Thursday, December 14, 2017

ரோஹித் ஷர்மா அடுத்த அணித்தலைவரா?

Image result for rohit sharma
ரோஹித் ஷர்மாவின் அணித்தலைமை பாணி முன்னாள் இலங்கை அணித் தலைவர் ஜெயவர்த்தனேவை நினைவுபடுத்துவது. ஜெயவர்த்தனே உலகின் தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவர் என்பது என் நம்பிக்கை. அவர் தலைமையின் கீழ் இலங்கை 2007 உலக்கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது. 2012 T20 உலக்கோப்பை இறுதிப் போட்டியையும் எட்டியது. இரண்டு உலக்கோப்பை தொடர்களிலும் அவர் தன் அணி வீர்ர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது, எந்த பதற்றமும் அவர்களை தாக்காமல் கூலாக இருக்க வைத்தது, அட்டகாசமான களத்தடுப்பு மற்றும் வியூகங்கள் அமைத்தது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 2007 உலக்கோப்பையில் அவர் மலிங்கா மற்றும் முரளிதரனை பயன்படுத்தி எதிரணியினரை நடுங்க வைத்த விதம் இன்னும் நினைவில் உள்ளது. இலங்கையின் 11 பூனைகளை அவர் புலிகளாய் தோன்ற வைத்து எதிரணியினரின் இதயத்துடிப்பை எகிற வைத்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் முரளி தான் எதிரணிக்கு சிம்ம சொப்பனம். ஆனால் ஜெயவர்த்தனேவோ முரளியை ஆட்டத்தில் அறிமுகப்படுத்துவதை வேண்டுமென்றே தாமதிப்பார். முரளியை அடிக்க முடியாது என பயந்து வேறு வீச்சாளர்களை தேவையின்றி அடித்தாடி எதிரணிகள் சரிய, இறுதியில் முரளி வந்து பூஜை போட்டு காரியத்தை முடிப்பார். ஜெயவர்த்தனே ஒரு அணித்தலைவர் மட்டுமல்ல, எதிரணியை ஹிப்னாட்டைஸ் செய்ய வல்ல ஒரு உளவியலாளருமே.

Wednesday, December 13, 2017

எழுத்து நம்மை என்ன செய்கிறது?

 Image result for what i talk about when i talk about running
அண்ணா, 

ஒருவர் எழுத்தில் அதிக நேரம் செலவிட்ட பின்பு அவர் உணர்வுகள் மிகவும் இகியதாக மாறி விடுகின்றன. இந்த மென்மையின் நிலையில் இருந்து (முக்கியமாக) ஒரு படைப்பாளி புற உலகை எதிர் கொள்ள முடியுமா? எழுத்தும் துறவு போன்றது தானோ.
அன்புடன்
ஆர். அபிலாஷ்

அன்புள்ள அருள்
நீங்கள் சொல்வது உண்மையே. எழுத்து நம் மன அமைப்பு, நுண்ணுணர்வை, உலகை பார்க்கும் விதத்தை, மனிதர்களுடன் உரையாடும் பாணியை கண்ணுக்கு புலப்படாத மாதிரி – ஒரு தோட்டக்காரன் தன் தோட்டத்து செடிகொடிகளை திருத்தி அமைப்பது போல் – மாற்றி அமைக்கிறது. உங்கள் கேள்விக்கு வருகிறேன். எழுத்தனுபவம் நம்மை இளகிய மனம் கொண்டவர்களாய், மென்னுணர்வு மிக்கவர்களாய் மாற்றுகிறதா?
இது ஆளாளுக்கு மாறுபடும். என் அனுபவத்தில் எழுத்து ஒரு படைப்பாளியை சற்றே கொடூரமானவனாய் மாற்றுகிறது. மானுட அறத்தின் உச்சத்தில் நின்று நெக்குருக பேசும் படைப்பாளியைக் கூட நீங்கள் நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில் சகமனிதனை நோகடிப்பதில் அவர் தனி இன்பம் காண்பதை நீங்கள் கவனிக்க முடியும். எழுத்தாளர் சந்திப்புகள் எப்போதும் அடிதடி ரகளையில் முடிவதைப் பார்க்கலாம். காரணம் அவர்கள் டிராகுலாக்கள் என்பது. நானும் நீங்களும் கோரைப்பற்கள் கொண்டவர்களே. எப்போது வெளிக்காட்டுவோம் எனத் தெரியாது.

Tuesday, December 12, 2017

ரஜினிகாந்தும் காவிரி நீரும்

Image result for rajinikanth modi
ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரின் பேட்டியை - வழக்கமான ரஜினி அரசியலுக்கு எப்பத்தான் வருவாருங்க டைப் பேட்டி - சன் டிவியில் பார்த்தேன். ராஜ் பகதூர் டிவியில் அரசியல் பேசி பரிச்சயமற்றவர் ஆகையால் அவரது பேச்சில் அப்பாவித்தனமும், அதனூடே உண்மையும் அவ்வப்போது பளிச்சிட்டது.
 இந்த வகையான பேட்டிகள் இப்போது ஒளிபரப்பாவது முக்கியம். ஏனெனில் ரஜினி கட்சி ஆரம்பித்த பின் பாஜக நியமிக்கும் நேர்த்தியான தந்திரமான பேச்சாளர்கள், தரகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ரஜினியை சூழ்ந்து கொள்வார்கள். கச்சிதமா தந்திரமாய் அவர்கள் பேசுவார்கள். ரஜினி உண்மையில் என்ன தான் யோசிக்கிறார், என்ன தான் பண்ணுகிறார், அவரைச் சுற்றி என்ன தான் நடக்கிறது என நமக்கு தெரியாமல் போகும். ஆனால் ராஜ் பகதூர் போன்றவர்களோ ஒரு கண்ணாடிச் சுவர் போல. அவர் பேசுகையில் அவர் ஊடாக  நாம் நிறைய கவனித்து புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலே எனக்கு இப்பேட்டி பிடித்திருந்தது.

Monday, December 11, 2017

தமிழ் ஹிந்துவில் என் பேட்டி (மீள்பதிவு)

இது தமிழ் ஹிந்துவின் வலைஞர் பக்கத்தில் வெளியான எனது சற்றே பழைய பேட்டியின் பகிர்வு:

புது எழுத்து: ஆர். அபிலாஷ் - வாசகனின் தோழன்
-    இந்து குணசேகர்
ஓர் எழுத்தாளர் என்பவர் வாசகனுக்குள் சென்று அவனுடன் உரையாடலை உண்டாக்க வேண்டும். வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து சொற்களை விதைக்க வேண்டும். கதையில் வரும் கதாப்பாத்திரத்தில் வாசகர்கள் தங்களைக் காண வேண்டும். அப்போதுதான் அந்த எழுத்து வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடையே நட்புப் பாலத்தை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக எழுத்தாளன் தனது புத்தகத்தின் வாயிலாக வாசகர்களை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறுதான் வாகர்களிடம் தனக்கான இடத்தை அறிந்து கொண்டு படைப்புகளை உருவாக்குகிறார் இளம் எழுத்தாளர் ஆர். அபிலாஷ்.
ஆனால், இலக்கிய உலகில் தனக்கான இடத்தைப் பிடிக்க அபிலாஷ் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை.