அவர் சொன்னார், "நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்து விலகினேன். நீண்ட காலமாகப் பணியாற்றிய இடம் அது. என் மீது பொய்க்குற்றம் சாட்டி விசாரித்து வெளியேற்றினார்கள். எப்போதுமே அதை நினைக்கையில் கடுங்கோபம் வரும். பார்ப்பவர்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லி நிறுவனத்தைத் திட்டுவேன். இந்நாவலைப் படித்தபின்னர்தான் என் கோபம் தணிந்தது. இப்போது அவர்கள் எனக்குச் செய்தது ஒன்றும் தவறில்லை என்று தோணுகிறது."
இப்படியெல்லாம் இந்நாவலைப் படித்துவிட்டு ஒருவர் உணர்வார் என அதை எழுதும்போது நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஒரு நாவலில் பல்வேறு தருணங்கள் உண்டு. அவற்றில் எதாவது ஒன்று ஒரு பட்டாம்பூச்சியைப் போல நம் நெஞ்சில் வந்து அமரும். அது நம் உலகை சில கணங்கள் வண்ணங்களால் நிறைக்கும். இது நம் வாசிப்பின் மிகவு அந்தரங்கமான விளைவுதான். அடுத்து, நம்மை இன்னொருவராக நினைத்து அவரிடத்தில் இருந்து சிந்தித்துப் பார்ப்பது. இதை அரிஸ்டாட்டில் catharsis (அகத்தைத் தூய்மையாக்குவது) என்கிறார். மிகவும் உணர்ச்சிகரமாக, களங்கமற்ற நிலையில் வாசிக்கையிலே இது நிகழும்.
கதாபாத்திரத்துடன் நாம் வாசகராக ஒன்றிப் போய் அவரிடம் இருந்து உலகைப் பார்க்கையில் அது நம் உலகம் ஆகிறது. அடுத்து புனைவுலகமும் மறைகிறது. நம் அனுபவத்தைக் கொண்டு நாம் புனைவுலகை மீளெழுதுகிறோம். அப்பாத்திரம் அனுபவத்ததை இன்னும் உக்கிரமாக நாம் அனுபவிக்கிறோம்.
நான் அடிப்படையில் கல்நெஞ்சுக்காரன் என்பதால் எந்தப் புனைவையும் படித்து catharsis அடைந்ததில்லை. புனைவைப் படிக்கையில் இது செய்யப்பட்டது, திட்டமிட்டு எழுதப்பட்டவை இப்பகுதிகள் என உணர்வு இருந்துகொண்டே இருக்கும். சிலநேரங்களில் நானே அப்பகுதிகளை படிக்கையில் என் கையால் கூடவே நானும் எழுதிக் கொண்டுபோவதைப் போலத் தோன்றும்.
சில விதிவிலக்குகள் உண்டு - புனைவில் மதுவருந்தும் காட்சிகள் வரும்போது எனக்குத் தவறாமல் குடிக்கும் ஆசை வருவதுண்டு. காமமும் அப்படித்தான். மனமுடைய வைப்பதற்குப் பதிலாக புனைவுகள் என்னை புலணுணர்வு சார்ந்து கிளர வைக்கின்றன. ஆனால் என் ஆன்மாவைக் கிளர வைக்கிற எந்த நாவலையும் சிறுகதையையும் இதுவரைப் படித்ததில்லை.
கவிதைகள் மட்டுமே தவறாமல் என்னை மனம் உடையச் செய்கின்றன. என் மனநிலையை, அணுகுமுறையை மாற்றவும் செய்திருக்கின்றன.
ஆகையால் இவ்வளவு உணர்ச்சிகரமாக வாசிக்கும் வாசகர்களைக் காண்கையில் பெரும் திகைப்பு ஏற்படுகிறது. நாம் சுவரைப் பார்க்கையில் அவர்கள் அங்கு கண்ணுக்குப் புலப்படாத கதவொன்றைக் கண்டு திறந்து உள்ளே போய்விடுகிறார்கள். சுவரைப் பாதுகாகிறவனாக நான் அசந்து போகிறேன். என் படகில் ஏறி இருட்டில் வந்தவர்கள் சட்டென நீரில் குதித்து மறைந்துபோகிறார்கள். படகோட்டியாக நான் திகைத்துப் பார்க்கிறேன். இத்தருணங்களில் புனைவெழுத்தாளராக எனக்கு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கிறது.
