகமாக முன்னகர்ந்தபடி உள்ளான் என்பது ஒரு கிளர்ச்சி ஊட்டும் சிந்தனை.
உறக்கத்தை உற்று கவனிப்பது பயனானது என்கிறது நவீன அறிவியல். கனவுகள் காமப் பீறிடல்கள் என்ற பிராயிடிய கருத்தியல் காலாவதியாகி விட்டது. கனவுகள் வாழ்வுக்கான ஒத்திகைகள் என்பதே சமகால புரிதல்.

Fakeiplplayer.com: அணி அரசியலும் அங்கதமும்கிரிக்கெட்டின் அசலான வதந்தியை ஆன்மீக மற்றும் சினிமா வதந்திகளிடம் இருந்து பிரிப்பது அடிப்படையில் பெண்கள் தாம். உதாரணமாக கிரெக் சேப்பல் கங்குலி குறித்து அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கை அல்லது தேர்வுக் கூட்டம் ஒன்றில் தோனி ராஜினாமா செய்வதாக மிரட்டியதாக தேர்வாளர் ஒருவரால் கசியவிடப்பட்ட தகவல் போன்று நக்மா/லக்‌ஷ்மி ரோய் சமாச்சாரங்கள் ருசிகரமாய் இல்லை. கிரிக்கெட் கிசுகிசுக்களின் பிறப்பிடம் நிருபரின் கற்பனை அல்ல. அரசியல் ஆதாயம் அல்லது பழிவாங்கலுக்காக, அணி அல்லது வாரியத்தின் உள்நபர் ஒருவர் அல்லது ஒரு ஆட்டக்காரர் ரகசிய தகவல்களை இவ்வாறு மூன்றாம் கரம் கொண்டு எழுத வைப்பார்கள். இத்தகைய மூன்றாம் “கர” எழுத்து ஒன்று 2009 தென்னாப்பிரிக்க ஐ.பி.எல்லின் போது பிரபலமானது. இது ஒரே ஒரு follower-ஐ கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு இணையப்பதிவு: fakeiplplayer.blogspot.com. பின்னர் இது ஒரு இணையதளமாக மாற்றப்பட்டது. fakeiplplayer.com எந்த அளவுக்கு பிரபலமானது என்றால் ஏப்ரல் 26 2009 அன்று ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஆளுக்கு 15 நிமிடங்கள் இந்த வலைப்பதிவை படித்தார்கள். அதாவது மொத்தமாக அன்று மட்டும் 37,000 மணி நேரங்கள் இந்த வலைப்பதிவு வாசிக்கப்பட்டது. இத்தளம் சர்வதேச அந்தஸ்து பெற்றது. Gaurdian மற்றும் Times பத்திரிகைகள் இந்த வலைப்பதிவு குறித்து எழுதின. ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான், நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க ஊடகங்களும் பேசின. டி.வியில் இதிலுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் போலி பரபரப்புடன் விவாதிக்கப்பட்டன. இத்தனைக்கும் இந்த வலைப்பதிவு வெளியிட்ட வதந்திகள் மற்றும் உள்தகவல்கள் ஐ.பி.எல் அணிகளில் கடைக்கோடியில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குறித்தவை.இந்திய அணிக்கு கிரெக் சாப்பல் போல் கொல்கத்தா அணிக்கு புச்சன்னன் இறக்குமதி செய்யப்பட்ட காலகட்டத்திலே fakeiplpalyer.blogspot.com ஆரம்பிக்கப்பட்டது. புச்சன்னன் அணி மேலாண்மை மற்றும் திட்டமிடலில் சித்தாந்த ரீதியிலான ஈடுபாடு கொண்டவர். ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக இவர் மிகச்சிறந்த சாதனைப் பட்டியலைக் கொண்டிருந்தாலும் நடைமுறைக்கு பயன்படாத ஒரு கோணங்கி பேராசிரியரின் சித்திரத்தையே புச்சன்னனை குறித்து அவரது அணி வீரர்கள் எழுப்பி உள்ளார்கள். ஆஸ்திரேலிய வெற்றிகளில் புச்சன்னனுக்கு எந்த பங்கும் இல்லை என்று வார்னே விமர்சித்துள்ளார். சுருக்கமாக அவர் நல்ல நிர்வாகி அல்ல. பெங்களூர் ராயல் செலஞ்சர்ஸின் பயிற்சியாளர் ரேய் ஜென்னிங்ஸைப் போன்று புச்சன்னன் கங்குலியை பதவி இறக்கி தனக்கு அனுசரித்து போகும் வெள்ளையர் ஒருவரை தலைவராக விரும்பினார். அதற்கு ஒரு-அணிக்கு-பல-தலைவர் திட்டங்கள் போல் பல அசட்டு சித்தாந்தங்களை முன்வைத்தார். முதல் ஆண்டு ஐ.பி.எல்லில் கொல்கொத்தா படுதோல்வி அடைந்தது. கிரிக்கெட் பரிச்சயமற்ற ஷாருக் இரண்டாம் ஐ.பி.எல்லில் சில தவறான மாற்றங்கள் செய்தார். புச்சன்னன் மீது அதிகபட்ச நம்பிக்கை வைத்து சாட்டையையும், விளாசுவதற்கு தன் கையையும் அவர் கையில் ஒப்படைத்தார். விளைவாக கங்குலி நீக்கப்பட்டார். நியுசிலாந்தின் மெக்கல்லம் அணித்தலைவரானார்; வங்காளிகள் கொதித்தனர். அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. தன் பீயை வாரி தானே இறைத்து விளையாடும் குழந்தை போல் புச்சன்னன் கொல்கத்தா அணியை நாசம் செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸை பற்ற வைத்து ஒரு மீடியா தீபாவளி ஆரம்பமாகியது. இந்த சூழலில் அறிமுகமான fakeiplpalyer.blogspot.com-இன் பதிவர் தன்னை கொல்கத்தா அணியின் ஆட்டக்காரர்களில் ஒருவனாக அறிமுகப்படுத்திக் கொண்டார். உள்விவகாரங்கள், பயிற்சியாளர், அணித்தலைவர் மற்றும் உரிமையாளர்கள் மீதான நக்கல் விமர்சனங்கள் மற்றும் வரப்போகும் ஆட்டத்தில் ஆடப்போகும் XI வரிசை குறித்த நம்பத்தகுந்த விவரங்களை வெளியிட்டார். உதாரணமாக, கங்குலி மூன்றாவதாக இறங்கி நிதானமாக ஆடுவார் என்று போலி-ஐ.பி.எல்காரர் சொன்னது உண்மையானது. அதைப் போன்றே இப்பதிவில் குறிப்பிடப்பட்ட புச்சனனுக்கும் அகார்க்கருக்குமான கசப்பான சம்பாஷணை பின்னர் அகார்க்கர் தான் இனவெறி காரணமாய் பயிற்சியாளரால் அவமதிக்கப்பட்டதாக கிளப்பிய அவதூறால் ஊர்ஜிதமானது. இத்தகைய தகவல்கள் பெரும் ஈர்ப்பை உருவாக்கின. Cricinfo.com இப்பதிவு குறித்து குறிப்பிட, நித்யானந்தா-சன் டீவி போல் fakeiplpalyer.blogspot.com பற்றிக் கொண்டது. ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் தளமாக மாறிப் போனது.

இத்தளத்தின் ஆரம்ப கால ஈர்ப்புக்கு மனிதனின் ஒட்டுக்கேட்கும் சுவாரஸ்யம் மற்றும் எழுத்தாளரின் ரகசிய, அந்தரங்க தொனி காரணமாக இருந்தது உண்மை தான். ஆனால் வெறும் கிசுகிசு பக்கங்களாக அல்லாமல் நுட்பமான சித்தரிப்புகள் மற்றும் அடாவடியான புல்டோசர் அங்கதமும் தளத்தின் புகழை தக்க வைக்க உதவியது. இதன் எழுத்தாளர் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டுள்ளார். பதிவுகளில் தன்னை ஒரு ஆட்டக்காரர் என்று அடையாளப்படுத்தி பேசினாலும், பின்னர் மீடியாவுக்கு அளித்த பேட்டியில் தான் ஒரு எழுத்தாளன் மட்டுமே என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் அதற்கான ஆதாரம் அவரது எழுத்து நடையிலே உள்ளது. தடுமாற்றமற்ற சிக்கலற்ற சொற்றொடர்கள். மேனாட்டு கலாச்சார வழக்காறுகள் மற்றும் இலக்கிய பரிச்சயம் இவரது அங்கதத்தில் மிளிரும் அம்சங்கள். அடுத்து ஒரு உள்நபருக்கான சார்பு நிலை இன்றி சச்சின், கங்குலியில் இருந்து புச்சன்னன் வரை பாரபட்சமின்றி கேலி செய்கிறார். இந்த பாரபட்சமற்ற தன்மை தனது ரகசிய தகவலாளியை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்கான ஒரு உத்தி என்றும் கூறலாம். கடைசியாக ஒரு தொழில்முறை ஆட்டக்காரருக்கான பிரத்யேக நிபுணத்துவம் இப்பதிவுகளில் காணப்பட இல்லை. ஒரு எழுத்தாளர் சு.ரா பிராமண சுடுகாட்டில் எரிக்கப்படுவார் என்று வீட்டில் இருந்தபடி ஊகித்தது போல் இந்த தளத்தில் எழுதப்படுபவை வெற்றுக் கற்பனை அல்ல. கொல்கத்தா அணிக்குள் புழங்கும் ஒரு நபரால் மட்டுமே அறிந்திருக்கக் கூடிய நுண் தகவல்கள் பல இந்த வலைப்பதிவுகளில் காணப்படுகின்றன.
உதாரணமாக இந்த குற்றச்சாட்டு. கொல்கத்தா அணிக்கு புச்சன்னன் வழங்கும் திட்டங்கள் அணியினருக்கு தமது பாத்திரம் என்ன என்பது குறித்த குழப்படிகளை எற்படுத்துகின்றன. இவ்வணியில் ஆடியுள்ள ஆகாஷ் சோப்ரா தனது Beyond the Blues என்ற நூலில் இதேவிதமான புகாரை எழுப்புகிறார். ஐ.பி.எல் ஆட்டங்களில் கவனமாக ஆடி விக்கெட்டுகளை காப்பாற்றும் படி அவருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. பின்னர் நன்றாக ஆடி வரும் போது அடித்தாடும் படி முரணான கட்டளை வருகிறது. சோப்ரா விளாச முயன்று வெளியேறினால், சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்ததற்காக அவர் அடுத்த ஆட்டங்களில் விலக்கப்படுகிறார்.

இணையம் அதன் அசலான வடிவில் ஒரு மாறுவேட நடனம் போன்றது. அடையாள மறைப்பு அல்லது திரிபு இணையத்தின் பெரும் அனுகூலம் மட்டும் அல்ல பெரும் சுவாரஸ்ய ஊக்கிகளில் ஒன்று. தமிழில் சாரு நிவேதிதா இந்த உத்தியை மிக வெற்றிகரமாக கையாள்பவர். தமது நண்பர்களை போலிப் பெயர்களில் குறிப்பிட்டு அவர் உருவாக்கும் மனித சித்திரங்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கான தனித்துவமான குணாதிசயங்களை ஏற்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக அலெக்ஸ். போலி ஐ.பி.எல் ஆட்டக்காரரும் இந்த பெயர் மறைப்பு உத்தி தரும் சுதந்திரத்தை பயன்படுத்தி நுண்மையான சித்திரங்களை உருவாக்கி உள்ளார். புகழ் விரும்பியும், அதற்காக சுயசர்ச்சைகளை ஏற்படுத்துபவருமான ஷாருக்கானுக்கு இவர் வழங்கி உள்ள பெயர் டில்டோ. டில்டோ பெண்கள் சுய இன்பத்துக்காக குறிக்குள் திணிக்கும் ஒரு மின்கருவி. புச்சன்னனுக்கு buccaneer. அதாவது கொள்ளையன். சேஷ்டைகளுக்கு பெயர் போன ஸ்ரீசாந்துக்கு ஆப்பம் சுத்தியா. ஆகாஷ் சோப்ரா ஷேக்ஸ்பியர். கங்குலி லார்டு. மேலும் இணைய எழுத்தின் சில வழமையான வெற்றிகர அம்சங்களை இவரிடம் காண முடிகிறது. துன்புறுத்தாத நகைச்சுவை, அபாரமான பகடி, நேரடியான வர்ணனை மற்றும் சுருக்கமான வடிவம். சிறந்த பகடி சவுரவ் கங்குலியை பற்றியது தான்.
கங்குலி தனது தலைமை பண்புக்காக பெருமளவு பாராட்டப்பட்டவர். ஒரு குறிப்பிட்ட ஐ.பி.எல் ஆட்டம் ஒன்றில் கங்குலி தலைமை தாங்குகிறார். அப்போது அவர் அணியினரை ஊக்கப்படுத்தும் விதம் உரை ஒன்றை நிகழ்த்துகிறார். அதைக் குறித்து சொல்லும் பதிவாளர் கங்குலியின் தன்னம்பிக்கையை வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார். அவரால் வேகமாக ஓடவோ, சுறுசுறுப்பாக களத்தடுப்பு செய்யவோ, எல்லைக் கோட்டில் இருந்து வலுவாக பந்தை வீசவோ முடியாது. ஆனால் இவை அத்தனையையும் மிகச்சிறப்பாக செய்யும் படி அணி வீரர்களை தயக்கமின்றி வற்புறுத்துவார். இதுவே கங்குலியின் சிறந்த தலைமைப் பண்பு. தலைவர் தனது திறமைக்கு அப்பாலான ஒன்றை தொண்டர்களை செய்ய கூச்சமின்றி ஆணையிடுவதே ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலை தானே. இந்த நிலப்பிரபுத்துவ திறன் கங்குலியின் ரத்தத்தில் ஊறி விட்ட ஒன்று என்கிறார் பதிவாளர். மனிதர்களை ஆள்வதற்கு ஒரு அசட்டு தன்னம்பிக்கை வேண்டும். மிக எளிமையான மனக்கட்டமைப்பு கொண்டவர்கள் நம் மண்ணில் எளிதாக தலைவர்கள் ஆவது இதனால் தான்.

இந்த மாயாவிப் பதிவாளர் தற்போது ஒரு புத்தகம் எழுதி வருகிறார். தனது புத்தகத்தை விட கூர்மையாக மற்றும் வெளிப்படையாக கிரிக்கெட்டின் உள்-அரசியலை பேசுவதாக அது இருக்கும் என்று அறிவித்துள்ளார். நூலில் தலைப்பு: The Gamechangers.

Sunday, March 21, 2010

பதிப்பாளரிடம் அல்ல படைப்பாளியிடம் பேசினேன்மனுஷ்யபுத்திரன் மீது ஒரு பதிப்பாளராக, ஆசிரியராக கறுப்புக் கொடி காட்ட, வெளிநடப்பு செய்ய அடுக்க ஒரு எதிர்க்கட்சியே இயங்குகிறது. கடைசியாக சொன்னது அலங்காரத்துக்கு அல்ல. சாரு புத்தகம் கிழித்த போது நிஜமாகவே சில எழுத்தாளர்கள் வெளிநடப்பு செய்ததாக எனக்கு உள்வட்டாரத் தகவல் வந்தது. என்ன, வெளிநடப்பு தான் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. அவர் அரசியல் ஆதாயத்துக்காக சில நூல்கள் வெளியிடுவதான புகார் அகநாழிகை பேட்டியில் எழுப்பப்பட்டுள்ளது. அதை ம.பு மறுத்துள்ளார். நட்சத்திரங்களையும், பிரமுகர்களையும் முன்னிறுத்துவதாக பிரபலமாக முணுமுணுக்கப்படுகிறது. அட, என் நண்பர்களுக்காகத் தானே உயிர்மை நடத்துகிறேன் என்று பதில் தருகிறார். ஆனால் இத்தனை சுவாரஸ்யங்களையும் தாண்டி சில முக்கியமான சின்ன சேதிகள் கிரிக்கெட்டில் byes போல கவனிக்கப்படாமல் போகின்றன.

முதலில் அவர் படைப்புத் தளத்தில் ஜீவாத்மாக்களுக்கு மரியாதை தருகிறார். அதற்கு அவரது ஈகோ குறுக்கே நிற்பதில்லை. தன் படிநிலையில் அவர்களுக்கான இடம் என்ன என்பதையும் வெளிப்படையாக வைத்துள்ளார். இது முக்கியமானது. முகுந்த் நாகராஜன், கருணாகரமூர்த்தி உள்ளிட்டோரின் படைப்புத் திறனை ஆரம்பத்தில் கவனிக்கவில்லையே என்ற குற்றவுணர்வு இப்போதும் அவருக்கு உள்ளது. இந்த தார்மீக உணர்வு இன்று மிகச்சிலருக்கே உள்ளது. கவிதை பிரசுரத்தில் லாப நோக்கின்றி அவர் காட்டும் ஈடுபாடு குறித்து இன்றிரவு நிலவின் கீழ் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இதோ மற்றொரு உதாரணம்.என் நண்பரும் முக்கிய தலித் கவிஞருமான நட.சிவகுமார் இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருபவர். உவர்மண் தொகுப்பால் பெரும் கவனத்துக்கு ஆளானவர். ஆனால் அவருக்கு விமர்சகர்கள் போதுமான வெளிச்சம் இன்னும் அளிக்கவில்லை. இதற்கு அரசியல் ஒரு முக்கிய காரணம். சிவகுமார் தனது இதுவரையிலான கவிதைகளை மொத்தமாய் தொகுத்து வெளியிட விரும்பினார். அவர் அணுகிய பதிப்பாளர்கள் ’கிலோவுக்கு எத்தனை பேரீச்சம் பழம் வேணும்’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்கள். உயிர்மை தனக்கு சரியான படைப்பு வெளியை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்று நம்பினார் சிவகுமார். என்னிடம் ம.பு வின் எண்ணை வாங்கினார். இரண்டு வாரங்கள் பேசத் தயங்கி இருக்கிறார். முடியாது என்று விட்டால் அவமானமாகி போகுமே என்ற அச்சம். இத்தனை வருடங்களாய் தமிழ்ச்சூழலில் இயங்கியதால் ஒரு மூத்த எழுத்தாளனுக்குள் சேகரமாகிய அச்சம். பிறகு போனால் போகட்டும் என்று பேசியிருக்கிறார். அவர் சற்றும் எதிர்பாராதபடி அன்புடனும் மரியாதையுடனும் பேசியிருக்கிறார் ம.பு. பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட சிவகுமார் இப்படி சொன்னார்:
“மனுஷ்யபுத்திரன் ஒரு வணிகராக என்னை நோக்கவில்லை. ஒரு படைப்பாளியாக என்னிடம் அவர் பேசினார்!”

படைப்பு அரசியலின் அச்சுபிச்சு கருத்து நெரிசலில் சிவப்பு விளக்கு மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்?

Saturday, March 20, 2010

வா.மணிகண்டனின் நடுகற்கள் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்

வா.மணிகண்டனின் இக்கட்டுரையில் சில எழுத்தாளர்கள், நன்றாக எழுதுபவர்களாக இருந்தும், ஏன் காணாமல் போகிறார்கள் என்பது குறித்து விவாதிக்கிறார். மிக லாவகமாக கவித்துவத்துடன் பாயும் மொழி. படியுங்கள் ...

புகார்கள் தூறலாகவும் சமயங்களில் பெருமழையாகவும் பெய்து எப்பொழுதும் நம்மை ஈரமாகவே வைத்திருக்கின்றன என்று சொல்வதும் கூட புகார்தானே. புகார்கள் இல்லையென்றால் வாழ்கை சலிப்படைந்து விடுகிறது. யாரைப்பற்றியாவது...
புகார்கள் தூறலாகவும் சமயங்களில் பெருமழையாகவும் பெய்து எப்பொழுதும் நம்மை ஈரமாகவே வைத்திருக்கின்றன என்று சொல்வதும் கூட புகார்தானே. புகார்கள் இல்லையென்றால் வாழ்கை சலிப்படைந்து விடுகிறது. யாரைப்பற்றியாவது எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதன் மூலமாக புனைவின் சுவாரஸியத்தை அடுத்தவருக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

விருட்சம் சிற்றிதழில் பிரசுரமான கவிதைகளை தொகுப்பாக்கி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். தொகுப்பில் இருக்கும் பல கவிஞர்களின் பெயர்கள் எனக்கு அறிமுகம் இல்லை அல்லது அவர்கள் எழுதிக் கொண்டிருந்த போது நான் பிறக்காமலோ அல்லது பிறந்திருந்தால் கவிதைகளை வாசிக்காமலோ இருந்துவிட்டேன். நான் வாசிக்க ஆரம்பிக்கும் போது அவர்களை இலக்கிய உலகம் முற்றாக மறந்துவிட்டிருந்தது.

தொகுப்பின் கவிதைகளை இரண்டு மூன்றிரவுகளாக வாசித்துக் கொண்டிருக்கும் போது இந்த பெயர் அறியாத கவிஞர்கள் விரல் பிடித்து கவித்துவத்தின் பெருவெளிக்குள் அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கவிதைக்குள் செல்லும் அடுத்த கணத்தில், கவிதையை சற்றே மறந்து, அந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் பெயரை கவனிக்கும் மூன்று வினாடிகளும் பதட்டமானதாகவே இருக்கிறது. முகம் தெரியாத ஆள் ஒருவனை நம்பி நடுவழி கடந்துவிட்ட சிறு குழந்தையின் மனநிலைக்கு வந்துவிடுவதாகக் தோன்றுகிறது. எழுதியவனிடம் இருந்து படைப்பை நாம் பறித்துக் கொள்கிறோமா அல்லது அவன் தன் படைப்பை தொலைத்துவிட்டு எங்காவது தேடிக் கொண்டிருக்கிறானா? ஒரு குழந்தையை அனாதையாக்குவது போலவேதான் ஒரு கவிதையை அனாதையாக்குவதும் துக்ககரமானது. புகார் சொல்லுதல் வாழ்க்கையை சுவாரஸியமாக்குகிறது என்ற முதல்பத்தி வாதத்துக்கு துணையாக 'காணாமல் போன படைப்பாளிகளை' குறித்தானதாக எனது புகாரை முன்வைக்கிறேன்.

படைப்பின் அனுபவத்தோடு நின்றுகொள்ளாமல் படைப்பாளியை பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என எழும் எளிய கேள்வியை இந்த இடத்தில் நிராகரித்துவிடலாம் என்று தோன்றுகிறது. பிரமாதமான கவிதானுபவத்தை தரும் வரிகளை எழுதிய கவிஞனின் பெயர் எனக்கு தேவைப்படுகிறது. அவனது மற்ற எழுத்துக்கள் ஆசுவாசமானதாக இருக்கும் என அழுத்தமாக நம்புகிறேன். ஆனால் சிற்றிதழ்களின் மொத்த தொகுப்புகளை வாசிக்கும் போது மிக முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கும் பல கவிஞர்களின் பெயர்கள் கூட சமகாலத்தில் உச்சரிக்கப்படுவதில்லை என்பது கொஞ்சம் ஆதங்கமாக இருக்கிறது. இதே அனுபவம் ஞானரதம் இதழ் தொகுப்பை வாசிக்கும் போது நிகழ்ந்தது. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்?.

இந்தச் சமயத்தில் கவிஞர் சுகுமாரனோடு பேசும் போது கவிஞன், கவிதாளுமை என்ற பதங்களைப் பிரயோகப்படுத்தினார். அந்தச் சொற்களை படைப்பாளி, படைப்பாளுமை என்ற சொற்களோடு இணைத்துப் பார்க்கலாம். படைப்பாளி என்பவன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சில படைப்புகளை உருவாக்குகிறான். ஆற்று நீரோட்டத்தில் ஒரு கல்லை எறிவதைப் போல. இந்த எறிதலுக்குப் பிறகு அமைதியாகிவிடுகிறான். உருவாக்கப்பட்ட படைப்புகளை காலம் தன் போக்கில் வெறும் ஒற்றைத்தாளாக மாற்றி தன் பெட்டகத்துக்குள் அடுக்கிக் கொண்டே இருக்கிறது. அடுக்கிச் செல்லப்படும் இந்த ஒற்றைத்தாள்களுக்குள் தான் காணாமல் போனவர்களின் படைப்புகள் புதைந்துவிடுகின்றன. அமைதியாகிவிட்ட படைப்பாளியின் சுவடும் மெல்ல கரைந்தழிந்துவிடுகிறது.

