விராத் கோலி, ரஹானே, புஜாரா மூவரும் தொடர்ந்து நான்காவது ஸ்டம்பில் வீசப்படும் உள்வரும் / உள்வந்து நேராகும் வேகப்பந்துக்கு ஒரே போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆவது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. கவாஸ்கர் இதற்கு off ஸ்டம்பில் போய் நிற்கிற அந்த back and across கால்பாட நிலை (stance) தான் எனக் கூறுகிறார். 2018இல் கோலி இங்கிலாந்தில் நன்றாக ஆடி சதங்கள் அடித்த போது அவர் off ஸ்டம்புக்கு வெளியே போய் இப்படி நிற்காமல் மரபான கால்பாட நிலையையே வைத்திருந்தார். நிறைய பந்துகளை தொடாமல் விட்டார். ஆனால் இந்த முறை மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் அந்த தொழில்நுட்பத்தை மாற்றியதே அவருடைய வீழ்ச்சிக்குக் காரணம் என சொல்கிறார்கள் சஞ்சய் மஞ்சிரேக்கர் உள்ளிட்ட விமர்சகர்கள். வி.வி.எஸ் லஷ்மண் போன்றோரின் பார்வை கோலி பந்தை அடிக்க வேண்டும் என்கிற மிகை விருப்பமே அவரை இப்படி அவுட் ஆக வைக்கிறது என்பது. ஈ.எஸ்.பி.என் கிரிக்கின்போ தளத்தில் சித்தார்த் மோங்கா ஒரு விரிவான, புள்ளிவிரபங்களின் அடிப்படையிலான கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் அவர் கோலி இதே தவறுகளை 2018இலும் செய்தார், ஆனால அப்போது அவர் எட்ஜ் கொடுக்கவில்லை, அல்லது அவரது கேட்சுகளை இங்கிலாந்து ஸ்லிப் களத்தடுப்பாளர்கள் தவற விட்டனர் என்று சொல்லுகிறார். கோலியின் வலிமையே நான்காவது ஸ்டம்பில் விழுகிற பந்தை கவர் திசையில் விரட்டி நான்கு ரன்களை அடிப்பது, அதனால் அப்பந்துகளை அவர் தொடாமல் விடுவது அவருடைய ஆட்டத்தை குறைபட்டதாக மாற்றிவிடும் என மோங்கா அபிப்ராயப்படுகிறார். இன்று வர்ணனையில் பேசிய சபா கரீம் கோலியின் இப்போதைய off ஸ்டம்பில் நின்று ஆடுகிற கால்பாட முறையானது அந்த திசையில் விழுகிற பந்தை கணித்து ஆட உதவும் ஒன்று என நியாயப்படுத்தினார். ஆக, ஆட்டமுறையில் பிரச்சனையில்லை, கோலி போதுமான பொறுமையுடன் ஆடவில்லை என்பது அவருடைய பார்வை.
இன்றைய போட்டியில் கோலி ஒரு டிரிக்கர் அசைவை கூடுதலாக தன் கால்பாடத்தில் சேர்த்திருந்தார். இதன் விளைவாக அவர் சட்டென முன்னங்காலுக்கு சென்று முழுநீளப் பந்துகளை தன் கண்பார்வை வட்டத்துக்குள் வைத்து விரட்டினார். அரை சதம் அடித்த பின் ஏனோ பழைய பிரச்சனை தலைதூக்க ராபின்சனின் பந்தில் அதே பழைய பாணியில் அவுட் ஆனார். அதே நேரம் இன்றைய ஆட்டம் முழுக்க அவருடைய கால்பாட நிலையானது சரியாக இல்லை எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.
