அன்புள்ள அராத்து,
வன்புணர்வுக் குற்றங்களை மட்டுமல்ல எந்தக் குற்றத்தையும் தண்டனைகளால், கடும் தண்டனைகளால் கூட, குறைக்க முடியாதென்றே நினைக்கிறேன். என்னை விடுங்கள், ஆய்வுகளும் இதையே சொல்கின்றன. சமூக வெறுப்பு, கூச்சத்தினாலும் முடியாது. தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தவோ எதிர்காலக் குற்றவாளியைத் தடுக்கவோ அல்ல, குற்றவாளி அல்லாதோரின் திருப்திக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. கடவுளுக்கு பலி கொடுப்பதன் நவீன வடிவமே இன்றைய நவீனத் தண்டனைகள். அவை இல்லாமல் போகும் போது சமூகத்துக்கே பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்கும். நம்மால் நம்மையே தண்டிக்க முடியாமல் போவதும் குற்றவாளியைத் தண்டிப்பதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு குற்றமும் நம் அந்தரங்கத்தைத் தீண்டுகிறது. அதனாலே ஆன்மீகப் பொது நிகழ்வைப் போலக் குற்றங்கள் ஒரே சமயம் பொதுவயமாகவும் அந்தரங்கமாகவும் நம்மிடையிலும் நமக்குள்ளும் நிகழ்கின்றன.
குற்றங்கள் நவீன மனிதனின் அந்தரங்க உலகம். அவனது பாழ்பட்ட ஆன்மீக உலகம். குற்றம் நிகழும் போது கடவுளுடனான உரையாடலைப் போன்றே பொதுசமூகம் இருப்பதில்லை. இது பாலியல், பாலியல் அல்லாத எல்லா குற்றங்களுக்கும் பொருந்தும். குற்றத்தின் போது குற்றவாளி அந்தரங்கமாக தனித்திருக்கிறான், குற்றமே அவன் தன்னில் இருந்து பொதுவுக்கு வரும் போது அம்பலமாவதே. ஒரு சாதாரண செயல் பொதுவுக்கு வரும் போதே அசாதாரண குற்றச்செயல் ஆகிறது. ராணுவம் ஒருவரை சுடும் போது அது அந்தரங்க வெளிக்கு வருவதே இல்லை. அதனாலே அது குற்றமாவதில்லை. ராணுவம் அதனாலே அந்தரங்க வெளி முழுக்க மறுக்கப்பட்டதாக உள்ளது. ஒழுக்கமீறல் என்பது மட்டுமே அவர்களுடைய அந்தரங்க வெளி. அவர்கள் இனப்படுகொலை செய்தால் அது போர்க் குற்றமாவதும், ஒரு தேசம் அதற்குப் பொறுப்பேற்க நேர்வதும், அது நாட்டிலுள்ள எல்லாரையும் 'அம்மணமாக', சங்கடமாக, சுயவெறுப்பு கொள்ள வைப்பது அதனாலே. எந்த தேசியவாதியாலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஏற்க முடியாது, எந்த ஜெர்மானிய தேசியவாதியாலும் ஹிட்லரை குற்றவாளி ஆக்க முடியாது - அவை பொதுவில் நிகழ்வதாலே அவற்றை அவர்கள் அந்தரங்கத்துள் கொண்டு வந்தால் அவர்களுடைய தேசியமும் இறையாண்மையும் அதனால் காலியாகி விடும்.
குற்றம் இந்தளவுக்கு சிக்கலான ஒன்று - குற்றத்தைப் புரிந்துகொள்வது தெய்வம், பேய் போன்ற தர்க்கத்துக்கு அப்பாலான அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கு சமானமானது. நான் குற்றங்களை நியாயபடுத்த இதைச் சொல்லவில்லை. பாலியல் அதன் இயல்பிலேயே குற்றச் செயல் தான் - இருவர் இணங்கிச் செய்யும் போதும் அது குற்றத்திற்கு வெகு அருகில் தான் வருகிறது. ஆகையால் பாலியல் என ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் குற்றம் புரிந்துகொண்டே இருப்பார்கள். பாலியல் குற்றங்களுக்கு தீர்வு அதற்கு மாற்றாக உலகில் ஆன்மீகத்தை, கடவுள் பக்தியைக் கொண்டு வருவது மட்டுமே. இரண்டும் எதிரிடைகள் - கடவுளும் பேய்களும் அதிகமாக பிரசன்னமாகும் உலகில் பாலியலும் குற்றங்களும் தரும் அந்தரங்க வெளி மனிதனுக்கு குறைவாகவே தேவைப்படும்.
ஆனால் கடவுள் இறந்து போன நவீன உலகில் மனிதன் அந்த ஹேங்க் ஓவரில் குற்றத்தை நாடிக் கொண்டே தான் இருப்பான். இனி கடவுளும் ஆன்மீகவும் மீள வாய்ப்பில்லை. ஆகையால் நான் பக்தியை முன்வைக்கவில்லை, அது தலைவலிக்கு அனாசின் போல பயன்படும் என்றாலும் கூட. நாம் வேறொரு புதிய தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். நவீன மனிதனுக்கு கடவுளற்ற ஒரு ஆன்மீகம் தேவை.
சிறை, சமூக ஒதுக்கல், அவமதித்தல் எவையும் நமக்கானவை, குற்றவாளி அல்லாதோருக்கானவை, குற்றவாளியை அவை சீண்டாது.
- ஆர். அபிலாஷ்