Skip to main content

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (1)

புக் பிரம்மா இலக்கிய விழாவின் போது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை உணவகங்கள் இருந்த பகுதியில் நண்பர்களை சந்தித்து அரட்டையடிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதாவது சென்னையில் அரங்கின் வெளியிலும் தேநீர்க் கடையிலும் நின்று பேசுவதை இங்கு ஆற அமர அமைதியான, வெக்கையற்ற இதமான சூழலில் இருந்து பேச முடிந்தது ஒரு செமையான அனுபவம். பதிப்பாளர்கள் தனியாக அங்கு நடந்த பதிப்புத்துறைக்கான அமர்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்ததால் அவர்களும் அரட்டையில் இணைந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட சென்னையில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.


நான் அங்கு உரையாடியதில் சில பொதுவான விசயங்களை இங்கு சிறு குறிப்புகளாக பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

****
தெலுங்கு எழுத்தாளர் வோல்கா எனும் லலித குமாரி நாவல் குறித்த கலந்துரையாடலில் ஒரு சுவாரஸ்யமான வசனத்தை சொன்னார். அந்த சொற்றொடர் ஒரு பஞ்ச் டயலாக்கைப் போல இருந்தது. “கவிதைகளை கவிஞரின் பெயராலும் நாவல்களை தனிப்பட்ட படைப்புகளாலும் அடையாளப்படுத்துகிறோம், நினைவுகொள்கிறோம்.” அதாவது நாம் பாரதியின், ஆத்மாநாமின், நகுலனின் கவிதைப் பற்றிப் பேசும் போது அந்த படைப்பாளிகளின் குறிப்பிட்ட கவிதையை அல்ல அவர்களுடைய பெயரே முதலில் வந்து விழுகிறது, அவர்களுடைய ஆகிருதியே நம் முன்னால் பெரிதாக எழுந்து நிற்கிறது. மனுஷ்யபுத்திரனும் தேவதேவனும் அவர்கள் எழுதிய ஒட்டுமொத்த சொற்களின் அடையாளமாகத் தோன்றுகிறார்கள். ஆனால் இது நாவலுக்கு நிச்சயமாக நிகழ்வதில்லை. எனக்கு தஸ்வாவஸ்கியின் / காப்காவின் நாவல்கள் பிடிக்கும் என்று ஒருவர் சொன்னதுடன் அவர் அப்படியே ஒரு குறிப்பிட்ட நாவலைப் பற்றியும், அதில் வரும் காட்சிகள், பாத்திரங்கள் பற்றியும் பேசி அதனுள் போய்விடுவார். அரிதாகவே தஸ்தாவஸ்கியின் / காப்காவின் தரிசனத்தைப் பற்றி பொதுவாகவோ அவர்களுடைய சில வாக்கியங்களைப் பற்றியோ பேசுகிறோம். நாவல்கள் நாவலாசிரியரை மறைய வைப்பதைப் போல கவிதைகள் கவிஞருக்கு செய்வதில்லை. அதனாலே நம் சூழலில் “கவிஞரே” என கனிவாக ஒருவரை அழைப்பதைப் போல “நாவலாசிரியரே” என அழைப்பதில்லை. இது ஏன் என்பதற்குள் வோல்காவோ விவாதத்தை நெறியாள்கை செய்தவரோ போகவில்லை.

நான் இதைப் பற்றி பின்னர் சர்வோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இது ஒரு முற்றிலும் புதிய பார்வை. நாவலானது தன்னளவில் முழுமையாக இருப்பதைப் போல, அது ஒரு பிரபஞ்சமாக தனதேயான உயிர்களுடன் சூழலுடன் உயிர்கொண்டிருப்பதைப் போல ஒரு கவிதையால் இயலாது, கவிதைகள் பெரிய மழையில் உள்ள துளிகளைப் போல தனித்தனியாகவும் நாவல் ஒரு கானகத்தைப் போன்றும் இருப்பதால் தான் இது நிகழ்கிறதோ என்று தோன்றுகிறது என்றேன். ஒரு நாவலுக்குள் எழுத்தாளர் தொலைந்து போவதைப் போல (எது அவருடைய கருத்து, எது கதாபாத்திரத்தின் கருத்து?) கவிதையில் சுலபத்தில் நிகழ்வதில்லை. கவிதையென்பது கவிதைசொல்லியின் பார்வை, கருத்து, அரசியல், கவிதைசொல்லி எப்போதுமே கவிஞர் தான், இருவரும் ஒரே பாலினம் அல்ல என்றாலும் கூட. பின்நவீன கவிதைகளில் மட்டுமே கவிதைசொல்லியே மிகுந்த தன்னுணர்வுடன் தன்னையே மறுத்து எழுதுகிறார். தமிழில் நாம் அரிதாகவே பின்நவீன கவிதைகளைக் காண்கிறோம். அதனாலே இங்கு கவிஞர்கள் என்றாலே அவர்களின் முகங்களே நமக்கு நினைவுக்கு வருகிறேன். அதனாலே இங்கு நாம் கவிஞர்களை அவ்வளவு கொண்டாடுகிறோம், ஆனால் கவிதை நூல்களை வாங்காமல் பதிப்பாளர்களை நொடிந்து போக வைக்கிறோம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...