Sunday, August 30, 2015

காதல் நாடகம் (குறுநாடகம்)-    
பாத்திரங்கள்:

சின்னபையன்
மண்வெட்டி பாலு
வெட்டுக்கிளி
தலைவர்
வனஜா
வேலு

காட்சி 1
மேடையில் சின்னபையனும் மண்வெட்டி பாலுவும் ஒரு கல்லூரி மாணவனும் தோன்றுகிறார்கள். சின்னபையனும் மண்வெட்டியும் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கிறார்கள். இருவருமாய் மாணவனை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னபையன்: ”உன்னைய அன்னிக்கு சொல்லித் தானே அனுப்பினேன். அப்புறம் ஏண்டா அந்த புள்ளகிட்ட திரும்பவும் பேசிக்கிட்டு நிக்கிறே. என்ன உயிர்பயம் போயிடுச்சா?”

மாணவன்: ”இல்லண்ணே. அவ தாண்ணே என்னை பாக்கணும்னா… அதான்…மத்தபடி சத்தியமா இல்லண்ணே”

மண்வெட்டி: ”போடா போடா ஒழுங்கா படிச்சு வாழற வழியப் பாரு”

Thursday, August 27, 2015

தமிழ் திரைப்படப் பாடல்களில் கவித்துவம் (3) பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?
வைரமுத்துவின் “புது வெள்ளை மழை” என ஆரம்பிக்கும் ரோஜாப் பட பாடலில் வரும் பத்தி இது. பூ மெல்ல மெல்ல காதலின், இச்சையின் உருவகமாய் ஆரம்பித்து மொத்த பெண்ணுடலாய் சட்டென உருவெடுக்கும் ஆச்சரியத்தை இவ்வரிகளில் காணலாம்.

Wednesday, August 26, 2015

சுஜாதாவின் “விருப்பமற்ற திருப்பங்கள்”Image result for சுஜாதா

இன்று ஒரு வேலையை முடித்து விட்டு கோட்டூர்புரம் வழியாக திரும்பிக் கொண்டிருந்தேன். களைப்பு, கசப்பு, லேசாய் பின்மண்டையில் குடைச்சலாய் ஒரு வலி. கொஞ்ச நேரம் படிப்போம் என அண்ணா நூலகம் போனேன். மூடுவதற்கு ஒரு மணிநேரம் இருந்தது. அதற்குள் படிக்க தோதாய் சுஜாதா நாவல் ஒன்றை எடுத்தேன். தலைப்பு என்னை கவர்ந்தது “விருப்பமற்ற திருப்பங்கள்”. ஒருமாதிரி ஆங்கில சாயல் தொனிக்கிறது. ஆங்கிலத்தில் இன்னும் நளினமாய் இருக்கும். Unwanted Twists. எவ்வளவு அழகாய் உள்ளதல்லவா!

வாட்ஸ் ஆப் குழப்படி
- 
   காட்சி 1
வாசல் மணி அடிக்கிறது. ஆடம்பரமான மேற்தட்டு வீடு. போனைப் பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கும் 40 வயதுக்கு மேலான வீட்டுக்கார பெண் எழுந்து போகிறார். கதவின் ஓட்டை வழி பார்க்கிறார். மீண்டும் மீண்டும் பார்க்கிறார். பயந்து போய் தன் கணவனை போனில் அழைக்கிறார். போன் என்கேஜ்டாக இருக்கிறது. மீண்டும் மணியடிக்க வெளிக்கதவை திறக்கிறார். அங்கு கேட்டுக்கு வெளியே ஒரு அழகான மத்திய வயதுப் பெண் கையில் பையுடன் நிற்கிறார்.

”கால்களும்” எம்.பில் பட்ட ஆய்வும்சுயதம்பட்டத்துக்காக அல்ல. சும்மா ஒரு தகவலுக்காய் சொல்கிறேன். என்னுடைய “கால்கள்” நாவலை நாகர்கோயிலில் உள்ள மூன்று கல்லூரிகளில் (ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, முஸ்லீம் ஆர்ட்ஸ் கல்லூரி மற்றும் லஷ்மிபுரம் கலைக்கல்லூரி) மூவர் எம்.பில் படிப்பு ஆய்வுக்காய் எடுத்துக் கொண்டுள்ளனர். மூவரும் பெண்கள். மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே குரல், ஒரே வட்டார வழக்கு தொனி. போனில் மூவரும் என்னிடம் அடுத்தடுத்து பேசிய போது ஒருவேளை நம்மிடம் விளையாடுவதற்காய் யாரோ ஒரே ஆள் பல்வேறு பெயர்களில் பேசுகிறாரோ என எனக்கு சந்தேகம் தோன்றியது. ஆனால் வெவ்வேறு பெண்கள் தாம். 

நண்பர் எச்.பீர் முஹம்மதுநண்பர் எச்.பீர் முஹம்மதை முதலில் நான் 15 வயதில் தக்கலையில் நண்பர் முஸ்தபாவின் புத்தகக் கடையில் வைத்து சந்தித்தேன். அவரைப் பற்றின முதல் நினைவே கையில் ஒரு ஆயிரம் பக்க ஆங்கில கட்டுரை நூலோடு அவர் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது தான். வெட்டி அரட்டையில் நேரம் வீணடிக்காமல் வாசிப்பில் தன்னை தொலைத்து விடுபவராக இருந்தார். தக்கலை கலை இலக்கிய பெருமன்றத்தில் பலருக்கும் அவர் மீது மிகுந்த வியப்பு இருந்தது. நிறைய படிப்பதானாலோ என்னவோ அன்று அவர் பேசும் போது புரிந்து கொள்ள சற்று குழப்பமாக இருக்கும் (ஆனால் இன்று அப்படி இல்லை). எங்கள் மன்றத்தில் அப்போது தமிழில் வெளிவருகிற கோட்பாட்டு நூல்களை, நவீன இலக்கியத்தை படிப்பவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் கணிசமாய் ஆங்கிலம் வழி மேற்குலக அறிவியக்கங்களை அறிய முயல்பவராக பீர் மட்டுமே இருந்தார்.

Friday, August 21, 2015

கருணையும் சமூகமும்என்னுடைய தோழி என்னிடம் ஹைதராபாதில் உள்ள ஒரு கசாப்பு தொழிற்சாலை பற்றி சொன்னாள். அங்கு சட்டவிரோதமாய் கறி வெட்டப்படுவதால் அதைக் கண்டித்து மிருக உரிமைப் போராளிகள் போராடுகிறார்கள். அப்படி என்னதான் தவறு நடக்கிறது? மாடுகள் பல லாரிகளிலாய் நெருக்கி அடைக்கப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றன. வருகிற வழியிலேயே நெரிசல் தாங்காமல் சில செத்து விடும். மிச்ச மாடுகளை இறக்கினவுடன் ஒருவர் கோடாலியால் அடித்து கால்களை உடைத்து விடுவார்கள். ஏன்? அங்கு கொண்டு வரப்படும் மாடுகள் ஆரோக்கியமானவை. ஆனால் ஆரோக்கியமற்ற வயதான மாடுகளைத் தான் கசாப்பு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இவ்விதிமுறையை வளைக்கும் பொருட்டு மாடுகள் ஊனமாக்கப்படுகின்றன. ஊனமானதும் ஒரு அரசு மருத்துவ அதிகாரி வந்து அவை கசாப்புக்கு தகுதியானவை தான் என சான்றிதழ் அளிப்பார்.
 அடுத்து இம்மாடுகள் தொழிற்சாலைக்குள் தானியங்கி பெல்ட்டில் வைத்து தள்ளிக் கொண்டு செல்ல கொதிக்கும் நீர் அவற்றின் மீது பீய்ச்சியடிக்கப்படுகிறது. கசாப்பு செய்தவுடன் மாடுகளின் தோல் இறுகி விடும். இறுகினால் தோலை பதனப்படுத்தி கைப்பை போன்ற பொருட்கள் செய்ய பயன்படுத்த முடியாது. இறுதியில் அவை ஒரு பெரும் சுத்தியால் மண்டை உடைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. இவை அனுபவிக்கும் வேதனையும் கொடுமையும் பீதியும் நிர்கதியும் மனிதர்கள் எங்காவது அனுபவிக்கிறார்களா? எந்த குற்றமும் செய்யாத பிராணிகளை இவ்வாறு வதைக்கலாமா? இக்கேள்விகளை தோழி என்னிடம் கேட்டாள்.

Thursday, August 20, 2015

இமையத்தின் கதைமொழி ஏன் வசீகரிக்கிறது?
 
”எங் கதெ” நாவல் பெற்ற பரவலான கவனத்துக்கு காரணம் என்ன? அது சிறிய நாவல் என்பதா?

