Sunday, September 28, 2008

நவீன தலித் மனதின் பிளவுக்களம்: நட.சிவகுமார் கவிதைகள்

நட.சிவகுமாரின் சமீப கவிதைகள் ("வெட்டி முறிப்புக்களம்") தனி நபராகவும், சமூக மனிதனாகவும் கவிதை சொல்லியின் பல்வேறுபட்ட பிளவுகளைப் பேசுபவை. மாந்திரிகச் சடங்குகள் பற்றின நுண்தகவல்கள், மைய நீரோட்ட சாதியினரின் வரலாற்றுப் புனைவுகளை சாடும் எதிர்கலாச்சார பதிவுகள் ஆகியன இவர் கவிதைகளுக்கு காற்றில் பறந்து விடாதபடியான கனபரிமாணத்தை, மண்ணில் காலூன்றும் வலுவை அளிக்கின்றன.

பழம் கலாச்சாரக் கூறுகள், வை விளிம்பு நிலை சமூகத்தினுடையதாகினும், இன்றைய முதலாளித்துவ, அறிவியல் சமூக ஓட்டங்கள் முன் பொருளற்றுப் போகும் தருணங்கள் நிறைய உள்ளன. சிவகுமார் ஒருபுறம் தலித் தெய்வங்களாய் மேலாங்கோட்டு, கொல்லங்க்கோட்டு அம்மன்கள், இசக்கி, மாடன், சுடலையின் வீரியம் பேசுகிறார். மறுபுறம் தான் பயங்கரவாத உலகில் பிழைக்க குண்டு துளைக்காத வீடும், இரண்டாய் வெட்டிப் போட்டால் உடல் ஒன்று சேரவும், காசு கொட்டவும் வரங்கள் கேட்டால் தர இயலாது உருத்தெரியாது மாயமாகும் தனது உதவாத தலித் தெய்வத்தையும் பகடி செய்கிறார் ("மாந்திரிக ஓலைச்சுவடி"). காலமாற்றங்களில் வலுவிழக்கும் சமூக கலாச்சார கூறுகளை எதிரொலித்த புதுமைப்பித்தனின் வயொதிக வேதாளத்திற்குப் பிறகு முக்கிய பகடிப் பாத்திரம் சிவகுமாரின் இந்த சுடலைதான். இன்றைய சூழலில் பின்-நவீன மனிதன் தனி அடையாளங்களை சிறுகச்சிறுக இழந்து நுகர்வோனாக மட்டும் பரிணமித்து வருகிறான். கலாச்சார நுண் அடையாளங்கள் மற்றும் வம்ச வரலாற்றை புனரமைப்பதோ, பத்திரப்படுத்துவதோ அரசியல், சமூக நிர்பந்தம். ஆனால் அவை பிரஜையற்ற இன்றைய உலகின் சுருங்கி வரும் வெளியில் பல சமயங்களில் பொருளற்றுப் போகின்றன. இதிலிருந்து விளைவதே மேற்சொன்ன கவிதையின் கரிப்பான நகைச்சுவை மற்றும் அங்கதம். இதே தொனியில் அடையாளங்கள் அழிபடும் நவீன வெளியில் பல்லிவாலாக துண்டுபடும் கலாச்சார வாழ்வினைப் பற்றின பதிவு இக்கவிதை.

"காய்க்காத பாலும்
இள நீயும் குத்து விளக்கும் ஏத்தி வச்சு
வாழ இல போட்டு பருப்பு பப்பட பாயசத்தோட
சாப்பாடு படைச்சு
டீசர்ட் ரெடிமேட் பேண்ட்
கர்ச்சீப் சகிதம் எடுத்து வச்சு
கனத்த மனசோடு
அவன் ஆல்பத்தை லேசா புரட்டிக் கொண்டோம்."

இங்கு 'காய்க்காத பால்' × 'டீசர்ட் ரெடிமேட் பேண்ட்' முரணை கவனியுங்கள்.

எதிர்கலாச்சார கூறுகளை எடுத்துரைக்கும் அவசியத்திலும், நவீன காலத்தின் வெட்டிமுறிப்பு களத்தில் துண்டுபடும் பண்பாட்டு மனதின் பாலான பகடி சிவகுமாரின் கவிதைகள் முன்வைக்கும் முக்கிய அவதானிப்பு.

சிவகுமாரின் கவிதைகள் சமூக மனப் பிளவிலிருந்து உள்நகர்ந்து மேலும் நுட்பமாய் தனிமனித ஆளுமை உடைவை விசாரிக்கின்றன. சுயம் மீறிப் போகும் தனிமனித அதிகாரப் பசியை "உடல் தின்னும் பிசாசு"க் கவிதையில் விவரிக்கிறார்.
இதுவரையிலான வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களின் வயிற்றுள் வாழ்ந்திருப்போம், அதே நேரம் பாதி செரித்த நிலையில் அகப்பட்ட மனிதர்கள் பலரை நம் சிறுஇரைப்பைக்குள் அடக்கியிருந்திருப்போம். இந்த நரகாசுர விருந்து எழுத்து அரசியலில், அன்றாட அலுவலக உறவுகளில், குடும்ப அடுக்குகளின் நகர்வுகளில் சகஜமாக நிகழ்வது. இதனை 'பயன்படுத்தல்' என்றல்லாமல் நுண்சொல்லாடல்கள் வழியான அதிகாரக் கடத்தல் என்பதே தகும்.

"அந்த வயதில்
செண்பகத்தையும் பிச்சுமணி சாரையும் தின்று முடித்தேன்
கல்லூரிக் காலங்களில்
வித்யாவை
பிறகு பெயர் சொல்ல விரும்பாத அவளையும்
தம்பியையும் சாப்பாட்டுப் பாத்திரத்தில் வைத்து
கொஞ்சமாக வைத்து தின்று கொண்டிருந்த போது
கைதவறி விழ
எடுத்து தூசு தட்டி ஒவ்வொன்றாக சாப்பிடுகிறேன் ...
இனி யாரையெல்லாம் தின்னப் போகிறேனோ ..."

முன்பு என் அலுவலகத் தோழி ஒருவரும் நானும் தினசரி பெண் விடுதலை பற்றி விவாதிப்போம். பெண்கள் வேலைக்கு செல்வதன் மூலம் மட்டுமே பொருளாதாரத் தன்னிறைவும், அதன் வழியாய் ஆளுமை வளர்ச்சியும், சுதந்திரமும் பெற முடியும் என்று ஒருமனதாய் தீர்மானம் வழிமொழிவோம். எக்காரணம் கொண்டும் தான் வேலையை விடப் போவதில்லை என்றார் அவர். பிறகு அவருக்கு திருமணமானது. வேலையை ராஜினாமா செய்தார். சம்பிரதாய வீட்டு மனைவி ஆனார். ஒரு நாள் கணவரிடம் விசனித்தார்: "இப்படி ஹவுஸ் வைஃப் ஆகி விட்டேனே நான்". அதற்கு கண்வர் அவேசமாய் பத்லுரைத்தார்: "வீட்டு வேலைன்னா சாதாரணமா? உன்னை ஹவுஸ் வைஃப் என்றெல்லாம் கொச்சைப்படுத்தாதே, எவ்வளவு முக்கியமான வேலைகளெல்லாம் செய்கிறாய். நீ ஹவுஸ் வைஃப் எல்லாம் கிடையாது!". சரி, அந்த முக்கிய வேலைகள் என்ன: துணி துவைப்பது, இஸ்திரி போடுவது, வீட்டைப் பெருக்கி அலம்பி விடுவது, சமைத்து, பாத்திரம் அலம்பி ... இப்படி வீட்டைக் கட்டி மேய்ப்பது ஒயாத வேலை என்பதைத் தான் பெரிய வேலை என்று அளந்திருக்கிறார் கணவர். நகைமுரண் இத்தோடு நிற்கவில்லை. காட்டேரி கடித்ததும் (தோழி மன்னிப்பாராக) கடிபட்டவருக்கும் கோரப்பற்கள் முளைக்கின்றன. மேற்சொன்ன தோழியை அடுத்த முறை சந்தித்த போது இதையே திரும்பத் திரும்ப சொன்னார்: " வீட்டுலயே ஆயிரம் வேலை இருக்கிறச்ச அடுத்தவங்க் கிட்ட எதுக்கு வேலை பார்க்கணும். மேலும், அலுவக வேலையை விட வீட்டு வேலை சிக்கலானது, சிரமமானது. " ஒரு மனிதன் தான் இரை ஆவதை, தொடர்ந்து தானே இரைகொல்லி ஆக பரிணமிப்பதையும் பிரக்ஞைப் பரப்பில் உணர்வதே இல்லை.

அழகியல் மனதின் மறைமுக வன்முறையை கவனிக்கிறது ஒரு கவிதை. அறைச்சுவரில் ஒட்டிக் கிடந்த வண்ணத்துப் பூச்சியை கவிதையாக்குகிறான். பிறகு அது

"காதுகளிலும் வாயிலும் நுழைந்த போது
கடித்துத் தின்ன
பொத்துக்கிட்டு வந்தது கோபம்."

