நாவலை எழுதிப் போகையில் ஒரு கட்டத்தில் என் துயரங்கள், நடப்புலகில் நான் எதிர்கொள்ளும் அபத்தங்கள், அவை தரும் மண்டையிடியைப் பற்றி நான் கவலை கொள்ளத் தேவையில்லாமல் போகிறது. எழுதாத போதும் அவற்றை நான் மறந்திருக்கிறேன் அல்லது பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இதைப் பற்றி ஒரு உளவியல் பேராசிரியரிடம் நான் விசாரித்த போது ஒரு விளக்கம் சொன்னார்: “நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வுகளை செயலாக்கம் செய்வதற்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. இதை ஒரு வண்ணக் கண்ணாடி என்று கூறலாம். இதை நாம் அணிந்து கொண்டதும் உலகை நாம் பார்க்கிற வண்ணம், தீவிரம் மாறுபடுகிறது. பச்சைக் கண்ணாடியெனில் உலகம் பச்சை, சிவப்பெனில் உலகம் சிவப்பு. இந்த நடப்பு உலகம் ஏற்படுத்தும் பாதிப்பை சார்ந்து அதை எப்படி அர்த்தப்படுத்துவது, அதை எந்தளவுக்குப் புரிந்து கொள்வது என்பதைத் தீர்மானிப்பது இந்த டெம்பிளேட் தான். சிலருக்கு ஒருவர் முறைத்தாலே கடும் கோபம் வந்து கத்தியைத் தூக்கி வீசத் தோன்றும், மற்றொருவரோ காறித் துப்பினால் கூட அது உறைக்கவே உறைக்காததைப் போல போய் விடுவார். இது அடுத்தவர்களின் செயல்களை, உலகின் நிறபேதங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கும் டெம்பிளேட் ஆகும். ஆனால் ஒரு படைப்பாளி தான் எழுதும் நாவலுக்குள் தீவிரமாகப் போகும் போது அவர் அந்த நாவலின் உலகில் இருந்து, அங்கு உலவும் பாத்திரங்கள், அவர்களுடைய பிரச்சனைகள், உணர்வெழுச்சிகளில் இருந்து ஒரு மாற்று டெம்பிளேட்டை தன்னையறியாது உருவாக்குகிறார். இப்போது ஒரு அவனுக்குள் இரண்டு டெம்பிளேட்டுகள் தோன்றுகின்றன. அவனுடைய புனைவின் டெம்பிளேட் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்க நடப்புலகின் டெம்பிளேட் பின்னுக்குப் போகிறது. இது ஏன் என்றால் நமது நரம்பணுக்கள் அதிகமாக புனைவு டெம்பிளேட்டால் தூண்டப்பட நடப்புலகின் பல தூண்டுதல்களுக்கு ஈடுகொடுக்க பின்னர் அதற்கு சக்தியில்லாமல் ஆகிறது.”
நீங்கள் எழுத விரும்பும் நாவலைக் குறித்து தீவிரமாக விவாதிக்க, வழிகாட்டுதலைப் பெற என் ஆன்லைன் நாவல் வகுப்பில் இணையுங்கள். மேலும் விபரங்களுக்கு 9790929153.