Friday, November 25, 2016

அட்டைப்பட சர்ச்சை


அட்டைப்படம் ஒரு புத்தகத்தின் தரத்தை மேம்படுத்தும் வாசகனின் கற்பனையை சிறகடிக்க வைக்கும் என்பதாக தமிழில் ஒரு கற்பிதம் உள்ளது. உண்மையில் ஒரு நூலின் பிரதிக்கும் அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் ஆகியவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வெண்முரசு நாவல் வரிசைக்கு சண்முகவேல் அற்புதமான ஓவியங்களை நல்கியிருக்கிறார். அதனால் அந்நாவல்களின் ஆழம் அதிகமாகும் என்றோ வாசகர்கள் அப்படங்களை கொண்டு நாவலை கற்பனை செய்வார்கள் என்றோ நான் நம்பவில்லை. முழுக்க ஜெயமோகனின் எழுத்து வழியாகத் தான் வாசகன் தன் கற்பனை உலகை விரித்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பு மொழிக்குள் ஆரம்பித்து மொழிக்குள்ளே முடிகிறது. அட்டைப்பட ஓவியம் ஒரு தனி படைப்பு.

Sunday, November 13, 2016

இன்மை - புது முகவரி

இன்மையை இனி பிளாகாக படிக்கலாம். Custom domain நீக்கி விட்டோம். இப்போதைக்கு இதழ்களை நேரடியாக கிளிக் செய்ய வேண்டாம். பக்கவாட்டில் உள்ள பகுப்புகளை கிளிக் செய்து நுழைந்து படைப்புகளை படிக்கலாம். (இதழ்கள் இன்னும் பழைய முகவரியின் தொடுப்பில் உள்ளன. அவற்றை விரைவில் சீர் செய்து விடுகிறோம்)
நண்பர்கள் ஆசிரியக் குழுவில் இணைந்து கவிதைகளை தேர்வது, தொகுப்பது, பிரசுரிப்பது ஆகிய பணிகளில் உதவினால் இன்மையை தொடர்ந்து நடத்தலாம். கடுமையான கால நெருக்கடி காரணமாய் என்னாலோ சர்வோத்தமனாலோ மாதாமாதம் இன்மையை கொணர இயலவில்லை. குறைந்தது ஒரு வாரமாவது தினமும் உழைத்தாலே ஒரு இதழை செம்மையாய் கொணர முடியும். அது இப்போதைக்கு சாத்தியமில்லை.


ஒரு இதழ் தொடர்ந்து வெளிவரும் போது அதற்கு என தனியாக புது எழுத்தாளர்கள் உருவாவார்கள். அவர்களுக்கு இதழ் ஒரு உயிர்நாடியாக அமையும். இன்மையிலும் அவ்வாறு சில கவிஞர்கள் இயங்கினார்கள். இன்மையை நின்று போன பின் அவர்களில் சிலர் வேறெங்கும் எழுதாமல் போனது எனக்கு வருத்தமளித்தது. ஆனால் இதழை முடிந்தளவு ஆத்மார்த்த ஈடுபாட்டுடன் கொண்டு வந்தோம் என்பதில் திருப்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இன்மை ஒரு இனிய நிகழ்வே.


மீண்டும் இன்மை ஒருநாள் உயிர் பெறும் என நம்புகிறோம். அதுவரை பழைய இதழ்களை இங்கு படிக்கலாம்.
http://inmmai.blogspot.in/p/blog-page.html


வெற்றிடத்தை நிரப்பும் தமிழ் எழுத்தாளன்

ஏன் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள் பிரசுரிக்க இவ்வளவு அலுத்துக் கொள்கிறார்கள் என பிர்தவுஸ் ராஜகுமாரன் ஒரு முகநூல் உரையாடலில் கேட்டிருந்தார். உண்மைதான். கடந்த பத்தாண்டுகளில் இங்கு சிறுகதைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் அதிகமும் கட்டுரைகளை பிரசுரிக்கவே விரும்புகின்றன. இதனாலேயே சிறுகதையாளர்கள் நாவலுக்கும், கவிஞர்கள் கட்டுரைக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். நம் வரலாற்றிலேயே மிக அதிகமாய் கட்டுரைகள் இப்போது தான் பிரசுரமாகின்றன. இது கட்டுரைகளின் வசந்த காலம்.

Saturday, November 12, 2016

லட்சியவாதிகள் ஏன் தீக்குளிக்கிறார்கள்?


Image result for தீக்குளிப்பு

காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது விக்னேஷ் எனும் இளைஞர் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டார். நம் வரலாற்றில் ஏற்கனவே அவரைப் போன்ற இளைஞர்கள் பலர் தம்மை தீயில் மாய்த்துள்ளனர். உலகம் பூரா இது போன்ற தீக்குளிப்பு அவலங்கள் நிகழ்கின்றன. ஏன்? இதன் உளவியல், சமூக அடிப்படைகள் என்ன?
தீக்குளிப்பை மூன்று விதங்களில் பார்க்கலாம்.
1)   உரிமை மறுக்கப்பட்டவனின், குரல் மறுக்கப்பட்டவனின் ஒரு அரசியல் பிரகடனம். இந்த பார்வையில் தீக்குளிப்பு ஒரு தர்க்கரீதியான முடிவு.
2)   மிதமிஞ்சிய லட்சியவாத்தின் விளைவு – சமூக பொருளாதார, நடைமுறை பிரச்சனைகள், போதாமைகளை இன / மொழி வெறுப்பாய் சுருக்கி கொள்வது.
3)   தன்னுடலை உள்ளூர வெறுக்கும் அ-பௌதிகவாதத்தின் ஆழ்மன வெளிப்பாடு.

Friday, November 11, 2016

சட்டீஷ்வர் புஜாராவும் முயலும்

Image result for alastair cook
கதவை திறக்கலாமா வேண்டாமா?
நடந்து வரும் இங்கிலாந்து-இந்தியா முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணித்தலைவர் கருணை வைத்தால் உண்டு என என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அலிஸ்டெர் குக்கின் தலைமை அதற்கு செவி சாய்த்துள்ளது. நேற்றும் இன்றும் அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து ஒரு தற்காப்பு மனநிலையுடன், வெல்லும் அக்கறையின்றி, ஆக்ரோஷமின்றி ஆடியது. ஒருநாள் நான் என் மனைவியிடம் முயல் கறி வாங்க வா என்றேன். அவள் கடைக்கு சென்று முயலைப் பார்த்தாள். மனம் கருணையில் ததும்பியது. முயலை செல்லப்பிராணியாக வளர்க்க முடிவு செய்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாள். நேற்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக்கின் தலைமை இப்படித் தான் இருந்தது. 

விவியன் ரிச்சர்ட்ஸும் விராத் கோலியும்

Image result for kohli extra cover drive
கவர் டிரைவின் போது கோலியின் முன்னங்கால் பாதம் நேராக நடுவரை நோக்கி திரும்பி இருக்கிறது
Image result for rahul dravid cover drive
ஆனால் திராவின் முன்னங்கால் பாதம் கவர் பகுதியை நோக்கி இருக்கிறது
கோலி சமகால கிரிக்கெட் நட்சத்திரங்களில் வெகு உச்சத்தில் இருப்பவர். உலகின் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுவது சாதாரண விசயம் அல்ல. முன்பு சச்சின் அத்தகைய பெருமைக்குரியவராக இருந்தார். ஆனால் அவருடன் ஆடிய சிறந்த பேட்ஸ்மேன்களான லஷ்மண், கங்குலி, திராவிட் ஆகியோரால் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைய முடியவில்லை. சேவாக் கூட தன் பட்டாசு துவக்க ஆட்டத்துக்காக துணிச்சலுக்காக அறியப்பட்டார். ஆனால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என அவரை யாரும் அழைத்ததில்லை.
டெஸ்ட் ஆட்டங்களில் கோலி பெரிதும் மதிக்கப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் தான் அவர் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். எந்த ஆடுதளத்திலும் நெருக்கடியான நிலையிலும் அசராமல் ரிஸ்கே எடுக்காமல் 100 ஸ்டிரைக் ரேட்டில் அடித்தாட அவரால் முடிகிறது. சிக்ஸர்கள் அடிக்காமலே எதிரணியினரை ஆதிக்கம் செலுத்த முடிகிறது. எவ்வளவு டைட்டாக களத்தடுப்பை அமைத்தாலும் கோலியால் ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சுலபத்தில் எடுக்க முடிவது அவரது மேதைமையை காட்டுகிறது. இந்த குணங்களால் தான் அவரால் இலக்கை துரத்தும் போது தொடர்ந்து சதங்களாய் குவிக்கவும் அணியை வெல்ல வைக்கவும் முடிகிறது.

Wednesday, November 9, 2016

உப்புமா ஆடுதளத்தில் இந்தியா தோல்வியின் விளிம்பில்


தற்போது ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஒரு மீளமுடியாத சிக்கலில் இருக்கிறது. இங்கிலாந்து மோசமாய் கட்டுப்பாடே இன்றி பந்து வீசினால் மட்டுமே இந்தியா தப்பிக்கும். மற்றபடி தோல்வி கிட்டத்தட்ட உறுதி.

Sunday, November 6, 2016

கடவுள் இருக்கிறாரா?

Image result for prayer
-          கடவுள் ஏன் இருக்கக் கூடும் அல்லது இல்லை என்பதற்கான வாதங்கள் சுவாரஸ்யமானவை. அவை நமக்கு மனிதர்கள் எப்படி கடவுளை புரிந்து வைத்திருக்கிறார்கள் என காட்டுகின்றன. மனித நாகரிகம் தோன்றி பின்னர் புத்தொளிக் காலம், நவீன காலம், எந்திரமயமாக்கல் ஏற்பட்ட பின் கடவுளை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் எப்படி மாறி வந்துள்ளது எனவும் காட்டுகின்றன.
ஏன் கடவுள் இருக்க முடியாது என்பதை விவாதிப்பதற்காய் அருண் ஷோரி ஒரு நூல் எழுதியிருக்கிறார். Does He Know a Mother’s Heart? “ஒரு அன்னையின் இதயத்தை அந்த ஆண்டவன் அறிய மாட்டானா?”. அருண் ஷோரியின் மகனுக்கு பிறந்த சில வருடங்களில் மூளை வளர்ச்சி குறைவு என தெரிய வருகிறது. எழுந்து நடக்க இயலாது சக்கர நாற்காலியுடன் முடங்கிப் போகிறான். எந்த குற்றமும் செய்யாத தன் மகன் ஏன் மீள முடியாத வியாதியில் பட்டு துயரப்பட வேண்டும் என அருண் ஷோரி மனம் வெதும்புகிறார். மகனின் அந்த நிலை எப்படி தன்னையும் மனைவியையும் குடும்பத்தினரையும் பல சமூக ஒடுக்குதல்களூக்கும் அவமானங்களுக்கும் ஆளாக்கியது என அந்நூலில் குறிப்பிடுகிறார். கடவுள் எப்படி தெரிந்தே இப்படி ஒரு குழந்தையை தந்து ஒரு அன்னையின் இதயத்தை காயப்படுத்த முடியும் என்பதே அவரது மைய கேள்வி. இதை ஒட்டி பக்கம் பக்கமாய் விவிலியம் மற்றும் பிற மத நூல்களில் இருந்து மேற்கோள்கள் தருகிறார். எந்தளவுக்கு என்றால் பாதி புத்தகம் படித்தாலே நீங்கள் அவர் மறுக்கிற மதங்களில் நிபுணர் ஆகி விடுவீர்கள்.

Saturday, November 5, 2016

ஜெயமோகன் பற்றின ஆவணப்படம்

ஜெயமோகன் பற்றி அவர் மகன் அஜிதன் எடுத்துள்ள ”நீர், நிலம்” ஆவணப்படம் எனக்குள் நிறைய நினைவுகளை தூண்டி விட்டது. பச்சைப் பசேலென்ற எங்கள் ஊரின் நிலச்சித்தரங்கள் – குளங்கள், தென்னைகள், வேளி மலை, பாறையில் அமர்ந்து தியானிக்கும் கொக்கு, பாரம்பரிய வீடுகள், சிதிலமான படிக்கட்டு, கோயில் மண்டபங்கள், இதனோடு ஜெயமோகனின் குரலும். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இருபது வருடங்கள் பின்னால் பயணித்து விட்டேன். பத்மநாபபுரம் மேற்குத் தெருவில் ஜெயமோகன் 98இல் தங்கியிருந்த வீடும் வருகிறது. நான் அங்கு தான் அவரை முதலில் சந்தித்தேன். அந்த வீட்டுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதே போல் தக்கலை தொலைபேசி நிலைய அலுவலகம். அங்கெல்லாம் அவருடன் ஓயாமல் பேச முயன்று முடியாமல் அவர் ஓயாமல் பேசுவதை என்னை மறந்து கேட்டிருக்கிறேன். இந்த ஆவணப்படத்தில் இந்த இரண்டுமே சிறப்புகள். நிலக்காட்சிகள், ஜெயமோகனின் நிலம் தொடாது வாள் சுழற்றும் பேச்சு.

Friday, November 4, 2016

என் முதல் சிறுகதைத் தொகுப்பு


 எனது முதல் சிறுகதை தொகுப்புக்காக இதுவரை எழுதின கதைகளில் நான்கு கதைகளை விடுத்து மிச்சத்தை தொகுத்துப் பார்த்தால் 19 கதைகள் வந்தன. ஆனால் மொத்த பக்கங்கள் 420. இவ்வளவு பக்கங்கள் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன் என நான் சத்தியமாக நினைக்கவில்லை.

என் பதிப்பாளரை அழைத்து இந்த அதிர்ச்சித் தகவலை தெரிவித்தேன். அவரும் முதலில் நம்பவில்லை. “சரி எவ்வளவு பக்கங்களுக்குள் தொகுத்தால் சரியாக இருக்கும்?” எனக் கேட்டேன். என் பார்வையில் மிகச் சிறந்த கதைகள் என படுகிறவற்றை தொகுக்க சொன்னார். அத்துடன் பிரசுரமான போது கவனம் பெற்றவை, தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியமானவை என சேர்த்து மதிப்பிட்டு ஒன்பது கதைகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். தலைப்பு: “அப்பாவின் புலிகள்