மேலும் சில கவிதைகள் எளிய உயிர்கள் மீதான வன்முறையை (கடந்தை, சிலந்திப் பூச்சிகள், ஆமைப்புழுக்கள்) குறியீடாக கொண்டு தனிமனித அறம் நுட்பமானதொரு தளத்தில் புரையோடிப் போய் விட்டதை பேசுகின்றன. இந்த முதலாளித்துவ நூற்றாண்டில் மனிதன் விலகி நின்று குழந்தைகள், பெண்கள், ஆதரவற்றவர்கள் மீதான வன்முறையை ஆதரிக்கிறான். அல்லது பிரயோகிக்கிறான். எப்போதையும் விட இந்த காலத்தில் தான் சித்தாந்தங்களில் நம்பிக்கை இழந்து வன்முறை முன் அம்மணமாய் நிற்கிறோம். சமீப தமிழக தேர்தல் முடிவுகள் சரியான உதாரணம் இதற்கு. மற்றொரு தளத்தில் மத்திய வர்க்கத்தினரின் உள்ளார்ந்த குரூர, வன்ம வெளிப்பாடாகவும் கீழ்வரும் வரிகளை புரியலாம்.

எச்சிப்பாத்திரம் கழுவிய சாக்கடை நீர் கசிந்து வீட்டு சமையலறைக்குள் வர அதன் வழி ஆமைப்புழுக்களும் நுழைகின்றன. கவிதைசொல்லி லோசன் தெளிக்கிறான். பயனில்லை. கடைசியாய் சாக்கடை மூடுகிறான்.

"அன்றிரவில்
 ... காதுவழி வந்தது ஓராயிரம் ஆமைப்புழுக்கள் ... ரத்தம் குடிக்க"

அறம் பிளவுண்ட மனதில் சுயரத்தம் குடிக்கும் புழுக்கள் இவை.

இதன் நீட்சியாக நாம் படிக்க வேண்டியவை வடை சுட்ட பாட்டி கதையை அங்கதமாக்கும் இவ்வரிகள்:

"அந்த மரத்தடியில் ஏமாந்த பாட்டி
அன்றொரு நாள் இறந்து போனாள்
வடையை எடுத்த காகங்கள்
காகாவென கரைந்து கொண்டே
பாட்டியை சுற்றி ...
கலந்து கொண்டன"

பாட்டியின் சாவு கருத்தியலின் கருமாதிதான்.

அடுத்து வருகின்ற கவிதை கருத்தியல் பிடிமானமற்ற மனிதர்களின் பாசாங்கை பகடி செய்கிறது.

" கால்தடுக்கி சாக்கடையில் விழுந்தும்
ஓவியனின் வர்ணத்தை களவாண்டு பூசியும்
தன்னை கறுப்பு எருமையாக்கியது பசு ...
இப்போது எருமைகளுக்கு மவுசு இருப்பதால்
திமிர்பிடித்த எருமையாக
காட்டிக் கொண்டதில் தப்பில்லை"

தலித் ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்கள் மீதான விமர்சனமாகவும் இக்கவிதையை படிக்கலாம். குறிப்பாக தமிழினி வசந்தகுமார் தலித் எழுத்தாளர்கள் என்றால் இலவசமாகவே பதிப்பிப்பேன் என்று கொள்கை கொண்டுள்ளவர். ஆனால் முக்கிய தலித் கவிஞரான என்.டி ராஜ்குமாரின் "ரத்தசந்தனப் பாவை" தமிழினி வெளியீடாய் வந்த போது அவரை வசந்தகுமார் நுட்பமாக உதாசீனத்ததை, நேரடியாக உரையாடத் தவிர்த்ததை கண்கூடாகக் கண்டேன். "ரத்தசந்தனப் பாவையின்" கவிதைத் தேர்வு தொடர்பாய் சில திருததங்கள் செய்ய கவிஞர் விரும்பினார். ஆனால் அப்போது தமிழினியின் ஆஸ்தான எழுத்தாளருக்கும், ராஜ்குமாருக்கும் இலக்கிய சர்ச்சை காரணமாய் மனமுறிவு ஏற்பட்டிருந்தது. இதனால் தொகுப்பு உருவாக்கத்தில் .குமார் என்.டியை முழுக்கவே தவிர்த்தார். நாகர்கோவிலில் இருந்து தினமும் எஸ்.டி.டி போட்டு என்.டி. .குவை வேண்டுவார். .கு இல்லை என்று பதில் வரும் அல்லது பேசினால் அவர் என்.டி சொல்லும் திருத்தங்களை ஒரேயடியாய் நிராகரிப்பார். வேண்டாவெறுப்பாய் தொகுப்பு வெளிவந்த பின் என்.டிக்கு பத்து புத்தகங்கள் தரப்பட்டன; காசு தருகிறேன் அதிக புத்தகங்கள் தாருங்கள் என்ற கோரிக்கையும் மறுக்கப்பட்டது. இதுவே ஒரு மேல்தட்டு முன்னணி எழுத்தாளனுக்கு நிச்சயம் நிகழ்ந்திருக்காது. பசு எருமையான கதை இதுதான்.

