காலம் இல்லாமல் கதை சாத்தியமா? இ.எம். பாஸ்டர் சொல்வது போல காலத்துக்கு வெளியே கதை சாத்தியமில்லை தான். கதை என்பதே காரண-விளைவு சங்கிலியில் தோன்றும் ஒரு இடையூறினால், அதனால் ஏற்படும் வீழ்ச்சியினால் தோன்றுவது எனலாம். ஒரு சிறந்த ஓவியன் ஒரு சிறந்த ஓவியத்தை வரைய முயல்கிறான். வரைந்தும் விடுகிறான். காரணம் - முயற்சி; விளைவு - ஓவியம். இதில் கதையே இல்லை. ஆனால் அவனால் எவ்வளவு முயன்றும் ஒரு சிறந்த ஓவியத்தை தீட்ட முடியவில்லை எனும் போதே அது கதையாகிறது. காரணத்துக்கும் விளைவுக்கும் இடையே ஒரு தடை வருகிறது; இந்த தடை ஒரு சுபாவ பிழையினால், தவறான புரிதலினால், கோளாறான பார்வையால் (துன்பியல் வழு) வருகிறது எனும் போது இக்கதைக்கு ஆழம் கிடைக்கிறது; வாசகர்கள் உணர்வுரீதியாக கதையுடன் ஒன்றுகிறார்கள். தன் சிக்கல் என்னவென பாத்திரம் புரிந்து கொள்ளும் போது (அறிந்தேற்றம்) காலம் தாழ்ந்து விடுகிறது, ஆனால் இப்போது அவனுடைய வீழ்ச்சி இன்னும் மகத்தானதாகிறது என்கிறார் அரிஸ்டாட்டில். இந்த கதையின் வளர்ச்சியானது காலம் இல்லாமல் சாத்தியமில்லை. இது பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் வழியாகவே காட்டப்பட வேண்டும் என்பதால் அவன் (அல்லது அவள்) செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அதனாலே அரிஸ்டாட்டில் “செயல்கள் இன்றி துன்பியலே இல்லை” என்கிறார் (“கவிதையியல்”, பக். 12). செயல் என்பது காலத்திற்கு புறவடிவம் கொடுக்கிற சங்கதி. ஆக காலமின்றி கதையே இல்லை.