மணிரத்னத்தின் திரைமொழியின் அழகியலில் 'சுற்றுத்துறை விளம்பரப்படத் தன்மை' உண்டென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் அண்மையில் ரோஜா படத்தின் "சின்னச்சின்ன ஆசை"பாடலைத் திரும்பப் பார்க்கையில் உணர்ந்தேன். அதாவது ரோஜாவின் அக உலகத்தில் வரும் கிராமம் அல்ல அது. வெளியே இருந்து பார்ப்பவருக்காக கிளர்ச்சியூட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட (exociticized) பிம்பங்கள் அவை. "ஒரு வெள்ளை மழை" பாடலும் அப்படித்தான். அது தன் மனைவிக்கு பனிவெளியை நாயகன் காட்டுவதாகத் தான் ஆரம்பிக்கிறதே. அப்படியே பார்வையாளர்களுக்கு காஷ்மீரை மணிரத்னம் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதாக காட்சிகள் உருக்கொள்கின்றன. முத்தக்காட்சிகள் வழியாக அவர் காஷ்மீர் உலகை இச்சிக்கத்தக்கதாகவும் மாற்றுகிறார் (தர்காவஸ்கி எப்படிப் புறவுலகை பாத்திரத்தின் அகவுலகின் நீட்சியாகச் சித்தரிக்கிறார் என்பதுடன் ஒப்பிட்டால் இது இன்னும் துலங்கும்). அவரது மிகச்சிறந்த காட்சி பிம்பங்களைக் கொண்ட "அக்னி நட்சத்திரமும்" கூட பாத்திரத்தின் அகவுலகில் இருந்தும், உணர்வுகளில் இருந்து பார்வையாளனை வெளியேற்றி அவனை ஒரு பயணி ஒர...