1. பொதுவாக மென்-சனாதன ஆதரவாளர்கள், மத்யமர்களாக முகம் காட்டுபவர்கள், அம்பேத்கருக்கு முன்பான சமூக சீர்திருத்தவாதிகளில் இருந்து இன்று செயல்படும் பகுத்தறிவு இயக்கங்கள் வரை சாதியை ஒழிக்கவில்லை, அவர்கள் சாதி அதிகாரத்தை இடமாற்றும் பணியை மட்டுமே ஆற்றியிருக்கிறார்கள் என ஒரு வாதத்தை எடுத்து வைப்பார்கள். வெளிப்படையாகப் பார்க்கும் போது “அட ஆமா உண்மை தானே, சாதி எங்கே ஒழிந்துவிட்டது?” என நாமும் யோசிப்போம். நிஜம் என்னவென்றால் கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ மாற்றங்கள் நம் சமூக அமைப்பில் கடந்த சில நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டு வந்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சுதந்திரத்துக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினருக்கு போதுமான அங்கீகாரமும், பிரதிநுத்துவமும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் ஒரு மத்திய சாதி சதித்திட்டமோ பகுத்தறிவு, சோசலிச இயக்கங்களோ அல்ல. அதற்கான உண்மைக் காரணத்தை அறிய நாம் பூனா ஒப்பந்த விவாதங்களுக்கு திரும்ப செல்ல வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதிநுத்துவம் அமைவது ஆபத்தானது. குறைந்தபட்சம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள...