Sunday, August 31, 2014

CWC: ஒரு புகைப்பட கண்காட்சி


நேற்று chennai weekend clickers புகைப்படக் குழுவினரின் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். லலித் கலா அகாதமியில் நடந்தது. இந்தியாவின் பலவிதமான மக்கள்பகுதிகளை ஒரே இடத்தில் ஆச்சரியமான வண்ணங்களில் பரிமாணங்களில் பார்க்கும் ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. நிறைய பயணித்திருக்கிறார்கள். கடுமையாக உழைத்திருக்கிறார்கள். 

Friday, August 29, 2014

லஷ்மி சரவணகுமார் கவிதைகள்: யவனிகாவும் கோணங்கியும் சந்திக்கும் புள்ளி - ஆர்.அபிலாஷ்


லஷ்மி சரவணகுமாரின் முதல் கவிதைத் தொகுப்பு “மோக்லியை தொலைத்த சிறுத்தை”.
லஷ்மி சரவணகுமாரின் கதைமொழி நமக்கு பரிச்சயமானது. வாழ்க்கை பின்புலம் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுடையதாக, ஒருவித எதிகலாச்சார காரத்துடன் இருக்கும் என்பதையும் அறிவோம். அதிகம் பேசப்படாத விசயம் அவர் மிக மிக கவித்துவமான மொழியையும் கொண்டவர் என்பது. முற்போக்கு எழுத்தாள அண்ணாச்சிகளுக்கும் கோணங்கி வாரிசுகளுக்கும் நடுவே ஒரு குறுக்குசந்து அமைத்து வாழ்பவர் லஷ்மிசரவண குமார். கோணங்கி பாணியிலான கதைகளில் சிலவேளை அவர் கவித்துவத்தின் உச்சத்தை தொடுவார். அது போக தோற்கடிக்கப்பட்ட மனதின் உளவியல் மீதும் ஒரு வலுவான பிடிப்பு அவருக்கு உண்டு. இந்த இரண்டு தன்மைகளும் லஷ்மி சரவணகுமாரின் எழுத்தாளுமை.

Wednesday, August 27, 2014

நீயா நானா: மருத்துவர்கள் அத்தியாயமும் சர்ச்சையும்


நீயா நானா: மருத்துவர்கள் அத்தியாயமும் சர்ச்சையும்
மருத்துவர்கள் பற்றின நீயா நானா நிகழ்ச்சி முன்பு எப்போதும் இல்லாத வகையில் மருத்துவர் சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வரை முகநூல் முழுக்க மருத்துவர்களின் பல்வேறு கண்டனங்கள் பெருக்கெடுத்தன. சில மருத்துவர்களுக்கு பேசுவது கோபிநாத்தாக இருந்தாலும் கருத்துக்கள் இயக்குநர் ஆண்டனியுடையது என புரியவில்லை. கோபிநாத்தை அடிங்கடா என கூவிக் கொண்டிருந்தனர். மருத்துவர்கள் சீக்கிரம் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். இணையத்தில் எங்குமே அவர்களை விமர்சிக்க முடியாது. குறைந்தது பத்து பேராவது அடிக்க வருவார்கள். இது அவர்கள் அடிப்படையில் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் எனக் காட்டுகிறது. தம்மைப் பற்றின பெயர் கெட்டுவிடக் கூடாது எனும் பதற்றத்தில் உண்மையை ஒத்துக் கொள்ள தயங்குகிறார்கள்.

Saturday, August 23, 2014

“யுவபுரஸ்கார்” விருதை ஒட்டி சில எண்ணங்கள்


இவ்வருடத்திற்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது தமிழில் எனக்கு “கால்கள்” நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நான் பெறும் முதல் விருது இது. ஒருவேளை கனவோ என அரைநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். யாராவது என்னை வைத்து வேடிக்கை பண்ணுகிறார்களோ என சஞ்சலம் தோன்றியது. பிறகு மெல்ல மெல்ல என்னையே நான் நம்ப வைத்தேன்..
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் சில முக்கிய சம்பவங்களை, நபர்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

