மனுஷ்ய புத்திரனின் நீள்கவிதைகளில் சில நேரம் அவற்றின் குறுகின எல்லைக்குள் மூச்சுத்திணறுவதை கண்டிருக்கிறேன் - கொட்டுகிற மழையில் கிடந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையை பலவந்தமாக கையைப் பற்றி அழ அழ வீட்டுக்கு இழுத்து சென்று முத்தாய்ப்பாக சில வரிகளை எழுதி முடித்து வைப்பார். அந்த நிர்பந்தங்களை கவிதை எனும் வடிவம் அவர் மீது சுமத்துவதைப் போல கவிதை நாவல் வடிவம் செய்வதில்லை. ஆனால் பிஞ்ச் செயலியில் வெளிவரும் “தாராவின் காதலர்கள்” தொடரில் அவர் முழுமையான சுதந்திரத்துடன் இரவு பகலாய் ஒரே விலங்கைப் பின் தொடரும் வேட்டைக்காரனைப் போல கவிதையின் கடைசி சொட்டு விழுந்து அது கையில் தன்னை ஒப்படைக்கும் வரை துரத்துகிறார். எந்த வடிவ பிரக்ஞை, கவலைகளும் இல்லாமல், முழுக்க ஒரு பரிசோதனைக் களமாக இத்தொடரை மாற்றுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரஞ்சு இலக்கியத்தில் ஒரு பெரும் உடலெழுத்து மரபு தோன்றியது - ஹெலன் சிக்ஸு (Inside), ஜெனெ (The Thief’s Journal, Our Lady of the Flowers) போன்றவர்கள் உடனடியாக நினைவுக்கு வருகிறவர்கள். இவர்கள் புனைவு மொழியில் எந்த கதை கூறும் பாசாங்கும் இல்லாமல் இந்த உடலும், மனமும் உணர்வுகளின் தடாகத்தில் தொடர்ந்து தோன்றி மறையும் அலைகளாக எப்படி இருக்கின்றன என சித்தரிக்க முயன்றார்கள். தமிழில் உள்ள வலுவான எதார்த்தவாத மரபு காரணமாக அத்தகைய புனைவுகள் இங்கு சாத்தியப்படவில்லை. ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் லீனா, சுகிர்தராணி, குட்டிரேவதி ஆகியோரின் கவிதைகள் ஒரு கதவைத் திறந்தாலும், அது நமது இலக்கிய உலகில் ஒரு தனிப்போக்காக தோன்றாமல், விரைவில் தானாக மூடிக் கொண்டது. ஆனால் மனுஷின் இத்தொடரை பார்க்கையில் அவர் ஒருநாள் இதே பாணியை தன் உரைநடையிலும் முயன்று பார்க்க வேண்டும், கவிதை எனும் சிறையை உடைத்துக் கொண்டு புனைவின் பக்கம் வந்து விட வேண்டும் என ஒரு வாசகனாக ஆவல் ஏற்படுகிறது.
அத்தியாயம் 2இல் தாரா தான் நேசிக்கும் ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் வாசனை தென்படுவதாக சொல்லும் இடம் அற்புதமானது. அதாவது தாரா ஆண்கள் தன்னை ஏமாற்றுவதாக சொல்லவில்லை, மாறாக ஆணின் உடலில் மற்றொரு பெண்ணின் வாசனையை அறிந்து அதில் திளைப்பதே தனக்கு நிறைவளிக்கிறது என குறிப்புணர்த்துகிறாள். எவ்வளவு வித்தியாசமான ஆழமான அவதானிப்பு இது. எனக்கு இதைப் படிக்க அவ்வளவு படைப்பூக்கமாக இருந்தது - இதில் இருந்து உருவி எடுத்து ஒரு கதையை எழுத முடியுமே என நினைத்தேன். தினமும் என் நாவலை எழுதும் முன் இத்தொடரை படித்தால் அவ்வளவு உற்சாகம் கிடைக்கிறது. இதை அவர் எழுதி முடித்து நூலாக வெளிவரும் போது ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்வேன்.
