தொடர்ந்து ரன்கள் அடிக்காத ரஹானேவுக்கு ஏன் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறது என முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வாஹ்ன் அண்மையில் கேள்வி எழுப்பினார். ஆம், கடந்த நான்கு வருடங்களாகவே ரஹானே அவ்வப்போது தான் அரைசதம், சதம் அடிக்கிறார். என்ன ஒவ்வொன்றும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பவையாக இருந்தன. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. 2017இல் கருண் நாயர் முச்சதம் அடித்தது நினைவிருக்கும். அப்போது அவர் ரஹானேவின் இடத்திலே ஆடினார். அப்போது ரஹானே ஒன்று பிரமாதமான ஆட்டநிலையில் இல்லை. இந்தியாவில் தடவிக்கொண்டே இருந்தார், வெளிநாட்டு பவுன்ஸ் ஆகும் ஆடுதளங்களில் மட்டும் துடிப்பாக ஆடுவார். நியாயமாக இந்திய நிர்வாகம் கருண் நாயரை அடுத்து வந்த வங்கதேசத் தொடரில் ஆட வைத்திருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதில் அவரை நீக்கி விட்டு ரஹானேவை கொண்டு வந்தார்கள். தனக்கு கருண் நாயர் மீது நம்பிக்கையோ விருப்பமோ இல்லை என கோலி காட்டினார். ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளித்து விட்டு அப்படியே தூக்கி விட்டார். கருணுக்கும் சூர்யகுமார் யாதவைப் போல மனவலிமை இல்லை - கோலி போன்றவர்களின் அதிரடி கோபம், வெறுப்பை ஆகியவற்றை அவருக்கு கையாளத் தெரியவில்லை. அப்படியே காணாமல் போய் விட்டார். ஆனால் ரஹானே தொடர்ந்து தட்டுத்தடுமாறி ஆடி வந்தார். இப்போது அவருடைய தன்னம்பிக்கை முழுக்க மறைந்து விட்டது. அவரை நீக்கினால் அது அவருக்கே ஆசுவாசமாக இருக்கும் நிலை. ஆனால் வேறொரு பிரச்சனை உள்ளது. அது தான் இங்கு முக்கியம்.
ரஹானே துணைத்தலைவர். அணிக்காக ஆடும் ஒரு வீரர். அவருக்கு வயது 32. இப்போது அவர் நீக்கப்பட்டால் ஒருவேளை ஸ்குவாடில் தக்க வைப்பட்டாலும் அவர் திரும்ப வருவது சுலபம் அல்ல. இளம் வீரர்கள் அந்த இடத்தை இனிப்பு மிட்டாய் போல எடுத்து முழுங்கிக் கொள்வார்கள். ஒருவேளை ஸ்குவாடில் இருந்து வெளியே அனுப்பி உள்ளூர் ஆட்டங்களில் ரன் அடித்து வரச் சொன்னாலும் சிக்கல் உள்ளது - இந்த கொரோனா காலகட்டத்தில் எந்தளவுக்கு உள்ளூர் ஆட்டங்கள் இனி நடைபெறும்? அப்படியே நடைபெற்றாலும் ரஹானேவால் ரன்களை சுழல்பந்தாளர்களுக்கு எதிராக அடிக்க முடியுமா? அப்படியே ஒரு வருடத்தில் அவர் நல்ல ஆட்டநிலைக்கு வந்தாலும் அப்போது அவருக்கு வயது 33 ஆகி விடும். அணியில் இருந்து விலக்கப்பட்ட எந்த மூத்த வீரர் 33 வயதுக்கு மேல் திரும்ப தேர்வு பண்ணப்பட்டிருக்கிறார் சொல்லுங்கள் - 10இல் 1 வாய்ப்பு தான் அதற்கு. இப்போது நீக்கப்பட்டால், காயங்கள் எதிர்பாராமல் ஏற்பட்டு சிலரால் ஆட முடியாமல் போனால் ஒழிய, ரஹானேவின் ஆட்டவாழ்வு ஒரு முடிவுக்கு வந்து விடும். போன வருடம் தான் ஆஸ்திரேலியாவில் நம்மை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி வெற்றிபெறச் செய்த சாம்பியன் அவர். ஆனால் ஒரே வருடத்தில் அவருடைய ஆட்டக்காலம் முடிவது ஒரு துன்பியலாகவே இருக்கும்.
இதைக் கருத்திற்கொண்டு தான் ரஹானேவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கலாமே என சாஸ்திரி-கோலி கூட்டணி நினைக்கிறார்கள் என்பது என் கணிப்பு. என்ன பிரச்சனை என்றால் கோலி பாவம் கருதி வாய்ப்பு கொடுத்தாலும், ஒரு எண்ணுக்குக் கீழே அனுப்பி அவர் தன்னம்பிக்கையை கூடுதலாக நிலைகுலைய பண்ணி விடுகிறார். இப்படி அசிங்கப்படுவதற்கு ரஹானே ஒரு வருடம் வனவாசம் போவதே நல்லது. வாழ்வு அற்புதங்களால் ஆனது என அவர் நம்ப வேண்டும்.
