Thursday, July 30, 2015

மோடியும் யாகூப்பும்

ஏன் மதக்கலவரம் நடத்திய மத,சாதிய பெரும்பான்மைவாதிகளுக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்படவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஏன் யாகூப்பும் கலவரக்காரர்களும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்படுவதில்லை?

என்னுடைய குறுநாவல்


ஒரு குறுநாவலை இப்போது தான் எழுதி முடித்தேன். துப்பறியும் நாவல். பெஞ்சமின் பிளாக்கின் Christine Falls நாவல் படித்த போது குற்றத்தை யார் செய்திருக்கக் கூடும் எனும் புதிரை அவிழ்ப்பது நோக்கி செல்வதாய் மட்டும் ஒரு துப்பறியும் நாவல் இருக்க வேண்டியதில்லை என உணர்ந்தேன். ஒரு உளவியல் விசாரணையாக அந்த துப்பறியும் நாவல் எழுதப்பட்டிருக்கும். நானும் சற்று அந்த பாணியில் தான் முயன்றிருக்கிறேன். எனக்கு தூண்டுகோலாய் அமைந்த மற்றொரு முக்கியமான நூல் டோம் ஒ கேரொலின் Paedophilia – The Radical Case. அந்நூலைக் கொண்டு வேறொரு நாவலை முன்பு எழுத முயன்ற போது ஏற்பட்ட ஒரு அறச்சிக்கல் காரணமாய் பாதியில் நிறுத்த நேர்ந்தது. ஆனால் இந்நாவலின் வடிவம் காரணமாய் அறச்சிக்கல்களை எளிதாய் என்னையே அறியாமல் தாண்டிச் சென்று விட்டேன். நான் எழுதிய புத்தகங்களில் மிகச்சிறியதாக இதுவே இருக்கும். இலக்கிய நோக்கின்றி ஜாலியான விளையாட்டாக கருதி எழுத வேண்டும் என ஆரம்பத்திலேயே முடிவு செய்தேன். முடிந்தவரை இந்நோக்கததை தக்க வைத்தேன். இப்போதைக்கு தலைப்பு “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”. எப்படி உள்ளது? Working title தான். பிரசுரத்துக்கு முன் தோன்றினால் மாற்றி விடுவேன். 

Wednesday, July 29, 2015

யாகூப் மேமனை கர்த்தர் ஆக்காதீர்கள்


RAW அமைப்பின் முன்னாள் தலைவரனா ராமனின் கட்டுரை ஒன்றை சமீபமாய் ரீடிப் இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் யாகூப் மேமனுக்கு தூக்குத்தண்டனை அளிப்பது நியாயமல்ல என அவர் தெரிவித்திருந்தார். இந்த ஒற்றைத்தகவலை வைத்துக் கொண்டு இன்று மீடியாவில் யாகூப் அப்பாவி என ஆளாளுக்கு சித்தரிக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் பேஸ்புக்கில் அவர் செகுவெரா அளவுக்கு உயர்த்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது.

Sunday, July 26, 2015

இரு ஐ.பி.எல் அணிகள் மீதான தடையும் அரசியலும்

-    Image result for chennai super kingsஐ.பி.எல் சூதாட்டம் சம்மந்தமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிஷன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் குற்றத்தை உறுதி செய்து இரு அணிகளையும் இரு வருடங்களுக்கு தடை செய்துள்ளது. சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர் ராஜ் குந்தெரா இருவரையும் ஐ.பி.எல்லில் இருந்து நிரந்தரமாய் தடை செய்துள்ளது. இத்தண்டனையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று நிறைவேற்றுமா?

Saturday, July 25, 2015

அனந்தி, கனிமொழி மற்றும் தமிழ்தேசியத்தின் மரணம்


-   Image result for vaiko

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி கனிமொழி பற்றி கிளப்பின பரபரப்பு இன்னும் முடிந்தபாடில்லை. அனந்தியின் கூற்றில் எந்த வெடிமருந்தும் இல்லை. அதில் சர்ச்சைக்குரியதாய் ஏதும் இல்லை என்பதே உண்மை. நான்காம் கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை சரணடையச் சொன்னார் கனிமொழி என்பதே அக்கூற்று. சொல்லப்போனால் அவர் சரணடையக் கூட வற்புறுத்தவில்லை. ஆயுதங்களை சமர்ப்பித்து போரை நிறுத்துவதாய் அறிவியுங்கள் என நடேசனுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார். சேட்டிலைட் போன் வழி எழிலனிடமும் சரணடையச் சொல்லி கேட்கிறார். கனிமொழி அவ்வாறு கேட்காவிட்டாலும் விடுதலைப்புலிகளுக்கு அச்சூழலில் வேறு வழியில்லை. அதனால் ஏதோ கனிமொழியால் தான் சரணடைந்தார்கள் எனும் வாதத்தில் பொருளில்லை.

Friday, July 24, 2015

கதை வாசிப்பு: ஜெயமோகன் மற்றும் சு.ரா

Image result for ஜெயமோகன்

பல்கலைக்கழகத்தில் பகல் முழுக்க ஆய்வு சார்ந்த பணிகளும் யோசனைகளுமாய் ஆங்கில இலக்கியம் சார்ந்து ஓடும். ஆறு மணிக்கு மேல் நாங்கள் மூன்று நான்கு பேர் சேர்ந்து நவீன தமிழ் சிறுகதைகளை வாசிக்க துவங்குவோம். பெரும்பாலும் எங்கள் நெறியாளரின் அறை தான் இடம். வாசிப்பு உள்ளதென்று சொன்னால் வீட்டுக்கு கிளம்புகிற நண்பர்கள் சிலரும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். போன வாரம் ஜெயமோகன் மற்றும் சு.ராவின் கதைகளை வாசித்தோம். ஜெயமோகனின் நாகம், ஒன்றுமில்லை, பாடலிபுத்திரம், ஆயிரங்கால் மண்டபம், ஜகன்மித்யை ஆகிய கதைகளையும் சு.ராவின் வாழ்வும் வசந்தமும் கதையையும் வாசித்தோம்.

ஓரினச்சேர்க்கையும் இன்றைய விவாதமும்


ஓரினச்சேர்க்கை பற்றின ஜெயமோகனின் பழைய கட்டுரை ஒன்றை படித்த போது அவர் பாலினம் (sex) மற்றும் பாலியலுக்கு (gender) இடையிலான வித்தியாசம் இப்பிரச்சனையை எந்தளவுக்கு தீர்மானிக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விட்டார் எனத் தோன்றியது.

Wednesday, July 22, 2015

மதமும் சாதியும் தேவையா?


சர்வோத்தமனின் மதமும் தேசியவாதமும் எனும் கட்டுரை வலதுசாரி பார்வை பற்றின முக்கியமான மாற்றுப்பார்வையை கொண்டுள்ளது. இவ்விவாதத்தில் தரப்புகள் மட்டுமே சாத்தியமாகும். தெளிவான தீர்வுகள், முடிவுகள் இல்லையென நினைக்கிறேன். மதம் தேவையா என்று கேட்டால் தேவை என கண்ணை மூடிக் கொண்டு சொல்வேன். ஆனால் மதத்தை கேள்வியின்றி முழுமையாய் உணர்ச்சிவயப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். மதம் ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றாக இருக்கிறது. இந்தியர்கள் மதத்தை ஒரு இறையியல் அமைப்பாக பார்க்கவில்லை. இங்கு மதம் (இந்து மதம்) இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. 1) சாதிகளை ஒன்றாய் கோர்த்து ஒன்றன் மேல் ஒன்றாய் உருளும் சக்கரங்கள் கொண்ட எந்திரம் போல் செயல்படுகிறது. 2) வாழ்க்கை தர்க்கமும் நியாயமும் அற்ற ஒரு விளையாட்டு, ஒரு நாடகம் எனும் பார்வையை அளிக்கிறது. தரவுகள், சாட்சியங்கள், பகுத்தறிவு அனைத்திற்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை என நாம் நம்ப விரும்புகிறோம். விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் கூட நம்மூரில் இந்த fetish உடனே இருக்கிறார்கள். அதனாலே இந்திய ஜனாதிபதி கூட வாயில் லிங்கம் வரவழைக்கும் பாபாவுக்கு பக்தராக இருந்தார். நம்முடைய சடங்குகள், கோயில் விழாக்கள், தீபாராதனை, பூஜை புனஸ்காரங்கள், புராத நம்பிக்கைகள், நல்ல நேரம் பார்ப்பது, ஜாதகம் கணிப்பது எல்லாமே ஒரு நாடகத்தின் பாத்திரமாகும் நம் ஆசையின் பல பரிமாணங்களே. தான் சிரமப்பட்டு சபரி மலை ஏறி பிரார்த்தித்ததாலே எனக்கு குழந்தை பிறந்ததாய் என் அம்மா என்னிடம் கூறுகிறார். எனக்கு அது உண்மையல்ல என தெரியும். ஆனால் அது ஒரு பார்வை. என்னிடமும் இது போல் பல தர்க்கத்துக்கு புறம்பான பார்வைகள் உள்ளன. ஆனால் மதப்பார்வையின் சிக்கல் அது உங்கள் கண்ணை முழுக்க கட்டி விடுகிறது என்பது.