Friday, August 22, 2014

சென்னை: கிராமம் போல் தோன்றும் நகரம்

புகைப்படம்: காயத்ரி தேவி

சென்னைக்கு முதன்முதலாக வந்த போது சாலையில் வண்டி ஓட்டுவது தான் அச்சம் தந்தது. அப்புறம் உணவு. எனக்கு இங்குள்ள உணவு பழகவே இல்லை. காரமும் புளியும் தேங்காய்ப் பால் வாசனையும் தான் எங்கள் உணவின் சாரம். சென்னை உணவு வேறு மாதிரி. நான் தினமும் மீன் சாப்பிட்டு வளர்ந்தவன். ஊரில் மிக மிக ஏழைகள் கூட சின்ன துண்டு மீன் இல்லாமல் சோற்றை முழுங்க மாட்டார்கள். காய்கறி எங்களுக்கு ஊறுகாய் போல. ஆனால் சென்னை பெரும்பாலும் ஒரு சைவ நகரம். இங்கே மீன் உணவு கிடைக்கும் இடங்களை தேடிப் போக வேண்டும். அதுவும் விலை அதிகம். நான் சென்னை கிறுத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்த பல நாள் மதிய உணவு இறங்காது. ஊரில் தினமும் ஏதாவது குழம்பை மாற்றி மாற்றி பண்ணுவார்கள். இங்கே தினமும் ரச சாதம் உண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அவர்களைப் பார்த்தால் வேற்றுநாட்டவர் போல தோன்றும். விடுதியில் ஒருநாள் கூட மீன் போட்டதில்லை. இது ரொம்ப விநோதமாய் பட்டது. கறி என்றால் சிக்கன் தான். எங்களுக்கு சிக்கன் மற்றொரு காய்கறி தான். உண்மையான கறி என்றால் எனக்கு மாட்டுக்கறி, பன்றிக்கறி பிறகு ஆட்டுக்கறி. துரதிர்ஷ்டவசமாக இந்த நகரத்தில் பிறந்து வாழ்பவர்களுக்கு மாடு, பன்றி போன்றவை ஒவ்வாமை. அல்லது மோஸ்தர் அல்ல.

Wednesday, August 20, 2014

ஷிஷெக்: முரண் இயக்கத்தின் ஆன்மீகம்


என் முனைவர் பட்ட நெறியாளர் சமீபமாக வாங்கின நூலொன்றை பார்க்க தந்தார். ஸ்லெவொய் ஷிஷெக்கின் Agitating the Frame. எடுத்து புரட்டினேன். வசீகரமான தலைப்புகள் ஆர்வம் கொள்ள வைத்தன. எழுத்தாளர் யாரென Traces of a Virtual Event: On the Dark Knight Rises கட்டுரை படிக்கும் வரை கவனிக்கவில்லை. பாதியில் தான் ஷிஷெக் என கவனித்தேன். அதுவும் நல்லது தான். ஏனென்றால் முதலில் பார்த்திருந்தால் ரொம்ப ஹெவி டோஸ் என நினைத்து தள்ளி போட்டிருப்பேன். ஆனால் ஷிஷெக் நமக்கு பரிச்சமுள்ள கோட்பாட்டு எழுத்தாளர்களைப் போல் முதல் வரியை பாதி பக்கம் வரை நீட்டக்கூடியவர் அல்ல. மென்மையான வாசனையற்ற வோட்கா போல் எளிதான இதமான ஆனால் சூடான மொழி அவரது. அவர் ஒரு கலவை: லட்சியவாதி, அதேவேளை பிடிமானங்களை உதறும் ஒருவகை கலகவாதி, மார்க்ஸியவாதி அதேவேளை ஒரு ஆழமான ஜென் ஆன்மீகவாதமும் உள்ளோடுகிறது. ஒரு சிக்கலான விசயத்தை பேசும் போது சட்டென ஒரு அட்டகாசமான ஜோக்கை எடுத்து விடுவார். பிற கோட்பாட்டாளர்களைப் போல் அவர் சம சிந்தனையாளர்களுடன் பட்டம் விட்டு போட்டி போடுவதில்லை. எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசித்து மேற்கோள் காட்டுகிறார். பிளாகை கூட விடுவதில்லை. பேட்மேன் படம் பற்றி பேசுகையில் இந்தியாவில் இருந்து கார்த்திக் எனும் ஒருவரின் வெர்ட்பிரஸ் கட்டுரை ஒன்றைக் கூட மேற்கோள் காட்டுகிறார். 