படைப்பாளுமை என்பவன் படைப்பாளியின் அடுத்த நிலை. தான் சார்ந்த மொழிக்கான அல்லது சமூகத்துக்கான தன் பங்களிப்பை ஏதாவது ஒரு விதத்தில் தன் படைப்புகளின் மூலமாக அளித்துவிடுகிறான். படைப்பின் வடிவ மாற்றம், உள்ளடக்கம், படைப்பின் வெளிப்பாட்டு முறை என ஏதாவதொன்றில் தன் இருப்பை அழுந்தப் பதியச் செய்கிறான். இந்த பங்களிப்பின் மூலமாகவே அவனது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.
படைப்பாளியிலிருந்து படைப்பாளுமை என்ற தளத்திற்கு நகர்வதற்கு மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அது வெற்றுச் சவடல்களாலும், தன்னிலிருந்து உருவாக்கும் சலனத்தாலும் நிகழ்வதில்லை. தொடர்ந்த வாசிப்பும் அசதியில்லாத படைப்பூக்கத்துடன் கூடிய இயக்கத்தில் இருக்கும் படைப்பாளிதான் தன் தடத்தை அழுத்தமாக பதிக்கிறான்.

இதை கட்டுரையை எழுதுவது ஒரு கவிதையோடு காணாமல் போனவர்கள் கவிஞர்கள் அன்று என்பதை பறைசாற்றுவதற்காக இல்லை. மறக்கப்பட்டவர்கள் நல்ல படைப்பாளிகள் இல்லை என்பதுதான் என்பது உன் கூற்றா என்றால், அதற்கான பதிலும் "இல்லை"தான். அந்த மறக்கப்பட்டவர்கள் பட்டியலில் மிக முக்கியமான படைப்பாளிகள் வரிசையில் இருக்க வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் செயல்பாட்டின்மையாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அவர்கள் அமைதியாகும் சமயத்தில் காலம் அடித்துச் சென்று ஒதுக்கிவிடுகிறது. எந்தப் பீடமும் காலத்தையோ வரலாற்றையோ அவைகளின் ஓட்டத்தில் இருந்து நிறுத்திவிடுவதில்லை.

இன்றைய இலக்கிய வடிவங்களுக்கு நாம் வந்து சேர மூன்றாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. திருவள்ளுவரை விட்டால் இடையில் ஓரிருவரின் பெயர்களை மட்டும் சொல்லிக் கொண்டு மிக அருகாமையில் பாரதியில் வந்து நின்று விடுகிறோம். இடைப்பட்ட காலத்தில் எழுதியவர்கள் எங்கே என்பதும் அவர்களுக்கான இடம் இலக்கியத்தில் இல்லாமல் போனது ஏன் என்பதும் பெரிய கேள்வியாகிறது. மிக எளிதாக காலம் படைப்பாளிகளைத் தாண்டி வந்திருக்கிறது. காலத்திற்கு மரத்தில் இருந்து உதிரும் சருகும் படைப்பாளியும் ஒன்றுதான். ஒரே வேகத்தில்தான் அடித்துச் சென்றிருக்கிறது.

ஒற்றைப்படைப்பின் மூலமாக ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்பாளிகளை கணக்கு எடுத்தாலும் ஒரு பட்டியல் வரலாம். ஆனால் அது சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். வாசிப்பு போலவேதான் எழுத்தும் பெருமளவில் பயிற்சி சார்ந்திருக்கிறது. படைப்பாளி என்பவன் அடுத்த நிலைக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்க அவன் தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது. அவன் நிற்கும் போது, அவனை மற்றவர்கள் மறக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதைப்பற்றி பேசும் போது ஒரு குதர்க்கம் நிகழ்ந்துவிடலாம். எண்ணிக்கையும் எழுதிய பக்கங்களும் தான் படைப்பாளியின் இடத்தை உறுதிப்படுத்துவதாக சொல்வதைப் போன்ற கோணம் உருவானால், அந்தக் கருத்தாக்கத்தை கடுமையாக மறுப்பதற்காக படைப்பாளுமை என்பவன் படைப்பியக்கத்தில் தன் பங்களிப்பின் மூலமாக அதன் 'திசையை சற்றேனும் மாற்றியமைக்கிறான்' என்பதை கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நான்காவது பத்தியில் கேட்ட அதே கேள்வி. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்? இந்தப் புள்ளியில் கவிஞன், கவிதாளுமை என்ற விவாதம் தொடர ஆரம்பிக்கலாம். (புகாரில் ஆரம்பித்து புகாரில் முடிக்க வேண்டும் என்பதால், தொடர்ந்து வாசிக்கவும்) ஆனால் நாம் சித்து விளையாட்டுகளாலும், கூட்டம் சேர்ப்பதாலும், அச்சுப்பிரதியின் மூன்றாம் பக்க மூலையில் பெயர் வருவதனாலும் இலக்கிய உலகின் பிதாமகன் என்று நினைப்பைச் சூடிக் கொள்கிறோம்.

இயக்குனர் ராமின் முத்துக்குமார் இறுதி ஊர்வல பதிவு


இயக்குனர் ராம் தமிழுணர்வாளர். திறமையான எழுத்தாளரும் கூட. ஈழத்துக்காக உயிர் துறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அது தொடர்பான அரசியலில் பங்காற்றிய ராம் இச்சம்பங்கள் குறித்து இனியொரு தளத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். பழ. நெடுமாறன், வை.கோ, திருமாவளவன் போன்றோர் நடிப்பது இயக்குனருக்கு எளிதில் புலனாகிறது. இந்த எழுச்சியான கட்டத்தில் இனவுணர்வுடன் கலந்து கொள்ளும் திரைத் துறையினர் முன் அரசியல்வாதிகள் அரங்கேற்றும் சினிமாவின் திரைக்கதையின் சூழ்ச்சியும் பொய்மையும் கொண்டு எதிர்பாரா திருப்பங்களுடன் எழுதப்பட்டது.திருமாவும் அவர் கட்சியினரும் மாணவர்களை தாக்குவது, வலுக்கட்டாயமாக பிணத்தை கைப்பற்றி, ஏற்கனவே திட்டமிட்டிருந்த சுடுகாட்டுப் பாதையை மாற்றி தங்கள் ஆதரவாளர்களின் பாதையில் கொண்டு செல்வது, பின்னர் மாணவர்களை அராஜகவாதிகள் என்பது, ஆளுங்கட்சிக்காரர்கள் மாணவ்ர்களை திசை திருப்ப விடுப்பு அறிவிப்பது போன்றவை ஒன்று சொல்கின்றன. போராட்ட அரசியல் நமது கலகவாத தலைவர்களுக்கு ஆரம்ப முதலீடு மட்டுமே. இன்று பங்குசந்தை நிபுணர்கள் போல் அரசியல் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். ராம் மற்றொரு முக்கிய அரசியல் பாத்திரம் குறித்து அவதானிக்கிறார்: பழ. நெடுமாறன் முத்துக்குமரன் பிணத்தை உடனடி எடுப்பதற்கு ஒரு காரணம் சொல்கிறார். சனிக்கிழமை வரை தாமதிக்கக் கூடாது. ஏனென்றால் சனிப்பிணம் தனியே போகாதாம். என்ன பிற்போக்கான மனிதர். இவர் எந்த தலைமுறையின் எச்சம்.

ராம் இக்கட்டுரையை நிதானமாக, நேரடியாக எழுதியுள்ளார். உண்டு துய்ப்பதை தவிர வேறெதற்கும் வாய் திறக்காத ஒரு சமூகத்தின் அவலத்தையும், தலைவர்களின் பாசாங்கை உணர்ச்சிவசப்படாமல் நுட்பமாக எழுதுகிறார். இதுவே நம்மை சுருக்கென்று குத்துகிறது. இந்த வலி நமக்கு அவசியம்.

Friday, March 19, 2010

T20 சூத்திரம் என்ன?முதலில் மட்டையாடும் அணிகள் ஐந்து ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து விட்டால் வெற்றிதான் என்றார் சுஜாதா. T20 அப்போது முலை சப்பிக் கொண்டிருந்தது. இப்போது ஐ.பி.எல்லின் மூன்றாம் வருட தள்ளுவண்டி பருவத்தில் நூற்றுக்கணக்கான ஆட்டங்களின் வரலாறு சொல்வது வேறாக உள்ளது. நிதானமான அதிரடிதான் வெற்றிக்கு ஆதாரம்.

சச்சின், சேவாக் உள்ளிட்ட மட்டையாளர்கள் இயல்பான ஆட்டத்தின் மூலமே 10 ஓவர் ரேட்டை தக்க வைக்கிறார்கள். பின்னர் அவர்கள் சற்று பேராசைப்பட்டு வெளியேற அணி சரிகிறது. அரிதாகவே பின் தொடர்பவர்கள் அதே வேகத்தை ஆபத்தின்றி தக்க வைத்து 200-க்கு மேல் அணியை அழைத்து செல்கிறார்கள். கவனமும் உழைப்பும் செலுத்த தயாருள்ள மட்டையாளர்களுக்கு T20-இல் முக்கியமான இடம் உள்ளது இப்போது உறுதியாகி உள்ளது. முதல் ஐ.பி.எல்லில் ஷான் மார்ஷ், ரெண்டாம் வருடத்தில் டிராவிட், தற்போதைய ஐ.பி.எலில் காலிசும் இதை உண்மையாக்கி வருகிறார்கள். இன்றைய (மார்ச் 19) ஆட்டத்தில் சேவாக் மேலும் உன்னிப்பாக உழைக்க விழைந்திருந்தால் எளிதாக அவரது அணி 220 தாண்டியிருக்கும். பஞ்சாபுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் கில்கிறிஸ்ட் விசயத்தில் இதுவே நடந்துள்ளது. 300 ஸ்டுரைக் ரேட்டில் அவர் ஆடி என்ன பயன்? 168 தாண்ட முடியவில்லையே அணியால்.சுஜாதா அன்று சொன்னதை மேலும் வளர்த்தெடுப்போம். ஒரு நல்ல ஆவேச துவக்கம் அவசியம். 5 ஓவர்களில் 60 என்று வைத்துக் கொள்வோம். பிறகு இந்த துவக்க மட்டையாளர்கள் விக்கெட்டை சீட்டுக்கட்டாய் விசிறக் கூடாது. அடுத்த பத்து ஓவர்களுக்கு அவர்களே நின்றாட முயல வேண்டும். 70-80 ஓட்டங்கள் குறைந்த பட்சம் உத்தேசிக்கலாம். ஒரு சுமாரான ஆடுதளத்தில் கூட ஆபத்தின்றி இதை சாதிக்க முடியும். அடுத்து கடைசி பத்து ஓவர்களில் 50-லிருந்து 80-வரை எடுத்தால் நல்ல ஸ்கோர் உறுதி. இப்படியான செயல்திட்டத்துடன் செல்லும் அணிகளுக்கு 130-140 வகையறா ஸ்கோர்களில் முட்டி நிற்கும் அபாயம் நேராது.

ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு மட்டும் சாதகமாக உள்ள பட்சத்தில் அதிரடி வீரர்களை உள்ளுணர்வு படியே சரளமாக ஆட அனுமதிக்கலாம். இல்லாத பட்சத்தில் மேற்சொன்ன திட்டமே அடுத்து வரும் வருடங்களில் நாம் பார்ப்பதாக இருக்கும்.

இப்போது ஆடி வரும் மட்டையாளர்கள் செய்யும் முக்கிய தவறு அடுத்து வருபவர்களை நம்பி வேலையை அரைகுறையாக விட்டு வெளியேறுவது. இதற்கு காரணம் 20 ஓவர்கள் தானே என்ற மிகை-நம்பிக்கை. ஒரு அணியின் முன்னணி மட்டையாட்ட வரிசையை குடைசாய வைக்க ஆறு பந்துகள் போதும். சற்று அதிகப்படி என்றால் 12 பந்துகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு வீச்சாளர்கள் தொடர்ச்சியாய் ஹேட்ரிக் வீழ்த்தினால்?

குழந்தைத்தன மற்றும் பெற்றோர்த்தன புகைப்படங்கள்: நேரலின் உலகம்தாமரை இதழில் வலைப்பக்கங்கள் குறித்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். இம்முறை ஒரு புகைபட தளம் குறித்து. குழந்தை சித்திரங்கள் ...


புகைப்படங்களுக்கு இரண்டு நோக்கங்கள். ஆவணப்படுத்துவது; காட்சிகளை படைப்பாக மாற்றுவது. நம் வெளியை பெரும்பாலும் ஆக்கிரமித்து உள்ளவை ஆவணப் புகைப்படங்கள் தாம். இந்த நொடி கூட எங்காவது ஓரிடத்தில் வாழ்வின் பிம்பங்கள் கைப்பேசி அல்லது point and shoot எனப்படும் எளிய கருவிக்குள் பதிவாகிக் கொண்டிருக்கும். ஆனால் தமிழில் அசிரத்தையாக எழுதப்படும் கோடிக்கணக்கான கவிதைகளில் உள்ள குறைந்தபட்ச அழகியல் தன்மையோ வடிவ ஒழுங்கோ கூட இவற்றில் இருப்பதில்லை. இதற்கு மூன்று காரணங்கள்: தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் பணவசதி போதாமை. ஏழைக்கவிஞன் என்பது போல் ஏழை புகைப்படக் கலைஞன் சாத்தியம் இல்லை. குறைந்த விலையிலான எளிய கருவிகள் புகைப்படங்களின் கலை மற்றும் ஆவண சாத்தியங்களை நிச்சயம் கட்டுப்படுத்தும். அதே போல் லட்ச ரூபாயில் வாங்கிய கருவி கூட தொழில்நுட்ப பரிச்சயமோ படைப்பூக்கமோ அற்றவர்களால் இயக்கப்படும் போது காண சகிக்காத படங்கள் தாம் கிடைக்கும். நமது திருமணம் உள்ளிட்ட பிற வைபவங்களை பதிவாக்கும் பெரும்பாலான தொழில்முறை புகைப்படக்காரர்கள் பல அடிப்படையான தொழில்நுட்ப தவறுகள் செய்கிறார்கள். மேலும் ஒரு நிகழ்ச்சியின் மனநிலை அல்லது அபூர்வமான தருணங்கள் பதிவாகாமல் இப்படங்கள் வறட்சியாக இருக்கும். அழகியல்பூர்வமாய் நேர்த்தியாக ஆவணப்படுத்தும் படங்கள் குறித்த பிரக்ஞை நமக்குத் தேவை.

Njoythemoment.comகுழந்தைப் புகைப்படங்களையும் நாம் இவ்வாறு வகைப்படுத்தலாம்: பெற்றோர்களின் குழந்தைப்படங்கள்; குழந்தைகளின் குழந்தைப்படங்கள். முதல் வகையில் பெற்றோர் பருவடிவிலோ பிரக்ஞைபூர்வமாகவோ குழந்தைகளின் எல்லைக்கோட்டுக்குள் நிறைந்திருப்பர். இரண்டாவதில் குழந்தைகள் தங்களோடு இருக்கும் எதார்த்த தருணங்கள் இருக்கும். முதல் வகைப்படங்கள் பார்க்கும் போது ஒரு தந்தைமை \ தாய்மை பூரிப்பு ஏற்படலாம்; அபாரமான நெகிழ்ச்சி ஏற்படுத்தும் படங்கள் இவை. ஆனாலும் குழந்தைகள் இவற்றில் ஒரு துணை-ஜீவனாக மட்டுமே உள்ளதை மறுக்க முடியாது. குழந்தைகளுக்கு தனித்த ஈகோ உண்டு என நிறுவப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கான அனைத்து அசட்டுத்தனங்கள் மற்றும் படைப்பூக்கத்தை குழந்தைகள் வெளிப்படுத்திய படி இருக்கும். இவற்றை பதிவு செய்யும் இரண்டாவது வகை புகைப்படங்கள் ஆழமான மனக்கிளர்ச்சி அளிப்பவை. நேரல் என்பவர் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞர். ஆஸ்திரேலிவில் மெல்போர்னை சேர்ந்தவர். இயற்கை, நிலவெளி, நகரம், காதல் பற்றிய படங்களை எடுத்திருந்தாலும் குழந்தைப்படங்கள் தாம் இவரது பிராந்தியம். Njoythemoment.com-இல் நேரலின் பல அருமையான புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நான் மேலே குறிப்பிட்டதில் முதல் வகையை சேர்ந்தவை.நேரலுக்கு இரண்டு குழந்தைகள். இக்குழந்தைகள் குறித்த ஏராளமான நுணுக்கமான சித்திரங்கள் இத்தளத்தில் உள்ளன. கை நிறைய பாப்பாக்களுடன் தோன்றும் நேரல் நமக்கு தால்ஸ்தாயின் தாய்மைப் பாத்திரங்களான நட்டாஷா மற்றும் கிற்றியை (போரும் அமைதியும் மற்றும் அன்னா கரனினா) நினைவுறுத்துகிறார். இவரது பகலும் இரவும், குற்றங்களும் நன்மைகளும் குழந்தைகளிடத்து ஆரம்பித்து அவர்களிடத்தே முடிகின்றன. பெண்கள் முழுநேரத் தாயாக இருப்பதில் சலிப்பும் குற்ற உணர்வும் உணரும் இன்றைய காலகட்டத்தில் நேரல் கடந்த தலைமுறையின் எச்சமாக படுகிறார்.நேரல் தனது இரு பாப்பாக்களையும் ஆளுக்கு ஒரு வருடம் தினமும் படம் எடுத்திருக்கிறார். மொத்தம் 732 புகைப்படங்கள். இவை அத்தனையும் தொகுத்து பின்னணி இசையுடன் ஸ்லைட் ஷோ எனும் ஓடும் படத்தோகுப்பாக தன் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் தாம் நேரலின் தலைசிறந்த படைப்புகள் எனலாம். இந்த 732 படங்களில் குழந்தைமையின் பல்வேறு விழிப்பு நிலைகள் மற்றும் இப்பொழுதுகளில் உலகை உற்று நோக்கி குழந்தை மேற்கொள்ளும் உறவாடல்கள் உற்சாகமாக சொல்லப்பட்டுள்ளன. கசப்பு, சோர்வு, வியப்பு, கவனம், தேடல் விழைவு, களிப்பு என ஒரு வினோதப் பூவின் பலவண்ண இதழ்கள் போல் விதவித உணர்வு நிலைகள் தங்குதடையின்று வெளிப்படுகின்றன. தேங்கித் தயங்கி செல்லும் மனித ஆறு இந்த பிறீச்சிடும் ஊற்றில் இருந்து அல்லவா ஆரம்பிக்கிறது.உணவகத்தில் அப்பாவிடம் இருந்து பட்சணப் பட்டியலை படிக்க முயலும், வழவழ படக்கதை நூலை பிறாண்டிப் பார்க்கும், கவனமாக விளையாடும், அப்பாவால் நடை பழக்கப்படும், ஊஞ்சலாடும், பசுவின் முகம் தடவும், கண்ணாடிக் கோப்பைக்குள் கையிட்டு கலக்கும், சைக்கிள் பழகும், கடற்கரையில் மணல் கிளறும், எதையும் கடித்து சோதிக்கும், அக்காவுடன் சேர்ந்து குனிந்து தரையில் தேடும், ஏணி ஏறும், அம்மாவின் தோல்பையை மாட்டி நடக்கும், பெரியவர்களுக்கான ஹைடுரோலிக் உடற்பயிற்சி கருவியை இயக்கப் பார்க்கும், சமையலறையில் கொதிக்கும் தேனீர் பாத்திரத்தை வேடிக்கை பார்க்கும், காரின் இருட்டுக்குள் தனியாக இருக்கும், தோள்களுக்கு மேலாக தூக்கப்படும், தனிமை வயப்படும், பொம்மை கழுத்தை நெரிக்கும் .. இப்படி எத்தனை வித குழந்தைச் செயல்கள்! இந்த காட்சி துணுக்குகள் இக்குழந்தைகள் உலகுடன் செய்யும் தொடர்புறுத்தல்களை ஆவணப்படுத்துவதுடன் ஒரு ஆழமான கவித்துவ பார்வையையும் அளிக்கின்றன. குறிப்பாக பின்கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு படம். சிறுவன் கோணலாக துவளும் தன் கால்சட்டையின் பிரக்ஞையின்றி ஒரு நடைபாதையில் செல்கிறான். இந்த கல்மிஷமில்லாத நேர்த்தியின்மைதான் குழந்தைகளின் உலகை புத்துணர்வுடன் எப்போதும் வைத்திருக்கிறது. அக்குழந்தையின் பின்பக்க நடை பாவனை இதை நுட்பமாக சித்தரிக்கிறது.நெரலின் படங்கள் நிர்மலமான குழந்தைமையை முன்னிறுத்துகின்றன; மிகையாக கொண்டாடுகின்றன. ஆனாலும், எல்லா சிறந்த கற்பனாவாத படைப்புகளையும் போல இவை கசப்பற்ற கண்ணீரையும், ஆணவமற்ற புன்னகையையும் வெளிப்பட வைப்பதால் முக்கியமானவை ஆகின்றன.

Tuesday, March 16, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 15ரயில் தண்டவாளங்களின் மறுபுறம் வாழைப்பழ நிறுவனத்தின் தனிப்பட்ட சொர்க்கபூமி, மின்கம்பி வேலி நீக்கப்பட்டு, பனைமரங்கள் ஏதுமின்றி, போப்பிச்செடிகள் மத்தியில் பாழடைந்த வீடுகள் மற்றும் தீயில் அழிந்த மருத்துவமனையின் கற்கூளத்துடன் புதர்காடாக இருந்தது. ஒரு கதவோ, சுவற்றில் சிறுவிரிசலோ அல்லது மானிட அடையாளமோ என்னில் ஆழ்மன நினைவெழுச்சியை ஏற்படுத்தவில்லை.

Monday, March 15, 2010

தெரிந்ததும் தெரியாதவையும் (அறிவியல் தொடர்)

பெண்களும் குடிக்கலாச்சாரமும்மதுவும் புகையும் பரிச்சய வலையை வளர்ப்பதில் முக்கியமானவை. போனபோ குரங்குகள் உறவை பேணுவதற்கு செக்ஸை பயன்படுத்துவதை இதனுடன் ஒப்பிடலாம். அல்லது பகிரப்படும் சிறந்த ஒரு ஜோக்கின் சிரிப்பலைகளுக்கு இணையாக சொல்லலாம். ஒரு அணுக்கமான நட்பு வட்டாரம் ஏற்பட ஒத்த மன அமைப்பை எப்போதும் எதிர்பார்க்க முடியாது. புகை மற்றும் மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் உறவாடலை லகுவாக்குகின்றன. போதை ஒரு மிகையான மனஎழுச்சியை ஏற்படுத்தி வாழ்வின் பல்வேறு அசட்டுத்தனங்களை கடந்திட பயன்படுகிறது. நமது நேரம், பணம், குடும்ப அமைப்பு ஆகியவற்றை போதை வஸ்துக்கள் நேர்மறையாக பாதிப்பதற்கு நமது கலாச்சாரத்துடன் இவை சமரசம் செய்யாதது ஒரு முக்கிய காரணம். போதை குறித்து நமது சமூகத்தில் அறிவியல்பூர்வமான ஒரு வெளிப்படை விவாதம் இன்னும் நிகழவில்லை. ஒருபுறம் இதன் முக்கியமான பரிமாணங்கள் மறைக்கப்பட்டு ஒரு சீரழிவாக, பாவமாக முன்வைக்கப்பட, மறுகோடியில் போதை மேலும் உல்லாசமானதாக ஒரு மீறல் அரசியலாக நிகழ்த்தப்படுகிறது. எப்போதும் போல் இரண்டு மிகைகளுக்கு மத்தியில் நிஜம் ஒற்றைக் கண்ணாய் இமை மூடி இருக்கிறது.

மேற்கில் போதை தொடர்ச்சியான ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது. கர்ப்பவதிகள் மது அருந்தினால் பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அப்படி எனில், குழந்தை பெற விரும்பாத அல்லது பெற்றுவிட்ட பெண்கள் அருந்தலாமா? மார்பகப் புற்று நோய் வாய்ப்பை மிகச்சிறு அளவில் அதிகரிக்க மது காரணமாகலாம். ஆனால் மிதமான மது அருந்தல் பெண்களை இதய நோய்களில் இருந்து ஓரளவு காப்பாற்றுகிறது. ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களில் சராசரி எடை கொண்டோரின் உடலை மெலிதாக தக்க வைக்க மிதமான குடி பயன்படுகிறது. இந்த சமீப கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. மிதமான மது அருந்தல் என்றால் எத்தனை பெக்?பொதுவாக பெண்களுக்கு ஆண்களை விட மதுவை தாங்கும் ஆற்றல் குறைவு. மது உடலில் நுழைந்து உடலில் உள்ள நீருடன் கலந்து தன் ஆற்றலை சிறுக சிறுக கரைக்கிறது. பெண்களுக்கு ஆண்களை விட எடை குறைவு. இதனால் உடலில் நீர் அளவும் குறைவு. இக்காரணத்தால் மித-போதை விதிப்படி ஆண்கள் நாளுக்கு இரண்டு பெக்குகள் அடிக்கலாம் என்றால் பெண்களுக்கு ஒன்று மட்டுமே. இந்தியாவில் நகரமயமாக்கல் விளைவால் வேலைக்கு செல்லும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பெண்கள் பொருளாதார சுயசார்பு பெற்று விட்டாலும், அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாத சுதந்திரங்களில் மதுவும் ஒன்று. நம் மத்திய\உயர்மத்திய பார்களில் இவர்களுக்கு மட்டும் கலாச்சார வெளி மறுக்கப்படுவது ஏன்?

குடியும் உடல் எடையும் வன்முறையை தூண்டுமா?குடிக்கும் உடல் எடைக்கும் மேலும் தொடர்பு உண்டு. ஆஜானுபாகுவான நபர்கள் குடிக்கும் போது எளிதில் வன்மம் கொள்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இந்த ஆய்வில் போதையில் இருந்த பல்வேறு எடையை சேர்ந்த நபர்கள் உட்படுத்தப்பட்டார்கள். அவர்களிடம் ஒரு கருவி தரப்பட்டு அதன் பொத்தான்களை அழுத்தினால் கண்ணுக்கு தெரியாத எதிரி ஒருவர் மின்-அதிர்ச்சி அடைவார் என்று பொய்யாக கூறப்பட்டது. ஆய்வு முடிவில் அதிக எடையும் உயரமும் கூடியவர்கள் அதிக முறைகள் மின்–அதிர்ச்சி தர முயன்றது தெரிவ வந்தது. இந்த தமாஷான ஆய்விலும் நமக்கு போதை மனதின் மீது ஒரு சிறு வெளிச்சம் கிடைப்பதை மறுக்க முடியாது.

நுண்நோக்கியின் கீழ் சிகரெட்

மதுவை குறைந்த அளவில் ஏனும் அங்கீகரிக்கும் அறிவியல் புகைப்பழக்கத்தை முழுமையாகவே நிராகரிக்கிறது. புகைப்பழக்கம் எளிதில் அடிமைப்படுத்துவது, புகைக்காதவரையும் பாதிக்கும் அஹிம்சை போக்கு கொண்டது. மிக முக்கியமாக புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இத்தனை பாதகங்களில் இருந்தும் மாறுபட்டு சிகரெட்டில் நுண்ணியிர்கள் உள்ளதாய் தற்போது பேசப்படுகிறது. கடந்த வருட செப்டம்பரில் Immunological Research எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று 5 சிகரெட் நிறுவனங்கள் வெளியிடும் 11 வகையான சிகரெட்டுகளில் நுரையீரல் நோய் ஏற்படுத்தும் நுண்ணியிர்கள் மட்டுமல்ல நுண்ணியிர்கள் உருவாக்கும் நச்சுப்பொருட்களும் உள்ளதாய் சொல்லுகிறது. இந்த ஆய்வை தலைமை தாங்கிய பவுலி எனும் ஆய்வாளர் இந்த உண்மையை சிகரெட் நிறுவனங்கள் நெடுங்காலமாய் அறிந்து வந்துள்ளன என்கிறார். இதற்கு சான்று சிகரெட் நிறுவங்கள் சமீபத்தில் வாங்கி உள்ள காப்புரிமைகள். குறிப்பாக பிலிப் மோரிஸ் இன்கார்பரேசன் வாங்கியுள்ள மூன்று காப்புரிமைகள்.

சிகரெட்டுக்காக பதப்படுத்தப்பட்ட புகையிலையில் உள்ள நுண்கிருமிகள் எண்டோடொக்சின் எனும் நச்சுப்பொருளையும் நைடொரோசமைன் எனும் வேதியல் பொருளையும் உருவாக்குகின்றன. இதில் நைடொரோசமைன்களை சுத்திகரிக்கும் ஒரு செலவு குறைந்த முறைக்கான கண்டுபிடிப்புக்கான காப்புரிமைகள் மீதே நிறுவனங்கள் குறிப்பாக ஆர்வம் காட்டி உள்ளன. சுவாரஸ்யம் என்னவென்றால் பச்சை புகையிலையில் நுண்ணியிர்கள் வேலி போடாது. போதுமான வெளிச்சம் அற்ற, ஈரப்பதமும், வெப்பமும் மிகுந்த கிடங்குகளில் புகையிலை பதப்படுத்தப்படுவது தான் நுண்ணியிர் குடியிருப்புக்கு காரணம் பவுலி கருதுகிறார். இத்தனைக் காலமும் இந்த நச்சு உண்மையை மறைத்து வைத்ததற்காக அமெரிக்க FDA நிறுவனம் இந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிகரெட் போதைக்கு ஒருவரை அடிமைப்படுத்த நிறுவனங்கள் அமோனியா உள்ளிட்ட பல ரசாயனங்களை பயன்படுத்துவதாக ஒரு சர்ச்சை அமெரிக்காவில் எழுந்து அதிலிருந்து மீள சிகரெட் முதலாளிகளை விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் வாரி இறைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த அளவுக்கு உடல்நல விழிப்புணர்வுக்கு இந்தியாவில் ஏற்பட வாய்ப்போ அவகாசமோ இல்லை. சிகரெட் பரவலாக்கமோ தடையோ ஆகட்டும், நமது முதலாளிகளும் அரசியல்வாதிகளும் விளம்பரத்தில் ஆரம்பித்து விளம்பரத்திலேயே முடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் அடிமுடி நம்மால் தேடி அடைய முடியாத படி சிகரெட் புகைமூட்டத்தில் மறைந்துள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அடையாளமின்மையின் தோல்வி

இக்கட்டுரை கொல்கொத்தா அணியின் முதல் இரு ஐ.பி.எல் ஆட்டவரலாறு பற்றிய பதிவு மட்டும் தான். மூன்றாவது பருவத்தில் இவ்வணி அடைந்து வரும் மாற்றங்கள் குறித்து அடுத்த கட்டுரைகளில்ஐ.பி.எல் அணிகளில் ஒவ்வொன்றுக்கும் தனித்த பாணி மற்றும் கலாச்சார அடையாளம் உண்டு. ராஜஸ்தான் ராயல்ஸ் விளிம்பு நிலை அணி. முகவரியற்ற ஆட்டவீரர்கள் வார்னே எனும் ஒரு மேதையின் தலைமையின் கீழ் தன்னம்பிக்கையுடன் ஆடும் முன்னேற்ற ஏணி. தில்லி டேர் டெவில்ஸ் உலகின் மிக அதிரடியான மட்டையாளர்களை உள்ளடக்கிய தூங்குமூஞ்சி எரிமலை. எதிர்பாராமை இவர்களின் முத்திரை. சென்னை சூப்பர் கிங்ஸும் டெக்கன் சார்ஜர்ஸும் நிதானம் மற்றும் ஒழுங்கை நம்புவன. பங்களூர் ராயல் செலஞ்சர்ஸ் டெஸ்ட் மனநிலை கொண்டவர்கள் இளைஞர்களுடன் தீவிர அணி உணர்வுடன் ஒருங்கிணையக் கூடியது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக ஆடியும் எந்த ஆட்ட வகையறாக்குள்ளும் அடங்காதது கொல்கத்தா அணி. மேலும் உள்ளூர் வீரர்களில் ஒரு சிறந்த புதுமுகத்தை கூட கண்டெடுக்க முடியாத அணி. திண்டாவும் சாஹாவும் நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தேங்கிப் போனார்கள். இந்த திசை அறியாமையும் குழப்பமுமே கொல்கத்தா அணி இரண்டு ஐ.பி.எல்களின் போதும் கீழ்மட்டத்திலே தேங்கிப் போனதற்கான முக்கிய காரணங்களில் சில.அணியின் உரிமையாளரான ஷாருக்கானின் கிரிக்கெட் அஞ்ஞானமும் பொதுவான அசட்டு நிர்வாகமும் அணிக்குள் குழப்பத்தையும் வெளியே ஏகப்பட்ட சர்ச்சைகளையும் தோற்றுவித்தது. ஆனால் இதன் மத்தியில் இரண்டாவது ஐ.பி.எல்லில் ஷாருக்கின் ஈடுபாடு வேறொரு திசையில் இருந்தது; அவர் அடிப்படையில் வெறும் கேளிக்கையாளர் மட்டுமே என்பதை இது நிரூபித்தது. தனது அணிக்காக சியர்கேள்ஸ் எனப்படும் நடனப்பெண்களை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நிகழ்ச்சியை நடத்தினார்: Knights and Angels. ஆனால் இதில் வென்ற அணியை தென்னாப்பிரிக்காவில் அனுமதிக்க அங்குள்ள ஒருங்கிணைப்பாளர்கள் மறுத்து விட்டனர். ஏலத்தின் போது ஷில்பா ஷெட்டியிடம் வெட்டி பந்தா காட்ட மோர்த்தாஸா எனும் வங்கதேச ஆல்ரவுண்டரை அதிக விலை கொடுத்து வாங்கினார். ஆனால் பிறகு அவருக்கு அணியில் ஆட மிக அரிதாகவே வாய்ப்பளித்து ஏறத்தாழ வீணடிக்கப்பட்டார். ஐ.பி.எல்லில் அவர் செய்த ஒரே சாதனை ஷாருக்கானுடன் நிழல்படம் எடுத்துக் கொண்டது. பிறகு அடிக்கடி ஷாருக் அணியினரின் அறைக்குள் செல்ல ஐ.பி.எல் நிர்வாகிகள் தடைவிதித்தனர். ஷாருக் தனது நீரோ வயலினை எடுத்து உடனே மீடியா முன் மீட்ட ஆரம்பித்தார். தான் ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணிக்க போவதாக அறிவித்தார். முதல் ஆண்டில் தலைமை தாங்கின கங்குலியை இரண்டாம் ஆண்டில் நீக்கினார். பிறகு புது பயிற்சியாளர் புச்சன்னனின் ஆலோசனையை யோசனையின்றி ஏற்றுக் கொண்டு சர்வதேச அளவில் தலைமைப் பொறுப்பேற்ற ஆட்டங்களில் சொதப்பியுள்ள மெக்கல்லமை தலைவராக்கினார். இத்தனை நடந்தும் அணி தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அணிக்குள் வெள்ளை-கறுப்பு சனாதன படிநிலை கடைபிடிக்கப்படுவதாய் குற்றச்சாட்டு உள்ளூர் வீரர்களிடம் இருந்து எழுந்தது. கான் தற்போது புச்சன்னன் மற்றும் மக்கல்லமை நீக்கி தனது தவறான முடிவுகளுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு மீண்டும் கங்குலியை தலைவராக்கி உள்ளார். டேவ் வாட்மோர் இந்த வருடத்தின் பயிற்சியாளர். அதிர்ஷ்டத்தை உத்தேசித்து அணியின் சீருடையையும் மாற்றி உள்ளார். 2010 ஐ.பி.எல்லின் முதல் ஆட்டத்தை கொல்கொத்தா தட்டுத் தடுமாறி வென்றுள்ளது. இந்த வெற்றி அணியின் எதிர்காலம் குறித்து எதுவும் சொல்வதில்லை. அப்படியான ஒரு கொழகொழ ஆட்டத்தை கங்குலியின் அணி ஆடியுள்ளது.

உண்மையில் கொல்கத்தா அணி அதன் உரிமையாளரான ஷாருக்கின் சினிமா பிம்பம், விளம்பர சூட்சுமம் மற்றும் கோணங்கித்தனங்களால் பிரபலமானதே ஒழிய கிரிக்கெட் வெற்றிகளுக்காக அல்ல. தொடர்ந்து இரண்டு வருட ஆட்டங்களில் தோலுரித்து தொங்க விடப்பட்டும் கூட பொருளாதார ரீதியாக மிகவும் வளமான விற்பனைச் சின்னமாக மாறியது; கொல்கத்தாவின் மதிப்பு 42 கோடி டாலர்கள். T20 கிரிக்கெட்டுக்கு உள்ளடக்கம் மட்டும் முக்கியமல்ல என்பதற்கு கொல்கத்தா அணியின் வணிக வெற்றி மிக நல்ல உதாரணம்.

அணியும் தேர்வு அபத்தங்களும்

கங்குலி
மக்கல்லம்
ஹோட்ஜ்
கெய்ல்
ஹஸ்ஸி
அப்பாஸ் அலி
புஜாரா
ஒவ்வைஸ் ஷா
திவாரி
ரோஹன் கவாஸ்கர்
காடிவாலெ
பதக்
மோர்தாசா
அப்துல்லா
விக்னேஷ்
சாஹா
இஷாந்த்
மெண்டிஸ்
திண்டா
முரளி கார்த்திக்
லாங்கவெல்ட்
ஷேன் போண்ட்
ஏக்லாக் அகமத்
வருண் ஆரொன்
மெத்யூஸ்
அகார்க்கர்
ஷுக்ளா


கொல்கத்தா அணியில் உள்ள சிறந்த வீரர்கள் ஒன்றினைந்து திறமையை வெளிப்படுத்தாதது அல்லது அதற்கான அவகாசமும் அதிர்ஷ்டமும் அமையாதது கொல்கத்தாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்கிறார் விமர்சகரும் முன்னாள் சர்வதேச மட்டையாளருமான ஆகாஷ் சொப்ரா. இந்த வழமையான காரணத்தை தாண்டி மற்றொன்றை நாம் இந்த அணியில் கவனிக்கலாம். கிறிஸ் கெய்ல் மற்றும் போண்டைத் தவிர சர்வதெச அளவில் தம் இடத்தை ஸ்திரப்படுத்தியவர்கள் இவ்வணியில் வேறு இல்லை. கங்குலி ஒரு ஐ.பி.எல் ஆட்டத்தை வென்று கொடுத்திருந்தாலும் T20-இன் தேவைகளுக்கு தன்னை இன்னும் தகவமைக்க இல்லை. ஹோட்ஜ், டேவிட் ஹஸ்ஸி மற்றும் ஷா ஆகிய சர்வதேச மட்டையாளர்கள் தத்தமது நாட்டு அணிக்குள் நிலைக்க முடியாதவர்கள். இஷாந்த மற்றும் மெண்டிஸ் இருவருக்கும் T20-இன் பந்து வீச்சு நுட்பங்கள் இன்னும் முழுக்க கைவர இல்லை. மக்கல்லம் மூன்றாம் ஐ.பி.எல்லின் பெரும்பாலான ஆட்டங்களில் ஆட மாட்டார். இதனால் இம்முறை சர்வதேச வீரர்களால் கொல்கொத்தா அணிக்கு உறுதியான நிலைத்த ஆதரவு வழங்க முடியுமா என்பது சந்தேகமே.
அடுத்து உள்ளூர் வீரர்களை இரு வகைப்படுத்தலாம். அகார்க்கர், ஷுக்ளா, ரோஹன், முரளி கார்த்திக் போன்று ஆட்டவாழ்வின் அந்திப்பொழுதில் உள்ளவர்கள். புஜாரா, சோப்ரா, பங்கர் மற்றும் யஷ்பால் சிங் போன்று 20-20 ஆட்டத்துக்கு சற்றும் பொருத்தமற்றவர்கள். இந்த தேர்வு அபத்தம் கொல்கொத்தாவின் சரிவுக்கு மற்றொரு காரணம். இவர்களில் புஜாரவை தவிர பிறர் இம்முறை ஆடமாட்டார்கள் என்று தெரிகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள திவாரி, கடிவாலெ மற்றும் இக்பால் அப்துல்லா ஆகியவர்கள் தாம் சமகால இந்திய தலைமுறையின் அசலான பிரதிநிதிகள்.

ஆனால் ஐ.பி.எல் ஒரு வரி கவிதை போல. இந்த வடிவத்தில் மேதைகளும் புதுமுகங்களும் சமம். நாம் இதுவரை மட்டையாளர் மற்றும் பந்து வீச்சாளர்கள் குறித்து வைத்த அளவீடுகள் அனைத்தும் நடப்பு ஐ.பி.எல்லில் பொய்யாகலாம். கணக்குப் போட்டு கழிக்கப்பட்டவர்கள் புகழ் ஒளிவட்டத்துக்குள் சட்டென்று வரலாம்.

ராஜஸ்தான் மற்றும் ஹைதரபாத அணிகள் இதுவரை ஐ.பி.எல்லை வென்றதற்கு உள்ளூர் வீரர்களின் சிறந்த பங்களிப்பு ஆதாரமாக இருந்தது. ஆனால் உள்ளூர் வட்டாரத்திலே பலவீனமான வங்க அணியில் இருந்து ஒரு சில பேரே நைட் ரைடர்ஸ் அணியில் சோபித்தனர். அணியில் சர்வதேசர்கள் 4 பேரே சேர்க்க முடியும் என்பதால் உள்ளூர் திறமையாளர்களில் ஏழில் மூவராவது ஒவ்வொரு ஆட்டத்திலும் நிலைத்து திறனை வெளிப்படுத்த வேண்டும். நெருக்கடியில் இருக்கும் சர்வதேசர்கள் மற்றும் அரசாங்க குமாஸ்தா மனநிலை உள்ள உள்ளூர்க்காரர்கள் தமது குறுகின எல்லைகளை கடந்து அணிக்காக ஒன்றிணைந்தால் மட்டுமே அரையிறுதிக்காவது இம்முறை செல்ல முடியும். இந்த விதிக்கு மட்டும் கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் விதிவிலக்கு இல்லை.

Tuesday, March 9, 2010

நூதன உறுப்பு-மாற்று சிகிச்சையும், டாக்டர் ஜோக்கும்நவீன மருத்துவத்தின் வணிகப்பசி அதன் மீது ஒரு ஆழ்ந்த கசப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனோடு அணு ஆயுத மற்றும் தீவிரவாத×எதிர் போர் அழிவுகளும் சேர்ந்து கொள்ள நுண்சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் அறிவியல் மீதான தீவிரமான அவநம்பிக்கை நீலம் பாரித்தது. இது அறிவியல் புனைகதைகளில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு ஒரு படிமமாகவே மாறி விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் கணிசமானோருக்கு அறிவியல் பிரக்ஞையும் கவனமும் இருக்கிறதோ இல்லையோ மேற்சொன்ன அவநம்பிக்கை உள்ளது. வெகுஜன ஊடகங்கள் நவீன மருத்துவத்தின் மகிமைகளை பஜனை பாடுவது இதன் மற்றொரு துருவம். இந்த இரு தீவிர நிலைப்பாடுகளின் மத்தியரேகையில் அறிவியல் செய்துவரும் சாதனைகளை பாயச முந்திரிப்பருப்பை போல் அங்கீகரிக்கத் தவறக் கூடாது. மருத்துவ அறிவியலின் சமீபத்திய மைல்கல் மரண வாயிலில் காத்திருக்கும் குழந்தைகளுக்கான ஒரு நூதன கல்லீரல் உறுப்பு-மாற்று சிகிச்சை.

உறுப்பு-மாற்று சிகிச்சை நீண்ட கால மருந்து உட்கொள்ளல், செலவு, கவனம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஆகிய பல சிரமங்கள் மற்றும் ஆபத்து அம்சங்களை உள்ளடக்கியது. உள்ளே பொருத்தப்பட்ட வேற்று உறுப்பின் மீது நம் உடல் ஒரு தாக்குதலை தொடர்ந்து தொடுத்தபடி இருக்கும். இதுவரை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த உள்-தாக்குதலை சமாளிப்பது பற்றியே அக்கறை கொண்டு விட்டு இப்போது சற்று மாற்றி யோசித்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சையின் போது மருந்துகளை பெரிதும் நாடாமல் உடலின் இயல்பான தடுப்பாற்றலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் நொடிகளில் இருந்து மீண்டு வரும் திறன் அதிகம். புற்றுநோயில் இருந்து தப்புவது பெரியவர்களை விட அவர்களுக்கே எளிது. அமெரிக்காவின் ஜேக்சன் மெம்மோரியல் மருத்துவமனையில் மருத்துவர் டொமயாகி கேட்டோ ஏழு மாதங்கள் முதல் எட்டு வயதுக்கு உட்பட்ட தீவிரமாக கல்லீரல் பழுதுபட்டு சக்கரப் படுக்கைவாசிகளான குழந்தைகளுக்கு அபாரமான ஒரு மாற்று சிகிச்சை செய்து அவர்களை காப்பாற்றி உள்ளார். குறிப்பாக இச்சிகிச்சை குழந்தைகளுக்கு மட்டுமே தோதானது.

இக்குழந்தைகளுக்கு புதுகல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் பழையதில் பொருத்தினார் கேட்டோ. இதனால் பழைய கல்லீரல் தூண்டுதல் பெற்றது. அது சிறப்பாக வளர்ந்து செயல்பட ஆரம்பித்தது. இதுவரை அன்னிய உறுப்பை அழிக்க விழையும் உடலின் தடுப்பாற்றலை கட்டுப்படுத்த அக்குழந்தைகள் மருந்துகள் உட்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் ஈரல் பழையபடி ஆரோக்கியமாக வளர்ந்து விட்டதை உறுதி செய்த கேட்டோ இந்த மருந்துகளை நிறுத்தினார். இதனால் கட்டழித்து விடப்பட்ட தடுப்பாற்றல் செயற்கையாக பொருத்தப்பட்ட கல்லீரல் பகுதியை தடையமின்றி அழித்து விட்டது. இப்படி தடுப்பாற்றலை சாதமாக பயன்படுத்தின கேட்டோ எட்டு குழந்தைகளில் ஏழு பேரை காப்பாற்றினார். இக்குழந்தைகள் இனிமேல் மருந்து உட்கொள்ளவோ பின்விளைவுகள் குறித்து கவலைப்படவே வேண்டாம்.

இம்முறை 1990-இல் அறிமுகமானாலும் இப்போதுதான் வெற்றி அறிகுறிகளை கண்டுள்ளது. கேட்டோவின் அறுவை சிகிச்சை அதன் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இதில் ஆபத்துக்கள் பல உள்ளன. பிற அறுவை சிகிச்சைகளை விட ரெட்டிப்பு நேரம் ஆகும். அப்போது செலுத்தப்படும் மருந்துகளால் குழந்தைகளுக்கு மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரழக்க நேரலாம். மிகச்சிலருக்கு கல்லீரல் மீண்டும் வளராமல் போகலாம். ஆனால் இத்தனை அபாயங்களையும் தாண்டி, உயிர்வாய்ப்பு இல்லாத பல குழந்தைகளை இப்போது இந்த கண்டுபிடிப்பு காப்பாற்றி உள்ளது.

இந்திய தேசப்பிரிவினைக்கு ஒரு நடுநிலைப்பார்வை தேவை போல் இத்தகைய அறிவியல் வீழ்ச்சி எழுச்சிகளுக்கும் ஒரு நிதான அணுகுமுறை தேவை உள்ளது. ஒரு அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தை அதன் முடிவில் தேடுவது டாக்டர் ஜோக்காக மட்டும் முடிந்து விடும்.