கிரிக்கெட் வர்ணனை

Image result for michael holding commentating

இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளையோ அல்லது அணியின் தேர்வையோ விமர்சிக்கலாகாது என ஒரு விதிமுறையை போன வாரிய தலைவர் ஸ்ரீனிவாசன் கொண்டு வந்தார். ஸ்ரீனிவாசனுக்கு எதிராய் சர்ச்சைகள் கிளம்பிய போது கிரிக் இன்போ இணையதளம் ஒரு காணொளி விவாதம் ஒளிபரப்பியது. அதில் சஞ்சய் மஞ்சிரேக்கர் பங்கேற்றார். அவர் ஸ்ரீனிவாசனைப் பற்றி உயர்வாய் சில விசயங்கள் சொன்னாலும் கூட விவாதத்தில் பங்கேற்றமைக்காய் சில தொடர்களுக்கு அவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனை அண்யில் இருந்து விலக்கி வைத்தார்கள். இதற்கு ஸ்ரீனிவாசனின் குறுக்கீடு காரணம் என்கிறார்கள். அதே போல முன்னாள் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணமும் பெருத்த லாபம் வரும் வர்ணனை ஒப்பந்தங்களும் அளித்து தனக்கு எதிராய் யாரும் வாய் திறக்காதபடி ஸ்ரீனிவாசன் பார்த்துக் கொண்டார். இன்றும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அதிகார மையங்களுக்கு கூழை கும்பிடு போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அவலநிலையை கடுமையாய் விமர்சித்து ஆங்கிலத்தில் முகில் கேசவன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் இன்னும் வெளிப்படையாய் பேசுவதாய் அவர் கூறுகிறார். இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.

இணைய ஷாப்பிங்கும் போர்ன் போதையும் -


இணையத்தில் பொருள் வாங்குவதும் மால்களிலும் தி.நகர் தெருக்களிலும் அலைந்து பேரம் பேசாமலும் பேசியும் வாங்குவதும் வேறுவேறா? ஏன் கேட்கிறேன் என்றால் இணைய ஷாப்பிங் ஒரு தொற்று வியாதி என்றும், வாடிக்கையாளர்களை மாட்ட வைத்து நிரந்தர கடனாளிகளாக்கும் கார்ப்பரேட் சதி என்றும் சமீபமாய் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.

Monday, July 20, 2015

கேப்டன் குழப்பம்?


-    (ஜூன் இறுதி வார கல்கியில் வெளிவந்த கட்டுரை)

இந்திய கிரிக்கெட் வாரியம் குழப்படிகளுக்கு பெயர் போனது. சூதாட்ட ஊழலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தன. இந்தியாவில் பல வருடங்கள் வழக்கு நடந்து பின் தண்டிக்கப்பட்ட அசருதீன் போன்றவர்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அதே போல வேறெங்கும் இல்லாத அளவு நம்மூரில் தான் கிரிக்கெட் நிர்வாகிகளே சூதாட்ட குற்றச்சாட்டில் அதிகம் மாட்டுகிறார்கள். அப்படி குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீனிவாசனை கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியில் ஆரம்பித்து பல வாரிய நிர்வாகிகள் ஆதரிக்க, உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை நீக்க வேண்டி வந்தது.

Sunday, July 12, 2015

கருணைக்கொலை விவாதம்

அருணா ஷன்பக் பற்றி சர்வோத்தமன் எழுதியுள்ள நல்ல கட்டுரை இது ஆணின் அகங்காரமும் அதிகார வெறியும் பலாத்காரங்களுக்கு பின்னுள்ள முக்கிய நோக்கம் என அவர் கூறுவதை ஏற்கிறேன். அருணா ஷன்பை கருணைக்கொலை செய்திருக்கலாம் என்பதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.
 வாழ்க்கை என்பது பேசுவது, நடப்பது, திருமணம் செய்து குழந்தை பெறுவது, புத்தகம் படித்து சினிமா பார்ப்பது மட்டுமே அல்ல. வாழ்க்கை என்பது இருப்பு. ஒன்றுமே செய்யாமல் தினமும் குடித்து விட்டு சாலையில் கிடப்பவனின் இருப்பும் எனக்கு முக்கியம் தான். செயலற்றவர்கள் செயலுள்ளவர்களின் ஒன்றிணைந்த இருப்பு தான் நம் ஒட்டுமொத்த வாழ்க்கை. இதில் அவரவர் பங்களிப்பை துல்லியமாய் உணர்வது கிட்டத்தட்ட அசாத்தியம். ஆனால் ஒரு தத்துவார்த்த பொருளில் உயிரற்று ஓரமாய் கிடக்கும் ஒரு சிறு கல் கூட நம் வாழ்க்கைக்கு முக்கியம் தான்.
 மேலும், ஷன்பக்கிற்கு வாழும் இச்சை இல்லை என நாம் எப்படி அறிய இயலும்? ஒருவேளை அவள் பிரக்ஞை மனம் சாக வேண்டும் என நினைத்தாலும் ஆழத்தில் அடிமனம் வாழத் துடிக்க கூடும். வாழ்வது நமக்காக அல்ல. இந்த உலக இயக்கத்தை நிறைவு செய்ய. சாவது கூட அப்படித் தான். அது நமக்காக மட்டும் என இருக்கக் கூடாது.

Saturday, July 11, 2015

இரண்டு வகை வாசிப்பு மற்றும் எழுத்து


வாசிப்பை செயலூக்கமுள்ளது (active) மற்றும் செயலற்றது (passive) என பிரிக்கலாம். இன்று மீடியா ஆதிக்கம் காரணமாய் செயலற்ற வாசிப்பு அதிகரித்துள்ளது. அல்லது இப்படியும் பார்க்கலாம். புதிதாய் இணையம் மற்றும் பத்திரிகை மூலமாய் வாசிக்க துவங்கி உள்ளவர்களின் வாசிப்பு செயலற்றதாய் உள்ளது.

Friday, July 10, 2015

செவ்வி கூட்டத்தில் பேசுகிறேன்


இன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடக்க இருக்கும் செவ்வி கூட்டத்தில் நான் டி.டி ராமகிருஷ்ணனின் பிரான்ஸிஸ் இட்டிக்கோரா நாவல் பற்றி பேச இருக்கிறேன். இரண்டு விசயங்களை முன்னிலைப்படுத்த இருக்கிறேன். ஒன்று சாருவின் தாக்கத்தால் இந்நாவலுக்கு விளைந்த கேடு. இன்னொன்று மெட்டாபிக்‌ஷன் படைப்பாய் இந்நாவல் உருவாகி வந்துள்ள விதம். தமிழில் இத்தகு முயற்சிகள் நடந்தனவா என்பது பற்றியும் பேச விருப்பம். இதே நாவல் பற்றி சந்திராவும், லைம்லைட் நாவல் பற்றி யுவகிருஷ்ணாவும் பேச இருக்கிறார்கள். நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.

