இந்த டெஸ்டை இந்தியா இழந்தது என்றாலோ டிரா ஆனாலோ இவ்விசயங்கள் நடப்பது உறுதி:
1) ஐந்தாவது டெஸ்டில் ஜடேஜாவின் இடத்தில் அஷ்வினைக் கொண்டு வருவார்கள். ரஹானேவுக்குப் பதில் விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவ். அல்லது வி.வி.எஸ் லஷ்மண் உள்ளிட்டோர் கேட்பது போல 2 சுழலர்களை கூட ஆட வைப்பார்கள். என்னுடைய பார்வையில் பிரச்சனை ரஹானேவின் மோசமான ஆட்டநிலை தான். அவருடன் ஆட செல்வது ஒரு மட்டையாளர் குறைவாக செல்வதற்கு சமம். அதற்கு ஈடுகட்டவே எண் 5இல் ஜடேஜாவை ஆட வைக்கிறார் கோலி. அவரது பந்துவீச்சு ஒரு போனஸ் மட்டுமே.
2) டிரா ஆனால் ஜடேஜா பந்துவீச்சு அணி தொடரும், ஆனால் ரஹானே மட்டும் நீக்கப்படுவார்.
வெற்றி பெற முடியாமல் போனால் அது நம் தவறா?
இல்லை.
இந்திய பந்து வீச்சாளர்கள் மீது எந்த தவறுமில்லை என்றே கருதுகிறேன். ஆடுதளம் மிகவும் தட்டையாகி விட்டது. ஸ்விங், ஸீம் எதுவும் இல்லை. பவுன்ஸ், வேகம் இல்லை. அதனாலே இந்தியாவின் 11வது மட்டையாளரான சிராஜ் ரொம்ப ஜாலியாக தடுத்தாடி, தட்டி விட்டு ஒற்றை ஓட்டங்களை எடுப்பதைப் பார்த்தோம், பும்ரா விராத் கோலியைப் போல் ஆடியதைப் பார்த்தோம், உமேஷ் யாதவ் ரஸலைப் போல் அடிப்பதை பார்த்தோம். இந்த டெயில் எண்டர்களே இப்படி அடிக்கும்படி உள்ள ஆடுதளத்தில் மட்டையாளர்கள் எந்தளவுக்கு ஜாலியாக ஆட முடியும் யோசிங்க. அதனாலே ஒருவேளை நாளை இங்கிலாந்து சிறப்பாக மட்டையாடி ஆட்டத்தை வென்றால் கோலி ஏமாற்றடைய வேண்டிய அவசியமில்லை. அவரது அணி இதுவரை (முதல் இன்னிங்ஸைத் தவிர) எல்லாவற்றையும் சரியாகவே பண்ணி இருக்கிறது. அவர் நினைத்திருந்தால் இன்று முழுக்க மட்டையாடி இருக்க முடியும், ஆனால் ஏன் சீக்கிரமாக டிக்ளேர் பண்ணவில்லை என ரசிகர்கள் குதித்திருப்பார்கள். ஒருவேளை டிரா சாத்தியப்பட்டால் குலசாமிக்கு கெடா வெட்டி நன்றிக்கடன் செலுத்தலாம். இப்போதைக்கு ஓவலில் ஜென் நிலையில் இருக்கும் ஆடுதளத்தை வேறொன்றும் சாத்தியமிருக்காது. ஆம், ஒருவேளை அஷ்வின் இருந்திருந்தால் ஆட்டத்தை சுலபத்தில் கட்டுப்படுத்தி இரண்டு மூன்று கூடுதல் விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை சிறிது பதற்றத்தில் தள்ளி இருக்கலாம். ஆனால் ரஹானேவுக்காக அவரை பலி கொடுத்துவிட்ட பின் புலம்புவதில் அர்த்தமில்லை.
