நான் கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயமோகனின் கருத்துக்களுக்கு எதிர்வினைகள் எழுதுவதில்லை - அது ஒரு முடிவற்ற கருத்துச் சுழல், அவரது கருத்துக்களுக்கு பதிலெழுதுவது அவ்வளவு முக்கியமல்ல, அது என் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஒருநாள் என் மனதுக்குப் பட்டதும் நான் திருந்திவிட்டேன். இம்முடிவு எனக்கு நன்றாகவே பலனளித்தது. இன்னொரு விசயம், ஜெயமோகன் யாருடைய எதிர்வினையையும் பொருட்படுத்துவதில்லை, அவரை விமர்சிப்பது ஒரு மலையின் உச்சியில் போய் நின்று தனியாகப் பேசிகொண்டிருப்பதைப் போலத் தான். அவரை விமர்சிப்பதும், மறுப்பதும் மனித குலத்துக்கு அவசியமா என்றால் இல்லையென்பேன். ஆனால் இன்று அவரது இணையதளத்தில் அவர் தெரிவித்திருந்த ஒரு தகவலுக்கு நான் மறுப்பு சொல்ல வேண்டும். நான் செய்யும் காரியங்கள், எழுதும் சொற்கள் குறித்து வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்துவேன், ஆனால் நடக்காதவற்றைப் பற்றி விமர்சனம் எழும் போது அது ஏற்படுத்தும் தவறான மனப்பிம்பத்தை, அதன் நிழலை சுமக்க நான் தயாரில்லை. குறிப்பாக கடலூர் சீனு குறித்து அவர் இப்படி சொல்லியிருப்பது: //சீனுவுக்கு இதெல்லாம் தெரியும். இன்று அபிலாஷ் அவரை ஏளனமும் நக்கலும் செய்யும்போத...