ஜெயலலிதாவின் உடல்நிலை


ஜெயலலிதாவுக்கு கல்லீரல் கோளாறு, சிகிச்சைக்காய் வெளிநாடு செல்கிறார் என படித்தேன். கடுமையான முட்டி வலி ஏற்படுகிறது என போட்டிருந்தார்கள். சற்று மோசமான நிலையில் தான் அத்தகைய அறிகுறி தோன்றும் என நினைக்கிறேன். ஆனால் இதனால் உடனடி அரசியல் மாற்றங்கள் வரும் என நான் நினைக்கவில்லை. இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. மோசமான உடல் நிலை என்றாலும் கூட செலவு செய்து மீண்டு வந்து விடுவார்கள். 2006இல் நான் மாலைமலரில் வேலை செய்த போது ஒரு மூத்த சப் எடிட்டர் கடுமையான திமுக எதிர்ப்பாளர். அப்போது கலைஞரின் உடல் நிலை மோசமாய் இருந்தது. தேர்தல் நெருங்கி வந்தது. அதற்கு முன்பா பின்பா கலைஞர் காலமெய்துவார் என தினமும் அலுவலகத்தில் விவாதம் நடக்கும். திமுக ஆட்சியில் அப்படி நடந்தால் தடபுடலாய் அவருக்கு கடற்கரையில் சிலையெல்லாம் வைப்பார்கள் என்பதால் அதற்கு முன்னரே சம்பவம் நடக்க வேண்டும் என அவர் ஆவெசமாய் சொல்லுவார். ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. அதிகாரபூர்வமாய் தாத்தாவாகி விட்ட தன் மகனையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் கலைஞர். மேடையில் நா குழறினாலும் நக்கலும் கூர்மையும் போகவில்லை. இன்னும் நான்கு வருடங்கள் எப்படியாவது ஆட்சி செய்து விடுவார் என நினைக்கிறேன். நம் உடம்புக்குள் ஒரு கடிகாரம் ஓடுகிறது. அதை யாராலும் பார்க்க முடியாது. அதனால் ஒருவரது ஆயுள் பற்றி ஊகிப்பது பல சமயம் நம்மையே முட்டாளாக்கக் கூடியது.

Monday, July 6, 2015

அமேசான் கிண்டில் மற்றும் தமிழ்ச்சூழல்


அமேசான் கிண்டில் எனும் மின்நூல் வாசிப்புக்கருவி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த கிண்டிலை இப்போது மும்முரமாய் டி.வியில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆங்கில நூல்களை வாசிப்பதற்கான எளிய மார்க்கமாய் அதை முன்வைக்கிறார்கள். சுலபமாய் புத்தகங்களை நொடியில் தரவிறக்கலாம்; ஒருதடவை சார்ஜ் செய்தால் வாரக்கணக்கில் பயன்படுத்தலாம். நிறைய புத்தகங்களை அதில் வைத்திருப்பதன் மூலம் பயணத்தின் போது புத்தக சுமை இருக்காது என அனுகூலங்களை கூறுகிறார்கள். எனக்கு என்றுமே மின்நூல்களில் ஆர்வமுண்டு. நான் கோபோ எனும் வாசிப்பு கருவியை பயன்படுத்துகிறேன். சில வருடங்களுக்கு முன் சந்தையில் அதுவே விலை குறைவாக இருந்தது. இப்போது wifi கொண்ட கிண்டிலின் விலையை அதிரடியாய் குறைத்து விட்டார்கள். அதனால் கோபோவை விட கிண்டிலே மலிவாய் உள்ளது. ஐயாயிரம் ரூபாய்க்குள் வாங்கி விட்டால் கணிசமான ஆங்கில மின்நூல்களை இலவசமாய் தரவிறக்கி படிக்கலாம்.

முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்”


முபீதா நாசரின் “நாற்பத்தியொரு இரவுகள்” சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நேற்று எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிறிஸ்டியன் மீடியா செண்டரில் நடந்தது. ச.சண்முகநாதன் மற்றும் கவிஞர் நட.சிவகுமார் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். நான், எழுத்தாளர் அஜயன் பாலா உள்ளிட்ட பலர் பேசினர். முபீதா நாசரை எனக்கு அவர் புத்தகம் வாசிக்கும் போது தெரியாது. ஆனால் கூட்டம் அன்று அவரைப் பார்த்ததும் முகம் மிக பரிச்சயமாய் பட்டது. யார் இவர் என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு சட்டென தெளிவானது. அவரை நான் முன்பு பலமுறை தக்கலையில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் ஓட்டுநராய் பார்த்திருக்கிறேன். ஒருவேளை அவர் ஆட்டோவில் பயணித்திருக்கவும் கூடும்.