இங்கே இரண்டு விசயங்களை கூடுதலாக குறிப்பிட வேண்டும்:
1) கடந்த சில ஆண்டுகளில் கோலியின் கால்பாடம் மெல்ல மெல்ல துருப்பிடித்து வந்துள்ளது. பெரும்பாலும் நான்காவது ஸ்டம்பில் விழுகிற பந்துகளை அவர் கால்களை அசைக்காமலே கைகளால் அடிக்க முயன்றதைப் பார்த்தோம். விளைவாக ஒருநாள் போட்டிகளில் ஸாம்பா உள்ளிட்ட கால்சுழலர்கள் அவரை தொடந்து வீழ்த்தினர். ஐ.பி.எல்லிலும் கால்சுழலர்களே அவரது எமனாக இருந்தனர். இது ஏன் என்றால் தட்டையான ஆடுதளங்களில் கால்சுழலர்கள் மட்டுமே பந்தை உள்ளே கொண்டு வரவோ வெளியே எடுத்து செல்லவோ செய்வர். கோலி இந்த பிரச்சனையை சரியான நேரத்தில் கண்டுகொண்டு சரி செய்யாதததன் விளைவாகவே இப்போது இங்கிலாந்தில் திணறுகிறார் என்பது என் பார்வை.
2) அடுத்து உள்வரும் பந்து குறித்த பதற்றம். கோலியை விட மோசமான கால்பாடத்தைக் கொண்டவர்கள் ரஹானேவும் புஜாராவும். ரஹானே முழுநீளப் பந்துகளைக் கூட முன்னங்காலுக்கு வராமல் விரட்டுவார் என்பதால் LBW விக்கெட்டு வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பவர். புஜாரா இதே காரணத்தினாலே பவுல்ட் ஆகக் கூடியவர். கடந்த சில ஆண்டுகளாக ரஹானே ஒருநாள் போட்டிக்கான அணியில் இல்லை என்பதால் அவரால் டெஸ்டிலும் நிதானமாக ஆட முடியவில்லை. ஒரு குடிகார கணவன் தன் மனைவியை சதா சந்தேகப்படுவது மாதிரி அவர் முந்தின போட்டியில் சதம் அடித்தால் கூட அடுத்த போட்டியில் மிகுந்த தாழ்வுணர்ச்சியுடன் பதற்றத்துடன் ஆடுகிறார். அவருடைய தொழில்நுட்ப குறையும் இதனுடன் சேர்ந்து கொள்ள உள்ளே வரும் பந்துக்கு LBW ஆகக் கூடாது எனக் கருதி off ஸ்டம்பில் போய் நின்று மிகையாக கால்பாடத்தை ஈடு செய்கிறார். இப்போது 6வது ஸ்டம்பில் விழுந்து 5வது ஸ்டம்புக்கு வரும் வைடான பந்தைக் கூட தன் ஸ்டம்புகளை நோக்கி வருகிறது என அஞ்சி அவர் தடுக்க முயன்று ஸ்லிப்புக்கு எட்ஜ் கொடுக்கிறார். அதாவது LBW ஆகக்கூடாதே எனும் அச்சத்தில் மற்றொரு வகை அவுட்டுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறார். புஜாராவுக்கும் இதே பிரச்சனை தான். இருவரில் ரஹானேவால் அடித்தாடும் போது இந்த கவலையை மறந்து ரன் அடிக்க முடிகிறது. புஜாரா அவ்வப்போது காலாட்டத்தை சரி பண்ணி ரன் அடிக்கிறார், முன்னுக்கு வந்த வேகத்தில் பழைய தவறுகளை அடுத்தடுத்த ஆட்டங்களில் செய்து பின்னடைவையும் சந்திக்கிறார். இருவரில் ரஹானேவை அடுத்த ஐந்து தொடர்களுக்காக அணியில் இருந்து விலக்கி வைத்து உள்ளூர் போட்டிகளிலும் கவுண்டி போட்டிகளிலும் ஆடச் செய்தால் அவருடைய பிரச்சனைகள் சரியாகி விடும் என நினைக்கிறேன். ஆம், ரஹானே ஒரு சிறந்த அணித்தலைவரே, ஆனால் இந்த கால்பாடச் சிக்கலை அவர் சரி செய்யாதவரை அவருக்கு அணியில் இடம் நியாயமற்றது. பூஜாராவுக்கு ஒரு சிறிய இடைவேளை உதவும்; அவரால் தன்னுடைய இளமைக்கால பயிற்சியாளருடன் பயிற்சி செய்து மீண்டு வர முடியும் என நம்புகிறேன்.