ஒரு கதையை சுருக்கமாக எழுதுவது ரொம்ப ரொம்ப கடினம். குறிப்பாக நாவலில் இது ஒரு குரங்கு தன் வாலை தொங்க விடாது கிளையில் உட்காருவது போன்று சிரமமானது. பக்க அளவுக்கும் பரவலான கவனத்துக்கும் ஒரு சிறு தொடர்பு உள்ளது. ஆனால் பரபரப்பான ஒரு துப்பறியும் நாவலை நானூறு பக்கங்களில் சொன்னாலும் படிப்பார்கள். அதே போல இலக்கிய நாவல்கள் இயல்பில் வாசிக்க சவாலானவை. கடுமையான உத்தியையெல்லாம் சொல்லவில்லை. நீண்ட நேரம் எடுத்து சிக்கலான கசப்பான உணர்வுகளை கடந்து செல்வது நம் சமநிலையை சற்றே சிதறடிக்கக் கூடியது. எந்த இலக்கிய நாவலும் உங்களை புத்துணர்வடைய வைக்காது. குழப்பமும் ஆழ்ந்த துக்கமும் அளிக்கும். இதையெல்லாம் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதனாலே இலக்கிய நாவல்கள் உடனடியாய் கவனம் பெற்று ஆயிரக்கணக்கானோரால் படிக்கப்படுவதில்லை. ஒரு இலக்கிய நாவல் போதுமான வாசகர்களை அடைய பத்தில் இருந்து ஐம்பது வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் இதற்கு விதிவிலக்கு உண்டு.

Wednesday, August 12, 2015

மறுபிறவி எப்படி சாத்தியமாகிறது?
இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எஸ்.செந்தில்குமாரின் “புத்தன் சொல்லாத பதில்” நான் படித்துள்ள சிறந்த சிறுகதைகளில் ஒன்று. தன் வீட்டில் தங்க வரும் புத்தருக்கு தெரியாத்தனமாய் விஷ உணவை படைத்து அவர் மரணத்துக்கு காரணமாகும் ஒரு அப்பா மற்றும் அவரது கர்ப்பிணி மகளின் கதை இது. தம் கையால் புத்தருக்கு இப்படி நேர்ந்து விட்டதே என குற்றவுணர்வு கொள்கிறார்கள். ஆனாலும் தன்னை விஷக்காளான் பறித்து சமைக்க செய்தது ஊழ் தான் என அந்த அப்பாவுக்கு தோன்றியபடி இருக்கிறது. ஏன் இப்படியான மகாபாவத்தை செய்யும் படி ஊழ் தன்னை தூண்டியது என அவருக்கு புரியவில்லை.

Tuesday, August 11, 2015

கொலைநீதிமன்ற படிக்கட்டில் இருந்தபடி அந்த காக்காய் கூட்டை பார்த்தேன். உயர்ந்து ஒரு கொக்கி போல் வளைந்து லேசாய் தலைகுனிந்த அந்த கிளையின் பின்புறம் அடர்வெள்ளை பனியில். பல்தேய்த்து பேஸ்டை நுரைத்து துப்பும் போது சளி அதனுடன் வெளியே வந்து விழுந்து நுரையின் மையத்தில் மிதப்பது போல அந்த கூடு. தனியாய், காற்றில் மெல்ல அதிர்ந்தபடி. இப்போது யாரும் இல்லை. குஞ்சுகள் பறந்து போய் சில நாட்கள் இருக்கும். மீண்டும் என்னைச் சுற்றிய பரபரப்பும் கத்திரிக்கோலின் முனைகள் போல குறுக்குமறுக்காய் விரையும் பல பல கால்களும் நினைவுக்கு வந்தன. கான்ஸ்டபிள்கள் எதையோ சுவாரஸ்யமாய் சொல்லி சிரித்தபடி டீ குடித்துக் கொண்டு என்னையும் கண்ணனையும் அவ்வப் போது பார்த்தனர். குளிக்க அமர்த்திய குழந்தைகள் அடிக்கடி பாத்திரத்து நீரைத் தொட்டுப் பார்த்து யோசிப்பது போல் அவர்களின் பார்வை எங்களை தொட்டு மீண்டது. பாதத்தில் பட்ட வெயில் இதமாக இருந்தது.