Friday, July 3, 2015

மோடி எனும் அக்டோபஸ்


Image result for modi 

கேஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்குமான மோதலை கவனித்து வந்திருப்பீர்கள். இன்று நேற்றல்ல ஆரம்பத்தில் இருந்தே தில்லியின் மீது யாருக்கு அதிகாரம் எனும் கேள்வி இருந்து தான் வந்திருக்கிறது. தேசத்தின் தலைநகர் என்பதால் அதன் மீது மத்திய அரசு கட்டுப்பாடு வைத்திருப்பது பாதுகாப்புக்கு நல்லது என சட்டம் அதிகப்படியான அதிகாரத்தை மத்திய அரசுக்கு விட்டு வைத்துள்ளது. அதனால் யார் மத்தியில் இருக்கிறார்களோ அவர்களே தில்லியை ஆள முடியும். தில்லி மாநில அரசு “பன்னீர் செல்வம் அரசாகத்” தான இருக்க முடியும்.
 இதன் விளைவு சட்டம் ஒழுங்கு, அரசு அதிகாரிகளின் குற்றங்கள் ஆகியவற்றை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாமல் போவது. மாநில ஆட்சி மேல் மைய அரசாலும் அதிக கவனம் செலுத்த இயலாது என்பதால் யாரும் பூரணமாய் ஆட்சி பண்ண முடியாது தலையில்லாத முண்டம் மாதிரி தில்லி ஆகி விடுகிறது. ஷீலா தீக்‌ஷித் ஆட்சி மீது தில்லிக்காரர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தி தான் இளம்பெண்ணின் கொடூர பேருந்து கற்பழிப்பை ஒட்டி பெரும் இளைஞர்கள் போராட்டமாய் வெடித்தது. அதன் பின்னணிக் காரணம் இந்த நீண்ட கால ஆட்சி செயலின்மை தான். ஆம் ஆத்மி முளைவிட்ட மண்ணாக அது ஆனதற்கும் இதுவே காரணம். இப்பிரச்சனைக்கு உண்மையில் சரியான உடனடி தீர்வு ஒன்றில்லை.

Wednesday, July 1, 2015

ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ மீதான குற்றச்சாட்டு


அண்மையில் லலித் மோடி மீதான சர்ச்சை தீய்ந்த எண்ணெய் சட்டி போல் புகைந்து கொண்டிருந்த போது அவர் பிறர் மீது ஒவ்வொரு பிடி மண்ணாய் தூவும் விதம் சில ஆவணங்களை, புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒன்று மூன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் – ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ – ஒரு சூதாட்டம் நடத்துபவரோடு நட்பு கொண்டிருந்ததாகவும், அவர் இவர்களுக்கு பல கோடி பணம் மற்றும் மும்பை, தில்லியின் பிரதான பகுதிகளில் வீடு வாங்கித் தந்திருப்பதாகவும் லலித் மோடி ஐ.சி.சியின் சூதாட்ட விசாரணைப் பிரிவுக்கு எழுதிய மின்னஞ்சலின் பிரதி. இதை அவர் முதலில் எழுதியது 2013இல். அப்போது ஐ.சி.சி இந்த மின்னஞ்சலை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸின் முதலாளியுமான ஸ்ரீனிவாசன் இம்மின்னஞ்சலை குப்பைக்கூடைக்கு அனுப்பி இருக்கக் கூடும். ஏனென்றால் இது பற்றி இரு தரப்புமே விசாரணை பண்ணவோ தகவலை வெளியே விடவோ இல்லை.

புதுமைப்பித்தன் நினைவுதின அரங்கு


நேற்று பனுவலில் புதுமைப்பித்தன் நினைவுதின அரங்கு மிக நிறைவான வகையில் நடந்தது. வேலை நெருக்கடி காரணமாய் நான் சற்று தாமதமாகவே செல்ல நேர்ந்தது. அதனால் முதலில் பேசிய இருவரை கேட்க இயலவில்லை. பெருந்தேவியின் உரை செறிவான ஒன்று. காஞ்சனை கதை பற்றி பேசிய அவர் புதுமைப்பித்தனிடம் செயல்பட்ட நவீன தன்னிலை (modern subjectivity) பேய் போன்ற மரபான நம்பிக்கைகளை சித்தரிக்கும் போது அடையும் தத்தளிப்புகளை குறிப்பிட்டார். அக்கதையின் சிறப்பே தன்னை நவீனமான, புரட்சிகரமான சிந்தனையாளனாக நினைக்கும் ஒருவன் பேய் போன்ற வேலைக்காரி அவன் வீட்டில் இருக்கையில் அடையும் குழப்பங்களும் பயமும் தான். அவன் பயம் உண்மையானதா அல்லது வெகுளியானதா என பு.பி அறுதியிட்டு கூற மாட்டார்.