கோலியும் கூட தன்னுடைய கால்பாடம் கடந்த சில ஆண்டுகளில் சீரழிந்ததன் விளைவாக இப்போது இந்த “ஐயோ இன் ஸ்வங்கர்!” என நினைத்தே எதிர்மறையாக ஆடும் மனநிலைக்கு சென்று விட்டார்.
அதாவது கோலியின் பிரச்சனை முழுக்க கால்பாடம் சம்மந்தப்பட்டதல்ல, உள்வரும் பந்து குறித்த ஒரு மனத்தடை அவரை வைட் பந்துகளை எட்ஜ் கொடுக்க வைக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ராபின்சன், ஆண்டர்ஸன் போன்றோர் அந்த 6,5வது ஸ்டம்பில் பந்து சற்று வைடாக ஓடி வந்து வீசினாலே கோலியின் ஆட்டம் தலைகீழாகி விடுகிறது. அதுவரை சரியாக ஆடியவர் இருட்டில் மட்டும் பேய்க்கு பயப்படுகிற வீரனைப் போல் ஆகி விடுகிறார். அதனாலே அடுத்து வருகிற ஒரு சில டெஸ்ட் ஆட்டத்தொடர்களுக்குப் பிறகு கோலி மீண்டு வருவார் என நினைக்கிறேன். இந்த தொடர் முழுக்க அவருக்கு மீட்சி இருக்காது. அவரது மனம் முழுக்க பல குழப்பங்களால் நிறைந்திருக்கிறது. அவர் தன் ஆட்டத்தின் வீழ்ச்சியை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார். பழைய அசராத நிலையான அணுகுமுறையை அவர் மீட்டெடுக்க வேண்டும். இந்த இங்கிலாந்து பயணம் முடிந்து அடுத்த டி-20 உலகக்கோப்பை முடிந்து அது சாத்தியப்படலாம் எனத் தோன்றுகிறது. அங்கு தான் கோலியின் கடைசியான நெருக்கடி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் ரூட்டைப் பொறுத்தமட்டில் கடந்த நியுசிலாந்து தொடரை உள்ளூரிலே இழந்த நிலையில் இத்தொடரை வெல்வது அணியின் மானத்தைக் காப்பது என்கிற விதத்தில் முக்கியம். தன் அணித்தலைமையே கத்திமுனையில் தவிக்கிறது என அவர் அஞ்ச வில்லை. ஆனால் கோலியோ தொடர்ந்து உலகத் தொடர்களில் சொதப்புகிறார், ஒரு உலகக்கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை எனும் நெருக்கடியில் இருக்கிறார். இது அவரது ஆட்டநிலையை பாதிக்கிறது. அணியின் சரிவு அவருடைய ஆட்டத்தையும் பாதிக்கிறது. சின்னச்சின்ன சறுக்கல்களையும் அவர் தன்னுடைய ஒரு பவுண்டரி ஷாட், களத்தடுப்பின் போதான ஆவேசத்தின் மூலம் ஈடுபண்ணலாம் என நம்புகிறார். அவர் அடிப்படைகளை நம்புவதை விட தன் ஆளுமையை அதிகமாக நம்புகிறார். இந்த பிரச்சனைகள் தாம் நாம் அவருடைய நிலையற்ற ஆட்டப் போக்கில் வெளிப்படுவதைக் காண்கிறோம். கோலி தானே மொத்த இந்திய அணி எனத் தன்னையும் மீறி யோசிக்கத் தொடங்கி விட்டார். இது அணியின் மட்டையாட்டத்தையும் அவரது தனிப்பட்ட ஆட்டத்தையும் தஞ்சாவூர் பொம்மை போல தள்ளாட்டமடைய வைக்கிறது. தொண்ணூறுகளில் சச்சினுக்கு இது நிகழ்ந்தது. அவர் தன்னுடைய தலைமைப் பொறுப்பை கைவிட்ட பின்னரே ஒரு ரன் எந்திரமாக மீண்டும் மாறினார். கோலிக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்து அப்படி ஒரு ஓய்வு தேவைப்படுகிறதோ?
