எப்போதுமே எழுதுவதற்கு போதுமான நேரமில்லை எனும் உணர்வு எனக்கிருக்கிறது. ஒரு நாவலை எழுதி முடித்து அதைத் திருத்துவதற்குள் இன்னும் நான்கைந்து நாவல்கள் எழுதக் கேட்டு கதவைத் தட்டுகின்றன. அவற்றை முடிக்காது பாதியில் விட்டுவிடும் போது அவை பேய்களாகி என் உறக்கத்தைக் கெடுக்கின்றன. அதனாலே வார இறுதி நாளை நான் பயணத்தில் செலவழிப்பதில்லை. எழுத்துக்குள் மூழ்கி விடுகிறேன். எங்காவது போவதென்றால், நண்பர்களை சந்திக்க நினைப்பதென்றால் அதற்கு அரைநாள் ஓடிவிடும். இன்னொரு பக்கம் வீட்டிலேயே இருந்தாலும் மனம் ஓய்வுக்காக ஏங்கும். ஞாயிற்றுக் கிழமையை உறக்கமும் வேடிக்கையுமாக கழிக்காவிடில் திங்கள் அன்று பெரும் சோர்வு தோளில் சாய்கிறது. பத்து, இருபது நாட்கள் விடுமுறை கிடைத்தால் உடனடியாக ஒரு நாவல் காத்து நிற்கிறது. எனக்கென்னவோ என்னைப் பற்றி யோசிக்க பழைய படங்களில் வரும் ஐந்து பெண்களை கரை சேர்ப்பதற்காக போராடும் அப்பா / அண்ணன் தனக்கென எதை யோசித்தாலும் ஒவ்வொரு பெண் குழந்தையின் / தங்கையின் முகமாக நினைவுக்கு வரும் காட்சி தோன்றுகிறது. இவ்வளவு புத்தகங்களையும் ‘கரை சேர்க்கும்’ போது இன்னும் பத்து எழுத்துத் திட்டங்கள் புதிதாதக் தோன்றும் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் எப்படி ஜாலியாக ஊர் ஊராகப் பயணித்து விழாக்களை சிறப்பிகிறார்கள், நண்பர்களைத் தேடி சந்தித்து அளவளாவுகிறார்கள் எனப் புரியவில்லை. நாவலாசிரியர்கள் குடும்பஸ்தர்களாகவும் மற்ற எழுத்தாளர்கள் பேச்சிலர்களாகவும் இருப்பதுதான் விதியா?
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share