வேலை செய்துகொண்டே வியாபாரம் ஆரம்பித்து பலத்த நட்டமடைந்த தொழில்முனைவோரைக் குறித்த இவ்வார நீயா நானா நன்றாக இருந்தது. எந்த அடிப்படை ஆய்வும் இல்லாமல் எப்படி இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து மாட்டிக்கொள்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. ஒருவர் மதுரையில் இருந்து சென்னையில் தேநீர் கடை ஆரம்பிக்க தன் குடும்பத்தை அழைத்து வருகிறார். ஆனால் வந்த பிறகே சென்னை கடை வாடகை அதிகமெனத் தெரிய வருகிறது. இது கூடத் தெரியாமலா முடிவெடுத்தார் என வியப்பாக இருந்தது. இன்னும் சிலர் கடன் வாங்கி பெரிய முதலீடு பண்ணி சிக்கிக் கொள்கிறார்கள். கருப்பட்டிக் காப்பி, வெரைட்டி தோசைக்கெல்லாம் பிராஞ்சைஸி எடுக்கிறார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை. அவசரம், சோம்பல், தொழில்முனைவோர் மோகம். அதனால் சமையலுக்கான மளிகைச் சாமானில் இருந்து பிற பொருட்கள், சமையற்காரர், வேலையாள், பிராண்ட் வரை யாராவது பண்ணிக் கொடுத்தால் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதை மட்டும் தாம் செய்துவிடலாம் என கனவு காண்கிறார்கள்.
எந்த அடிப்படையான திட்டமிடலோ pilot projectகளோ செய்து பார்க்காமல் தவறாக சில சமயங்களில் முதலீடு செய்கிற பெரிய நிறுவனங்களும் உண்டு. ஆனால் அவ்வபோது ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யும் சக்தி அவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு இல்லை.
என்னுடைய ஒரு மாணவர் இருக்கிறார். வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார், சேட்டை செய்வார். நான் அவரை அழைத்து நட்பாக விசாரித்ததும் சொன்னார்: அப்பாவுக்கு உடல் சரியில்லை என்றதும் அவர் பகுதி நேர மாலை வேலையில் சேர்ந்து தன் குடும்பத்துக்கு சம்பாதித்துக் கொடுக்கிறார். பகலில் படிக்கிறார். அந்த அழுத்தம் அவரை மனரீதியாக பாதிக்கிறது. நான் கொஞ்சம் பாராட்டியதும் அவர் உற்சாகமாகிவிட்டார். என் எல்லா வகுப்பிலும் கலந்துகொண்டு ஒழுங்காக இருக்க ஆரம்பித்தார். வீட்டுக்கு கீழேயே தோசைக்கடை வைத்து குடும்பமாகச் சேர்ந்து அதை நடத்துகிறவர்களையும் தெரியும். இவர்களெல்லாம் சுலபத்தில் தோற்க மாட்டார்கள்.