Monday, August 21, 2017

இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும் 2: நான் பாரபட்சமான விமர்சகனே!


பொதுவாசகன் எனும் பொய்
“பொது வாசகன்” எனும் பிம்பம் நவீனத்துவாதிகளால் பொய்யாக கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. அப்படி ஒரு ஆள் வானத்தின் கீழ் எங்குமே இல்லை. ஒரு இலக்கியப் படைப்பின் சாரத்தை, எந்த சார்பும் இன்றி, சார்புநிலையின் “இழுபறிகள்” இன்றி, உறிஞ்சும் ஒரு அன்னப்பறவை வாசகன் எங்குமே இல்லை. ஏனென்றால் ஒரு நாவலுக்கோ கதைக்கோ அப்படி ஒரு மையம் - ஒரு சாரம் - இல்லை.
 என் நாவல்களுக்கு / கதைகளுக்கு அப்படி ஒரு சாரம் உள்ளதாய் நான் நிச்சயம் கற்பனை பண்ணிக் கொள்கிறேன். ஏனென்றால் அப்படி செய்யாமல் என்னால் அவற்றை எழுதி விட முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எதிர்பார்க்கும் சாரத்தை என் வாசகன் தீண்டுவதில்லை, உணர்வதில்லை, எடுத்து சுவைப்பதில்லை என்பதையும் அறிகிறேன். ஏமாற்றமடைகிறேன். அப்படி ஏமாற்றமடைவது பற்றி எனக்குள் நானே சிரித்துக் கொள்வதும் உண்டு. ஆனால் அதுவே எந்த இலக்கியவாதியும் விதியும்.

Sunday, August 20, 2017

இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும் 1: இலக்கிய குழு அரசியலில் தவறில்லை!


இலக்கிய விமர்சகன் ஏன் மதிப்பெண்கள் இடக்கூடாது என்பது பற்றின எனது முந்தின கட்டுரையை ஒட்டி நண்பர் கோகுல் பிரசாத் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பி இருந்தார்: “சில இலக்கிய குழுக்கள் சில இலக்கிய படைப்புகளை அதீதமாய் விதந்தோதி உடனடி பரபரப்பை உண்டு பண்ணி ‘நல்லாத்தான் இருக்கும் போல’ என தற்காலிகமாக நம்ப வைத்து அந்தஸ்தை உருவாக்கி விடுகிறார்களே! அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவற்றை மறுத்து திரையை விலக்கி உண்மையை நிறுவ வேண்டியது விமர்சகனின் கடமை இல்லையா?”

Saturday, August 19, 2017

மதிப்பெண் போடும் வியாதி


தமிழ் விமர்சனங்களில் நான் வெறுக்கும் வரி ஒன்று உண்டு: “ஆனால் இப்படைப்பு இலக்கியமாகுமா எனக் கேட்டால்… ” என ஆரம்பிப்பார்கள். ஒரு படைப்பு இலக்கியமாகுமா என ஏன் இவ்வளவு மெனெக்கெட்டு யோசிக்க வேண்டும்? ஏன் மதிப்பிட்டு மதிப்பெண் வழங்க உங்களுக்கு இவ்வளவு அவசரம்? அதென்ன தேர்வுத் தாளா?

Friday, August 18, 2017

சன்னி லியோனின் உடல்: கல்லைக் கண்டவர் …

Image result for sunny leone kerala visitImage result for sunny leone kerala visit

