Tuesday, April 25, 2017

அன்புள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு


 Image result for தேவதச்சன்
அன்புள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு
கடந்த ஞாயிறன்று நடந்த (நீங்கள் ஒருங்கிணைத்த) தேவதச்சன் கருத்தரங்கில் நான் பேசிய சில கருத்துக்கள் உங்களுக்கு உவப்பற்று இருந்தன. நான் பேசி அமர்ந்தபின் நீங்கள் மேடையில் என் பேச்சை கடுமையாய் கண்டித்தீர்கள். அயோக்கியத்தனமான பேச்சு என்றீர்கள். நான் மிகவும் மதிக்கிற, நேசிக்கிற எழுத்தாளர் என்ற முறையில் என் கருத்துக்கள் உங்களை கோபமூட்டியது கண்டு நான் மிகவும் வருந்தினேன். அதற்காக என் வருத்தங்களை மன்னிப்பை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரம் (நீங்கள் எதிர்பார்ப்பது போலவே) எனக்கு சில வினாக்கள் எழுகின்றன.

Friday, April 14, 2017

எண்டமூரி வீரேந்திரநாத் – துளசி தளம்

Image result for எண்டமூரி வீரேந்திரநாத் துளசி தளம்

எனக்கு வணிக நாவல்கள் படிப்பதில் தனி ஆர்வம். தட்டையான மொழி, மிகையான சித்தரிப்பு, லாஜிக் சொதப்பல்களை மீறி அந்நாவல்களின் செண்டிமெண்டுகள், அவற்றில் பொதுமக்களின் உளவியல் தெரியும் விதம், வடிவம் ஆகியற்றை கவனிக்க பிடிக்கும். நேற்று அப்படித் தான் எண்டமூரி வீரேந்திரநாத்தின் “துளசி தளம்” என்ற பேய் / திகில் நாவல் படித்தேன். மூன்னூற்று சொச்சம் பக்கங்கள். ஆனால் அரைநாளில் படிக்கும் விதம் விருட்டென்று பறக்கும் கதை.

மறைந்து வாழும் மதவாதம்


Image result for modi rss flagImage result for ambedkar

இன்றைய ஆங்கில ஹிந்துவில் சஞ்சய் ஹெக்டெ அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட பசுவதையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை பற்றி ஒரு நடுப்பக்க கட்டுரை எழுதியிருக்கிறார். முக்கியமான விவாதம் இது. அம்பேத்கர் தனிப்பட்ட முறையில் பசுவை புனிதமாக்குவது தீண்டாமையை வலுப்படுத்தும் செயல் என நம்பியவர். அவர் அதை தன் The Untouchables: Who Were They and Why They Became Untouchables? என்ற நூலிலும் பதிவு செய்கிறார். மாட்டுக்கறி உண்பதே தலித்துகள் மீதான குற்றச்சாட்டாக வைத்து அவர்களை பிராமணர்கள் தீண்டத்தகாதோர் ஆக்கினார்கள் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கர் தான் இயற்றிய சட்டத்தின் முதல் வடிவில் பசுவதை சட்டத்தை சேர்க்கவில்லை. அவர் அப்படி ஒரு சட்டத்துக்கு அடிப்படையில் எதிரானவர். ஆனால் 1948ஆம் வருடம் அரசியல் சட்டமைப்பின் மீது நடந்த பாராளுமன்ற விவாதங்களில் வலதுசாரிகள் பசுவதை சட்டத்தை சேர்க்க வேண்டும் என வாதிடுகிறார்கள். ஆச்சரியமாக அம்பேத்ர்கர் இவர்களை கடுமையாய் எதிர்த்து வாதிடவில்லை. ஆனால் பசுவதையை மத நம்பிக்கையின் பெயரில் குற்றமாக்க முடியாது என மறுக்கிறார்.

Tuesday, April 11, 2017

முடிவுக்கு வரும் கிரிக்கெட்டோகிராஃபி தொடர்

குமுதத்தில் நான் எழுதி வந்த கிரிக்கெட்டோகிராஃபி தொடர் முடிவுக்கு வருகிறது. 60வது கட்டுரையாக சச்சின் பற்றி எழுதுகிறேன். இது ஏற்கனவே திட்டமிட்டது: இறுதியாக முத்திரையாக சச்சினைப் பற்றி எழுத வேண்டும் என இத்தொடர் துவங்கிய போதே நினைத்தேன். ஆனால் சச்சினுக்கு முன்பு காம்பிளி பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் காம்பிளியை மட்டுமே தவற விட்டேன்.

