Sunday, October 27, 2013

என்னையே சந்திப்பது

இன்று எனக்கு பாலகுமாரன் மீது எந்த விருப்பமும் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் அவரை பைத்தியமாக படித்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு வேலை விசயமாக அவர் வீட்டுக்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது. போன் செய்தால் அவருக்கு உடல்நலமில்லை என்றும் தூங்குகிறார் என்றும் சொன்னார்கள்.
 நண்பரை வற்புறுத்தி அவருடன் சென்றேன். அவர் வீட்டை நெருங்கியதும் மனம் குதூகலித்தது. அவர் மனைவி வந்து போனில் சொன்னதையே திரும்ப சொன்னார். நான் அவர் வராவிட்டால் பரவாயில்லை சும்மா பார்க்கத் தான் வந்தோம் என்றேன். அப்படி சும்மா பார்ப்பதென்றால் என்ன என்பது போல் இமைகள் தூக்கினார்.

நண்பர்நான் தான் சொன்னேனே, அவரை பார்க்க முடியாது. வந்தால் நேரம் வீணாகும் என்றுஎன்றார். பிறகு நாங்கள் சந்தித்தது அவரது முதல் மனைவி என்றார். அவரைப் பார்க்க கடுகடுப்பாய் இருந்தார். நாங்கள் அழைத்த போது அவருடைய செல்போனில் பேசியது இரண்டாவது மனைவி. “இரண்டாவது மனைவிக்கு எவ்வளவு வயது இருக்கும், இளமையானவரா?” என்றேன். ”நாற்பது இருக்கும், அது இளமை என்றால் இளமை தான்” என்றார். பாலகுமாரனுக்கு ஜுரமென்றால் கூட இருந்து அணுக்கமாக பார்த்துக் கொள்வது இரண்டாம் மனைவி, நாங்கள் பாலகுமாரனின் செல்போனில் அழைத்தது பேசியதும் அவரிடம் தான். இது முதல் மனைவிக்கு தெரியாது. நாங்கள் அழைத்த விசயம் சொன்ன போது குழப்பமாக சங்கடம் காட்டினார். பிறகு நண்பர் அவரது மகன் மற்றும் மகளைப் பற்றி சொன்னார். என் மனம் வேறொரு விசயம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.
 ஒருவேளை பாலகுமாரனை சந்தித்தால் அவரிடம் அறிவதற்கோ கற்பதற்கோ எனக்கு ஒன்றுமில்லை என அறிவேன். ஆனால் அவர் வீடு வரை போவதோ நேரில் ஒருவேளை சந்திப்பதோ அவரை சந்திக்க அல்ல. நினைவின் படிக்கட்டுகளில் ஏறி மீண்டும் சில நொடிகள் என் பால்யத்தின் ரொமாண்டிக்கான மகிழ்ச்சியை மீட்டெடுக்கவே. நான் பாலகுமாரனை அல்ல என்னையே சந்திக்க விரும்புகிறேன் என நினைத்தபடி கிளம்பினேன்...

Friday, October 25, 2013

புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன் - இந்தியா டுடே விமர்சனம்


இடஒதுக்கீடு தேவையா?


சில மாதங்கள் முன் நடந்த TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வின் போது தமிழக அரசு இடஒதுக்கீடு விதிகளின் கீழ் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. 20,000 ஆசிரியர்கள் இவ்வாறு பொதுப் பிரிவில் நியமிக்கப்பட்டார்கள். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அநியாயம் என்பதில் சந்தேகமில்லை.

