Skip to main content

நம்மால் ஏன் சாதியை ஒழிக்க முடியவில்லை? - மென்-வலதுசாரி மத்யமர்களுக்கான பதில்கள்



1. பொதுவாக மென்-சனாதன ஆதரவாளர்கள், மத்யமர்களாக முகம் காட்டுபவர்கள், அம்பேத்கருக்கு முன்பான சமூக சீர்திருத்தவாதிகளில் இருந்து இன்று செயல்படும் பகுத்தறிவு இயக்கங்கள் வரை சாதியை ஒழிக்கவில்லை, அவர்கள் சாதி அதிகாரத்தை இடமாற்றும் பணியை மட்டுமே ஆற்றியிருக்கிறார்கள் என ஒரு வாதத்தை எடுத்து வைப்பார்கள். வெளிப்படையாகப் பார்க்கும் போது “அட ஆமா உண்மை தானே, சாதி எங்கே ஒழிந்துவிட்டது?” என நாமும் யோசிப்போம். 


நிஜம் என்னவென்றால் கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ மாற்றங்கள் நம் சமூக அமைப்பில் கடந்த சில நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டு வந்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சுதந்திரத்துக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினருக்கு போதுமான அங்கீகாரமும், பிரதிநுத்துவமும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் ஒரு மத்திய சாதி சதித்திட்டமோ பகுத்தறிவு, சோசலிச இயக்கங்களோ அல்ல. அதற்கான உண்மைக் காரணத்தை அறிய நாம் பூனா ஒப்பந்த விவாதங்களுக்கு திரும்ப செல்ல வேண்டும். 

ஒரு ஜனநாயக நாட்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதிநுத்துவம் அமைவது ஆபத்தானது. குறைந்தபட்சம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு நாம் தனி வேட்பாளர்கள், தனி வாக்காளர்களை சாத்தியப்படுத்தும் சட்டத்தை நாம் வனைந்திருந்தால் இன்றுள்ள அதிக மக்கள் தொகையில் உள்ளவர்களுக்கே அதிக அதிகாரம், அதிக பிரதிநுத்துவம் எனும் ‘வலுத்தவனே வெல்வான்’ எனும் ஜனநாயக விரோத நிலை இருந்திருக்காது. ஆனால் இது குறித்த அம்பேத்கரின் கோரிக்கையை காந்தி “சமூகத்தை அது பிளவுபடுத்தும்” என அபத்தமான ஒரு காரணத்தை வைத்து மறுத்ததுடன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பேன் என மிரட்டி ஒழித்துக் கட்டினார். அடிப்படையில் காந்திக்கு இந்த சமூக அமைப்பு மாறுவதில், நவீனப்படுவதில் மிகப்பெரிய தயக்கம், பயம் இருந்தது என்பதை அவருடைய எழுத்துக்களில் பல இடங்களில் காணலாம். ஒருவிதத்தில் இந்த சமூகத்தை அப்படியே தக்க வைப்பதில் அவர் வென்று விட்டார். அவர் ஆரம்பித்த மேலோட்டமான சீர்திருத்த செயல்பாடுகள் மேல்சாதியினரின் குற்றவுணர்வை சுரண்டி அவர்களுக்கு “தாம் தலித்துகளின் பால் அறத்துடன் இருக்கிறோம்” எனும் போலியான திருப்தியை அளித்தது என டி.ஆர் நாகராஜ் “தீப்பற்றிய பாதங்கள்” நூலில் விமர்சிப்பதை நாம் கவனிக்க வேண்டும்.  “சந்திரமுகியில்” ரஜினி ஜோதிகாவை ஒரு பொம்மையை வெட்ட செய்து வில்லனை கொன்ற திருப்தியை அளித்து சிகிச்சை கொடுத்து சரி செய்வார் அல்லவா அதை காந்தி மேல்சாதியினருக்கு செய்ததே அவரது தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள் என அம்பேத்கர் அன்றே தெளிவாக கணித்தார். அதனால் தலித்துகளுக்கு எந்த பலனும் இருக்கவில்லை என நாகராஜும் கூறுகிறார்.


2. தமிழில் உள்ள மென்-வலதுசாரிகளுக்கு காந்தியின் status quoவை நீட்டிக்க நினைக்கும் கருத்தியல் வசதியாக இருக்கிறது. அதில் உணர்ச்சிகரமான தியாகம், ஹீரோயிசம், மேல்சாதியினர் தரப்பில் இருந்து சிந்திப்பது, சமூக, மத, கலாச்சார அமைப்புகளை மாற்றாமல் புரட்சி பேசும் பங்கு உள்ளது அவர்களுக்கு வசதியாக உள்ளது. ஆக அவர்கள் காந்தியின் ஆதரவாளர்கள் ஆகிறார்கள். காந்தியை யாராவது விமர்சித்தால் அவர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வருவதைக் கண்டிருக்கிறேன் - அது ஏனென்றால் காந்தியை விட்டால் அவர்களால் சாவர்க்கர் போன்ற தீவிர வலதுசாரிகள் பக்கமோ பெரியார் பக்கமோ செல்ல முடியாது என்பதாலே. காந்தியே மென்வலதுசாதி மத்யமர்களுடைய ஒரே சரணாலயம்.