சமீபத்தில் கேரளாவில் ஒரு மொபைல் கடைத்திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வருகை தந்ததும், அப்போது ரசிகர்கள் கடல் எனத் திரண்டதும், உண்டான அதகளமும் உங்கள் அனைவருக்கும் தெரியும். விளம்பரப் பலகைகளின் மீதேறி அமர்ந்தும், மேடையின் ஒரு பக்கமுள்ள பேனரைக் கிழித்துக் கொண்டும் மலையாளித் தலைகள் சன்னி லியோனை இச்சையுடன் வெறிக்கும் படங்களைக் கண்டேன். கூடவே தன் விசிறிகளின் மட்டற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் சன்னி லியோன் மனமுருகி நன்றி தெரிவித்த அறிக்கையையும் படித்தேன். அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது:
தன்னை வெறித்துப் பார்க்கிறவர்கள் கண்ணுக்கு போர்னோ படங்களில் ஜொலித்த அவரது நிர்வாண உருவம் மட்டுமே தெரிகிறது, தான் தெரியவில்லை என சன்னி உணர்ந்திருப்பாரா? அன்று அழகாய் அலங்கரித்து நளினமாய் மேடையில் தோன்றும் தன்னைப் பார்க்க அல்ல, தன்னை பார்ப்பதன் வழி லைவ்வாக போர்னோ பிம்பங்களை நினைவில் நிகழ்த்திப் பார்க்கவே ரசிகர்கள் அலைபாய்கிறார்கள் என அவர் அறியாமலா இருந்திருப்பார்? தன்னை தானாக ஒரு போதும் மக்கள் பார்க்கப் போவதில்லை என்பது அவருக்குள் ஒரு பிளவு நிலையை ஏற்படுத்தி இருக்காதா?

Friday, August 11, 2017

தமிழில் கோட்பாட்டு எழுத்திற்கு இன்றுள்ள இடம் என்ன?

Image result for தமிழவன்

இன்றைய வாசகர்கள், இளம் எழுத்தாளர்களுக்கு கோட்பாட்டு எழுத்தாளர்கள் மீது ஒரு அலுப்பு, இளக்காரம் உள்ளதை அறிவேன். அவர்கள் இருண்மைவாதிகள், அராஜகவாதிகள், மொழியை திருகி இடியாப்பமாக்கினார்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன. வேற்று கலாச்சார பண்பாட்டு, தத்துவ கருத்துக்களை அரைகுறையாய் புரிந்து கொண்டு தமிழில் சாயம் கலையாமல் இறக்குமதி செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளில் சில நியாயமானவை தாம். கோட்பாட்டு எழுத்து பீதியூட்டுகிறது என்பது உண்மையே. ஆனால் அது தமிழில் மட்டுமல்ல. ஆங்கிலத்திலும் அவ்வாறே. பொதுவாகவே கோட்பாட்டு எழுத்தாளர்கள் எங்கும் ஜீரணமாகும் மொழியில் எழுதுவதில்லை. மிக மிக பிரபலமான பிராயிடை ஆங்கிலத்தில் படித்துப் பாருங்கள். லேசாய் தலைசுற்றும். ஒரு வரியில் ஒன்பது மேற்கோள்கள் காட்டுவார். லக்கான், சிக்ஸூ போன்றோரையும் சுலபத்தில் படிக்க இயலாது. காயத்ரி ஸ்பிவாக் எப்படி தேவையற்று தன்னை சிக்கலானவராய் மாற்றிக் கொள்கிறார் என ஒரு பிரபல ஆங்கில இணைய பத்திரிகையில் ஒரு கட்டுரை படித்தேன். எல்லா இடங்களிலும் இக்குற்றச்சாட்டு உள்ளது. ஏன் இந்த குற்றச்சாட்டு வருகிறது?