Sunday, April 9, 2017

சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்

தருண் விஜய் சர்ச்சையை ஒட்டி சில நண்பர்கள் எழுதியிருந்த விசயம் நாம் எப்படி கறுப்புத் தோல் மீது தாழ்வுணர்வு கொண்டுள்ளோம், அதனாலே சிவப்பான பெண்களை அதிகம் விரும்புகிறோம் என்பது. நாம் எப்போதாவது கறுப்பான பெண்களை பொருட்படுத்தி காதலித்திருக்கிறோமா? கறுப்பான நாயகிகளுக்கு கவனம் கொடுத்திருக்கிறோமா? ஆண்களே தமது கறுப்பு நிறம் குறித்து லஜ்ஜை கொண்டதில்லையா?
ஆனால் நமது பாலியல் தேர்வை நாம் இப்படி எளிமையாக சுருக்க முடியாது என நினைக்கிறேன். பாலியல் தேர்வு இன்னும் சிக்கலானது. கறுப்பை எடுத்துக் கொள்வோம். கறுப்பு ஒரு குறைபட்ட நிலையை சுட்டுகிறது என நம்புகிறோம். சரி. அதனாலே நாம் கறுப்பான பெண்களை விரும்பவில்லை. அதுவும் சரி. இது சரி என்றால் மற்றொரு கேள்வி வருகிறது. ஏன் மேல்சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களை விரும்புகிறார்கள்? ஏன் அவ்வளவு போராடி, பெற்றோரை, உறவினரை பகைத்து, ரிஸ்க் எடுத்து “குறைபட்டவராய்” நாம் நம்பும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் ஒருவனை ஒரு பெண் காதலிக்கிறாள்? கறுப்பு பற்றி நாம் சொல்வது உண்மையெனில் ஒரு பெண் தன்னை விட மேலான சாதி (என நம்பப்படுகிற) ஆணைத் தானே தேர்வு செய்ய வேண்டும்?

Friday, April 7, 2017

நாம் இனவெறியர்களா?

Image result for tarun vijay
பா.ஜ.க முன்னாள் எம்.பி ”கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாங்கள் வாழவில்லையா? நாங்கள் இனவெறியர்கள் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம்” என்று ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியதை ஒட்டி எழுந்த சர்ச்சை சற்று விசித்திரமானது.
தென்னிந்தியர்களை எப்படி கறுப்பர்கள் என்று கூறலாம் எனக் கேட்டு நம் அரசியல் தலைவர்களும் சமூகவலைதள எழுத்தாளர்களும் அவரை துவம்சம் செய்கிறார்கள். ”என் கருத்து சரியாக வெளிப்பட வில்லை, மன்னிக்கவும்” என தருண் விஜய் தெண்டனிட்டு விட்டார். ஆனால் இப்பிரச்சனை சுலபத்தில் ஓயும் எனத் தெரியவில்லை.
திமுகவின் டி.கெ.எஸ் இளங்கோவன் சொல்கிறார்: திமுக தலைவர் கருணாநிதி சிகப்பில்லையா? ஜெயலலிதா சிகப்பில்லையா? எப்படி தமிழர்களை கறுப்பு எனக் கூறலாம்?
நமக்கு இவ்வளவு கோபம் வரக் காரணம் கறுப்பின் மீதுள்ள தாழ்வு மனப்பான்மையா? நம் தோல் நிறத்தின் அடிப்படையில் வட இந்தியர்கள் நம்மை தாழ்வாக நடத்துகிறார்கள் எனும் எண்ணமா? நம் தோல் நிறம் மீது நமக்கு கழிவிரக்கம் இல்லையென்றால் நம்மை கறுப்பர்கள் என அழைக்கும் போது நமக்கு ஏன் ஆவேசம் வர வேண்டும்? ஏன் நம் மத்தியிலும் சிகப்பான தலைவர்கள் உண்டு என சொல்ல தேவை ஏற்பட வேண்டும்?

Monday, April 3, 2017

நம் கல்லறை வாசகங்களை நாமே செதுக்க வேண்டும்

Image result for வள்ளுவர்
நான் என் முனைவர் பட்ட ஆய்வை தமிழ் நவீனத்துவம் பற்றி செய்தேன். குறிப்பாக உடல் பிம்பம் எவ்வாறு கடந்த நாற்பது வருடங்களில் மாறி வந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்தேன். அப்போது நான் சந்தித்த முக்கிய இடைஞ்சல் துணை ஆய்வு ஆதாரங்கள் கிடைக்காதது. என் ஆய்வின் முதல் வருடத்தில் நவீன கவிதை பற்றி வந்த நூல்களை தேடி சேகரித்தேன். மிக மிக சொற்பமான நூல்களே கிடைத்தன. அவையும் எனக்கு உதவிகரமாய் இல்லை. ஏனென்றால் அவை தத்துவார்த்தமாயோ மொழி ரீதியிலோ நம் கவிதைகளை ஆராயும் புத்தகங்கள் அல்ல.
 இணையத்தில் நமது எழுத்தாளர்கள், அவர்களின் முக்கிய படைப்புகள் பற்றி சில கட்டுரைகள் கிடைக்கின்றன. அவையும் ஆழமான ஆய்வுகள் அல்ல. ஆனாலும் ஏதோ ஒரு மேற்கோள் என இருக்கட்டுமே என அவற்றை பயன்படுத்திக் கொண்டேன். அப்போது நான் கவனித்தது என்னவென்றால் ஒருசில பிளாகர்களே தொடர்ந்து புத்தகங்கள் பற்றி எழுதுகிறார்கள். ஒரு எழுத்தாளன் இறந்து போகும் போது மட்டும் தான் அவனைப் பற்றி விரிவான கட்டுரைகள் வருகின்றன. அசோகமித்திரன் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் இவ்வளவு தீவிரமான கேள்விகளை யாரும் எழுப்பி இருக்க மாட்டார்கள். (இப்போது வரும் அஞ்சலிக் கட்டுரைகளிலும் இலக்கிய ஆய்வுகள் என அதிகம் தேறுவதில்லை, என்றாலும் கூட)