நாவல் என்பது காலத்திலும் வெளியிலும் ஒரு மலரைப் போல பிரிந்து அகிலத்தை தனக்குள் அடக்கும் வடிவம். நாவலில் இத்தகைய விரிவை சாத்தியமாக்குவது எப்படி? அதற்கான பார்முலாக்களில் ஒன்று கதையின் பார்வைக் கோணத்தை எதிர்பாராத திசைகளில் திருப்புவது. பார்வைக் கோணம் என்றால் யார் பார்வையில் கதை சொல்லப்படுகிறது என்பது. “நான்” என்ற ஒரு சுயசரிதை தொனியிலா அல்லது “அவன்”, “அவள்”, “அவர்கள்” எனும் பொது பார்வையிலா? எந்த படைப்பும் இதில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். “நான்” என்றும் ”அவன்” என்றும் இரண்டு கோணங்களில் ஒரு கதையை சொன்னால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஆனால் பின்நவீனத்துவ படைப்புகளில் இத்தகைய பரீட்சார்த்தங்கள் செய்யப்படுவதுண்டு. என்னைப் பொறுத்த மட்டில் இந்த பார்வைக் கோணத்தின் விதிகளை தலைகீழாய் கவிழ்த்த ஒரு நாவல் உண்டு: யுவான் ரூல்போவின் “பெட்ரோ பராமோ”. யுவான் பிரசியாடோ தன் அப்பாவான பெட்ரோ பராமோவை தேடி கொமாலா எனும் ஊருக்கு போகிறான். முழுக்க பேய்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊர் அது. நாவலின் துவக்கத்தில் நாவலாசிரியர் கதை சொல்ல துவங்கி பின்னர் அது நாயகனின் அப்பாவின் கண்ணோட்டத்தில் விரிந்து, பின்னர் நாயகன் பேய்களின் ஊருக்கு செல்ல அங்கு அவனை சந்திக்கும் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் நினைவுகளும் பல கதைகளை சொல்கின்றன. இந்த நினைவுகளின் வழி பயணிக்கும் போது ஒரு கட்டத்தில் கதையை யார் சொல்கிறார், யார் கதைக்குள் உள்ள கதைக்குள் நாம் இருக்கிறோம் எனும் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனே இறந்து ஒரு பேயாகிறான். பேய்கள் இறந்த பின் எந்த காலத்தில் வாழ்கின்றன? இந்த கேள்விக்கு விடையே காண முடியாது.
நாவல் வடிவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள என் ஆன்லைன் வகுப்பில் சேருங்கள். விருப்பமுள்ளோர் 9790929153 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.