ஐ.பி.எல் அணி வரிசை

அணியும் தலைமையும் – இதுவரை


ஐ.பி.எல் வெளி நபர்களை பிரதானப்படுத்தி மாநில வாரியாக அணிகள் உருவாக்கிய போது இம்முரண் ஒரு சிறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் சுவாரஸ்யமாக இந்திய மாநகர மனநிலை இதை எளிதில் ஏற்றுக் கொண்டது. ஆனால் அதே நேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் கங்குலி மற்றும் திராவிடை தலைமையில் இருந்து அகற்றி வெள்ளையர்களை ஸ்தாபித்த போது ஒரு எதிர்ப்பலை கிளம்பியது. குறிப்பாக, அணிக்குள் இந்தியர்கள் கலகம் செய்தார்கள். இரு அணிகளும் வெள்ளைத் தலைமையின் கீழ் அட்டை போல் சுருங்கியது. பிறகு பங்களூர் அணிக்கு கும்பிளே தலைவராக நியமிக்க பட்ட பின் அது நன்றாக ஆடி கோப்பை வென்றது. இது ஷாருக்கானை தூண்டியிருக்க வேண்டும்: அவர் ஐ.பி.எல் 2010-இல் சவுரவை இரண்டாம் முறையாக கிரீடம் சூட்டியுள்ளார். ஆனால் பிரீத்தி சிந்தா யுவ்ராஜை கழற்றி விட்டு சங்கக்காராவை அணித்தலைவராக கொண்டு வந்துள்ளார். ஐ.பி.எல் ஆட்டம் ஒன்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் யுவ்ராஜ் சிங் சில ஓவர்கள் காயம் காரணமாக வெளியேறினார். அப்போது தலைமை தாங்கிய சங்கக்காரா புத்திசாலித்தனமாக நிலைமையை கையாண்டார். அணியை ஒன்று திரட்டி வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த தலைமைப் பண்பு பிரீத்தியை ஈர்த்திருக்க வேண்டும். மேலும் இலங்கை அணியின் தற்போதைய தலைவர் அவர் என்பதும் கூடுதல் தகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் அணித்தலைமைக்கு அதே அணியை சேர்ந்த ஜெயவர்தனே தான் மேலும் திறமையானவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ரசிகர்களுக்கு இந்த சந்தர்பத்தில் சிறு சுணக்கம் உண்டு. வெற்றி அடைந்த பின் யுவ்ராஜ்-பிரீத்தி ஜோடி மைதானத்தில் கட்டி அணைப்பது சிலரை பஞ்சாபின் கடும் ஆதரவாளர்களாகவும், வயிற்றெரிச்சலால் எதிரிகளாகவும் மாற்றி இருந்தது. சங்கக்காராவுக்கு யுவ்ராஜின் இந்த வசீகரம் மற்றும் பிளேபாய் பிம்பம் கிடையாது.சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறத்தாழ இந்திய தேசிய அணியை போன்றது. அதிரடியான மட்டையாளர்கள் மற்றும் சுமாரான ஆல்ரவுண்டர்களை நம்பியிருக்கும் அணி. ஆட்ட வரிசை மற்றும் பந்து வீச்சு திட்டங்களை பொருத்த வரை எந்த அதிரடி மாற்றமும் இருக்காது. மட்டையாட்டம் சொதப்பினால் சென்னை அணிக்கு ஆட்டத்தின் போக்கை திருப்ப தெரியாது. நேர்கோட்டில் மட்டுமே ஒடத் தெரிந்த குதிரை தோனியின் அணி. தோனி அணித்தேர்வை பொறுத்த மட்டில் அதிரடிகளை விரும்பாத சம்பிரதாய தலைவர். உதாரணமாக ஐ.பி.எல்லின் இரு பருங்களிலும் ஏராளமான புது வீரர்கள் புகழ்வெளிச்சத்துக்கு வந்த போது சென்னை அணி இருட்டாகவே இருந்தது. கோனி மட்டுமே புதிதாக ஆடி பெயர் பெற்றவர். இங்கு மற்றொன்றையும் நாம் கவனிக்கலாம். தோனியின் அணி 35 வயது சராசரியில் உள்ள ஓய்வு பெற்ற \ பெறப்போகும் ஆட்டக்காரர்கள் அல்லது அனுபவம் மிகக் குறைவான மாநில நட்சத்திரங்களின் கூடாரம். இந்த இரு தரப்பினரிடமும் நாம் தொடர்ச்சியான ஆட்ட உச்சத்தை எதிர்பார்க்க முடியாது. 2008 மற்றும் 2009 தொடர்களில் இந்த அணி தடுமாறி வந்துள்ளதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

அனுபவம், இளமை, திறன் மற்றும் உடற்தகுதி ஒன்று சேர வாய்த்த ஒரு பந்து வீச்சாளர் கூட சென்னை அணியில் இல்லை. இதற்கு காரணம் தோனி தனது மட்டையாட்ட வலிமைக்கு உத்திரவாதம் அளிக்கும் மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களையே அதிகம் தேர்ந்துள்ளார் என்பதாகும். சென்னை சூப்பர் கிங்ஸை வாங்கி உள்ள இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் ஐ.பி.எல் குழுமத்தில் உள்ள மாபெரும் பணக்கார நிறுவனங்களில் ஒன்று. சென்னை அணியின் மதிப்பு 224 கோடிகள். இருந்தும் சென்னை அணி தனது முதலீடை சிறப்பான பந்து இளம் வீச்சாளர்களில் செய்யவில்லை. தனது உடற்பளுவையே வெற்றிக்கு நம்பி இருக்கும் சுமோ மல்யுத்த வீரனை நினைவு படுத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை அணி விபரம்

பெயர் வயது
முரளி விஜய் 25
சுரேஷ் ரெய்னா 23
ஜார்ஜ் பெய்லி 27
மாத்யூ ஹெய்டன் 38
பத்ரினாத் 29
அருண் கார்த்திக் 24
மைக்கேல் ஹஸ்ஸி 34
ஹெமங் பதானி 33
ஆல்பி மார்க்கல் 28
ஜஸ்டின் கெம்ப் 32
மகேந்திர சிங் தோனி (தலைவர்) 28
பார்த்திவ் படேல் (கீப்பர்) 24
முரளிதரன் 37
அஷ்வின் 23
நிதினி 32
தியாகி 23
ஜெகதி 30
பாலாஜி 29
கோனி 26
துஷாரா 29
பெரீரா 24
கணபதி 29

சென்னை அணியில் மட்டும் 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 6 பேர் உள்ளார்கள். ஒப்பிட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருவர் தான். கல்கத்தா நைட் ரைடர்ஸின் நிரந்தர அணியில் மூவரே. குறிப்பாக சென்னை அணியின் ஓய்வு நிலை வீரர்கள் தாம் ஆதார ஆட்டக்காரர்கள். சென்னைக்கு அடுத்த படியாய் வயதான அணியாக பங்களூர் இருந்தாலும் அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் கோலி, உத்தப்பா மற்றும் பாண்டே போன்ற இளைஞர்களே. காலிஸ் மற்றும் திராவிட் அணிக்கு ஸ்திரத்தன்மை அளிப்பவர்களே தவிர ஆட்டத்தை வென்று கொடுப்பது இவர்கள் அல்ல. முதிய வீரர்களை நம்பி இருப்பதில் சிக்கல் அவர்களால் தொடர்ச்சியாக உச்ச நிலை ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதும், எளிதில் காயமுற்று விலக நேரிடும் என்பதுமே. அடுத்து 30 வயதினருக்கான சிறு மெத்தனம் அல்லது ஊக்கமின்மை களத்தடுப்பில் வெளிப்படலாம். அடுத்து சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களை அலசலாம்.


ஹஸ்ஸி இம்முறை ஐ.பி.எல் ஆட வாய்ப்பு குறைவு என்பதால் சென்னை அணி ஹெய்டன், தோனி மற்றும் ரெய்னாவை நம்பி இருக்கும். தோனி பத்தாவது ஓவருக்கு பிறகு பவர் பிளே முடிந்த நிலையில் களமிறங்குவதாலும், அவர் தனது ஆட்டமுறையை தற்போது அதிரடியிலிருந்து நிதானத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளதாலும் அவரது ஓட்டங்கள் ஆட்டபோக்கை பெருமளவு மாற்றுவதாக இருக்காது. இவர்களுக்கு அடுத்த படியாய் பார்த்திவ் பட்டேலும் துவக்கமாடும் பட்சத்தில் முக்கிய பங்காற்றுவார். இந்த நால்வரில் மூவர் சர்வதேச மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் நல்ல ஆட்டத்திறன் நிலையில் (form) இருக்கிறார்கள். T20 தொடரில் ஆரம்ப ஆட்டங்களில் ஏனும் தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறன் நிலை மிக முக்கியமானதாகிறது. T20 ஆட்டங்களில் பொறுமையாக ஆரம்ப ஓட்டங்கள் சேகரிக்க வாய்ப்பில்லை என்பதே இதற்கு காரணம். மேற்சொன்ன நால்வரின் ஓட்டங்களே அணியின் வேற்றியை பெருமளவில் தீர்மானிப்பவையாக இருக்கும்.

ஆரம்ப ஆட்டங்களில் பங்கு பெற வாய்ப்புள்ள வீச்சாளர்கள்:
பாலாஜி
அஷ்வின்
கோனி
முரளிதரன்
நிதினி
ஆல்பி மோர்க்கல்

கூடவே ஆல்ரவுண்டர்கள் துஷாரா அல்லது பெரீராவுக்கும் வாய்ப்புள்ளது. பாலாஜி, அஷ்வின் மற்றும் கோனியின் பந்துவீச்சு நடந்து முடிந்த ரஞ்சி தொடரில் சுமாராகவே இருந்தது. முரளிதரன் காயமுற்று நீண்ட இடைவெளிக்கு பின் ஆட வருவதால் அவருக்கு ஆட்ட தயார்நிலை (match fitness) குறைவாகவே இருக்கும். நிதினி மற்றும் ஆல்பி மார்க்கல் மோசமாக ஆடி வருவதால் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து சமீப ஆட்டங்களில் விலக்கப்பட்டவர்கள்.

சென்னை அணியின் பலம் பலவீனத்தில் இம்முறையும் மாற்றம் இல்லை. கெம்ப் மற்றும் பதானி இம்முறை அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்வின் இறங்குமுகத்தில் உள்ளவர்கள். பத்ரி மற்றும் விஜய் இயல்பான T20 மட்டையாளர்கள் அல்ல. ஆட்டத்தின் போக்கை திசை திருப்ப அவர்களால் இனி முடியுமா என்பதே கேள்விக்குறியே. ஆனால் அருண் கார்த்திக் மற்றும் பெரீரா ஆகிய இரு இளைஞர்களும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஆட்டத்தின் போக்கை எளிதில் மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்கள். T20 ஆட்டங்களின் வசீகரமே வெற்றி தோல்விகளை எளிதில் ஊகிக்க முடியாமையே. மேற்குறிப்பிட்ட சென்னை அணியின் மூத்த வீரர்கள் கூட தொடரின் ஒரு கட்டத்தில் தற்போதைய மோசமான form-இல் இருந்து மீண்டு மிகச்சிறப்பாக ஆடலாம். ஆட்டம் சிறப்பாகும் பட்சத்தில் இதுவரையிலான ஊகங்களும் முடிவுகளும் தவறாவதில் மகிழ்ச்சியே. ஒரு உற்சாகமான T20 ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் நம் நினைவில் இருந்து எளிதில் வழுவி விடுபவை; அதனால் முக்கியமற்றவை.

Sunday, March 7, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 14பவனி வீதியில் நீளிருக்கைகள், வெயிலில் துருபிடித்த வாதாம் மரங்கள், நான் வாசிக்கப் படித்த இயற்பாங்கு பள்ளிக்கூடத்து முற்றம். பிப்ரவரி மாத பிரகாசமான ஞாயிற்றுக்கிழமையின் போதான நகரின் மொத்த பிம்பமும் ஜன்னல்வழி ஒரு கணம் ஜொலித்தது.

Tuesday, March 2, 2010

உலகக்கோப்பை ஊகங்களும் எதார்த்தமும்பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தெற்காசியாவில் நடக்கப் போகும் பத்தாவது கிரிக்கெட் உலகக் கோப்பை சுழல் பந்தாளர்களும், அதிரடி துவக்கக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தின நினைவுகளை கிளர்த்தலாம். ஆசிய அணிகளுக்கு அதிக அனுகூலங்கள் இருக்கும் என்று விமர்சகர்கள் இப்போதே புகை கக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகம் என்று முன்னாள் தெ.ஆ மட்டையாளர் கலினன் கருதுகிறார். தலைகீழ் எழுதப்பட்ட புதிர்ப்போட்டி விடைகளுக்கான மதிப்பே இத்தகைய ஊகங்களுக்கும் உண்டு. இம்முறை உலகக் கோப்பைப் போட்டிகள் தேற்காசிய சாயல் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது 96-இன் அதே வித நெருக்கடிகளும் தாளலயங்களும் கொண்டிருக்காது. மிக எளிய காரணம் பருவச்சூழல்.

