நான் சினிமாக்காரன் அல்ல. ஆனாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு வணிகப்படம் நன்றாக 'அமைந்து' வருகிறது, அது நன்றாக எழுதப்படுவதோ, எடுக்கப்படுவதோ இல்லை என்று தோன்றுகிறது. எத்தனையோ குறுக்கீடுகள், இடையீடுகள், படத்துக்குத் தேவையில்லாத முடிவுகள், மாற்றங்கள், இவற்றால் மிக நன்றாக மேஜிக் போல ஒரு படம் உருவாகும். அது எப்படி என்று இயக்குனராலோ பிறராலோ சொல்ல முடியாது. நேர்முகங்களில் பாருங்கள் அவர்கள் ரொம்ப சாதாரணமானவர்களாக இருப்பார்கள். கலையைக் கரைத்துக் குடித்தவர்களாகவோ அறிஞர்களாகவோ அல்லர். அதனாலே படம் ரொம்பக் கேவலமாக வந்தாலும் அற்புதமாகி வென்றாலும் அவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும் எனத் தோன்றவில்லை.
நீங்கள் ஒரு நாவலுக்கு அதன் எழுத்தாளரைப் பொறுப்பாக்கலாம். ஒவ்வொன்றும் அவருக்குத் தெரிந்தே நிகழ்கிறது. கனவு நிலையில் எழுதப்படும் பத்திகளைக் கூட அவரால் பின்னர் நீக்கவோ மேம்படுத்தவோ முடியும். ஆனால் சினிமாவுக்கு அவ்வாறு சொல்ல முடியாது (indie படங்களே விதிவிலக்கு). முற்போக்காளர்கள் கோபித்துக் கொள்ளாவிடில் ஒன்று சொல்கிறேன்: சினிமா என்பது ஒரு கேங் ரேப்.
"தக் லைப்" படத்தின் திரைக்கதையை ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால் இந்நேரம் மொத்தப் பொறுப்பையும் அவர் மீது போட்டு சாத்தியிருப்பார்கள். நல்லவேளை அப்படி நிகழவில்லை. ஷங்கரின் படங்கள் சுஜாதாவின் மரணத்திற்குப் பின் மோசமாகின என்று சொல்லப்படுவதைக் கேட்கையில் எனக்கு சிரிப்பு வரும். அவர் பத்தாண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் ஷங்கர் மீதான அடிகள் அவருக்கும் விழுந்திருக்கும். ஷங்கரின் படங்கள் சில சந்தர்பங்களால், நிபந்தனைகளால் சுவாரஸ்யமாக அமைந்தன, வேறு நிபந்தனைகளால் தோல்வியுற்றன. இப்படியான விசயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் நடந்துள்ளன என வரலாறு சொல்கிறது - ஏன் ஓடுகிறது, ஓடவில்லை என யாருக்கும் தெரியாது. மிக மட்டமான திரைக்கதை கொண்ட படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடவில்லையா? முட்டாள்கள் வாழ்க்கையில் வெல்கிறார்கள், மிகக்கேவலமான ஆண்களை அழகிகளும் களங்கமற்ற பெண்களும் நேசிக்கிறார்கள், கொடுங்கோலர்கள் திரும்பத்திரும்ப தேர்தலில் வெல்கிறார்கள். சமையலே தெரியாதவர்கள் எதையெதையோ போட்டுச் செய்த சமையல் சுவை கூடுகிறது. ஜோலி ஜோசப் சயனைட் கொடுத்தும் கூட அவர் குடும்பத்தில் சிலர் சாகவில்லை.
சினிமா ஒரு கூட்டுத்துன்பியல், கூட்டு வன்முறை, அது சிலநேரங்களில் அழகாக மலர்கிறது, சிலநேரங்களில் இன்பம் அளிக்கிறது. பல நேரங்களில் அது ஆடை மாற்றிக்கொண்டிருக்கும்போதே திரை விலகிவிடுகிறது.
எவ்வளவோ சிறந்த நாவல்கள் வருகின்றன. நீங்கள் ஏன் அவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க மாட்டேன் என்கிறீர்கள்?