ஒரு நல்ல கல்லூரி என்றால்...

நேற்று லயோலா கல்லூரியில் மனித வளம் தொடர்பான ஒரு துறை ஏற்பாடு செய்த சந்திப்பில் மாணவர்களிடம் மனம் மற்றும் மூன்று நிலையிலான உறவுகள் பற்றியும் பேசினேன்.
 ஒரு அழகான அரங்கு. முன்னூறு முதலாமாண்டு மாணவர்கள். கவனமாக கேட்டு நல்ல கேள்விகளை பிற்பாடு எழுப்பினார்கள். அன்பாக வந்து கை கொடுத்தார்கள். நான் முன்பு கல்வி நிலையில் வெகுவாக கீழே உள்ள மாணவர்களுக்கு தான் அதிகம் நான்கு வருடங்களில் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு சிக்கலான விசயங்களை புரிய வைப்பது சிரமம். புரிந்தாலும் வகுப்பில் விவாதிக்க முன்வர மாட்டார்கள். அவர்களை கட்டுக்கோப்பாய் வைப்பதிலேயே நம் கவனம் பாதி சென்று விடும். அதனால் லயோலாவில் உள்ளது போன்ற முதிர்ச்சியும் திறமையும் கொண்ட மாணவர்களிடம் உரையாடுவது என் சகவயதினரிடம் உரையாடுவது போல் தோன்றுகிறது. இப்படியான மாணவர்களை தினமும் சந்திக்கும் ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள். தன்னம்பிக்கையாக முன்வந்து மைக்கில் பேசுகிறார்கள். ஒரு மாணவன் ஆந்தனி ராபின்ஸின் நூல் ஒன்றை படித்ததாய் கூறினான். மகிழ்ச்சியாக இருந்தது.

ஆசிரியர்களின் staff room நவீனமாய் வெளிச்சமாய் அழகாய் உள்ளது. attendance register வைக்கும் ஸ்டாப் வெயிட்டிங் அறை சோபா போட்டு நளினமாய் உள்ளது. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் வேலை பார்த்த கல்லூரியில் ஆசிரியர் அறையில் குழல் விளக்கு பெரும்பாலும் வேலை செய்யாது. அப்படி வேலை செய்தாலும் ஏதோ பார் போல் அரை இருட்டாகவே இருக்கும். இன்னொரு கல்லூரியில் ஒன்றுக்கு போக அரைமைல் நடக்க வேண்டும். இங்கே ஆசிரியர்களின் அறைக்குள்ளேயே சுத்தமான கழிப்பறை. லயோலாவின் ஆசிரியர்கள் கொடுத்த வைத்தவர்கள்.
நான் கவனித்ததில் மிகவும் கவர்ந்த இன்னொரு விசயம் கண் தெரியாத மாணவர்களை ஒரு பேட்டரி காரில் கொண்டு போய் வகுப்பறையில் விடுகிறார்கள். 

பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்?


\
இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமா என அடிக்கடி நினைப்பேன். அது பெரும்பாலும் முகநூலில் என் நடவடிக்கை சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஒரு விசயம் பார்த்து கொந்தளித்து மாங்கு மாங்கென்று எழுதி விட்டு கொஞ்ச நேரம் கழித்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும். ஒரு அற்ப விசயம் எப்படி எனக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றியது?

Monday, August 18, 2014

உலகமில்லாத உலகில் எழுதப்படும் கவிதைகள் – தமிழவன்


ஆர்.அபிலாஷ் சமீபத்திய தமிழ்க் கவிதையை எழுதுபவர். நான் மூன்று தலைமுறையைத் தாண்டி (ஒரு தலைமுறை பத்து ஆண்டுகள்) அவரைப் படிக்கிறேன். இவருக்கு முன்பு முப்பது வருடங்கள் தமிழ் மொழி எப்படி கவிதையை உருவாக்கியது, கவிதைத் தமிழ் மொழியை மாற்றியது, கருத்து புலப்பாட்டு முறையில் நடந்த விளைவுகள் என்ன என்றெல்லாம் நான் யோசித்தபடி வாழ்ந்து கொண்டிருப்பவன். புதுக்கவிதை உதித்த போது இளைஞனாக அக்கவிதையை உச்சரித்தபடி இருந்த தலைமுறை நான். எனக்கு இன்றைய – மிகவும் மாறிப் போன – தமிழ்மொழியைக் கவிதைமுறையில் தொடர்ந்து மாற்றி அமைக்கும் அபிலாஷ் என்ன மாதிரி தெரிகிறார்? இது பற்றி எழுத அவரது முதல் கவிதைத் தொகுப்பு “இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்” மீதான என் கருத்துக்கள் இவை.

