இரண்டு நாட்களுக்கு முன்னொரு செய்தி படித்தேன். பெங்களூரில் உள்ள சிறுவியாபாரிகள் (4-8 லட்சம் மாத வருமானம் சம்பாதிப்பவர்கள் என்று அரசு சொல்கிறது) ஆன்லைனில் பணம் வாங்க மறுத்து ரூபாய் நோட்டுக்குத் தாவுகிறார்கள். ஏன்? இந்த வருமான வரையறைக்குள் வருவோரிடம் அரசு அதிக வரி வசூலிக்கப் போவதாக ஒரு பேச்சு நிலவியதே காரணம். அரசுத் தரப்பில் இருந்து வரி "கறவை" நிபுணர்கள் நீங்க எங்க போய் ஒளிஞ்சாலும் வரியைப் பிடித்துக் கறக்காமல் விட மாட்டோம் என அதே செய்திக் கட்டுரையில் சொல்லியிருந்தார்கள். வங்கிக் கணக்கில் போட்டால்தானே வரி போடுவீர்கள், நாங்க வீட்டிலேயே பணமா வச்சுக்கிறோம் என வியாபாரிகள் நினைக்கிறார்கள். நேற்று மடிவாலாவில் உள்ள சந்தைக்குப் போயிருந்தபோது சில கடைக்காரர்கள் "அடுத்த வாரம் இருந்தா இந்த ஸ்கேனரைத் தர மாட்டோங்க. பணமா கொண்டு வாங்க என்றார்கள்." இந்த மோதல் போக்கு ஆர்வமூட்டக் கூடியது.
சிறுவியாபாரிகள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. வியாபாரம் ஒன்றும் செழிக்கவில்லை. எந்த ரிஸ்கும் எடுக்காமல் பணத்தை வரியெனும் பெயரில் பிடுங்கும் அரசும் அமைச்சர்களும் மட்டுமே சொகுசாக இருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள்: இந்த வரியை வசூலிக்க அரசுக்கு தகுதியுள்ளதா? இவர்கள் இவ்வியாபாரிகளுக்கு எந்த வசதியையும் செய்துகொடுப்பதில்லை கொடைக்கானலில் அழகான இடமொன்றை சந்தையாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் உள்ளூர் நகராட்சிதான். பெருநகரங்களில் அரசுகள் தாம் எந்த வேலையும் செய்யக்கூடாது, குறுக்கிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். உழைத்து சம்பாதிப்பவனிடம் இருந்து வரியைப் பிடுங்கி அதை வைத்து ரேஷனில் அரிசி கொடுப்பது, இலவசப் பேருந்துப் பயணம், சைக்கிள் கொடுப்பது போன்ற சிறு உதவிகளைச் செய்து பெயர் வாங்கி தேர்தலில் ஓட்டு வாங்குகிறார்கள். நியாயமாக அப்பெருமை வரியளிப்பவர்களுக்குத் தானே போக வேண்டும். ஆனால் இந்த வரி பயங்கரவாதிகள் அதைத் தம் சாதனைகளாகப் பீற்றிக் கொள்கிறார்கள். என்னால் இந்த வினோதத்தை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை. இங்கிருந்து எடுத்து அங்கே கொடுப்பதில் என்ன பெருமை? நீங்கள் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இருக்கையில் வலப்பக்கம் உள்ளவரின் ஜேப்பில் இருந்து பத்து ரூபாயை எடுத்து இடப்பக்கம் இருப்பவரின் ஜேப்பில் போட்டுவிடுகிறீர்கள். அதன்பிறகு நான் தான் கடவுள் எனப் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதன் பெயர் என்ன?
ஆனால் நேரடியாகப் பொருளாதாரத்துக்குப் பயனளிக்கக் கூடிய எதையும் அரசு செய்வதில்லை. வியாபாரிகளுக்கான இடவசதி, நிதிவசதி, வரிவிலக்கு, சேமிக்குக் கிடங்கு என ஒன்றையும் தருவதோ உருவாக்குவதோ இல்லை. மடிவாலா சந்தையில் மழை பெய்தால் சேறும் சகதியுமாக அசிங்கமாகிறது. சேற்றில் நடந்துதான் மக்கள் காய்கறி வாங்க வேண்டும். அங்குள்ள் குப்பை நாற்றத்தின் நடுவே அமர்ந்துதான் வியாபாரிகள் பணியாற்ற வேண்டும். அதை ஒட்டியே அரசு அதிகாரிகளின் குடியிருப்பு உள்ளது. அதை மிகச்சுத்தமாக வைத்து காவலர்களின் காவலும் உள்ளது. அதற்கான செலவை மக்களின் வரிப்பணத்தை வைத்து அரசு செய்கிறது. ஆனால் வரிப்பணத்தைத் தரும் வியாபாரிகளின், மக்களின் இடத்தைக் திறந்தவெளிக் கழிவறையைப் போல வைத்திருக்கிறது.
ஆனால் பிச்சைக்காரர்களைப் போல தட்டை ஏந்திக்கொண்டு வரி கொடுங்க சாமி என வந்துவிடுகிறார்கள். உலகிலேயே பிச்சைக்காரர்கள் வசதியாகவும் பிச்சையிடுபவர்கள் குப்பையின் நடுவிலும் வாழ்வது இந்தியாவில் மட்டும்தான் இருக்கும். வெள்ளைக் காலனியவாதிகள் பயன்படுத்திய அதே அமைப்பை இவர்களும் பின்பற்றுகிறார்கள். சுதந்திரத்துக்குப் பின் கறுப்புத் தோல் காலனியவாதிகள் வரியின் பெயரில் அதே மக்களைப் பிழிந்து சொகுசாக செழிக்கிறார்கள். இதை எப்படி குடியாட்சி என்று சொல்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை.