Wednesday, August 9, 2017

நன்றி ஜெயமோகன்

ஜெயமோகன் எனது “போதையில் பலவகை” கட்டுரைக்கு ஒரு ஆழமான எதிர்வினை எழுதியுள்ளார். தனக்கு ஏற்புள்ள விசயங்களையும் பாராட்டவும், தான் மறுக்கும் இடங்கள் குறித்து விரிவாக விளக்கவும் செய்துள்ளார். வாசிப்பு நம் ஆளுமையை செறிவுபடுத்தும், ஒரு படைப்பாளியாய் நம்மை மேம்படுத்தும் என்பதால் அது போதை அல்ல எனக் கூறுகிறார். ஒருவிதத்தில் நானும் அவரும் விளக்க எத்தனிக்கும் இடம் ஒன்று தான் எனத் தோன்றுகிறது: வாசிப்பு படைப்பூக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை அல்லது படைப்பை நமக்குள் செயலாற்ற அனுமதிக்க வேண்டும். அல்லாவிட்டால் - வெறும் வாசிப்பு இன்பத்துக்காக தொடர்ந்து செய்யும் வாசிப்பு - வீணானது. நன்றி ஜெயமோகன். ஜெயமோகனின் கீழ்வரும் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது: 
”எப்போதும் எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் மட்டுமே சிந்திக்க வேண்டுமென்று எண்ணுபவர்கள் சிந்திப்பதே இல்லை. சிந்திப்பது என்பது தன்னிச்சையாக ஒரு கேள்வியைச் சென்றடைவது. அதன் அனைத்து சாத்தியங்களையும் நோக்கி தன்னை விரித்துக்கொள்வதும் ஆகும். கண்டடைந்தவை பயனுள்ளவையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். செல்வது மட்டுமே சிந்தனையாளனால் செய்யப்படக்கூடியது. ஆகவே எத்தனை கோணங்களில் சிந்தித்தாலும் எவ்வழிகளில் சென்றாலும் சிந்தனை என்பது தன்னளவில் பயனுள்ளதே ஆகும்.

அபிலாஷின் இந்த கட்டுரை தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான வினாக்களை முன் வைக்கிறது. ஒவ்வொருவரையும் தனிப்பட்டமுறையில் சிந்திக்கவைத்து தங்களுக்குரிய விடைகளை நோக்கி செலுத்துகிறது ஆகவே மிக முக்கியமான கட்டுரை என்று சொல்லலாம்.”

- ஜெயமோகன்

தென்றல் பத்திரிகையில் என்னைப் பற்றின குறிப்பு


தென்றல் கடந்த 17 வருடங்களாக வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகை. அதில் இம்முறை என்னைப் பற்றின அரவிந்த் எழுதிய ஒரு அறிமுகக் குறிப்பு வெளியாகி உள்ளது. ஒருவேளை என்னைப் பற்றி வந்துள்ள சிறந்த அறிமுகம் இது தான்நானே என்னைப் பற்றி இவ்வளவு துல்லியமாய் மதிப்பிட்டு எழுத இயலாது

சுஜாதாவும் சாருவும் – துள்ளுவதே இளமை


Image result for கணையாழி கடைசி பக்கங்கள்

அன்புள்ள அண்ணன்,
     நேற்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்கள் வாங்கினேன். டி என் பி சி எஸ் பரீட்சைக்கு டியூட்டி போட்டிருந்தார்கள். மனக்கசப்போடுதான் சென்றேன். ஞாயிற்றுக் கிழமை அதுவுமா இப்படி சாகடிக்கிறாங்களேன்னு நொந்து கொண்டேன். நானூறு ரூபாய் டியுட்டி பார்த்ததிற்கு கொடுத்தார்கள். வாக்கிக் கொண்டு எதாவது புத்தகம் வாங்கலாம் என்ரு பனுவல் புத்தகக் கடைக்குச் சென்றேன். முழுக்க அலசியும் ஒரு புத்தகம் கூட வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. கடைசியாக சுஜாதாவின் புத்தகம். சுஜாதாவின் நாவல்களை வாங்க தற்போதைக்கு மனம் இல்லை.இதுபோன்ற விசயங்களில் நான் கட்டுரைகளையே காசு கொடுத்து வாங்குவது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கணையாழி கண்ணில் பட்டது. இந்த புத்தகத்தின் விசேஷம் என்னவெனில் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணம் செய்த போது ஒரு வாலிபர் வெண்ணிற இரவுகள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். இன்னும் நினைவில் இருக்கிறது. கருப்புக்கலர் சட்டை. அவர்தான் சுஜாதா புளியமரத்தின் கதையைப் பற்றி தன் கட்டுரையில் எழுதியிருப்பதாகச் சொன்னார். அன்றிலிருந்து அந்தப் புத்தகத்தை என்றைக்காவது வாங்க வேண்டும் என்று முடுவு செய்திருந்தேன். நேற்றைக்கு வாங்கி விட்டேன்.