Monday, October 21, 2013

வலி
நான் ஒரு பத்திரிகையாளன். அவ்வளவாய் புத்திகூர்மை இல்லாத ஒரு மனிதன். அதனாலேயே என் அலுவலகத்தில் என்னை சில விசயங்களை எந்த கேள்வியும் கேட்காமல் ஒப்படைத்தார்கள். அவை பல சமயம் முக்கியமான பணிகளாகவும் இருக்கும். அடிக்கடி பத்திரிகை அறிக்கைகளின் மேல் நீங்கள் பார்க்கக் கூடிய கதிர்வேலன், மோகன்பாபு, சிவகுமார் போன்ற பல பெயர்களில் ஒன்று. நான் எழுதிய எதையும் படித்து இவன் யார் என்று வினவ மாட்டீர்கள், என்ன விசயம் என்று மட்டுமே தற்காலிக ஆர்வத்துடன் இமை தூக்குவீர்கள். அப்படி இருப்பதும் ஒரு சிறப்பு தான்.

Wednesday, October 9, 2013

இதோ பாருங்க சார் ஒரு குறியீடு


அஞ்சாதே


தமிழில் பொதுவாக சொல்லப்படுவது போல் அசலான மாற்று சினிமா என ஒன்று உண்டா என்கிற சந்தேகம் எனக்கு நிரந்தரமாகவே உண்டு. கடந்த பத்தாண்டுகளில் பல நல்ல சுவாரஸ்யமான அசலான ஆழமான நவஎதார்த்த படங்கள் வந்துள்ளன. பின்நவீனத்துவ கூறுகளுள்ள பகடிகள் தோன்றியுள்ளன. ஆனால் இவையும் கணிசமாய் வாழ்வின் காத்திரமான பிரச்சனைகளை அலச முயல்பவை அல்ல. வித்தியாசமாக, சமூக, உளவியல் பார்வையுடன் சொல்லப்பட்ட பழைய கதைகளே.
முன்னரும், அதாவது தொண்ணூறுகளிலும், நல்ல படங்கள் வந்தன. இயக்குநர்கள் எந்த ஒளிவட்டமும் இன்றி வெறும் கதைசொல்லி என்கிற பட்டத்துடன் திருப்தி உற்றனர். ஆனால் இன்றைய இயக்குநர்களுக்கு தாம் கலைஞர்கள் என்று தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய ஒரு அநாவசிய கட்டாயம் உள்ளது. அதனால் படங்களில் தேவையற்ற அலங்காரங்களை நுழைப்பார்கள். ஜீரணிக்காத பெரும் தத்துவ பிரச்சனைகளை திணிப்பார்கள். 

Sunday, October 6, 2013

சஹீருக்கு நம் வாழ்த்துக்கள்சஹீர் கான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் கங்குலியின் ராக்கெட் லாஞ்சராக இருந்தார். எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அவர் சஹீரை அழைப்பார். சஹீர் தன்னுடைய வேகம் மற்றும் ஆளுமையின் தாக்கம் கொண்டே எதிரணியின் விலா எலும்புகளை ஓமப்பொடி போல் உருவுவார். ஒரு ஆட்டத்தில் சிம்பாப்வேயின் அலிஸ்டெர் காம்பெலை அவர் பவுல்டாக்கினார். காம்பெல் மிக நல்ல மட்டையாளர். குச்சிகள் சிதறியதும் அவர் முகத்தில் ஏற்பட்ட வியப்பு மிக சுவாரஸ்யமானது. பந்து இவ்வளவு வேகத்தில் வரும் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தியர்களும் கூடத் தான். எந்த இந்தியனும் இவ்வளவு மூர்க்கத்துடன் இதற்கு முன் வீசியதில்லை.

குடி, கொண்டாட்டம், எதிர்சினிமா: தமிழ் சினிமாவின் திசையற்ற போக்கு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை
மலையாளத்துடனோ அல்லது இந்தியுடனோ ஒப்பிடுகையில் கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் ஒரு தனித்தன்மை உருவாகி உள்ளது. குடி, கொண்டாட்டங்களில் திளைப்பது, அக்கறையின்மை, பொறுப்பின்மையை போற்றுவது, லட்சியங்களை மறுப்பது என இதை வரையறை செய்யலாம்.

Thursday, October 3, 2013

“தங்கமீன்கள்”: காக்கா சொல்லிச்சா மிஸ்?
தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது.