இவர்கள் குரல் வளையிலே மிதித்துக் கொல்லப்பார்த்த அளவுக்கு ஒன்று "தக் லைப்" மோசமான படமில்லை. கிட்டத்தட்ட திரிஷா வரும்வரை படத்தை நன்றாகவே எழுதியிருந்தார்கள். பகைவரின் மகனை வளர்த்தால் அவன் எதிர்காலத்தில் தன் பகையை உணர்ந்து தன்னை வளர்த்தவரைக் கொல்ல வந்தால் என்னவாகும் என்பதே ஒற்றைவரி. அதாவது "நாயகனில்" கேல்கர் எனும் ஒரு காவல் ஆய்வாளரை நாயக்கர் கொல்வார். அவரது மகனைத் தன் மகனைப் போல வளர்ப்பார். ஆனால் கடைசியில் அவன் கையாலே சுடப்பட்டு இறப்பார். "தக் லைப்" கேல்கரின் மகனுக்கும் நாயக்கருக்குமான உறவை இன்னொரு பின்னணியில் பேசுகிற கதை. யோசித்துப் பார்த்தால் இது சுவாரஸ்யமான வித்தியாசமான கதைதான்.
ஆனால் உப-கதைவரி ஒன்றையும் மணிரத்னம் எடுத்துக் கொள்கிறார். வளர்ப்பு மகனும் அப்பாவும் ஒரே பெண்ணை நேசிக்கிறார்கள். ஈடிபல் காம்பிளக்ஸ். பொதுவாக ராஜ்ஜியங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது பெண்களைக் கைப்பற்றுவது குறியீடாக மாறும். மணிரத்னம் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார். திரிஷாவின் பாத்திரமான இந்திராணி இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு அழிவதைச் சொல்கிறார். ஆனால் அப்போது கதை இந்திராணியின் கதையாகி விடுகிறது. இவ்வளவு வலுவான சிக்கலான பாத்திரத்தை மூன்றாவது பாத்திரமாக கதையில் வைக்கவே கூடாது. வைத்தாலும் அவருக்கான திரைவெளியை வெகுவாகக் குறைத்திருக்க வேண்டும்.
திரிஷா வந்ததுமே நாயகனின் (கமல் + சிம்புவின் பாத்திரங்கள்) உடனடித் தேவை, இலக்கு என்னவெனும் குழப்பமும் கூடவே வருகிறது. ஆக்ஷன் படங்களின் பெரிய பலவீனமே பெண்கள்தாம். பெண்களை சும்மா ஊறுகாயாக இப்படங்களில் வைத்துக் கொள்வதே பாதுகாப்பு.
இன்னொரு பிரச்சினை கமல்ஹாசனின் பாத்திரம் - அவர் நல்லவரா கெட்டவரா எனும் குழப்பம் நன்றாகவே கொண்டு வரப்பட்டுள்ளது - முதல் மட்டும் கடைசி காட்சியில் அவர் சிம்புவின் பாத்திரத்திடம் பாசத்தைப் பொழியும் இடங்களைத் தவிர. ஒருவிதமான ruthless grey பாத்திரமாக அவரை எழுதியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் - ஏனென்றால் இது அதைப் பேச வேண்டிய காலகட்டமே.
அடுத்து, இத்தகைய கொடூர பாத்திரங்களுக்கும் (மாபியா தலைவர்கள், கொலைகாரர்கள்) ஒரு அறம், விழுமியங்கள் இருக்கும். அதைப் படத்தின் துவக்கத்திலேயே சரியாக நிறுவ வேண்டும். "காட்பாதரில்" அப்பா கார்லியானோ தன் குடும்பத்தினரிடம் பிரியமானவர், நட்புக்காக இறங்கி வேலை செய்பவர், தனக்கான நிபந்தனைகளைக் கொண்டவர் எனக் காட்டுகிறார். அடுத்து உடனேயே போதை மருந்து வியாபாரி சொலோஸாவுடனான காட்சி வருகிறது. அதில் கார்லியானோ தான் போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட மாட்டேன், அது தன் அரசியல் தொடர்புகளை ஒழித்துவிடும் என மறுக்கிறார். என்னதான் சுயநலமான காரணம் என்றாலும் இது அவர் மீதான நல்லபிப்பிராயத்தை உருவாக்குகிறது. அதனாலே அவர் தாக்கப்படும்போது நாம் அவருக்காக வருந்துகிறோம். "தக் லைப்பில்" இதைச் செய்ய மெனெக்கெடவில்லை.
ஒரு நல்ல கதையை ஏதேதோ காரணங்களுக்காக மோசமாக எழுதிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. கமல் முன்னெப்போதையும் விட நுட்பமாக நடித்திருக்கிறார் - குறிப்பாக திரிஷாவை அவர் டான்ஸ் பாரில் பார்க்கும்போது வெளிப்படுத்தும் பார்வை. சிம்புவின் பாத்திரமான அமரனை அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு காட்சியிலும் எதையாவது புதிதாகத் தன் உடல்மொழியில் குறிப்புணர்த்துகிறார். அவரது அபாரமான நடிப்புக்காகவே கவனித்துப் பார்த்தேன். வயதான பின் கமல் இன்னும் சிறந்த நடிகராகிவிட்டதாகவே தோன்றுகிறது.
இன்னொரு விசயம் - இடைவேளையின் போதான திருப்புமுனை (சக்திவேலை அமரனும் பிறரும் சேர்ந்து கொல்ல முயல்வது) வருகிறது அல்லவா, அதுதான் இப்படத்திற்கான சரியான துவக்கம். அங்கிருந்து நான்லீனியரில் (Kill Bill போல) கதையைக் கொண்டு போயிருக்க வேண்டும். என்னதான் சதானந்தின் மருமகனை சக்திவேலின் ஆட்கள் கொல்வதனால் ஏற்பட்ட நிகழ்வுகளாலே பின்னர் இந்த கொலை முயற்சி நடக்கிறது என்றாலும் சக்திவேல் பாத்திரத்தின் want கொலை முயற்சிக்குப் பின்னரே தோன்றுகிறது.
துவக்கத்தை இடைவேளையில் வைத்துவிட்டதால் அதன்பிறகு கதையை நகர்த்துவதற்கான அவகாசமே இல்லாமல் போகிறது. வேலைக்குப் போகிற அவசரத்தில் காலையுணவை அமுக்குவதைப் போல கதையை ஜெட்வேகத்தில் கொண்டு போகிறார்கள். எதையுமே நியாயப்படுத்தவோ பில்ட் அப் பண்ணவோ முடியவில்லை.