கெ.என் செந்தில் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி எழுதிய குறிப்பை படித்த போது இது தோன்றியது. எனக்கென்னவோ பிற விஷ்ணுபுரம் படைப்பாளிகளுக்குப் பதில் அஜிதனையே அழைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனக்கு விஷ்ணுபுரத்தாரை தாஜா பண்ணி எதுவும் ஆகப் போவதில்லை, ஆகையால் இதை நான் சுயநல நோக்கிற்காக சொல்லவில்லை - ஜெயமோகனிடம் இல்லாத ஒரு மெய்யியல் போக்கு அஜிதனிடம் உள்ளது. ஜெயமோகன் தன் புனைவில் மதம் எனும் இயக்கத்தின் வெறுங்கூடான புற அமைப்பையும், அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சார அரசியலையும் (முரணியக்கம் சார்ந்து) புனைவாக்கினால், அஜிதனோ அதன் சாரமாக உள்ள, ஆன்மாவாக உள்ள மெய்யியலைத் தொடுகிறார், அல்லது சில நேரங்களில் அதற்காக குறைந்தது முயல்கிறார். இது அவரது எழுத்துக்கு ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஜெயமோகனுக்கு மதத்தில் உள்ள ஆர்வம் ஆன்மீகத்தில், மெய்யியலில் இல்லை. அவர் ஒரு லௌகீக எழுத்தாளர். எண்பதுகள் வரைத் தமிழ் எழுத்தாளர்கள் மெய்யியல் தன்மை கொண்ட புனைவுகளை எழுதினார்கள், அது எதார்த்தவாத, இயல்புவாத, இனவரைவியல் புனைவுகளின் பெருக்கத்தால் அழிந்து போய், எழுத்துலகமே ஏதோ காய்கறி சந்தை போல முழுக்க முழுக்க புறம் சார்ந்ததாக மாறிவிட்டது. ஏதோ கவிதையில் தான் இன்றும் மெய்யியல் கொஞ்சமாவது மீதமிருக்கிறது. அஜிதன் அதைப் புனைவெழுத்தில் மீட்க முயல்வது பாராட்டத்தக்கது. அதனாலே நான் அவர் தன் தந்தையை விட மேலான படைப்பாளி என நினைக்கிறேன். ஒரே பிரச்சினை அவர் தன் தந்தையின் மொழியை போலச் செய்ய முயல்கிறார் என்பது. (நான் சொல்லும் இந்த விசயத்தை கூட அவர் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. இதை அவர் மறுக்கவே செய்வார் என்றே நம்புகிறேன்.) இந்த உளவியல் தடையை மீறிவிட்டால் சிறந்த படைப்பாளி ஆகிவிடுவார். அவரது அத்வைதத்துடன், கடப்புநிலைவாதத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவரது எழுத்தை என்னால் ரசிக்க முடிகிறது, நான் நாவல் எழுதும் போது அது ஒரு தாக்கத்தை செலுத்துவதை உணர்ந்தேன். ஜெயமோகனின் எழுத்து இதை எனக்கு செய்ததில்லை. அவரது சொல்லாட்சி, நடை நினைவிருக்கும், நாடகீயமான காட்சிகள், கவித்துவமான பிம்பங்கள் நினைவிருக்கும், ஆனால் அதைக் கடந்து அவரது ஆன்மா என்னுடன் நான் எழுதும் போது இருப்பதில்லை. அதனாலே ஜெயமோகனால் தூண்டுதல் பெற்று ஒரு புதிய புனைவை நம்மால் எழுத முடிவதில்லை, அப்படி செய்கிறவர்களும் அவரது நடையை மட்டுமே பிரதியெடுக்கிறார்கள். இது சுந்தரராமசாமியிடமும் இருந்த நெருக்கடிதான், இப்போது யோசிக்கையில் ஜெயமோகன் சு.ராவின் நீட்சியே எனத் தோன்றுகிறது. இருவரிடமும் புறத்தை தாண்டி மீயுலகம் ('அகம்', 'மீபொருண்மையான இருத்தல்') என ஒன்று இல்லை. அந்த புறம் மிக அழகானது, பல நுட்பங்கள், வசீகரங்கள் நிறைந்தது, ஆனால் பாம்பு ஊர்ந்து ஊர்ந்து போவதைப் போல அது மண்ணிலே இருக்கிறது, பறந்தெழுவதில்லை.
பி.கு: இதை நான் ஜெயமோகன் மீதான கோபத்தில் சொல்லவில்லை. (கோபப்படுவதற்கு அவரிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.) இது ஒரு விமர்சனக் கருத்து, வாசக அவதானிப்பு மட்டுமே.