வெட்டி முறிப்பு களம் தொகுப்பின் மற்றொரு முக்கிய கவிதை "பெயர்". சமூகம் புறாக்கூண்டு தட்டுகளுக்குள் அடைத்துள்ள சாதி அடையாளத்தை நுட்பமான கேலிக்குள்ளாக்குகிறது இக்கவிதை. வண்ணானான கவிதைசொல்லிக்கு பறையர், காணிக்காரர், சாணர், பரவர், கோனார் ஆகிய சாதிமனிதர்களுடன் தொழில் மற்றும் அன்றாட வாழ்வியல் பரிவர்த்தனை சார்ந்த சாதி ஆதிக்கம் தாண்டின உறவு உள்ளது. இவர்கள் தனது "சொந்தக்காரர்கள்" என்று உறவு பாராட்டுகிறார். ஆனால் கவிதையின் முதல், இறுதி வரிகளான "ஊரில் என் பெயர் வண்ணான்" சமூகத்தின் மைய நீரோட்டத்துடன் தான் பிளவுபடுவதை, தனது சமூக அடையாளம் "சிவகுமார்" எனும் பெற்றோர் உற்றோர் இட்ட பெயர் தாண்டி தனிக்குணம் இழந்து "வண்ணான்" என தட்டையாவதை நகைமுரணுடன் சுட்டுகின்றன.

 இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் மூன்று வருடங்கள் நான் முதன்மையாக வந்தேன். சென்னை கிறித்துவக்கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்த போது பொறுக்க முடியாமல் என் தாய்மாமன் சொன்னார்: "அவனுக்கு தான் எங்கு போனாலும் இட ஒதுக்கீடு உள்ளதே!". எம்.சி.சியிலும் கல்லூரி முதல்வர் அலுவலக குமாஸ்தா ஒருவர் நக்கலாக உதிர்த்தார்: "நானும் கவனித்து வருகிறேன்: ஊனமுற்றவர்களுக்கு முதல் மதிப்பெண்கள் பல ஆண்டுகளாக தருகிறார்கள். தொண்ணூறுகளில் என்று நினைக்கிறேன், ஒரு குருடனுக்கு முதல் மதிப்பெண்ணுக்காக பட்டமளிப்பு விழாவில் பதக்கம் வழங்கினார்கள்". இறுதியில் அந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் எனக்கும் தங்கப் பதக்கம் வழங்கினார்கள். அதற்காக எத்தனையோ உழைத்திருந்தாலும், தந்திருக்க வேண்டாமே என அக்கணம் பட்டது.

 காலத்தின் முன் மனிதப்பருவுடல் கனபரிமாணம் இழப்பதே நமது வரலாற்றின் மிகப்பெரும் அவலம். மரணத்தின் முன் தனது உக்கிரமான வாழ்வுப் பிடிமாணங்கள் கழன்று காலப் புயலில் பஞ்சாகிப் பறக்கிறான் மனிதன். காலத்துக்கும் மனித இருப்புக்கும் இடையிலான இந்த கடக்கவியலா பிளவையே மிலன் குன்ந்திரா "the unbearable lightness of being" என்றார். வாழ்வின் இவ்விசித்திரத்தை அணுகும் கீழ்வரும் இரண்டு வரிக்கவிதை சிவகுமார் எழுதினதிலே எனக்கு செல்லம்.

"அஸ்திக் கலயத்தினுள்
பஞ்சாய் கிடந்தாள் அம்மா"

அரசியல், சமூக, அற, தத்துவ தளங்களில் 'தான்' எனும் அடையாளம் வெட்டுண்டு, பிறிதாகி தலைமுளைத்து இயங்கும் அல்லது காலத்தின் முன் அது இல்லாமல் ஆகும் நிலை இவரது முக்கிய கவிதைகளின் மையச்சரடு.

சந்தியா வெளியிட்டுள்ள சிவகுமாரின் இவ்விரண்டாவது தொகுப்பை சரவண பவனில் மசாலா தோசைக்கு ஆகும் செலவில் வாங்கி விடலாம்.