 காந்தியினால் தான் சாதியமைப்பு நீடிக்கிறது என நான் கூறவில்லை, ஆனால் அவர் புனிதரோ நேர்மையான அரசியல்வாதியோ அல்ல என்கிறேன். தன்னுடைய சுயசெயல்பாடுகளின், மனவோட்டங்களை வெளிப்படையாக முன்வைத்த காந்தியால் சாதி, மதம் என்று வந்த போது தன் நோக்கத்தின் உண்மையை சொல்ல முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் ஒரு மென்வலதுசாரி அரசியல் சோஷலிச சார்புடன் அதிகாரத்துக்கு வந்தது. அது பின்னர் முழுமையான வலதுசாரித்தனத்துக்கு வழிவிட்டதன் விளைவைத் தான் நாம் இன்று அனுபவித்து வருகிறோம். அதாவது காந்தி பேட்மேன் என்றால், சாவர்க்கர் ஜோக்கர் - ஒரு வைதீக மனத்தின் இரு பக்கங்கள்.


பூனா ஒப்பந்த கால சம்பவங்கள் சாதியமைப்பில் எண்ணிக்கை அடிப்படையில் வலுவான இடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தனி அதிகாரத்தை மக்களாட்சி அமைப்பில் கொடுத்து விட்டன. விளைவாக சாதி அமைப்பின் அதிகார கட்டமைப்பு ஒரு புதுவிதமாக - பார்ப்பனிய-மத்தியசாதி கூட்டணியாக - உருவெடுத்து விட்டது.


ஒரு பக்கம், ஆயிரம் ஆண்டுகளாக நம் மீது படையெடுத்துக் கொண்டிருக்கும் வைதீகம், இன்னொரு பக்கம் அநீதியான வகையில் பிரதிநுத்துவம் கொடுக்கும் தேர்தல் முறை என சாதி எதிர்ப்பு போராளிகள் கடும் அழுத்தத்தை சுதந்திரத்துக்குப் பிறகு எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு, மக்களாட்சி கட்டமைப்புக்கு வெளியே நின்று போராடி வருகிறார்கள்.   


3. மென்வலதுசாரி மத்யமர்கள் இப்போது இன்னொரு காரியத்தை சாமர்த்தியமாக செய்கிறார்கள் - 1) பெரியார் சாதியை ஒழித்து விட்டாராய்யா எனக் கேட்கிறார்கள். வியாதியின் பழியை மருத்துவன் மீது போடுகிற தந்திரம் இது. எந்த மருத்துவரிடமாவது நீங்கள் சென்று ஏன் கொரோனாவை இன்னும் ஒழிக்கவில்லை எனக் கேட்க முடியுமா? அது அபத்தமில்லையா? சாதி ஒழிப்பு நீண்ட நெடிய போராட்டம், ஒருநாள் விடிவு வரும் எனும் நம்பிக்கையில் நடப்பது. 


4. மத்யமர்களின் இன்னொரு தந்திரமான விளக்கம் “சாதி இயல்பானது, அது பண்டைய பழங்குடி இன அமைப்பின் நீட்சியே, பழங்குடி இனங்கள் மருவி சாதியாகி விட்டது” எனக் கூறுவது. இதன் நோக்கம் சாதி மனித குலத்தின் துவக்கத்திலே தோன்றி விட்டதால் அதை அழிக்க வேண்டியதில்லை என்பது. இந்த மோசடியான வாதத்தை அம்பேத்கர் தனது Who Were the Shudras? நூலில் அம்பலப்படுத்துகிறார் - இந்தியாவில் வைதீகத்துக்கு முன்பு இனங்கள் பரஸ்பரம் கொடுக்கல் வாங்கலுடன் லகுவாக இருந்தன, அவர்கள் தமக்குள் மூடிக்கொண்ட போதே சாதி தோன்றுகிற எனக் கூறும் அவர், முதன்முதலாக அவர்கள் “கதவை சாத்தியவர்கள்” பார்ப்பனர்களே, அவர்களைக் கண்டே பிறர் போலச் செய்து சாதியை உருவாக்கினார்கள் என்கிறார். இங்கு நாம் இன்னொரு விசயத்தை கவனிக்க வேண்டும் - தென்னமெரிக்க பழங்குடி இனங்களைக் கண்டு அவர்களைப் போல வைதீகத்துக்கு முந்தைய இந்திய சமூகம் இருந்தது என நாம் கருதக் கூடாது. அடுத்து சாதி அமைப்பு பல்வேறு விழுமியங்கள், நம்பிக்கைகளின் அடிப்படையில் தக்க வைக்கப்படுகிறது; அதற்காகவே சடங்கு, சம்பிரதாயங்கள், மனு ஸ்மிருதி போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இயற்கையான ஒன்றை ஏன் இவ்வளவு மெனக்கெட்டு ஒரு சமூகம் தக்க வைக்க வேண்டும்? பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்றால் தெரியும். பசி தெரியும். எட்டு மாதங்களில் அதற்கு பாலுணர்வு கூட வந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் சாதி உணர்வு அப்படி அதற்கு வருவதில்லை. அது மொழி வழியாக மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்டு அதற்குள் ஏற்றப்படுகிறது. தூய்மை-அசுத்தம் எனும் இருமை அதற்காக பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாதி மிக மிக சிக்கலான ஒரு சமூக உளவியலாக இருக்கிறது. அதுவே அது இயல்பானது அல்ல என்பதைக் காட்டுகிறது.