Saturday, August 16, 2014

அச்சே தின்

”இந்த சுதந்திர தினத்தன்று நீங்கள் இந்த தேசத்துக்கு விடுக்கிற சேதி என்ன என சுருக்கமாக சொல்லுங்கள்”

பிரதமர்: “எல்லாரும் உங்க பிள்ளைங்கள வீட்டுக்குள்ள பூட்டி ஒழுங்க வச்சிருந்தீங்கன்னா திருட்டு, கொலை கொள்ளை, கற்பழிப்பு எதுவும் நடைபெறாது. சும்மா எருமை மாடு மாதிரி திரிய விடாதீங்க, அதனால் தான் நாட்டுல குற்றங்கள் பெருகுது?”

“அப்போ போலீஸ், நீதிமன்றம், நீதி விசாரணை, அறம் எல்லாம் எதுக்கு?”
பிரதமர்: “அதான் எனக்கும் புரியல. எங்க மாநிலத்தில அதெல்லாம் கிடையாதுங்க”

“நீங்க எப்படிப்பட்ட பிள்ளை? உங்க அம்மா ரொம்ப ஸ்டிரிக்டா?”

பிரதமர்: “நான் தான் சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடி வந்துட்டேனே! அதனால எங்க அம்மா அப்பவே தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க. பல வருசங்களுக்கு பிறகு கடைசியா தேர்தலுக்கு முன்ன தான் அவங்கள பார்த்து வணங்கி போட்டோ எடுத்துக் கிட்டேன்”

“அப்போ உங்களைப் பார்த்து என்ன சொன்னாங்க?”


பிரதமர்: “மூஞ்சிய கோணலா வச்சிக்கிட்டு சொன்னாங்க - அச்சே தின்”

“ஜிகிர்தண்டா”: பவர்ஸ்டார் உளவியல்


சிலநேரம் வணிக இயக்குநர்கள் பரீட்சார்த்தமாய், கொஞ்சம் கலை ரசிகர்களும் பாராட்டும்படி ஒரு படம் எடுத்துப் பார்க்க ஆசைப்படுவார்கள். “ஜிகிர்தண்டா” அப்படியான முயற்சி. இந்த படத்தில் மூன்று கதைகள் உள்ளன. சினிமா எடுக்கிற ஒரு இளைஞனின் போராட்டங்கள், தடைகள் பற்றியது. இன்னொன்று ஒரு சைக்கோத்தனமான ரௌடி பற்றியது. மூன்றாவது பவர்ஸ்டார் பற்றியது. படம் இளைஞனில் ஆரம்பித்து சைக்கோவில் வந்து பவர்ஸ்டாரில் முடிகிறது. மூன்றுமே தீவிரமுள்ள கதைகள் தாம். ஆனால் எதிலும் நிலைகொள்ளாமல் படம் தத்தளிக்கிறது.
இது பெரும் கனவுடன் எழுதப்படுகிற கதைகளுக்கு ஏற்படுகிற சிக்கல் தான். கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு கதை சொல்ல முயல்கிறார். ஆனால் இது கதைக்கு தேவையற்ற அலங்காரமாய் இருக்கிறது. உதாரணமாய் சித்தார்த்திடம் ஒரு தயாரிப்பாளர் கேங்ஸ்டர் கதை இருந்தால் படம் பண்ணலாம் என்கிறார். இது தான் படத்தின் முதற்காட்சியாக இருக்க வேண்டும். ஆனால் படம் ஒரு ரியாலிட்டி ஷோவில் இரண்டு ஜட்ஜுகள் மோதுவதில் ஆரம்பித்து சுவாரஸ்யமாக ஆனால் தேவையற்று தயாரிப்பாளர் சித்தார்த்திடம் கேங்ஸ்டர் படம் பண்ண கேட்பதை நோக்கி மெதுவாக திருப்பதி பக்தர் அணிவகுப்பு போல் நகர்கிறது. அதே போல் லஷ்மி மேனனும் அவர் அம்மாவான அம்பிகாவும் சேலை திருடும் சுவாரஸ்யமான மற்றொரு காட்சி. லஷ்மி மேனனின் திருட்டு சுபாவம் கதையில் வேறெங்கும் வராத நிலையில் இக்காட்சியும் மற்றொரு திணிப்பு காட்சி தான். ஆனால் நகைச்சுவை இந்த இழுவைத்தன்மையை கவனிக்க செய்யாமல் வேகமாய் நகர்த்தி கொண்டு போகிறது.

Thursday, August 14, 2014

ஒரு இலை உதிர்வது போல் நாம் சாகக் கூடாதா?ஜூலை 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் கருணைக்கொலையை சட்டபூர்வமாய் ஏற்கும் விதியை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க அரசாங்கத்தை கேட்டது. இதை ஒட்டி ஒரு கருணைக்கொலை தேவையா என்கிற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. தூக்குத்தண்டனை விவாதத்தை இது மிகவும் நினைவுபடுத்துகிறது. ஏனெனில் கருணைக்கொலை ஆதரவாளர்களின் வாதங்கள் கிட்டத்தட்ட அதே வகையானவை. இன்று நம்மிடம் பரவி வரும் ஒரு எதிர்-வாழ்க்கை, பாஸிச, கேளிக்கை மனநிலை நோயுற்றவர்களையும், குறைபாடனவர்களையும் சகிக்க முடியாத மனநிலைக்கு இவர்களை தள்ளி விட்டது. வாழ்க்கையை ராட்சத ராட்டினத்தில் கூவியபடி பயணிக்கும் ஒன்று மட்டுமேயாக நாம் ஒற்றைபட்டையாய் நம்ப துவங்கி இருக்கிறோம். விளைவாக நிறைய படித்தவர்கள் எந்த ஈரமும் இன்றி கூசாமல் ஒருவரை கொல்லுவது பற்றி புறநிலையாக, வறட்டு தர்க்கத்துடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று வாழ்க்கை பற்றியும் மரணம் பற்றியும் வேகமாய் பரவி வரும் மேலோட்டமான நம்பிக்கைகள் கருணைக்கொலை விசயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே ஒரு ஆபத்தான சிவில் சமூகமாக நாம் மாறி வருவதை காட்டுகிறது.

Tuesday, August 12, 2014

இந்திய டெஸ்ட் அணி ஒரு போலி T20 அணி


இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கும் முன் இந்தியாவின் பலவீனம் பந்து வீச்சு தான் என பலரும் சொன்னார்கள். மட்டையாளர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு ஒரு காரணம் இங்கிலாந்தின் மட்டையாட்டம் பலவீனம் என்பதால் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க தொடர்களில் அவர்கள் தட்டையான ஆடுதளங்களை தயார் பண்ணினது. இந்தியாவுடனான முதல் டெஸ்டிலும் அப்படியான ஆடுதளம் தான். அப்போது இந்திய மட்டையாளர்கள் முன்னூறு ஓட்டங்களை நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாட்டில் அடித்தார்கள். ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்டில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைத்து இங்கிலாந்து வேறு முயற்சி செய்தது.

Thursday, August 7, 2014

கொஞ்சமே கொஞ்சம் தாமதமாக!

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் ஆட்ட்த்தின் முதல் நாளான இன்று எல்லா மட்டையாளர்களை விடவும் எட்டாவதாக களமிறங்கிய அஷ்வின் தான் மிக சுலபமாக பந்து வீச்சை எதிர்கொண்டு நாற்பது சொச்சம் அடித்தார். அவர் ஆட்டத்தில் ஒரு ஸ்டைல், லாவகம், சிரமமின்மை தெரிந்தது. அதற்கு முக்கிய காரணம் அஷ்வின் அரை நொடி தாமதமாக பந்தை அடிப்பது.