Sunday, August 9, 2015

“ரசிகன்” நாவல் பற்றி விநாயக முருகன்
மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்று வைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம்
--– அபிலாஷின் ரசிகன் நாவல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய கட்டுரையிலிருந்து

Friday, August 7, 2015

தோனியின் சரிவும் அதன் அரசியலும்
போன ஆஸ்திரேலிய தொடரின் மத்தியில் தோனி டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றது நினைவிருக்கும். அது பலரையும் வியப்பூட்டியது. ஓய்வுக்கு இரண்டு காரணங்கள் சொன்னார்கள். ஒன்று அவரது உடற்தகுதி. அடுத்து கோலியால் அணிக்குள் ஏற்பட்டிருக்கும் புகைச்சல். தற்போது வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரை இந்தியா மிக மோசமாய் இழந்திருக்கும் வேளையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ”வேண்டுமென்றால் ஒருநாள் அணியில் இருந்து தலைவராக பதவி விலகத் தயார்” என அறிவித்தார். இம்முறை தோனி மிக உணர்வுவயப்பட்டு பேசினார். “இந்திய அணியின் எல்லா தாழ்வுகளுக்கும் என்னையே குற்றம் கூறுகிறார்கள். நான் விலகினால் இந்திய அணி உருப்படும் என்றால் நான் தாராளமாய் விலகுகிறேன். சாதாரண வீரராக ஆடுகிறேன். நானாக இப்பதவியை நாடவில்லை. எனக்கு இப்பொறுப்பை அளித்தார்கள். முடிந்தளவு சிறப்பாய் செயலாற்றினேன். இப்போது அவர்கள் இப்பதவியை திரும்பப் பெற்றால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்றார்.

Thursday, August 6, 2015

மந்திர தந்திர போலிகள்
சித்தர்கள், மந்திர தந்திரம் பண்ணுபவர்கள், பில்லிசூனியக்காரர்கள் பற்றிய ஹிட்டான டிவி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது. அதில் சம்மந்தப்பட்ட நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவர் மந்திரம் மூலம் புற்றுநோய் குணப்படுத்துபவராம். நிகழ்ச்சியில் அதற்கான ஆதாரங்கள் காட்டி இருக்கிறார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சில மணிநேரங்களில் இடைவிடாத போன் அழைப்புகள். நூற்றுக்கணக்கான பேர் அவரது தொடர்பு எண்ணை கேட்கிறார்கள். சில வாரங்களில் அவர் இன்னோவா கார், பல ஏக்கர் நிலம் வாங்கி பணக்காரர் ஆகி விடுகிறார். 

மிஷ்கினின் மன உலகம்மிஷ்கினுடன் தனிப்பட்ட முறையில் பேசுகையில் மீடியாவில் உள்ள பிம்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதர் என்பதை கவனித்தேன். முதிர்ச்சியானவர். ஆழமான பார்வை உள்ளவர். மிக மிக குறைவாய் பேசுகிறார். நிறைய கவனிக்க விரும்புகிறார். சினிமாவை கோட்பாட்டு ரீதியாய் விளக்குவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் போது அல்லது வாசிக்கும் போது அதனை உள்வாங்கி தன் கற்பனை மூலம் உருமாற்றி மற்றொன்றாக்க நினைக்கிறார். நம்மூர் புத்திஜீவிகள் சிலர் இதை திருட்டு என தவறாய் புரிந்து கொள்கிறார்கள்.

Tuesday, August 4, 2015

”எங் கதெ”: யாருடைய பிறழ்வு?

Image result for எங் கதெ

(தி ஹிந்துவில் வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்)

பின்னட்டை சுருக்கத்தில் “எங் கதெ” ஒரு நெடுங்கதை என குறிப்பிட்டுள்ளார்கள். உள்ளே இரண்டாம் பக்க பதிப்பி விவரக் குறிப்பில் இது ஒரு நாவல் எனப்படுகிறது. இக்கதை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல சிறு நெளிவு கூட இன்றி நேராய் பயணிக்கிறது. இது சிறுகதையின் குணம். நம்மை ஒரே வாசிப்பில் முடித்து விடத் தூண்டுகிறது. அதுவும் சிறுகதையின் தன்மையே. அதே போல் கிளைக்கதைகள், மையக்கருவோடு நேரடியாய் இணையாத பிசிறான தகவல்கள், எண்ணச்சிதறல்கள், விவரிப்புகள் என நாவலுக்குரிய ரவிக்கை, உள்பாவாடை, முந்தானை ஏதுமற்ற ஒற்றை நீள கவுன் இது. நாவலுக்கு உரித்தான உளவியல் சிக்கல்கள் உண்டென்றாலும் அவற்று தனியான விரிவான இடத்தை இமையம் அளிப்பதில்லை. ஆக, இதை ஒரு நாவலின் நுணுக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட சிறுகதை எனலாம்.