
மிலன் குந்தெராவின் பல நாவல்கள் ஒரு திவிரமான நிகழ்ச்சியுடன் துவங்கி பல்வேறு குறுநிகழ்வுகளால் பின்னப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் - வாழ்வின் சாரமற்ற, காற்றைப் போன்ற தன்மையை (அவர் மொழியில் the unbearable lightness of being) சித்தரிப்பதிலேயே குந்தெராவின் ஆர்வம் இருக்கும். கதையில் பாதியில் தொங்க விட்டு விட்டு அவர் பாட்டுக்கு ஒரு விவாதத்துக்குள் சென்று விடுவார், அலுப்பேற்படாது. நகுலன் மற்றொரு உதாரணம். இது ஏன் உறுத்துவதில்லை, சுவாரஸ்யமாய் இருக்கிறதென்றால் முதல் அத்தியாயத்தில் இருந்தே இந்த பாணியை அவர்கள் நிறுவி விடுகிறார்கள். மரியா வர்க்லாஸ் லோசாவின் Aunt Julia and the Scriptwriter நாவலில் ஒரு அத்தியாயம் கதைசொல்லிக்கு தன் அத்தையுடன் ஏற்படும் காதல் உறவு எப்படியான திருப்பங்களை எடுக்கிறது என வருமானால், அதற்கு அடுத்த அத்தியாயத்தில் ஒரு சீரியல் எழுத்தாளரின் கதை அத்தியாயங்கள் வரும். இப்படி அத்தியாயங்கள் மாறி மாறி வரும். ஒரு அத்தியாயத்துக்கும் மற்றொன்றுக்கும் சம்மந்தமில்லை என்பது மட்டுமல்ல, சீரியல் எழுத்தாளரின் கதைகளுக்கு இடையில் கூட ஒரு பொருத்தப்பாடு இருக்காது, அவை ஒரு நகரத்தில், பெரும்பாலும் விளிம்புநிலை பாத்திரங்களுக்கு இடையில் நிகழ்கிறது என்பதைத் தவிர. ஆனால் இது நாவலின் வாசிப்பு சுவார்ஸ்யத்தை கெடுப்பதில்லை. ஏனென்றால் ‘நான் உண்மையைப் போன்ற ஒரு கதையை சொல்லவில்லை, நான் உண்மையல்லாத கதையையே சொல்கிறேன்’ எனும் தோரணையுடன் நாவலாசிரியர் ஆரம்பிக்கிறார் (இதுவே நவீன எதார்த்த நாவல்களுக்கும் பின்நவீன விளையாட்டுத்தனமான நாவல்களுக்குமான வித்தியாசம்). ஆகையால் அங்கு சைக்கிள் ஸ்டாண்ட் போல நேர்த்தியாக காட்சிகள் கோக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை.
பரீட்சார்த்த கதைகளை எழுதவும் அடிப்படைகள் தெரிய வேண்டும். அதற்கு என் ஆன்லைன் நாவல் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.