5. சாதியை ஒழிக்க இரு தளங்களில் பணி செய்ய வேண்டும்: அ) மொழி, பண்பாடு, மதம். ஆ) திருமணம், குடும்பம், வேலை, குடியிருப்பு. பண்பாடு, மதம், மொழி என வரும் போது நாம் ஆயிரமாண்டு வைதீக இயக்கங்களுடன் போராட வேண்டும். புனிதம் எனும் கருத்தமைவை முதலில் நொறுக்க வேண்டும். எதெல்லாம் ஒழுங்கற்றதோ, தீட்டோ, அழுக்கோ, அருவருப்போ அதைக் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும். இதன் பின்னுள்ள அரசியலைப் பற்றி தொடர்ந்து பேச வேண்டும். கோயில்களில் இறைச்சிக்கறியை படைப்பது, மதம் சார்ந்த விதிமுறைகளை தொடர்ந்து உடைப்பது, செருப்பணிந்து கோயிலுக்குள் செல்வது, தலித்துகள் மட்டுமே பூசாரிகளாக இருக்க வேண்டும் என விதிமுறையை உருவாக்குவது, மாதவிடாயின் போது பெண்கள் கோயிலுக்கு சென்று அதை வெளிப்படையாகக் கொண்டாடுவது என சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் தூய்மையை அடித்துக் கொல்ல வேண்டும். இதை இந்து மதத்துக்குள் மட்டுமல்ல அனைத்து சமூக தளங்களிலும், மதங்களுக்குள்ளும் செய்ய வேண்டும். இது ஒரு நீண்ட நெடிய போராட்டம்.  ஆ) கலப்புத்திருமணத்தை கட்டாயமாக்க வேண்டும். நவீன கருவிகளைக் கொண்டு குப்பை அள்ளும், மலம் அள்ளும் பணிகளில் இருந்து தாழ்த்தப்பட்டோரை விடுவிக்க வேண்டும். அனைத்து சாதியினரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இறுதியாக வைதீகத்துக்கு மாற்றாக பூர்வ பௌத்தத்தை இந்தியா முழுக்க பரவலாக்க வேண்டும் - இந்து மதத்துக்கு மாற்றாக மட்டுமல்ல, கிறித்துவம், இஸ்லாத்துக்கு மாற்றாகவும் நாம் பௌத்தத்தை கொண்டு வர வேண்டும். ஏனென்றால் மேற்சொன்ன பிரச்சனைகள் சிறுபான்மை மதங்களின் தத்துவங்களிலும் உள்ளன. இப்போதைக்கு சாராம்சவாதத்துக்கு எதிரான ஒரே மதம் பௌத்தமே. சாதி விடுதலைக்கு பௌத்தமே ஒரே தத்துவார்த்த தீர்வு என அதனாலே அம்பேத்கர் கூறினார். உடனே மத்யமர்கள் “பௌத்தத்துக்குள் இனவாதம் இல்லையா?” என கத்தியை தூக்குவார்கள். அதற்குத் தீர்வாகவே நவயான பௌத்தத்தை அம்பேத்கர் உருவாக்கினார். அதை நாம் இந்தியாவின் தேசிய மதமாக அறிவித்து ஆரம்ப பள்ளியில் இருந்தே குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம். 

6. இந்த மாற்றங்களை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் மனமுவந்தால் ஒரு நூற்றாண்டில் செய்யலாம், அல்லது பல நூற்றாண்டுகள் ஆகும். ஒன்றை அழிப்பது சுலபம், மீளமைப்பது சிரமம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் சமூகம் ஆரியர்களால் அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. அதை ஒரே நாளில் பகுத்தறிவாளர்களால் சரி செய்ய வேண்டும் எனக் கோருவது இவர்களுடைய பாசாங்கை, குரோதத்தை, வஞ்சகத்தை காட்டுகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...