Saturday, December 31, 2016

சசிகலா எனும் alpha male

Image result for சசிகலா

ஜெயலலிதாவின் இடம் யாருக்கு எனும் கேள்வி எழுந்த போது ஒரு நண்பர் சொன்னார்: “அதிமுக முழுக்க பா.ஜ.கவின் கையில் போய் விட்டது. அவர்கள் அதிமுகவை டம்மியாக பயன்படுத்தி ஆளப் போகிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஒரு பிரபலத்தை முன்வைப்பார்கள். அதற்குள் அதிமுகவின் தலைமையை முடிந்தவரை நிர்மூலமாக்கி விடுவார்கள். அதிமுகவின் கட்டமைப்பை, வாக்கு வங்கியை தமக்கு சாதகமாய் பயன்படுத்தி தமிழகத்தை கவர்வதே பா.ஜ.கவின் திட்டம்”.
 இது நாம் பலரும் அறிந்ததே. ஆனால் அடுத்த தேர்தல் வரையிலான கட்டத்தில் அதிமுகவுக்கு என்றொரு தலைவர் வேண்டுமே? அது யார்?
அது சசிகலாவாகத் தான் இருக்கும் என்றார் நண்பர். “ஏனென்றால் சசிகலா உறுதியானவர். துணிச்சலானவர். பன்னீர் யார் மிரட்டினாலும் பணிந்து விடக் கூடியவர். அவரால் கட்சியை ஒருங்கிணைத்து நடத்த முடியாது என பா.ஜ.க அறியும். அதனால் சசிகலாவே பா.ஜ.கவின் தேர்வாக இருக்கும்.”

Wednesday, December 28, 2016

சாதியை ஒழிப்பது ஏன் ஒரு அபத்தக் கனவாக இருக்கிறது?


SARI என்ற நிறுவனம் தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சாதி மீறிய திருமணங்கள் குறித்து நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று இன்றைய ஹிந்துவில் நடுப்பக்கத்தில் வெளியாகி உள்ளது. பெரும்பாலானோர் (எதிர்பார்த்தது போல்) சாதி மீறிய திருமணங்களை எதிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தம் எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள். அடுத்து படித்தவர்கள் இன்னும் அதிகமாய் சாதியை ஆதரிப்பதாய் தெரிவிக்கிறார்கள். சாதி மீறிய திருமணங்களை தடை செய்யும் சட்டம் கொண்டு வரலாமா எனும் கேள்விக்கு கணிசமானோர் ”வேண்டும்” என பதில் கூறியிருக்கிறார்கள். நேற்று ஒரு அலுவலக நண்பரிடம் சாதி குறித்து உரையாடிய விசயங்களை இந்த கருத்துக்கணிப்பு எனக்கு நினைவுபடுத்தியது. சுதந்திரம் கிடைத்து அரைநூற்றாண்டு கடந்த நிலையில் நமது கருத்தாளர்கள் சாதி அமைப்பை எவ்வளவு அபத்தமாய் புரிந்து கொண்டு, “சாதி இரண்டன்றி வேறில்லை” என்றெல்லாம் பிதற்றி வந்திருக்கிறார்கள் என்பதை இந்த கருத்துக்கணிப்பு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சாதியை புரிந்து கொள்ளாமலே நாம் அதை அழிக்க வேண்டியிருக்கிறோம். கனவுகள் கண்டிருக்கிறோம். சாதிக்குள் வாழ்ந்தபடியே சாதியை சபித்துக் கொண்டு வந்திருக்கிறோம்.

Tuesday, December 27, 2016

எல்லா புத்தகங்களையும் வாசிக்க வேண்டுமா?


நண்பர் நிஷாந்துடன் இரவுணவு அருந்திக் கொண்டிருக்கையில் ஒரு இளம் எழுத்தாளரின் நூலை குறிப்பிட்டு அதை வாசிக்க விரும்புவதாய் சொன்னார். ஏன் என்றேன். அது தனக்கு பிடிக்கும் விதமாய் இருக்கும் என நினைப்பதாய் சொன்னார். பிறகு சற்றே சந்தேகத்துடன் என்னிடம் அப்படி தன் சுவைக்கேற்ற நூல்களை மட்டும் படிப்பது தவறா என கேட்டார். நான் சொன்னேன் “இல்லை, அப்படித் தான் படிக்க வேண்டும்.”
இருவிதமான வாசிப்பு உண்டு. 1) பட்டியலிட்டு அனைத்தையும் படிப்பது, 2) பட்டியலுக்கு வெளியே தனக்கு தேவையானதை, தன் சுவைக்கு ஏற்றதை மட்டும் படிப்பது.
மாடு சுவரொட்டி, மீதம் வரும் சோறு, வைக்கோல், புல், இலை தழை, பிளாஸ்டிக் என கிடைப்பதை எல்லாம் மெல்லும். ஆனால் ஆடு மிகவும் கவனமாய் தேடி தேர்ந்து சில இலைகளை மட்டும் கடிக்கும் என்பார்கள். வாசிப்பை பொறுத்த மட்டில் நான் ஆட்டின் பக்கம் தான்.

Sunday, December 25, 2016

லெஸ்பியன்களின் சமூக இணக்கம்

லெஸ்பியன்களை அண்மையில் கவனிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அப்போது நான் கவனித்தது என்னவென்றால் 1) ஹெட்டெரோசெக்‌ஷுவல் (ஆண்களை விரும்பும்) பெண்களை விட லெஸ்பியன்கள் தமக்குள் அதிக இணக்கமாக இருக்கிறார்கள். அதாவது, ஆண் விழைவு கொண்ட (ஹெட்டெரோசெக்ஷுவல்) பெண்கள் மத்தியில் சதா போட்டி, பொறாமை, வெறுப்புணர்வுகள் புகைவதை கவனித்திருக்கிறேன். நான்கு பேர் சேர்ந்திருந்தாலும் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் புறம் பேசாமல் இருப்பதில்லை. நான்கில் ஒரு பெண் சற்று தொலைவில் இருந்தால் மூன்று பேரும் சேர்ந்து அவளைப் பற்றி பழிகூறுவார்கள். அதே போல் இவர்களின் உறவாடல் என்பது வெடிமருந்துக் கிடங்கில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காரியம் தான். எப்போது வெடிக்கும் என கணிக்க முடியாது. ஒரு நாளில் பல முறை முறைத்து வெறுத்து அடித்துக் கொள்வார்கள். பிறகு இணைவார்கள். ஆனால் லெஸ்பியன்கள் அப்படி இல்லை. அவர்களுக்குள் ஒரு அபாரமான இணக்கத்தை கவனிக்கிறேன். சொற்களில் கூர்மையில்லை, விஷம் இல்லை. கண்களில் பொறாமை இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் உலகில் ஆண்கள் இல்லை என்பது.

Friday, December 23, 2016

ப்ரியா தம்பியின் சிறந்த பேச்சு

Image result for ப்ரியா தம்பி
நேற்றைய எனது புத்தக வெளியீட்டு விழாவில் ப்ரியா தம்பி அருமையாக பேசினார். எனது இதுவரையிலான நூல் வெளியீடுகளில் பேசப்பட்டதில் சிறந்த பேச்சு அது தான். அவர் இரு கதைகளை எடுத்துக் கொண்டு நுணுக்கமான அவதானிப்புகளை முன்வைத்தார். மொழியை அலசினார். தனக்கு பிடித்த உவமைகளை குறிப்பிட்டார். அப்பா – மகள் உறவு, ஆண்களின் பொதுவான உளவியல் கதைகளில் எப்படி வந்திருக்கிறது என பேசினார். “அப்பாவின் கதைகள்“ கதைசொல்லியின் அடிப்படையான மனச்சிக்கல் என்ன என அவரால் சுலபத்தில் சொல்லி விட்டு கடக்க முடிந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் கதையை தான் கவனிப்பார்கள். ஒரு கூர்மையான வாசகன் மட்டுமே கதையில் உள்ள முக்கிய தருணங்களை, அத்தருணங்களில் மனித நடத்தையில் வெளிப்படும் விசித்திரங்களை கவனித்து பேசுவான். ப்ரியா அதைத் தான் செய்தார். நான் இதற்கு முன் அவரது இலக்கிய விமர்சனங்கள் படித்ததில்லை. அதனால் இத்தகையதொரு லேசர் கதிர் விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சுகுமாரனுக்கு இயல் விருது


Image result for சுகுமாரன்

இயல் விருது பெற்றுள்ள சுகுமாரனை வாழ்த்தும் முகமாக இம்மாத உயிர்மையில் “சுகுமாரன் எனும் கடைசி நவீனத்துவர்” என ஒரு குறிப்பு எழுதியிருக்கிறேன். அதில் இருந்து சில வரிகள்:
“தேச விடுதலைக்கு பின்பான மூன்று பத்தாண்டுகளில் தமிழில் வெறுமையும் அவநம்பிக்கையும் மெல்ல மெல்ல தோன்றி வளர்ந்தது. காந்திய லட்சியவாதத்தை நம்பி பின்னர் அதனால் கைவிடப்பட்ட ஒரு தலைமுறையினர் (புதுமைப்பித்தன், சி.சு செல்லப்பா போல்) நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடைப்பட்டு தவித்தனர். இவர்கள் தமிழ் நவீனத்துவத்தை ஏற்படுத்தினர். இவர்களுக்கு அடுத்தது சு.ராவின் தலைமுறை. இவர்கள் காந்தியின் இடத்தில் மார்க்ஸை வைத்து கைதொழுதனர். ஆனால் மார்க்ஸும் கைவிட்டார். ஆக இவர்களும் நம்ப கொள்கைகள் ஏதுமின்றி வெறுமையில் தவித்தனர். இவர்களுக்கு அடுத்த தலைமுறையின் இறுதி நவீனத்துவர்கள். சுகுமாரனின் தலைமுறையினர்.

இறுதி நவீனத்துவர்கள் மார்க்ஸின் இடத்தில் வைக்க ஏதுமில்லாததால் அவநம்பிக்கையையே கடவுளாக நிறுவி வணங்கினர். வெறுமையை அரிச்சுவடியாக கற்று வளர்ந்தனர். “எனக்கு வெளியே தேட ஏதும் இல்லை, நான் நொறுங்கிப் போனவன்” என அறிவித்தனர். பற்றிக் கொள்ள உண்மையின் ஒரு நிழலாவது போதும் என வறண்ட கண்களுடன் பொசுங்கும் வெயிலில் நடந்தனர். மணமாலை சூடும் சில நிமிடங்களுக்கு முன்பு தன் “காதலியை” மீள முடியாதபடி இழந்தவனின் மனநிலை இது. அவருக்கு முந்தைய தலைமுறையினர் லட்சியம் எனும் காதலியை நம்பி ஏமாற்றமடைந்திருந்தனர். ஆனால் சுகுமாரனின் தலைமுறையினர் அந்த பெண்ணை கண்ணெடுத்து பார்த்தது கூட இல்லை. அவள் விட்டு சென்ற தடங்களும், வாசனைகளும், நினைவுகளும் மட்டுமே அவர்களுக்கு எஞ்சின. இந்த செவன் ஜி ரெயின்போ காலனி தான் சுகுமாரனின் உலகம்.”

Thursday, December 22, 2016

”அப்பாவின் புலிகள்” வெளியீடுஇன்று என் முதல் சிறுகதைத் தொகுப்பு ”அப்பாவின் புலிகள்” வெளியாகிறது. இடம் கவிக்கோ மன்றம். நேரம் மாலை 5 மணி.

 தனிப்பட்ட முறையில், இது எனக்கு ஒரு முக்கியமான நூல். என் பதின்வயதில் எழுத ஆரம்பித்த கதைகளில் இருந்து போன மாதம் வெளியான கதை வரை இதில் உள்ளது. என் இளமையின் ஒரு ஆல்பமாக இதைப் பார்க்கிறேன். நூல் தொகுப்பாக திரும்ப மொத்தமாய் படித்த போது பல நினைவுகள் வந்து போயின. மனம் கசந்தது. வெதும்பியது. நெகிழ்ந்தது. திளைத்தது. என் முதல் நூலை வெளியிடும் உற்சாகம் அதனாலே இன்று மீண்டும் தோன்றுகிறது. ஒரு சுற்று வந்து விட்ட உணர்வு. ஆனால் இது என் முதல் சுற்று தான். இன்னும் பல மராத்தான்கள் காத்திருக்கின்றன.


இன்றைய நிகழ்வுக்கு நண்பர்களையும் வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன். என் நூலுடன் வேறு 10 நூல்களும் இன்று வெளியாகின்றன. இளந்தலைமுறையின் தனித்துவமான முகங்களும் கலாப்ரியா, சாரு போன்ற கடந்த தலைமுறையின் ஆளுமைகளும் மேடையில் தோன்றுகிறார்கள். என்னுடன் நூல் வெளியிடும் பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பின்குறிப்பு: சரவண கார்த்திகேயனின்இறுதி இரவுசிறுகதைத் தொகுப்பு பற்றி நான் ஒரு சிற்றுரை வேறு ஆற்றுகிறேன்.


Wednesday, December 21, 2016

வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்!

Image result for வண்ணதாசன்

தமிழ் கவிதைக்கான மொழி. இங்கு மிகச்சிறந்த புனைகதையாளர்கள் குறைவு. ஆனால் மிகச்சிறந்த கவிஞர்கள் ஏராளம். ஒரு கவிதை மூலம் தமிழனின் மனதை தொட்டு விடுவது போல் உரைநடையினால் முடியாது. கவிதை நம் உயிர்நாடி. அதனாலே ஒரு நவீன கவிஞருக்கு சாகித்ய அகாதமி எனும் போது தித்திக்கிறது. மேலும் வண்ணதாசனுக்கு எனும் போது கூடுதல் இனிக்கிறது.