சூழல் கிரிக்கெட்டின் ஆட்டப்பரப்பை கடுமையாக பாதிக்கும் ஒரு அம்சம். ஒவ்வொரு நாடு மட்டுமல்ல மாநிலத்துக்குமான கிரிக்கெட் கலாச்சாரத்தைக் கூட இது திண்ணமாக பாதிக்கிறது. உதாரணமாக, இலங்கையின் ஆடுதளங்கள் மெத்தனமானவை. இந்திய ஆடுதளங்களில் பந்து சுலபமாக மட்டைக்கு வருவதால் இங்கு பந்தின் திசையை மட்டும் கணித்து சற்று தூக்கலாக துரத்த முடியும். ஆனால் இலங்கையில் பந்து மெதுவாகவே வரும் என்பதால் அங்கு உருவாகி வரும் ஆட்டக்காரர்கள் பொறுமையாக, கடுமையான உழைத்து ஓட்டங்கள் சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த சூழலில் விளைந்த இலங்கையின் பிரதானமான மட்டையாளர்களான ஜெயவர்தனே, சங்கக்காரா போன்றவர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து தடுப்பாட்டம் ஆடும் மனப்பான்மை கொண்டவர்கள். நியுசீலாந்தின் ஆடுதளங்கள் மிக அதிகமாக மிதவேகப்பந்து வீச்சுக்கு உதவியதால் அது அவர்களின் மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சை எதிர்மறையாக பாதித்தன. திறமை குறைந்த மிதவேகப்பந்தாளர்கள் விக்கெட்டுகளை மாங்காய் அடி அடிக்க, அசலான வேக வீச்சாளர்களுக்கு அவசியமின்றி போனது. நியுசிலாந்தில் 120 கி.மீ-க்குள் வீசி அபரிதமான அசைவை பெற முடிகிறவர்கள் மலிவான விக்கெட்டுகளை நிறைய வீழ்த்தினர். சரளமாக அடிப்பதே ஆபத்தாக இருந்தமையால் மட்டையாளர்களின் முதலும் முடிவுமான நோக்கம் காப்பாட்டமே. இயல்பான அடித்தாடும் திறமை கொண்ட மட்டையாளர்கள் மிக சமீபத்தில் ராஸ் டெய்லர் தோன்றும் வரை நியுசிலாந்து அணியில் இருந்ததில்லை. ஹாட்லி மற்றும் பாண்ட் போன்ற இரண்டு வேக வீச்சாளர்களை மட்டுமே நெடுங்கால வரலாற்றில் நியுசிலாந்தால் உருவாக்க முடிந்தது. T20 உலக அளவில் பரவலாகும் முன்னரே அது பாகிஸ்தானில் இளம் வயது கிரிக்கெட்டர்கள் இடையே அதிக அளவில் ஆடப்பட்டு வந்தது. இதனால் பாக் பந்து வீச்சாளர்கள் T20-இல் மிக வெற்றிகரமாக இயங்குகின்றனர். ஆனால் அடித்தாட மட்டும் பழகும் மட்டையாளர்களின் தடுப்பாட்ட தொழில்நுட்பம் பலவீனமாக மாறிவிட்டது. இது பாக்கின் டெஸ்ட் தோல்விகளுக்கு முக்கிய காரணம். ஒரு அணியின் கிரிக்கெட்டின் தரத்துக்கு அந்நாட்டு மக்கள் மட்டுமே காரணம் அல்ல.பருவச்சூழல் ஆடுதளங்களின் தயாரிப்பை பெருமளவில் பாதிக்கும். இது மிகவும் சிக்கலானது. உதாரணமாக போதுமான வெயில் இல்லாவிட்டால் தளம் மந்தமாகி விடும். அது போல் வறட்சியான தளம் அதிகம் உருட்டப்பட்டு வெடித்து இளகினால் ஆரம்ப ஓவர்களிலேயே பந்து கடுமையாக சுழலும். இதற்கு பயந்து தயாரிப்பாளர் புற்களை நன்றாக வளர விட்டு ஆட்டத்திற்கு முன் குறைவாக மழிக்கலாம். இது அதிகமாக வேக வீச்சுக்கு உதவும். முழுக்க மழிக்கப்பட்ட தளம் மட்டையாட்டத்துக்கு அதிகப்படியாக உதவலாம். தவறான புல் அல்லது மண் வகை பயன்படுத்தப்பட்ட தளத்தில் சமீபமாக தில்லியில் நடந்தது போல் பந்தின் உயரம் சமச்சீரற்று இருக்கும். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஆட்டங்களில் இத்தனை ஆடுதள குழப்பங்கள் நிச்சயம் ஒரு பெரும் பங்கை வகிக்கின்றன. ஆட்ட முடிவுகள் பார்த்து நமது உள்ளூர் வீரர்களின் திறனை சரியாக கணிக்க முடியாதது இதனாலே. ஒரு உதாரணம் தருகிறேன்.

கடந்த ரஞ்சி தொடரில் சுழல் தளங்களில் மும்பையின் ரமேஷ் பொவார், தில்லியின் சேதன்யா மிதுன் மற்றும் தமிழகத்தின் அஷ்வின் ஆகிய சுழலர்கள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆனால் இம்முறை ரஞ்சி தொடரில் ஆடுதளங்கள் மட்டையாட்டத்துக்கும், வேகவீச்சுக்கும் சாதகமாக இருந்ததால் பொவார், அஷ்வின் உள்ளிட்ட சுழலர்கள் மட்டையாட்டத்தில் கவனம் செலுத்தி தங்கள் அணியின் முழுநேர மட்டையாளர்களை விட சமயோசிதமாகவும், சிறப்பாகவும் ஆடி நிறைய ஓட்டங்கள் சேர்த்தனர். மிகக் குறைவாகவே விக்கெட்டுகள் வீழ்த்தினர். அணித்தலைமைகளும் இதனை ஊக்குவித்தன. உதாரணமாக மும்பை அணி தொடர்ச்சியாக 5 பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டருடன் களமிறங்கியது. கீப்பரை தவிர்த்து மும்பை நான்கு மட்டையாளர்களை மட்டும் பயன்படுத்தியது. ஆனால் இந்த நால்வரை விட பந்து வீச்சாளர்களே அதிக நூறுகள் மற்றும் அரை நூறுகள் அடித்து ஓட்டம் குவித்தனர். இதன் பொருள் இந்திய உள்ளூர் பந்து வீச்சின் நிலை ஒரே வருடத்தில் சரிந்து விட்டது என்று அல்ல. சூழமைவின் பாதிப்புக்கான உதாரணம் மட்டுமே இது. இதை விட ஒரு எளிய உதாரணம் உள்ளது. தெரு கிரிக்கெட்.

குறுகலான தெருக்களில் ஆடுபவர்கள் சில விதிமுறைகள் வைத்திருப்பர். ஒரு குறிப்பிட்ட திசையில் பந்தை அடித்தால் ஓட்டம் இல்லை அல்லது வெளியேற்றம் என்று இருக்கலாம். கால்பக்கம் போதுமான இடவசதி இல்லாத தெருவில் வளர்ந்த மட்டையாளர்களுக்கு கால்பக்க ஓட்டங்கள் எடுக்கவே தெரியாது இருப்பதை கவனித்திருக்கிறேன். அதே போல் வசதியின்மையால் தனது புழக்கடையில் துணிப்பந்தை கடுமையாக அடித்து ஆடி பழகிய இளம் ரமேஷ் பொவார் வளர்ந்து மும்பைக்காக ஆட ஆரம்பித்ததும் கடுமையாக பந்தை விளாசக் கூடிய ஆவேச ஆட்டக்காரர் ஆனார்.

2011 உலகக்கோப்பை இந்தியாவில் குளிர்காலத்தில் நடைபெற உள்ளது. இரவு-பகல் ஆட்டங்கள் என்றால் இந்த பருவ நிலை அணிகளின் திட்டமிடல் மற்றும் ஆடுமுறையை பெரிதும் பாதிக்க உள்ளது. சமீபமாக இந்தியாவில் நடந்த இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தெ.ஆ ஒருநாள் தொடர்களில் சுழலர்கள் சோபிக்கவில்லை. இதற்கு ஓரளவு ஆடுதளமும், அதைவிட முக்கியமாய் பனி கொட்டும் சூழலும் காரணமாக இருந்தன. இப்போது ஆட்டங்கள் தொலைக்காட்சி ஆர்வலர்களை உத்தேசித்து இரவுபகலாகவே நடத்தப்படுகின்றன. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் இரவு ஆறுமணிக்கு மேல் பெய்யும் பனி ஆட்டத்தின் போக்கை திசை திருப்பி விடுகிறது. மாலையில் பந்து வீசினால் பந்து சுழலாது. கையிலிருந்து எளிதில் வழுக்கும். ஆடுதளம் வேகமாகி சுழலை எதிர்கொள்வது எளிதாகும். பனியற்ற கோடையில் முதலில் மட்டையாடுவது உசிதம் என்றால் குளிர்காலத்தில் நிலைமை நேர்மாறானது. நவம்பர்-மார்ச் ஆட்டங்களில் அணித்தலைவர்கள் காசை சுண்டிப் பார்த்து மட்டையா பந்தா என பெருங்குழப்பம் அடைகின்றனர். காரணம் விழப்போகும் பனியின் அளவை கணிக்க முடியாது என்பதே.

இந்த சிக்கலை நேரிட அணிகள் இப்போதே திட்டமிட்டு தயாராக வேண்டும். இந்தியா தயாராகி வருகிறது. அதாவது மட்டையாட்டத்தை பெருமளவு நம்பி ஆடப்போகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளின் சம்பிரதாய ஆயுதமான சுழல் வீச்சு வரப்போகும் குளிர்கால உலகக்கோப்பையில் மூலையில் துருவேறப் போகிறது. உதாரணமாக தெ.ஆ ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இரு திறமையான சுழலர்கள் இருந்தும் தோனி பகுதி நேர சுழலர்களை மட்டுமே பயன்படுத்தினார். இரவில் பெய்யும் பனியினால் அஷ்வின், மிஷ்ரா போன்ற சுழலர்கள் சட்டென காலாவதி ஆகி விட்டார்கள். இந்த நிலைமை இலங்கை அணிக்கும் நேர்ந்துள்ளது. இதன் பொருள் உலகக்கோப்பையில் ஆடப்போகும் ஒவ்வொரு அணியும் முதல் ஆட்டத்தில் 350-க்கு மேல் ஓட்டம் குவிக்கும் கட்டாயத்தில் இருக்கும். அப்படி குவிக்கும் பட்சத்திலும் காப்பாற்ற முடியுமா என்ற பதற்றம் வயிற்றுக்குள் துடித்தபடி இருக்கும். இந்த 350-400 பதற்றத்தால் மட்டையாடும் அணி 250-இல் ஆட்டமிழக்கவும் நேரிடலாம்.

இந்தியாவுடன் நடந்த ஒரு நாள் தொடர்களில் ஆஸ்திரேலியா வென்றது; இலங்கை சரிக்கு சமம் போட்டியிட்டு தோற்றது. இந்த இரண்டு எதிரணிகளின் வெற்றிக்கு அவை மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் பெற்ற சிறந்த துவக்கங்கள் முக்கிய காரணம். தெ.ஆ அணியினால் இத்தகைய துவக்கங்களை பெற முடியாததனால் அது தற்போதைய தொடரை இழந்துள்ளது. இந்தியா மற்றும் வங்க தேசத்தில் நிகழ உள்ள உலகக்கோப்பை ஆட்டங்களில் துவக்க வீரர்கள் தாம் நட்சத்திரங்களாக இருப்பார்கள். இலங்கையில் நடக்கும் ஆட்டங்களில் மாறாக சுழலர்கள் மற்றும் மத்திய வரிசை மட்டையாளர்கள் பெரும்பங்கு ஆற்றுவார்கள்.

அடுத்த உலகக்கோப்பையில் மட்டையாட்டம், பந்துவீச்சு, வியூகம், சுண்டப்படும் நாணயம் ஆகியவற்றை கவிழ்க்கும் படியாக பருவதேவதையின் புன்னகை இருக்கும்.