இந்த முறை சயானை பேட்டி எடுக்கும் போது நக்கீரன் பிரகாஷ் சற்று ஓவராகத் தான் போய் விட்டார் - சயான் தவ வாழ்வு வாழ்ந்தவர், சிறையில் படாத பாடெல்லாம் பட்டவர் என்று பேசிக்கொண்டே அவர் போகும் போது ஏதோ மகாத்மா காந்தியைப் போல மக்களுக்காக போராடி சிறைசென்றவர் என்று சொல்லி விடுவாரோ என பயந்தேன். நல்லவேளை அந்த எல்லைக்கு செல்லவில்லை.
சயானின் குடும்பம் கொல்லப்பட்டது ஒரு துயரமே. ஆனால் பாம்புடன் விளையாடினால் கொத்துப்படத் தான் செய்யும். கொடநாட்டில் கொலை நடந்த உடனே மற்ற கூலிப்படையினரைப் போல சயான் உடனடியாக சரணடையத் தயாராக இல்லை. ஒருவேளை அவர்களைப் போல் அல்லாமல் சயானுக்கு இந்த பிரச்சனையின் ஆழம், அதன் பொருளாதார மதிப்பு, அரசியல் பாதிப்புகள் நன்கு தெரிந்திருக்கலாம். ஆக, குடும்பத்தை விட்டு வருகிறேன் என கேரளாவுக்கு தப்பிச் செல்கிறார். இத்தனை ரகசியங்களுடன் அவர் போவது ஆபத்தானது என உணர்ந்து அப்போதைய முதல்வரும் அவரது சகபாடிகளும் லாரி வைத்து அவர் போன காரை வழியிலே தூக்கி இருக்கலாம். சரியாக அவர் எங்கே போகிறார் என டிராக் செய்ய போலீஸ் இல்லாமல் முடியாது. சயானின் கார் விபத்தாகி பதினைந்து நிமிடங்களில் அங்கு வரும் போலிசார் அவருடைய செல்போனைத் தான் தேடி எடுத்துப் போகிறார்கள். ஆக கூலிப்படையை அனுப்பி பின்னாலேயே போலிசும் இருந்திருக்கிறது.
இவ்வளவு நடந்திருந்தாலும் சயான் ஒன்றும் அப்பாவி அல்ல. அவருடைய நீண்ட கால ‘போராட்டம்’ ஒன்றும் நீதிக்காக அல்ல, தன் இழப்புக்கு ஈடாக ஒரு மிகப்பெரும் தொகையை அவர் இ.பி.எஸ், வேலுமணி தரப்பிடம் இருந்து எதிர்பார்த்து கிட்டாமல் போயிருக்கலாம். நடுவே திமுக சார்பு வக்கீல்கள் அவருக்கு உதவ வர, அதிமுக இவரை ஒழித்துக்கட்டியே ஆவது என களமிறங்குகிறது. தடுத்தாடுவது, சிங்கிள் எடுப்பது என இருந்தவர் இப்போது ஆட்சி மாறியதும் பும்ரா போல இறங்கி வந்து தைரியமாக சிக்ஸர் அடிக்கிறார். எனக்கு அந்த பேட்டியை பார்த்த போது இப்போதும் அவர் எதிர்பார்ப்பது ஒரு பலமான நஷ்ட ஈட்டையே எனத் தோன்றியது.
இன்னொரு விசயம் - ஒரு பக்கம் எடப்பாடியை குற்றவாளி என சித்தரித்து விட்டு சயானை நல்லவாக நக்கீரன் காட்ட முயல்வது அப்பட்டமான அபத்தம். தேவையில்லாமல் ஒரு காவலாளியை அடித்து தலைகீழாக தொங்க விட்டு அவன் சாவுக்கு காரணமாகி இருக்கிறார்கள். செத்துப் போனவருக்கு குடும்பம் இல்லையா? அது உயிர் இல்லையா? சயானின் மனைவி, குழந்தை கொல்லப்பட்டால் அது மட்டும் தான் இழப்பா? இது குறித்து எந்த குற்றவுணர்வோ வருத்தமோ சயானிடம் உள்ளதாகத் தெரியவில்லை. அவர் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என நம்புவதாக நக்கீரன் பிரகாஷிடம் சொல்லுகிறார். அப்படி கடவுள் உங்களைக் காப்பாற்றினால் அவர் கடவுளே இல்லை என சொல்லத் தோன்றுகிறது.
