பெங்களூரில் நடக்கும் - புக்பிரஹ்மாலிட் ஃபெஸ்ட்( BOOKBRAHMALITFEST) -இல் அழைக்கப்பட்டவர்களின் தகுதி, சிறப்பு போன்றவற்றைப் பற்றிய புகார்களை விடவும், பெங்களூரிலேயே இருக்கும் அபிலாஷ் சந்திரனையும் சரவண கார்த்திகேயனையும் அழைக்காததைப் பெரும் குறை என்றே சொல்வேன். இருவரும் அவர்களின் மனக்குறையைப் பதிவுகளாக எழுதிக் கடந்திருக்கிறார்கள்.
அபிலாஷின் எழுத்துப்பரப்பு விரிவானது. புனைவிலும் விமரிசனத்திலும் தத்துவம் இலக்கியத்தையும் இணைத்துப் பேசும் கோட்பாட்டு எழுத்திலும் இன்று எழுதும் எழுத்தாளர்களில் அபிலாஷின் பங்களிப்புகள் மறுதலிக்க முடியாதவை. இம்மாத உயிர்மையில் வந்துள்ள விரிவான நேர்காணலே அதற்குச் சாட்சி
சிறுபத்திரிகை அடையாளத்தையும் வணிக எழுத்தின் தன்மையையும் இணைத்துவிட முடியும் என நம்பும் சரவணகார்த்திகேயனுக்கு ஜெயமோகனும் சுஜாதாவும் முன்மாதிரிகள். நடப்பியல் சிறுகதைகளில் ஆரம்பித்தவர் என்றாலும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளில் பரிசோதனைகள் செய்து வருகிறார். எதையும் திட்டமிட்டு எழுதிவிட முடியும் என்பதற்கு தன்னை உதாரணமாக்கிவருகிறார். அவரது சமூக ஊடக நிலைபாடுகள்/ பெண்கள் பற்றிய கருத்துகள் பலருக்கு ஒவ்வாமையைத் தரக்கூடியனவாக இருக்கும் என்பதும் அவரே ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று.
இதையெல்லாம் தாண்டி, தமிழ் இலக்கியப்பரப்பின் அனைத்துப் போக்குகளையும் விவாதிக்கும் - விளக்கும் திறமை கொண்ட எழுத்தாளர்கள் இருவரும். தமிழில் பேசுவதோடு, ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியத்தை முன்வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது எனது வாசிப்பிலிருந்தும் பழக்கத்தைக் கொண்டும் சொல்லமுடியும்.
பெங்களூரில் நடக்கும் ஓர் இலக்கியத் திருவிழாவில் வெறும் பார்வையாளராக அவர்களால் கலந்துகொள்ள இயலாத ஒன்று என்பதைப் புரிந்துகொள்கிறேன்.( இருவரது எழுத்துகள் குறித்து எழுதிய கட்டுரைகள் பின்னூட்டத்தில் உள்ளன)