ஏன் இந்த நான்காவது டெஸ்ட் வரை அஷ்வினுக்கு ஏன் கோலி வாய்ப்பளிக்கவில்லை எனும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பார்வை இது:
ஜடேஜாவின் மட்டையாட்டத்துக்காக மட்டுமே கோலி அவரைத் தொடர்ந்து அணியில் எடுக்கிறார். ஆனால் ஜடேஜாவால் பெரிதாக ரன் எடுக்கவும் இயலவில்லை. தொழில்நுட்பத்தை விட அவருடைய தாழ்வுணர்வு, பதற்றம், நிதானமின்மை சில வாய்ப்புகளை இத்தொடரில் அவர் வீணாக்க ஒரு காரணம். ஒரு பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மட்டையாளராக மாற்றுவது கோலியின் நோக்கம். அது இப்போது வரை பலன் தரவில்லை. இன்னொரு சிக்கல் இது அஷ்வினை விட மேலான பந்து வீச்சாளரா ஜடேஜா எனும் கேள்வி அல்ல என்பது. இந்தியாவின் மோசமான மட்டையாட்டம் குறித்த கவலையே தொடர்ந்து ஜடேஜாவை ஒரு வேகத்தடுப்பாக கோலி மட்டையாட்ட வரிசையில் பயன்படுத்தக் காரணம். இன்றைய போட்டியில் கூட ரஹானே, பண்டுக்கு முன்னர் ஜடேஜாவை அவர் களமிறக்கினார். என்ன பிரச்சனை என்றால் கோலி எண் 4க்குப் பிறகு வரும் எந்த மட்டையாளர் மீதும் நம்பிக்கை இல்லை. அதே நேரம் ரஹானேவை அணியில் இருந்து நீக்கவும் துணிச்சல் இல்லை. இந்த அரசியலின் விளைவாகவே அஷ்வின் பலிகொடுக்கப்படுகிறார். கோலி தன் பாட்டுக்கு ஆட்டச்சூழலைக் கொண்டு அஷ்வினின் தேர்வின்மையை நியாயப்படுத்துகிறார். ஆனால் அது உண்மை அல்ல.
இன்னொருவர் இந்த குழப்படியால், அரசியலால் பயன்பெற்றிருக்கிறார் - அவர் ஜோ ரூட். ஒருவேளை அஷ்வின் இந்த முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தால் ரூட் ஐநூறுக்கு மேல் ரன்களை எடுத்திருக்க மாட்டார். போன ஆஸ்திரேலிய தொடரில் அஷ்வினின் பந்து வீச்சு தான் அப்போது ஒருநாள் போட்டிகளில் அபாரமான ஆட்டநிலையில் இருந்த ஸ்மித்தை சரிவை நோக்கித் தள்ளியது. இல்லாவிடில் அவர் இப்போது ரூட் செய்ததை செய்திருப்பார்.
கோலியின் அணித்தலைமையானது வெற்றிப் பாதையில் அணி செல்லும் போது சிறப்பாகவும், தோல்வியை தொலைவில் கண்டதுமே படுமோசமாகவும் மாறுவதற்கு அவருடைய உணர்ச்சிகரமான அணுகுமுறையே காரணம் என நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தன்னாலும் ரன்கள் குவிக்க முடியவில்லை, தன் சகவீரர்களும் சொதப்புகிறார்கள் எனும் போது அவருடைய வியூகங்கள் மிக மோசமாகி விடும். நெருக்கடியின் போது அமைதியாக வியூகம் வகுத்து அணியை முன்னெடுத்து செல்ல முடிவதில்லை என்பதுடன் ரொம்ப அதர்க்கமான முடிவுகளையும் அவர் அதிமுக்கியமான தருணங்களில் எடுப்பார். இது மட்டுமே அவருடைய முக்கிய குறை - ராட்சத ராட்டினம் போல அவர் அணியை மாற்றி விடுகிறார்; ஒன்று உச்சத்தில், அடுத்த நொடி தலைகீழாக. இந்த தீவிர எதிர்நிலைகளை அவர் கைவிட்டால் இந்திய அணி மேம்படும் என்பதே உண்மை.
ஆனால் மற்றபடி ஒரு டெஸ்ட் அணித்தலைவராக கோலி தோனியை விட மேலானவர், பல சாதனைகள் படைத்தவர் என்பதை நான் மறுக்கவில்லை. பல சமயங்களில் கோலி தன் நடவடிக்கைகளால் எனக்கு தமிழ் சிறுபத்திரிகை உலகின் குடிகாரர்களை நினைவுபடுத்துகிறார். ஒருநொடி மகத்தான இலக்கிய சங்கதிகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள். தோளில் கையிட்டு கன்னத்தில் முத்தமிடுவார்கள். அடுத்து நொடி ஒரே உதை, வசவுகள், “உன்னை இந்த நொடி கொல்லாமல் விட மாட்டேன்” எனும் பாய்ச்சல்கள். கோலி அடுத்த ஜென்மத்தில் நம் ஊரில் ஒரு ‘குடிகார இலக்கிய’ படைப்பாளியாகப் பிறக்க அனைத்து தகுதிகளும் படைத்தவர் எனத் தோன்றுகிறது.
இப்போட்டியைப் பொறுத்தமட்டில், ஆடுதளம் பெரிதாக சுழன்று நாம் அஷ்வினை மிஸ் பண்ணுவோம் என்று தோன்றவில்லை. 3-4 நாட்களுக்குள் முடிந்து போகும் எனத் தோன்றுகிறது. யார் சோகமாக பால்கனியில் இருந்து பார்ப்பார்கள் என உங்களுக்கே தெரியும்.
