புரவி இலக்கியக் கூடுகையின்போது ஶ்ரீனிவாசன் எனும் வாசகர் பேசினார். அவர் தன் வாசிப்பனுபவத்தைக் குறிப்பிடுகையில் "நிழல் பொம்மை" நாவல் தன் மனத்தை வெகுவாக பாதித்துவிட்டது என்றார். நாவலை வாசித்து முடித்தபோது தான் கழிப்பறைக்குச் சென்று தனிமையில் இருந்து கதையைப் பற்றி யோசித்ததாகவும் அப்போதுதான் முன்பு பணியாற்றிய நிறுவனம் குறித்து தனக்கிருந்த அகச்சிக்கல்கள் மறைந்து மனம் தெளிவானதாகவும், வெளியே வந்த சற்று நேரத்தில் தன் மனம் மீண்டும் சஞ்சலமுற்றதாகவும் சொன்னார். என்னை இந்த அனுபவப் பகிர்வு மிகவும் கவர்ந்தது. நான் கூட்டம் முடிந்ததும் அவரிடம் உரையாடினேன். அவர் சொல்ல வந்ததென்ன? அவர் சொன்னார், "நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்து விலகினேன். நீண்ட காலமாகப் பணியாற்றிய இடம் அது. என் மீது பொய்க்குற்றம் சாட்டி விசாரித்து வெளியேற்றினார்கள். எப்போதுமே அதை நினைக்கையில் கடுங்கோபம் வரும். பார்ப்பவர்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லி நிறுவனத்தைத் திட்டுவேன். இந்நாவலைப் படித்தபின்னர்தான் என் கோபம் தணிந்தது. இப்போது அவர்கள் எனக்குச் செய்தது ஒன்றும் தவறில்லை என்று தோணுகிறது....