அரிஸ்டாட்டில் தனது “Poetics” (“கவிதையியல்”) நூலில் காரண-விளைவு தொடர்ச்சி இன்றி கதையே இல்லை என்பதை வலியூறுத்துகிறார். அவர் அத்துடன் நிற்பதில்லை; ஒரு முக்கிய பாத்திரத்தின் அமைப்புக்குள் காரண-விளைவு எப்படி செயல்பட வேண்டும் என்றும் விளக்குகிறார். அதாவது கதைக்குள் காரண-விளைவு தர்க்கப்படி சம்பவங்கள் நாமே நகர்வதில்லை, அவை ஒரு பிரதான பாத்திரத்தின் செயல்களின் ஊடாகத் தான் உயிர்பெறுகின்றன, ஆகையால் காரண-விளைவு என்பதன் மையமே இந்த பாத்திரம் தான் என்று வலியுறுத்துகிறார் அரிஸ்டாட்டில். இங்கிருந்து தான் அவர் ஒரு மனிதனின் அடிப்படையான கோளாறு, பிரச்சனை, தவறான புரிதல் (துன்பியல் வழு - tragic flaw) என்பது துன்பியல் கதைகளை முன்னகர்த்த அவசியமான ஒன்று எனும் ஒரு முடிவுக்கு வந்து சேருகிறார்.
துன்பியல் நாடகத்தின் அடிப்படையே ஒரு மகத்தான மனிதனின் வீழ்ச்சி என்பது அவருடைய நம்பிக்கை. ஏன் மகத்தானவனின் வீழ்ச்சி என்றால் ‘சல்லிப்பயல்களின்’ வீழ்ச்சியைப் பற்றி யாருக்கும் பெரிய அக்கறை இல்லை என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். இது ஓரளவுக்கு நிஜம் தான். வீழ்ச்சி என்றாலே உயரத்தில் இருந்து கீழே விழுவது தானே. நான் என் படுக்கையில் புரண்டு படுத்தால் அது வீழ்ச்சி ஆகாது, ஆனால் புரளும் போது தரையில் பொத்தென விழுந்தால் அது வீழ்ச்சி. ஆனால் அது போதாது. வீழ்ச்சியின் தீவிரத்தன்மையே அதை பொருட்படுத்தத் தக்கதாக்குகிறது. நான் படுக்கையில் இருந்து விழாமல் பால்கனியில் நிற்கும் போது ஏதோ ஒரு ஆர்வத்தில் கீழே எட்டிப்பார்க்கும் போது கால்வழுக்கியோ வேறெப்படியோ தடுமாறி கீழே விழுந்து விடுகிறேன். அதுவும் எட்டாவது மாடியில் இருந்து. இப்போது இது செய்தியாகிறது. போலீஸ் விசாரிக்கிறது. அது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என நீங்கள் யோசிக்கிறீர்கள், அலசுகிறீர்கள், அனுமானிக்கிறீர்கள். இதுவே வாழ்வில் நேர்கிற பிரச்சனைகள், அவற்றின் விளைவான அழிவுக்கும் பொருந்துகிறது.
நாவல் எழுதும் கலையைக் குறித்து என்னிடம் நேரடியாக விவாதித்து என் வழிகாட்டுதலைப் பெறுவதற்கு என் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.