கடந்த முறை சென்னை வந்திருந்த போது தமயந்தியின் “காயல்” திரைப்படத்தை அதன் கரட்டு வடிவில் (uncut) பார்த்தேன். சரியான ஒரு தளத்தில் வெளியாகி போதுமான கவனத்தை பெறும் பட்சத்தில் அப்படம் இரண்டு விசயங்களை சாதிக்கும் எனத் தோன்றியது:
1) தமிழ் சினிமாவில் பெண்மொழியை வலுவாக நிறுவும் படமாக இருக்கும்.
பெண் மொழி என்றால் என்ன? பொதுவாக நமது படங்களில் வெளிப்படுவது ஆண்களின் நோக்கே (male gaze). பெண்களை மட்டுமல்ல ஆண்களை, வயதானவர்களை, பலவீனமானவர்களை, ஊனமுற்றுவர்களை, குடிகாரர்களை, காமாந்தகர்களை, சாகசக்காரர்களை, தியாகிகளை, தலைவர்களை நாம் ஆண்களின் பார்வை வழியாகத் தான் சினிமாவில் காண்கிறோம். அதனாலே வன்முறையை மிகுதியாகக் கொண்டாடுவதாக, ஆண்களை அவர்களுடைய உடலைக் கடந்து ஊடுருவி தரிசிக்க்காததாக நமது சினிமா இருக்கிறது. நமது சினிமா என்றால் தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகம் முழுக்க சினிமாக்கள் இப்படித்தான் இருக்கின்றன. உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட Blue is the Warmest Color எனும் லெஸ்பியன் படத்தில் கூட ஆண் நோக்கே வெளிப்பட்டது. கீஸ்லாவஸ்கி போன்ற விதிவிலக்கான சில இயக்குநர்களின் சினிமாக்களில் பெண்மொழி காட்சிகளாக, உணர்ச்சிகளாக ஓரளவுக்கு வெளிப்பட்டதுண்டு. குறிப்பாக A Short Film About Loveஇல் அந்த பதின்வயது நாயகனின் பாலியல் சிக்கல் அவனுடைய நோக்கை அவர் தொலைநோக்கியின் சிறிய சட்டகத்தின் மூலம் உணர்த்தியிருப்பார். அவன் அதே நேரம் சுலபத்தில் மனம் வெதும்பி உடைந்து விடுகிறவனாக இருக்கும் போது அவனுடைய மீட்சி ஒரு பெண் நோக்கில் சாத்தியப்படுவதை சித்தரித்திருப்பார். கீஸ்லாவஸ்கியின் பெரும்பாலான படங்களில் இந்த இரு நோக்குகளுக்கு இடையிலான போராட்டமே இருக்கும்.
இந்தியாவில் பெண் நோக்கை தன் திரைமொழியாகக் கொண்டு வந்த ஒரு அற்புதமான இயக்குநர் மீரா நாயர். குறிப்பாக அவருடைய Namesake. அனுஹாசன், சுஹாசினி, ரேவதி ஆகியோரை பெண் இயக்குநர்களாக இங்கு பொருட்படுத்தி பேச முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் மலையாளத்தில் அஞ்சலி மேனன் முக்கியமானவர், ஆனால் அவரிடமும் பெண்களின் ஆளுமை, சுதந்திரம், அந்தரங்க உலகம் ஆகியவை ஆண்நோக்கிலே சொல்லப்பட்டிருக்கும், அவர் வணிக வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு பிரதான காரணம். Bangalore Days படத்தில் துல்குர் சக்கர நாற்காலியில் இருக்கும் நித்யா மேனனை கையில் தூக்கி எடுத்துச் செல்லும் காட்சியில் தெறிக்கும் உடல்சார்ந்த “ஆண்மை செருக்கு” ஒரு உதாரணம். இந்த பின்னணியில் தான் தமயந்தியின் “காயல்” வருகிறது: அவர் முதன்முதலாக ஆண் பாத்திரங்களை பெண்களின் பார்வையில் இருந்து உணர்வுவயப்பட்டவர்களாக, திமிர்த்தனம் இல்லாத கண்ணியமானவர்களாக, நெகிழ்வானர்களாகக் காட்டுகிறார். கோபப்பட்டு வெறிப்பேச்சு பேசுகிறவர்களாக, சவால் விடுகிறவர்களாக அல்லாமல், சுலபத்தில் உடைந்து அழுகிறவர்களாக இந்த ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அபாரமான மென்மை, அழகியல் உள்ளது. முதன்முறையாக ஒரு இயக்குநர் ஆண்களின் உள் உலகை சித்தரிப்பதில் நியாயம் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சாதிய வெறியும், அழுத்தமும் படைத்தவராக நாயகியின் தாயின் பாத்திரம் வருகிறது. இதுவும் ஒரு தனித்துவம் தான் - “காதல்” படத்துக்குப் பிறகு ஆதிக்கசாதிப் பெண்களை எதார்த்தமாக சித்தரிக்கும் ஒரு படம்.
2) ஸ்வாகதா கிருஷ்ணன் எனும் பாடகிக்குள் ஒரு திறமையான துறுதுறுப்பான நடிகை இருப்பதை தமயந்தி கண்டுபிடித்து காட்டி இருக்கிறார். பியா பஜ்பயி எனும் நடிகையை நினைவிருக்கும். ஸ்வாகதா அவரை நினைவுபடுத்துகிறார். அவரை விட திறமையான சரளமான நடிகையாக இருக்கிறார். இப்படம் கவனம் பெறும் பட்சத்தில் அவர் நல்ல பெயரையும் நிறைய ரசிகர்களையும் பெறுவார்.
