ஜி.நாகராஜனின் “நாளை மற்றுமொரு நாளை” நாவலின் எதிர்-நாயகனான கந்தன் வழக்கமான ஜி.நாகராஜனின் பாத்திரங்களைப் போன்று எந்த உயர்பண்புகளிலும் நம்பிக்கை வைக்காதவன் என்றாலும் அவனுடைய உறுதி, துணிச்சல், வாழ்க்கை மீதான அலட்சியம் நமக்கு ஒருவித மரியாதையை அவன் மீது ஏற்படுத்துகிறது. ஜி. நாகராஜனின் பாத்திரங்களில் உள்ள இருத்தலிய தன்மை காரணமாக அவர்கள் காலத்துடனே மோதுகிறவர்கள் என்பதால் துன்பியல் வழு (சமூகத்தின் தாம் எதிர்திசையில் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகளை அறியாத பாசாங்கற்ற குணம்) அறிந்தேற்றல் சாத்தியமாவதில்லை.
எஸ்.ராவின் “உறுபசி” நாவலின் சம்பத் இதே போல அறிந்தேற்றல் சாத்தியப்படாத ஒரு துன்பியல் நாயகன் எனலாம். ஜெ.ஜெயின் லட்சிய சிறகுகளை உதிர்த்த, ஜி.நாகராஜனின் பாத்திரங்களின் சாயலில் தோன்றிய ஒரு பலவீனமான ‘தேவனைப்’ போல இந்த சம்பத் இருக்கிறான்.
லட்சிய சாயல்களை அண்ட விடாத சாமான்யத்தின் பல பரிமாணங்களை இருத்தலியல் கோணத்தில் சித்தரித்த அசோகமித்திரனின் நாயக, நாயகி பாத்திரங்களும் கூட அரிஸ்டாட்டிலின் துன்பியல் நாயக வகைமைக்குள் வருகிறவர்கள் என்பதே ஆச்சரியம். “தண்ணீர்” நாவலின் ஜமுனா விழுமியங்களும், நம்பிக்கைகளும் பொய்த்துப் போன ஒரு சமூகத்தின் மத்திய வர்க்க பிரதிநிதி. சினிமாவின் நாயகி ஆகும் ஆசை பொய்த்துப் போன நிலையிலும் அவள் போராடுகிறாள், தொடர்ந்து ஏமாற்றப்படும் நிலையிலும் அவளிடம் மனிதர்களின் நல்லியல்புகளில் உள்ள நம்பிக்கை முழுக்க மறைவதில்லை. ‘தண்ணீர்’ இந்நாவலில் மனித மனத்தின் ஈரத்துக்கான உருவகம். ஆக தண்ணீர்ப் பற்றாக்குறை மட்டும் ஜமுனாவையும் அவளுடைய அண்டை வீட்டாரையும் பாதிப்பதில்லை, ஈரமில்லாத மனித மனத்தின் நடவடிக்கைகளில் உள்ள குரூரமும் தான் அவர்களை அலைகழிக்கிறது.