சாலையோரக் கடைகளைப் பாருங்கள். அரசு அவற்றை சட்டரீதியான ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வந்து சிறுதொகை வசூலித்தால் காவல்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் பெரும் தொகையை லஞ்சமாக அழ வேண்டியிருக்காது. இன்னொரு பக்கம் ஜி.எஸ்.டி வேறு மக்களின் மென்னியை நெரித்து, பொருட்களின் விலையை ஏற்றி, பணவீக்கத்தை ஏற்றி வருகிறது. உலகின் ஆகக் கேடுகெட்ட மனிதர்களில் சிலரே இந்த ஜி.எஸ்.டியைக் கொண்டு வந்தவர்களாக இருக்க வேண்டும். கும்பி பாகத்துக்கு ஏற்றவர்கள்.
எனக்குத் தெரிந்து பெரும்பாலான கடைகளில் இங்கு பில் போடுவதில்லை. ஐநூறு ரூபாய் பொருளுக்கு பில் போட்டால் அது அறுநூறு ரூபாய் ஆகிவிடும் என்பதால் மக்களும் கேட்பதில்லை. மக்களின் எதிர்ப்புணர்வாகவோ நிர்கதியாகவோ இதைப் பார்க்கலாம் - மெல்லமெல்ல அவர்கள் பணநோட்டை நோக்கி நகர்கிறார்கள். இம்மாதிரி வரி பயங்கரவாதம் உள்ள நாட்டில் இது ஒரு நல்ல நகர்வு என்றே பார்க்கிறேன். ஆன்லைனில் பொருள் வாங்குவதை 'இயன்ற வரையில்' முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பொருட்களை நேரடியாகக் கடைக்காரர்களிடம் சென்று பணம் கொடுத்து வாங்க வேண்டும். அப்பணத்தை அவர்கள் தங்கமாகப் பின்னர் மாற்றிக்கொள்ள வேண்டும் (கறுப்புச் சந்தை வழியாகத்தான்). எதிர்காலத்தில் பெட்ரோலையும் இப்படித் தனியாக உற்பத்தி பண்ணி ஜி.எஸ்.டி இல்லாமல் லிட்டருக்கு 30-40 ரூபாய்க்கு விற்றால் நன்றாக இருக்கும் - அது பொருட்களின் விலையைக் குறைத்து பணப்பரிவர்த்தனையை அதிகப்படுத்தி பணவீக்கத்தைக் குறைத்து நம் பொருளாதாரத்தைக் காப்பாற்றும். எப்படியும் மக்களே தமக்கான வசதிகளை இன்று பண்ணிக் கொள்கிறார்கள். அரசு கிட்டத்தட்ட எதையும் இலவசமாக மக்களுக்குத் தருவதோ தரமான சேவையை அளிப்பதோ இல்லை. மிச்சசொச்சமுள்ள சேவைகளையும் விரைவில் மூடிவிட திட்டமிட்டிருக்கிறார்கள். மக்கள் இனி பணத்தைத் திரட்டி மிகக்குறைந்த செலவிலான மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் ஒவ்வொரு பகுதிக்கும் லாபநோக்கின்றி நடத்த வேண்டும். தமக்கானதைத் தாமே உற்பத்தி பண்ணி அதையே உண்ணவும் பயன்படுத்தவும் வேண்டும். (ஒருவிதத்தில் காந்தி அதைத்தான் பரிந்துரைத்தார் - கிராமப் பொருளாதாரம்). இன்னொரு விசயம் நாம் எதிர்காலத்தில் பண்ட மாற்ற முறையைக் குறித்தும் சிந்திக்க வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் இனி ரூபாய் நோட்டையும் முழுமையாக நிறுத்திவிடுவார்கள் என நினைக்கிறேன்.
மாதம் 4 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏன் வரி கொடுக்கக் கூடாது என நீங்கள் யோசிக்கலாம் - ஆனால் அதிகரித்து வரும் வாடகை, பெட்ரோல், பொருட்களின் விலை, ஊழியர்களின் சம்பளம், பொருளாதார வீக்கத்தினால் குறையும் நுகர்வு ஆகியவற்றினால் இன்று அவர்களிடம் இந்த சம்பாத்தியத்தில் இருந்து பாதிக்கு மேல் போய்விடும். போட்ட முதலுக்கு இவ்வளவு கூட எடுக்க முடியவில்லையே என அவர்கள் யோசித்துக் கொண்டு இருக்கும்போது பிச்சைத் தட்டுடன் போய் ஐம்பதினாயிரத்தை வட்டியாய் கொடு என்றால் கடுப்பாகாதா? அதுவும் இந்த வியபாரம் முழுக்கமுழுக்க அவர்களே கட்டமைத்ததாக இருக்கும்போது, அதற்காக அரசு எந்த உதவியும் செய்யவில்லை எனும்போது?
'வரி ஏய்ப்பு' என்பதை மாதத்திற்கு 50,000 அல்லது அதைவிடக் குறைவாகச் சம்பாதிப்பவர்களோ செய்கிறார்களா? ஆமாம். இந்த பேல்பூரி, பானிபூரி வியாபாரிகள். அவர்களை ஏன் இந்த பயங்கரவாதிகள் வரி வலைக்குள் கொண்டு வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இதோ ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் ராஜஸ்தானுக்கோ பீஹாருக்கோ ஓடி விடுவார்கள்.
எதிர்காலத்தில் வரி பயங்கரவாதிகள் மக்களை அம்பானிகளுக்கு அடிமைகளாக விற்றுவிடுவார்கள். அதன்பிறகு அந்த அடிமைகளின் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் வரியின் பெயரில் திருடிவிடுவார்கள்.